Friday, August 19, 2011

சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஓடியது : பால் - கியாஸ் - உணவு பொருட்கள் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகிறது.


சேலம் மாவட்டத்திலும் லாரிகள் ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்தால் ஏதும் பாதிப்பு வந்து விடாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் தலைமையில் போலீசார் ரோந்து வந்து கண்காணித்தனர்.

லாரி ஸ்டிரைக் நடந்தாலும் சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் லாரிகள் ஒடுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் 20 சதவீதம் தான் லாரிகள் ஓடுகிறது. 80 சதவீதம் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பால், கியாஸ், உணவு பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. லாரிகள் ஸ்டிரைக்கினால் இன்று பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பி.இ. கவுன்சிலிங் முடிந்தது ; 44 ஆயிரம் இடங்கள் காலி.


தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 47 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 40 நாட்களாக கவுன்சிலிங் நடந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 8-ந்தேதி தொடங்கிய பொது கலந்தாய்வு இந்த மாதம் 11-ந்தேதி வரை நடந்தது.

அதைத்தொடர்ந்து பிளஸ்-2 உடனடி தேர்வு எழுதியவர்களுக்கும் பின்னர் தொழில் பிரிவை சேர்ந்தவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று வரை நடந்து முடிந்தது ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 564 பேரின் விண்ணப்பங்கள் தகுதி உடையதாக இருந்தது. அவற்றில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 166 இடங்கள் மட்டும் நிரம்பி உள்ளன.

அறிவியல் பாடப்பிரிவில் ஒரு லட்சத்து 6182 இடங்கள் நிரம்பியது. இதில் 43,393 இடங்கள் காலியாக உள்ளன. தொழில் பாடப்பிரிவில் 3984 இடங்கள் மட்டும் நிரம்பின. 746 இடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தம் 44,139 என்ஜினீயரிங் இடங்கள் நிரம்பாமல் உள்ளன. கடந்த ஆண்டு 12 ஆயிரம் இடங்கள் காலியாக கிடந்தன. பி.இ. படிப்பிற்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து நாளை (20-ந்தேதி) முதல் எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்.

3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள்: தகுந்த ஆதாரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை- கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தகவல்
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடந்த நில அபகரிப்பு பற்றி போலீசுக்கு தினமும் ஏராளமான புகார்கள் வருகின்றன. இந்த புகார்களில் போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளை கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் கண்காணித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் 8,600 நில அபகரிப்பு புகார்கள் வந்துள்ளன. இதில் விசாரணை நடத்திய பின்பு 430 புகார்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற புகார்களையும் நில அபகரிப்பு பிரிவு தனிப்படை விசாரித்து வருகிறது. பலகோடி நிலம் மோசடி புகார்களில் தகுந்த ஆதாரத்துடன் கூடிய உண்மையான, தகுதியான புகார்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கிறோம்.

நிலஅபகரிப்பு மிரட்டல், பலப்பிரயோகம், அச்சுறுத்தல் போன்ற புகார்களில் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டும் 6000 புகார்கள் வந்துள்ளன. நில அபகரிப்பு வழக்கில் போலீசார் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் நடவடிக்கை எடுக்கிறோம். இதனால் போலீசார் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக புகார் கொடுக்க முன்வருகிறார்கள்.

எனவேதான் புகார்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. கோவை, சேலம், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களில்தான் அதிக அளவில் நில அபகரிப்பு புகார்கள் வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் புகார் செய்து வருகிறார்கள். தமிழ்நாடு போலீஸ் இணைய தளத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாம்.

இவ்வாறு ஜார்ஜ் கூறினார்.

இந்தியாவை உலுக்கிய அன்னாஹசாரே : பூ வியாபாரி காந்தியவாதியானார்.


உண்ணாவிரத போராட்டத்தை உலகுக்கு கற்றுத்தந்த காந்தியின் அகிம்சை போராட்டத்தால் ஆங்கிலேய ஏகாதிபத்தியமே நடுங்கிப் போனது வரலாறு. அதே வழியில் இன்றும் உண்ணாவிரத போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் அன்னாஹசாரே.

இந்த 76 வயது இளைஞரின் மனதில் கொளுந்து விட்டு எரியும் நெருப்பு மிகப்பெரிய போராட்டத்தை நாடு முழுவதும் பரவ வைத்துள்ளது. மிக மோசமான தொற்று நோய். அடி முதல் நுனிவரை செல்லரித்து விட்ட இந்த நோயை குணப்படுத்தியே தீரவேண்டும். இல்லாவிட்டால் நாடு அதாள பாதாளத்தில் வீழ்ந்து விடும் என்ற ஏக்கம் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரிடமும் உள்ளது.

எங்கும் லஞ்சம்... எதிலும் லஞ்சம்... என்று தலை விரித்தாடும் லஞ்சத்தால் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழல் செய்து குறுகிய காலத்திலேயே செல்வ செழிப்பில் மிதக்கிறார்கள். இதை பார்த்து படித்தவர்களும் பாதை மாறும் துர்பாக்கிய நிலைமை உருவாகி உள்ளது.

இப்படியே போனால் வருங்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் நிழல்போல் தொடரும் ஊழலை வெட்டி வீழ்த்த முடியுமா? என்ற யதார்த்தமான கேள்வியும் மனதில் எழுகிறது. ஆனாலும் இதற்கு பாடம் புகட்டியே ஆகவேண்டும் என்ற ஆதங்கம் நம்மிடம் உள்ளது.

ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? என்று ஒவ்வொருவரும் யோசனையில் ஆழ்ந்து இருந்த நேரம்... இதோ நான் இருக்கிறேன் என்று ஆபத்பாந்தவனாக கையை உயர்த்தியவர்தான் அன்னாஹசாரே!

1937-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் பின்கார் கிராமத்தில் பாபுராவ் ஹசாரே- லட்சுமிபாய் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளமையில் வறுமையோடு போராடியவர். 6 வயதிலேயே தந்தையை இழந்தார். அவரது சித்தி படிக்க வைப்பதாக கூறி மும்பைக்கு அழைத்து சென்றார். 7-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் படிக்க வைக்க வசதி இல்லை.

இதனால் மும்பை தாதரில் பூ வியாபாரத்தை தொடங்கினார் ஹசாரே. பின்னர் பூக்கடை ஒன்றை சொந்தமாக தொடங்கினார். அதில் ஓரளவு வருமானம் வந்தது. இந்த நேரத்தில் (1962-ல்) சீனப்போரில் களம் இறங்க இந்திய ராணுவத்துக்கு இளைஞர்களை தேடினார்கள். தாய்நாட்டை காக்க தன்னை அர்ப்பணிக்க முன்வந்தார் ஹசாரே.

ராணுவத்தில் டிரைவராக சேர்ந்த ஹசாரே 1965-ல் இந்தியா- பாகிஸ்தான் போரில் எல்லைப் பகுதியில் எதிரிகளின் களத்தை துவம்சம் செய்ய ஒரு குழுவுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பாகிஸ்தான் படை நடத்திய தாக்குதலில் ஹசாரேயுடன் இருந்த அனைவரும் வீரமரணம் அடைந்தார்கள். தலையில் குண்டு காயத்துடன் ஹசாரே மட்டும் தப்பினார்.

எவ்வளவு ரத்தம் சிந்தினோம்...? எத்தனை உயிர்களை இழந்தோம்...? இதில் கிடைக்கப் போவது என்ன? என்ற விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் ஹசாரே. காண்டீபத்தை கீழே போட்டு விட்டு கலங்கி நின்ற அர்ஜுனனை போல் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை முடிவோடு புறப்பட்டார்.

அப்போது டெல்லி ரெயில் நிலையத்தில் சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை வாங்கி படித்தார். அதில் அவர் கூறிய வாழ்க்கை தத்துவங்கள் ஹசாரேயின் மனதில் இருந்த தற்கொலை முடிவை மாற்றி மனதில் உறுதியையும், தெளிவையும் கொடுத்தது. ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை அர்த்தமாக்கி கொள்ள வேண்டும். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்கு பயன்தரும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற தத்துவார்த்த சிந்தனை ஹசாரேயை மீண்டும் புது மனிதனாக்கியது.

39 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சொந்த ஊரான ரலேகான்சித்திக்கு திரும்பினார். வாலிப முறுக்கோடு இருந்த ஹசாரே திருமண ஆசையை துறந்தார். சொந்த கிராம மக்களின் வறுமையை துடைக்க களம் இறங்கினார். மழைநீர் சேமிப்பு திட்டம் உள்பட பல முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் ரலேகான்சித்தி செழித்தது.

அகமத்நகர் மாவட்டத்திலேயே ரலேகான்சித்தி ஒரு முன் மாதிரி கிராமமாக உருவெடுத்தது. தனது கிராமப்பணியை நிறைவு செய்து திருப்தி அடைந்த ஹசாரே தனது போராட்ட வியூகத்தை விரிவாக்கினார். ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். ஊருக்கு சேவை செய்ய வரும் அரசியல்வாதிகள் ஊரை அடித்து உலையில் போடும் அநியாயத்துக்கு எதிராக வெகுண்டெழுந்தார்.

ஹசாரேயின் போராட்டத்தால் மராட்டிய மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவர்களான பால் தாக்கரே, சரத்பவார் போன்றவர்களே ஆடிப்போனார்கள்.

1996-ல் சிவசேனா ஆட்சியில் ஊழல் செய்த 2 மந்திரிகளை தனது போராட்டத்தின் மூலம் வீட்டுக்கு அனுப்பினார். 2003-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்த 4 மந்திரிகள் மீது விசாரணை கமிஷன் அமைக்க வைத்தார். ஊழலுக்கு எதிரான அவரது போர் 2-வது சுதந்திரபோர் என்று பேச வைத்துள்ளது.

ஊழலுக்கு எதிரான அவரது குரல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. அவரது உரத்த குரலுக்கு முன்பு செப்படி வித்தைகள் தவிடு பொடியாகி விட்டன. ஹசாரேயின் போராட்டத்தை அடக்க நினைத்த இந்திய பேரரசே காந்தியவாதியின் அஹிம்சை போராட்டத்தின் முன்பு அடிபணிந்து விட்டது.

பின்புலம் எதுவுமின்றி லட்சியத்துக்காக போராடும் ஹசாரேயின் போராட்டத்துக்கு இன்றோ, நாளையோ விடை கிடைத்து விடாது. ஆனால் இந்திய மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கானவர்கள் இந்த புதிய மகாத்மாவின் பின்னால் அணி திரள்கிறார்கள். காந்திக்கு பிறகு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஹசாரேயின் போராட்டத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்தை அமைதியான முறையில் சொல்லி வருகிறார்கள். இது வலுவான ஜனநாயகத்தின் அடையாளம் என்று அமெரிக்கா கூறி உள்ளது.

தொடரும் 15 நாள் போராட்டத்தால் புதிய விடியலுக்காக இந்தியாவே காத்திருக்கிறது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது.

தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியது

கடந்த 2009-ம் ஆண்டு ஒரு பவுன் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. அப்போது இதுகுறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில் இருந்து தங்கம் விலை ராக்கெட்டை மிஞ்சும் வேகத்தில் இடைவிடாது விர்ரென அதிரடியாக உயர்ந்து வருகிறது.

2010-ம் ஆண்டில் ஒரு பவுன் 12 ஆயிரத்து 784 வரை விற்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து இந்த ஆண்டில் (2011) கடந்த ஏப்ரல் மாதம் பவுன் ரூ.16 ஆயிரத்தை கடந்தது.

தொடர்ந்து “ஜெட்” வேகத்தில் ஏறிய தங்கம் நேற்று ஒரு பவுன் 20 ஆயிரத்தை தாண்டியது. பவுன் ரூ.20 ஆயிரத்து 32 ஆக இருந்தது. ஒரு கிராம் ரூ.2,504-க்கு விற்கப்பட்டது. இது வரலாறு காணாத விலை உயர்வு என வர்ணிக்கப்பட்டது.

ஏழை எளிய மக்களும், பெண் குழந்தைகளை பெற்றவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகி விட்டதே என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே இன்று தங்கம் விலை மேலும் எகிறியுள்ளது. ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ.648 அதிகரித்து ரூ.20 ஆயிரத்து 680 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2504க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் தங்கம் பவுன் ரூ.21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

பங்கு சந்தை வீழ்ச்சி, அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் தங்கத்தில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இனி சுப முகூர்த்த நாட்கள் தொடங்கி விட்டதால் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. தொடர்ந்து உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ வெள்ளி ரூ.62 ஆயிரத்து 625 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.67க்கு விற்கப்படுகிறது.

ராஜீவ் கொலைக் கைதிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்படும் நம்பிக்கை உள்ளது பேரறிவாளன் உறவினர்கள் பேட்டி.

ராஜீவ் கொலைக் கைதிகளின்   மரணதண்டனை ரத்து செய்யப்படும் நம்பிக்கை உள்ளது   பேரறிவாளன் உறவினர்கள் பேட்டி

ராஜீவ் கொலைக் கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர். இவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதனால் எந்த நேரத்திலும் இவர்கள் தூக்கிலிடப்படலாம் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் கொலைக் கைதிகளை நேற்று முன்தினம் வைகோ சந்தித்து பேசினார். நேற்று சீமானும் சந்தித்தார். அப்போது அவர் உலகில் 135 நாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை கைவிட வேண்டும் என்றார். இதேபோல் மரண தண்டணையை ரத்து செய்யக்கோரி மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் சைக்கிளில் பேரணியாக சென்னையிலிருந்து வேலூர் வந்தனர். அப்போது அவர்கள் வேலூர் ஜெயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பான நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனை பார்க்க அவரது உறவினர்களான அத்தை, தம்பி ஆகியோர் வேலூர் ஜெயிலுக்கு வந்தனர். அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் ஜோலார்பேட்டை தற்போது பொள்ளாச்சியில் வசித்து வருகிறோம். நாங்கள் மாதம் ஒரு முறை வந்து பேரறிவாளனை சந்தித்து விட்டு செல்வோம். முதலில் எங்களுக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லாமல் இருந்தேம். தற்போது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் மரண தண்டனையை எதிர்ப்பதால் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. மரண தண்டனை மறுபரிசீலனை செய்யப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு - தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல்நிலை எழுத்துத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் இருந்து 4 லட்சத்து 97,187 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதில் 11,984 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த 600 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அடுத்தக்கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள், அக்டோபர் மாதம் 29ம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.