Tuesday, August 2, 2011

இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும் : நிபுணர்கள் எச்சரிக்கை.

இந்தியாவில் பால் பற்றாக்குறை ஏற்படும்:நிபுணர்கள் எச்சரிக்கை

உலகிலேயே அதிகளவில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால், தேவை அதிகரிப்பு காரணமாகவும், அதிக பால் கொடுக்கும் பசுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் பால் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.

இந்திய கால்நடை கவுன்சில் சார்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப் பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து கவுன்சிலின் தலைவர் நாராயணன் மெகந்தி கூறியதாவது:-

இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் பாலின் தேவை 60 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள பசுக்களிடம் பால் உற்பத்தி திறன் மிகவும் குறைவாக உள்ளது. கால்நடைகளுக்கு தரமான உணவு கிடைப்பதில்லை. சரியான நேரத்தில் பராமரிப்பும், சிகிச்சைகளும் அளிக்கப் படுவதில்லை.

பால் உற்பத்தியை பெருக்க நீண்ட கால திட்டம் எதுவும் கிடையாது. இன்னும் 2 ஆண்டுகளில் கால்நடைகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக போய் விடும். இதனால் பால் பற்றாக்குறை ஏற்பட்டு, வெளி நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்ய வேண்டிய நிலை உருவாகும். எனவே கால் நடைகளின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, பால்உற்பத்தியில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது. தனிநபர்களுக்கு பால் கிடைப்பதில் அகில இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி மிகவும் குறைவாக உள்ளது. அதே சமயம் கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு ஒருவருக்கு 52 முட்டைகள் கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதன் சராசரி 160 ஆகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் ஆவேசம்.



பூண்டி கலைவாணனை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்புகிறார்கள். அப்படியானால், ஜெயலலிதா செய்த குற்றத்துக்கு அவரை அந்தமான் சிறைக்கல்லவா அனுப்ப வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள துணை முதல்வர் மு.க..ஸ்டாலின்

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டத்தில அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதே கூட்டத்தில் அவர், “பூண்டி கலைவாணன் மீது என்ன வழக்கு? சமச்சீர் கல்வி அமல்படுத்தக் கோரி திருவாரூர் பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விஜய் என்ற மாணவன் அதில் பங்கேற்று பஸ்சில் வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தான். தகவல் அறிந்த கலைவாணன் விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இதுதான் அவர் செய்த தவறு.

மாணவன் சாவுக்கு அவர்தான் காரணம் என்று போலீசார் கைது செய்ய வந்தார்கள். எப்.ஐ.ஆர். அல்லது வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்றார்கள். அதைக் கொண்டு வாருங்கள் என்றதும் எங்களை சாலையில் வைத்து கைது செய்துவிட்டு, நாங்கள் சாலை மறியல் செய்ததாக கூறினார்கள். பிறகு எப்.ஐ.ஆர். கொண்டு வந்து தந்து கலைவாணனை அழைத்துச் சென்றனர்.

ஒரு மாணவனை பள்ளி செல்ல விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு போட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கிறார்கள் என்றால், சமச்சீர் கல்வியை அமல்படுத்தாமல் 1.40 கோடி மாணவர்களின் படிப்பை பாழாக்கிய ஜெயலலிதாவை எந்த சிறையில் அடைப்பது? அந்தமான் சிறையில்தான் அடைக்க வேண்டும்” என்றும் பேசினார்.

“தி.மு.க. முன்னோடிகள்மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடுகிறார்கள். தகுந்த ஆதாரம், சான்று இருந்தால் முறைப்படி நடவடிக்கை எடுக்கட்டும். தண்டனையை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் பொய் வழக்கு போடுவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” இவ்வாறு மு.க..ஸ்டாலின் ஆவேசப்பட்டார்.

மருத்துவ படிப்பு பொது நுழைவுத் தேர்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு : தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம்.


மருத்துவ படிப்பு பொது நுழைவு தேர்வுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு:  தமிழகத்துக்கு விலக்கு அளிக்க பிரதமருக்கு கடிதம்

மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, “தேசிய திறன் மற்றும் பொது நுழைவு தேர்வு” நடத்தி, அதன் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது எனது கவனத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வரை, நுழைவு தேர்வு, நடத்தியே மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முறை 2007-08 ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அது முதல் கவுன்சிலிங் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

வல்லுனர் குழுவை கொண்டு விரிவாக ஆய்வு நடத்திய பிறகு, நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.

கிராமப்புற மாணவர்களும், குறைந்த சமூக பொருளாதார பின்னணியை உடைய மாணவர்களும் பொது நுழைவுத் தேர்வு முறையில், நகர்ப்புற அறிவார்ந்த மாணவர்களுடன் போட்டிப் போட முடியாது. நகர்ப்புறம் மற்றும் பணக்கார மாணவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

நுழைவுத் தேர்வை எதிர்கொள்வதற்கு வசதியான மாணவர்கள் இதற்கென செயல்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஏழை மாணவர்களால் பயிற்சி மையங்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்த முடியாது. இதனால் நுழைவுத் தேர்வுகளில் இவர்கள் வெற்றி பெற முடிவதில்லை.

தேசிய அளவில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் மூலமும் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான போட்டி தேர்வுகளில் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களும், வசதி படைத்தவர்களும் தான் அதிகளவில் வெற்றி பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்ட பிறகு, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கிய தகுதியான கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பலன் அடைந்து வருகின்றனர்.

தற்போது மாநிலத்தில் நடைமுறையில் இருந்தும் மாணவர் சேர்க்கை கொள்கை மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள், அதிகமானோர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனால் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்கு தேவையான மனித சக்தியை உருவாக்க முடியும்.

சமூக நீதியை நிலை நாட்டும் வகையிலும், தமிழகத்தில் தொழில் படிப்புகளில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுநுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டால், தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படுவதுடன், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையை செயல்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.

தவிர, தமிழகத்தில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்புக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், கிராமப்புறங்களில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்த டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. முதுகலை மருத்துவ படிப்பை அரசு மருத்துவ கல்லூரிகளில் முடிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு இந்த மாநிலத்திலேயே சேவை செய்ய வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு அந்த முறை வெற்றியும் அடைந்துள்ளது.பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்தால், மாநிலத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை சட்டப்பூர்வமாக செயல்படுத்துவது கடினமாகி விடும்.

அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை குறித்து ஒரு முடிவு எடுக்கும் முன்பு, இதுபற்றி மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை மந்திரி ஏற்கனவே உறுதி அளித்துள்ளார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொது நுழைவுத் தேர்வு முறையானது, கல்வி திட்டத்தை செயல்படுத்துவதால் மாநில அரசுக்கு உள்ள உரிமையில் தலையிடுவதாக அமையும் என்று தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. எனினும் பொது நுழைவு தேர்வு முறையை நாடு முழுவதும் அமல்படுத்த முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.

எனவே மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு முறையை கொண்டு வர மத்திய அரசு தீர்மானித்துள்ளதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தற்போது தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வரும் முறையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

76 ஆயிரம் பி.இ. இடங்கள் காலி : என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு 20 ஆயிரம் பேர் வரவில்லை.

76 ஆயிரம் இடங்கள் காலி: என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு 20 ஆயிரம் பேர் வரவில்லை

பி.இ. படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு புதிதாக 29 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. என்ஜினீயரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை 500-யை தாண்டி விட்டது. இவற்றின் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1 லட்சத்து 47,732 கிடைக்கின்றன.

இதுவரை நடந்த கலந்தாய்வின் மூலம் 71,138 பேர் பல்வேறு பாடப் பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர். 19,549 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. 208 பேர் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்து விட்டனர்.

76,594 பொறியியல் “சீட்” இன்னும் காலியாக இருக்கின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த வருடம் காலி இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

முதல் கட்டம் முடிந்த ஒரு சில நாட்களில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. அது முடிந்தவுடன் துணை கவுன்சிலிங் நடக்கிறது. பிளஸ்-2 சிறப்பு தேர்வு எழுதியவர்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. 5-ந்தேதிக்குள் உடனடி தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை.

கடைகளில் பொருள் வாங்குவோருக்கு  பாலித்தீன் பைகளை இலவசமாக கொடுக்க தடை: கட்டணம் வசூலிக்க முடிவு

கடைகளில் பொருட்களை வாங்குவோருக்கு தற்போது பாலித்தீன் பைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த பாலித்தீன் பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், வாடிக்கையாளர்களே வீட்டில் இருந்து பை கொண்டு வந்து பொருட்களை வாங்குவார்கள். இதனால் பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையும். சுற்றுச்சூழல் மாசுபடுவது தடுக்கப்படும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

எனவே, கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பாலித்தீன் பைகளை கொடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த மாதம் 1-ந் தேதி இது அமலுக்கு வந்தது. பெங்களூரில் கடந்த வாரம் அமலுக்கு வந்தது. நாளை (புதன்கிழமை) முதல் நாடுமுழுவதும் இலவச பாலித்தீன் வழங்குவதை தடை செய்யும் சட்டம் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்புக்கான விதிமுறைகள் மத்திய வன பாதுகாப்புத்துறை மூலம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் கடைகளில் இலவசமாக பாலித்தீன் பைகளை வழங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடைக்காரர்கள் வழங்கும் பைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் விலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

60 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று கவர்னர் உரையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. என்றாலும் பைகளுக்கான விலை இதுவரை நிர்ணயிக்கப்பட வில்லை.


பதவி போன ஆத்திரத்தில் வெங்கையா நாயுடு லேப் - டாப்பை தரையில் போட்டு உடைத்த எடியூரப்பா.

பதவி போன ஆத்திரத்தில் வெங்கையா நாயுடு லேப்-டாப்பை  தரையில் போட்டு உடைத்த எடியூரப்பா: மந்திரி கன்னத்திலும் “பளார்” அறைவிட்டார்

கர்நாடகாவில் சுரங்கத் தொழில் முறைகேடுகளில் சிக்கிய எடியூரப்பா கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகலுக்கான ராஜினாமா கடிதத்தை தயாரித்த போது எடியூரப்பா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அப்போது அவர் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாறுமாறாக நடந்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.

எடியூரப்பாவை ராஜினாமா கடிதம் கொடுக்க வைக்கும் பொறுப்பை வெங்கையா நாயுடுவிடம் மேலிட தலைவர்கள் ஒப்படைத்திருந்தனர். கடந்த ஞாயிறு மதியம் பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள எடியூரப்பா வீட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போடும்படி கூறினார். மறு நிமிடம் எடியூரப்பாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அங்கு இருந்த ஒரு லேப்-டாப்பை தூக்கி தரையில் போட்டு உடைத்தார்.பிறகு தான் அது வெங்கையா நாயுடுக்கு சொந்தமான லேப்-டாப் என்று தெரிந்தது.

எடியூரப்பாவை அவர் அருகில் இருந்த சில மந்திரிகள் சமரசம் செய்தனர். சில நிமிடங்கள் கழித்து மூத்த அமைச்சர் ஒருவர், "சரி.... வாங்க கடிதம் கொடுத்து விட்டு வரலாம்" என்று கூறியபடி எடியூரப்பாவை சோபாவில் இருந்து எழுப்ப முயன்றார். இதனால் எடியூரப்பா மீண்டும் கோபப்பட்டார். தன்னை எழுப்ப சொன்ன அமைச்சர் கன்னத்தில் “பளார்” என அறைந்தார்.

இது அந்த அறையில் இருந்த பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சுமார் 30 நிமிடங்கள் கழித்தே எடியூரப்பா இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் பிறகு அவரை கவர்னர் மாளிகைக்கு அழைத்து சென்று ராஜினாமா கடிதத்தை கொடுக்க வைத்தனர்.

இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் : ஜெயலலிதா அறிவிப்பு.



சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெற உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கைத் தமிழர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனைத்துக் குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அமெரிக்கத வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவர்களுடனான சந்திப்பின்போதும், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரைந்து தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான வழிவகை காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.

தமிழகத்துக்கு அகதிகளாக வந்து, முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் நலனிலும் முதல்வர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். எனவே தான் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்தார்.

இதை செயல்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்மூலம் முகாம்களில் வசிக்கும் 5,544 இலங்கைத் தமிழர்கள் மாதந்தோறும் ரூ. 1,000 ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.