Thursday, July 14, 2011

பொறியியல் சேர்க்கையில் மாணவர்களின் 2ஆவது விருப்பம் - மெக்கானிக்கல் பிரிவு !



அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில், முதல் இடமாக மாணவர்கள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் பிரிவை தேர்ந்து எடுக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, போட்டி போட்டுக்கொண்டு மெக்கானிக்கல் பிரிவை மாணவர்கள் தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள 502 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 38 ஆயிரம் இடங்களுக்கு (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவ - மாணவிகளை பி.இ. சேர்த்து வருகிறது.

ஊனமுற்றோர் கலந்தாய்வு, விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு, தொழில்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகியவை முடிந்து விட்டன.

ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கேற்கும் பொது கலந்தாய்வு கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. கடந்த பல வருடங்களாக மாணவ - மாணவிகள் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் - இ.சி.இ. பிரிவை தான் முதலில் விரும்பி எடுக்கிறார்கள்.

கணினி அறிவியல் பிரிவுக்கு கடந்த சில வருடங்களாக அதிக வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால் சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதால் மீண்டும் கணினி அறிவியல் பிரிவை எடுப்பதிலும் ஆர்வம் சற்று அதிகரித்துள்ளது.

பல வருடங்களாக மெக்கானிக்கல் பிரிவு 4 அல்லது 5ஆவது இடத்தில்தான் இருந்தது. ஆனால் இந்த வருடம் இ.சி.இ.க்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவைதான் விரும்பி எடுக்கிறார்கள்.

ஜூலை 11இன் படி நிலவரப்படி மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 336 இடங்களில் 8 ஆயிரத்து 294 இடங்களை மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுத்துள்ளனர்.

இதில் இ.சி.இ. பிரிவை 2 ஆயிரத்து 118 பேர்களும், மெக்கானிக்கல் பிரிவை 1387 பேர்களும் எடுத்துள்ளனர். 3ஆவதாக 1271 பேர் கணினி அறிவியல் பிரிவை தேர்ந்து எடுத்துள்ளனர்.

4ஆவதாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பிரிவை 909 பேர் எடுத்துள்ளனர். 5ஆவது இடத்தில் தகவல் தொழில்நுட்பம் உள்ளது. அதாவது அந்த பிரிவை 701 பேர் தேர்வு செய்தனர்.

சிவில் பிரிவை 487 பேர்களும், ஆட்டோமொபைல் பிரிவை 99 பேர்களும், ஏரோனாட்டிக்கல் பிரிவை 84 பேர்களும் எடுத்துள்ளனர். தமிழ்வழியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவை ஒரு மாணவரும், தமிழ்வழியில் சிவில் பிரிவை 2 பேரும் எடுத்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த வருடம் மாணவ-மாணவிகளிடையே மெக்கானிக்கல் பிரிவை எடுக்கும் மோகம் அதிகரித்துள்ளது.

புற்றுநோயை குணப்படுத்தும் தக்காளி !



நாம் அன்றாடம் உண்ணும் உணவில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் இதனைத் தொடர்ந்து சாப்பிடுபவர் களுக்கு உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்கப்படுகிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்து கிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக் காமல் கட்டுக்குள் இருக்கும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடல் எடை குறைப்பு

சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் இதற்கான ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட் விச்சுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்ட்விச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.

தொடர்ந்து தக்காளி சாப்பிட்டதன் மூலம் பசி உணர்வு கட்டுப்பட்டு உணவு எடுத்துக்கொள்வது குறைந்தது. குறைவான உணவின் மூலம் உடல் எடையும் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதன் காரணமாகவே உணவியல் நிபுணர்கள் உடை எடைக் குறைப்பில் தக்காளியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் தக்காளி பயன்படுகிறது.

புரோஸ்டேட் புற்றுநோய்

ஆண்களை அதிக அளவில் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் 50 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

இந்த புற்றுநோய் ஆண் உறுப்புக்கு இணையான சுரப்பி திரள்களால் ஆன பெருஞ்சுரப்பியை தாக்குகிறது. இதனால் சிறுநீரக மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவதோடு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருப்பது, சிறுநீருடன் ரத்தம் கலந்து போவது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

லைக்கோபீன்

புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் தக்காளிக்கு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளியில் உள்ள லைக்கோபீன் என்ற பொருள்தான் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது. அதுவும் சமைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் மருத்துவர்களின் ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து: நிபுணர் எச்சரிக்கை.

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் ஆபத்து:    நிபுணர் எச்சரிக்கை

அதிக அளவில் தண்ணீர் குடித்தால் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படாது, உடல் எடை குறையும், நினைவுதிறன் அதிகரிக்கும் என்று ஏற்கனவே மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது ஆபத்து என்று இங்கிலாந்தை சேர்ந்த உடலியல் நிபுணர் ஜி.பி. மர்க்கரட் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

உடலுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்தஅளவுக்கு மட்டுமே குடிக்க வேண்டும். பொதுவாக ஒரு நாளைக்கு 1 முதல் 2 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். அந்த அளவுக்கு குடித்தால் போதுமானது. உடலுக்கு தண்ணீர் தேவைப்படும் போது தாகம் எடுக்கும் அதற்கு தகுந்தார்போல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தேவைக்கு மேல் தண்ணீரை திணிக்கக்கூடாது. அப்படி செய்தால் உடல் உறுப்புகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டி இருக்கும் இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும். உடலில் கலோரியை எரிக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் தண்ணீர் தேவைப்படும். அதன் தேவைக்கு ஏற்றார்போல் உடலில் தண்ணீர் இருக்க வேண்டும்.

உடலில்நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி ஏற்படும். எனவே தலைவலி இருந்தால் தண்ணீர் குடிப்பது நல்லது. பாட்டிலில் அடைந்து வைக்கப்படும் தண்ணீர் ஆரோக்கியமானவை அல்ல.

அபூர்வ வெள்ளை நாகம் - படம்.



கோதுமை நாகம், கருநாகம், ராஜநாகம் என நல்லபாம்பில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் அபூர்வவகையான வெள்ளை நாகபாம்பும் உள்ளது. இந்த வகை பாம்பு ஒன்று புதுவையில் பிடிபட்டுள்ளது.

கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகரில் ஒரு வீட்டுக்குள் இந்த நாகபாம்பு புகுந்தது. அதை பார்த்து விட்டு வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். பாம்பு பிடிப்பதில் நிபுணரான வனத்துறை ஊழியர் வாழுமுனி விரைந்து சென்று பாம்பை பிடித்தார்.

இது 3.5 அடி நீளம் உள்ளது. புதுவையில் வெள்ளை நாகம் பிடிபடுவது இதுதான் முதல் முறை, தமிழ்நாட்டில் சில இடங்களில் வெள்ளை நாகங்கள் பிடிபட்டுள்ளன.

1998-ம் ஆண்டு கடைசியாக திண்டுக்கள் பகுதியில் ஒரு வெள்ளைநாகம் பிடிபட்டது.

நல்லபாம்பின் தோலில் ஏற்படும் நிறமி மாற்றம் காரணமாகத்தான் வெள்ளை பாம்பு உருவாகுவதாக வனத்துறை ஊழியர் வாழுமுனி தெரிவித்தார்.

இந்தியாவில் முதன் முதலாக சென்னையில் உலக செஸ் போட்டி.



இந்தியாவில் முதன்முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் கிர்சன் இலயும்ழினோவ் சந்தித்தார். அப்போது 2012-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டியை சென்னையில் நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இதுவரை இந்தியாவில் சதுரங்கப் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற 24 பேரில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். உலக சதுரங்கத்தில் இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது.

2012-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி, தற்போதைய உலக வாகையரான கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கெல்ஃபேண்டு ஆகியோரிடையே நடைபெறும்.

இந்தப் போட்டியை 2012-ஆம் ஆண்டு சென்னையில் நடத்திட முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார். உலக சதுரங்க வாகையர் பட்டத்திற்கான போட்டி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை முதல் முறையாக சென்னையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்கான செலவு சுமார் 20 கோடி ரூபாய் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு - 21 பேர் பலி - 113 பேர் காயம்.


மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. 113க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 60 வரை இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

6.45க்கு முதல் குண்டுவெடித்தது

மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

மாலை 6.45 மணியளவில் முதல் குண்டுவெடித்தது. ஜவேரி பஜார் பகுதியில், கவ் காலி என்ற இடத்தில் உள்ள ஒரு மின்சார கம்பத்தில் இருந்த மீட்டரில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது.

அடுத்து ஓபரா ஹவுஸில் உள்ள பிரஷாந்த் சேம்பரில் நின்றிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் 3வது குண்டுவெடித்தது. இது சக்தி வாய்ந்த குண்டாகும்.

கடைசியாக 7.04 மணிக்கு தாதர் மேற்குப் பகுதியில், கபூதர்கானா என்ற இடத்தில் நின்றிருந்த ஒரு மாருதி எஸ்டீம் காரில் இந்த குண்டு வெடித்தது.

ஓபரா ஹவுஸில் வெடித்தது சக்தி வாய்ந்தது

மூன்று சம்பவங்களிலும் ஓபரா ஹவுஸில் வெடித்த குண்டுதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இங்குதான் உயிர்ச்சேதமும் அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்த 3 சம்பவங்களிலும் 10 பேர் பலியானதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். குண்டுவெடிப்புகளில் 54 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் சற்று முன்னர் பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 20 பேர் இறந்துள்ளதாகவும், 81 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறினார்.

ஆனால், கடைசியாக கிடைத்த தகவல்களின்படி பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.

60பேர் வரை பலியானதாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை முழுவதும் உஷார் நிலை

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. எல்லைப் புற சாலைகளில் வாகன தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டுகள் வெடித்த இடத்திற்கு காவல்துறையினரும், அதிரடிப்படையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்துள்ளனர்.

4வது முறை குறி வைக்கப்பட்ட ஜவேரி பஜார்:

இன்று குண்டு வெடிப்பு நடந்த ஜவேரி பஜார் பகுதியில் 1999, 2003 மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த தொடர் குண்டு வெடிப்பின்போதும் குண்டுகள் வெடித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 4வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இன்று நடந்த குண்டு வெடிப்புகளில் ஓபரா ஹவுசில் நடந்தது தான் மிகப் பெரிய தாக்குதலாகும். அங்கு தான் மிக அதிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

தயார் நிலையில் என்எஸ்ஜி கமாண்டோக்கள்

என்எஸ்ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிரடி நடவடிக்கைக்குத் தேவையான அளவில் அவர்கள் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

என்ஐஏ குழு மும்பை விரைகிறது

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் புலனாய்வுக் குழு டெல்லியிலிருந்து மும்பை விரைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத தாக்குதல்-உள்துறை அமைச்சகம்

மும்பையில் இன்று நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், மத்திய உள்துறை செயலாளர் யு.கே.பன்சால், மகாராஷ்டிர மாநில டிஜிபியைத் தொடர்பு கொண்டு பேசினார்.

இதையடுத்து இந்த சம்பவம் ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் மூலம் என்எஸ்ஜி கமாண்டோப் படையினரும், தடயவியல் நிபுணர்களும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

நாடு முழுவதும் உஷார் நிலை

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்துமாறும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

thatstamil.oneindia.in

Wednesday, July 13, 2011

எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலம்.

’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற!


அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அவர் எடுத்துக் கொள்ளும் சர்ச்சைக்குரிய கதை. இரண்டாவது அவரது தனித்துவமான சுவாரஸ்யமான திரைக்கதை.

’வாலி’ என்ற ரணகளமான படத்தின் மூலமே தன் கலையுலக வாழ்வைத் தொடங்கினார் சூர்யா. படத்தின் ஷூட்டிங்கின்போது தினமும் அஜித்-சிம்ரன் காம்பினேசனிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டன. உடன் பணியாற்றிய அனைவருக்குமே ஆச்சரியம் இது என்னடா படம் என்று. ‘அஜித் தெரியாமல் வந்து மாட்டிவிட்டார்’ என்றே பலரும் நினைத்தனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் அண்ணன் அஜித்-சிம்ரன் - தம்பி அஜித்தே வருவார்கள். தனது வேகமான திரைக்கதையாலும் சுவாரஸ்யமான கேரக்டர்களாலும் அது நம்மை உறுத்தாமல் மறைத்தார் சூர்யா. ஜோதிகாவின் அறிமுகக்காட்சி போன்றவற்றில் வித்தியாசங்களைப் புகுத்தினார். படம் சூப்பர் ஹிட் ஆகியது.

தொடர்ந்து தோல்விகளால் சுருண்டு கிடந்த விஜய்யை வைத்து குஷி எடுத்தார். தமிழ்சினிமாவில் முதல்முறையாக ‘இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணப்போறாங்க. கடைசில சேரப் போறாங்க’ என்ற அரதப்பழசான கதையை முதல் காட்சியிலேயே சொல்லிவிட்டு படத்தைக் கொண்டு சென்றார். கதையை கவட்டைக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு பலரும் திரிந்த நேரத்தில் தைரியமாக தியேட்டரில் உட்கார்ந்திருந்த ஆடியன்ஸ்க்கு ‘இதான் கதை’யென்று சொல்லி திரைக்கதையில் அடித்தார் எஸ்.ஜே.சூர்யா.


எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்த முக்கியமான திறமை ரொமாண்டிக் & செக்‌ஷூவல் காமெடி. கே.பாக்கியராஜ் தவிர்த்து வேறு யாருமே தொடத் தயங்கிய, தொட்டு ஜெயிக்கமுடியாத விஷயம் செக்‌ஷூவல் காமெடி. அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்களை வைத்துக்கொண்டு, காமத்தைப் பிண்ணனியாக வைத்து குடும்பக் கதை சொல்வதில் வல்லவராய் திகழ்ந்தவர் பாக்கியராஜ். அதிர்ஷ்டவசமாக எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் கேஸ் போடும் கெட்ட பழக்கம் அவர் காலத்தில் இல்லாததால் தொடர்ந்து ஜெயித்தார் பாக்கியராஜ். அவரை விட செக்‌ஷுவல் காமெடியில் பல அடி பாய்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

உண்மையில் செக்‌ஷுவல் காமெடி என்பது கம்பி மேல் நடப்பது போன்று கடினமான விஷயம். கொஞ்சம் பிசகினாலும் அருவறுப்பாகி விடும்.

தமிழில் அத்தகைய முயற்சியைச் செய்யக்கூடிய திறமையும் தைரியமும் சூர்யாவிடம் இருந்தது. அதற்கான நிரூபணமாக ‘நியூ’ எடுத்தார். அதை ஒரு சயின்ஸ் ஃபிக்சனாக எடுத்தார். முதலில் அஜித்-ஜோதிகா நடிப்பதாக இருந்து, பயந்து போய் பின்வாங்கிய படம் நியூ. அதன்பிறகு அவரே கதாநாயகனாக ஆனார். அவரது தோழியான சிம்ரன் கதாநாயகியாக நடித்து அவருக்கு கை கொடுத்தார்.


’காமம் என்பது பெண்களை இழிவுபடுத்தும் விசயம். காமத்தைப் பற்றிப் பேசுபவன் பெண்ணிய விரோதி’ என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்ட காலகட்டம் இது. ஆனால் செக்‌ஷுவல் காமெடி என்பது நமக்குப் புதிய விஷயம் அல்ல. நமது பண்டைய கலைகளான கரகாட்டம், குறவன் -குறத்தி ஆட்டம் போன்றவை காமத்தை அடிப்படையாகக் கொண்டவையே.

இரட்டை அர்த்த வசனங்களும் செக்‌ஷுவல் காமெடியும் நிறைந்த கலைகளையே எளிய மனிதர்கள் வாழும் கிராமங்கள், தங்கள் திருவிழாக்களில் கண்டு மகிழ்ந்தனர். இன்றும் அது தொடரவே செய்கின்றது. ஆனால் நாகரீக மனிதர்களான நமக்கு காமத்தைக் கண்டால் வெறுப்பே வருகின்றது!

எஸ்.ஜே.சூர்யா தமிழ்ச்சமுதாயத்தின் கலைகளும், ஹாலிவுட் படங்களும் சொன்ன அதே விசயத்தை தமிழ் சினிமாவில் சொல்ல முயன்றார். அதனாலேயே கடும் எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தார். அநேகமாக இந்திய சினிமா வரலாற்றில் சென்சார் சர்ட்டிஃபிகேட் ரத்து செய்யப்பட்ட ஒரே படம் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ தான். ஆனால் தமிழ்சினிமாவில் வெளிவந்த முழுநீள செக்‌ஷுவல் காமெடிப் படமான நியூ, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கெடுப்பதாக கூக்குரல் எழுந்தது. நீதிமன்றதிற்கும் வீட்டிற்கும் அலைக்கழிக்கப்பட்டார் எஸ்.ஜே.சூர்யா.

அதனை அடுத்து அவர் எடுத்த ‘அன்பே ஆருயிரே’வில் அவரது ஃபிட்னெஸ் கொஞ்சம் குறைந்தது. அதிலும் வித்தியாசமான திரைக்கதையை எடுத்தார், வழக்கம்போல் கதையைச் சொல்லிவிட்டு.

எஸ்.ஜே.சூர்யா என்ற சிறந்த இயக்குநர், திரைக்கதையாசிரியர் செய்த ஒரே தவறு, ஹீரோவாக தொடர்ந்து நடித்தது தான். அதனால் அற்புதமான இயக்குநரை இழந்தோம் நாம். கள்வனுன் காதலி, வியாபாரி, திருமகன், நியூட்டனின் மூன்றாம் விதி; போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும், ஒரு நடிகராக அவர் பரிணமிக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக ‘புலி’ என்ற தெலுங்குத் தோல்விப்படத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கி நிற்கின்றது இந்த திரைக்கதைப் புலி.

ஷங்கரின் ‘நண்பன்(த்ரீ இடியட்ஸ்)’ படத்தில் கெஸ்ட் ரோலில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அவரே நடித்து ஒரு படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. இடையே விஜய்யை வைத்து அடுத்த படம் செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அதுவும் உறுதியாக, தெளிவாகத் தெரியவில்லை.


ஹீரோவாக நடிக்காமல், வெறும் இயக்குநராக மட்டும் களம் இறங்கினால் பல வித்தியாசமான படங்களைத் தர எஸ்.ஜே.சூர்யாவால் முடியும். எஸ்.ஜே.சூர்யாவின் மற்றொரு திறமை இசை பற்றிய நுண்ணறிவு. அவரது படங்களின் பாடல்களில் இது நன்றாக வெளிப்படும்.

திரைப்படம் என்பது ’தாத்தா-பாட்டி-அப்பா-அம்மா-சித்தப்பா-சித்தி-பெரியப்பா-பெரியம்மா-மகன்-மகள்-அண்ணன் -தம்பி-அக்கா-தங்கச்சி-வீட்டு நாய்க்குட்டி’ என குடும்பம் சகிதம் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்று இன்னும் நம்பும் ஒரு முன்னேறிய சமுதாயத்தால் எஸ்.ஜே.சூர்யாவை சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இழப்பு தமிழ்சினிமாவிற்கே.இன்னும் பல எக்ஸ்பரிமெண்ட்களை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பார். அதற்கு முன் அவரது படைப்புணர்வு காயடிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவிற்கு எஸ்.ஜே.சூர்யாவின் பங்களிப்பு என்னவென்றால் ஒரு கமர்சியல் படத்துக்குக் கதை முக்கியம் அல்ல, திரைக்கதையே உயிர்நாடி என்று பொட்டில் அடித்தாற்போல் தன் படங்களின் மூலம் நிரூபித்ததும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு செக்‌ஷுவல் காமெடிப் படத்தை நமக்குக் கொடுத்ததுமே!

sengovi.blogspot.com