Friday, June 17, 2011

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் நகைகள், பணம் பறிப்பு .

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளிடம் நூதன முறையில் பணம் பறிப்பு: நகைகள்- பொருட்களை பொதுமக்கள் இழக்கும் பரிதாபம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டின் அழகை ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் திரளாக வந்து செல்கிறார்கள். கடந்த மே மாதம் கோடைவிழா மற்றும் மலர்கண்காட்சி நடந்தது. இதில் பல ஆயிரம்பேர் கலந்து கொண்டு இயற்கை அழகை ரசித்தனர்.

தற்போது சீசன் முடிந்துவிட்ட நிலையிலும் சனி, ஞாயிறு நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் ஏற்காட்டில் 10 பேர் கும்பல் ஒன்று சூதாட்டம் நடத்தி பணம், நகைகளை பறித்து வருகிறது. இவர்களிடம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரும் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த கனகராஜ், ராஜேந்திரன் கூறியதாவது:-

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் சிலர் திடீரென வருகிறார்கள். பூங்கா பகுதி, லேடீசீட் பகுதி, பக்கோடா பாயிண்ட் பகுதிகளில் ரோட்டு ஓரம் அமர்ந்து கொள்கிறார்கள்.

கூட்டம் அதிகம் வரும் நேரத்தில் சூதாட்டம் நடத்துகிறார்கள். இந்த சூதாட்டத்தை பார்ப்போர் என்ன கூட்டமாக இருக்கிறது என பார்க்க செல்லும்போது சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கட்டாயப்படுத்தி அவர்கள் வைத்து இருக்கும் பணம், மற்றும் நகைகளை பறித்து கொள்கிறார்கள்.

உஷாராக இருப்பவர்களை மிரட்டி அனுப்பி விடுகிறார்கள். தாயக்கட்டை, சீட்டாட்டாம் உள்பட பல விளையாட்டுக்களை இவர்கள் நடத்தி இதன் மூலம் பணம் பறிக்கிறார்கள். பணம் இல்லை என்றால் நகையை தாருங்கள் நாங்கள் அடகு வைத்து பணம் பெற்று தருகிறோம் என மிரட்டி நகைகளை பறித்து சென்று விடுகிறார்கள்.

நகை, பணம் இல்லாதவர்களிடம் அவர்கள் வரும் மோட்டார் சைக்கிள் அல்லது மொபட்டுக்களை பறித்து கொள்கிறார்கள். இதை யாரும் தட்டி கேட்டால், அவர்களை தாக்கவும் செய்கிறார்கள்.

இவர்கள் மீது உடனே சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயில்வாகனன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து கைது செய்ய வேண்டும். இந்த சம்பவம் தொடர்ந்தால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வராத நிலை ஏற்பட்டாலும் ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மின்சாரம் திருட்டு.

சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மின்சாரம் திருட்டு: மின்வாரியம் நோட்டீசு

சென்னை விமான நிலையத்திற்கு மின்வாரியத்தில் இருந்து எச்.டி./232 என்ற எண்ணில் இருந்து விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு தேவையான பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

விமான நிலையத்தின் செயல்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் வேறு வகைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தியது திடீர் சோதனையில் தெரிய வந்தது.

இதன் மூலம் மின்சார வாரியத்திற்கு ரூ.22 லட்சத்து 4 ஆயிரத்து 591 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பணத்தை உடனடியாக செலுத்துமாறு இந்திய விமானநிலைய ஆணையத்திற்கு மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டவுடன் விமான நிலைய உயர் அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து அரசு அலுவலகம் என்பதால் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

இந்த கோரிக்கையை மின்வாரியம் நிராகரித்து தள்ளுபடி செய்தது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய செயல்பாடுகளுக்காக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் இருந்து அங்கு நடைபெறும் கட்டிட பணிக்கு மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. இது விதிகளின்படி மின் திருட்டாகும். அபராதம் செலுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அபராத தொகை கட்டப்படவில்லை. இது குறித்து மின்வாரியம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமச்சீர்கல்வியை புறக்கணித்த முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு .

முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு சென்னையில் நாளை நடக்கிறது

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தனியார் பள்ளிகள் மாநாடு சென்னையில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தினர் சார்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் பள்ளிகள் வாழ்வுரிமை மாநாடு நாளை 18-ந்தேதி சனிக்கிழமை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள வித்யோதயா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது.

மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது:-

சமச்சீர் கல்வியை நிறுத்தி தரமான கல்வியை வழங்க முனைப்போடு செயல்படும் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி - பாராட்டுதலை தெரிவிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கல்வி கட்டணத்தை முறைப்படுத்த முத்தரப்பு குழு அமைத்து பெற்றோர்கள், மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

ரவிராஜ பாண்டியன் கமிட்டியின் புதிய கல்வி கட்ட குறைபாடுகளை நீக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட பள்ளிகள் அங்கீகாரத்தை உடனே வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும். நிலம் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தனியார் பள்ளிகளின் வாழ்வாதார பிரச்சினைகள் பற்றி மாநாட்டில் பேசி முடிவு எடுக்க வேண்டியிருப்பதால் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாய்பாபா அறையில் 11.56 கோடி ரூபாய், மற்றும் 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு.

சாய்பாபா அறையில் 11.56 கோடி ரூபாய், மற்றும் 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு

புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் மார்ச் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்டார் அப்போது அவரது அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த போது கூட அந்த அறை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் சுமார் 2 1/2 மாதத்துக்குப் பிறகு சாய்பாபா அறையை திறக்க முடிவு செய்யப்பட்டது.அப்போது குவியல், குவியலாக பணக்கட்டுக்களும், வைரங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது ,அதனை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வங்கிக்கு எடுத்துச் சென்றனர் .மேலும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை தற்போது அறிவித்துள்ளனர் 11.56 கோடி ரூபாய், மற்றும் 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி இருந்தாக தெரிவித்தனர் .

வைரங்களின் மதிப்பு இன்னும் வெளியிடப் படவில்லை.

கலெக்டர் மகள் சேர்ப்பால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள அரசு தொடக்கப்பள்ளி.

கலெக்டர் மகள் சேர்ப்பால் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ள    ஈரோடு அரசு தொடக்கப்பள்ளி;    என் மகளுக்கு எந்த சலுகையும் காட்டக்கூடாது என்று கலெக்டர் கண்டிப்பு

ஈரோடு மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார் தனது மகள் கோபிகாவை ஏழை பள்ளிகள் படிக்கும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்தார். கலெக்டரின் இந்த நடவடிக்கையால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பல பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன் உள்ளனர்.

மேலும் முன் உதாரணமாக திகழ்ந்த கலெக்டருக்கு அடுத்தப்படியாக மற்ற அரசு அதிகாரிகளும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆர்வத்துடன் உள்ளனர். ஈரோடு குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருக்கும் தனது மகள் கோபிகாவை மற்ற குழந்தைகளை எப்படி கவனித்து படிக்க வைக்கிறீர்களோ... அப்படிதான் படிக்க வைக்க வேண்டும். வேறு எந்த சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்றும் கலெக்டர் ஆனந்தகுமார் பள்ளி நிர்வாகத்தினரிடம் கூறி உள்ளார்.

கலெக்டரின் குழந்தை குமலன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டு இருப்பதையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அதிகாரிகளின் பார்வையும் குமலன்குட்டை தொடக்கப்பள்ளியிலேயே பதிந்துள்ளது.

நேற்று அப்பள்ளிக்கு ஈரோடு பஞ்சாயத்து யூனியன் அலுவலர் வகிதா நேரில் வந்து, பள்ளியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தமான தரமான சமையல் செய்ய வேண்டும். காய்-கறிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி சத்துணவு சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தற்போது குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஈரோடு மாவட்டத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

கலெக்டர் மகள் நாங்கள் படிக்கும் பள்ளியில் எங்களுடன் படிக்கிறாள்... என்று மற்ற மாணவ- மாணவிகளும் பள்ளி குழந்தைகளும் தங்கள மழலை குரலில் உற்சாகத்துடன் கூறினர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி கூறும் போது, கலெக்டரின் மகள் எங்களது பள்ளியில் படிப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. சவாலாகவும் உள்ளது என்று கூறினார்.

மற்ற ஆசிரிய- ஆசிரியைகளும் கலெக்டர் மகள் கோபிகா... இப்போது எங்களது செல்லக்குழந்தை. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஏன் அதற்கு மேலாக எங்களது கல்வி சொல்லி கொடுக்கும் முறை இருக்கும். பொதுவாக எல்லா அரசு பள்ளிகளிலும் நன்றாகத்தான் சொல்லி கொடுக்கிறார்கள். கலெக்டரின் மகள் எங்கள் பள்ளியில் சேர்க்கப்பட்ட தன் மூலம் அரசு பள்ளிக்கு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது என்று பெருமையுடன் கூறினர்.

நேற்று கலெக்டர் கோபிகா மகளுக்கு வீட்டில் இருந்து காரில் மதிய உணவு வந்தது. சீருடை கொடுத்த பிறகு கலெக்டர் மகளுக்கும் பள்ளியிலேயே சத்துணவு சாப்பிட கொடுக்கப்படும்.

அண்ட வெளியில் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் நட்சத்திரம்!



புதிதாகத் தோன்றிய ஒரு நட்சத்திரத்திலிருந்து (Baby star) மாபெரும் அளவில் தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

உலகின் மாபெரும் ஆறுகளில் ஒன்றான அமேசான் ஆற்றை இந்த நட்சத்திலிருந்து பீய்ச்சி அடிக்கும் நீர் ஒரு வினாடியில் நிறைத்துவிடும், அந்த அளவுக்கு அதில் நீர் உற்பத்தியாகிக் கொண்டுள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 750 ஒளி வருடத்துக்கு அப்பால் உள்ளது இந்த நட்சத்திரம். இதன் வயது 100,000 ஆண்டுகள் தான். அதாவது சூரியனை ஒத்துள்ள இந்த நட்சத்திரம் இன்னும் முழுமையாக உருவாகவில்லை. இப்போது தான் உருவாகிக் கொண்டுள்ளது.

பெர்சூயஸ் நட்சத்திர மண்டலத்தில் (constellation perseus) இந்த நட்சத்திரத்தின் வடக்கு-தெற்கு புலத்திலிருந்து அண்ட வெளியில் இந்த நீர் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளது. மணிக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இந்த நீர் பாய்ந்து கொண்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரி (Herschel Space Observatory) என்ற வானியல் தொலைநோக்கி இந்த நட்சத்திரத்தை படம் பிடித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்து தண்ணீர் அணுக்களை (H2O) உருவாக்குகின்றன. ஆனால், நட்சத்திரத்தில் நிலவும் பயங்கர வெப்பத்தால் அவை 1.8 லட்சம் பாரன்ஹீட் அளவுக்கு சூடாகி வாயுவாக மாறுகின்றன. பின்னர் நட்சத்திரத்திலிந்து இந்த வாயு அதிவேகத்தில் வெளியேறுகிறது. வெளியில் அண்ட வெளியில் நிலவும் மிகக் குளுமையான சூழலால் இந்த வாயு மீண்டும் நீராக மாறி அண்டவெளியில் பல கோடி கி.மீ. தூரத்துக்கு பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது என்கின்றனர் இந்த ஹெர்ஸ்செல் ஸ்பேஸ் அப்சர்வேட்டரியை இயக்கி வரும் நெதர்லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள்.

உயிர்கள் உருவாகவும், உயிர்கள் நிலைக்கவும் மிக முக்கிய காரணியான நீர் பூமிக்கு எப்படி வந்தது என்பது குறித்து பல யூகங்கள் உள்ளன. இப்போது, இந்த நட்சத்திரத்தில் நீர் உருவாவது, பூமிக்கு ஏதாவது ஒரு நடத்திரத்திலிருந்து நீர் வந்திருக்கலாமோ என்ற யூகத்தை வலுப்படுத்தியுள்ளது. அந்த நட்சத்திரம் நமது சூரியனாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள். நட்சத்திரங்கள் உருவாகும்போது நீர் உருவாவது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்ற அடிப்படையில், பூமிக்கு சூரியனிலிருந்து நீர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் : டாக்டர் ராமதாஸ் பேச்சு.

கல்வி கட்டணக் கொள்ளையை தடுக்க கல்லூரிகள், பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் பேச்சு

தமிழக மாணவர் சங்கம் சார்பில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கட்டண உயர்வை கண்டித்து சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது :-

கல்விகண் கொடுத்தவர் காமராசர். அந்த காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர் கள்தான், ஜனாதிபதிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், பல உயரிய பொறுப்புகளில் பதவிக்கு வந்தனர். காமராஜரின் ஆட்சிக்கு பிறகு நர்சரி பள்ளி, மெட்ரிக் குலேசன் பள்ளி எப்படி உருவானது? ஏழைகள் பணக்காரர்களுக்கு என்று கல்வி பிரிக்கப் பட்டது எப்படி? கல்விக் கட்டண கொள்ளைக்கு துணை போனவர்கள் ஆட்சியாளர் களதான்.

இப்போது நடைபெறும் கல்வி கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஒரே வழி பள்ளி, கல்லூரிகள் அனைத்தையும் அவசர சட்டத்தின் மூலம் அரசுடமை ஆக்க வேண்டும். அரசே அனைவருக்கும் தரமான கல்வியையும், கட்டணம் இல்லாத கல்வியையும் கட்டாய கல்வியையும் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தர்ம சிந்தனையோடு லாப நோக்கம் இல்லாமல் கல்வி நிறுவனங்கள் நடத்துகிறோம் என்று ஒருவர் கூட சொல்ல முடியாது. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, பள்ளிகளை அரசுடமை ஆக்க வேண்டும்.

பாட்டாளி மாணவர்கள் சங்கத்தினர் அரசே கல்வி கொடு, அரசே கல்விக் கூடங்களை நடத்து என்ற முழக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும், போராட்டம் நடத்துங்கள். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.