Monday, June 13, 2011

காவல்நிலையத்தில் இருந்து 7 பேரை மீட்டுச் சென்ற அமைச்சர், எம்எல்ஏ !


செய்தித்துறை அமைச்சர் செந்தமிழன் சென்னையில் உள்ள காவல்நிலையத்திற்கு நேரில் வந்து, அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் 12.06.2011 அன்று இரவு கொடி, தோரணம் மற்றும் வரவேற்பு தட்டிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் டெல்லி பயணத்தை முன்னிட்டு அந்த ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சிலோன் ஹோட்டலில் அமர்ந்து உணவு அருந்துபோது, விவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அந்த நேரத்தில் தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு அப்பகுதியில் சென்றுள்ளார். ஹோட்டலில் இருந்து சத்தம் வருவதை அறிந்த அவர், உள்ளே சென்று விசாரித்துள்ளார். அப்போது நாங்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்த சமயத்தில் அதிமுகவினருக்கும், தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து அதிமுகவினரை துணை ஆணையர் தாக்கியதாக கூறப்படுகிறது. நுங்கம்பாக்கம் அதிமுக பகுதி செயலாளர் மாறன், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட 7 பேரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்கு துணை ஆணையர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் காவலில் வைக்கப்பட்டனர்.

அதிமுகவினர் காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட தகவல் அமைச்சர் செந்தமிழன், அதிமுக எம்எல்ஏ வளர்மதி ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் அதிமுகவினருடன் காவல்நிலையத்திற்கு சென்று எங்கள் கட்சிக்காரர்களை ஏன் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தீர்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொன்னதாக தெரிகிறது.

காவல்நிலையத்திற்கு அதிமுகவினர் அழைத்துவரப்பட்டதற்கான காரணம் தெரிவித்தும், அதனை அமைச்சர் செந்தமிழனும், எம்எல்ஏ வளர்மதியும் கேட்க மறுத்துவிட்டதாகவும், காவல்நிலையத்தில் உள்ள அதிமுகவினரை விடுவிக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். போலீசார் வேறுவழியின்றி அதிமுகவினர் 7 பேரையும் விடுவித்துவிட்டனர்.

இந்தநிலையில் மாறன் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில் தங்களை தாக்கிய தியாகராய நகர் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறைனர், புகார் பெற்றுக்கொண்டதற்கான ரசீதையும் வழங்கியுள்ளனர். இதனால் துணை ஆணையர் திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவினர் யாரும் காவல்நிலையத்திற்கு சென்று யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே கூறியுள்ளார். அதையும் மீறி அமைச்சர் செந்தமிழன், எம்எல்ஏ வளர்மதி உள்ளிட்டோர் அதிமுகவினர் 7 பேரை மீட்டுச் சென்றிருப்பதால், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கை இருக்குமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்குள் சி.ஐ.ஏ. படம்பிடித்த 10 நிமிட வீடியோ.


சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பகீர் ஆதாரங்களை காண்பித்திருக்கின்றார். பாகிஸ்தானில் வைத்தே, பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, மற்றும் உளவு அமைப்பின் தலைவர் ஆகியோருக்கு இந்த ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன.

“சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் செய்துவரும் பல ஆபரேஷன்கள் பற்றிய விபரங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு முன்கூட்டியே தெரியவந்து விடுகின்றன. இதனால் அவர்கள் உஷாராகி, தப்பி விடுகின்றனர். தீவிரவாதிகளுக்கு தகவல் போவது எப்படி? அதற்கு பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகளுக்கு ஆட்கள் இருக்க வேண்டும்” இவ்வாறு சி.ஐ.ஏ. சமீபகாலமாக வெளிப்படையாகக் கூறிவருகின்றது.

அதை பாகிஸ்தானியத் தலைமை மறுத்தும் வந்துள்ளது.

நிலைமை மோசமாகி வரவே சி.ஐ.ஏ.யின் தலைவர் லியோன் பனெடா, இரு தினங்களுக்குமுன் பாகிஸ்தானுக்கு நேரில் சென்றிருந்தார். பாகிஸ்தானிய ராணுவத் தளபதி ஜெனரல் ஆஷ்பக் கயானி, உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப். ஜெனரல் அஹ்மட் பாஷா ஆகியோரை அவரச கூட்டம் ஒன்றுக்கு அழைத்தார்.

அப்போதும் பாகிஸ்தான் தரப்பு, “எமது பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து ரகசியங்கள் ஏதும் தீவிரவாத அமைப்புகளுக்கு லீக் செய்யப்படுவதில்லை. நீங்கள் (சி.ஐ.ஏ.) கூறுவது கற்பனையான குற்றச்சாட்டு” என்பதையே மீண்டும் வலியுறுத்தினர்.

இதையடுத்து சி.ஐ.ஏ.யின் தலைவர், “எமக்குக் கிடைத்த தகவல்களில் இருந்து, உங்களது ராணுவத்துக்கு உள்ளேயே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.

இதை கோபமாக மறுத்த பாகிஸ்தானிய ராணுவத் தளபதி, “ஆதாரம் ஏதுமில்லாமல் எமது ராணுவத்தினர்மீது குற்றம்சாட்டக் கூடாது” என்றார்.

அதன் பின்னரே லியோன் பனெடா, தம்மிடமுள்ள ஆதாரங்கள் சிலவற்றை மேஜையில் தூக்கிப் போட்டார்.

சி.ஐ.ஏ. தலைவர் காண்பித்த ஆதாரங்களில், பல டாக்குமென்ட்களுடன், 10 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவும் இருந்தது. பாகிஸ்தானிய உளவுத்துறைக்குத் தெரியாமலேயே, பாகிஸ்தானுக்கு உள்ளே படம்பிடிக்கப்பட்ட வீடியோ அது!

பாகிஸ்தானின் இரு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள் வெடிகுண்டு தயாரிப்பு தொழிற்சாலைகளை நடாத்திவருவது பற்றிய உளவுத் தகவல்கள் சி.ஐ.ஏ.க்குக் கிட்டியிருந்தது. இதில் ஒரு வெடிகுண்டுத் தொழிற்சாலை வடக்கு வாசிரிஸ்தானிலும், மற்றையது தெற்கு வாசிரிஸ்தானிலும் அமைந்திருந்தன.

குறிப்பிட்ட தொழிற்சாலைகள் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்திருந்த சி.ஐ.ஏ., தம்மிடமிருந்த தகவல்களை பாகிஸ்தானிய ராணுவத்துடன் பகிர்ந்து கொண்டது. பாகிஸ்தானிய ராணுவத்தை வைத்தே, அந்த வெடிகுண்டுத் தொழிற்சாலைகள் இரண்டையும் ரெயிட் செய்யும் ஆபரேஷனை மேற்கொண்டது.

ஆனால், ரெயிட் நடைபெற்ற நேரத்தில், இரு இடங்களிலும் ஏதுமில்லை. எல்லாமே மாயமாகி விட்டிருந்தன.

“சி.ஐ.ஏ.க்கு கிடைத்த தவறான தகவலின் பேரில் நடைபெற்ற ரெயிட்” என்று கூறி, இரு ஆபரேஷன்களையும் முடித்துக் கொண்டது பாகிஸ்தானிய ராணுவம்.

இப்போது, சி.ஐ.ஏ. தலைவரினால் இஸ்லாமபாத்தில் வைத்துக் காண்பிக்கப்பட்ட 10 நிமிட வீடியோவில், மேலே குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னணி படமாக்கப்பட்டிருந்தது. எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ, தீவிரவாத அமைப்பினரில் இரு வெடிகுண்டுத் தொழிற்சாலைகளிலும் ரகசியமாக எடுக்கப்பட்டவை!

தொழிற்சாலைகளை ராணுவம் சுற்றி வளைக்கப்போகும் தகவல், தீவிரவாத அமைப்பினருக்கு வந்து சேருவதும், உடனே அவர்கள் துரிதமாகச் செயற்பட்டு, தமது தொழிற்சாலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும் சி.ஐ.ஏ.யால் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருந்தன.

“எமக்குக் கிடைக்கும் உளவுத் தகவல்களின் அடிப்படையில் நாம் நேரடியாக ஆபரேஷன்களை பாகிஸ்தானுக்குள் செய்தால், அதையும் எதிர்க்கிறீர்கள். உளவுத் தகவல்களை உங்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினால், உங்கள் ஆட்களாலேயே தகவல்கள் தீவிரவாதிகளுக்குப் போய்ச் சேருகின்றன” என்று சி.ஐ.ஏ.யின் தலைவர் கூறியதற்கு, பாகிஸ்தானின் தரப்பிலிருந்து கூறப்பட்ட பதில் என்ன?

“நாங்கள் இதுபற்றி விசாரிக்கிறோம்” அவ்வளவுதான்!

இந்திய சினிமா : வெளிநாடுகளில் என்ன நிலை?


ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் இயக்கிவரும் ‘BIG Cinemas’ தியேட்டர்கள், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தமது கதவுகளைத் திறந்துள்ளன. வெளிநாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இது சாத்தியமாகியுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

“இந்தியத் திரைப்படங்களுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு வெளிநாடுகளில் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ் மீடியா வேர்க்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி அனில் அர்ஜூன், “இதனால்தான், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் தியேட்டர்களை வெற்றிகரமாக இயக்க எம்மால் முடிகின்றது” என்கிறார்.

‘BIG Cinemas’ தியேட்டர்கள், 2008ம் ஆண்டில் அமெரிக்காவில் நியூ ஜேர்சியிலும், ஜோர்ஜியாவிலும் முதன்முதலாகத் தமது தியேட்டர்களைத் திறந்தது. தற்போது ‘BIG Cinemas’ தியேட்டர்கள், Illinois, California, Florida, Georgia, Kansas, Kentucky, Nevada, New Jersey, New York, North Carolina, Ohio, Tennessee, Virginia ஆகிய மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்தம் 24 நகரங்களில், 250 தியேட்டர்களை நடாத்துகின்றது ரிலையன்ஸ். அமெரிக்காவில் திரையிடப்படும் 20-30% ஹிந்திப் படங்களும், 70% தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களும் தமது நிறுவனத்தாலேயே வெளியிடப்படுவதாகக் கூறுகின்றது ரிலையன்ஸ்.

“எமது தியேட்டர்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், வெளிநாட்டுவாழ் இந்தியர்களாலேயே அதிகம் பார்க்கப்படுகின்றன என்றும் கூறியுள்ள அனில் அர்ஜூன், ஸ்டார் வேல்யூ உடைய திரைப்படங்களான Dabangg, 3 Idiots, My Name is Khan, Robot போன்றவை, தியேட்டரின் 100% சீட்கள் நிரம்பிய நிலையில் காண்பிக்கப்படுவது சகஜம்” என்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் இருக்கும் காரணத்தால், மலேசியா, மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் தற்போது தியேட்டர்களைத் திறந்துள்ளது ரிலையன்ஸ். மலேசியாவில் இவர்களால் 72 தியேட்டர்கள் நடாத்தப்படுகின்றன.

சமீப காலமாக இந்தியத் திரைப்படங்கள் இன்டர்நேஷனல் பேனர்களில் தயாரிக்கப்படத் தொடங்கியுள்ளன. My Name is Khan, Kites ஆகிய திரைப்படங்கள் இப்படித் தயாரிக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படங்கள். ஹாலிவூட் திரைப்பட பாக்ஸ் ஆபீஸ் வரிசைகளிலும் இந்தத் திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆரம்ப நாட்களில் குறைந்தளவு காப்பிகள், மற்றும் தியேட்டர்களிலேயே வெளியிடப்பட்ட இந்தியத் திரைப்படங்களை, அமெரிக்காவில் தற்போதுள்ள நிலைக்குக் கொண்டுவந்தது 3 Idiots திரைப்படம்தான் என்கிறார் அனில் அர்ஜூன். “தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களும், வெளிநாட்டு மார்க்கெட்டையும் மனதில் வைத்தே தயாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது” எனவும் கூறுகிறார் அவர்.

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில், அதிக சதவீதமான ரசிகர்கள் ஈழத் தமிழர்கள் என்பதே நிலை. இதனால், வெளிநாட்டு மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்தும் தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், ஈழத் தமிழர்களை மனதில் வைத்தும் சில காட்சிகளைச் சேர்ப்பது நடைபெறுகின்றது.

வலி நிவாரண மருந்தாகும் அபின்.


இந்திய உணவுப் பொருட்களில் கசகசா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது மார்ஃபைன் மருந்திற்காக உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கசகசா செடியின் மலர்கள், காய், விதை மற்றும் விதை எண்ணெய் போன்றவை மருத்துவ பயன் உடைய பகுதிகளாகும்.

மரபு மருத்துவத்தில் அபின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 4000 ஆண்டுகளாக பயிரிடப்படும் மருந்து தாவரமாகும். அரேபியர்களால் இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. சீனாவில் 7- ம் நூற்றாண்டுக்குப் பின்னரும், ஜப்பானில் 15 – ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரும் அபின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

அபினில் காணப்படும் அல்கலாய்டுகள் மனித இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதில் மார்ஃபைன், கொடைன், தியபெயின், நார்கோடைன், பெப்பருவரைன், போன்ற பல செயல் ஊக்கப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு உள்ளன.

அபின், ஓபியம்

கசகசா செடியின் காய்களின் மீது கூரிய கத்தி கொண்டு மேலிருந்து கீழாக கீறல்கள் போடப்படும் பொழுது லேடக்ஸ் சுரந்து வெயிலில் கட்டி, பிசின் போன்று மாறும். இதுவே அபின் – ஓபியம் எனப்படுகின்றது. தாவரத்தில் மலர், காய் ஆகியவற்றில் இருந்து அபின் கிடைக்கிறது. விதைகளின் காணப்படுவதில்லை.

பலவிதமான மருந்து தயாரிப்புகளிலும் அபின் கலந்து பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள ஆல்கலாய்டுகளான பைன் மற்றும் கொடைன் ஆகியவை தூக்கத்தை தூண்டுபவைகளாகவும், வலிபோக்குவிகளாகவும் செயல்படுகின்றன. அதிக அளவு உட்கொண்டால் விஷமாகும். இது தடை செய்யப்பட்ட தாவரமாகும்.

வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும்

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் எற்படும் உடல் சோர்வினை போக்கும். கொதிக்கும் நீரில் சிறிது அபின் கலந்து ஆவி பிடித்தால் மூச்சடைப்பு, சளி போக்கும். கற்பூரத்துடன் சம அளவு கலந்த கலவை சுளுக்கு வலி போக்க வல்லது.

பிரசவகால வலி போக்கும்

அபினில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மார்ஃபியா சக்தி மிகுந்த மருந்தாகும். உரிய அளவில் ஊசி மூலம் செலுத்தினால் வலி போக்கி தூக்கம் வரும். பிரசவ கால வலியை போக்கும் மருந்தாக இது செயல்படுகிறது. கருப்பை வலி மற்றும் கற்பூரம் கலந்த லினிமென்ட் பயன்படுத்தப்படுகிறது. அரிசிக் களியில் அபின் சாராயக் கரைசலை தெளித்து அடிவயிற்றில் பற்றாக கட்டும் பொழுது கருப்பை தொல்லைகள் நீங்குவதாக கருதப்பட்டது.

கற்பூரம் கலந்து தயாரித்த மேற்பூச்சுச் தைலம் கழுத்துப் பிடிப்பு, நரம்பு வலி, மூட்டுவலி, முதுகுவலி, போன்றவற்றிர்க்கு சிறந்த மருந்தாகும்.

போதை மருந்து

தொடக்க காலத்தில் மருந்தாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட அபின் பின்னர் போதைப் பொருளாக உட்கொள்ளப்பட்டது. இப்பழக்கம் பெர்சியாவில் தோன்றியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. போதைப் பொருள் சந்தையில் ஓபியம் மற்றம் ஹெராயின் பிரபலமாக உள்ள ஆல்கலாய்டுகளாகும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளை திருடி மும்பையில் விற்பனை?


மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கலெக்டர் சகாயத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து உதவி கமிஷனர் வெள்ளைத்துரை தலைமையில் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சுப்பிரமணியன், தங்கையா, விசுவாசம், ராமலிங்கம் ஆகிய 4 பேர் சிக்கினர்.

இவர்களிடம் விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது சுப்பிரமணியன் செல்போனுக்கு ஒரு அழைப்புவந்தது. அதில் பேசிய ஒரு பெண், குழந்தை எப்போது கிடைக்கும், உடனே புறப்பட்டு வரவா? என்று கேட்டார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அந்த பெண்ணை அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு இடத்திற்கு வர சொல்லும்படி சுப்பிரமணியனிடம் போலீசார் சொல்ல சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த அந்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். பிடிபட்ட பெண் பெயர் கற்பகம், சென்னையை சேர்ந்தவர். அவர் கூறியதாவது:-

என் கணவர் தலைமை செயலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை இல்லாததால் குழந்தையை தத்து எடுக்க மதுரை வந்தேன். அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்களின் உதவியாளராக பணியாற்றி வந்த அமிர்தவள்ளியை பார்த்து விபரத்தை கூறினேன்.

அவர் புரோக்கர் சுப்பிரமணியனை பார்க்க சொன்னார். அவரை பார்த்து பேசினேன். ஆண் குழந்தைக்கு 7 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறினார். நானும் சம்மதித்து முன் பணமாக ரூ.201 கொடுத்தேன். அதை வாங்கி கொண்ட சுப்பிரமணியன் மீதி பணத்தை 12-ந்தேதி அன்று கொடுத்து விட்டு ஆண் குழந்தையை பெற்றுக் கொள் என்று கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை கேட்ட போது, குழந்தையைதராமல் என்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை சுப்பிரமணியனும், அமிர்தவள்ளியும் தாக்கி பறித்து கொண்டனர். தட்டி கேட்ட என்னை கொன்று விடுவதாக மிரட்டினர்.

இவ்வாறு கற்பகம் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன், அமிர்த வள்ளி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பல குழந்தைகள் அவ்வப்போது திருட்டு போய் உள்ளது. இதில் சில குழந்தைகள் மீட்கப்பட்டன. இன்னும் சில குழந்தைகள் மீட்கப்படவில்லை.

இங்கு கடத்தப்படும் குழந்தைகள் ஆஸ்பத்திரி ஊழியர்கள் உதவியுடன் சுப்பிரமணியன் மூலம் மும்பை போன்ற இடங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கப்படலாம் என்று தெரிகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிக்கினால் கடத்தப்பட்ட குழந்தைகள் எங்கெங்கு விற்கப்பட்டுள்ளது என தெரியவரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி எங்கே - சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட ரூ. 214 கோடி பணத்தைத்தான் கலைஞர் டிவி வாங்கியது என்றால், அந்தப் பணம் தற்போது எங்கே. அதை சிபிஐ கைப்பற்றியுள்ளதா என்று உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் கேட்டுள்ளது.

சினியுக் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது கடன் தொகை அல்ல, மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் கலைஞர் டிவியின் பங்குதாரர்களான கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சிபிஐக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பித்தனர்.

கனிமொழி, ராசாவுடன் இணைந்து சதி செய்து சினியுக் நிறுவனம் மூலமாக பெற்றதாக கூறப்படும் லஞ்சப் பணம் ரூ. 214 கோடி எங்கே?. அந்தப் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

கனிமொழி மீதான வழக்கு விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். கனிமொழியிடம் விசாரணை முடிந்து விட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

தொலைத் தொடர்புத்துறையில் நடந்ததாக கூறப்படும் இந்த மிகப் பெரிய ஊழலால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்ட அளவை சரியாக குறிப்பிட வேண்டும்.

அப்போது கனிமொழியின் வக்கீல் குறுக்கிட்டு ஏதோ கூறினார். இதையடுத்து அவருக்குப் பதிலளித்த நீதிபதிகள், மனித உரிமை மீறல்களிலேயே மிகவும் மோசமானது ஊழல்தான் என்றனர். இதையடுத்து கனிமொழியின் வழக்கறிஞர் அமைதியானார்.

பின்னர் நீதிபதிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின், விசாரணை நிலவர அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஜெர்மனியில் பீன்ஸ் மூலம் பரவிய “இ.கோலி” நோய்: சாவு 35 ஆக உயர்வு.

ஜெர்மனியில் பீன்ஸ் மூலம் பரவிய “இ.கோலி” நோய்: சாவு 35 ஆக உயர்வு

ஜெர்மனியில் “இ.கோலி” பாக்டீரியா மூலம் வயிற்று போக்கு நோய் பரவி வருகிறது. இந்த நோயினால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர்.

சமீபகாலம் வரை இந்த நோய்க்கு 31 பேர் பலியாகி இருந்தனர். தற்போது சாவு எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து “இ.கோலி” நோய் பரவியதாக கூறப்பட்டது. பின்னர் கோழிக்கறி மூலம் பரவியதாக நிபுணர்கள் கூறினர். தற்போது இந்த நோய் பீன்ஸ் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் “இ.கோலி” பாக்டீரியா கிருமி பாதிக்கப்பட்ட 2 பெண்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சமீபத்தில் அவர்கள் சாப்பிட்ட பீன்ஸ் மூலம் “இ.கோலி” தாக்கியது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பீன்ஸ் வாங்கிய இடம் குறித்து விசாரித்தபோது வடபகுதியில் உள்ள பண்ணையில் விளைவிக்கப்பட்டது தெரிய வந்தது.

உடனே அதிகாரிகள் அந்த பண்ணையை முழுமையாக மூடி “சீல்” வைத்தனர். அங்குள்ள “இ.கோலி” பாக்டீரியாவை முழுமையாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு “இ.கோலி” பாக்டீரியா வந்தது எப்படி என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த பண்ணையில் இருந்து காய்கறி வினியோகம் செய்யப்படும் இடங்களுக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த தகவலை ஜெர்மனி நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.