Monday, June 6, 2011

ஜூன் 8-ல் நாடு தழுவிய உண்ணாவிரதம் : அண்ணா ஹசாரே.


பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று அண்ணா ஹசாரே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவதன் மூலம் அரசுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

போலீஸார் பகல் நேரத்தில் அவர்களை அணுகுவதை விட்டுவிட்டு நள்ளிரவுக்குப் பின் இப்படியொரு தாக்குதலை நடத்தியுள்ளதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இதனை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றுதான் கூற வேண்டும்.

இந்த விஷயத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து சமூகநல ஆர்வலர்கள், அமைப்புகள் என அனைவருடனும் ஆலோசித்து வருகிறோம். நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும். இது அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்கும். ஜனநாயக நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை' என்று ஹசாரே கூறியுள்ளார்.

பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து ஜூன் 8-ல் நாடு தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:

"பாபா ராம்தேவின் போராட்டத்தில் ஒருசில தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் நள்ளிரவு நேரத்தில் உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை போலீஸார் அடித்து விரட்டியுள்ளனர். ஜனநாயக நாட்டில் இது ஏற்புடைய விஷயமல்ல. அடித்து விரட்டும் அளவுக்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

தில்லியில் நடைபெற்ற தடியடி சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவில் ஜூன் 8-ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதில் இருந்து அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லையெனில், அடுத்து தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும். அது இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக இருக்கும்.

ராம்தேவுடன் சில முக்கிய விஷயங்கள் குறித்து முன்பே பேசினேன். ஆனால் அவற்றை இங்கு கூற முடியாது. லோக்பால் மசோதா வரைவுக் கூட்டுக்குழு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் ஊழலுக்கு எதிரான சட்டம் உள்ளிட்ட விஷயத்தில் அரசின்நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டுமென கேட்டுள்ளேன். நாங்கள் எங்கள் நிலையைத் ஏற்கெனவே தெரிவித்து, அதில் உறுதியாக இருக்கிறோம்.

அடுத்து நடைபெறவுள்ள லோக்பால் மசோதா வரைவுக் குழுவின் அடுத்த கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 6) நடைபெறவுள்ளது. இதனைப் புறக்கணிக்க மக்கள் பிரதிநிதிகள் குழு முடிவு செய்துள்ளது. அக்கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யும் வரை புறக்கணிப்பு தொடரும்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க வேண்டுமென்று மத்திய அரசு செயல்படுகிறது என்றார் அவர்.

இனப்படுகொலை ; ராணுவத்தளபதிக்கு 30 ஆண்டு சிறை : இலங்கை முன்னாள் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.


ருவாண்டா நாட்டில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக முன்னாள் ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதி்மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1994-ம் ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலையில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் துட்சி மற்றும் ஹுட்டு இனத்தைச் சேர்ந்தவர்கள். ருவாண்டா இனப்படுகொலையில் முக்கியப் பங்கு வகித்த அப்போதைய ராணுவத் தளபதி பிசிமுங்கு 2002-ம் ஆண்டு, அங்கோலா நாட்டில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஐநாவின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிசிமுங்கு உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில், 250 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை 395 நாட்கள் நடைபெற்ற நிலையில், 1994-ல் ராணுவத் தளபதியாக இருந்த அகஸ்டின் பிசிமுங்குவுக்கு 30 ஆண்டுக் சிறைத் தண்டனை விதித்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பை வழங்கிய அசோகா டி சில்வா, இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், இலங்கை அதிபர் ராஜபட்ச மற்றும் ராணுவ அதிகாரிகள் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், இனப்படுகொலை குற்றச்சாட்டில் ருவாண்டா ராணுவத் தளபதிக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோனோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள மோனோ ரெயிலின் சிறப்பு அம்சங்கள்: குறுகலான இடத்திலும் செல்லும்; செலவு மிகக்குறைவு

சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாக உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை 32 லட்சத்துக்கும் மேல் உள்ளது. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.15 ஆயிரம் கோடி திட்டமதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த பணிகள் நடந்து வருகிறது.

கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரை தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலமும் அமைக்கப்பட்டு விட்டது. அசோக்நகரில் இருந்து பரங்கிமலை வரையிலான பணிகள் நடந்து வருகிறது.

இதேபோல் சென்ட்ரல் முதல் திருமங்கலம் வரையிலான சுரங்கப்பாதை அமைப்பு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் 2015-க்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மோனோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியின்போது மோனோ ரெயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா மோனோ ரெயில் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளார்.

முதல் கட்டமாக 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலை விட மோனோ ரெயிலுக்கான செலவும் குறைவு. கட்டுமான பணிகளையும் விரைவாக முடிக்க முடியும். மோனோ ரெயில் பஸ்சை போல்தான் இருக்கும். குறுகலான ரோடு பகுதியிலும் இயக்க முடியும். மெட்ரோ ரெயிலில் ஒரு மணி நேரத்துக்கு 30 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யலாம்.

ஆனால் மோனோ ரெயிலில் 10 ஆயிரம் பயணிகள் பயணம் செய்யலாம். மோனோ ரெயில் திட்டத்தை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு 45 முதல் 50 கோடி ரூபாய் செலவாகும். ஆனால் மெட்ரோ ரெயிலுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.300 கோடி வரை செலவாகும்.

மோனோ ரெயில் பெட்டி 6 முதல் 10 டன் எடை உள்ளது. மெட்ரோ ரெயில் பெட்டி 45 டன் எடை உள்ளது. மோனோ ரெயிலுக்கு பேட்டரி சூரிய ஒளி, ஜெனரேட்டர் போன்றவற்றை பயன்படுத்தி அதுவே மின்சாரத்தை தயாரித்து கொள்ளும். ஆனால் மெட்ரோ ரெயி லுக்கு 25 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும்.

மோனோ ரெயில் திட்டத்தை 24 மாதத்தில் நிறைவேற்றி இயக்க முடியும். சென்னை நகரில் பொது போக்குவரத்து 27 சதவீதமாக உள்ளது. இந்த 2026-ம் ஆண்டுக்குள் 46 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.

அரசு டவுன் பஸ், மின்சார ரெயில், பறக்கும் ரெயில், மெட்ரோ ரெயிலை தொடர்ந்து மோனோ ரெயில் திட்டமும் நிறைவேற்றப்பட்டால் பொது போக்குவரத்து அதிகரிக்கும். இதனால் நகர சாலைகளில் நெருக்கடி குறையும். பெருமளவு வாகன இயக்கம் கட்டுப்படுவதால் பெட்ரோல், டீசல் உபயோகமும் குறையும்.

உண்ணாவிரதத்தை கலைக்க மத்திய அரசு உத்தரவிட்டது ; போலீஸ் அதிகாரி தகவல் .

உண்ணாவிரதத்தை கலைக்க மத்திய அரசு உத்தரவிட்டது;    போலீஸ் அதிகாரி தகவல்

டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்களை கலைக்க மத்திய அரசு தான் உத்தரவிட்டது என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேசிய அவர், ராம்லீலா மைதானம் யோகா முகாம் நடத்தவே 20 நாள் வாடகைக்கு எடுக்கப் பட்டது. அதில் போராட்டம் நடத்தப்பட்டாலும் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மத்தியஅரசு உத்தரவிட்டதால் வேறு வழியின்றி உண்ணாவிரதம் இருந்தவர்களை தடியடி நடத்தி கலைக்க வேண்டியதாகி விட்டது என்றார். அவர் மேலும் கூறுகை யில், மக்கள் அமைதியாக கலைந்து சென்றிருந்தால் பிரச்சினை வந்து இருக்காது. கல் வீசியதால் நாங்கள் தடியடி நடத்தினோம் என்றார்.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணை தாக்குதல் ; 14 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் ஏவுகணை    தாக்குதல்; 14 தீவிரவாதிகள் பலி

அமெரிக்கா வெளியுறவுதுறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கடந்த மாதம் பாகிஸ்தான் வந்தார். அப்போது தேடப்படும் 5 முக்கிய குற்றவாளிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டது. அதில் இலியாஸ் காஷ்மீரி, அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாகிரி மற்றும் ஆப்கானிஸ்தான், தலிபான் தலைவர் முல்லா ஓமர் ஆகியோர் பெயர் இருந்தது.

மேலும் தீவிரவாதிகள் பெருமளவில் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் பாகிஸ்தானுடன் சேர்ந்து அமெரிக்கா இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தெற்கு வசிரிஸ்தானில் தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதில் தேடப்பட்டு வந்த முக்கிய தீவிரவாதிகளாக இலியாஸ் காஷ்மீரி, அமீர் அம்சா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தெற்கு வசிரிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இன்று மீண்டும் ஏவுகணைகளை வீசின. வானா நகரம் அருகேயுள்ள ஷலாம் தானா என்ற இடத்தில் மதரசா மற்றும் வீடுகளில் 4 ஏவுகணைகள் வீசப்பட்டதில் அங்கு பதுங்கியிருந்த 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் வெளி நாடுகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளும் அடங்குவர். இப்பகுதி தலிபான் தீவிரவாதி முல்லா நசீர் பிரிவின் கமாண்டர் மலாங்கட்டுப்பாட்டில் உள்ளது.

இது இங்கு கடந்த 4 நாட்கள் நடந்த அமெரிக்காவின் 2-வது ஏவுகணை தாக்குதலாகும். இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் இதுவரை 34 தடவை ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு மற்றும் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன. அதில் 250 தீவிரவாதிகள் மற்றும் பொது மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பாபா ராம்தேவ் நம்பிக்கை மோசடி : மத்திய மந்திரி குற்றச்சாட்டு.

பாபா ராம்தேவ் நம்பிக்கை மோசடி: மத்திய மந்திரி குற்றச்சாட்டு

மத்திய சுகாதாரத்துறை மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத், டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ், அரசுக்கு விடுத்த கோரிக்கைகள் பற்றி அவருடன் பல முறை பேச்சு நடத்தினோம். அவரது கோரிக்கைகளை 100 சதவீதம் அளவில் நிறைவேற்ற முடியவில்லை.

என்றாலும் 90 சதவீதம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தோம். இதுபற்றி பிரதமரும், அவருக்கு தெளிவாக கடிதம் அனுப்பி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக முதலில் கூறினார். ஆனால், அவர் பின்னர் உண்ணாவிரதத்தை தொடருவதாக அறிவித்து விட்டார்.

அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மீறி விட்டார். இது அவரது மிகப்பெரிய நம்பிக்கை மோசடி என்று கூறினார்.


என்னை கொல்ல சதி : ராம்தேவ் பரபரப்பு புகார்.


ஹரித்துவார் ஆசிரமத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்தி வரும் பாபா ராம்தேவ் இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

என்னை கொன்று ஒழித்துவிட வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டது. டெல்லி போலீசார் என்னை கொல்வதுடன் என் ஆதரவாளர்களையும் அதிக அளவில் கொன்று குவிக்க திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை முறியடிக்க, எனது சீடர்கள் மீது போலீசார் கண்மூடித் தனமாக தாக்கினார்கள். பெண்களை அடித்து துன்புறுத்தினார்கள். ஆனால் யார் மீதும் தடியடி நடத்தவில்லை என்று டெல்லி போலீசார் பொய் சொல்கிறார்கள்.

டெல்லி போலீசார் நடந்து கொண்ட விதம் குறித்து தேசிய மனித உரிமை கழகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். போலீசார் ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்ததும் விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணீர் புகை குண்டுகளால் சுட்டனர். மின்சார ஜெனரேட்டர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பெரிய அளவில் மக்களை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டனர். இது பற்றி தேசிய மனித உரிமை கமிஷன் விசாரிக்க வேண்டும். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால் தான் நான் சுடிதார் அணிந்து தப்பிச் சென்றேன்.

சத்ரபதி சிவாஜி மாதிரி நான் நடந்து கொண்டேன். மீண்டும் போராட வந்துள்ளேன். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டுள்ளதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.