Friday, June 3, 2011

போர்ட்டருடன் கல்லூரி மாணவி காதல் : வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு போலீசார் அறிவுரை .


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தின் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் ஒரே மகள் ரேவதி (வயது19). பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர்களது குடும்பத்தில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று கல்லூரி செல்லும் முதல் பெண் ரேவதி. ரேவதி திருச்சியில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக மணப்பாறையில் இருந்து பயணிகள் ரெயில் மூலம் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் வருவார். மீண்டும் மாலையில் அதே ரெயிலில் ஊருக்கு செல்வார். உருவத்தில் சிறிய பெண்ணான ரேவதிக்கு ரெயில் நிலையத்தில் ஒரு நாள் கருமண்டபத்தை சேர்ந்த போர்ட்டர் ஒருவர் இருக்கை பிடித்து கொடுத்தார்.

நாளடைவில் தினமும் அவர் “சீட்டு” பிடித்து கொடுப்பதும் ரேவதி சிரமம் இல்லாமல் பயணம் செய்வதும் தொடர்ந்தது. தனக்கு சீட்டு பிடித்து கொடுத்த போர்ட்டர் மீது ரேவதியால் திடீர் பாசம். ஜெயம் படத்தில் ஜெயம்ரவி சதாவை போல... போர்ட்டரை பார்க்காமல் ஒரு நாள்கூட ரேவதியும் இருக்க முடியவில்லை.

அப்போதுதான் ரேவதிக்கு அது எப்ப வரும்? எப்படி வரும்னு தெரியாது ஆனால் வரவேண்டிய நேரத்தில் வந்துவிட்ட காதல் என்று தெரிய வந்தது. இடையில் ரேவதிக்கு பேனா, பென்சில் ரப்பர் என போர்ட்டர் வாங்கி கொடுக்க... ரேவதி அதை வாங்கி போர்ட்டர் நினைவாக பத்திரப்படுத்திக் கொண்டார்.

ஒரு நாள் போர்ட்டர் பேனா நன்றாக எழுதியதா என ரேவதியிடம் கேட்க... ரேவதியோ... அதை உன் நினைவாக... பத்திரமாக வைத்து உள்ளேன் என்றார். போர்ட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. சிறிது நாட்கள் கழித்து... ரேவதி... போர்ட்டரிடம் “ஐ.லவ்...யூ” சொல்ல... போர்ட்டர்... தண்டவாளத்தை விட்டு... ரெயில் திடீர் என இறங்கியது போல... அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் ரேவதியோ... நான் உன்னைதான் திருமணம் செய்ய போறேன்... நாளைக்கு வீட்டை விட்டு ஓடிவந்து விடுகிறேன், மத்திய பஸ் நிலையத்துக்கு வந்துவிடு என்று கண்ணீருடன் கூறிவிட்டார்.

போர்ட்டருக்கு ஒன்றும் புரியவில்லை. மறுநாள் இரவு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் வந்து நிற்கிறேன் என கூறி போர்ட்டரை அழைத்தார் ரேவதி... துணிமணியோடு வர... போர்ட்டரோ... அதிர்ச்சியில் வந்து நின்றார். நான் உன்னை காதலிக்கவில்லை என சமாதானபடுத்தினார்.

ஆனால் ரேவதி சமாதானமாகவில்லை. அழத்தொடங்கினார். அந்த நேரம் திருச்சி கண்டோன்மெண்டு மகளிர் போலீசார் கண்களில் ஜோடிபிடிபட்டது. விசாரித்த போது ரேவதியின் ஒரு தலை காதலை போர்ட்டர் கூறி கண்ணீர் வடித்தார். உடனே ரேவதியின் கிராமத்து பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

தங்கள் குடும்பத்தில் முதலில் கல்லூரிக்கு சென்று பெருமை சேர்ப்பாள் ரேவதி என நினைத்தால்... இப்படி ஒருதலை காதலால் கனவை கலைத்துவிட்டாளே... என ஏழை பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.

ரேவதியிடம் போலீசார் மாயக்காதலை கைவிடு, புத்தகத்தை கையில் எடு... படித்து பெற்றோர் கனவை நினைவாக்கு... என 10 மணி நேரம் அறிவுரை கூறி... பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இன்னும் திருச்சி ஜங்சனில் இருந்து புறப்படும் அதே ரெயிலில்தான் ரேவதி செல்கிறார்.

ஆனால்... இப்போது அவருக்கு சீட்டுபிடித்து கொடுக்க... அந்த போர்ட்டர் இல்லை. காதல் கனவு கலைந்துவிட்ட கவலையில் ரேவதி... பெற்றோர் கனவையாவது நிறைவேற்றுவோம்... என... படிப்பில் இறங்கிவிட்டார்.

அதே நேரத்தில்... ஜங்சன் ரெயில் நிலையத்தில்... எந்த பெண்ணாவது ...“சீட்டு” பிடித்து கொடுங்க... என்று... கூறினால்... அந்த போர்ட்டர்... எக்ஸ்பிரஸ் ரெயில் வேகத்தில் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

உதட்டிலும் வியர்க்கும்.


மனிதனின் உதட்டிலும் வியர்க்கும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். மனிதன் உடலில் உதடுதான் வியர்க்காத பகுதி என்று சொல்வது உண்டு. ஆனால் அது உண்மை அல்ல இப்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் இது சம்பந்தமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். உதட்டு பகுதியிலும் வியர்ப்பது தெரிய வந்தது. ஆனால் மெல்லிய அளவில் இந்த வியர்வை இருப்பதால் நமது கண்களுக்கு தெரிவதில்லை. உணர்ந்து கொள்ளவும் முடிவதில்லை.

உதட்டில் எப்போதுமே ஈரப்பசை இருந்து கொண்டே இருக்கும். எனவே அதிக அளவில் வியர்ப்பதில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறினார்கள்.

கொசுவை விரட்ட புதிய வகை கியாஸ் ; இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்.


கொசு கடிப்பதால் மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மனிதனை தாக்குகின்றன. எனவே கொசுவை ஒழிக்க எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை அதில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது கொசுவை விரட்டுவதற்காக ரசாயன மருந்துகளை கொண்ட கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இவை மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்த விஞ்ஞானி தலைமையிலான ஒரு குழுவினர் கொசுவை விரட்டுவதற்கான புதிய வகை கியாஸ் ஒன்றை கண்டுபித்துள்ளனர்.

இதை நாம் படுத்திருக்கும் அறையில் பரவவிட்டால் கொசுக்கள் அங்கிருந்து ஓடிவிடும். பொதுவாக கொசுக்கள் மனிதனின் ரத்த வாடையை மோப்பம் மூலம் உணர்ந்து தான் நம்மை கடிக்கின்றன. ஆனால் இந்த கியாசை அறைக்குள் பரவவிட்டால் கொசுக்களுக்கு ரத்த வாடை தெரியாமல் குழப்பம் ஏற்படுத்து கின்றன.

எனவே மனிதனை கொசுக்கள் கடிக்காமல் அங்கிருந்து ஓடிவிடுகின்றன. விரைவில் இந்த கியாஸ் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த கியாஸ் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறினார்கள். கொசுக்களினால் பரவும் மலேரியா நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் பலியாகிறார்கள்.

அதாவது 30 வினாடிக்கு ஒருவர் உயிர் இழக்கின்றார். இந்த புதியவகை கியாசால் மலேரியா நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயலட்சுமி பொய் சொல்கிறார் - சீமான் பேட்டி.


சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தான் மிகவும் வறுமையில் வாடுவதாகவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற்கான செலவை சமாளிக்க முடியவில்லை என்று அழுதார்.

நான் மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ்கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று தகவல் வரும்.

என் சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்து விடுவேன் என்று கூட ஒருமுறை மிரட்டல் எஸ்.எம்.எஸ். வந்தது. இதை எனது நண்பரான டைரக்டர் சேரனை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்தேன். விஜயலட்சுமி மீது போலீசில் புகார் கொடுக்கலாமா என்று அவரிடம் ஆலோசனை கேட்டேன். வேண்டாம் என்றும், விஜயலட்சுமியை கண்டிப்பதாகவும் சேரன் கூறினார்.

அதன் பிறகு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாகி விட்டேன். திமுக, காங்கிரசை எதிர்த்து கூட்டங்களில் பேசினேன். தேர்தலில் அந்தக் கூட்டணி படுதோல்வி அடைந்தது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்போது நடிகை விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர்.

நான் தலைமறைவாகி விட்டதாக அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எங்கும் தப்பிச் செல்ல வில்லை. அப்படி ஒரு கோழைத் தனமான முடிவு எடுக்க எனக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை வழக்குகளை கண்டு நான் பயப்படுபவன் அல்ல. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் என் மீது போடப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்.

எமது அரசியல் எதிரிகளால், திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பொய்யான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்போம். இது போன்ற கீழ்த்தரமான சதிகள் மூலம் தமிழர் நலனுக்கான எமது போராட்டத்தை எள்ளவும் தளரவைக்க முடியாது என்பதையும் சதிகாரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

வைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் !


தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 88வது பிறந்தநாள் விழா அக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் சென்னை காமராஜ் அரங்கில் கொண்டாடப்பட்டது. அதில் பேசிய வைரமுத்து,

திமுக தலைவர் கருணாநிதி கண்ணாடியை தூக்கி பார்த்து விட்டு பேசினால் கொஞ்சம் கவனமாகப் பேச வேண்டும். காபி அல்ல டீ சாப்பிடுகிறாயா? என்று அவர் கேட்டால் கொஞ்ச நேரம் பேச விரும்புகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்த நேரத்தில் நான் 6வது முறை தேசிய விருது பெற்று விட்டு வாழ்த்து பெற சென்றேன். அப்போது அவர் என்னிடம் இது எத்தனையாவது விருது என்று கேட்டார்.

நான் 6வது விருது என்றேன். உடனே சட்டென்று “எனக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களுக்காவது 6வது முறையாக கிடைத்து இருக்கிறதே” என்று சொல்லிச் சிரித்தார்.

அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?. அவரது 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய போராளியாகவே வாழ்ந்து வருகிறார். இழிவு, அவமானம், துயரம் எல்லாவற்றையும் சந்தித்து விட்டார். அதிகமான அவமானங்களை சந்தித்தவர் அவர் மட்டும்தான். ஆனால், எந்த நிலையிலும் தான் தானாகவே இருப்பவர் கருணாநிதி என்றார்.

கடந்தமுறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கலைஞர் கருணாநிதியை முத்துகருப்பண் தலைமையிலான போலிஸ்படை அராஜகமான முறையில் கைது செய்தது.

இந்நிகழ்வு உடனடியாக சன் டிவி ஒளிபரப்பியது. அரசியல்வாதிகள், மக்கள்கள் கொதித்தெழ அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு நிருபர் கருணாநிதியிடம் உங்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் முன்விரோதம் ஏதாவது உண்டா? என்று கேட்க

அதற்கு அவர், நான் என்ன சுதாகரனா? என்றார்.

காலையில் கைதிலிருந்து, மாலை விடுதலைவரை அவர் அடைந்த துன்பத்தின் சுவடுகூட மாறாத நிலையிலும் அவரின் நகைச்சுவை உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த நேரத்தில் அந்த நகைச்சுவை யாருக்கு வரும்?.

ரஜினியைப் பார்த்து கண்ணீர் வடித்த கமல் !


சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு ரஜினியைப் பார்த்த கமல் - இருவரும் அழுத உருக்கம்!

சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, கலைஞானி கமல்ஹாசன் சந்தித்து உருக்கமாக பேசிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டதாகவும், மிகவும் நெகிழ்ச்சி யானதாக அந்த சந்திப்பு அமைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சிகிச்சைக்காக ரஜினியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக ரஜினிகாந்த்தை, ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியைப் பார்த்து கலங்கி விட்டாராம் கமல். மிகவும் உருக்கமாக, ஆறுதல் கூறி ரஜினியிடம் பேசிய கமல், நானும் சிங்கப்பூர் வரை கூட வரட்டுமா என்றும் கவலையுடன் கேட்டுள்ளார். இதைக் கேட்டு நெகிழ்ந்த ரஜினி, பரவாயில்லை, இந்த அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மாறாக இருவரது கண்களும் பனித்துள்ளன.

இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.

அதன் பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட கமல், ரஜினியிடம், எனக்கு ராணாதான் போட்டி. நீங்கள் குணமடைவீர்கள், குணமடைந்து வந்து ராணாவில் நடிப்பீர்கள் என்று தைரியம் கூறி பேசியுள்ளார்.

ரஜினியை கமல் சந்தித்த இந்த உருக்கமான சந்திப்பு குறித்துதான் இப்போது கோலிவுட் முழுவதும் உணர்ச்சிகரமாக பேசி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ரஜினியை சந்திக்க யாரையுமே அவரது குடும்பத்தினர் அனுமதிக்க வில்லை. கமலே கூட பலமுறை முயன்றும் முடியவில்லை. இதனால் கமல் பெரும் வேதனையும், ரஜினி குடும்பத்தார் மீது சற்று வருத்தமும் அடைந்தார். ரஜினியைப் பார்க்க எனக்கு உரிமை இல்லையா என்று கூட ரஜினியின் மனைவி லதாவிடம் அவர் உரிமையுடன் கோபித்துக் கொண்டதாக கூறப்பட்டது.

இருப்பினும் ரஜினி சிங்கப்பூர் கிளம்புவதற்கு முன்பு அவரே கமல்ஹாசனை பார்க்க விரும்பியதால்தான் கமல்ஹாசன்-ரஜினி சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

சீமான் மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்கு கைதாவாரா?


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைதாவாரா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமான் மீது திடீரென பரபரப்புப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில் தன்னைக் காதலித்ததாகவும், ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்ற முயல்வதாகவும் சீமான் மீது புகார் கூறியுள்ளார் விஜயலட்சுமி.

இதையடுத்து வளசரவாக்கம் போலீஸார் நேற்று விஜயலட்சுமி வீட்டுக்குச் சென்று அவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

அப்போது, வாழ்த்துகள் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தனக்கும் சீமானுக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகவும், இது பின்னர் காதலாக மாறியதாகவும் கூறினார் விஜயலட்சுமி.

மேலும், தொலைபேசி மூலமும், ஷூட்டிங் ஸ்பாட்டுகளிலும் தாங்கள் பேசி காதல் வளர்த்ததாகவும் கூறினார் விஜயலட்சுமி. தாங்கள் பழகியதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறிய விஜயலட்சுமி அதை போலீஸாரிடம் கொடுக்க வில்லை. மாறாக, உரிய நேரத்தில் தருவேன் என்று கூறினார்.

இதைப் பதிவு செய்து கொண்ட போலீஸார் தற்போது விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் மீது கற்பழிப்பு, பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சீமானைக் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கையில் இறங்கியிருப் பதாகவும் கூறப்படுகிறது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.