Saturday, May 28, 2011

கறுப்பு பணத்தை பறிமுதல் செய்ய உயர்மட்ட குழு அமைப்பு : மத்திய அரசு நடவடிக்கை.


கறுப்புப் பணத்தை மீட்பதற்காக நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய ஓர் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழு, கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவது, அதை வெளிநாடுகளில் கொண்டு சென்று பதுக்குவது, அதை பறிமுதல் செய்வது ஆகியவை தொடர்பான சட்டங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை ஆராயும்.

சட்டவிரோதமான வழிகளில் கறுப்பு பணம் உருவாவதை கட்டுப்படுத்த, தற்போதைய சட்டரீதியான வழிமுறைகளையும், நிர்வாக வழிமுறைகளையும் ஆய்வு செய்யும். இந்த குழு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, 6 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் ரஜினி !


சென்னையில் அறிவித்தது போல, சிங்கப்பூர் கிட்னி பவுண்டேஷன் மருத்துவ மனையில் ரஜினி சிகிச்சை பெறவில்லை. சிங்கப்பூரில் மிகப் பிரபலமான மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த மருத்துவமனையில் இந்தியாவின் அமர்சிங் உள்ளிட்ட பிரபல விஐபிக்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய ரஜினியை, மவுன்ட் எலிசபெத் மருத்துமனையில் இப்போது சேர்த்துள்ளனர் அவரது மகள்களும் மருமகன்களும்.

இன்று இரவு விமானத்தில் செல்லும் லதா ரஜினி, மருத்துவமனையில் ரஜினியைப் பார்த்துக் கொள்கிறார். அவருடன் ரஜினியின் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவும் செல்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்.


இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசிய பொருள்கள் விலை உயரவும் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இவை இரண்டையும் நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என்று அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து படிப்படியாக காங்கிரஸ் கட்சியை வெளியேற்றுவதன் மூலம்தான் நாட்டில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

தெலுங்கு தேசம் கட்சியின் ஆண்டு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியது:

அனைத்து பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு பட்ஜெட் போடும் அரசால், விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க முடியாதது மிகவும் வெட்கக்கேடான விஷயம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசு பதவி விலகிவிடலாம். மக்களே விலையை நிர்ணயித்துக் கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

விவசாயிகள் சொல்ல மாட்டாத அளவுக்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்னைகளுக்கு அரசு தீர்வு காணாத பட்சத்தில் அவர்கள் விரக்தியின் உச்சத்துக்கு செல்கின்றனர். விவசாயிகளின் பிரச்னை மிகவும் சோகமானது. அவர்கள் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கடனாளியாகவே இருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தாங்கள் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூட முடியாத நிலைக்கு அரசின் கட்டுப்பாடுகளே காரணமாகும்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை அரசு செயல்படுத்தாதது ஏன்?, அதை செயல்படுத்தினால் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி அரசியல் அனுபவம் இல்லாதவர். இதனால் சிக்கலான பிரச்னைகளுக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை. மாநிலத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது. தங்கள் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஆற்றில் கொட்டுகின்றனர், அல்லது எரித்துவிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 75 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எப்சிஐ) தயாராக இருந்தபோதிலும், அதற்கு உரிய ஒருங்கிணைப்பை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவது தொடர்பாக மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளியிடவேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டன. இதற்குப் பிறகும் மத்திய அரசு தனது கருத்தை வெளியிடாமல் இருப்பது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசால் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது. இதனால் மாநில அரசு எந்தவித உறுதியான முடிவையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் விஷயத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது என்று அவர் கூறினார்.

தெலுங்கானா விவகாரத்தை ஆந்திர அரசு அரசியலாக்குகிறது. தனித் தெலுங்கானா உருவாக்குவது தொடர்பாக டிசம்பர் 9, 2009-ல் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு பின்னர் அரசியல் கட்சிகள் இரண்டு பிரிவாக பிளவுபட்டதையடுத்து அதை திரும்பப் பெற்றது ஆகிய நடவடிக்கைகள் மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

அரசு அமைத்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துகளைத் தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை அறிக்கை குறித்து மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும், இருபகுதிகளிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்களின நலனை காக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

தனித் தெலுங்கானா கோரி போராடும் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைவது நடந்தே தீரும். அதனால்தான் தெலுங்கானா விவகாரம் குறித்து சோனியா காந்தியை எவ்வித கேள்வியும் கேட்காமல் டிஆர்எஸ் கட்சி உள்ளது.

அக்கட்சியின் முக்கிய நோக்கமே தெலுங்கு தேசம் கட்சியை முடக்குவதுதான். ஆனால் என்.டி. ராமாராவால் உருவாக்கப்பட்ட இக்கட்சியை எந்த ஒரு சக்தியாலும் முடக்க முடியாது. மக்கள் ஆதரவு எப்போதும் கட்சிக்கு உள்ளது என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.

தயாநிதி மாறன்- சோனியா சந்திப்பின் பின்னணி என்ன?

ஜெ.வெங்கட்ராமன்


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய ஜவுளித் துறை அமைச்சரு மான தயாநிதி மாறன், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்திருப்பது தில்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்தித்த கருணாநிதி ஒரு நாள் தில்லியில் தங்கியிருந்த போதும், மரியாதை நிமித்தமாகக் கூட காங்கிரஸ் தலைவரைச் சந்திக்காதது குறித்து சென்னையில் நிருபர்கள் கேட்டனர். இந்தத் தருணத்தில் அவரைச் சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே சந்திப்பு தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் 2-ஜி அலைகற்றை ஒதுக்கீடு வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருப்பதாகவும் அதில் தமிழகத்திலிருந்து மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.

ஆ.ராசாவைத் தொடர்ந்து, அவருக்கு முன்னதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் சார்பாக இதுவரை தில்லி பணிகளை கட்சி நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திடீரென்று தற்போது சந்தித்திருப்பது தலைமையின் ஒப்புதலுடன் நடைபெற்று இருக்குமா என்பது போன்ற கேள்விகள் தில்லி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சி அமைத்தபோது அதில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் தயாநிதி மாறன் இருந்தார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு மத்திய அரசுடனும் காங்கிரஸ் தலைமையுடனும் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வத் தூதராக செயல்பட்டது தயாநிதி மாறன்தான். அவரது அமைச்சர் பதவியை திமுக தலைமை பறித்த பிறகு, அவர் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தார். மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, முதல் முறையாக 2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற கடைசி கட்டப் பேச்சுவார்த்தையின் போதுதான் தயாநிதி மாறனை மத்திய ரசாயனத் துறை அமைச்சர் மு.க.அழகிரியுடன் காங்கிரஸ் தலைமையுடன் சமரசம் பேச திமுக அதிகாரப்பூர்வமாக ஈடுபடுத்தியது.

தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, தனது அமைச்சகம் முழு சுதந்திரத்துடன் முடிவெடுக்க உரிமை வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதாவது, 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தான் மட்டுமே தன்னிச்சையாக முடிவெடுக்க உரிமை கோரியதாகக் கூறப்படுகிறது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விசாரணையில், 1999-ம் ஆண்டு முதல் தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தக்கூடும் என்று தெரிகிறது. இத்தகைய சூழலில் சோனியா காந்தியை தயாநிதி மாறன் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைமையின் ஒப்புதலுடன்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தயாநிதி மாறன் சந்தித்தாரா, இல்லை, தனிப்பட்ட முறையில் சந்தித்தாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தயாநிதி மாறன், சோனியா காந்தி சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு.

மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து அரசு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கிற வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த சையத் முனீர் ஹோடா ராஜினாமா கடிதம் அளித்தார்.

அவர் பதவி விலகலுக்கு கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யரை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமித்து அரசு ஆணையிடுகிறது.

இவரது பதவிக்காலம் 2011-ம் ஆண்டு மே 27-ந் தேதி முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவைக் கொல்ல முயன்றதாக புகார் - அபாண்டமான குற்றச்சாட்டு என புலிகள் மறுப்பு.


தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற கே.பியின் குற்றச்சாட்டு அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு என்றும், இந்தியாவில் தங்களுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சி என்றும் விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

புலிகளின் தலைமைச் செயலகத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் ஆ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009 மே மாதம் 18ம் நாளிலிருந்து எமது ஆயுதப் போராட்டம் மெளனிக்கப் பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகிறோம்.

எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கிறோம்.

கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக் கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடத்தி வந்தோம்.

எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், ராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர் நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம்.

எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஐ.நா நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறு பல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர் மீது மேற்கொண்ட இனப் படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ராஜபக்சே அரசு செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத் தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப் படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத் தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்தில் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகிறது சிங்களப் பேரினவாத அரசு.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் ராஜபக்சே அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்து கொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித் திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற செல்வராசா பத்மநாதன் என்ற குமரன் பத்மநாபன்.

இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறது சிறிலங்கா அரசு.

சிறிலங்கா அரச படைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப் போவதுமில்லை.

அவ்வகையில் பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக் கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார்.

அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகிறோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணை போகிறார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.

பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைக் கொலை செய்வதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இந்தப் பேட்டி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.

அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ராஜதந்திர சதிவலைக்குள் புதைந்து போகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணை போகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நார்வே-நெடியவன் ஜாமீனில் விடுதலை:

இந் நிலையில் நார்வே நாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியான நெடியவன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பான புகாரின் பேரில் அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸாரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், ஜூன் 1ம் தேதி அவர் மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி நிறுத்தி வைப்பு குறித்து சட்டமன்றத்தில் பிரச்சனை எழுப்புவோம்: இ.கம்யூ.,


சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு நிறுத்தி வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும், இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,

தமிழகத்தில் புதிய அரசு மீது மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறை பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து சீர்படுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு முதலில் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விவாதத்தில் தமிழக அரசின் வழக்குரைஞர், இத்திட்டம் நல்ல திட்டமல்ல எனவேதான் கைவிடப்படுகிறது என வாதிட்டுள்ளார். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. ஒரே மாதிரியான பாடத் திட்டம் கல்வியைக் கெடுத்து விடும் என்பதை ஏற்க இயலாது.

சமச்சீர் கல்வித் திட்டம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், சமூகநீதியை நாம் காலங்காலமாக புறக்கணிப்பது போலாகும். சமச்சீர் கல்வி என்பது ஒரு கட்சி அல்லது ஆட்சியின் திட்டம் அல்ல. இதற்கென பல மாநாடுகள், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கொண்டு வரப்பட்ட பொதுவான திட்டம். சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்களில் செம்மொழி மாநாட்டுப் பாடல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதால், திட்டம் ரத்து செய்யப்படுவதாக அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

புத்தகங்களில் பிழைகள் இருக்கின்றனவா என்பதும் தெரியவில்லை. எந்த காலத்திலும் புத்தகங்களில் தவறுகள் இடம்பெறாமல் இருந்ததில்லை. அதை களைய முயற்சிக்க வேண்டுமே தவிர, கைவிடுவது ஆரோக்கியமானதல்ல. கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்பது மிகவும் அவசியமானது. எனவே, தமிழக அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக தனது கொள்கையை வெளியிட வேண்டும். இதுகுறித்து வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பப்படும் என்றார்.