Friday, May 27, 2011

ஒரே மார்க் எடுத்த இரட்டை சகோதரிகள்.

புதுவை கதிர்காமம் பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் வீனா-மீனா.

இரட்டையர்களான இவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுபோல் தலா 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும் அரசு பள்ளிகளில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்றது குறித்து அந்த மாணவிகள்,

’’நாங்கள் 2 பேரும் ஒரே மாதிரியாக இருப்போம். 2 பேருமே நன்றாக படிப்போம். நாங்கள் பள்ளியில் எப்போதும் ஒன்றுபோல் மதிப்பெண்கள் பெறுவோம். 10-ம் வகுப்பு தேர்விலும் சாதனை படைக்க வேண்டும் என்று திட்டமிட்டு படித்தோம். தேர்வில் 2 பேரும் ஒன்றுபோல் மதிப்பெண்கள் பெற்றுள்ளோம்.

நாங்கள் சாதனை படைக்க எங்கள் பெற்றோரும், ஆசிரியர்களும் அதிக ஊக்கம் அளித்தனர். எனவே, நாங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று கூறினார்கள்.

ரஜினிகாந்த் முகம்காட்டுவாரா? : போயஸ்கார்டனில் பரபரப்பு.


நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார்.

இதற்காக அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து இன்று (27.5.2011) மாலை போயஸ்கார்டன் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை விமான நிலையம் செல்கிறார் என்று ஒரு தகவல் வந்துள்ளதால் மீடியாக்காரர்கள் போயஸ்கார்டனில் குவிகிறார்கள்.

ராமச்சந்திராவில் இருந்தபடியே விமான நிலையம் செல்கிறார் என்றுஒரு தகவல் வந்துள்ளதால் அங்கேயும் மீடியாக்காரர்கள் குவிகிறார்கள்.

ரஜினிகாந்த் மீடியாவில் முகம் காட்டுவாரா? இல்லை முகம் காட்டாமலேயே விமானத்தில் ஏறிவிடுவாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.

ரஜினிகாந்த் மேல்சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் செல்கிறார்


நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ள தனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.

ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள்.

அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

இதனால் ரஜினி முகத்தை பார்த்துவிட காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

தயாநிதியை தோலுரித்த விக்கிலீக்ஸ்.


கடந்த 2008 நவம்பர் மாதம் ஈழத்தில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்றபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவில்லையெனில் திமுகவின் எம்.பிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள் என எச்சரித்தார். உடனே கனிமொழி தனது ராஜினாமா கடிதத்தை கொண்டும் போய் கருணாநிதியிடம் தந்தார். மற்ற எம்.பி, மத்திய அமைச்சர்களும் தந்தனர். உடனே பிரணாப்முகர்ஜி சென்னை வந்தார் போர் நின்றுவிட்டது என அறிவித்தார்கள்.

இதுப்பற்றி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரிகள் தயாநிதிமாறனை சந்தித்து பேசியுள்ளார்கள். அவர்களிடம், கூட்டணியில் இருந்து கருணாநிதி விலக மாட்டார். இது அவர் நடத்தும் நாடகம் என கூறியுள்ளார்.

இதேபோல் 2008 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிகாரிகளிடம், பதவிக்கு வந்ததும் எல்லோரும் மாறிவிடுகிறார்கள். திமுகவினர் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக உள்ளார்கள். திமுக தந்த இலவச கலர் டிவியை மக்கள் மறந்துவிட்டனர். இதனால் 2009 நாடாளமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சரிபாதியிடங்களில் வென்றால் பெரிய விஷயம் என்றுள்ளார். இதுயெல்லாம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறைக்கு கேபிள் வழியாக சென்றுள்ளது. அதைத்தான் விக்கிலீக்ஸ் லீக் செய்துள்ளது. விக்கிலீக்ஸ்சுடன் ஓப்பந்தம் போட்டுள்ள இந்தியாவின் பிரபல ஆங்கில செய்திதாளான தி இந்து அதை முதல் பக்கத்தில் வெளியிட்டு தயாநிதிமாறனின் துரோக தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

ஆனால் தயாநிதிமாறன், என் புகழை கெடுக்க, தங்களது சர்க்குலேஷனை உயர்த்திக்கொள்ள என்மீது வீண் பழி சுமத்துகிறது தி இந்து. உடனே இதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

விக்கிலீக்ஸ் தரும் தகவல்களை மட்டுமே அவர்கள் பெயர் போட்டு வெளியிட முடியும். வெளியிடும் தகவல்களை அந்நிறுவனம் கண்காணிக்கிறது. போட்டி நிறுவனங்களும் அதே கண்கொத்தி பாம்பாக பார்க்கிறார்கள். அதோடு தயாநிதிமாறன் இந்து குடும்பத்தில் தான் பெண் எடுத்துள்ளார். அவர்களே வெளியிடுகிறார்கள் என்றால் நிச்சயம் தகவலை சரிபார்த்தே வெளியிட்டுயிருப்பார்கள். ஆக இது உண்மை செய்தி தான் என நம்பலாம்.


இனி விவகாரத்துக்கு வருவோம் :

தயாநிதிமாறன் யோக்கிய சிகாமணி போல் திமுககாரர்கள் பதவிக்கு வந்தபின் மாறிவிடுகிறார்கள் என சொல்லியுள்ளார். திமுகவின் டெல்லி முகமான முரசொலிமாறன் இறந்ததும் வியாபாரியான அவரது மகனை எம்.பியாக்கி அமைச்சராக்கி, டெல்லியில் திமுகவின் முகமாக்கினார். (இன்றுவரை அவர் அரசியல்வாதியாகவில்லை. பெரு முதலாளியாகவே உள்ளார்). திமுக தலைமையின் பிச்சையால் அமைச்சரானதும், அதிகாரத்தின் மூலம், அம்பானி சகோதரர்களுக்கு டெலிகாம் அனுமதி தர 1000 கோடி வாங்கினார். அம்பானிகளுக்காக டாடாவை மிரட்டினார். அமெரிக்காவுக்கு அரசு செலவில் சென்று ஹாலிவுட் படங்களை தமிழாக்கம் செய்து சன் நிறுவனம் மூலம் வெளியிடும் ஒப்பந்தங்கள் செய்தார், எப்.எம் ரேடியோ ஸ்டேஷன்களை நாட்டின் பல மாநகரங்களில் திறந்தார். தனது சன் நிறுவனத்திற்க்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி இயந்திரங்களை இறக்குமதி செய்தார், உச்சமாக தமிழகத்தில் தாத்தாவை கீழே இறக்கிவிட்டு தான் அந்த நாற்காலியில் அமர காங்கிரஸ்சோடு சேர்ந்து காய் நகர்த்தியவர் தான் தயாநிதிமாறன்.

அப்படிப்பட்டவர் சொல்கிறார் பதவிக்கு வந்ததும் திமுககாரர்கள் மாறிவிடுகிறார்கள் என்று. திமுக நம்பி வந்தவர்களுக்கு துரோகம் செய்ததில்லை என்பது வரலாறு. திமுக தலைமை போட்ட பதவி பிச்சையில் அரியணையில் இன்றும் அமர்ந்துக்கொண்டு காங்கிரஸ்சோடு மறைமுகமாக கை கோர்த்துக்கொண்டு அவரது குடும்பத்தை வளர்த்த இயக்கத்தை அழிக்க துடிக்கும் மாறன் சொல்கிறார் இத்தகவல் பொய் என்று.

இந்த தயாநிதிமாறன்க்காக 2009ல் இரண்டாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தபோது, திமுகவின் முகமாக விளங்கிய டி.ஆர்.பாலுவை அமைச்சராக்க கூடாது. ஆனால் தயாநிதிமாறனை நிச்சயம் அமைச்சராக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையே முரண்டு பிடித்தது. அதனாலே அவருக்கு ஐவுளித்துறை கிடைத்தது. சீட் கூட அவருக்கு காங்கிரஸ் கட்சியே தர வேண்டும் என சொன்னதாக கூட தகவல்கள் உண்டு.

மதுரை தினகரன் நிறுவனம் தீ வைத்து எரிக்கப்பட்ட அன்று உடைத்து வெளியே அனுப்பப்பட்ட மாறன் சகோதரர்களை மீண்டும் இணைத்துக்கொண்டு கொஞ்சி குலாவியது தவறு என்பது இப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு புரிந்திருக்கும். இன்னும் புரியவில்லை எனில் காலம் நிச்சயம் இதை விட அதிகமாக கருணாநிதிக்கு புரியவைக்கும். திமுக தொண்டர்களுக்கும் புரியவைக்கும்.

நன்றி : anbanavargal.blogspot.com

பொது இடத்தில் லிப் டு லிப் கிஸ் : தீபிகா படுகோன் மீது போலீசில் புகார் !









விஜய் மல்லையா மகனுடன் கிரிக்கெட் மைதானத்தில் லிப் டு லிப் கிஸ் அடித்து பரபரப்பேற்படுத்திய நடிகை தீபிகா படுகேன் மீது சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளது இந்து மக்கள் கட்சி.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் திருவல்லிக்கேணி போலீசில் நடிகை தீபிகா படுகோனே மீது இன்று புகார் அளித்தார்.

அதில், "நடிகை தீபிகா படுகோனே பொது இடங்களில் கலாச்சாரத்துக்கு எதிராகவும் அறுவறுக்கத்தக்க ஆபாச செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியை காண வந்திருந்த தீபிகா படுகோனே அணியின் தலைவர் சித்தார்த் மல்லையாவை உதட்டோடு உதடு முத்தமிட்டார்.

மைதானத்தில் இக்காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியானார்கள். இது இந்திய கலாச்சாரத்துக்கு விரோதமாகவும் பெண்மையை சீரழிக்கும் வகையிலும் இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியை காண தீபிகா படுகோனே வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திலும் தீபிகா படுகோனே ஆபாசமாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளும் தீபிகாபடுகோனேவை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக் குள் அனுமதிக்கக்கூடாது," என்று கூறியுள்ளார்.

பழனி முருகன் கோயிலுக்குப் படையெடுக்கும் கேரள பக்தர்கள்.


பழனி மலை முருகனை தரிசிக்கும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அறுபடை வீடு

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்கு முருகப்பெருமான், ஆண்டிக்கோலத்தில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தால் ஆனது. அதனை அகத்தியரின் தலைமைச் சீடரான போகர் எனும் முனிவர் உருவாக்கினார் என்கிறது தலபுராணம்.

கொங்கு மண்டல பக்தர்கள்

இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். தைப்பூசத்தினையொட்டி நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருவது மிகவும் பிரசித்தம்.

முன்பெல்லாம் பொதுவாக பழனி என்றாலே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வருவார்கள். வீட்டிற்கு வீடு பழனிச்சாமி என்ற பெயரில் ஒருவராவது இருப்பார்கள். ‘பழனிச்சாமின்னு கூப்பிட்டா பத்து பேராச்சும் திரும்பி பார்ப்பாங்க...’ என கொங்கு மண்டலத்தில் நகைச்சுவையான சொலவடை கூட உண்டு. அந்த அளவிற்கு கொங்குமண்டலத்தில் பழனி மலை முருகனுக்கு பக்தர்கள் அதிகம்.

படையெடுக்கும் கேரள பக்தர்கள்

ஆனால் கடந்த சில வருடங்களாக பழனி மலை முருகனைத் தரிசிக்க வரும் கேரள பக்தர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. சபரிமலை ஐய்யப்பனை தரிசிக்க பலரும் கேரளா செல்வதைப் போல கேரள மக்கள் பலரும் பழனிக்கு சாரை சாரையாக வருகிறார்கள். இதனால் சீசன் எனப்படும் விசேஷ காலங்கள், கோடை விடுமுறை காலங்கள் தவிர்த்து வருடம் முழுவதும் பழனி மலையில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது.

நம்பிக்கை

கேரள பக்தர்கள் இங்கு வருவதற்கு பல்வேறு நம்பிக்கைகளைக் காரணம் சொல்கிறார்கள். மலையில் தண்டாயுதபாணி கேரள மாநிலத்தை பார்த்தபடி அருள் பாலிக்கிறார். அதனால் தான் கேரள மாநிலம் எல்லா இயற்கை வளங்களும் பெற்று செழிப்பாக இருக்கிறது என்கிறது அவற்றுள் முக்கியமான நம்பிக்கை. ஓணம் பண்டிகை போன்ற கேரளத்தின் முக்கிய பண்டிகை தினங்களில் பழனியில் கேரள பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இங்கு வரும் பக்தர்களுக்காக பழனியில் ஏராளமான கடைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளன. சீசன் தவிர பிற மாதங்களில் ஈயாடிக்கொண்டிருந்த நிலை மாறி வருடம் முழுவதும் நல்ல வியாபாரம் நடப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றால் பழனிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து.

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பத்தினா சகோதரர்கள் சார்பில் ஆஸ்துமா நோய்க்கு மீன் மருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 8, 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ஐதராபாத்தில் உள்ள நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் ஆஸ்துமா நோய்க்கு மருந்து வழங்கப்படுகிறது.

இதுபற்றி பத்தினா சகோதரர்கள் கூறும்போது, "ஆஸ்துமா நோய்க்கு நாங்கள் ஆண்டுதோறும் மீன் மருந்தை அளித்து வருகிறோம். இம்மருந்தால் ஏராளமான நோயாளிகள் குணமாகி உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் நாம் பள்ளி கண்காட்சி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்படும். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு கட்டைகள் அமைக்கப்படும்'' என்றனர்.