Friday, May 27, 2011

இந்திய அணு உலையை வேவு பார்த்த ஹெட்லி.


சிகாகோ மும்பையின் பல பகுதிகளை வேவு பார்த்து லஷ்கர் இ தொய்பாவுக்குத் தகவல் கொடுத்த டேவிட் கோல்மேன் ஹெட்லி, இந்திய அணு உலை ஒன்றையும் தாக்குதலுக்காக வேவு பார்த்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் இக்பாலின் உத்தரவின் பேரில் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பணியை அவன் செய்துள்ளான்.

சிகாகோ டிரிப்யூன் இதுதொடர்பான ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐஎஸ்ஐ அதிகாரியான இக்பால், இந்தியாவில் செய்ய வேண்டிய வேவுப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த உத்தரவிட்டது இந்த இக்பால்தான். இதற்காக இந்திய பணத்தையும் அவர் ஹெட்லிக்குக் கொடுத்தார்.

மேலும் இக்பாலின் ஆலோசனைப்படி இந்தியாவில் உள்ள ஒரு அணு உலைக்கும் சென்றுள்ளான் ஹெட்லி. அது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளான்.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹெட்லி மும்பைக்கு வந்தான். பல முக்கிய இடங்களை உளவு பார்த்து தகவல் சேகரித்தான். மும்பை துறைமுகத்தை படகு மூலம் சுற்றி வந்து சூழ்நிலையை ஆராய்ந்தான். துறைமுகப் பகுதியை வீடியோவிலும் பதிவு செய்து கொண்டான்.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் முழுமையாக கண்காணித்து தகவல் சேகரித்தான். இந்த நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் திரும்பிய அவன், அங்கு ஜகி, சஜீத் மிர், அபு குஹாபா மற்றும் இன்னொரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவரை சந்தித்துப் பேசினான்.

கூகுள் எர்த் மூலம் மும்பையில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இடங்களின் படங்களை டவுன்லோட் செய்து திட்டத்திற்கு மெருகூட்டியவன் இந்த குஹாபா. மும்பைக்கு அருகே சிறிய மீனவர் குடியிருப்பு அருகே தீவிரவாதிகள் தரையிறங்கலாம் என்று ஐடியா சொல்லியவன் ஹெட்லி.

அங்கிருந்து தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களுக்கு டாக்சிகள் மூலமாக செல்லுமாறும் யோசனை தெரிவித்தவனும் ஹெட்லியே.

இந்த நேரத்தில், தாஹ் மஹால் ஹோட்டலுக்கு எதிர்ப்புறத்தில், வலது புறமாக தரையிறங்குமாறு யோசனை தெரிவித்தான் ஜகி என்கிற லக்வி.

திட்டங்களை வகுத்த பின்னர் சிகாகோ திரும்பிய ஹெட்லி அங்கு ராணாவை சந்தித்தான். ராணாவிடம் தான் வேவு பார்த்த தகவல்கள் உள்ளிட்டவற்றைத் தெரிவித்து பகிர்ந்து கொண்டான். சஜீத்தை சந்தித்தது, மும்பையில் படகு சவாரி செய்தது உள்ளிட்ட அனைத்தையும் ராணாவிடம் தெரிவித்தான்.

தாக்குதல் திட்டம் குறித்து ஜகியூர் ரஹ்மான் லக்வி கூறிய யோசனைகள், இந்திய, பாகிஸ்தான் கடலில் நிசப்தம் நிலவும் காலம் உள்ளிட்டவை குறித்து ராணாவிடம் விளக்கி விவாதித்தான் ஹெட்லி.

மேலும் இந்திய அணு மின் நிலையத்தை தான் வேவு பார்த்த வந்த விஷயத்தையும் ராணாவிடம் தெரிவித்துள்ளான் ஹெட்லி.

டெல்லியிலும் உளவு பார்க்குமாறு மேஜர் இக்பால் தன்னிடம் கேட்டுக் கொண்டதையும் ராணாவிடம் தெரிவித்துள்ளான் ஹெட்லி.

பின்னர் சிகோகோவிலிருந்து மீண்டும் பாகிஸ்தான் திரும்பினான் ஹெட்லி. அங்கு சஜீத், அபு குஹாபா ஆகியோரை பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினான். பின்னர் ஹெட்லியை மீண்டும் மும்பை செல்லுமாறு சஜீத் பணிக்கவே மீண்டும் மும்பை வந்தான் ஹெட்லி என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தை சிகாகோ கோர்ட்டில் அமெரிக்க அரசுத் தரப்பு வக்கீல்கள் சமர்ப்பித்துள்ளனர்.

பள்ளிக்கல்வி அமைச்சருடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சமச்சீர் கல்வி அமலாக்கம் சம்பந்தமான அரசின் முடிவு, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சமச்சீர் கல்வி சம்பந்தமான தனது நிலைபாட்டை விளக்கி, அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்து 24-05-2011 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

இன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் அ.சௌந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக்கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து கடிதம் ஒன்றைக் கொடுத்து உரையாடினர்.

சமச்சீர் கல்வி அமலாக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அச்சத்தையும், குழப்பங்களையும் அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். அமைச்சர் பொறுமையாக விஷயங்களைக் கேட்டறிந்த பின்னர், சமச்சீர் கல்வித்திட்டம் உறுதியாக அமலாக்கப்படும் எனவும், அதைக் கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்பதையும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவை முடிவின்படி, இன்றுள்ள திட்டத்தை அரைகுறையாக அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்த உதவாது எனவும், ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி அமலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏழை, எளிய மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளி கல்விக் கட்டணங்களை அவர்கள் கட்டக்கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டுமென்றும், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அ.சௌந்திரராசன் அமைச்சரிடம் முன் வைத்தார். அமைச்சரவை அதுகுறித்து பரிசீலனை செய்யும் என்பதையும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 26, 2011

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விளக்கமளிக்க வேண்டும் : தா.பாண்டியன்.

சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி விளக்கமளிக்க வேண்டும்: தா.பாண்டியன்

சமச்சீர் கல்வித் திட்டம் என்ற கொள்கையை பற்றி அதிமுக அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுபற்றி சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ள செய்தியில் தமிழக அரசு சமச்சீர் ஒத்திவைப்பதாக அறிவித்து இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சமச்சீர் கல்வி திட்டம் என்ற கொள்கையை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளதா? நிராகரிக்கிறதா? என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார் மேலும் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு குறைகள் இருக்கிறது என்பதால் அதனை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதில் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அதற்கான காரணங்களை விளக்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் குறிப்பாக கல்வித்துறையினர் மத்தியில் எழுந்துள்ள குழப்பத்தை தீர்த்து வைக்கவேண்டும்.

தமிழக சட்டப்பேரவைக்காகவும் தலைமை செயலகத்திற்காகவும் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப்பணிகள் நிறைவு பெறவில்லை. எஞ்சியுள்ள பணியையும் தொடர்ந்து நடத்தி முடித்து மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் அரசு நிர்வாகப்பணிக்காகவோ மக்களுக்காகவோ உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசுப்பணிகளுக்காக புதிய கட்டிடத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை. பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர எதற்கு பயன் படுத்துவது என்பதை ஆளும் கட்சி தீர்மானிக்கலாம். மேட்டூர் அணையை ஜீன் 6-ம் தேதியே பாசனத்திற்காக திறப்பது என்ற தமிழக அரசு அறிவிப்பை தமிழக விவசாயிகள் வரவேற்றிருப்பது போலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்பதாக தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


பொதுப்பணித்துறை மூலம் மணல் விற்பனை தொடங்கியது.


குழந்தைகள் பாதிப்பு : சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது.

குழந்தைகள் பாதிப்பு: சென்னையில் சின்னம்மை நோய் பரவுகிறது

சென்னையில் ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்திலும் சின்னம்மை நோய் பரவுவது உண்டு. அதே போல் இந்த ஆண்டும் சின்னம்மை நோய் பரவி வருகிறது. இதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

சின்னம்மை நோய் தாக்கினால் 3 நாளில் அதன் தாக்கம் குறைந்து விடும் என்பதால் நிறைய வீடுகளில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதில்லை. வேப்பிலை சாறு, மோர் கொடுத்து சின்னம்மை நோயை குணப்படுத்தி விடுகின்றனர்.

உடல் முழுவதும் ஆங்காங்கே கொப்பளம் அதிகமாகி சிரமப்படும் குழந்தைகள் மட்டும் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.

இதுபற்றி அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ஒருவித தொற்று வைரஸ் கிருமிகள் மூலம் சின்னம்மை நோய் பரவுகிறது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவிவிடும். சிலருக்கு காய்ச்சலும் வரும். தற்போது தினசரி 10 பேர் வரை இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என்றார்.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுமதி கூறுகையில் எனது 10 வயது மகளுக்கு சின்னம்மை நோய் வந்து 3 நாள் ஆகிவிட்டது. தினமும் வேப்பிலை, மோர், இளநீர் கொடுத்து வந்தேன். தற்போது ஓரளவு குணமாகி விட்டது என்றார்.

திருச்சியை கலக்கிய கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.


சங்ககிரியில் பயங்கரம் : 2 வாலிபர்கள் எரித்து கொலை ; நிர்வாண கோலத்தில் பிணம் வீச்சு.


சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஒரு கல்குவாரி உள்ளது. இதன் அருகே உள்ள காட்டுவேலி என்ற பகுதியில் முகம் எரிந்த நிலையில் 2 ஆண் பிணங்கள் கிடந்தது. அந்த பக்கமாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி.வெங்கட்ராமன், போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம். மற்றும் சங்ககிரி டி.எஸ்.பி. ராமசாமி, மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர்களுக்கு 28 வயதில் இருந்து 30 வயதிற்குள் இருக்கும் என தெரியவந்தது.

மேலும் ஒரு வாலிபர் பிணம் நிர்வாண கோலத்திலும், மற்றொரு வாலிபர் பிணம் ஜட்டியுடனும் கிடந்தது. இவர்கள் அடையாளம் தெரியாத இருக்கும் வகையில் முகம் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டு கிடந்தது. இவர்கள் 2 பேரையும் வெளியில் கொலை செய்து காரில் கொண்டு வந்து பிணத்தை இங்கே வீசிச்சென்றதற்கான தடயங்கள் உள்ளது.

இவர்கள் 2 பேரும் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யபட்டார்களா? அல்லது காதல் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்று தெரிந்தால் தான் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பதால் தனிப்படை போலீசார் அவர்களை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் யாராவது காணாமல் போய் இருப்பதாக புகார் வந்து இருக்கிறதா? என்றும் தகவல் கேட்டு இருக்கின்றனர். 2 வாலிபர்களின் பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரட்டை கொலை சங்ககிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.