Wednesday, May 25, 2011

கனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும்.

குட்டி ரேவதி.


கனிமொழி கைது செய்யப்பட்டது, அவர் இழைத்த குற்றத்திற்கானதாக ஒரு புறம் இருந்தாலும், எனக்கு அதனுடன் பிணைந்த வேறு பல விஷய முடிச்சுகளையும் உடன் இழுத்து வருகிறது.

அரசியல் நோக்கிய நகர்வைப் பெண்கள் எளிதாக எடுத்து வைக்கமுடிவதில்லை. குடும்பம், தான் சார்ந்துள்ள சமூகம் போன்ற வெளிகளைத் தாண்டி, அல்லது அந்த வெளிகளைத் தனக்கான அளவில் சமாதானப்படுத்திவிட்டு, நிறைவு பெறச் செய்து விட்டுத்தான் அரசியல் என்ற ஆண்களுக்கு மட்டுமே என இருந்த வெளியை எட்டிப் பிடிக்க முடிந்தது. இன்று அது, தன் தந்தை, சகோதரர், கணவர் என்று யார் மூலமாகத் தனக்குச் சாத்தியப்பட்டாலும், அது இன்னும் ஆண்களின் வெளியாகவே இருப்பதைத்தான் உணர்த்துகிறது.

அந்த இடத்தின் மையம் வரை செல்ல முடிந்த பெண்கள், தங்கள் அணுகு முறைகளிலும் செயல்பாடுகளிலும் ஆண்களைப் போலவே நடந்து கொள்வது சமூகத்தில் தன்னிருப்பு அல்லது தன்னையொத்த பெண்களின் நிலைமை குறித்த அவர்களின் அறியாமையையும் மடமையையும் தான் உணர்த்துகிறது.

சமூகத்தில், அரசியல் என்னும் மனித உரிமைகளைச் சட்டப்பூர்வமாகச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கக் கூடிய இடத்திற்கு சென்று சேரும் வாய்ப்புக் கிட்டிய பெண்கள் இப்படி தங்களின் செயல்களுக்கே இரையாகிப்போவது மற்ற பெண்களுக்குச் சோர்வையும், அவர்களின் நடத்தைகளில் இடர்ப்பாட்டையும் தரும். தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக் கொண்டது போல.

ஒரு பெண்ணியலாளர் இவ்வாறு கூறினார். “அரசியலுக்குச் செல்ல முடிந்த பெண்கள், இரு மடங்கு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒன்று, தனக்கான ஆளுமையைக் கட்டியெழுப்பிப் பேணுவதன் வழியாக, தன் சுயமரியாதையை நிலைநாட்டிக் கொள்வது. இன்னொன்று, தன்னையொத்த பெண்களின் உரிமைகளுக்கான பிரதிநிதியாகி நின்று போராடுவது”.

கனிமொழி, மற்ற பெண்களுக்கான பிரதிநிதியாகத் தன்னை நியாயப்படுத்தவும் இல்லை. தன் சுயமரியாதையையும் திடப்படுத்திக் கொள்ளவும் இல்லை. இது, பிற ஆணாதிக்க அரசியல்வாதிகள் விரித்த வலையாகவும் இருக்கலாம். அதில், கனிமொழி இரையாக மாட்டிக்கொண்டார் என்றும் சொல்லலாம். என்றாலும் அத்தகையதோர் அறியாமையைத் தனக்குள்ளே ஊட்டமளித்து வளர்த்து வந்தது யார் குற்றம்?

கனிமொழி, பெண்களின் வரலாற்றில் ஒரு தவறான அரசியல் குறியீடு ஆகிறார். அவர் ஏற்படுத்திய அலை, அரசியலை நோக்கி நகர முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தாக்கும், வீழ்த்தும். ஆதிக்க சாதியல்லாத ஒரு சமூகத்திலிருந்து அரசியல் பிரதிநிதியாக விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் இனி முதல் அடியிலிருந்து தான் தன் பயணத்தைத் தொடங்கவேண்டியிருக்கும் நிர்ப்பந்தத்தை அளிக்கும். இது பொது மனித உளவியலை ஒரு நோயைப்போல தொடர்ந்து ஆட்கொள்ளும்.

அரசியலின் நீதி மன்றத்தில், “அவர் பெண்!” என்றாலும், “அவர் ஒரு குழந்தைக்குத் தாய்!” என்றாலும் அச்சொற்கள் அர்த்தம் பெறாது. எதிரொலிக்காது. ஏனெனில், ஏற்கெனவே, தன் குடும்பம், சமூகம் இரண்டையும் கடந்து தான், அதன் ஆழிகளைக் கடக்க முடிந்ததால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இனி, அவர் எல்லா வகையிலும் ஒரு தனி மனுஷி!

“படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான்! ஐயோவென்று போவான்”. கவிஞன் பாரதி சொன்னது. கனிமொழியின் இந்நிலைமை வேதனையை அளிக்கிறது!

அதிமுகவை வெற்றி பெறச் செய்தவர்கள் வருத்தப்பட வேண்டும் : கருணாநிதி.


சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்குப் பின் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: சமச்சீர் கல்வியை அரசு நிறுத்தி வைத்திருக்கிறதே?

பதில்: சமச்சீர் கல்விக்கு தடை விதித்துள்ளது அதிமுக அரசு. சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லா தரப்பினரிடமும் ஆராய்ந்து, பல்வேறு குழுவினரிடம் கருத்து கேட்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

கேள்வி: டெல்லி சென்ற நீங்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லையே?

பதில்: டெல்லியில் என்னை மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோர் சந்தித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதால் சந்திக்கவில்லை.

கேள்வி: சட்ட மேலவை வராது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே?

பதில்: தலைமை செயலகத்தை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியதும், மேலவை வராது என்பதும் எதிர்பார்த்ததுதான்.

கேள்வி: திமுக ஆட்சியின் போது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாகவும், அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்: அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. அப்படி சொத்து அபகரிக்கப் பட்டிருந்தால், அதை உரியவர்களிடம் ஒப்படைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

கேள்வி: திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படுமா?

பதில்: இப்போது என்ன அவசரம்.

கேள்வி: திமுக தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்களா?

பதில்: தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே முரசொலியில் நானும் அன்பழகனும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

கேள்வி: பள்ளிக் கட்டண விவகாரத்தில் அரசு நேரடியாக தலையிடாது என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?

பதில்: பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தலையிடுங்கள்.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக ஆட்சி ரத்து செய்துள்ளதே?

பதில்: தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தவர்கள் இதற்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார்.

சபாநாயகர் என்று தேதியை முடிவு செய்கிறாரோ அன்று நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வேன்.

அரசின் நல்ல திட்டங்களுக்கு திமுக நிச்சயம் ஒத்துழைப்பு நல்கும். புதிதாக பதவியேற்ற அமைச்சர் மரியம் பிச்‌சை விபத்தில் இறந்தததற்கு திமுக தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக சமச்சீர் கல்வியை நிறுத்தக் கூடாது : கல்வியாளர்கள் வேண்டுகோள்.

விருத்தாசலத்தில் இலவச கல்வி உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்டண கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டது. சமச்சீர் கல்வியை தடை செய்யாமல் உடனடியாக அமல்படுத்தக் கோரியும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கல்வியாளர் ராஜகோபாலன், நல்ல கல்வியை அரசினால் தரமுடியும். சமச்சீர் கல்வி திட்டம் பல வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சமச்சீர் கல்வித் திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கக் கூடாது.

8ஆம் வகுப்பு பாடத்தில் குடும்ப பட்ஜெட் என்ற பாடம் உள்ளது. அதில் ஒரு குடும்ப தலைவனின் வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விபரங்கள் இருக்கின்றன. ஒரு குடுத்துக்கு ஆகும் செலவுகளை 8ஆம் வகுப்பிலேயே ஒரு மாணவன் தெரிந்துகொண்டால், அவன் தன்னுடைய எதிர்காலத்தை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவான்.

சமச்சீர் கல்வி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும் என்பதால் அதனை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

இதேபோல் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த செந்தாமரைக் கண்ணன், வெங்கடேசன், ராஜு ஆகியோரும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

தரமற்ற புத்தகங்களை வழங்குவதாக தனியார் பள்ளிகள் மீது குற்றச்சாட்டு.

கடலூரில் ஆர்ப்பாட்டம்

கட்டாய இலவசக் கல்வித் சட்டத்தை மீறிச் செயல்படும் கடலூர் மாவட்டத் தனியார் பள்ளிகளை கண்டித்தும், மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன என்றும் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தில், நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது,

குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 என்ற மத்திய அரசின் சட்டம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி உரிமையை வழங்குகிறது.

இச்சட்டத்துக்கு முரணாக கடலூரில் கட்டாய நன்கொடை, மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர் களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீட்டை கடலூர் பள்ளிகளில் அளிக்கவில்லை.

சட்டவிரோதமாக நுழைவுத் தேர்வுகள், பெற்றோருக்கு அறிவுச்சோதனை போன்ற வடிகட்டும் தேர்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. மெட்ரிக் பள்ளிகள் தனியாரிடம் இருந்து தரமற்ற பாடப் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுமைகளை ஏற்றுகின்றன. எனவே இத்தகைய விதிமீறல்களை செய்துவரும் கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சோனியா காந்தியே அழைத்தாலும் சந்திக்க மாட்டேன் - கருணாநிதி.


சட்டமேலவை ரத்து, சட்டசபை மாற்றம், சமச்சீர் கல்வி நிறுத்தம்
எதிர்பார்த்ததுதான் : கலைஞர்.

சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதால் தமிழகத்தின் எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,

சமச்சீர்கல்வி தலைசிறந்த கல்வியாளர்களால் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அமல்படுத்தப்பட்டது. தற்போது அதிமுக அரசு சமச்சீர் கல்வியை ரத்து செய்திருப்பதால், எதிர்கால மாணவர் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும் என்றார்.

டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கலைஞர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்ட ரீதியாக நீதி நிலைநாட்டப்படும் என்ற உறுதியுடனும், துணிவுடனும் இருக்கிறார் என்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.

தலைமைச் செயலகத்தை அதிமுக அரசு மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது, சட்ட மேலவையை ரத்து செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றார்.

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு?


டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாயில் எண் 7 அருகே குண்டு வெடித்துள்ளது. உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. குண்டு வெடிப்புக்கான காரணமும் தெரியவில்லை.

சம்பவ இடத்துக்கு 4 தீயணைப்பு வண்டிகள் வந்தன. பார்க்கிங் ஏரியா அருகே குண்டு வெடித்தது. பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்டு பிகோ காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பையில் குண்டு இருந்தது.

குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் மற்றும் டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சிறிய ரக குண்டு வெடித்ததை தொடர்ந்து டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தங்கபாலு ராஜினாமாவை காங். மேலிடம் ஏற்கவில்லை .

தங்கபாலு ராஜினாமாவை    காங். மேலிடம் ஏற்கவில்லை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு கட்சியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 63 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் நடவடிக்கையால்தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பு ஏற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ராஜினாமா கடிதத்தையும் கடந்த 13-ந் தேதி டெல்லி மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார். இது போல் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலாவும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது.

கேரளாவில் எதிர்பார்த்த அளவு காங்கிரஸ் வெற்றி பெறாதது ஏன் என்பது குறித்தும் மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்கும், கேரளாவில் அதிக வெற்றி கிடைக்காததற்கும் தனிப்பட்ட முறையில் மாநில தலைவர்களை குறை சொல்ல முடியாது. எனவே 2 ராஜினாமா கடிதங்களையும் தற்போது ஏற்பது இல்லை என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தேவை. அதற்கு புதிய தலைவர் அவசியம். ஆகவே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்தும் டெல்லி மேலிடத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நிச்சயம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார். தாமதம் ஆனாலும் மாற்றம் உறுதி என்று தமிழக காங்கிரஸ் மூத்த பிரமுகர் ஒருவர் கூறினார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று தங்கபாலு தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. எனவே மாற்றம் வராது. தங்கபாலு தலைவராக நீடிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள்.