Thursday, May 19, 2011

மெரீனா கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு.

மெரீனா கடற்கரையில் மாயமான சிறுமி மீட்பு

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சையது நூர்அகமது. மருந்துக் கடை அதிபர். இவரது மகள் தமன்னா (வயது 5). கடந்த 11-ந்தேதி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சையது நூர்முகமது மெரினா கடற்கரைக்கு சென்றார். உழைப்பாளர் சிலை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர் கடற்கரை முழுவதும் தமன்னாவை தேடினர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தமன்னாவை கண்டு பிடிப்பதற்காக துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை மட்டுமின்றி, ஆந்திர மாநில பகுதிகளிலும் திருப்பதி கோவில் அருகிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இருந்த போன் நம்பரை பார்த்து ராஜவேலு என்ற வாலிபர் தமன்னாவின் தந்தை சையது நூர் முகமதுவிடம் பேசியுள்ளார். அப்போது அவர், "திருப்பதி கோவில் அருகே உங்கள் மகளை நான் பார்த்தேன். அவளுடன் பெண் ஒருவரும் இருந்தார்'' என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை சையது நூர்முகமது போலீசிடம் தெரிவித்தார். உடனடியாக தனிப்படை போலீசார் திருப்பதிக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே சிறுமி தம்மன்னா இன்று மதியம் சென்னை அரசு ஆஸ்பத்திரி அருகே அனாதையாக நின்று கொண்டிருந்தார். அரசு ஆஸ்பத்திரி போலீசார் மீட்டனர். சிறுமியை கடத்தியவர்கள் அவளை ஆஸ்பத்திரி அருகே விட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தும் போது முழு விவரம் தெரியவரும்.

ரூ 50 லட்சம் வைர நகை - பிரபல நடிகை விமான நிலையத்தில் கைது.


கணக்கில் வராத ரூ 50 லட்சம் பெறுமானமுள்ள நகைகளுடன் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பாவை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடந்த சர்வதேச பட விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியிருந்தார் மினிஷா லம்பா.

அப்போது அவரை சோதனை செய்ததில் கணக்கில் காட்டாத ரூ 50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நகைகளுக்கு மினிஷா அளித்த விளக்கம் ஏற்கக் கூடியதாக இல்லாததால் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர் சுங்கத் துறை அதிகாரிகள். அவரை விசாரிப்பதற்காக கைது செய்துள்ளனர் அதிகாரிகள்.

இதுகுறித்து மினிஷா தரப்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் என்றைக்கும் முன்னால் நிற்போம் : வைகோ .


ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம் என்று வைகோ பேசினார்.

இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் 17.05.2011 அன்று நடைபெற்றது.

இந்தி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,

உலகத்தில் பல்வேறு நாடுகள், இலங்கையிலே ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது விசாரிக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டு என்று ஓங்கி குரல் கொடுக்கின்ற வேளையில், ஐ.நா. மன்றம் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், ஏன் அமெரிக்காவே நேரடியாக விசாரணை செய்யும் என்று கூறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இந்திய அரசும் இலங்கை அரசும் கூட்டறிக்கையின் மூலமாக ஐ.நா. மன்றத்திற்கு மூவர் குழு கொடுத்த அறிக்கைக்கு மாறாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

இந்திய அரசே, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்த வேண்டும். அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது என்னுடைய வாதம் அல்ல. கருத்துக்களை ஜனநாயகத்திலே அவரவர் சொல்ல உரிமை உண்டு. நான் எவர் கருத்தையும் இங்கே விமர்சிக்க விரும்பவில்லை.

நடந்து முடிந்த தேர்தல் களத்தைப் பற்றிய செய்திகள் எல்லாம் இங்கே வந்தன. தேர்தல் களத்திலே மதிமுக பங்கேற்கவில்லை. தேர்தல் களத்தில்தான் தற்காலிகமாக பங்கேற்கவில்லையே தவிர, ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர்க்களத்தில் நாங்கள் என்றைக்கும் முன்னால் நிற்போம்.

இந்திய மக்கள் குற்றவாளிகள் அல்ல. குற்றாச்சாட்டுக்கான நாடு இந்தியா அல்ல. இந்திய அரசை இயக்குகின்ற காங்கிரஸ் கட்சியின் தலைமை. அந்த தலைமையின் கைப்பாவையாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற பிரதமர் மன்மோகன் சிங், அவர் தலைமையிலான அமைச்சர்கள். அந்த அமைச்சரவையில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள். இவர்கள் எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், இந்திய அரசே நீ கொடுத்த ஆயுதங்கள், நீ அள்ளிக்கொடுத்த ஆயிரம் கோடி பணம், நீ அனுப்பி வைத்த முப்படை தளபதிகள், அவர்கள் கொடுத்த ஆலோசனைகள், நீ தந்து உதவிய நவீன உபகரணங்கள், குண்டு வீச விடுதலைப்புலிகள் எங்கே இருக்கிறார்கள் என்று செயற்கைகோள் படங்கள்.

விடுதலைப்புலிகளை களத்திலே வெல்ல முடியாது. ஆனால் போர்க்களத்திலே அவர்கள் தோற்க என்ன காரணம். தமிழினத்தை அழிப்பதற்கு ராஜபக்சேவுக்கு துணை நின்று அத்தனை துரோகமும் செய்தது இந்திய அரசு.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு நடத்திய மனித உரிமை மீறல்களையும், பல ஆயிரம் தமிழர்களை சித்ரவதை செய்து படுகொலை செய்ததையும் ஐ.நா. சபை அமைத்தகுழு அம்பலப்படுத்தியுள்ளது. இந்தப் போர்க் குற்றங்கள் பற்றி விரிவான விசாரணை நடத்தி, குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அந்தக் குழு கூறியுள்ளது.

இந்நிலையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இலங்கையில் போரின்போது நடந்தவைகள் குறித்து இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணையே போதும் என்று இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் கூறியுள்ளது. தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசின் துரோகம் தொடர்வதையே இது காட்டுகிறது என்றார்.

கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு ஓட்டு போட்டீர்கள்? சீமான்.


இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,

சீமான் தலைவன் என்று நினைக்கக் கூடாது. நான் யார் என் இனத்தின் விடுதலைக்கு, உண்மையாக நேர்மையாக அர்ப்பணிப்போடு போராடுகிற எண்ணற்ற தலைவர்களை உருவாக்குகிற ஒரு முதண்மை தொண்டன். அப்படியானால் இந்த கட்சிக்கு யார் தலைவர். இந்த கட்சிக்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்ற 12 கோடி தேசிய இன மக்களுக்கு ஒரே தலைவர் பிரபாகரன்.

நாம் தமிழர் என்கிற கட்சி தேசிய இன விடுதலைக்கான மக்கள் ஜனநாயக புரட்சி. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்காகவா, தமிழினம் மீட்சிக்காக. நாம் தமிழர் கட்சி ஆள்வதற்காகவா, தமிழர்கள் வாழ்வதற்காக. நாம் தமிழர் கட்சி பணத்திற்காகவா, சத்தியமாக இனத்திற்காக. நாம் தமிழர் கட்சி மக்களை வைத்து பிழைப்பதற்காகவா, மக்களுக்காக உழைப்பதற்காக. நாம் தமிழர் கட்சி பதவிக்காகவா, மக்களுக்கான உதவிக்காக. இதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனது அன்பு தம்பிகள்.

யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். என் பாட்டன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படையிலே, என் பாட்டன் வெள்ளைய தேவன் தளபதியாக இருந்ததுபோல, எத்தனை தளபதிகள் எங்களுக்கு இருக்கலாம். நான்தான் மன்னன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. யாரும் வரலாம். வாழ்த்துக்கலாம். நான்தான் ஆளுவேன். வந்தவர்களையெல்லாம் வாழ வைத்ததில் எனக்கு சிக்கல் வரவில்லை. வந்தவனையெல்லாம் ஆளவைத்தில் எனக்கு சிக்கல். அதனை புரிந்துகொள்ள வேண்டும். யாரும் வரலாம். இங்கு வாழலாம். நாங்கள்தான் ஆளுவோம். இதுதான் எங்கள் கொள்கை.

என் மொழி காக்க, என் இனம் காக்க, என் மண் காக்க, என் மக்களை காக்க, என் உயிருக்கும் மேலாக நின்று போராடிக்கொண்டிருக்கிற எழுச்சிமிக்க இளைஞர்களின் பாசறைதான் இந்த நாம் தமிழர் கட்சி.

ஓயாமல் கொள்கை என்ன என்று கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது. கொள்கையை கேட்டுக்கிட்டா விஜயகாந்த்துக்கு 29 இடத்தில் ஓட்டு போட்டீர்கள். கொள்கை இருக்குதா. கொள்கையை கேட்டுக்கிட்டா போட்டீர்கள். ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அந்த ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் பவர் கட் : ட்விட்டர், இணையதளம் மூலம் நூதன போராட்டம் .


நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மின் தடை குறித்த விவரங்களை, முழுமையான புள்ளி விவரத்தகவல்களை இணையதளம் மூலம் பகிர்ந்து கொண்டு, அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புதுவிதமான நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ட்விட்டர் மூலம்தான் இந்த நூதன போராட்ட நடவடிக்கை தொடங்கியது. தற்போது பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து இணையதளமே அமைத்து விட்டனர்.

நாட்டின் பல பகுதிகள் மின் தடையால் இருண்டு போய்க் கிடக்கின்றன. கேட்டால் மின்சாரம் இல்லை, உற்பத்தி இல்லை, பற்றாக்குறை என்று மாநில அரசுகள் காரணம் கூறுகின்றன.மத்தியஅரசும் இதே பதிலைத்தான் கூறி வருகின்றன. இப்படிக் கூறியதால்தான் தமிழகத்தி்ல் ஆட்சியையே மக்கள் மாற்றி விட்டனர்.

இந்த நிலையில் இந்தியாவின் மின் அவல நிலையை ட்விட்டர் மூலம் உலகம் முழுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வேலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த முதலீட்டு ஆலோசகர் ஷெபாலி யோகேந்திரா இறங்கியுள்ளார்.

ட்விட்டர் மூலம் இந்தியாவின் மின் தடை அவலத்தை வெளிப்படுத்தி, இதைப் போக்குமாறு அரசியல்வாதிகளுக்கு இந்த ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் நெருக்கடி தர ஆரம்பித்துள்ளனர்.

இதுகுறித்து யோகேந்திரா கூறுகையில், ஒவ்வொருமுறையும் கோடை காலம் வந்து விட்டாலே, எனது ட்விட்டர் நண்பர்கள் இந்தியாவில்நிலவி வரும் கடுமையான மின் தட்டுப்பாடு குறித்துக் கூறுவார்கள். சமீபத்தில் இரண்டு நகரங்களைச் சேர்ந்த எனது நண்பர்கள் அடுத்தடுத்து மின் தடை குறித்து வேதனையுடன்குறிப்பிட்டிருந்தனர். இதைப் பார்த்ததும் எனக்கு யோசனை தோன்றியது.

பொதுவான ஒரு ட்விட்டர் முகவரியைப் பயன்படுத்தி இந்தியாவின் மின் அவலத்தை நமது அரசியல்வாதிகளுக்கு உணர்த்தி இதை சரி செய்யும் வகையில் செயல்பட முடிவு செய்தேன்.

இதற்காகவே #powercutindia அல்லது #PowerCutsIN ஆகிய இரு முகவரிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் இதை நான் செயல்படுத்தியுள்ளேன். இங்கு இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களாக இருந்தாலும் அங்குள்ள மின்சார விநியோக நிலை, மின் தட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த விவரங்களைத் தெரிவிக்கலாம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மின் வெட்டு அமலாகும்போது ஒரு மெசேஜும், மின்வெட்டு நீங்கி மீண்டும் கரண்ட் வரும்போது ஒரு மெசேஜும் அனுப்புமாறு பயன்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

தற்போது இந்த ட்விட்டர் குழுவினர் இணைந்து ஒரு இணையதளத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் மின்வெட்டு அமலாகிறது என்பதை ஒரு மேப் மூலம் தெரிவிக்கின்றனர். மேலும் மின்வெட்டு குறித்த புள்ளி விவரத் தகவல்களையும் இதில் அவர்கள் இடம் பெற வைத்துள்ளனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மின்வெட்டு தொடர்பான தகவல்கள் இவர்களுக்கு கிடைக்கிறதாம். இந்த இணையதளத்தை உருவாக்கி பராமரித்து வருபவர் அஜய் குமார். இவர் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

பொது நலன் கருதி செயல்படும் இந்த கட்டமைப்பில் பொதுமக்கள் பெருமளவில் இணைய வேண்டும். மின்வெட்டின் விபரீதம் குறித்து அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உணர்த்த வேண்டும் என்று இந்த வித்தியாசமான நடவடிக்கையின் காரணகர்த்தாக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மின்வெட்டு தொடர்பான தகவல்களைத் தர இமெயில் முகவரி ஒன்றையும் அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதேசமயம், தவறான, சரியில்லாத தகவல்களைத் தந்தால் அதை இவர்கள் நிராகரித்து விடுகிறாகள். மேலும் நம்பகமான தகவல்களைத் தருவோரை ஸ்டார் ரிப்போர்டர்களாகவும் இவர்கள் அங்கீகரித்துள்ளனர். ஒரு ஊரிலிருந்து வரும் மின் வெட்டு குறித்த தகவல்கள் சரியா என்பதை இவர்கள் மூலம் சரி பார்த்துக் கொள்கிறார்களாம்.

முன்பு அன்னா ஹஸாரே ஊழலுக்கு எதிராக போராடியபோது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் அவருக்குப் பெரும் ஆதரவு திரண்டது நினைவிருக்கலாம். அது கொடுத்த ஊக்கத்தால்தான் தற்போது மின்வெட்டுக்கு எதிரான இந்த நூதன போராட்டம் தொடங்கியுள்ளது.

குடிகார தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற மகள்.


தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து சித்ரவதை செய்த தந்தையை மகள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

சென்னை மாங்காடை அடுத்த கோவூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்னமணி (57). பக்ரைன் நாட்டில் வெல்ட்ராக வேலை பார்த்த அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துவிட்டார். 2004-ம் ஆண்டு அவரது மனைவி இறந்துவிட்டார்.

ரத்னமணிக்கு ஆன்ட்ரோ செல்வின் பிரபு (27) என்ற மகனும், அஞ்சுஜெர்மி (18) என்ற மகளும் உள்ளனர். ஆன்ட்ரோசெல்வின் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கால்சென்டர் ஒன்றில் வேலை பார்க்கிறார். மகள் அஞ்சுஜெர்மி கோவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் கோவூரில் வாடகைக்கு வீடு எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு ஆன்ட்ரோசெல்வின் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அப்பாவும், மகளும் மட்டும் தூங்கினர். திடீர் என்று நள்ளிரவு 2 மணி அளவில் அஞ்சுஜெர்மி தன் அண்ணனுக்கு போன் செய்து தான் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

உடனே ஆன்ட்ரோசெல்வின் வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து தங்கை கொலை செய்துவிட்டதாகக் கூறுகிறாள், நீங்கள் நேரில் சென்று பாருங்கள் என்று கூறியுள்ளார். அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ரத்னமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடனே வீட்டு உரிமையாளர் மாங்காடு போலீசில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சுஜெர்மியைப் பிடித்து விசாரித்தார்.

விசாரணையில் அஞ்சுஜெர்மி கூறியதாவது,

கடந்த 1 ஆண்டுக்கு முன் நான் 5 பவுன் தங்க நகையை என்னுடைய தோழியிடம் கொடுத்து வைத்திருந்தேன். அதை வாங்கி வருமாறு என் தந்தை என்னிடம் அடிக்கடி தகராறு செய்தார்.

மேலும், தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து சித்ரவதை செய்தார். நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த அவர் என்னை அடித்து உதைத்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் எனக்கு தூக்கம் வரவில்லை. தினமும் என்னை கொடுமைப்படுத்தும் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

இரவு 2 மணியளவில் அவர் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் காய்கறி நறுக்கும் கத்தியால் குத்திக் கொன்றேன் என்றார்.

ரத்னமணியின் உடலில் 4 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு : மின்வெட்டு நேரம் 15 நாளில் குறையுமாம்.

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு:  மின்வெட்டு நேரம் 15 நாளில் குறையும்; மின்வாரிய அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் தற்போது கிராமப்புறங்களில் 3 மணி நேர மின்வெட்டும், சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டும் அமலில் உள்ளது.இந்த மின்வெட்டை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

இதுபற்றி அமைச்சரவை கூட்டத்திலும் விவாதித்தார். தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு குறித்து அமைச்சர் நத்தம் விசுவநாதன் இந்த கூட்டத்தில் விளக்கி கூறினார். இதுபற்றி விரிவாக விவாதித்த ஜெயலலிதா, பற்றாக்குறை மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 3 மாதத்திற்குள் மின் நிலைமை சரி செய்யப்பட வேண்டும் என்று கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் மின் சப்ளையை சீராக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிற்கு தற்போது 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 9 ஆயிரம் மெகாவாட் முதல் 9 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. 2500 முதல் 3 ஆயிரம் மெகா வாட் வரை பற்றாக்குறை நிலவுவதால் மின்வெட்டு அமலில் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவக்காற்று அதிகம் வீசுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைத்து வருகிறது. காலை நேரங்களில் 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மாலை நேரங்களில் மின் உற்பத்தி மேலும் அதிகம் கிடைக்கிறது.

இந்த மாத கடைசிக்குள் 27-ந்தேதிக்கு பிறகு மின் உற்பத்தி மேலும் அதிகமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே 15 நாளில் 3 மணி நேர மின்வெட்டை 2 மணி நேர மின்வெட்டாக குறைக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னையிலும் மின்வெட்டு விரைவில் நீக்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு ஆறுமணி நேரம் உள்ளதைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.