Wednesday, May 18, 2011

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் : அண்ணாசாலையில் போலீஸ் தடியடி.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்:    இந்தியன் ஆயில் நிறுவனத்தில்    புகுந்த கம்யூ. தொண்டர்கள்;    அண்ணாசாலையில் போலீஸ் தடியடி

சென்னை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புகுந்த கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது. அண்ணாசாலையில் உள்ள மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டார்கள். வட சென்னை மாவட்ட செயலாளர் விஜயகுமார், தென்சென்னை மாவட்ட செயலாளர் லெனின் ஆகியோர் தலைமையில் போலீஸ் தடையை மீறி இந்த போராட்டம் நடந்தது.

அப்போது சிலர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேட்டை உடைத்து தள்ளி விட்டு உள்ளே புகுந்தனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் தள்ளி விட்டு உள்ளே சென்றனர். இதில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் கீழே விழுந்தார். இதனால் அவர்களை தடியடி நடத்தி போலீசார் வெளியேற்றினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் சாலையில் உட்கார்ந்தனர். மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் எண்ணை அலுவலகத்தில் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஓசூர்அருகே பெங்களுர் வாலிபரிடம் ஓடும் பஸ்சில் நகை அபேஸ்.

ஓசூர்அருகே    பெங்களுர்  வாலிபரிடம்    ஓடும் பஸ்சில் நகை அபேஸ்

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்!!!

கிருஷ்ணகிரி,மே,18- கர்நாடக மாநிலம் பெங்களுர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). இவர் தனது மனைவியுடன் பெங்களுரில் இருந்து தனியார் பஸ்சில் சேலம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.

ஓசூர் அருகே வந்த போது அவரது கைப்பை ஜிப் திறந்து கிடந்தது. பையில் இருந்த 35 கிராம் தங்க நகையை காணவில்லை.

இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை அபேஸ் செய்து சென்றது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.

தலைமைச் செயலக விவகாரம் : தமிழக அரசுக்கு நோட்டீஸ்.


தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தை மாற்றக் கூடாது என்று உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 16ஆம் தேதிக்குள் இதுதொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசால் அனைவரும் வியக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது.

இக் கட்டிடம் சுற்றுச் சூழலுக்கு உகந்த, நலன்பயக்கும் பசுமைக்கட்டிடம் என்பது மிக முக்கியமான சிறப்பாகும். மேலும் இந்தியாவின் முதல் சட்டமன்றம், தலைமைச்செயலக பசுமைக்கட்டிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது


இதனை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்பு 18.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது என்று வாதிட்டார்.

இதுதொடர்பாக அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதுகுறித்து தகவல் எதுவும் இல்லை என்றும், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் அவ்வாறு செய்திகள் வருவதாகவும் மனுதாரர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய உத்தரவின்பேரில் இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது என்பது தெரிய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார்.

இந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரை நீக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா வுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே அரசு தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் மாற்றம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், மனுதாரர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய முடிவு ; அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில்    திருத்தம் செய்ய முடிவு;    அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

சமச்சீர் பாடப் புத்தகங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் செயல்படுத்தப்படுகிறது.எல்லா குழந்தைகளும் ஒரே பாடத்திட்டத்தை படிக்கக் கூடிய வகையில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஆண்டு முதல் முழுமையாக இத்திட்டம் செயல்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக 8 கோடி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக அ.தி.மு.க. அரசு ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் சில மாற்றங்களை செய்ய முன் வந்துள்ளது. உயர் அதிகாரிகள், இயக்குனர், இணை இயக்குனர்கள் விரைவில் மாற்றப்படுகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சமச்சீர் பாடப்புத்தகத்திலும் சில மாற்றங்களை கொண்டு வருவதாக தெரிகிறது.

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதைகள், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது. 10-ம் வகுப்பு சமச்சீர் தமிழ் புத்தகத்தில் 4 பக்கத்தில் கலைஞரின் “செம்மொழி” பாடல் இடம் பெற்றுள்ளது. 17 பக்கத்தில் செம்மொழி அந்தஸ்தை பெற முயற்சி என்ற தலைப்பில் ஒரு குறிப்பு உள்ளது. 89-ம் பக்கத்தில் தூய தமிழில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் கூடுதலாக படிக்கும் திறன் பற்றிய பயிற்சி முன்னாள் முதல்வர் எழுதிய கட்டுரை அடங்கி உள்ளது. 100-ம் பக்கத்தில் போர்க்களத்தில் மகனுக்கு வீரத்தை எடுத்துரைக்கும். தாய் பற்றிய பயிற்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த பாடத் திட்டங்களை சிலவற்றை திருத்தவோ அல்லது நீக்கவோ பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இன்று நடந்தது. கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இயக்குனர்கள் வசுந்தராதேவி, அறிவொளி, தேவராஜன், மணி, வசந்தி, ஜீவாகனந்தம், தமிழ்நாடு பாடநூல் நிர்வாக இயக்குனர் ஜீவானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளிடம் சமச்சீர் பாடப்புத்தகங்களில் வினியோகம் செய்தல், தேவையற்ற பாடங்களை நீக்குதல், அல்லது திருத்தம் செய்தல் போன்றவை குறித்து அமைச்சர்கள் நீண்ட நேரம் கருத்துக்கள் கேட்டறிந்தார். சமச்சீர் பாடப்புத்தகம் பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும். இத்தகைய சூழலில் மாணவர்களை பாதிக்காமல் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி : அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் நத்தம் புளி:அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி

வெளிநாடுகளுக்கு நத்தம் பகுதியில் இருந்து புளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது அறுவடை செய்ய ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நத்தம் வட்டாரத்தில் திருமலைக்கேனி, மலையூர், வேம்பார்பட்டி உள்பட பல இடங்களில் ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. புளியம்பழம் தட்டி விதை நீக்கி தனிப்பழமாக விற்கும் குடிசை தொழில் இங்கு செயல்பட்டு வருகிறது.

இது குறித்து நத்தம் தொகுதி தென்னை, மா, புளி பண்ணையின் அமைப்பாளர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது, நத்தம் வியாபாரி சேக்முகமது கூறியதாவது:-

நத்தம் பகுதியில் விளையும் நாட்டு புளியம்பழம் தரமுள்ளதாகும். குளிர் சாதன கிட்டங்கி புளி 1 கிலோ ரூ.41, அதே சமயம் விதை நீக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட பழங்கள் 1 கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்கப்படுகிறது.

நத்தம் உள்ளூர் புளி 1 கிலோ விதை எடுக்கப்பட்டது ரூ.60 முதல் ரூ.65 வரையிலும் விற்கப்படுகிறது. மேலும் நத்தம் பகுதியில் பாகிஸ்தான், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பெரிய மொத்த கொள்முதல் வியாபாரிகள் வந்து நத்தம் வட்டாரத்தில் கொள்முதல் செய்கின்றனர். இந்த வருடம் விளைச்சல் குறைவு. கடந்த வருடம் சரியான அளவில் பருவமழை பெய்யவில்லை. இதனால் மகசூல் குறைந்து போனது. தமிழ்நாடு அளவிலும் மற்ற மாநிலங்களிலும் விளைச்சல் மந்தமானது.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் வரத்து குறைவு. மேலும் புளியம்பழம் அறுவடை செய்ய கூலி ஆட்கள் கடும் தட்டுப்பாடு அடைந்துள்ளனர்.இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வியாபாரிகளும் கவலை கொண்டுள்ளனர்.

மின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி - பொதுமக்கள் கோரிக்கை.

மின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி பணியை விரைந்து முடிக்க வேண்டும்; கூடலூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 2004-ம் ஆண்டில் முல்லை பெரியாற்றில் மின் பற்றாக்குறையை போக்கிட 17 இடங்களில் சிறுபுணல் நீர் மின் நிலையம் தொடங்கிட அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு இடங்களில் தொடங்கப்பட்டது.

அடுத்து வந்த அரசு ஆமை வேகத்தில் சிறுபுணல் மின் உற்பத்தி வேலைகளை செய்தது. இன்னும் 13 இடங்களில் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மின் பற்றாக்குறையை பற்றி கவலையும் படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

தற்பொழுது பதவி ஏற்ற அரசு மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் லோயர்கேம்பில் ரூ.7 கோடி செலவில், முல்லை பெரியாறு அணையிலிருந்து நான்கு ராட்சத குழாய்கள் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படும்.

ஆயிரத்து 200 கன அடி தண்ணீரை பயன்படுத்தி நான்கு எந்திரங்கள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் வகையில் பெரியாறு நீர் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் சில மாதங்களாக ஒரே ஒரு எந்திரம் மட்டுமே இயங்கி வருகிறது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இயங்காமல் வருகிறது. லோயர் கேம்பிலுள்ள பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு ஆற்றில் விடப்படும் தண்ணீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறுபுணல் நீர் மின்நிலையம் அமைத்து ஒவ்வொரு சிறுபுணல் மின் நிலையத்திலும் 4 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2004-ம் ஆண்டில் தமிழக அரசு முடிவு செய்தது.

மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு லோயர் கேம்ப், குருவனூத்துப் பாலம், காஞ்சி மரத்துறை, வெட்டுகாடு, குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஒத்தகளம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.19 கோடி செலவில் சிறுபுணல் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மற்ற 13 நிலையங்களும் தொடங்கப்பட்டால் 220 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதனால் பெரும்பான்மையான மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மின்சாரம் பற்றாக்குறைகள் உள்ள நிலையில் விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறு தொழில் புரிவோர் மற்றும் சிறு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு.

“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் (பன்னாட்டு ராணுவம்) முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் ஆத்மி காட் பகுதிக்குள் நேட்டோ படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன.

இதை கவனித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு நேட்டோ படையினரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் வான்வெளி எல்லைக்குள் நேட்டோ ஹெலிகாப்டர்கள் பறந்ததால் அந்நாட்டு ராணுவத்தினரை ஆத்திரம் அடைய செய்துள்ளது.