Tuesday, May 17, 2011

தலைமைச் செயலகத்தை மாற்றுவதை எதிர்த்து வழக்கு.


தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

முந்தைய திமுக ஆட்சியில் ரூ. 1000 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை தவிர்த்துவிட்டு, மீண்டும் கோட்டைக்கே சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.

தலைமைச் செயலகம் ஏன் மாற்றப்படுகிறது என்பது குறித்து தலைமைச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.

பெரும் தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணித்துவிட்டு, தலைமைச் செயலகத்தையும் சட்டப்பேரவையையும் இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது, பொது நலனுக்கு எதிரானது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு விபரம் :
http://vaiarulmozhi.blogspot.com/2011/05/blog-post_7895.html

பெட்ரோல் விலை உயர்வு : கார்களை விட்டு பைக்குக்கு தாவும் வாடிக்கையாளர்கள்.


சட்டசபை தேர்தல் முடிவுகள் தெரிந்த கையோடு, பெட்ரோல் விலையை மத்திய அரசு 5 ரூபாய் உயர்த்தியுள்ளது. கடந்த 9 மாதங்களில் இதுவரை 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டு வந்த அதீத வளர்ச்சியை இந்த ஆண்டு எதிர்பார்க்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பெட்ரோல் விலை உயர்வால் கார் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கார் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனவாம்.

மேலும், இன்னும் சில நாட்களில் டீசல் விலையும் உயர்த்தப்படும் என்று தகவல்கள் உலா வருவதால், கார் நிறுவனங்கள் கவலை அதிகரித்துள்ளதாம். பெட்ரோல் விலை உயர்வால் புதிதாக கார் வாங்குவதை தவிர்த்து, பைக் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனம் செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுதான் கார் நிறுவனங்களின் கவலைக்கு காரணம்.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாக சைக்கிள் விற்பனை கணிசமாக உயரும் என்பதும ஆட்டோமொபைல் துறையின் கருத்தாக உள்ளது. இதற்கு சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களும் தலையசைத்துள்ளன.

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னையிலிருந்து கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் தப்புவதற்கு சில வழிமுறைகள்:

1.குறைந்த தூரம் செல்வதற்கு கார், பைக்குகளை பயன்படுத்தாமல் நடந்து செல்வதே சால சிறந்தது. பெட்ரோலும் மிச்சம், வாக்கிங் செய்த பலனும் கிட்டும்.

2.தரமான பெட்ரோல் பங்குகளில் மட்டுமே பெட்ரோல் போடுங்கள். சில பங்குகளில் போடப்படும் கலப்பட பெட்ரோல் உங்கள் வாகனத்தின் எஞ்சினை சுவாகா செய்துவிடும்.

3.குறிப்பிட்ட இடைவெளிகளில் வாகனத்தை சர்வீஸ் செய்ய மறக்க வேண்டாம். இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையாது.

4.டிரைவிங்கை பொறுத்து வாகனத்தின் மைலேஜ் கொடுக்கும் திறன் மாறுபடும். எனவே, வாகனத்தை சீராக ஓட்டுவதற்கு பழகிக் கொள்ளுங்கள்.

5.சிக்னல்களில் நிற்கும்போது, ஆக்சிலேட்டரை அழுத்தி எஞ்சினை உறுமவிடாதீர்கள். இதனால், அதிக எரிபொருள் செலவாகும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

6.எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.டயர்களில் சரியான அளவு காற்றின் அழுத்தம் இருக்கிறதா என்பதை பார்த்துகொள்வது நல்லது. டயர்களில் சரியான அளவு காற்று இல்லாவிட்டால் அதிக எரிபொருளை எஞ்சின் வி்ழுங்கும்.

இதுபோன்ற நடைமுறைகளை கடைபிடித்தால், பெட்ரோல் விலை உயர்வு நம் பாக்கெட்டை பதம் பார்க்காது.

ரஜினியின் உடலுக்கு என்ன பிரச்சினை ?


ரஜினிக்கு என்னதான் பிரச்சினை என்று நாடு முழுவதிலும் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

ரஜினி ஆரம்பத்தில் அஜீரணக் கோளாறு, நீர்ச்சத்து குறைவு மற்றும் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்டார். இது அவர் ராணாவுக்காக 15 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மேற்கொண்ட கடும் உடற்பயிற்சி மற்றும் டயட்டின் விளைவு.

அதன் தொடர்ச்சியான விளைவுகளாக, நுரையீரலில் நோய்த் தொற்று மற்றும் இரைப்பை அழற்சி போன்றவை அவரைச் சற்று கடுமையாக பாதித்துள்ளன.

நுரையீரலில் தேங்கும் திரவம்

ரஜினிக்கு நீண்ட காலமாக புகைப் பழக்கம் இருப்பதால், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அவரது அண்ணன் சத்யநாராயணாராவ் கெய்க்வாடும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனை சரிசெய்ய ஆக்ஸிஜன் மூலம் நோய் எதிர்ப்புக்கான மருந்துகள் செலுத்தப்பட்டு, அந்தப் பகுதியில் உள்ள நோய்த் தொற்றை அடியோடு நீக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை காரணமாக அவருக்கு நுரையீரலுக்கும் இதயப் பகுதிக்கும் இடையே திரவம் (Fluid) அதிகளவு தேங்குகிறது. இந்த திரவம் நுரையீரல்களை அழுத்தி மூச்சு விட சிரமப்பட வைக்கும்.

மேலும் ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் தேங்கும் திரவத்தை பெருமளவு அகற்ற முயன்று, அதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது மருத்துவர்களுக்கு. இந்த சிறிய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ரஜினி தெம்பாகியுள்ளார்.

சிறுநீரகம் செயல்படுவதில் சிக்கல்

நுரையீரலில் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை காணப்படுகிறதாம். காலில் வீக்கம் ஏற்பட முக்கிய காரணம் இதுவே.

ஆனால் இது மிக ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரமே சரிப்படுத்திவிட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நுரையீரல் பிரச்சினை சரியாகிவிட்டாலே, சிறுநீரக ஒழுங்கின்மையும் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புற்றுநோய் அறிகுறி இல்லை

இப்போது ரஜினியின் திசுக்கள் சோதனை முடிவும் வந்துவிட்டன. ரஜினிக்கு புற்று நோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய நடத்தப்பட்ட சோதனை இது. ஆனால் அவருக்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துள்ளது.

‘உற்சாகத்தில் ரஜினி’ - மருத்துவமனை அறிக்கை

ராமச்சந்திரா மருத்துவமனையின் இரண்டாவது செய்திக் குறிப்பில், “பொது மற்றும் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் ரஜினிக்கு இப்போது கிசிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நலத்தை முழுமையாக கண்காணிப்பதற்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நூரையீரலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பிறகு ரஜினி உற்சாகமாக இருக்கிறார். அவருக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது முக்கிய உறுப்புகள் அனைத்தும் இயல்பாக செயல்படுகின்றன.

பார்வையாளர்களை சந்திப்பதை வெகுவாக குறைத்துக் கொள்ளும்படி ரஜினிக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவரை முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்," என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வது எப்போது?

நுரையீரல் பிரச்சினை முற்றாக சரியாகிவிட்டால் வெளிநாட்டுக்குச் செல்ல தேவையில்லை என்கிறார்கள். சிறுநீரகக் கோளாறுகளை இங்கேயே சரி செய்துவிட முடியும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டசபையை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற வைகோ எதிர்ப்பு.


தமிழக சட்டசபையை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் கேட்ட சீட் கிடைக்காததால், சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுக தேர்தல் முடிந்து, அதிமுகவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விட்ட நிலையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது.

தங்களது ஆதரவே இல்லாமல் அதிமுக மாபெரும் வெற்றியடைந்தது அக் கட்சிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதிமுக ஒரு சக்தியே இல்லை என்ற அளவுக்கு அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இந் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழுவினர், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடந்தது.

அதில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினருடன் வைகோ ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டதும், தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது.

எனினும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நதி நீர் பிரச்சனைகளைத் தீர்க்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், நதிகள் இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு அமலாக்க வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சேலத்தில் 5மணி நேரம் மின்வெட்டு.


சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 5மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,


இரவு 8.30மணி முதல் 9மணி வரை


இப்படி தினமும் சேலத்தில் 5மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?

அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.

இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்

இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.



ஸ்பெக்ட்ரம் விவகாரம் : ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் விசாரணை.


ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ராஜாத்தி அம்மாள் ஆடிட்டரிடம் விசாரணை; சி.பி.ஐ. போலீஸ் தீவிரம்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் பணம் எப்படியெல்லாம் கை மாறியது என்பது குறித்து சி.பி.ஐ., வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதுவரை நடந்துள்ள விசாரணையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பிறகு இந்தியாவுக்கு வந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மொரிஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளில் விசாரணை நடத்த அமலாக்கப் பிரிவு சென்றுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் டாடா தொழில் நிறுவனத்துக்கு சொந்தமான வோல்டாஸ் நிறுவனத்தின் நிலம் பலரது கைக்கு மாறி, கடைசியில் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் ஆடிட்டர் வசம் சென்றுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயன் அடைந்ததற்காக இந்த நிலத்தை டாடா நிறுவனம் கைமாற்றி கொடுத்திருக்கலாம் என்று சி.பி.ஐ. சந்தேகிக்கிறது. வோல்டாஸ் நிறுவன நிலம் முதலில் 18 பேரின் பெயர்களில் நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அந்த நிலம் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்களில் ஒருவரான மலேசிய சரவணன் பெயருக்கு மாற்றப்பட்டது.

திடீரென ஒரு வாரம் கழித்து அந்த நிலம் மலேசியாவைச் சேர்ந்த சங்கல்பம் என்ற நிறுவனத்துக்கு கை மாறியது. இந்த மாற்றத்தை ராஜாத்தி அம்மாளின் மற்றொரு ஆடிட்டரான ரத்தினம் செய்ததாக கூறப்படுகிறது. வோல்டாஸ் நிறுவன நிலம் கை மாறியது தொடர்பான சர்ச்சையில் உண்மையை தெரிந்து கொள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டருக்கு அழைப்பு விடுத்தனர்.

அதை ஏற்று ஆடிட்டர்கள் ரத்தினம், மலேசிய சரவணன் இருவரும் நேற்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார்கள். அவர்களிடம் வோல்டாஸ் நிறுவன நிலம் ஏன், எதற்காக, எப்படி கை மாற்றப்பட்டது என்று விசாரித்தனர். இதற்கு ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர்கள் அளித்த பதில் பதிவு செய்யப்பட்டது. அவை தனித்தனி ஆவணங்களாக தொகுக்கப்பட்டு வருகின்றன.

கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகிய இருவரின் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 20-ந்தேதி அளிக்கப்பட உள்ளது. அப்போது வோல்டாஸ் நிலம் கை மாறிய விதம் பற்றிய ஆவணங்களை கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பொறுத்தே கனிமொழி எம்.பி., சரத்குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

தமிழக எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் கோடீசுவரர்கள்.

தமிழக எம்.எல்.ஏ.க்களில்  பாதி பேர் கோடீசுவரர்கள்

தமிழக சட்டசபைக்கு தேர்வான 234 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு விபரங்கள், அவர்களது வேட்புமனுக்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டன. 234 எம்.எல்.ஏ.க்களில் 120 பேர் கோடீசுவரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சதவீத கணக்கில் பார்த்தால் மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் 52 சதவீதம் பேர் கோடீசுவரர்கள். அதாவது தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் கோடீசுவரர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபைக்கு தேர்வான 234 எம்.எல்.ஏ.க்களில் 57 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கோடீசுவரர்களாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் 5 பேரில் 3 பேர் முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் கோடீசுவரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 23 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தி.மு.க. , 146 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள அ.தி.மு.க.வில் 55 சதவீதம் பேர் கோடீசுவரர்கள்.