Monday, May 16, 2011

"இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஒத்திகை'.


மற்றுமொரு அபோடாபாத் சம்பவத்தைப் நிகழ்த்திப் பார்க்க இந்தியா முயற்சிக்குமானால், பாகிஸ்தான் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும். அதற்காக இந்தியாவில் சில இடங்களை குறித்து வைத்துள்ளோம். மேலும் அதற்கான ஒத்திகையையும் நடத்திப் பார்த்துள்ளோம் என்று அந்நாட்டின் ஐஎஸ்ஐ உயரதிகாரி அஹமத்சுஜா பாஷா எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானின் செனட், தேசிய சபை கூட்டுக் குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாஷா இவ்வாறு இந்தியாவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அபோடாபாத் நகரில் பின்லேடன் வசித்து வந்தது, அவரை அமெரிக்க படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றது என எதையுமே முன்கூட்டி கண்டுபிடிக்க தவறியதற்காக ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு உள்ளானவர் தான் பாஷா.

பின்லேடன் ஆதரவாளர்கள் எந்நேரத்திலும் தாக்கலாம் ? அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு.


சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொன்றுவிட்டதால் அவரது ஆதரவாளர்கள் கோபம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது.

பின்லேடன் வசித்து வந்த வீட்டில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. பின்லேடனின் எதிர்காலத் திட்டம் குறித்த ஆவணங்களையும் அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் கைப்பற்றினர். அதன் மூலம் இரட்டை கோபுரத் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான்று (செப்டம்பர் 11) அமெரிக்கா மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த அல்-காய்தா திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

அப்படி நடத்தவிருக்கும் தாக்குதல் அமெரிக்காவையே நிலைகுலைய வைப்பதாக இருக்கும் வகையில் பின்லேடன் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. பின்லேடன் இறந்தாலும் அவரது ஆசையை, திட்டத்தை அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

நாட்டின் மத்தியில் அமைந்துள்ள சிகாகோ நகரைத் தாக்குவதே அல்-காய்தாவின் நீண்டகாலத் திட்டமாக இருந்து வருகிறது. நகரில் உயரமான கட்டடங்கள் அமைந்துள்ளதால் தாக்குவதற்கு எளிது என்பதால் அவர்கள் இந்நகரை தேர்ந்து எடுத்து பலமுறை தாக்கமுயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது.

இருப்பினும் சிகாகோவை தாக்க மீண்டும் முயற்சிக்கலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அந்நகரின் மூலை முடுக்கெல்லாம் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.

அல்-காய்தாவினரிடம் இருந்து சிகாகோ நகருக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதற்கு எவ்வித உறுதியான ஆதாரமும் இல்லை. இருப்பினும் நகரை யார் தாக்க நினைத்தாலும் அவர்களுக்கு தக்கப் பதிலடி கொடுக்கப்படும். உள்ளூர் போலீஸôரும், எப்பிஐ அதிகாரிகளும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றனர்.

இதனால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியமில்லை என்று சிகாகோ எப்பிஐ பிரிவின் செய்தித்தொடர்பாளர் ரோஸ் ரைஸ் தெரிவித்தார்.

பின்லேடன் பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்துள்ளார். நாங்கள் அவரை வலைவீசித் தேடியபோதெல்லாம் பாகிஸ்தான் வாயைத் திறக்கவில்லை. பின்லேடனுக்கு பாகிஸ்தான் உதவியதை அந்நாட்டு புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

""அல்-காய்தாவிடம் இருந்து அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்கா உஷாராகவே உள்ளது.

நாட்டின் அனைத்துப் பகுதியுமே தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரிவுகளுடன் உளவு அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறது. ஒருவேளை பயங்கரவாதிகள் தாக்க முயற்சித்தால் அவர்கள் தப்ப முடியாது'' என்று உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் மாத்சாண்ட்லர் தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தை மாற்றக் கூடாது : ராமதாஸ்.




தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மாற்றக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராணுவத்துக்குச் சொந்தமான சென்னை ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகத்தை நடத்துவதற்கு இடம் போதாது என்பதால்தான் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்ற யோசனை எழுந்தது.

திமுக ஆட்சியில், தமிழக மக்களின் வரிப்பணம் ரூ. 1200 கோடி ரூபாயை செலவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் வடிவமைப்பு சரியில்லை என்று கூறி தற்போது மீண்டும் கோட்டைக்கே மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

தமிழகத்தில் உடனடியாக கவனம் செலுத்தி தீர்க்க வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக உள்ளன என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அத்தகைய பிரச்னைகளைத் தீர்க்கவும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி புதிய ஆட்சிப் பயணத்தை ஆக்கப்பூர்வமான வகையில் தொடங்க வேண்டும்.

அதற்கு மாறாக தலைமைச் செயலகத்தை மாற்றுவது, சட்டப்பேரவைச் செயலகத்தை மாற்றுவது போன்றவை மக்களின் மனதில் எதிர்மறையாக எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே, புதிய தலைமைச் செயலகத்தை மாற்றும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் : பசில் ராஜபட்சே.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான மேற்கத்திய நாடுகளின் நெருக்கடிக்கு பணிய மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபட்சே கூறியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

"இலங்கையின் உறுதி நிலையை சீர்குலைக்க மேற்கத்திய நாடுகள் சதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே, நார்வே நீதிமன்றத்தில் அதிபர் ராஜபட்சே, பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபட்சே ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகளின் எத்தகைய நெருக்கடிக்கும் அதிபர் ராஜபட்சே பணிய மாட்டார்." என்று அவரது சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபட்சே கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜெ.வுக்கு சோனியா அழைப்பு எதிரொலி-அமைச்சரவையிலிருந்து விலகுகிறது திமுக.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்தால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள திமுக, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பச்சோந்தித்தனம் உலகம் அறிந்த ஒன்றுதான்.
இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியையு்ம், திமுக பெரும் தோல்வியையும் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்டியே அந்தர்பல்டி அடித்தது காங்கிரஸ்.

திமுகவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை வசதியாக மறந்து விட்ட அந்தக் கட்சி, அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ, ஜெயலலிதாவுடன் 2 முறை போனில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார்.

இதுகுறித்து ஜெயந்தி நடராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இன்னும் திமுக எங்களது கூட்டணிக் கட்சிதான். ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்ததும், வாழ்த்து கூறியதும் ஜனநாயக நடைமுறைதான் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் இந்த செயலால் திமுக கடும் அதிருப்தி அடைந்துள்ளது. மேலும், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக அமைச்சர்களும் இனிமேல் டெல்லிக்கு சென்று என்ன பயன் என்று கூறி வருவதாக தெரிகிறது.

இதையடுத்து மத்திய அமைச்சரவையிலிருந்து மட்டும் வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை எடுப்பது குறித்து திமுக சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், கூட்டணியை விட்டு வெளியேறாது திமுக என்று தெரிகிறது. குறிப்பாக கனிமொழி விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை காங்கிரஸுடனான கூட்டணியை திமுக தானாக முறிக்காது என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் முடிவால் சோர்ந்து போய் வீட்டோடு முடங்கியுள்ள கருணாநிதியை, திமுக முன்னணித் தலைவர்கள் கடந்த 2 நாட்களாக சந்தித்துப் பேசி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் போக்கு குறித்து அவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

வேண்டும் என்றே திமுகவை சீண்டுவது போல காங்கிரஸ் நடப்பதாக மூத்த தலைவர்கள் கருணாநிதியிடம் கூறியதாக தெரிகிறது.

இருப்பினும் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இல்லாத நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் கருணாநிதி வீடு வரை வந்து விட்ட நிலையில் அவசரப்பட்டு முடிவெடுக்க திமுக தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவையிலிருந்து மட்டும் விலகிக் கொண்டு, வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவிக்கலாமா என்பது குறித்து திமுக தரப்பு யோசித்து வருவதாக தெரிகிறது.

தற்போது மத்திய அமைச்சரவையில் அழகிரி உள்பட 6 அமைச்சர்கள் திமுகவுக்கு உள்ளனர்.

மேலும் 2014ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கருணாநிதி, கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை வாழ்த்துவது என்பது வேறு, சோனியா காந்தி வாழ்த்து கூறுவது என்பது வேறு. சோனியாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்போதும் நல்லுறவு இருந்ததில்லை. மேலும் திமுகவின் பரம விரோதி அதிமுக என்பது சோனியா காந்திக்குகத் தெரியாததல்ல. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் அதிமுக தலைவரை அவர் வாழ்த்துவது என்பது சீரியஸான ஒரு விஷயம்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டதாகவே தலைவர் கருதுகிறார். அவரது கருத்தே எங்களது கருத்தும். 2014 லோக்சபா தேர்தலை இணைந்து சந்திக்க காங்கிரஸும், அதிமுகவும் முடிவு செய்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம் என்றனர்.

சென்னை போலீஸ் கமிஷ்னராக திரிபாதி நியமனம்.


சென்னை போலீஸ் கமிஷ்னராக ஜே.கே.திரிபாதியை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இதுவரை இந்தப் பதவியில் இருந்த ராஜேந்திரன் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

அவர் பதவியேற்றவுடன் செய்யப்பட்டுள்ள முதல் அதிகாரிகள் மாற்றம் இதுவாகும்.

இவரைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் உள்பட மாநிலத்தில் பெரும்பாலான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிகிறது.

தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் படத்துக்கு பாலாபிஷேகம்.

மதுரையில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார்    படத்துக்கு பாலாபிஷேகம்;    அமைதியாக தேர்தல் நடத்தியதற்கு பாராட்டு

மதுரையில் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் படத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் ஜெயலலிதாவின் வெளிப்படையான பாராட்டுதலைத் தொடர்ந்து, ஒரு அரசு அதிகாரிக்கு இப்படி ஒரு விசுவாசம் காட்டப்பட்டிருக்கிறது.

பண பரிவர்த்தனை குறைதீர் விழிப்புணர்வு குழுமம் என்னும் பெயரில் அரசு அதிகாரி பிரவீன்குமாருக்கு நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டது.

அதில் விசுவாசமிக்க இளைஞர்கள் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.