Sunday, May 15, 2011

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் வாஷிங் மிஷன் - லேப்டாப் கிடைக்கும் ; புதுவை மக்கள் உற்சாகம்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் வாஷிங் மிஷன்-லேப்டாப் கிடைக்கும்; புதுவை மக்கள் உற்சாகம்

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த அமோக வெற்றிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் என்.ஆர்.காங்கிரசின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சி தங்களுடைய தேர்தல் அறிக்கையை என்.ஆர்.காங்கிரஸ் காப்பி அடித்துள்ளதாக கூறியது.

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேசன் கார்டு களுக்கும் வாஷிங்மிஷன், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிக்க செல்லும் மாணவர்களுக்கு லேப்டாப், அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 15 கிலோ இலவச அரிசி, அரசு பணியில் ஒருவர் கூட இல்லாத குடும்பத்திற்கு அரசு பணியில் முன்னுரிமை ஆகியவை வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது.

இத்துடன் முதியோர்களுக்கு ரூ.2000 பென்சன், பெண் மாற்று திறனாளிகளுக்கு மாத உதவி ரூ.3000 வரை உயர்வு, தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு, தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

ரங்கசாமி சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை புதுவை மக்களிடம் உண்டு. இதனால் புதுவை மக்கள் வாஷிங்மிஷன், மாணவர்கள் லேப் டாப்பும் கிடைக்கும் என்று உற்சாகமாக உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கலர் டி.வி. என அறிவித்தது.

ஆனால் ஆட்சியின் இறுதி காலம்வரை காங்கிரசால் கொடுக்க முடியவில்லை. இதேபோல் இல்லாமல் ரங்கசாமி தேர்தல் அறிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற உறுதியில் உள்ளனர்.

ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம் : ரங்கசாமி பேட்டி

ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம்:    ரங்கசாமி பேட்டி

புதுவை மாநில சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை பிடித்தது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் என்.ஆர்.காங்கிரசின் பலம் 14 ஆக உள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் அளித்துள்ளார்.

இந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை எம்.எல்.வி.ன் ஆதரவு கிடைத்து இருப்பதால் ரங்கசாமி கட்சியான என்.ஆர்.காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதனால் தனது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்களிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து திரும்பிய ரங்கசாமியிடம் நிருபர்கள் எப்போது ஆட்சி அமைக்க போகிறீர்கள்? முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள்? உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா? ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கும்போது, நேரடியாக ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று தெரிவிக்க வில்லை. அதற்கு பதிலாக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் நல் ஆசியுடனும், ஆதரவுடனும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்தபின் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு.


ஜெயலலிதா - முதல் அமைச்சர்

ஓ.பி.பன்னீர்செல்வம் - நிதி அமைச்சர்

கே.ஏ.செங்கோட்டையன் - வேளாண்மைத்துறை

நத்தம் ஆர்.விஸ்வநாதன் - மின்துறை, மதுவிலக்கு கலால்

கே.பி. முனுசாமி - உள்ளாச்சித்துறை ஊராக வளர்ச்சி

சி.சண்முக வேலு - தொழில்துறை

ஆர.வைத்திலிங்கம் - வீட்டு வசதி

அக்ரி கிருஷ்ணமூர்த்தி - உணவுத்துறை

சி.கருப்பசாமி - கால்நடைத்துறை

பி.பழனியப்பன் - உயர்கல்வித்துறை

சி.வி.சண்முகம் - பள்ளி கல்வித்துறை

செல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறை

கே.டி.பச்சமால் - வனத்துறை

எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை சிறு துறைமுகங்கள்

எஸ்.வி.சண்முகநாதன் - அறநிலையத்துறை

கே..வி. ராமலிங்கம் - பொதுப்பணித்துறை

எஸ்.வி. வேலுமணி - சிறப்புத்திட்ட அமலாக்கம்

டி.கே.எம்.சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

எம்.சி.சம்பத் - ஊரகத்தொழில்துறை

பி.தங்கமணி - வருவாய்துறை

ஜி.செந்தமிழன் - செய்தித்துறை

கோகுலஇந்திரா - வணிகவரித்துறை

ராமஜெயம் - சமூக நலத்துறை

பி.வி.ரமணா - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை

ஆர்.வி.உதயகுமார் - தகவல் தொழில்நுட்பம்

என்.சுப்பிரமணியன் - ஆதிதிராவிட நலத்துறை

வி.செந்தில் பாலாஜி - போக்குவரத்துத்துறை

என்.மரியம் பிச்சை - சுற்றுச்சூழல்துறை

கே.ஏ.ஜெயபால் - மீன்வளத்துறை

இ.சுப்பையா - சட்டத்துறை

புத்தி சந்திரன் - சுற்றுலாத்துறை

எஸ்.டி.செல்லப்பாண்டியன் - தொழிலாளர் நலத்துறை

டாக்டர் வி.எஸ்.விஜய் - மக்கள் நல்வாழ்வுத்துறை

என்.ஆர். சிவபதி - விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை

கிரிமினல் வழக்கில் சிக்கியவர்களை அமைச்சராக்கக் கூடாது : அச்சுதானந்தன் எச்சரிக்கை.


கிரிமினல், ஊழல் மற்றும் விபச்சார வழக்குகளில் தொடர்புடையவர்களை அமைச்சராக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என காங்கிரசை அச்சுதானந்தன் எச்சரித்துள்ளார்.

கேரளாவில் 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அச்சுதானந்தன் முதல்வர் பதவியை நேற்று ராஜினமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரை பதவியில் தொடரும்படி ஆளுநர் அவரிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அச்சுதானந்தன் கூறியதாவது,

மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏற்கிறோம். நாங்கள் நினைத்தால் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட விரும்பவில்லை.

வலிமையான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் பணியாற்றுவோம். கிரிமினல், ஊழல் மற்றும் விபச்சார வழக்குகளில் தொடர்புடையவர்களை அமைச்சராக்க காங்கிரஸ் முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கட்சி கேட்டு கொண்டால் எதிர்கட்சி தலைவராவேன். பொலிட் பீரோவுக்கு திரும்புவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

பாதுகாப்பு வளையத்திற்குள் போயஸ் கார்டன் : வாகனங்கள் சோதனைக்குப் பின் அனுமதி.


அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்பதை அடுத்து அவரது வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை முதல்வராக பொறுப்பேற்கிறார்.

அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் புதிய முதல்வர் ஜெயலலிதாவின் வீடு இருக்கும் போயஸ் கார்டன் போலீஸ் பாதுகாப்பு வளயைத்திற்குள் வந்துள்ளது.

கதீட்ரல் சாலையில் இருந்து போயஸ் கார்டனுக்கு செல்லும், பின்னி சாலைக்கு திரும்பும் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைத்தும் வாகன்ஙகளும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப் படுகிறது.

இது தவிர பின்னி சாலையில், ஒவ்வொரு சாலை சந்திப்பு பகுதியிலும் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையில் ஆங்காங்கே இரும்பு தடுப்புகளும், சிகப்பு குமிழ்களும் வைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் உயர் அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவ்வப்போது வந்து போயஸ் கார்டனை கண்காணிக்கின்றனர். நேற்று பின்னி சாலையில் வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணங்கள் பூசப்படும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

வெற்றி மிதப்பில் அதீத ஆட்டம்.

மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றுள்ளதைத் தொடர்ந்து தொண்டர்கள் குறிப்பாக புது மாப்பிள்ளையாக மாறியுள்ள தேமுதிகவினர் ஆங்காங்கு வெற்றிக் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர். இதனால் மக்கள் முகம் சுளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்காக போக்குவரத்தை நிறுத்தி வைத்து மக்களிடையே கெட்ட பெயரை ஏற்படுத்தும் நிலையும் உருவாகியுள்ளது. கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு இவற்றுக்கு ஆரம்பத்திலேயே ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைக்க முயல்வது நல்லது.

சாதாரண வெற்றி பெற்றாலே கட்சிக்கார்களைப் பிடிக்க முடியாது. தற்போது அதிமுக பெற்றுள்ள வெற்றி, குறிப்பாக தேமுதிகவுக்கு கிடைத்துள்ள வெற்றி மிகப் பெரியது என்பதில் சந்தேகமில்லை. எனவே தேமுதிகவினர் உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.

தேர்தல் முடிவு வெளியான நாளன்று வாகனங்களை படு வேகமாக ஓட்டிக் கொண்டு அவர்கள் போன விதமும், பட்டாசுகளை ஆங்காங்கு வெடித்த விதமும் மக்கள் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் முகச் சுளிப்பையே ஏற்படுத்தியது.

கையில் அதிகாரம் வரப் போகிறது, அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்ற பயமும் கூடவே மக்களுக்கு வந்துள்ளது.

அதேபோல போலீஸாரும் தற்போது அதிமுகவின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

நேற்று ஜெயலலிதா தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள எம்.ஜிஆர் சிலை, பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்தையே நிறுத்தி விட்டனர் போலீஸார். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.

போக்குவரத்துப் போலீஸார் தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்ததாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒருபக்கம் வாகனங்களை சிக்கல் இல்லாமல் செல்ல வழி வகுத்து விட்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இப்படியா போக்குவரத்தை முடக்கி வைப்பது என்று அவர்கள் முனு முனுத்தனர். அதற்குள்ளேயே இப்படியா என்று அவர்கள் சலித்துக் கொண்டனர். கடந்த 1991 முதல் 96 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் தோல்வி அடைய இந்த போக்குவரத்துக் குளறுபடிகளும் ஒரு முக்கியக் காரணம்.

சென்னை நகரில் ஜெயலலிதா எங்கு சென்றாலும் உடனே அந்தப் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் போலீஸார், ஜெயலலிதா போன பின்னர்தான் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அதிமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

தற்போது மிகப் பெரிய வெற்றியுடன் கோட்டைக்குத் திரும்பியுள்ள அதிமுக இந்த விஷயத்தில் மிகக் கவனமுடன் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆட்சி மீதும், அதிமுக மீதும் அதிருப்தியும் வந்து விடும் என்பதை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.

நல்லாட்சியைத் தருவது மட்டும் ஒரு கட்சிக்கு முக்கியமானதல்ல. அவர்களையும் அறியாமல் கெட்ட பெயரை சம்பாதிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டியதும் அவசியமானது.

அதேபோல ஆட்சி நம் கையில் என்ற மமதை தொண்டர்களுக்கும் வந்து விடாமல் இருப்பதும் முக்கியம். அதிமுகவினர் மட்டுமல்ல, முதல் முறையாக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ள தேமுதிகவினரும் மிகுந்த கவனத்துடன், அடக்கத்துடன் இருந்து தாங்கள் இதுவரை பெற்றுள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்வதும், அதை பலமாக்கிக் கொள்வதும் அவசியம்.

அதை விட்டு விட்டு 'வடிவேலுவை அடிப்போம்' என்ற ரீதியில் கிளம்புவது அவர்களுக்கு சமூகத்தில் நிச்சயம் நல்ல பெயரைக் கொடுக்காது.

அப்படி இல்லாமல் அதிமுகவினரும், தேமுதிகவினரும் அடிதடியில் குதித்தால், இவங்களுக்கு திமுக பரவாயில்லையே என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும் வாய்ப்பு உள்ளது.

சோனியா விருந்துக்கு செல்வீர்களா? : ஜெயலலிதா பதில்.


நாளை முதல்வர் பதவி ஏற்பதை முன்னிட்டு இன்று கவர்னரை சந்தித்த பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கவர்னர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நீங்கள் ராஜ் பவனுக்கு வருகை தந்தது பற்றி...?

நான் பலமுறை ராஜ்பவனுக்கு வந்துள்ளேன். இப்போது வருவது புதிது அல்ல.

தமிழக மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

இனிவரும் காலங்களில் தமிழக மக்கள் எந்தவித அச்சப்பட தேவை இல்லை. மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழலாம்.

சோனியாகாந்தி தங்களை தேநீர் விருந்துக்கு அழைத்து இருக்கிறாரே செல்வீர்களா?

எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதற்காக சோனியாகாந்தி தொலை பேசி மூலம் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு உங்கள் பணிகளில் எதற்கு மிக முன்னுரிமைகள் வழங்குவீர்கள்?

முதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்.

எப்போது நீங்கள் டெல்லி செல்வீர்கள்?

முதலில் பதவி ஏற்பு நிகழ்ச்சி. அதன் பிறகு மற்றவற்றை பார்ப்போம்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து உங்கள் கருத்து என்ன?

இது மிகுந்த துரதிருஷ்டவசமான நடவடிக்கை. மக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்.

பதவி ஏற்பு விழாவிற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அழைப்பீர்களா?

நிச்சயமாக, அவர்களும் எங்களது கூட்டணியினர். அவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள். எல்லோருக்கும் நிச்சயமாக அழைப்பு விடுப்போம்.