Saturday, May 14, 2011

மின்கட்டணம் செலுத்துவதில் மாறுதல் தேவை!

எஸ். ரவீந்திரன்



மின் தட்டுப்பாடு ஒருபக்கம் இருக்க மின் கட்டணம் செலுத்துவதில் புதிய முறையை அமல்படுத்தியிருக்கும் வாரியத்தின் முடிவை என்னவென்று சொல்ல?

ஊரெல்லாம் இருட்டு. ஏதோ மீண்டும் கற்காலத்தில் வாழ்கிறோமா என்ற நிலையில் ஓடாத மின்சாரத்துக்கு ஏகப்பட்ட மின்கட்டணம் வசூலித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் மக்களின் கவலை.

அரசு இலவச மின்சாரம் அளிக்கிறது. நிலமில்லாமல் தவிக்கிறார் விவசாயி. இதுதான் யதார்த்த நிலை.

இந்நிலையில் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க என்ன செய்யலாம் என்பதை விட்டுவிட்டு எப்படி மக்களை ஏமாளியாக்கலாம் என்ற வித்தையைக் கற்றுள்ளது மின்வாரியம்.

வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை இருந்து வந்தது. அதன்படி 15-ம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இந்நிலையில் மின்கட்டணத்தை இனி மாதாமாதம் செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மின்கட்டணம் கணக்கீடு செய்ததில் இருந்து 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்பதுதான் புதிய நடைமுறை. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.

பயன்படுத்திய மின்சாரத்துக்குக் கட்டணம் செலுத்தவேண்டும். இது நியாயம்தான். ஆனால், புதிய முறையால் யாருக்கு லாபம் என்பதை மின்வாரியம் நன்கு உணர்ந்திருக்கிறது. அதேவேளையில் பயனீட்டாளர்களுக்குப் பல வழிகளில் இது உபத்திரவத்தைத்தான் ஏற்படுத்தும்.

புதிய அறிவிப்பின்படி மின்அளவீடு செய்த நாளிலிருந்து 20 தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேநேரத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஏனோ மின்வாரியம் கண்டுகொள்ளவில்லை.

பெரும்பாலும் அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மாதத்தின் முதல்வாரத்தில் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருக்காது. ஆனால், தனியார் நிறுவன ஊழியர்கள் பிற வகையினர் 7-ம் தேதிக்குள் மின் கட்டணம் செலுத்துவார்களா என்பது அந்த மின்வாரியத்தில் இருக்கும் புண்ணியவான்களுக்குத்தான் தெரியும். இதுபோக மின் கணக்கீடு செய்பவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே அது கொஞ்சநஞ்சமல்ல.

ஒப்பந்த அடிப்படையில் கணக்கீட்டுப் பணி மேற்கொள்பவர்கள், மின்வாரியத்துக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தபட்டவர்கள் அல்ல. அவர்களில் பலர் நிர்ணயிப்பதுதான் கட்டணம். ஏன், எதற்கென கேட்கக் கூடாது. இந்த லட்சணத்தில் மின்வாரியத்தின் ஓசைப்படாத அத்துமீறலை யாரும் கவனிக்கவில்லை.

அதாவது, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாதபோது அட்டை இருக்காது. இதனால் அவர்களுக்குச் சராசரி கட்டணம் கணக்கிடப்படும்.

உதாரணமாக, இரு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது ரூ.40 முதல் ரூ.100 வரை செலுத்துபவர்கள் பலர் உண்டு. இனி அவர்கள் மாதாமாதம் இதே தொகையைத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிபார்த்தால் இரு மாதங்களுக்கு ரூ.40 என்பது இனி ரூ. 80-ஆக இருக்கும்.

இதுதவிர, தப்பித்தவறிக் கட்டணம் செலுத்த மறந்தானைல் அபராதக் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை. இது நடைமுறைக்கு வர இன்னும் சில காலங்கள் பிடிக்கும்.

மேலும், மின்வாரியம் அஞ்சலகங்களில் மின்கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. இதற்குத் தனியாகச் சேவைக் கட்டணம் வேறு கொடுக்க வேண்டுமாம். இதற்குப் பதிலாக நடமாடும் மின்வசூலிப்பு மையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரலாமே.

இதுபோன்று சட்டங்களை அமல்படுத்தும் மின்வாரியம் பிற சங்கடங்களை மனதில் கொள்வதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட, பல மடங்கு கட்டணத்தை வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது அதே தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும்.

இன்னும் இலவச மின்சாரம் என்ற பெயரில் பலர் மின்சாரத்தை விரயமாக்குகின்றனர். எனவே இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, இலவச மின்சாரத் திட்டத்தில் சில மாறுதல்களைக் கொண்டுவர வேண்டும். பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்து அதற்கு மானியம் வழங்கலாம்.

பெரும்பாலானோர் இலவச மின்சாரத்தைப் பயன்படுத்திப் பிறருக்குத் தண்ணீர் பாய்ச்சுவதும், அதற்காகக் கட்டணம் பெறுவதும் நடந்து வருகிறது. இதை மின்வாரியம் கண்காணித்தல் அவசியம்.

இப்படிப் பல்வேறு மாறுதல்களைக் கொண்டு வந்தால் மின் தட்டுப்பாடு குளறுபடிகளைத் தீர்க்க முடியும்.

கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது ; கி.வீரமணி.


அரசியல் மட்டுமே தி.மு.க.வின் களமல்ல என்று சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள், அதிர்ச்சி தரத்தக்கவை வெற்றி பெற்ற அணிக்கும், தோல்வியுற்ற அணியினரான அனைவருக்கும். வெற்றி பெற்ற அ.தி.மு.க. அணியினர்கூட இவ்வளவு சாதகமான அலை போன்ற முடிவைப் பெறுவோம் என்று எண்ணவில்லை. அங்கே இடம் பெற்ற கூட்டணிக் கட்சியினர் பலரும் இதை நேற்று குறிப்பிட்டுள்ளார்கள்!

இந்தத் தோல்வி, தி.மு.க. அரசு சொன்னதையெல்லாம் செய்த அரசு, மேலும் சொல்லாததையும் கூடுதலாகச் செய்த அரசு என்பதால் அதற்குக் கிடைத்த வாக்காளர் பரிசா என்றால், “ஆம்” என்று ஒப்புக் கொள்ளுவதில் உண்மை பேசுவோர் எவரும் வெட்கப்படத் தேவையில்லை.

ஜனநாயகம் என்ற மக்களாட்சியின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று! இவ்வளவு சாதனைகளுக்குப் பிறகுமா இப்படி ஒரு தேர்தல் முடிவு என்று கேட்கின்றனர் பல நண்பர்கள்.

பெரியார் ‘குடிஅரசில்’ எழுதிய வைர வரிகளை நினைவூட்டிக் கொண்டாலே அதற்குத் தக்க பதில் கிடைக்கும்.

“நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய பண்பாகும்; உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால் அது சிறுமைக் குணமேயாகும்”

இவ்வரிகள் மக்களின் இயல்புகளைக் காட்டும் கண்ணாடிகள் அல்லவா?

"இவ்வளவு பெரிய தோல்வி கண்டும் சிறிதும் கலங்காமல், மனந் தளராமல், “மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்துள்ளனர்; அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என்று சிரித்துக் கொண்டே கருணாநிதி சொன்னார் நேற்று! எந்த நிலையிலும் எதிர்நீச்சல் போடத் தயங்காத ஈரோட்டுக் குரு குல வாசத்தின் பண்பையும், பழக்கத்தையும், எதையும் தாங்கும் அண்ணாவின் இதயமும் கொண்டவர் என்பதை இதன் மூலம் காட்டியுள்ளார்!

1967 இல் காமராசர்கூட தோற்ற நிலையில், “சாதனைகளை அதிகமாகச் செய்தோம் என்றாலும் நம்மைத் தோற்கடித்தார்கள் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்” என்றார்!

ஏன் இப்படிப்பட்ட தோல்வி தி.மு.க. கூட்டணிக்கு என்று அலசி ஆராய்வதற்கு போதிய அவகாசம் உள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்கள் என்றுமே கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல கூட்டணி ஆட்சியையோ, தொங்கு சட்டசபையையோ விரும்பியதில்லை என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.வுக்கு அதன் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு தனித்த மெஜாரிட்டியைத் தந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது!

புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளையெல்லாம் செய்து முடிப்பதாகக் கூறியுள்ளார். அதனை எதிர்பார்க்க, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதோடு அதை வற்புறுத்தும் உரிமையும் உண்டு எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக தி.மு.க.வுக்கு; கடுகு சிறுத்தாலும் காரம் போகாதல்லவா?

நல்ல சாதனைக்கு பிறகும் தோல்விகளை சந்திப்பது திராவிடர் இயக்கமான நீதிக்கட்சி காலம் முதல் ஜனநாயகத்தில் இது முதல் தடவை அல்ல. புதிதும் அல்ல.

திராவிடர் இனத்தின் தலைவர் கருணாநிதியின் மவுனம் எளிதில் கலையக் கூடாது ; தொடர வேண்டும் என்பதே நமது விழைவு.

தி.மு.க.விற்குப் பல களங்கள் உண்டே!

கருணாநிதிக்கு, “ஓய்வு” என்பது சட்டசபை ஆட்சி அரசியல் களத்திலிருந்துதான் ஓய்வே தவிர, அவரது தொண்டறத் தொடர் பணிகளுக்கு அல்ல; இனமானப் போர்க்களம், சுயமரியாதைப் பிரச்சாரக் களம், சமூக நீதிக் களம், பகுத்தறிவு, எழுத்துப் பேச்சு, ஊடகம், களம் போன்றவை காத்துக் கொண்டிருக்கின்றன. வரலாற்றின் பல பகுதிகள் அவரால் எழுதப்படுவதற்காக!

திராவிடர் தமிழர் இனமானப் பிரச்சினைகள் என்ற பணிகள், ஈழத் தமிழர் வாழ்வுரிமை விடியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உட்பட பகுத்தறிவுப் பிரச்சாரம் வரை எத்தனையோ களங்கள் காத்திருக்கின்றன தி.மு.க.விற்கு அரசியல் களத்திற்கும் அப்பால்! இவற்றில் சாதிக்கப்பட வேண்டியவை நிரம்பவே உண்டு. அரசியலோடு வலிமையாக அந்தப் பணிகளும் தொடரப்பட வேண்டும்.

வெறும் பதவி அரசியலுக்காகத் துவங்கப்பட்டதல்ல தி.மு.க. என்பது நிரூபிக்கப்பட வேண்டும். மக்கள் வழங்கியுள்ள வாய்ப்பாக இதனைக் கருதி தி.மு.க.வின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சமுதாயப் புரட்சி இலட்சியங்களை செயல்படுத்த ஆட்சியைக் கருவியாக்கிடத்தான் அரசியல் கட்சியானோம் என்பதுதானே அண்ணா தந்த விளக்கம்? அரசியல் நாகரீகப்படி நமது வாழ்த்துக்கள்.

இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி : ராகுல் பிரசாரம் எடுபடவில்லை.

இளைஞர் காங்கிரசார் 10 பேரும் தோல்வி: ராகுல் பிரசாரம் எடுபடவில்லை

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. 63 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 5 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மயிலாப்பூர் தொகுதியில் 29 ஆயிரத்து 204 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜலட்சுமியிடம் படுதோல்வியை தழுவினார்.

அவரை போலவே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா, ஆகியோரும் தோல்வி அடைந்தனர். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ஜெயக்குமார், தொழில் அதிபர் வசந்தகுமார், செல்வப்பெருந்தகை, ஆகியோரும் தோல்வியை தழுவி உள்ளனர்.

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ஞானசேகரன், அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோருக்கும் தோல்வி கிடைத்துள்ளது. இந்த தடவை இதற்கு முன்பு எப்போதும் இல்லாதபடி இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா (ஈரோடு மேற்கு), அறிவழகன் (அண்ணா நகர்), விஜய் இளஞ்செழியன் (ஆம்பூர்), அர்த்தநாரி (ஆத்தூர்), ஜோதிமணி (கரூர்), மகேந்திரன் (பேராவூரணி), வரதராஜன் (மதுரை தெற்கு), மயூரா ஜெயக்குமார் (சிங்காநல்லூர்), பெருமாள்சாமி (விளாத்திக்குளம்), நவீன் ஆம்ஸ்ட்ராங் (விருதுநகர்) ஆகிய 10 பேர் களத்தில் இறக்கப்பட்டனர்.

இவர்கள் 10 பேரும் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய வந்த ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டும் சென்று பிரசாரம் செய்தார். அவரது பிரசாரம் எடுபடாமல் போய்விட்டது.

நான் எப்போதும் மன அமைதியாக உள்ளேன் : கனிமொழி.

நான் எப்போதும் மன அமைதியாக  உள்ளேன் : கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கனி மொழியை கூட்டு சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் 6-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அதில் கனிமொழி ஜாமீன் மனு தீர்ப்பு 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தது .

இந்நிலையில் நேற்றிரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கனிமொழியிடம் நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இன்று காலை 10 மணிக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜர் ஆனார். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற பரபரப்பான எதிர் பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இருந்து வெளியில் வந்தார் அவருடன் அவரது கணவர் அரவிந்தன் மற்றும் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வந்திருந்தார்.

அப்பொழுது கனிமொழியிடம் நிருபர்கள் ஜாமீன் மனு மீது 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர்

அதற்க்கு கனிமொழி -நான் எப்போதும் மன அமைதியாக( ரிலாக்சாக) உள்ளேன் , ஜாமீன் மனுமீதான தீர்ப்பு எவ்வாறு வரும்என்பதை மே 20ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

மேலும் கோர்ட் வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். அப்பொழுது ராசாவுடன் அவரது மனைவி மற்றும் மகள் உடன் இருந்தனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு - ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் இன்று இரவு முதல் உயருகிறது. நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.

கடந்த 8 மாதங்களில் 9வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.61.48க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.67.48 என அறியப்படுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன

ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?

மாநில அரசின் வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல், விலையேற்றத்தை தடுத்து அதன் மூலம் விலைவாசியை கட்டுக்கு கொண்டுவருவாரா? இல்லை ஆட்சிக்கு வந்த வேலையைப் பார்ப்பாரா?

காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி - சீமான் அறிக்கை .


ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை, தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது தமிழ் இனத்திற்குக் கிட்டிய வெற்றி. காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி என்று நாம் தமிழர் இயக்க அமைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் அமைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக - காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.

பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத வகையில் ஊழல்,வன்முறை,குடும்ப ஆதிக்கம், அராஜகம், மணற் கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம், நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம் ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி. அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கி இருக்கிறார்கள் தமிழர்கள்.

மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்திற்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி.

மக்கள் எதிர்ப்பையும்,அரசியல் கட்சித்தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்கிற்குக் கொண்டு வராமல் செய்தார்.

இதன் பின்னும், ஓயாத திமுக காங்கிரசு அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப்படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.

இந்த மக்கள் விரோத, இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது.

ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.க.காங்கிரசுக் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்துள்ளனர்.

ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது.

காங்கிரஸ் கட்சி தான் நமக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரசுக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்படவேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம்.

அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம். இனத்திற்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

தி.மு.கவிடம் மிரட்டிப்பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்லமுடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள். தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர்.

ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை,இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி.

இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊழல் பணத்தை கொண்டு இனி எவரும் வெல்ல முடியாது - வைகோ.


தமிழக மக்கள் பணநாயகத்திற்கு விடைகொடுத்து ஜனநாயகத்தை வெற்றி அடையச் செய்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம்,

பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்,

இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது.

எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது என்று கூறியுள்ளார்.