Wednesday, May 11, 2011

திருப்பதி கோவில் டி.வி. தமிழில் ஒளிபரப்பு.

திருப்பதி கோவில் டி.வி.  தமிழில் ஒளிபரப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீவெங்கடேஷ்வரா பக்தி சேனல் என்ற பெயரில் டெலிவிஷன் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தெலுங்கு மொழியில் பாட்டுக் கச்சேரி மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் 35 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்கள் என்பதால் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிகழ்ச்சியை தமிழிலும் ஒளிபரப்ப தேவஸ்தானம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதி முதல் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி கோவில் பற்றி தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காகவும், இந்து தர்மம் பற்றி தங்கள் மொழில் தெரிந்து கொள்வதற்கு வசதியாகவும் நிகழ்ச்சிகளை தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாங்கேக்கு சிட்னி அமைதி விருது.

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாங்கேக்கு சிட்னி அமைதி விருது

மனித உரிமைகள் பாதுகாப்பு, உலக அமைதியை பல்வேறு வழிகளில் செயல்படுத்துதல் என அசாங்கே பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது மன உறுதியை கௌரவிக்கும் வகையில் இந்த அமைதி விருதினை சிட்னி அமைதி அறக்கட்டளை அளித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் தகவல்களையும், அமெரிக்க ராணுவத் தலைமையகம் தகவல்களையும் வெளியிட்டு உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாங்கே அவரது சேவையை பாராட்டி சிட்னி அமைதி விருதுக்கான தங்கப்பதக்கதுடன் கூடிய விருது அளிக்கப்பட்டுள்ளது.கடந்த 14 ஆண்டுகளில் சிட்னி அமைதி அறக்கட்டளை மூன்று முறை மட்டுமே இந்த விருதினை அளித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா, திபெத் தலைவர் தலாய் லாமா, ஜப்பானிய புத்த தலைவர் டாய்சகு இகேடா ஆகியோரைத் தொடர்ந்து இந்த விருது அசாங்கேவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அரசுகளின் கடந்த கால ரகசிய நடைமுறைகளை உடைத்து எறியும் வகையில் அசாங்கே துணிச்சலாக தகவல்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என சிட்னி அமைதி அறக்கட்டளை பாராட்டி உள்ளது.

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் : தமிழக மாணவி முதலிடம்.



ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது .

இதில் முதல் 10 இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

முதல் இடத்தில் திவ்ய தர்ஷினி,

3ம் இடத்தில் வருண்குமார்,

4ம் இடத்தில் அபிராம் சங்கரன்,

8ம் இடத்தில் அரவிந்த்

ஆகியோர் இடம் பிடித்தனர். நேர்முகத் தேர்வுக்கு 2400 பேர் கலந்து கொண்டனர் அதில் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.

2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் ஒரு பல் மருத்துவர் ஆவார். சென்னை உத்தண்டியில் உள்ள ராகாஸ் பல் மருத்துவ கல்லூரியில் பயின்றவர்

அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சி யிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலி யைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார்.

இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை.

கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஊழலுக்கு எதிராக போராடுவேன் ; ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி.

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியியாகியது. அதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைச்சேர்ந்த திவ்யதர்ஷினி முதலிடத்தை பிடித்தார்.

இதுவரை தமிழகத்தைச்சேர்ந்த எவரும் முதலிடத்தை பிடிக்கவில்லை. முதல் நபர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார் திவ்யதர்ஷினி.

திவ்யதர்ஷினி, டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானவர்.

அவரை தொடர்புகொண்டபோது, ‘’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பிரபாகரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.

என் பெற்றோர்கள் எனக்கு அதிக சுதந்திரமும் கொடுத்து, என் வெற்றிக்கு பெரிதும் ஆதரவாக இருந்தனர்.

நான் நிச்சயமாக ஐஏஎஸ் பணியின் மூலம் இந்த சமுதயாத்திற்கு சிறந்த சேவை ஆற்றுவேன். மேலும் ஊழலுக்கு எதிராக போராடுவேன்’’ என்று தெரிவித்தார்.

பாட்டியாலா கோர்ட்டில் ராசா - கனிமொழி சந்திப்பு?


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கடந்த 83 நாளாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்திருந்த கனிமொழியை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ராசா அமைதியாகவே காணப்பட்டார். அவர் மாலை 4.30 மணி வரை நீதிமன்றத்தில் இருந்தார். பின்னர் அவரை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த ஆண்டுகளில் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டிய ராசாவுக்கு இந்த பிறந்தநாளை சிறையிலும், நீதிமன்றத்திலும் கழிக்க வேண்டியதாயிற்று.

ஆ.ராசா 48-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் அவர் சிறையில் பிறந்தநாளை கொண்டாடவில்லை.


1,136 மதிப்பெண்கள் எடுத்தும் மேற்படிப்புக்கு வசதியில்லாத நிலையில் ஏழை மாணவி.


பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1,136 மதிப்பெண் பெற்றிருந்தபோதிலும் படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் மாணவி ரேமகாவதி.

மாணவி ரேமகாவதி

திருப்பூரைச் சேர்ந்தவர் மாணவி ரேமகாவதி. பிளஸ் டூ தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்தார். இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அவரது தந்தை அகால மரணமடைந்தார். பிளஸ் ஒன் படிக்கும் தம்பி, சொற்ப சம்பளத்தில் கூலி வேலை பார்க்கும் தாய் என வறுமை வாட்டியதால் பனியன் கம்பெனி வேலைக்கு செல்லத் துவங்கினார் ரேமகாவதி.

1,136 மதிப்பெண்கள்

இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் ரேமகாவதி 1,200க்கு 1,136 மதிப்பெண்கள் பெற்று தேர்வானது தெரிய வந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களெல்லாம் தத்தம் பெற்றோருடன் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மதிப்பெண்கள் குறித்த தகவலை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டு தன் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் ரேமகாவதி.

உதவி தேவை

நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில் உள்ள இந்த மாணவியை பத்திரிகையாளர் சந்தித்தனர். அவர்களிடம் ‘தந்தை இறந்த பின் எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில்தான் தற்போது வசித்து வருகிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற நான் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியலில் 199, வேதியியலில் 196, கம்ப்யூட்டர் சயின்ஸில் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள என் அருமை தந்தை எங்களோடு இல்லை, தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் என்ஜினியராக வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. தற்போதைய சூழலில் அது நிகழ வாய்ப்பில்லை. யாராவது உதவும் பட்சத்தில் நன்றாக படித்து சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவேன் என்றார் அவர்.

உதவ விரும்புவோர் கவனத்திற்கு

உதவும் எண்ணம் உள்ள இதயங்கள் 93442 - 00281 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

thatstamil.oneindia.in

புலிகள் சரணடைவதையும், செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிப்பதையும் இலங்கை விரும்பவில்லை : விக்கிலீக்ஸ் தகவல்.


இலங்கையில் நடந்த இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகள் சரணடைவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தலையீட்டின் கீழ் இந்த சரணடைதலை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சே ஏற்றுக்கொள்ளவில்லை என்று விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா அழுத்தம் கொடுத்தபோதும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேநேரம் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரை அனுமதிக்க அமைச்சர் பசில் ராஜபக்சே அனுமதி மறுத்ததாகவும் விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

நார்வேக்கான இலங்கை தூதர், இலங்கையில் உள்ள அமெரிக்காவின் இலங்கைக்கான தூதருக்கு தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில் விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் செல்வராஜா பத்மநாதன், தம்முடன் தொடர்புக் கொண்டு எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலைப்புலிகள் சரணடைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாக நார்வே தூதர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கைக்கான தலைமையாளர் போல் கெஸ்டேலா புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிடம் தகவல் அனுப்பினார். அதற்கு கோத்தபாயவும் இணக்கம் வெளியிட்டார்.

சரணடைவதற்கு முன்னர் குறித்த புலித்தலைவர்களின் பெயர்களை தருமாறு அவர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கேட்டிருந்தார். எனினும் குறித்த பெயர் பட்டியலை நார்வே தரப்புக்கு புலிகளின் தரப்பு வழங்கவில்லை.

இதேவேளை காயமடைந்த பொதுமக்களை காப்பாற்ற சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை போர் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதற்கு அமைச்சர் பசில் ராஜபக்சே மூன்று நாட்களாக அனுமதி வழங்கவில்லை என்று அமெரிக்க தகவல் பரிமாற்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் 4500 ராணுவ வீரர்கள் : ஓட்டு எண்ணிக்கை வீடியோவில் பதிவு ; தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி.

பாதுகாப்பு பணியில் 4500 ராணுவ வீரர்கள்:    ஓட்டு எண்ணிக்கை    வீடியோவில் பதிவு;    தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேட்டி

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக தேர்தல் பணி நடந்துள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளோம். 234 தொகுதிகளுக்கும் தனித்தனி அறையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் 91 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. ஒருசில அறைகளில் 4, 5 தொகுதி அறை அடிப்படையில் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. சென்னை லயோலா கல்லூரியில் 7 தொகுதிகளுக்கும், ராணிமேரி கல்லூரியில் 4 தொகுதிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணும் பணியில் 16,966 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு பணியில் 45 கம்பெனி துணை ராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது. ஒரு கம்பெனிக்கு 100 பேர் வீதம் 4,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே 27 கம்பெனி துணை ராணுவம் வந்து விட்டது. மேலும் 18 கம்பெனி துணை ராணுவம் வருகிறது. இன்று மதியம் முதல் துணை ராணுவத்தினர் வருகிறார்கள். இதில் 9 கம்பெனி சென்னை நகருக்கும், 5 கம்பெனி திருச் சிக்கும், 4 கம்பெனி மதுரைக்கும் அனுப்பப்படுகிறது. ஓட்டு எண்ணப்படும் ஒவ்வொரு மையத்துக்கும் 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 அதிகாரிகள், 9 போலீஸ்காரர்கள் இதில் அடங்குவார்கள்.

ஓட்டு எண்ணும் மையத்துக்கு 100 மீட்டருக்கு வெளியே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். வாகனத்தில் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். அடையாள அட்டை இல்லாமல் யார் வந்தாலும் அனுமதி இல்லை. ஓட்டு எண்ணும் மையத்துக்குள் மை பேனா, தண்ணீர் பாட்டில், சிகரெட், பீடி, தீப்பெட்டி போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

செல்போனையும் எடுத்துச் செல்லக் கூடாது. பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்லலாம். இவர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. ஓட்டு எண்ணப்படும் வளாகத்தில் இஷ்டத்துக்கு ஆங்காங்கே நின்று கொண்டு செல்போன் பேசக்கூடாது. வேட்பாளர், ஏஜெண்டுகளுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் செல்போனில் பேசலாம்.

தேர்தல் பார்வையாளர் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு எண்ணும் அறையில் செல்போன் வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது. பத்திரிகையாளர்களுக்கு தனி அறை ஒதுக்கப்படுகிறது. அங்கு இண்டர் நெட், டெலிபோன், பேக்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு 8 முதல் 14 டேபிள்கள் ஒதுக்கப்படுகிறது. ஓட்டுக்கள் அதிகமாக இருந்தால் 16 டேபிள்கள் போடப்படும். ஒவ்வொரு சுற்றும் முடிந்து கையெழுத்து வாங்கிய பிறகுதான் அந்த சுற்றின் முடிவு அறிவிக்கப்படும். அதாவது முதல் சுற்று முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தான் 2-வது சுற்று எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். 8 மணி முதல் 8.30 மணி வரை தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கே வரவேண்டும். தேர்தல் பார்வையாளருக்கு தனி அறை எதுவும் கிடையாது. அவர் ஓட்டு எண்ண தொடங்கியது முதல் முடியும் வரை அங்கேயே இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடிவுகள் திரை மூலமாகவும், ஒலிபெருக்கி மூலமாகவும், கரும்பலகை மூலமாகவும் அறிவிக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன் நகல் வேட்பாளருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும். கடைசி 2 சுற்று முடிவு அறிவிப்பதற்கு முன்னதாக தபால் ஓட்டு முடிவு அறிவிக்கப்படும்.

ஓட்டு எண்ணும் பணி முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு மேஜை வாரியாக கண்காணிக்கப்படும். இதில் யார் தவறு செய்திருந்தாலும் தெரிந்து விடும். ஓட்டு எண்ணும் இடத்தில் 4 கட்ட பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணப்படும் அறை, அதற்கு முன்புள்ள பகுதி, வளாகம் மற்றும் வளாகத்துக்கு வெளியே உள்ள பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மத்திய தேர்தல் கமிஷனுக்கு ஓட்டு எண்ணிக்கையின்போது டேட்டா என்ட்ரி செய்வதில் முறைகேடு வாய்ப்பு உள்ளதாக புகார் அளித்திருக்கிறாரே?

பதில்:- இந்த முறை சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. எந்தவித தவறோ முறைகேடோ நடைபெறாது. தேர்தல் அதிகாரி அருகிலேயே டேட்டா என்ட்ரி அலுவலர் மூலமாகவும், கம்ப்யூட்டர் மூலமாகவும் நடைபெறும். இதை தேர்தல் பார்வையாளர், தேர்தல் அதிகாரி பார்வையிடுவார்கள். இதை வேட்பாளரும் பார்க்கலாம். இதில் தவறு நடைபெறாது.

கேள்வி:- இந்த தேர்தல் அனுபவம் எப்படி இருக்கிறது?

பதில்:- எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நான் செய்கிறேன். மீடியாக்கள், அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் ஆகியோர் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் செயல் பட்டேன். இந்த பணி திருப்தியாக உள்ளது.

கேள்வி:- தமிழக முதல்- அமைச்சர் நீங்கள் பாரபட்சமாக செயல்பட்டதாக குற்றச் சாட்டு கூறுகிறாரே?

பதில்:- தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும் உள்பட்டுத்தான் நான் செயல்பட்டேன். அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு பார்த்து நான் செயல்படவில்லை.

கேள்வி:- தேர்தல் முடிவு எப்போதிருந்து தெரிய வரும்.

பதில்:- நான் ஜோதிடர் அல்ல.

கேள்வி:- தேர்தல் விதி முறையை மீறியதாக எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- 6,818 பெரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5,935 வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 4,557 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 389 வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். 386 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திரன், அமுதா உடன் இருந்தனர்.