Tuesday, May 10, 2011

காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரத்திற்கு இலஞ்சம் கொடுத்து புலிகள் தொடர்பான தகவல்களை பெற்ற மஹிந்த ராஜபக்சே.


வன்னி இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சரான சிதம்பரத்திற்கு மஹிந்த ராஜபக்சே வழங்கிய கையூட்டு தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழர்களுக்கு சார்பாக செயற்பட்டு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களைக் கறந்து சிங்கள அரசிற்கு வழங்கியதுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார்.

இதற்காக மஹிந்த ராஜபக்சே அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி பெயரில் நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார்.

நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும் மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமை தெரியவந்துள்ளது.

www.nerudal.com

பிளஸ் 2 தேர்வில், 1.25 லட்சம் மாணவர்கள் தோல்வி.


பிளஸ் 2 தேர்வில், மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 602 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வை, பள்ளிகள் மூலம், ஏழு லட்சத்து, 16 ஆயிரத்து, 543 பேர் எழுதினர். இவர்களில், ஆறு லட்சத்து, 15 ஆயிரத்து, 593 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து, 950 பேர் தோல்வியடைந்தனர். இவர்களில், ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை, தோல்வியடைந்தவர்கள் மட்டும், ஜூன், ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம்.

பள்ளிகள் மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் ஆகியோரில், மூன்று பாடங்கள் வரை, ஒரு லட்சத்து, 25 ஆயிரத்து, 602 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

ஒரு பாடத்தில், 70 ஆயிரத்து, 175 பேர், இரு பாடங்களில், 36 ஆயிரத்து, 459 பேர், மூன்று பாடங்களில், 18 ஆயிரத்து, 968 பேர் தோல்வியடைந்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள்:
மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள், 9ம் தேதியில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றன. "எஸ்.எச்.,' என குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 13ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட பள்ளிகளிலேயே ஒப்படைக்க வேண்டும். தேர்வுக்கான கட்டணத்தையும், பள்ளிகளிலேயே செலுத்த வேண்டும்.

தனித்தேர்வர்கள்: மூன்று பாடங்கள் வரை தோல்வியுற்ற தனித்தேர்வர்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.வரும் 16 முதல், 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 24ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பின்லேடன் வேட்டையின்போது தேவைப்பட்டால் பாகிஸ்தான் படையினரைத் தாக்கவும் உத்தரவிட்ட ஒபாமா.


பின்லேடன் வேட்டையின்போது அதைத் தடுக்க பாகிஸ்தான் போலீஸாரோ அல்லது படையினரோ முயன்றால் அவர்களைத் திருப்பித் தாக்கவும், அமெரிக்க சீல் படையினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் ஒரு வீட்டில் கடந்த பல வருடங்களாக ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்த பின்லேடனை சமீபத்தில் அமெரிக்க கடற்படையின் சீல் வீரர்கள் வேட்டையாடிக் கொன்றனர்.

இந்த வேட்டை தொடர்பான பல்வேறு செய்திகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

பின்லேடன் வேட்டைக்கு முதலில் சில வீரர்களை மட்டுமே முடிவு செய்யப் பட்டிருந்தது. இருப்பினும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதற்கு முக்கியக் காரணம், வேட்டையின்போது, பாகிஸ்தான் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டால் என்ன செய்வது என்பதால்.

பாகிஸ்தான் போலீஸ் தரப்பிலோ அல்லது ராணுவத்தின் சார்பிலோ அமெரிக்கப் படையினரைத் தடுக்க முயன்றால் அல்லது தாக்குதல் தொடுத்தால் திருப்பித் தாக்குமாறும் அமெரிக்கப் படையினருக்கு ஒபாமா உத்தரவிட்டிருந்தார் என்ற பரபரப்புத் தகவலும் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அது இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதட்டத்தையும், பாகிஸ்தானை அமெரிக்கா உண்டு இல்லை என்று பண்ணியிருக்க வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அமெரிக்கப் படையினர் அதிவிரைவாக செயல்பட்டதால் தங்களது ஆபரேஷனை வேகமாக முடித்து விட்டு பின்லேடன் உடலோடு பறந்து விட்டனர்.

அவர்கள் போன பின்னர்தான் அந்த இடத்திற்கு பாகிஸ்தான் ராணுவத்தினரும், போலீஸாரும் வந்துள்ளனர்.

முன்னதாக தங்களது எல்லைக்குள் மர்ம ஹெலிகாப்டர்கள் ஊடுறுவியதை பாகிஸ்தான் படையினர் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவை எங்கே போனது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடித்து முடிப்பதற்குள் அமெரிக்கா தனது வேலையை முடித்து விட்டது.

மேலும் பாகிஸ்தானுக்குள் போன ஹெலிகாப்டர்கள் தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இரண்டு தாக்குதல் ஹெலிகாப்டர்களையும், அதிக அளவிலான வீரர்களையும் அமெரிக்கா தயார் நிலையில் வைத்திருந்தது. பாகிஸ்தானுக்குள் போன அமெரிக்க வீரர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அவர்களிடமிருந்து உதவி கோரி அழைப்பு வந்தால் மின்னல் வேகத்தில் அங்கு சென்று தாக்குதல் நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அதற்கான வாய்ப்பை பின்லேடன் வேடையில் ஈடுபட்டவர்கள் வைக்கவில்லை.

கேரளா : எண்டோசல்பான் தொழிற்சாலையை மூட உத்தரவு.


கேரளாவில் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தயாரிக்கும் ஹெச்ஐஎல் தொழிற் சாலையை மூடுவதற்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொச்சியில் உள்ள அந்த தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி எண்டோசல்பான் மருந்தை தயாரிக்கிறது என்ற அடிப்படையின் பேரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இத் தகவலை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று செய்தியாளர் களிடம் தெரிவித்தனர்.

உலகம் முழுவதும் சுமார் 81 நாடுகளில், விவசாயத்துக்கு எண்டோசல்பான் பூச்சி மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் இதை பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், நோய்கள் பரவுவதாகவும் குழந்தைகள் ஊனத்துடன் பிறப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, கேரள அரசு எண்டோசல்பான் பயன்படுத்த தடை விதித்தது.

மேலும், நாடு முழுவதும் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்ய வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொச்சியில் செயல்படும் எண்டோசல்பான் தொழிற்சாலையை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிஐஏ அதிகாரியை திரும்பப் பெற முடியாது: அமெரிக்கா.


பாகிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரியை திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து செயல்படும் சிஐஏ அதிகாரியின் பெயர் குறித்த விவரங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால், அவரது பெயர் தவறாக வெளியிடப் பட்டுள்ளது என்றும், அப்பெயரை எதன் அடிப்படையில் வெளியிட்டார்கள் என்றும் அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், சிஐஏ அதிகாரியை பாகிஸ்தானில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாக். விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் பாக். அரசு புகார் கூறியது.

ஆனால், உளவு அதிகாரியை திரும்ப அழைத்துக்கொள்ள முடியாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார் ; ஈரான் புதிய தகவல்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார்;    ஈரான் புதிய தகவல்

உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதை ஈரான் அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் உளவுத் துறை மந்திரி ஹைதர் மோஸ்லேகி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொல்லவில்லை. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதற்கான நம்பகத்தகுந்த மிக சரியான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மையிலேயே அவரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை கைது செய்திருந்தாலோ அல்லது கொன்று இருந்தாலோ அவரது உடலை ஏன் காட்ட வில்லை.

உடலை கடலில் ஏன் வீச வேண்டும். எனவே இந்த செய்தி அப்பட்டமான பொய்யாகும். அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு பிரச்சினையை திசை திருப்ப குறிப்பாக அங்கு நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து மக்கள் எண்ணத்தை மாற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்லேடன் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.

இவ்வாறு மந்திரி ஹைதர் மோஸ்லேகி தெரிவித்துள்ளார்.

பசிபிக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்.

பசிபிக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்

சிங்கப்பூர், தென்மேற்கு பகுதியின் பசிபிக் தீவுகளில் உள்ள ஒரு தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சேத விபரம் பற்றிய தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.