Monday, May 9, 2011

சென்னை, கோவையில் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி.

இந்தியாவில் மொத்தம் 18 இஎஸ்ஐ கார்ப்பரேஷன் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. சென்னை கே.கே.நகரில் ரூ.600 கோடி மதிப்பிலும், கோவை வரதராஜபுரத்தில் ரூ.430 கோடி மதிப்பிலும் 2 கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன.

சென்னையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு நிறுவனம் அமைய உள்ளது. கோவையிலும் இதேபோல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை வரதராஜபுரத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் குடியிருப்பு, கல்லூரி முதல் மாடி மற்றும் ஆடிட்டோரிய கட்டிடப் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டது.

மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்குத் தேவையான கருவிகள் டிசம்பரில் வாங்கப்படுகிறது. புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

இஎஸ்ஐ மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''கட்டிட பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு இவற்றை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆகஸ்டில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுக்கு பின் மருத்துவப் படிப்புக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு : வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி.


வனவிலங்குகள் கணக்கெடுப்புக்காக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

முதுமலை காப்பகம்

தமிழகத்தில் உள்ள 6 புலிகள் காப்பகத்தில் முக்கியமானது முதுமலை புலிகள் காப்பகம். முதுமலையில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருது, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. வறட்சி மற்றும் வனத்தீ காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதுமலை காப்பகம் மூடப்பட்டது.

கணக்கெடுப்பு

எதிர்பாராமல் பெய்த கோடை மழை காரணமாக காட்டின் பல இடங்களிலும் நீர் தேக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இந்நிலையில் வன விலங்கு கணக்கெடுப்பு பணிக்காக கடந்த 3-ம் தேதி மீண்டும் காப்பகம் மூடப்பட்டது. நேற்று வரை கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. கடைசி நாளான நேற்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் சம்மந்தப்பட்ட குழுக்களிடம் இருந்து வனத்துறையினரால் சேகரிக்கப்பட்டன.

மீண்டும் திறப்பு

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படுகிறது என வனத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை வனக்கோட்டம்

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரகங்களில் கடந்த மார்ச் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வன உயிரினக் கணக்கெடுப்பு துவங்கியது. ஆச்சர்யமாக காரமடையில் 3 இடங்களிலும், மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதிகளில் 2 இடங்களிலும் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது.

புலிகள் நடமாட்டம்

புலிகள் நடமாட்டம் இருப்பதாக யூகிக்கின்ற இடங்களில் ‘காமிரா டிராப்’ கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. காரமடை வனச்சரகத்தில் வைக்கப்படிருந்த காமிரா டிராப்பில் ஏப்ரல் 17ம்தேதி புலி ஒன்றின் போட்டோ பதிவாகியுள்ளது.

வன ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோவை வனச்சரகத்தில் இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் தற்போதுதான் முதன்முறையாக புலிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலால் கோவையிலுள்ள வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் இதனால் வனங்களையும், பிற விலங்குகளையும், அரிய மரங்களையும் காப்பாற்ற முடியும் என்பதே இவர்களது மகிழ்ச்சிக்குக் காரணம்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 1706 ஆக உயர்வு

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை நல்ல உயர்வைக் கண்டுள்ளது. 2006ல் 1411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2010ல் 1706 ஆக அதிகரித்துள்ளது.

2006ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்போது புலிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது தெரிய வந்தது. அதன் பின்னர் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதன் விளைவாக தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மின்தடை நேரம் குறைகிறது - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு.


காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருவதை தொடர்ந்து மின்தடை சுழற்சி நேரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மின்தடை அதிகமாக காணப்பட்டு வருகிறது. மின் பற்றாக்குறை காரணமாக இரண்டு மணி நேரம் இருந்த மின்தடை தற்போது 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோக அவ்வப்போது வேறு கரண்ட்டைப் பிடுங்கி விடுகிறார்கள்.

தொடர் மின்தடை காரணமாக உபயோகிப்பாளர்களும், விவசாயிகளும், தொழிற் சாலைகளும், சிறு தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மின்தடையை கண்டித்து தமிழகத்தில் பகுதிகளில் பேரணிகளும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசுகிறது. நெல்லை மாவட்டத்தில் காற்றாலை முலமாக பெறக்கூடி.ய மின்சாரம் அதிகரித்துள்ளது.

இந்த போதிலும அதிகபட்சமாக 2 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி கிடைக்கப்பெரும். தென்காசி பகுதியை பொறுத்தவரை காற்றாலை மூலம் 600 மெகா வாட் தேவைப்படுகிறது. வீராணம், அமுதாபுரம், கீழவீராணம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், வீரசிகாமணி, சுரண்டை, ஊத்துமலை, அச்சன்புதூர், உபமின் நிலையங்களுக்கு காற்றாலை மூலம் பெறக்கூடிய மின் உற்பத்தி போக மீதமுள்ள மின்சாரம் பவர் கீரிட் நிறுவனத்துக்கு அனுப்பப்படுகிறது.

இந்த காற்றாலை உற்பத்தி அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கப்பட்டிருந்த மின்தடை சுழற்சி நேரம் கடந்த சில நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மின்தடை ஏற்படுவது இல்லை. இதனால் மின் உபயோகிப்பார்களும், விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 10 தினங்களாக விவசாயிகளுக்கு முழுமையான அளவில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மின் உற்பத்தி நெல்லை மாவட்டத்தை பொறுத்துவரை வரும் ஜூலை மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு செய்கிறார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி திமுக ராஜ்யசபா எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மனு தாக்கல் செய்யவுள்ளார்.

மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வழக்கு விசாரணைக்கு வரும்போது தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரவுள்ளார் கனிமொழி.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கடுமையான குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார் கனிமொழி. அவரை கூட்டுச் சதியாளராக சிபிஐ வழக்கில் சேர்த்துள்ளது. அவர் தவிர கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி, குஸேகான் ரியால்ட்டியின் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் 6ம் தேதி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் கனிமொழி. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, கனிமொழி ஒரு பெண், எம்.பி. முதல்வரின் மகள் என்ற காரணத்தால் அவரைப் பழிவாங்க வழக்கில் சேர்த்துள்ளனர். அவருக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பில்லை. எல்லாவற்றுக்கும் ராசாதான் காரணம். அவர்தான் பொறுப்பு என்று வாதிட்டார்.

கனிமொழி சார்பில் முன்ஜாமீன் கோரி மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 7ம் தேதியும் நடந்தது. விசாரணைக்குப் பின்னர் மனு மீதான தீர்ப்பை மே 14ம் தேதி வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரவுள்ளார் கனிமொழி.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாவது நினைவு இருக்கலாம்.

அமெரிக்கா தாக்குதல் பீதி : இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு.

அமெரிக்கா தாக்குதல் பீதி: இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவிப்பு

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய மந்திரி ப.சிதம்பரம் “பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. அதனால்தான் அங்கு பின்லேடன் பதுங்கி இருந்துள்ளார். இதே போல் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது” என்று கூறினார்.

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவ தளபதி கயானி கூறும் போது,

பின்லேடன் பிரச்சினையை வைத்து இந்தியா ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் நாங்கள் கடும் எதிர் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று எச்சரித்தார்.

இதேபோல பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தியாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய எல்லை முழுவதும் படைகளை குவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 740 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு அதிக அளவில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதைபோல பனி படர்ந்த பகுதியான சியாச்சின் பகுதியிலும் 110 கிலோமீட்டர் தூரத்திற்கு படைகளை குவித்துள்ளது. இதை இந்திய ராணுவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதனால் எல்லைப் பகுதியில் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய படைகளும் உஷாராகி வருகின்றன.

இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறும் போது, நாங்கள் எல்லா நிலைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைப்படும் நேரத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எப்போதுமே இந்த பகுதியில் நாங்கள் விழிப்புடன் இருப்பது வழக்கம் எனவே எந்த இக்கட்டான சூழ்நிலைக்கும் இடம் தரமாட்டோம் என்றார்.

பின்லேடனுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து வந்ததை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதனால் பாகிஸ்தானை அமெரிக்கா நம்பவில்லை எனவே அமெரிக்க படைகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்க படைகளை பாகிஸ்தானால் எதிர்கொள்ள முடியாது. எனவே திசை திருப்பும் முயற்சியாக இந்தியாவுடன் வம்பு இழுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் இந்திய எல்லையில் படைகளை குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.491 கோடி சொத்து குவித்த 5 உயர் அதிகாரிகள் ; வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

ரூ.491 கோடி சொத்து குவித்த 5 உயர் அதிகாரிகள்; வருமான வரித்துறை கண்டுபிடித்தது

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரவிந்த் ஜோஷி, டினு ஜோஷி, ராஜேஷ் ரஜோரா, பி.எல்.அகர்வால், வனத்துறை அதிகாரி ஆர்.கே.சின்கா ஆகியோர் மொத்தம் ரூ.491 கோடி சொத்து குவித்து இருப்பதாக மத்திய நிதி அமைச்சகத்திடம் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் பெயரில் உள்ள நிலம் மற்றும் வீடுகளின் மதிப்பு, இதில் சேர்க்கப் படவில்லை.

இவர்களில், அகர்வால் தன்னிடம் வேலை பார்க்கும் வேலைக்காரர்கள் பெயரில் 220 வங்கி கணக்குகளை தொடங்கி, அதில் பணம் போட்டு வைத்திருப்பதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்.

அமெரிக்க உளவுப்படை துப்பு துலக்கிய விதமும் பின்லேடன் வீழ்ந்த கதையும்

அன்னிய மண்ணில் 4 ஹெலிகாப்டர்களுடன் நுழைந்து பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அமெரிக்க படையினர் சாதித்துகாட்டிய இந்த துணிச்சல் வேறு எந்த நாட்டு ராணுவத்துக்கும் வருமா என்பது கேள்விக்குறியே!

அசகாய சூரர்களாக மாறி ஓசாமாவை வீழ்த்திய கமாண்டோ படையினரை அதிபர் ஒபாமா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது தீவிரவாதத்தின் தலையை துண்டித்துவிட்டோம் என்று வர்ணித்துள்ளார்.

இதற்காக அமெரிக்காவுக்கே தேவைப்பட்ட காலம் ஓரிரு ஆண்டுகள் அல்ல! 10 ஆண்டுகள்!! காலம் கடந்தாலும் பின்லேடனை பழி தீர்த்து தனக்கு ஏற்பட்ட களங்கத்தை அமெரிக்கா துடைத்துக் கொண்டது பாராட்டுக்குரியது.

பின்லேடன் இருப்பிடத்தை மோப்பம் பிடித்தது முதல் அவனை சுட்டு வீழ்த்தியதை அதிபர் ஒபாமா நேரடி சாட்சியாக பார்த்தது வரையிலான சம்பவங்களை பிரபல எழுத்தாளர் பாப் உட்வர்ட் என்பவர் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் விவரித்துள்ளார்.

அல்ஜசீரா தொலைக்காட்சி பேட்டியில் மட்டும் பின்லேடனை பார்த்திருந்த அமெரிக்க உளவுத்துறைக்கு அவர் கருப்பா? சிவப்பா? எத்தனை அடி உயரம் இருப்பார் என்பதெல்லாம் துல்லியமாக தெரியாது. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் தனது கழுகு கண்களை அமெரிக்கா படர விட்டது.

அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை எல்லாம் பயன்படுத்தி பார்த்தார்கள். ஆனால் எதிலும் பின்லேடன் பதுங்கி இருக்கும் இடம் பற்றிய “சிக்னல்” விழவில்லை. ஆனாலும் அமெரிக்க உளவுப்படை சோர்ந்து போகவில்லை.

பின்லேடனின் மிக நெருங்கிய நண்பர் அபு அகமது அல்குவைதி. பின்லேடனின் நட்பு வட்டாரத்தையும், நெருங்கிய வட்டாரத்தையும் துப்பறிந்து வைத்திருந்த உளவுத்துறையினர் அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தனர். இதற்கு ஒசமா பின்லேடனும் சளைத்தவன் அல்ல. போன், செல்போன், இன்டர்நெட் என்று எதையாவது வைத்திருந்தால் கேபிள் வழியாக கூட அமெரிக்க உளவு படை துப்பறிந்துவிடும் என்று நினைத்து இதை எதையுமே தனது பங்களாவில் வைத்திருக்கவில்லை.

தனது நண்பர் அல்குவைதி மூலம் தகவல்களை பரிமாறியதிலும் புதிய யுக்தியை பின்லேடன் கடைபிடித்தான். அல்குவைதி செல்போன் பேட்டரியை கழட்டிவிட்டுத்தான் பின்லேடன் பங்களாவிற்கு வருவார். யாருக்காவது தகவல் கொடுக்க வேண்டுமென்றால் அல்குவைதி பங்களாவில் இருந்து வெளியே வந்து கால்போன போக்கில் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் செல்வார். பின்னர் செல்போனுக்கு பாட்டரியை பொருத்தி உயிர் கொடுத்து பேசுவார்.

அப்படி ஒருநாள் அல்குவைதி தனது நண்பருடன் பேசிய தொலைபேசி உரையாடல்தான் அமெரிக்க உளவு படைக்கு துப்பறிய உதவியது. தொலைபேசியில் பேசிய அல்குவைதியின் நண்பர், என்னப்பா, இப்போ நீ எங்கே இருக்கிறாய்? ரொம்ப நாட்களாகவே உன்னை பார்க்க முடியவில்லையே? என்ன நடக்கிறது உன் வாழ்க்கையில்? இப்போது என்ன செய்கிறாய்? என்று கேட்டார்.

அதற்கு சுரத்தே இல்லாமல் அல்குவைதி பதில் சொன்னார். முன்னால் இருந்த அதே மக்களுடன்தான் இப்போதும் இருக்கிறேன் என்றார். அதன்பிறகு சிறிது நேரம் மவுனம் நிலவியது. பின்னர் அப்படியா, கடவுள் எல்லாம் நல்லபடியா இருக்க உதவட்டும் என்றார்.

இந்த பதில் தான் அமெரிக்க உளவுப்படைக்கு பொறியில் தட்டியது. யாரோ ஒரு முக்கிய பிரமுகருடன்தான் அல்குவைதி தங்கி இருக்கிறான் என்பதை உறுதி செய்தனர்.

உளவுப்படை கண்டு பிடித்து விடக்கூடாது என்பதால் சங்கேத வார்த்தைகளாலே பேசிய அல்குவைதியின் பேச்சை கூட உளவுப்படை கண்டுபிடித்து அபோதாபாத்தில் பின்லேடன் பதுங்கி இருந்த மாளிகையையும் கண்டுபிடித்தார்கள்.

அதன்பிறகு அந்த வீட்டருகே வேறு ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்க உளவுப்படையினர் தங்கி இருந்து கண்காணித்து வந்தனர். அந்த வீட்டில் சூழ்நிலைக் கைதி போல் ஒருவர் அடைபட்டு கிடந்ததை பார்த்தார்கள். அவர் எப்போதாவது வெளியே வந்து உலாவுவார்.

அவருடைய உயரத்தை அறிந்து கொள்ள செயற்கைகோள் உதவியை நாடினார்கள். செயற்கை கோளும் அந்த வீட்டை அங்குலம் அங்குலமாக ஊடுருவி படம் பிடித்தது. அந்த நபரின் உயரமும் சுமார் 6 அடி என்று கணக்கிட்டு கொடுத்தது.

இப்படி ஒவ்வொரு விஷயமாக தொகுத்துதான் பின்லேடன் பங்களாவை உறுதிபடுத்தினார்கள். பின்லேடன் பங்களாவில் புகுந்து சுட்டுக் கொன்ற அமெரிக்க வீரர்கள் பின்லேடனின் உயரத்தை அளவிட கையில் “டேப்” இல்லாமல் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

பின்னர் வேறு வழியின்றி 6 அடி உயரம் உள்ள ஒரு வீரரை பின்லேடன் உடல் அருகே படுக்க வைத்தனர். அதை வைத்து பின்லேடனின் உயரத்தை கணக்கிட்டு குறித்துக் கொண்டார்கள். இந்த காட்சியை வெள்ளை மாளிகையில் உயர் அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து கொண்டிருந்தார் ஒபாமா.

ராணுவ வீரர் ஒருவர் பின்லேடன் உடல் அருகே படுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை ஒபாமாவால் சகிக்க முடியவில்லை. அருகில் இருந்த அதிகாரிகளிடம் 600 லட்சம் டாலர் மதிப்புள்ள ஹெலிகாப்டரையே அங்கேயே அழிய விட்டிருக்கிறோம். ஒரு சிறிய இஞ்ச் டேப்பை கையோடு எடுத்து போயிருக்க கூடாதா? என்று கேட்டார்.

எந்தவித பின்னணி குரலும், ஓசையும் இல்லாமல் வீடியோ காட்சிகள் பின்லேடன் பங்களாவில் இருந்து நேரடியாக ஒளிபரப்பாகியது. இமை மூடாமல் அந்த காட்சிகளை பார்த்து கொண்டிருந்த ஒபாமாவும் அதிகாரிகளும் மட்டும் பொருள் பொதிந்த விமர்சனங்களை அவ்வப்போது தங்களுக்குள் பேசி கொண்டிருந்தார்கள்.

பின்லேடனை சுட்டு வீழ்த்திவிட்டு அமெரிக்க படையினர் அவனது உடலுடன் வெளியேறியதை பார்த்த பிறகுதான் அதிபர் ஒபாமாவும் அங்கிருந்து எழுந்து சென்றார்.