Monday, May 2, 2011

ஒசாமா பின்லேடன் உடலை கடலில் வீசியது அமெரிக்கா...


ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலைக் கைப்பற்றிய அமெரிக்க ராணுவம், டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் பின்லேடனின் உடலை கடலில் வீசி விட்டது.

பின்லேடனின் உடலை நிலத்தில் புதைத்தால், அந்த இடம் தீவிரவாதிகளின் நினைவிடமாக மாறி விடும் என்ற காரணத்தால், உடலை தரையில் புதைக்காமல், அமெரிக்க ராணுவம் கடலில் வீசியுள்ளதாக தெரிகிறது.

கடலில் எந்த இடத்தில் உடல் வீசப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

ஒசாமாவை அமெரிக்க உளவுப் பிரிவினர் கண்டுபிடித்தது எப்படி?


ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த கட்டடத்தை அமெரிக்காவின் சிஐஏ உளவுப் பிரிவு எப்படி கண்டுபிடித்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒசாமாவை தாராபோரா மலைத் தொடரின் குகைகளில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானங்கள் (un manned ariel vehicles) இரவு பகலாக தேடி வந்தன. இதற்கான 50க்கும் மேற்பட்ட உளவு விமானங்கள் இந்த மலைத் தொடரை சல்லடை போட்டு தேடின. ஆனாலும் ஒசாமா சிக்கவில்லை.

அதே போல சாட்டிலைட் தொலைபேசியில் ஒபாமா பேசுகிறாரா என்று அமெரிக்க ராணுவ செயற்கைக் கோள்கள் voice recognition software உதவியோடு உலகம் முழுவதும் இந்த ரக தொலைபேசிகளின் உரையாடல்களை கண்காணித்து வந்தன. ஆனால், ஒரு சத்தத்தையும் காணோம்.

இந் நிலையில் ஏராளமான உடல் உபாதைகளுடன் தவித்து வந்த ஒசாமா நிச்சயம் பாகிஸ்தானுக்குள் தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது அமெரிக்கா. இதனால் பாகிஸ்தானுக்குள் ஒசாமாவைத் தேடும் பணியை தீவிரமாக்கியது.

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவு தான் ஒசாமாவை பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறது என்று தெரிய வந்தாலும், அதை பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் மறுத்தே வந்ததால், கெஞ்சிப் பார்த்து ஓய்ந்து போன அமெரிக்கா, பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிரட்டவும் ஆரம்பித்தது.

லிபியாவுக்குள் குண்டுவீசி அந் நாட்டு அதிபர் கடாபிக்கே குறி வைக்க ஆரம்பித்துள்ள அமெரிக்கா, இதே நிலைமை உங்களுக்கும் விரைவில் ஏற்படும் என்றும் மிரட்டியதையடுத்து ஒசாமா குறித்த சில தகவல்களை அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தந்ததாகத் தெரிகிறது.

இந்த தகவல்களை முன் வைத்து சிஐஏ நடத்திய மாபெரும் உளவு-தேடுதல் வேட்டையில் தான் ஒசாமா கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கிடைத்த தகவல்களை வைத்து ஒசாமாவின் வளையத்துக்குள் உள்ள சிலரை அமெரிக்கா கண்காணிக்க ஆரம்பித்தது. இந்த வளையத்தில் சில சிஐஏ பிரிவினரையும் ஊடுருவ வைத்தது.

அவர்கள் மூலம் ஒசாமாவுக்கு கடிதங்கள் எடுத்துச் செல்லும் நபரை அடையாளம் கண்டது சிஐஏ. ஒசாமாவுக்கான அந்தக் கடிதங்கள் புனைப் பெயர்களில் செல்வதை அமெரிக்கா கண்டுபிடித்தது.

இந்த நபர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அப்போடாபாத் நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பதை கடந்த ஜனவரியிலேயே சிஐஏ கண்டுபிடித்தது.

அந்த நபரிடம் விசாரணை நடத்தினால் கூட ஒசாமா அலர்ட் ஆகிவிடுவார் என்பதால், அவரிடம் எந்தவித பேச்சுவார்த்தையையும் வைத்துக் கொள்ளவில்லை அமெரிக்கா.

அந்த நபர் வசித்த வீடு 18 அடி உயரம் கொண்ட மிக உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கொண்ட 3 மாடிகள் கொண்ட வீடாகும். அந்த வீட்டைப் பார்த்தவுடனேயே அமெரிக்காவின் சந்தேகம் மேலும் வலுத்தது. அப் பகுதியில் உள்ள மற்ற வீடுகளை விட 8 மடங்கு மிக அதிகமான பரப்பளவில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. மேலும் 2005ம் ஆண்டில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.

பல கோடி மதி்ப்புடைய அந்த வீட்டின் தொலைபேசி எண்ணை அறிய அமெரிக்க உளவுப் பிரிவினர் முயன்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் தொலைபேசியே இல்லை. மிகப் பெரிய பங்களாவில் ஒரு தொலைபேசி இணைப்பு கூட இல்லாதது ஏன் என்ற சந்தேகம் வரவே, அந்த வீட்டில் இண்டர்நெட் இணைப்பாவது இருக்கிறதா என்று விசாரித்தபோது அதுவும் இல்லை என்று தெரியவந்தது.

மேலும் அந்த வீட்டினர் குப்பைகளைக் கூட வெளியில் கொட்டாமல், தங்களது காம்பவுண்டுக்குள்ளேயே எரித்து வந்ததையும் அமெரிக்க உளவுப் பிரிவினர் பல மாதங்களாக கண்காணித்தனர்.

அந்த வீட்டில் கடிதங்கள் கொண்டு சென்ற நபரும் அவரது சகோதரரின் குடும்பங்கள் தவிர இன்னொரு குடும்பமும் இருப்பதும் தெரியவந்தது. அந்தக் குடும்பம் பின் லேடனின் குடும்பம் என்ற முடிவுக்கு வந்த சிஐஏ, இந்த வீட்டை சோதனையிடுவது குறித்து முடிவு செய்தது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் 5 உயர் மட்டக் கூட்டங்களும் நடந்தன.

அதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்குத் தெரிந்துவிடாமல் இந்த ஆபரேசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு தகவல் கிடைத்தால் ஒசாமாவை காப்பாற்றிவிடுவார்கள் என்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டது.

இதனால் கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் கூட, இந்த ஆபரேசனை நாமே நடத்தி முடிப்பது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்தது. இந்த வீட்டில் ஒசாமா தனது இளைய மனைவியோடு இருப்பதை அப்போடாபாத் நகரிலேயே முகாமிட்டிருந்த சிஐஏவின் உளவாளிகள் மீண்டும் திட்டவட்டமாக கடந்த வாரம் உறுதிப்படுத்தவே, அந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்தி ஒசாமைவைக் கொல்ல கடந்த வெள்ளிக்கிழமை ஒபாமா கையெழுத்து போட்டு அனுமதி தந்தார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு 1.20 மணியளவில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்திலிருந்து சில ஹெலிகாப்டர்களில் கிளம்பிய அமெரிக்கப் படையினரும், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து கிளம்பிய ஒரு படையும் இந்த வீட்டை முற்றுகையிட்டன.

மிகச் சிறிய அளவிலான இந்தப் படை தனது பயங்கர தாக்குதலைத் தொடங்க, ஒசாமா பின் லேடனின் பாதுகாவலர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந் நிலையி்ல் ஒசாமா பின் லேடனே நேரடியாக அமெரிக்கப் படைகளுடன் மோதியுள்ளார்.

இதில் உடல் துளைக்கப்பட்டு ஒசாமா பின் லேடன் அந்த இடத்திலேயே பலியானார். இதில் ஒரு குண்டு ஒசாமாவின் கண்ணை துளைத்துக் கொண்டு மூளையை சிதறடித்தது. அவருடன் அவரது மகன், ஒரு பெண் உள்பட 5 பேரும் பலியாயினர்.

40 நிமிடத்தில் இந்த ஆபரேசனை முடித்துவிட்டு ஒசாமாவின் உடலை தூக்கிக் கொண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் கிளம்பின.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட, அந்த ஹெலிகாப்டரை அங்கேயே விட்டுவிட்டு மற்ற ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு, உளவு காரணங்களுக்காக மற்ற ஹெலிகாப்டர்கள் குண்டுவீசித் தகர்த்துவிட்டு, ஒசாமாவின் உடலோடு ஆப்கானிஸ்தான் நோக்கிப் பறந்தன.

இந்தத் தாக்குதலை நடத்தியது எந்தப் படை என்பதை அமெரிக்கா தெரிவிக்க வில்லை. ஆனாலும் U.S. Navy SEALs அதிரடிப் படை தான் இந்த ஆபரேசனை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

இறந்தது ஒசாமா தானா என்பதை facial recognition மற்றும் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

இந்த முழு ஆபரேசனையும் அமெரிக்காவிலிருந்து ஒருங்கிணைத்த சிஐஏ குழுவுடன் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனும் முழு அளவில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

thatstamil.oneindia.in

நடிகர் கார்த்தியின் திருமண நிச்சயதார்த்த படங்கள்.

நடிகர் கார்த்திக்கு ஜூலை 3-ந்தேதி    கோவையில் திருமணம்;    ஈரோடு அருகே மணமகள்    வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது

நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான, நடிகர் கார்த்தி, விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி, ஜோதி மீனாட்சி ஆகியோரது மகள் ரஞ்சனியை திருமணம் செய்யவிருக்கிறார்.

வருகிற ஜூலை 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் இத் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்த விழா ஈரோடு, கிளாம்பாடி கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டில் நடைபெற்றது.

இதில் நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, நடிகர் சூர்யா, அவரது சகோதாரி பிருந்தா, பிருந்தாவின் கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா உள்பட உறவினர்கள் பங்கேற்றனர்.

சூர்யாவின் மனைவி ஜோதிகா எங்கே? என்று ரசிகர்கள் சூர்யாவை பார்த்து கேட்டதற்கு. அவர் சிரித்தவாறு அங்கிருந்து சென்று விட்டார்.

மணப்பெண் ரஞ்சனியின் வீட்டு முன்பாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை காண ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர்.

மிக எளிமையாக இந்து முறைப்படி நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இத் திருமண நிச்சயதார்த்த படங்கள் சில உங்கள் பார்வைக்கு...














Photos : Karthik Karthi - Anand Babu.

அமெரிக்கர்கள் உஷாராக இருக்குமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்.


பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டுள்ள, வசித்து வருகிற அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கைச் செய்தியில், பின்லேடன் கொலையைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

தற்போதைய சூழ்நிலை மிகவும் பதட்டமாக இருப்பதால், உலகெங்கும் வசிக்கும், சுற்றுலாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முடிந்தவரை வெளியில் சுற்றாமல் தங்களது வீடுகள், ஹோட்டல்களுக்குள்ளேயே அவர்கள் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மொத்தமாக கூடுவது போன்றவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல உலகெங்கும் உள்ள தனது தூதரகங்களுக்கும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு தூதரக தொடர்புகள் உள்ள நாடுகளை அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அமெரிக்கப் படையினருடன் நேரடியாக சண்டை போட்ட பின்லேடன் : கொண்டாட்டமும் - அமைதியும்.


அமெரிக்கப் படையினருடன் நேரடியாக சண்டை போட்ட பின்லேடன்.

இந்த மோதல் குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது தன்னை சரமாரியாக தாக்கிய அமெரிக்கப் படையினருடன் துப்பாக்கி ஏந்தி பின்லேடனே நேரடியாக சண்டை போட்டார் என்பதுதான்.

பின்லேடன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நடமாடவே முடியாத நிலை. சர்க்கரை வியாதி அதிகரித்து விட்டது என்றெல்லாம் சில காலத்திற்கு முன்பு வரை செய்திகள் வந்து கொண்டிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் அமெரிக்கப் படையினர் பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கியபோது படு துணிச்சலாக துப்பாக்கி ஏந்தி நேரடியாக சண்டை போட்டுள்ளார் பின்லேடன். அப்போதுதான் அவர் துப்பாக்கியால் சல்லடை போல துளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

பக்ராம் விமான தளத்தில் லேடன் உடல்:

கொல்லப்பட்ட பின்லேடன் உள்ளிட்டோரின் உடல்கள் பக்ராம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது. விரைவில் பத்திரிக்கையாளர்களை அனுப்பி பின்லேடன் உடலைப் பார்வையிட அமெரிக்க ராணுவம் அனுமதிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்ட பின்லேடனின் முகம் மட்டும் புகைப்படமாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. அதில் முகம் சல்லடையாக துளைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.


அமெரிக்காவின் கொண்டாட்டமும் - பாகிஸ்தானின் அமைதியும்.

பின்லேடனின் மரணம் குறித்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தவுடன் அமெரிக்காவில் பெருத்த கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. ஆனால் அதற்கு நேர் மாறாக பாகிஸ்தானில் பெருத்த அமைதி நிலவுகிறது. குறிப்பாக அரசுத் தரப்பும், ஊடகங்களும் இதுகுறித்து அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை.

பாகிஸ்தான் அரசிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதிலோ, கருத்தோ வெளியாகவில்லை. பாகிஸ்தான் மீடியாக்களும் இந்த சம்பவம் குறித்து முக்கியத்துவம் தந்து செய்திகளை வெளியிடவில்லை.

பாகிஸ்தானின் புகழ் பெற்ற தி டான் செய்தித்தாளின் இணையம் செயல்படவே இல்லை. தொழில்நுட்பக் கோளாறு என்று அதற்கு காரணம் கூறியுள்ளது டான். அதேபோல தி நேஷன்.காம், தி டெய்லி டைம்ஸ் இணையதள்களும் கூட பின்லேடன் குறித்த செய்திகளை விரிவாகத் தரவில்லை.

பின்லேடன் குறித்த செய்தியை இவர்கள் நம்பவில்லையா அல்லது பாகிஸ்தானின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டதே என்ற தர்மசங்கடம் காரணமாக அமைதி காக்கிறார்களா என்பது புரியவில்லை.

பின்லேடன் தங்கிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்ததே ஐஎஸ்ஐதான்? - மனைவிகள், பிள்ளைகள், நண்பர்கள் கைது.


பின்லேடன் தங்கிய கட்டடத்தைக் கட்டிக் கொடுத்ததே ஐஎஸ்ஐதான்?

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்த கட்டடத்தை கட்டிக் கொடுத்து அவரை பத்திரமாக பாதுகாத்து வந்ததே பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ என்று ஒரு தகவல் கூறுகிறது.

பின்லேடன் பதுங்குமிடம் குறித்து பலப்பல தகவல்கள் வெளியாகின. ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் தங்கியிருக்கிறார் என்று முன்புத கவல்கள் கூறின. பின்னர் அவர் பாகிஸ்தானுக்குள் போய் விட்டார் என்றனர். கராச்சியில் இருக்கிறார், காபூலில் இருக்கிறார், வசிரிஸ்தானில் இருக்கிறார் என்று பல தகவல்கள்.

ஆனால் தற்போது பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர்தான் அவர் இத்தனை காலம் பாகிஸ்தானிலேயே, அதுவும் தலைநகருக்கு பக்கத்திலேயே படு பாதுகாப்புடன் தங்கியிருந்தது தெரிய வந்துள்ளது.

பின்லேடன் தங்கியிருந்த இடத்தின் பெயர் பிலால் டவுன் ஆகும். இது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அப்போதாபாத் நகரில் உள்ளது.

இந்த இடத்திற்கு அருகில்தான் பாகிஸ்தான் ராணுவத்தின் பயிற்சி அகாடமி உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு முதல் பிலால்டவுனில் உள்ள ஒரு மேன்சனில் தங்கியிருந்துள்ளார் பின்லேடன். இந்த கட்டடமே, பின் லேடன் தங்குவதற்காக அதி நவீன வசதிகளுடன் கட்டப்பட்டதாகும் என்கிறார்கள்.

இந்தக் கட்டடத்தில் பல அறைகள் உள்ளன. இங்குதான் தனது மனைவியர், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர், முக்கியத் தளபதிகளுடன் தங்கியிருந்தார் பின்லேடன்.

இந்த கட்டடம் 12 முதல் 16 அடி உயர சுற்றுச் சுவரால் பாதுகாப்புடன் விளங்குகிறது. இங்கு தொலைபேசி மற்றும் இன்டர்நெட் வசதி எதுவும் கிடையாது. இங்கிருந்து யாரும் வெளியேறுவது இல்லையாம். அதேபோல யாரும் இங்கே செல்லவும் மாட்டார்களாம்.

இந்தக் கட்டடத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் கட்டியுள்ளனர். பின்லேடனுக்காக இந்தக் கட்டத்தைக் கட்டிக் கொடுத்து பாதுகாத்து வந்தது பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐதான் என்று ஒரு கருத்து வெளியாகியுள்ளது.

ஆனால் முன்னாள் ஐஎஸ்ஐ தலைவர் ஹமீத் குல் இதை மறுத்துள்ளார். பின்லேடன் இங்கு நிரந்தரமாக தங்கியிருக்க வாய்ப்பில்லை. சிகிச்சைக்காக அவர் சமீபத்தில் வந்திருக்கலாம். வந்த இடத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம்.

மற்றபடி ஐஎஸ்ஐயோ அல்லது பாகிஸ்தான் அரசோ பின்லேடனைக் காக்கவில்லை, காக்க முயற்சித்ததும் இல்லை என்றார்.

ஆனால் பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில் பின்லேடன் தங்கியிருந்தபோதும் அது ராணுவத்திற்கோ அல்லது உளவுப் பிரிவுக்கோ தெரியாது என்று பாகிஸ்தான் தரப்பில் கூறுவது நம்பும்படியாகவே இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.


ஒசாமாவின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள், 4 நெருங்கிய நண்பர்கள் பாகிஸ்தானில் கைது.

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 6 பிள்ளைகள், 2 மனைவிகள் மற்றும் 4 நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 60 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியில் வைத்து அவர்களை பாகிஸ்தானியப் படைகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம். - அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ.


ஒசாமா மரணத்தால் வெளுத்த பாகிஸ்தான் சாயம்.

ஒசாமா பாகிஸ்தானில் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் கூறிவந்த நிலையில் அவர் இஸ்லாமாபாத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தானின் சாயம் வெளுத்துவிட்டது.

செம்டம்பர் 11 தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நியாயம் கிடைத்துள்ளது. தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தெரிவித்துள்ளார். இந்த செய்தியைக் கேட்ட அமெரிக்கர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஒபாமாவின் இந்த இனிய அறிவிப்பைக் கேட்ட அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றன.

ஒசாமாவின் மரணம் ஒபாமாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அதே சமயம் பாகிஸ்தானின் முகத்திரை கிழிந்துள்ளது. இத்தனை நாட்களாக ஒசாமா பாகிஸ்தானில் இல்லை, இருப்பது தெரிய வந்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அந்நாடு கூறி வந்தது. தற்போது அமெரிக்கப்படை ஒசாமாவை பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து வடக்கே 150 கிமீ தொலைவில் உள்ள அபோத்தாபாதில் வைத்து கொன்றுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகில்தான் பின்லேடன் தங்கியிருந்த கட்டடம் உள்ளது. இப்படி தங்களுக்குப் பக்கத்திலேயே பின்லேடனை வைத்துக் கொண்டு அவர் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் நாடகமாடி வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாகிஸ்தானில் பின்லேடன் இல்லை, அவர் இறந்து போய் விட்டார் என்று பாகிஸ்தான் இத்தனை காலம் கூறி வந்ததும் பொய்யே என்பதும் நிரூபணமாகியுள்ளது.

அதை விட முக்கியமாக முஷாரப் அதிபராக இருந்தபோது பின்லேடன் இறந்து போய் விட்டார் என்று திட்டவட்டமாக கூறி வந்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இத்தனை காலமாக பின்லேடனை கட்டிக் காத்து வந்தது பாகிஸ்தான் அரசும், அதன் ஐ.எஸ்.ஐயும்தான் என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது.


பின்லேடனை வேட்டையாட அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை வேட்டையாட அமெரிக்க சிறப்புப் படையினருக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சரியாக 2 வாரத்திற்கு முன்புதான் விக்கிலீக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டது. அமெரிக்காவின் குவான்டானாமோ முகத்தை அம்பலப்படுத்திய அந்த தகவலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ குறித்த அமெரிக்காவின் கருத்து வெளிப்பட்டது.

தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐயை அமெரிக்கா கருதி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உலக அரங்கில் ஐஎஸ்ஐயின் பெயர் மகா மோசமாக கெட்டுப் போனது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியான அதே காலகட்டத்தில்தான் பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்கப் படை.

இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடியாக தொடர்பு ஏதும் இல்லை என்ற போதிலும், பின்லேடனை வேட்டையாட பாகிஸ்தான் அரசும், ஐஎஸ்ஐயும் உதவியாக இருந்தன என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரையும், அமெரிக்காவின் கிடுக்கிப் பிடி அதிகரிக்க ஆரம்பித்துள்ளதையும், தன்னை அது எப்படி கருதுகிறது என்பதை அறிந்து கொண்டதைத் தொடர்ந்தும், பின்லேடனை காட்டிக் கொடுத்து தான் தப்பிக்க ஐஎஸ்ஐ நினைத்ததாக கூறப்படுகிறது.

எனவேதான் இதுவரை தங்களுக்குப் பக்கத்து வீட்டிலேயே இருந்து வந்த பின்லேடனை, வீழ்த்த அமெரிக்காவுக்கு உதவியுள்ளது ஐஎஸ்ஐ.

அமெரிக்காவின் கோரப் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளும் வகையிலேயே பின்லேடனை பகடைக் காயாக வைத்து பாகிஸ்தானும், ஐஎஸ்ஐயும் தப்பித்துக் கொண்டதாக கருதப்படுகிறது.

பின்லேடன் வேட்டை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அரசின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் பின்லேடனை வேட்டையாட முடிந்தது. பாகிஸ்தான் முழுமையாக எங்களுக்கு உதவியதைத் தொடர்ந்தே லேடனை வீழ்த்தினோம் என்றார்.