Friday, April 29, 2011

மூச்சுத் திணறல் : தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினிகாந்த்.


நடிகர் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது.

ஏவி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் ரஜினி - தீபிகா படுகோனேவுடன் டூயட் பாடல் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

இதையடுத்து படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலரும் ரஜினியை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையின் தீவிர சிகிசைப்பிரிவில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் ரஜினியில் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தி அறிந்த அவரது தீவிர ரசிகர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ரசிகர்களின் முற்றுகையால் பதட்டம் நிலவியதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான் !!


இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அது எப்படி?

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாகிறது. அதற்கேற்ப படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற அணி அடுத்த நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம் மே 17-ம் தேதியோடு இந்த சட்டமன்றத்தின் ஆயுள் முடிகிறது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப் பற்றி, ஏன் விஜய் என்ற நடிகரைப் பற்றிக் கூட நினைக்க மாட்டார் ஜெயலலிதா. ஒருவேளை அதிமுக வென்றாலும் விஜய்க்கு இதே நிலைதான். புதிய அமைச்சரவை தயாராகிக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலாயுதத்துக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்!

இப்போது புரிகிறதா... ஜெயலலிதா தோற்றாலும் வென்றாலும் முதல்பாதிப்பு விஜய்க்குத்தான் என்பது!!

Thursday, April 28, 2011

மரபணு கத்தரிக்காயை பாதியளவு அனுமதிக்கலாம் ; தர மதிப்பீட்டு குழு ஆலோசனை.


மேலும் ஆய்வு வேண்டாம்:   மரபணு கத்தரிக்காயை    பாதியளவு அனுமதிக்கலாம்;    தர மதிப்பீட்டு குழு ஆலோசனை

மரபணு கத்தரிக்காயை பாதியளவு அனுமதிக்கலாம் என்று தர மதிப்பீட்டுக்குழு யோசனை கூறி உள்ளது. கத்தரிக்காயில் “பேசிலியம் பிரிஞ்சோசிஸ் என்ற வைரசை பயன்படுத்தி உருவாக்கப்படுவது மரபணு கத்தரிக்காய். இந்த கத்தரிக்காயை பயிரிட்டால் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்களை அழித்து விடும். இதில் உள்ள இலைகளை ஆடு-மாடுகள் சாப்பிட்டால் இறந்து விடும். மரபணு கத்தரிக்காயில் உள்ள விதைகள் மீண்டும் முளைக்காது.

விவசாயிகள் ஒவ்வொரு முறையும் சர்வதேச கம்பெனிகளிடம் சென்று அதிக விலை கொடுத்து விதைகளை வாங்க வேண்டிய நிலைமை ஏற்படும். மரபணு கத்தரிக்காய் பயிரிட்டால் நமது நாட்டில் உள்ள கத்திரிக்காய் ரகங்கள் அனைத்தும் அழியும் ஆபத்து உள்ளது. இதனால் மரபணு கத்தரிக்காய்க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் திருத்தணிகாசலம் வழக்கு தொடர்ந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தன. இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுற்றுச் சூழல் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் மரபணு கத்தரிக்காய்க்கு தற்காலிக தடை விதித்தார். அப்போது அவர் கூறும் போது, “மரபணு கத்தரிக்காய் பற்றி மேலும் சில ஆய்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு அதை அறிமுகப்படுத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

இந் நிலையில் டெல்லியில் மரபணு மாற்று தரமதிப் பீட்டு குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பேசிய பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு கத்தரிக்காயை முதலில் பாதியளவு பயிரிட அனுமதி அளிக்கலாம். ஏற்கனவே மரபணு கத்தரிக்காய் பற்றி மேற்கண்ட ஆய்வுகளே போதுமானது. மேலும் அது பற்றி ஆய்வு நடத்த தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர். இது பற்றி மரபணு மாற்று தரமதிப்பீட்டு குழு இணை தலைவர் அர்ஜுனா ரெட்டி கூறும் போது, “இந்த ஆலோசனை கூட்டத்தில் 30 விஞ்ஞானிகன் பங்கேற்றனர்.

இதில் பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு கத்தரிக்காய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் கூட் டத்தில் இறுதி முடிவு எடுத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” என்றார். மரபணு மாற்று தர மதிப்பீட்டு குழுவில் சுப்ரீம் கோர்ட்டு,பார்கவா என்பரை நியமித்துள்ளது. அவர் கூறும் போது, “மரபணு கத்தரிக்காய் பற்றி மேலும் பல ஆய்வுகள் நடத்த வேண்டும். ஆய்வு நடத்தாமல் அதற்கு பாதியளவு கூட அனுமதி தர கூடாது. தர மதிப்பீட்டு குழுவில் உள்ள பெரும்பாலான விஞ்ஞானிகள் மரபணு தொழில் நுட்ப நிறுவனங்களை சேர்ந்தவர்கள், இதனால் தான் அவர்கள் மரபணு கத்தரிக்காயை ஆதரிக்கிறார்கள்” என்றார்.

மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மரபணு கத்தரிக்காய் பயிரிட அனுமதி அளிக்க கூடாது என்று சென்னையில் உள்ள தூளிகள் சுற்றுச் சூழல் அமைப்பு தலைவர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறி உள்ளார். அவர் கூறும் போது, ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் மரபணு கத்தரிக்காய்க்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தோம். அதன் பிறகு தான் மத்திய அரசு அதற்கு தடை விதித்தது. “மீண்டும் சர்வதேச மரபணு மாற்று நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் மறைமுகமாக மரபணு கத்தரிக்காயை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். மரபணு மாற்று காய்கறி, பழங்களை இந்திய மண்ணில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் மரபணு மாற்று காய்கறி, பழங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி சென்னையில் கருத்தரங்கம் நடத்துவோம்” என்று டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் : பிஏசி தலைவர் ஜோஷியின் அறிக்கை நிராகரிப்பு - சைபுதீன் சோஸ் பிஏசி தலைவரானார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டும் வகையில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (பிஏசி) தலைவரான பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உருவாக்கிய அறிக்கையை அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர்.

இதையடுத்து இந்த அறிக்கையை வெளியிடுவது குறித்து நடந்த ஓட்டெடுப்பில் ஜோஷியின் அறிக்கைக்கு எதிராக திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 11 பேரும், ஆதரவாக பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுகவைச் சேர்ந்த 10 எம்பிக்களும் வாக்களித்தனர்.

இதனால் 1 ஓட்டு வித்தியாசத்தால் ஜோஷியின் அறிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஜோஷி தலைமையிலான இந்த 22 பேர் குழுவில், காங்கிரஸ் சார்பில் 7 எம்.பிக்களும், திமுக சார்பில் 2 எம்பிக்களும், பாஜக சார்பில் 4 பேரும், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 2 எம்பிக்களும் உள்ளனர்.

இவர்கள் தவிர சமாஜ்வாடிக் கட்சி சார்பில் 2 பேரும், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை சார்பில் தலா ஒருவர் என 3 பேர் உள்ளனர். ஒரு இடம் காலியாக உள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தி வந்தது. ஆனால்,
பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியிடம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற திமுக-காங்கிரஸ் கோரிக்கையை ஜோஷி ஏற்கவில்லை.

மாறாக அவர் அவசரமாக வரைவு அறிக்கை தயாரித்து அதை மீடியாக்களுக்கும் நேற்று 'லீக்'செய்துவிட்டதாக திமுக-காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டின.

இந் நிலையில் ஜோஷியின் செயலுக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசிக்காமல் ஜோஷி ஏன் அறிக்கையை வெளியிட்டார் என்று அந்தக் கட்சிகள் கேள்வி எழுப்பின. இது குறித்து இன்று நடக்கும் இக் குழுவில் கூட்டத்திலும் பிரச்சனை கிளப்புவோம் என்று அறிவித்தன.

ஏற்கனவே திமுக-காங்கிரசும் இந்த அறிக்கைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிலையில் பகுஜன், சமாஜ்வாடிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால், இந்த அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் ஜோஷியால் இறுதி செய்ய முடியாத நிலை உருவானது.

இந் நிலையில் இன்று மாலை 4 மணிக்கு இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது தங்களிடம் ஆலோசிக்காமல் ஜோஷி உருவாக்கிய இந்த அறிக்கைக்கும், அதை மீடியாக்களுக்கு 'லீக்' செய்ததற்கும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஜோஷி உடனே பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடந்தது. உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த அறிக்கையை வெளியிடுவதா வேண்டாமா என்பது குறித்து ஓட்டெடுப்பு நடத்தலாம் என திமுக-காங்கிரஸ் ஆகியவை கோரின.

ஆனால், திடீரென கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு முரளி மனோகர் ஜோஷி வெளிநடப்பு செய்தார்.

பிஏசி தலைவரானார் சைபுதீன் சோஸ்:

இதையடுத்து ஜோஷிக்குப் பதிலாக மத்திய அமைச்சர் சைபுதீன் சோஸ் கமிட்டியின் தலைவராக திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடிக் கட்சி எம்பிக்கள் வாக்களித்தனர்.

கூட்டத்தில் அவர்கள் பெரும்பான்மையாக இருந்ததால், இதை பாஜக-அதிமுகவால் தடுக்க முடியவில்லை.

இதைத் தொடர்ந்து ஜோஷியின் அறிக்கை மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் 11 பேர் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தனர்.

பாஜக, அதிமுக, மார்க்சிஸ்ட் எம்பிக்கள் 10 பேர் ஆதரித்து வாக்களித்தனர். இதையடுத்து அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே ஓட்டெடுப்புக்கு முன்பே கூட்டத்தை முரளி மனோகர் ஜோஷி ஒத்திவைத்துவிட்டு வெளியேறிவிட்டாதால், அவர் தோற்கடிக்கப்படவில்லை என்றும், அவர் தான் மீண்டும் இக் கூட்டத்தைக் கூட்ட முடியும் என்றும் பாஜக கூறியுள்ளது.

இதனால் பிஏசியின் கதி என்னவாகும் என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

முன்னதாக நாளை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர், கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் ஆகியோரை இந்தக் குழு நாளை விசாரிக்க இருந்தது.

நாளை மறுதினம் தனது அறிக்கையை முறைப்படி சபாநாயகர் மீராகுமாரிடம் வழங்கவும் ஜோஷி திட்டமிட்டிருந்தார்.

இந் நிலையில், காங்கிரஸ் இந்த வரைவு அறிக்கையை நிராகரிக்க வைத்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கை மந்திரி திமிர் பேச்சு : ஐ.நா.குழு அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம்.


இலங்கை இறுதிக்கட்ட போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு அங்கு போர் குற்றம் நடந்ததாகவும், 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டதாகவும் தனது அறிக்கையில் கூறிஉள்ளது.

இதனால் அதிபர் ராஜபக்சே மற்றும் ராணுவ தளபதிகள் சர்வதேச போர் குற்ற விசாரணைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இலங்கை அரசை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் ஐ.நா. குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், இந்த அறிக்கையை குப்பை தொட்டியில் வீசுவோம் என்றும் இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை நாம் நிராகரிக்கின்றோம். இது சட்டவிரோதமானது. விசாரணை செய்ய அவருக்கு அனுமதி வழங்கியவர் யார்? இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்துமாறு அதிகாரப்பூர்வமாக கோரியவர் யார்? இலங்கை ஜனாதிபதியோ, மக்களோ, வேறு நிறுவனங்களோ விசாரணை நடத்துமாறு கோரவில்லை.

தன்னிச்சையாக நடவடிக்கையை எடுப்பதற்கு பான்கீமூனுக்கு உரிமை இல்லை. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். ஐ.நா. நிபுணர் குழு என்று இதனைப் பலர் குறிப்பிடுகின்றனர். இது நிபுணர் குழுவல்ல. ஐ.நா. பொதுச்செயலாளருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழு. பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட இந்த குழுவுக்கு ஆரம்பம் முதலே அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

இந்த குழுவுடன் நாம் எந்தவொரு நடவடிக்கையையும் ஒரு போதும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் இலங்கைக்கு வரவில்லை. சானல் 4 காட்சிகளையும் இலங்கையில் உள்ள ஐ.நா.வின் முன்னாள் பேச்சாளரான கோர்டன் வைஸ் தெரிவித்த கருத்துக்களையுமே அவர்கள் சாட்சியங்களாக பதிவு செய்துள்ளனர். கோர்டன் வைஸ் இலங்கையில் இருந்தபோது தாம் வடக்குக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் அவரின் சாட்சியங்கள் உண்மையென ஏற்றுக் கொள்வது எப்படி? இவ்வாறான அறிக்கை ஒன்றை நாடொன்று நிராகரித்த பின்னர் சர்வதேச அமைப்புகள் அதாவது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, அல்லது மனித உரிமை பேரவை போன்றன விசாரணையில் ஈடுபடாது.

அவ்வாறு ஈடுபடும் சம்பிரதாயமும் கிடையாது. அவ்வாறு அந்த நிறுவனங்கள் கோரும் பட்சத்தில் மாத்திரமே பான் கீ மூனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை கிடப்பிலே போட்டு முடிக்க வேண்டியதுதான் மிச்சம். அரசாங்கம் என்ற ரீதியில் இதனை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனவே அறிக்கையை குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது வரும். இவ்வாறு இலங்கை மந்திரி கலாநிதி சரத் கூறியுள்ளார்.

vizhiyepesu.blogspot.com

2ஜி விவகாரம்: ஜோஷியின் அறிக்கைக்கு காங்-திமுக பிஏசி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரித்து வரும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக திமுக, காங்கிரஸ் ஆகியவை குற்றம் சாட்டியுள்ளன.

பாஜக ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரியிடம் முழுமையாக விசாரணை நடத்தாமலேயே ஜோஷி அவசர அவசரமாக அறிக்கை தயாரித்துவிட்டதாக இந்தக் கட்சிகள் புகார் கூறியுள்ளன.

2ஜி வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதே போலல நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது. மேலும் இதே விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பாஜக, அதிமுகவின் நெருக்குதலால் இது குறித்து பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கும் உத்தரவிட்டது மத்திய அரசு. இந்தக் குழுவின் தலைவராக முரளி மனோகர் ஜோஷி உள்ளார். இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் இடம் பெற்றுள்ளனர்.

21 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தக் குழு சிபிஐ இயக்குனர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. ஆனால், அருண் ஷோரியை விசாரணைக்கு அழைக்க ஜோஷி மறுத்துவிட்டார்.

வரும் 30ம் தேதியுடன் இந்தக் குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து, அதற்கு முன்பாகவே விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய முரளி மனோகர் ஜோஷி திட்டமிட்டார். ஆனால், முழுமையாக விசாரிக்காமல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு திமுக, காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்தன.

பிஏசி என்பது நிரந்தரக் குழு என்பதால், பதவிக்காலம் முடிந்த பிறகும், அடுத்த குழு அமைக்கப்பட்ட பின்னரும் அறிக்கையை தாக்கல் செய்யலாம் என அவர்கள் கூறிவந்தனர்.

இந் தனது குழுவின் வரைவு அறிக்கை நகல்களை முரளி மனோகர் ஜோஷி திடீரென டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மீதும் இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரதமரும் துரதிருஷ்டவசமான சில தவறுகளை செய்திருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் செயல்படாமல் இருந்ததே தன்னிச்சையாகவும், நேர்மையற்ற முறையிலும் ஆ.ராசா செயல்படுவதற்கு வசதியாகப் போய்விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கை ஒருதலைப்பட்சமானது என்று முரளி மனோகர் ஜோஷிக்கு காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

வரைவு அறிக்கை வெளியானதும் இந்தக் குழுவில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுக எம்பிக்களான கே.எஸ்.ராவ், சைபுதீன் சோஸ், நவீன் ஜிண்டால், திருச்சி சிவா ஆகியோர் நிருபர்களி்டம் பேசுகையில்,

பாஜகவின் அரசியல் ஆதாயத்துக்காக முரளி மனோகர் ஜோஷி, அவசர அவசரமாக இந்த அறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். இந்த அறிக்கையை பிஏசியின் கூட்டத்தில் ஏற்கவிட மாட்டோம். கூட்டத்துக்கு ஒருவாரம் முன்பே தங்களுக்கு வரைவு அறிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வியாழக்கிழமை (இன்று) இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், புதன்கிழமைதான் நகல்கள் வழங்கப்பட்டன.

அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க வேண்டும் என்கிற தவறான உள்நோக்கம் குழுவின் தலைவராக இருக்கும் முரளி மனோகர் ஜோஷிக்கு உள்ளது. இதனால் முரளி மனோகர் ஜோஷி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றனர்.

பொதுகணக்கு குழுவில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.ராவ் கூறுகையில், அறிக்கையில் பல விஷயங்கள் தவறானவை, தீய எண்ணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.

மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், பொதுகணக்கு குழு அறிக்கை முறைப்படி வெளியிடுவதற்கு முன்பே சில செய்தி நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இது எப்படி வெளியானது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இந்த அறிக்கை குறித்து இன்னொரு மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறுகையில், இது பொதுக்கணக்கு குழுவின் அறிக்கை அல்ல, பாஜகவின் அறிக்கை. முரளி மனோகர் ஜோஷி பொதுக்கணக்கு குழுவின் தலைவராக அல்லாமல், பாஜக உறுப்பினர் போல் செயல்படுகிறார் என்றார்.

இந் நிலையில் இன்று இந்தக் குழுவின் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் கடும் மோதல் நடக்கும் என்று தெரிகிறது. 21 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட சமமான எண்ணிக்கையில் இருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் இந்த அறிக்கை ஏற்கப்படுமா என்பது சந்தேகமாகியுள்ளது.

இந்த அறிக்கை ஏற்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகள் எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமையும்.

ஸ்பெக்ட்ரம்: 5 செல்போன் நிறுவனங்களின் ரூ.10,000 கோடி சொத்துக்களை முடக்க அமலாக்க பிரிவு நடவடிக்கை.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரூ. 10,000 கோடி சொத்துக்கள் விரைவில் முடக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நிறுவனங்கள் எவை என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்த ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருகின்றன.

அமலாக்கப் பிரிவு நடத்திய விசாரணைகள் குறித்த லேட்டஸ்ட் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவு சார்பில் அதன் வழக்கறிஞர் வேணுகோபால் இந்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் ஈடுபட்ட 5 செல்போன் நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளன. இதன்மூலம் ஒவ்வொரு நிறுவனமும் தலா ரூ. 2,000 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்துள்ளன. இதில் முதல் கட்டமாக 2 நிறுவனங்களின் தலா ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை (மொத்தம் ரூ. 4,000 கோடி) முடக்க உள்ளோம் என்றார்.

இந்த சொத்துக்களில் அசையும், அசையா சொத்துக்கள் அடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் அமலாக்கப் பிரிவு சொத்துக்களை முடக்கவுள்ள அந்த 5 நிறுவனங்கள் எவை எவை என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை மூலம் ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பை அந்ததந்த நிறுவனங்களிடமிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கையை அமலாக்கப் பிரிவினர் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த நிறுவனங்கள் குற்றம் செய்ததாக நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய பின்னரே அந்த சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாக்கப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ள 5 நிறுவனங்களில் தலா ரூ. 2,000 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டால் அரசுக்கு ரூ. 10,000 கோடி திரும்பி வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் அமலாக்கப் பிரிவினர் சொத்துக்களை முடக்கவுள்ள முதல் இரண்டு நிறுவனங்கள், யுனினார் செல்போன் நிறுவனத்தை நடத்தி வரும் 'யுனிடெக் வயர்லெஸ்' மற்றும் ஷாகித் உசேன் பல்வாவின் 'ஸ்வான் டெலிகாம்' என்று தெரிகிறது.

இதில் யுனிடெக் நிறுவனம் ரூ.2,480 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ரூ.138 கோடி மட்டும் தந்து அடிமாட்டு விலைக்கு வாங்கியது.

இந்த இரு நிறுவனங்கள் தவிர, சொத்துக்கள் முடக்கப்படவுள்ள பிற நிறுவனங்கள், லூப்டெலிகாம், லூப் மொபைல், எஸ்.டெல் ஆகியவை என்று தெரிகிறது.

இந் நிலையில் தொழில் தரகர் நீரா ராடியா தனது சகோதரி தனது பெயரில் விர்ஜின் தீவில் உள்ள வங்கிகளில் பல்லாயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதையும் அமலாக்கப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதற்காக அந்த நாட்டில் 5 நிறுவனங்களை ஆரம்பித்துள்ளார் ராடியா.