Wednesday, April 27, 2011

மாணவிகளிடம் சில்மிஷம் : போலீஸ்காரருக்கு செருப்படி.

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் 3 கல்லூரி மாணவிகள் ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு பின்னால் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து இருந்தார்.

அந்த நபர் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவிகள் இருக்கையின் முன் பகுதிக்கு சென்றாலும் அந்த நபர் விடாமல் தனது சில்மிஷத்தை அரங்கேற்றி வந்தார்.

அந்த நபரின் சில்மிஷம் அதிகமானதால் அந்த 3 மாணவிகளும் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர். ஆனாலும் அந்த நபர் அந்த இருக்கை அருகே சென்றும் அந்த மாணவிகளிடம் சில்மிஷம் செய்தார்.

மாணவிகள் அவரை முறைப்பார்த்து திட்டினர். ஆனாலும் அந்த நபர் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அத்துமீறலில் இறங்கியுள்ளார்.

பஸ் தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது 3 மாணவிகளும் கீழே இறங்கி கொண்டனர். அந்த நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய அந்த நபரை 3 மாணவிகளும் சுற்றிவளைத்து தாங்கள் அணிந்திருந்த செருப்பால் சரமாரியாக அடித்தனர்.

இதைப்பார்த்த மற்ற பயணிகள் அந்த மாணவிகளிடம் ஏன் அடிக்கீறிர்கள் என்றனர். அப்போது நடந்த விபரங்களை மாணவிகள் கூறியதும், அருகில் இருந்த பஸ் பயணிகள் அனைவரும் சேர்ந்து தாக்க தொடங்கினர்.

வலி தாங்க முடியாத அந்த நபர் தான் போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டே அவர்களிடம் இருந்து தப்பி தர்மபுரி பஸ்நிலையத்தில் உள்ள போலீஸ் புறக்காவல் நிலையத்திற்குள் ஓடி ஒளிந்தார்.

இதையடுத்து 3 மாணவிகளும் தங்களது செல்போனில் அந்த சில்மிஷ போலீஸ்காரரை போட்டோ எடுத்தனர். மேலும் உன்னை சும்மா விட மாட்டோம் போலீசில் உன்மீது புகார் கூறுகிறோம் என்றனர். இந்த சம்பவம் காரணமாக பஸ்நிலையம் முழுவதுமே பரபரப்பாக காணப்பட்டது.

அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் பஸ்நிலைய தாதாக்கள் சிலர் அந்த மாணவிகளை பார்த்து நீங்கள் படிக்கின்ற மாணவிகள் போலீசில் புகார் செய்தால், உங்கள் படிப்பு வீணாகி விடும். போய் விடுங்கள், இந்த பிரச்சினையை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அந்த மாணவிகளை புகார் கொடுக்க விடாமல் அனுப்பி வைத்தனர்.

நடிகர் கார்த்தி திருமணம்.


பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது.

ஈரோட்டைச்சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார்.

இது குறித்து கார்த்தியின் தந்தை சிவக்குமார், ‘’ஈரோட்டைச்சேர்ந்த ரஞ்சனியை கார்த்தி திருமணம்

செய்கிறார். மணப்பெண் ரஞ்சனி எம். ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். ஜூலை 3ம் தேதி கார்த்தி -ரஞ்சனி திருமணம் நடைபெருகிறது’’ என்று அறிவித்துள்ளார்

யாருக்காக இந்த ஐ.நா. அறிக்கை?


இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான தமது அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு, செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்து உள்ளது. இந்த அறிக்கை முழுமையாக வெளியிடப்படப்போவதாகவும், கிடப்பில் போடப்படவிருப்பதாகவும் பலவிதமான செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

இதனிடையே, இந்த அறிக்கை ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போலவும், இத்தோடு தமிழர்களுடைய பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது போலவும் சில உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ்த் தரப்புக்களும், ஊடகங்களும் இதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து மாறி மாறி கருத்து வெளியிட்டு வருகின்றன.

அறிக்கையின் முக்கியத்துவம்

இறுதி யுத்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக உலகளவில் முக்கிய தரப்பு ஒன்றிடமிருந்து வெளியிடப்பட்டிருப்பது இந்த அறிக்கையின் முக்கிய அம்சம். இதில், அரசாங்கத் தரப்பு மட்டுமன்றி, புலிகள் தரப்பு மேற்கொண்ட குற்றங்க ளையும் அது விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது.

அரச படைகள் ஷெல் தாக்குதல்கள், உணவுத் தடை, யுத்தப் பகுதிகளிலிருந்து வந்த மக்களைத் துன்புறுத்தியமை, புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது என்றால, புலிகள் தரப்பும் பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை, அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தப்பியோட முயன்றவர்களைச் சுட்டுக்கொன்றமை, சிறுவர்களைப் பலாத்காரமாகப் படையில் சேர்த்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் எதுவும் இப்போதுதான் தெரிய வந்துள்ள புதிய விடயங்கள் என்று சொல்வதற்கில்லை. போர் நடைபெற்ற பகுதி களில் வாழ்ந்த மக்களும், அவர்கள் மூலமாக ஏனையோரும் அறிந்திருந்த விடயங்களே, ஐ.நா. அறிக்கையாக வந்திருக்கிறது. புலிகள் தரப்பு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் பற்றி வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருப்பதே இதில் புதிதாக உள்ளது.

நோக்கம் என்ன?

இறுதிப் போர்க் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இப்போது அக்கறைப்படும் ஐ.நா., போர்க்குற்றங்கள் நடைபெற்ற காலத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன்? இப்போது என்ன புதிய அக்கறை வந்துள்ளது?

உச்சக்கட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், புலம்பெயர் தேசங்களெங்கும் வீதிகளில் இறங்கிப் போரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு எந்தத் தரப்பும் செவிமடுக்கவில்லை. மக்களைக் காப்பாற்றுவதற்கு அப்போது ஐ.நா.வோ, அல்லது எந்தவொரு மேற்குலக நாடோ முன்வரவில்லை.

மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது வாளாதிருந்தவர்கள், இப்போது திடீர் அக்கறை கொள்ளும் நோக்கமென்ன? இந்த அறிக்கையும், இதன் மூலமாக எடுக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளும், இறந்துபட்டவர்களை மீட்டுத் தருமா என்ன?

போரை நடத்தியவர்கள்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து முழு உலகமுமே நடத்தியது என்பதுதான் உண்மை. புலிகளின் ஆனையிறவு முகாம் தாக்குதல், கட்டுநாயகா விமானத்தளத் தாக்குதல் போன்றவற்றால் விழித்தெழுந்த உலக வல்லரசுகள், விடுதலைப் புலிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட வழிசெய்தனர்.

புலிகள் அதைப் புறந்தள்ளி போர் வழிமுறையை மீண்டும் நாடியபோது, அவர்களை அழித்துவிடக் முடிவு செய்தனர்.

ஏன்?

இந்துசமுத்திரப் பிராந்தியம் என்பது முழு உலகத்தினதும் முக்கியமான கப்பல் போக்குவரத்து மார்க்கம். இதனால்தான் காலனித்துவக் காலம் முதல் உலக நாடுகள் இலங்கை மீது ஒரு கண் வைத்து வருகின்றன.

இந்த இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இலங்கை என்ற குட்டித் தீவில், ஒரு அரசு அல்லாத அமைப்பு, வான்படை, கடற்படை, பீரங்கிப் படைகள், தற்கொலைப் படை என்று அதீத பலத்துடன் இருப்பதை எந்த நாடும் விரும்பவில்லை. அரசாங்கம் ஒன்றைப் போலன்றி, அரசு அல்லாத அமைப்பொன்றை எந்தவொரு சர்வதேச சட்டங்களும் கட்டுப்படுத்தாது. இந்த நிலையில், அத்தகைய அமைப்பிடமிருக்கக்கூடிய அதீத போர்வலு, முழு உலகுக்குமே ஆபத்தாகிவிடும் என்பதே உலக வல்லரசுகளின் கணி்ப்பாக இருந்தது.

இதனாலேயே, போர்நிறுத்த உடன்படிக்கை, பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நோர்வே மூலமாக மேற்குலகம் அதிக பணத்தையும், முயற்சிகளையும் அள்ளிக் கொட்டியது. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலைப் புலிகளின் போர் வலுவைக் குறைத்து அல்லது சிதைத்து, ஏதோவொரு தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ந்து போர் நடைபெறாமல் செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது.

ஆனால், மேற்குலகின் செல்லப்பிள்ளையாக இருந்த ரணில் விக்கிரமசிங்காவை தேர்தலில் தோற்கச் செய்து, தொடர்ந்து மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் காலத்தில் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தபோது, சாம, பேத, தானம் கடந்து, தண்டமே ஒரே வழி என்ற முடிவுக்கு உலக வல்லரசுகள் வந்துவிட்டன.

இந்த உலக வல்லரசுகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடன்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு படைக்கல உதவிகளையும், பயிற்சிகளையும், கடற் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், புலனாய்வுத் தகவல் மற்றும் சற்றலைட் தகவல் உதவிகளையும் வழங்கின. இதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.

அரசியல் இராஜதந்திர நகர்வுகளை அதன் வழியிலேயே எதிர்கொள்ளாமல் போர் வழியைத் தெரிவுசெய்த விடுதலைப் புலிகள், இந்த அனைத்துலகப் போர் முகத்துக்கு முகம் கொடுக்க முடியாமல் தோற்றுப்போக நேர்ந்தது.

புதிய சூழல்

எனினும், போரின் இறுதி நாட்கள் மற்றும் போருக்குப் பிந்திய சூழலை இந்தியாவும், சீனாவும் வேகமாகத் தமக்குச் சாதகமாக்கிக்கொண்டுவிட்டன. இதனால், இதுவரை காலமும் மேற்குலகின் பிடிக்குள் இருந்த இலங்கை, அதிலிருந்து விடுபட்டு இந்திய, சீன, ரஷ்ய ஆதரவுடன் அதற்குச் சவால் விட முடிந்தது.

இதுவே மேற்குலகுக்கு ஏற்பட்ட சங்கடம். இதனால்தான் இப்போது அவர்களுக்குப் போர்க்குற்ற விசாரணை தேவைப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை என்ற நெருக்குவாரத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் முடிந்தளவுக்குக் கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கம்.

மேற்குலகின் இந்த நெருக்குவாரத்துக்கு ஓரளவுக்கேனும் இலங்கை அரசு பணிந்து அசைந்து கொடுக்குமானால், இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுவிடும். அரசியலில் இதெல்லாம் சகஜம்.

இந்த சர்வதேச அரசியல் யதார்த்தம் புரியாமல், ஐ.நா. வின் நிபுணர் குழு அறிக்கையால் ஏதோ தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிட்டதுபோல் மகிழ்ச்சி யடைவது சுத்த மடமைத்தனம். நீதி கிடைக்கவேண்டும் என்பது நியாயமான கோரிக்கையேயாயினும், மேற்குலகின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் சாணக்கியத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று பகல் கனவு காண்பது முட்டாள்த்தனம்.

ஒருவேளை இந்த விசாரணைகள் மூலம் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப் பட்டுவிட்டால், அதன்மூலம் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா என்ன? அதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த அறிக்கை தமிழர்களுக்கு வழங்குகிறது?

எப்படித் இலங்கைத் தீவில் தமிழர் பிரச்சினையை இலங்கை, இந்திய, மேற்குலக நாடுகள் இத்தனை காலமும் தமது நலன் நோக்கிலிருந்து பந்தாடி வந்தனவோ, அதுவே இப்போதும் மீண்டும் அரங்கேறுகிறது. இதைப் பார்த்து மயங்கினால் இன்னும் ஆபத்துக்களை நோக்கித்தான் தமிழர்கள் செல்லவேண்டியிருக்கும்.

பாதிக்கப்பட்ட மக்கள் VS புலம்பெயர் மக்கள்

மேற்குலக நாடுகளின் நலன்களை மையப்படுத்தும் இந்த அறிக்கை, அந்த நாடுகளில் அதிகளவில் வாழும் புலம்பெயர் தமிழர்களை அதிகளவில் மகிழ்வித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. மேற்குலக நாடுகளில் தங்கியிருக்கும் இந்த மக்களுக்கு அந்த நாடுகளின் நலன்களும் அவசியமே என்பதால், அவர்கள் பக்கத்தில் இது சரியாக இருக்கலாம்.

ஆனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுடைய நிலைமை அப்படியல்ல. மேற்குலகின் நலன்களுக்கோ அன்றி வேறெந்த நாடுகளின் நலன்களுக்கோ துணைபோவதால் அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிட்டிவிடப் போவதில்லை. இன்னும் மோசமாகவே செய்யும்.

போரின் இறுதி நாட்களில், ஒரு கவளம் சோற்றுக்கும் வழியின்றி, தினம்தினம் பிணங்களாகக் குவிந்துகொண்டிருந்தபோது திரும்பிப் பார்க்காத தேசங்களும், சர்வதேச மனித உரிமைகளும், சட்டங்களும், எல்லாம் முடிந்தபின் இப்போது விழித்தெழுவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்பதே இவர்களது கேள்வியாக இருக்கிறது.

சட்டம் எப்போதும் குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கும். இனிமேல் அத்தகைய குற்றங்கள் நடப்பதைத் தடுப்பது அதன் நோக்கம் என்று அது வக்காளத்து வாங்கும். ஆனால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் போனபின், எஞ்சியிருப்பவர்களின் நிலை பற்றி சட்டங்கள் ஒருபோதும் பேசுவதில்லை.

கொலைசெய்தவரைக் கழுவேற்றுவதால் இறந்துபோனவர் உயிர்த்துவிடுவாரா? ஐ.நா. கூறுவதுபோல் மக்கள் மீது ஷெல் அடித்தவர்கள் மீதும், தப்பிவர முனைந்த வர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

நடந்துபோன விடயங்களுக்கு அரசாங்கத்தையோ, புலிகளையோ குற்றஞ் சாட்டிக்கொண்டிருப்பது, ஏசி அறைகளுக்குள்ளிருந்து அறிக்கை தயாரித்து அளவளாவுபவர்களுக்கு வேண்டுமானால் சௌகரியமாக இருக்கலாம்.

போரில் இழந்தவர்களும், இழந்தவைகளும் போக, மிஞ்சியிருப்பவர்கள் தமது வாழ்வைக் கட்டியெழுப்ப ஏதாவது உருப்படியாகச் செய்ய முடிந்தால், அதுவே இப்போது புண்ணிய காரியமாக இருக்கும்.

http://www.jaffnatoday.com/?p=770

தமிழக எல்லையில் எண்டோசல்பான் : நடிகர் கலாபவன் மணி ஆய்வு.


கோவை மாவட்டம், வால்பாறையில் நடிகர் கலாபவன்மணி செய்தியாளர்களிடம்,

கேரளாவில் பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படும் எண்டோசல்பான் நிலத்தையும், நீரையும் பாதித்துள்ளது. விவசாயிகள் பலர் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த மருந்தை தடை செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கேரளாவில் முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம் இருந்தார். இதில் நடிகர்கள், எழுத்தாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்ய நடிகர்களும் வலியுறுத்தி வருகிறோம்.

வால்பாறைக்கு சூட்டிங் லொகேஷன் பார்க்க வந்தேன். வரும் வழியில் சோலையார் அணை அருகே கேரள பகுதியான மழுக்குப்பாறையில் உள்ள தேயிலை தோட்டங்களில் எண்டோசல்பான் பயன்பாடு மற்றும் பாதிப்பு குறித்து நானே ஆய்வு நடத்தினேன்.

எண்டோசல்பான் பூச்சி மருந்தை தடை செய்யக்கோரும் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதற்காக தன்னார்வமாக இதை மேற்கொண்டேன். அங்கு கிடைத்த தகவலை கேரள அரசுக்கு தெரிவிப்பேன்’’என்று கூறினார்.

தமிழக எல்லைப்பகுதியில் அமைந்த கேரள தேயிலை தோட்டங்களில் கலாபவன்மணி ஆய்வு மேற்கொண்டது வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பட்டியலை இலங்கை அரசு வெளியிடவேண்டும் : ஐ.நா. விசாரணை குழு வற்புறுத்தல்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள   விடுதலைப்புலிகள் பட்டியலை இலங்கை அரசு வெளியிடவேண்டும்:   ஐ.நா. விசாரணை குழு வற்புறுத்தல்

இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா, குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் இலங்கை போர் குற்றம் செய்ததாக சுட்டிகாட்டி இருப்பதுடன் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பரிந்துரைகளையும் செய்து உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

இலங்கை அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பின்வரும் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு நீதியான விசாரணையை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

இலங்கை அரசின் விசாரணைகளை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அனைத்துலக கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

கண்காணிப்பு குழு இலங்கை அரசின் விசாரணைகளை உன்னிப்பாக கண்காணித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆதாரங்களை சேகரித்து, அதனை பாது காத்து வழங்க வேண்டும்.

இலங்கை அரசினாலும், அதனுடன் இணைந்து இயங்கும் துணை ராணுவக் குழுக்களினாலும் மேற் கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

போரில் கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களின் எச்சங்கள் வழங்குவதுடன் அதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

காணாமல் போனவர் கள் மற்றும் இறந்தவர் களுக்கான மரணச்சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

போரில் தப்பியவர்களுக்கு சமூக மற்றும் உள வியல் உதவிகளை வழங்க வேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு அவர்கள் விரும்பிய இடங்களில் குடிய மர்த்தப்பட வேண்டும்.

விடுதலை செய்யப்பட்டவர்கள் தமது இயல்பு வாழ்வுக்கு திரும்பும்வரை தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசர காலச்சட்டம், பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்பன நீக்கப்பட வேண்டும். அல்லது அதனை அனைத் துலக தராதரத்திற்கு மாற்ற வேண்டும்.

தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் பெயர் விபரங்களும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடமும் வெளியிடப்பட வேண்டும்.

அவர்களை பார்வை யிடுவதற்கு உறவினர் களும், வக்கீல்களும் அனுமதிக் கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் மூலம் அவர் களுக்கு நீதி வழங்கப் பட வேண்டும். * குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படு வதுடன், ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

சுதந்திரமான நடமாட்டங்களை தடை செய்யும் இலங்கை அரசின் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

பொது அமைப்புக் களுடன் இணைந்து சமூகப் பிரச் சினைகளை இலங்கை அரசு ஆராய வேண்டும். அதற்கு நல்லிணக்க ஆணைக் குழுவின் தகவல்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

போரின் இறுதி நாட்களில் இடம் பெற்ற பொது மக்களின் இழப்புக்களுக்கு அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இறுதிகட்ட போரின் போது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இலங்கை அரசு அனைத்துலக தரத்தில் சிறப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

2009-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன் வைத்த தீர்மானத்தை ஐ.நா. மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்.

மனித உரிமைகளை மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளை நடை முறைப்படுத்துவது தொடர் பாக போரின் போதும், போரின் பின்னரும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனிமொழி மீது குற்றப் பத்திரிகை: சட்டப்படி சந்திப்போம் ; கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை குழுவில் தீர்மானம்.

கனிமொழி மீது குற்றப் பத்திரிகை: சட்டப்படி சந்திப்போம்; கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை குழுவில் தீர்மானம்

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான 2-வது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதில் கனிமொழி எம்.பி. பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருகிற 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கூடியது.

காலை 10 மணிக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி வந்தார். அதன் பிறகு அவரது தலைமையில் கூட்டம் தொடங்கியது. தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், துணை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி., ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, கோ.சி. மணி, வீரபாண்டி ஆறுமுகம், டி.ஆர்.பாலு, பரிதி இளம்வழுதி, சற்குணபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம், சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஸ்பெக்ட்ரம் குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் இடம் பெற்றுள்ளதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை, அதை எப்படி சட்டப்படி அணுகுவது, இன்றைய அரசியல் நிலவரம், எதிர்கால நடவடிக்கைகள் உள்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை குறித்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

பூதத்தைப் பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவது போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் பின்பற்றப்பட்ட நடைமுறையால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளதோடு, பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களையும் கைது செய்துள்ள நிலையில், அவற்றில் ஒரு நிறுவனத்தினிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, பின்னர் வட்டி யுடன் திரும்பச் செலுத்தியுள்ள விவரத்தை, வருமான வரித்துறை சான்று ஆவணங்களுடன் ஒப்படைத்திருப்பினும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழியையும், இயக்குநர் சரத்தையும் சி.பி.ஐ. துறையினர் நீதிமன்றத்திற்கு அளித்த 2-வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி இந்தக் குழுவை வியப்பில் ஆழ்த்துகிறது.

2-ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, எப்படியாவது தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி, இன்று தொடரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின ரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே ஊழல் செய்வதையே தமது கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி தலைவர்களும் திராவிட இயக்கத்தின் ஆணிவேராக உள்ள தி.மு.க.வையும் அதன் செல்வாக்கு மிகுந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞரையும், எப்படியேனும் அரசியல் தலைமையில் இருந்து வீழ்த்திவிட வேண்டும் என்னும் அவலாசை கொண்டு அலையும் ஏடு களும், இந்தச் செய்தியை மூல தானமாகக் கொண்டு, கழகத்திற்கு அதிர்ச்சி ஏற் படுத்தி, அதைக் கலகலக்கச் செய்யலாம் என்னும் உள் நோக்கத்துடன், பல வகை யிலும் செயல்படுவதை, ஊடகங்களின் நிருபர்கள் எழுப்பும் கேள்விகளாலும், வெளியிடும் செய்திகளாலும் அறியலாம்.

அப்படிப்பட்ட ஒரு பிரச்சார மாயைக்கு கழகம் இரையாகாது என்பதுடன், எதையும் அளவறிந்தும், முறை அறிந்தும், செயற் படுவதன் மூலம் உண்மையை நிலைநாட்டிடும் சிறப்புடைய தி.மு.க., இந்த வழக்கிலும், உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பு காட்டுகிறார்கள் : உயர் நிலை குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு.

வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பு காட்டுகிறார்கள்: உயர் நிலை குழு கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் கனிமொழி பற்றி முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டு மென்று கருதுகிறவனும் அல்ல.

நானே கைது செய்யப்பட்டபோது கூட- என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.

நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் -தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர் காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் -திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் - கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் - வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 17 ஆயிரத்து 2 பேர் - து£த்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் -குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் 5 ஆயிரத்து 77 பேர் - நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் - காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர்.

இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறு கள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதை யெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப் படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயி லிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்ககாத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல -கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்.

இவ்வாறு அவர் பேசினார்.