Monday, April 25, 2011

இரண்டு தலை, நான்கு கண்கள், இரண்டு மூக்கு, இரண்டு வாய் உள்ள குழந்தை - வீடியோவுடன்.

தமிழனாய் ஒன்றிணைந்து செயல்படுவோம்: காட்பாடியில் சீமான் பேச்சு.

தமிழனாய் ஒன்றிணைந்து செயல்படுவோம்: காட்பாடியில் சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திரா, கேரளாவில் சாதி கட்சிகள் இல்லை. தமிழ்நாட்டில் தான் சாதி கட்சிகள் உள்ளது. அவர்கள் தமிழன் என்ற தேசிய இனத்தை சாதி என்ற பெயரில் கூறு போடுகிறார்கள். ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கருணாநிதி வீட்டில் போய் நிற்காமல் தனியாக நின்று இருந்தால் சீமானுக்கு இந்த வேலையே இருந்து இருக்காது நானும் அவர்களுடன் சேர்ந்து இருப்பேன்.

தமிழர்கள் கொன்று குவிப்பு இலங்கையில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அது நடந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. அப்படி இருந்தும் இந்த தேர்தலில் தமிழர் இனத்தை பற்றி ஒரு தலைவர் கூட பேசவில்லை. இனத்தை கொன்ற சோனியா அருகில் போய் அவர்கள் நிற்கின்றனர். தமிழ்நாட்டின் வரலாற்று எதிரி காங்கிரஸ். இந்த காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகதான் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் கூறினேன்.

ஜெயலலிதாவை முதல்வர் ஆக்குங்கள் என்று நான் கூறவில்லை தமிழக மீனவர்கள் 554 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நம்முடைய எதிரி நாடு. ஆனால் அவர்கள் யாரும் எல்லை மீறி வந்துவிட்டார்கள் என நம் மீனவர்களை கொல்ல வில்லை. இலங்கை அடிமை நாடு அவர்கள் நம் மீனவர்களை சுட்டு கொல்கின்றனர்.

ராஜபக்சேவுக்கு இந்தியா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறது. தேசிய கட்சிகள் நமக்கு தேவை இல்லை. மக்கள் தமிழர் என்ற தேசிய உணர்வுடன் இருக்க வேண்டும். சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது. தமிழர் என்ற அடையாளத்தின் கீழ் அனைவரும் இணையும் போது தான் சாதி ஒழியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: சேவை திட்டங்கள் முழு விபரம்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் கோடி சொத்து: சேவை திட்டங்கள் முழு விபரம்

ஆன்மிக வள்ளல் என்று உலகமே புகழும் ஸ்ரீசத்ய சாய்பாபா கடந்த 70 ஆண்டுகளாக செய்த சித்தாடல்கள் ஏராளம். அவர் கையை ஒரு சுழற்று சுழற்றினால் கைக்கடிகாரம், மோதிரம், பூ இனிப்பு என்று வந்தன. அவற்றை பெற்றவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் தீர்ந்தன.

சாய்பாபா முன்பு சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு சென்றாலே மனம் அமைதியாகி, பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாக லட்சக்கணக்கானோர் கூறினார்கள். இதன் காரணமாகத்தான் சாய்பாபாவிடம் கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக திரண்டது.

அதை வைத்து 1972-ம் ஆண்டு ஸ்ரீசத்ய சாய் அறக்கட்டளையை சாய்பாபா தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் தலைவராக சாய்பாபா இருந்தார். செயலாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி உள்ளார். அறக்கட்டளை உறுப்பினர்களாக மும்பை தொழில் அதிபர் இந்துலால் ஷா, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி பி.என்.பகவதி, டி.வி.எஸ். நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன், சத்யசாய் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி.கிரி, சாய்பாபாவின் இளைய சசோதரர் ஜானகிராமின் மகன் ரத்னாகர் ஆகியோர் உள்ளனர்.

சாய்பாபா அறக்கட்டளைக்கு வருமான வரி தாக்கல் ஆவணத்தின்படி புட்டபர்த்தியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஆந்திர மாநில அரசு அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்புப்படி ரூ.40 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் சுமார் 180 நாடுகளில் சாய்பாபா அறக்கட்டளை நடத்தி வரும் பள்ளிகள், ஆசிரமங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்களின் வருவாய், சொத்துக்களை கணக்கிட்டால் அது ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சொத்து தகவல்களை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. அறக்கட்டளையை நிறுவிய சாய்பாபாபா தனது சமூக சேவையை தன் ஊரில் இருந்தே தொடங்கினார். புட்டபர்த்தியை எல்லா வசதிகளும் கொண்ட நகரமாக மாற்றினார். தனக்கு வந்த நன்கொடை பணத்தையெல்லாம் கல்வி, மருத்துவம் மற்றும் சமூக சேவை பணிகளுக்கு வாரி, வாரி வழங்கினார்.

ஐசக் டைகுரட் என்ற அமெரிக்க நாட்டுக்காரர் 1991-ம் ஆண்டு சாய்பாபா அறக்கட்டளைக்கு 300 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார். அந்த பணத்தை கொண்டு புட்டபர்த்தியில் 10 மாதத்தில் உலக புகழ் பெற்ற ஸ்ரீசத்யசாய் மருத்துவமனையை உருவாக்கினார். 360 படுக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்ட அந்த மருத்துவமனையில் இன்றுவரை அனைவருக்கும் இலவசமாக எல்லாவித சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுபோல பெங்களூரில் ரூ.500 கோடி மதிப்பில் மற்றொரு நவீன மருத்துவ மனையை கட்டினார். புட்டபர்த்தியில் மருத்துவமனை தவிர பல்கலைக்கழகம், உலக ஆன்மீக மியூசியம், அறிவியல் கோளரங்கம், ரெயில் நிலையம், விளையாட்டு ஸ்டேடியம், இசை கல்லூரி, விமான நிலையம், உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு வளாகம் போன்றவை சாய்பாபா ஆசீர்வாதத்தால் கட்டப்பட்டன.

இவை தவிர நாடெங்கும் 1200-க்கும் மேற்பட்ட சத்யசாய் வழிபாட்டு மையங்கள் உள்ளன. சுமார் 180 நாடுகளில் கல்வி, கலாச்சார மையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 .5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று முன்பு கூறப்பட்டது.

ஆனால் 5 லட்சம் கோடியை தாண்டும் அளவுக்கு சொத்துக்கள் உள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம்: கனிமொழி மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.

சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.

கனிமொழி, சரத்குமார் தவிர சினியுக் மற்றும் குசேகாவ் நிறுவனம் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அவதூறாகப் பேசி வரும் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் - கருணாநிதி.


திமுக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இன்று முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும்:

கேள்வி: முக்கிய கோப்புகளை அழிக்க தி.மு.கழக அரசு முயற்சி செய்வதாக அ.தி.மு.க.வினர் சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்திருக்கிறார்களே?

முதல்வர்: அ.தி.மு.க.வின் தலைவர்களோ, தளபதிகளோ நான்கைந்து தளபதிகள் ஒரு புகார் எழுதி அரசு தலைமைச் செயலகத்தில் கோப்புகள் எல்லாம் மாற்றப்பட்டும், சிதைக்கப்பட்டும் வருகின்றன, அதை உடனடியாகத் தடுக்க வேண்டுமென்றும், அதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

அந்த மனுவில் இப்போது நடைபெறுவது காபந்து சர்க்கார் என்று அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் பி.எச். பாண்டியனை பெரிய வழக்கறிஞர்களில் ஒருவர் என்று கருதிக் கொண்டிருக்கிறேன். அவருடைய மகன் மனோஜ் பாண்டியனும் அவரை விடத் திறமையான வக்கீல் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்தப் புகார்ப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ள மனோஜ் பாண்டியன் இந்தச் சர்க்காரை காபந்து சர்க்கார் என்று சொல்லியிருப்பது நகைப்புக்குரியதாகும்.

சட்டக் கல்லூரியின் வாசலைப் பார்த்தவர்கள் கூட காபந்து சர்க்காருக்கும், இப்போது நடைபெறுகின்ற சர்க்காருக்கும் உள்ள வித்தியாசத்தை நிச்சயமாக உணர்வார்கள். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தொடர்ச்சியான அரசு தான்.

தேர்தல் முடிவு வெளி வந்து அதுவரையில் ஆட்சியில் இருக்கிற கட்சி தோற்றுப் போய் வீட்டிற்கு அனுப்பப்படுமேயானால் அடுத்து ஒரு சர்க்கார் அமைவதற்கு முன்பு இடையில் அரசாங்க நிர்வாகத்தில் தடங்கலோ தொய்வோ ஏற்பட்டு விடாமல் புதிய அமைச்சரவை அமைகிற வரையில் கவர்னர் அவர்களால் அனுமதிக்கப்படுகிற அரசுக்குத் தான் காபந்து சர்க்கார் என்று ஒரு கிராம வாசிக்குக் கூடத் தெரியும்.

புதிய தலைமைச் செயலக வளாகம் இன்று நேற்றல்ல. 13 3 2010 அன்றே பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும், திருமதி சோனியா காந்தி அவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டதாகும். அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் இந்தக் கட்டிடத்தில் தான் நடைபெற்றது. ஆளுநர் உரையும் கூட இங்கே தான் நிகழ்த்தப்பட்டது. அதையொட்டிய பொது விவாதமும் இங்கே தான் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையும் இந்த வளாகத்தில் தான் படிக்கப்பட்டது. அதற்கான விவாதமும் இங்கே தான் நடைபெற்றது.

இன்று வரையில் இந்தக் கட்டிடத்தில் ஏழு அமைச்சரவைக் கூட்டங்கள் இங்கே நடைபெற்றிருக்கின்றன. திரிபுரா கவர்னர் என்னை வந்து இங்குள்ள முதலமைச்சர் அறையில் சந்தித்து நீண்ட நேரம் உரையாற்றி விட்டுச் சென்றிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், நாராயணசாமி, ஆகியோர் இந்தக் கட்டிடத்திற்கு வருகை தந்திருக்கிறார்கள். தமிழக ஆளுநர் பர்னாலா அவர்கள் ஒரு நாள் முழுவதும் அவர் உடல் நிலையைக் கூடப் பொருள் படுத்தாமல் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு பாராட்டிச் சென்றிருக்கிறார்.

வீடியோ கான்பரென்ஸ் நிகழ்ச்சிகள் பல குறிப்பாக கால்டுவெல் நினைவில்லத் திறப்பு விழா ஐந்திணை மரபணுப் பூங்காக்கள் திறப்பு விழா மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற விழா தேர்வாணையக் கழகக் கட்டிடக் கால்கோள் விழா போன்றவைகள் இங்கே தான் நடைபெற்றன.

அரசின் பல்வேறு துறைகள் பொதுத் துறை, உள்துறை, பொதுப்பணித் துறை, தொழில் துறை, சட்டப் பேரவைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை போன்றவைகள் எல்லாம் இந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்போது கோப்புகளைத் திருத்துகிறோம் அல்லது திருடுகிறோம் என்றெல்லாம் வழக்கம் போல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். கோப்புகளைப் பற்றியும் அவைகள் எங்களுடைய நிர்வாகத்தில் பாதுகாப்பற்றுப் போய் விடும் என்பது பற்றியும் இந்த மூன்று நான்கு பேருக்கு முன்பே அம்மையார் ஜெயலலிதா அவர்களால் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

தேர்தல் தொடங்கியது முதல் இந்நாள் வரையில் பல அவதூறுகளை அ.தி.மு.க.வினர் குறிப்பாக அவர்களுடைய தலைவி ஜெயலலிதாவினால் இந்த அரசின் மீதும், என் மீதும் சுமத்துவதை எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டிருக்கின்றது.

கேள்வி: காபந்து சர்க்கார் அல்ல, தொடர் அரசு என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சில அதிகாரிகள் உங்களைக் கேட்காமலேயே தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கிறார்களே, நேற்று கூட பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், அந்தத் துறையின் அமைச்சரைக் கேட்காமலேயே தேர்வு முடிவு வரும் நாட்களை யெல்லாம் அறிவித்திருக்கிறார்களே?

முதல்வர்: அது அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு. நான் சொன்ன விஷயத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.

கேள்வி: அ.தி.மு.க. கொடுத்துள்ள புகார் குறித்து தேர்தல் ஆணையம் உங்களிடம் விளக்கமோ, தகவலோ கேட்டிருக்கிறதா?

முதல்வர்: தேர்தல் ஆணையத்திற்கு நேற்றிரவு தான் புகார் மனுவை அனுப்பியிருக்கிறார்கள். இன்று காலையில் பத்திரிகைகளில் அந்தச் செய்தி வந்திருக்கிறது. எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறீர்கள். ஏனென்றால் இது உங்களுக்கு மிகவும் சுவையான விஷயம். அதனால் வெளியிட்டிருக்கிறீர்கள். எனவே அதற்காக வழக்கு போடுகிறோம்.

கேள்வி: வழக்கு யார் மீது போடுகிறீர்கள்?

முதல்வர்: எங்கள் சட்ட வல்லுநர்கள் அதைப் படித்துப் பார்த்து விட்டு யார் மீது வழக்கு போடலாம் என்று சொல்கிறார்களோ, அவர்கள் மீது வழக்குப் போடுவோம்.

ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல்

கேள்வி: இலங்கை பிரச்சினை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே?

முதல்வர்: இலங்கைப் பிரச்சினை பெரிய பிரச்சினை. இதை தி.மு.க. பிரச்சினை, அ.தி.மு.க பிரச்சினை என்று கருதி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அ.தி.மு.க. பிரபாகரனை கைது செய்து இங்கே அழைத்து வர வேண்டுமென்று தீர்மானமே சட்டப் பேரவையில் நிறைவேற்றும்.

ஒரு நாள், பிரபாகரனை தியாகி என்று அ.தி.மு.க. பாராட்டும். இன்னொரு நாளைக்கு இலங்கை அதிபரைத் தாக்கிப் பேசும். ஒரு நாளைக்கு தாங்கிப் பேசும். அதனால் இலங்கைப் பிரச்சினையில் எங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் கருத்து வேறுபாடு என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை என்ன வென்றே தெரியாது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை இலங்கைப் பிரச்சினை அவருக்குத் தெரியும்.

கேள்வி: இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.விற்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது. எனவே டெல்லியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கம் மத்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?

முதல்வர்: மத்திய அரசை இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம், வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் எங்கள் அணியில் உள்ளவர்கள் போராட்டமே நடத்தியவர்கள். இலங்கைப் பிரச்சினையிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும். விடுதலைப் புலிகளையெல்லாம் கைது செய்து நீதிமன்றத்திலே நிறுத்த வேண்டு மென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும்.

பிரபாகரனைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். போர் என்றால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். இலங்கைப் பிரச்சினையில் நாங்கள் அவர்களை விடத் தீவிரமான ஆதரவாளர்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தி.மு.கழகத்தைப் பொறுத்த வரையில் தீவிரமான ஆதரவு என்றைக்கும் உண்டு. ஆனால் அவர்கள் தான் எங்களை விட்டு விட்டு வேறு ஆதரவைத் தேடிப் போய் அதனால் நஷ்டம் அடைந்தார்கள். அதற்காக நாங்கள் அவர்களை கை விட்டு விட முடியாது.

மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கேள்வி: ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்தினை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் அணியில் டாக்டர் ராமதாஸ் இருக்கிறார். இதிலே உங்கள் கருத்து என்ன?

முதல்வர்: இதிலே டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடவில்லை. அந்தக் கருத்தை எப்போது எந்தவிதமாக வலியுறுத்துவது என்பது தான் இதிலே முக்கியமே தவிர டாக்டர் ராமதாஸ் அவர்களின் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேனா என்று கேட்டு, கருணாநிதியும் ராமதாசும் கருத்து வேறுபாடு என்று தலைப்பு போட்டு விட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறதே?

முதல்வர்: இவையெல்லாம் சர்வ தேச அளவில் சர்வ தேச நிலையையொட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியும் நல்லுறவு எப்படியெல்லாம் வளர்க்கப்பட வேண்டும் என்பதையொட்டியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். உங்களின் ஒரு கேள்வியிலும், என்னுடைய ஒரு பதிலிலும் இந்த விஷயங்களை அடக்கி விட முடியாது.

மின் பற்றாக்குறைக்கு ஜெ.தான் காரணம்

கேள்வி: தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது, சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இருக்கிறதே?

முதல்வர்: மின்சாரப் பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருக்கிறது.

கேள்வி: மின் பற்றாக்குறைக்கு நீங்கள்தான் காரணம் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறாரே?

முதல்வர்: அந்த அம்மையார் முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது, மின்சாரத் துறையில் எதையுமே செய்யாததால்தான் இப்போது இந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதே?

முதல்வர்: தாக்கல் ஆனால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். தி.மு.க.வினர் மீது ஏதாவது ஒரு தூசி விழுந்தால் கூட, உங்களுக்கு அது தலைப்புச் செய்தியாகி விடுமே! அதற்காக நான் உங்களுடைய பத்திரிகைகளையெல்லாம் படிக்காமல் இருக்கப் போவதில்லை. ஆழ்ந்து படிக்கிறேன்.

கேள்வி: அந்தக் குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினர் பெயர் இடம் பெறும் என்று கூறப்படுகிறதே?

முதல்வர்: அதுபற்றி எனக்குத் தெரியாது.

கேள்வி: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம் பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறுமா?

முதல்வர்: பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது என்றார் கருணாநிதி.

காமன்வெல்த் ஊழல் : சுரேஷ் கல்மாடி கைது. சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை.

காமன்வெல்த் ஊழல்:    சுரேஷ் கல்மாடி கைது;    சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் காமன் வெல்த் விளையாட்டு போட்டி நடந்தது. போட்டி அமைப்பு குழு தலைவராக ஒலிம்பிக் இந்திய சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி நியமிக்கப்பட்டு இருந்தார். போட்டிக்கான ஏற்பாடு களை செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் ரூ.8 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதை தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் ஊழல் நடந்து இருப்பது உறுதியாக தெரிந்தது. இதை தொடர்ந்து சில அதிகாரிகளும் ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டனர். ஊழலில் போட்டி அமைப்பு குழு தலைவர் சுரேஷ்கல்மாடிக்கும் முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. போட்டிக்கு தேவையான பொருட்களை ஒப்பந்தம் மூலம் அதிக விலை கொடுத்து வாங்கியது மற்றும் வாடகைக்கு எடுத்ததில் அவர் முறைகேடு செய்து இருந்தார்.

மேலும் காமன்வெல்த் ஜோதி ஓட்டம் லண்டனில் நடந்த போது அதற்கான ஏற்பாடுகளை செய்ததிலும் அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தார். இதை கண்டு பிடித்த சி.பி.ஐ. அவரிடம் ஏற்கனவே 3 முறை விசாரணை நடத்தியது. அப்போது பல்வேறு தகவல்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்தது. லண்டன் காமன்வெல்த் ஜோதி ஓட்டத்தின் போது அந்த நிகழ்ச்சிகளை படம் பிடிப்பது, ஒளிபரப்பு செய்வது மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்யும் பணிகள் ஏ.எம்.பிலிம்ஸ் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.

வழக்கத்தை விட இந்த நிறுவனத்துக்கு அதிக பணம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இதுபற்றி விசாரிப்ப தற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் லண்டன் சென்று இருந்தனர். இந்த நிறுவனத்தின் அதிபர் ஆஷிஸ்பட் டேலிடம் விசாரணை நடத்தினார்கள். அவர் ஊழல் நடந்ததை ஒப்புக் கொண்டார். அந்த அதிகாரிகள் இருவரும் டெல்லி திரும்பினார்கள்.

இதையடுத்து சுரேஷ் கல்மாடியை மீண்டும் விசாரணக்கு வருமாறு அழைத்தனர். அதை ஏற்று சுரேஷ் கல்மாடி இன்று டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் 1 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரை கைது செய்தனர். இன்று மாலை அல்லது நாளை கல்மாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் அதன் பிறகு ஜெயிலில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்மாடி கைது தொடர்பான விவரங்களை இன்று மாலை 4 மணிக்கு விரிவாக தெரிவிப்பதாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது.


கேரள முதல்வர் அச்சுதானந்தன் உண்ணாவிரதம்.


பூச்சிக் கொல்லி மருந்தான என்டோசல்பானை தடை செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், முந்திரி காடுகளில் விவசாய பயிர்களை தாக்கி வந்த பூச்சி மற்றும் புழுக்களை அழிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, வானில் இருந்தபடியே என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது.

இதனால், நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெரியவர்கள் என, பலரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மாநில அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அம்மாவட்டத்தில் வசிக்கின்றனர். இப்பூச்சிக்கொல்லி மருந்தை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டுமென, கேரளாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கோரி வருகின்றன. இந்நிலையில், இம்மருந்து குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டுமென, பிரதமர், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதல்வர் அச்சுதானந்தன், "இப்பூச்சிக்கொல்லி மருந்தால் கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் 11 ஊராட்சிகளிலும், தென் பகுதியில் உள்ள கர்நாடகாவில், 94 கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் உள்ளார். அவர் சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்' என்றார்.

பாதிப்பு நிகழ்ந்த தினமான இன்று காலை, மாநில தலைநகரில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், காலை 10 மணி முதல், மாலை 5.30 மணி வரை, ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என, மாநில அமைச்சர் விஜயகுமார் தெரிவித்தார். இதில் அரசியல் கட்சி வேறுபாடின்றி அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என, அவர் தெரிவித்துள்ளார்.