Saturday, April 16, 2011

சிங்கள ராணுவம் போர்க்குற்றம் புரிந்தது : ஐநா நிபுணர் குழு.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலின்போது, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு தனது அறிக்கையி்ல கூறியுள்ளது.

ஐநா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை இலங்கை அரசிடம் ஓரிரு நாட்களுக்கு முன்னர் அளிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

எனினும், அந்த அறிக்கையின் சில தகவல்களை கொழும்புவைச் சேர்ந்த ஐலேண்ட் நாளிதழ் பிரசுரித்துள்ளதை மேற்கொள் காட்டி பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்த வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சில தளபதிகளை ராணுவம் கொன்றதாகவும் ஐநா நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி சொத்து குவித்தது எப்படி?


ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அவரது மறைவுக்கு பின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர அரசியலில் குதித்தார்.

கடப்பா தொகுதி எம்.பி.யாக இருந்த அவர் காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

கடப்பா தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அதில் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு ரூ.500 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவிலேயே பெரிய பணக்கார அரசியல்வாதியாக திகழ்கிறார்.

மேலும் ஜெகன்மோகன் ரெட்டி 2004-ல் முதன் முதலில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டபோது ரூ.1.77 கோடியும், அடுத்து 2009-ல் ரூ.7.39 கோடியும் சொத்து இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது ரூ.500 கோடி சொத்து இருப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதால் இடையில் இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று ஆந்திர அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி பிரச்சாரம் செய்து வருகின்றன.

இது குறித்து ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த கேள்வியை எழுப்பிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் துள்சி ரெட்டி, இவ்வளவு குறுகிய காலத்தில் ஜெகன் எப்படி இந்த அளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று ஒட்டு மொத்த மாநில மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறினார்


இலங்கை மீன்களை அணுக்கதிர் தாக்கியதாக பீதி.


ஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி 8.9 ரிக்டர் அளவுக்கு கடலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் சுனாமி பேரலைகள் உருவாகி ஜப்பானின் வடகிழக்கு பகுதியை அடியோடு நாசம் செய்தது.

சுனாமி அரக்கன் தாக்கியதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 4 அணுமின் நிலையங்கள் சிதைந்து போயின. அங்கு மிகவும் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த 4 அணு உலைகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின.

இதில் இருந்து மின்னல் வேகத்தில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சால் ஏராளமானோர் உயிரிழந்தனர். அணுக்கதிர் வீச்சு காரணமாக அப்பகுதிகளை சுற்றி வசித்த லட்சக்கணக்கான மக்கள் வேறு பகுதிகளில் குடிய மர்த்தப்பட்டனர்.

ஜப்பானில் வெளியேறிய அணுக்கதிர் வீச்சு கொரியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கும் பரவியது. அணுக்கதிர் வீச்சு தாக்கிய மீன் உள்ளிட்ட பொருட்களை உண்ண பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன.

இந்த நிலையில் சில அணு கழிவுகளை ஜப்பான் கடலில் கொட்டியது. இதனால் இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள மீன்களை அணுக் கதிர் தாக்கி இருக்குமோ என்ற பீதி பரவியது. இதையடுத்து இலங்கை அரசு கிழக்கு கடல் பகுதியில் அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பது பற்றி ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இதையடுத்து அணுசக்தி விஞ்ஞானிகள் அங்குள்ள கிழக்கு மாகாணம் முதல் தென்மாகாணம் வரையான பல்வேறு பகுதிகளில் கடல்நீர் மாதிரி எடுக்கப்பட்டன. கடற்படையினர் இலங்கை கடலோர பகுதிகளுக்கு சென்று கடல்நீர் மாதிரி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இலங்கை கடல் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் கடல் மாதிரிகளை சேகரித்தனர். இந்த கடல்நீரை இலங்கை அணுசக்தி விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து அதில் அணுக்கதிர் உள்ளனவா? என்பது பற்றி பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இப்பரிசோதனைக்குப் பிறகு தான் மீன்களை அணுக்கதிர் தாக்கி இருக்கிறதா? என்பதற்கு விடை தெரியும். அணு உலைகளால் மனித உயிருக்கு பேராபத்து இருப்பதால் உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மனிதர்கள் வசிக்காத பகுதிகளில் அணு உலைகளை அமைக்க கோரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


தலை இல்லாமல் தமிழக மீனவர் பிணம் தரை ஒதுங்கியது.


ராமநாதபுரம் மீனவர்கள் கட்ந்த 2ம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் கரை திரும்பவில்லை. மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை ஒதுங்கியுள்ளது.

மாரிமுத்து என்பவரின் உடல் மட்டும் காணவில்லை என்று பரிதவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள புதுக்குடி ஓடாய்மடம் கடலோரத்தில் தலை இல்லாதல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கியுள்ளது. இது மாரிமுத்து உடல்தான் என்று ராமநாதபுரம் மீனவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

மீனவ சங்க பிரமுகர் அருளானந்த இது குறித்து, ‘சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் தலை இல்லாமல் கால் இல்லாமல் கை இல்லாமல் பிணங்கள் இருப்பதாக தகவல்கள் வந்தன. அவைதான் இப்போதும் கரை ஒதுங்கியிருப்பதால், இலங்கையில் இருந்தது இந்த பிணங்கள்தான் என்று உறுதியாகிறது.

வயிற்று பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்கிறோம். ஆனால் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கொன்று குவிக்கிறது. இது வரை கொல்லப்பட்ட மீனவர்கள் எந்த ஒரு குற்றச்செயல்களிகும் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை கடற்படையால் சொல்ல முடியவில்லை.

சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்து கடத்தல் பொருட்களோ, அல்லது வெடிபொருட்களோ இதுவரை சிங்கள கடற்படை எடுத்தது இல்லை. ஆனால் மனிதாபிமானம் அற்ற முறையில் இப்படி தமிழக மீனவர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எத்தனை போராட்டம் நடத்தியும் தேசம் எங்களை கண்டுகொள்ளவில்லை.

இந்திய அரசு எங்கள் மீது இரக்கம் காட்டினால் மட்டுமே தமிழக மீனவர்கள் காக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பொதுக்கணக்குக் குழு கூட்டத்தில் மோதல்.





ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே வெள்ளிக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் மூத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் பணி முடங்கியது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவுக்கு போதிய அதிகாரம் இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறியதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவும் இணையாக விசாரணை நடத்தி வருகிறது.

வரும் 30-ம் தேதியுடன் இப்போதைய பிஏசியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் விரைவாக விசாரணையை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் முரளி மனோகர் ஜோஷி ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய பலரை இந்தக் குழு விசாரித்திருக்கிறது. அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், அட்டர்னி ஜெனரல் குலாம் வாஹன்வதி, சிபிஐ இயக்குநர் ஏ.பி. சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் டி.கே.ஏ. நாயர் ஆகியோரை வெள்ளிக்கிழமை விசாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த பிஏசி கூட்டத்தில் எதிர்க்கட்சி மற்றும்ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அதுபற்றி பிஏசி விசாரணை நடத்துவது அவசியமா என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோஷியிடம் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கூட்டத்தில் ஆளும் தரப்பில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.ராவ், நவீன் ஜிண்டால், அருண் குமார், சைபுதீன் சோஸ், திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் மேலும் சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கே.எஸ்.ராவ் வலியுறுத்தினார். அண்மையில் விசாரணைக்கு ஆஜரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானி, நீதிமன்ற விசாரணையைக் காரணம் காட்டி அனைத்து விவரங்களையும் கூற முடியாது எனத் தெரிவித்ததையும் ராவ் சுட்டிக் காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஜோஷி, "யாரையும் சாட்சியம் அளிக்குமாறு கட்டாயப் படுத்தவில்லை. இந்தத் தகவல்களை பொதுவில் வெளியிடப் போவதும் இல்லை. இதுவரை குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் யாரையும் அழைத்து விசாரிக்கவும் இல்லை' என்றார்.

3 மணி நேரம் தொடர்ந்த இந்தக் கூட்டத்தில் பல தருணங்களில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதங்கள் நடைபெற்றது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இதனால், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தும் பணி சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த மோதலையடுத்து, திட்டமிடப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்துக்கு முரளி மனோகர் ஜோஷி வரவில்லை.

செய்தியாளர்கள் கூட்டம் இப்போது தேவையில்லை என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

விசாரணைக்கும் மேலும் சிலரை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு வரும் 21-ம் தேதி பிஏசி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

வாஹன்வதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடர்பாக தொலைத் தொடர்புத் துறைக்கு தெரிவித்த கருத்து குறித்து பிஏசி விசாரிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் நோக்கமாக இருந்தது என தாங்கள் சந்தேகிப்பதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தாங்கள் நியாயமான ஆட்சேபங்களையே தெரிவித்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

22 உறுப்பினர்களைக் கொண்ட இப்போதைய குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், பாஜகவின் 4 பேரும், அதிமுக, திமுக சார்பில் தலா இருவரும், சிவசேனை, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இடம்பெற்றிருக்கின்றனர். ஒரு இடம் காலியாக இருக்கிறது.


இலங்கை வீரர்களை திருப்பி அழைப்பது நியாயமற்றது: முரளிதரன்.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை மே 20-ம் தேதி நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது.

இந்த உத்தரவு நியாயமற்றது என்று பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறி்யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர், வீரர்களை திடீரென உடனடியாக திரும்பி வருமாறு அழைத்திருப்பது நியாயமற்ற செயல்.

இத்தகைய அறிவிப்பு இந்தியா-இலங்கை இடையேயான கிரிக்கெட் உறவை பாதிக்கும்.

இதனால் இலங்கை அணிக்கு பல்வேறு வழிகளில் நஷ்டம் வரலாம்.

எனவே, இப்பிரச்னையை மிகவும் கவனமுடன் அணுக வேண்டும்’’என்றும் கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி கணிப்பை மீறி எகிறியது பணவீக்கம்!!


மார்ச் 31-ம் தேதிக்குள் பணவீக்கம் 7-8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில், இப்போது கைமீறிப் போயுள்ளது பணவீக்கம்.

கடந்த பிப்ரவரியில் 8.31 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஒரு மாதத்தில் 8.99 சதவீதமாக உயர்ந்துவிட்டது. இது உணவுப் பணவீக்கம் அல்ல, மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பொதுப் பணவீக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பணவீக்கத்தைக் குறைப்பதற்காக பல்வேறு வட்டிவீதங்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி உயர்த்தி வந்த போதும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுவதாகவே இப்போதைய நிலைமை உள்ளது.

உணவுப் பணவீக்கம் மட்டுமே ஓரளவு குறைந்து 8.28 சதவீதத்துக்கு வந்துள்ளது. ஆனாலும் உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் போன்ற அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்வடைந்துள்ளது.