Thursday, April 7, 2011

தமிழகத் தேர்தல் களத்தில் கிரிமினல் பின்னணியுடன் 125 வேட்பாளர்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் கிரிமினல் பினனணியுடன் கூடிய 125 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கிட்டத்தட்ட அத்தனை கட்சிகளிலுமே கிரிமினல் வேட்பாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக அதிமுக சார்பில் 43 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

திமுகவில் 24 பேரும், பாஜகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் நிறுத்தப் பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக சார்பில் தலா 6 கிரிமினல் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் அதிக அளவிலான கேஸ்களுடன் கூடியவராக திகழ்பவர் திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜாதான். இவர் மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு, திருட்டு என 6 வழக்குகள் உள்ளன. ஆபாசமாக நடந்து கொள்ளுதல், ஆயுதங்களை வைத்து தாக்குதல், மிரட்டுதல் என இவர் மீது வழக்குகள் உள்ளன. இவர் அந்தியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

3 பாஜக, அதிமுக, பாமகவைச் சேர்ந்த தலா 2 வேட்பாளர்கள், தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டு களுடன் கூடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நாகப்பட்டனம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முருகானந்தம் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் மீதும், ஆண்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

கொடிய ஆட்சி வந்துவிடக் கூடாது: மதுரையில் கலைஞர்.


தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது என்று திமுக தலைவர் கலைஞர் பேசினார்.

மதுரையில் நடந்த திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கலைஞர், தி.மு.க.,வை வளர்க்க தானும், முன்னாள் மதுரை மேயர் முத்துவும் அரும்பாடுபட்டதாகவும், தி.மு.க.,வுக்காக பாடுபட்ட பி.டி.ஆர்., தென்னரசு, தமிழ்குடிமகன் உள்ளிட்ட பலர் இந்த மேடையில் இல்லை, ஆனால் அவர்கள் தந்துவிட்டு சென்ற உணர்வு என் உருவத்திலும், அழகிரி, பொன் முத்துராமலிங்கம் உருவில் உள்ளது என்றார்.

மேலும், பேசிய அவர், திமுக ஆட்சியில்தான் மதுரையில் நலத்திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை பற்றி யார் குறைகூறினாலும் கவலைப்படபோவதில்லை. மக்களுக்கு ஆற்றும் பணியை திமுக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும். இனஉணர்வோடு தான் கொடிய ஆட்சி மலராமல் தடுக்க முடியும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் கொடிய ஆட்சி மீண்டும் வந்துவிடக் கூடாது.

தி.மு.க., ஆட்சியில் மதுரை மாநகராட்சியாக மாறியது. மதுரை திண்டுக்கல் சாலையில் மேம்பாலம், மேயர் முத்து மேம்பாலம், மாநகராட்சி கட்டிடம், மதுரை சுற்றுச்சாலை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் கக்கன் சிலை அமைக்கப்பட்டது. மதுரையில் ஐகோர்ட் கிளை ஏற்படுத்தப்பட்டதும் தி.மு.க., ஆட்சியில் தான்.

பதிலுக்கு பதில், தாக்குதலுக்கு தாக்குதல் போன்ற பழக்கம் எனக்கு இல்லை. ‌செல்லும் இடமெல்லாம் ஜெயலலிதா என் மீது குற்றம் சாட்டுகிறார். நம்மை தள்ளிவிட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிசெய்கிறார். சென்னை கூட்டத்தில் நதிநீர் பிரச்னை, தமிழை மத்திய ஆட்சி மெட்ழி, முல்லை பெரியாறு பிரச்னை, சேது சமுத்திர திட்டம் போன்று ‌மக்களுக்கு தேவையான திட்டங்களை சோனியாவிடம் கேட்டேன்.

உங்களுக்காக நான் இருப்பவன். பாடுபடுபவன். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பெரும் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். கொடிய ஆட்சியை தடுத்து நல்லாட்சி தொடர முடியும் என்றார்.

ஒற்றுமையுடன், செயல்பட்டு வெல்ல வேண்டும்-சரத்குமார்.


சிறு சிறு குழப்பங்களை விளைவித்து கூட்டணியை சீர்குலைக்க முயல்கிறார்கள் எதிர்த் தரப்பினர். அதற்கு உடன்படாமல், ஒருமித்து செயல்பட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

கோவையில் இன்று அதிமுக கூட்டணி சார்பில் வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியதாவது...

6 நாட்களில் தேர்தல் வரப் போகிறது. இங்கு புதிய கூட்டணி உருவாகியிருக்கும்போது, புதிய உறவு மலர்ந்திருக்கும்போது, அங்கு சிறு சிறு குழப்பங்களை உருவாக்கி இதை சீர்குலைத்து விடலாமா என்று நினைத்து அது முடியாமல், போன ஏக்கம் எதிர்த் தரப்பிலே இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடம் கொடுத்து விடாதபடி ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால கருணாநிதி குடும்ப ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, மாணவர்களுக்குப் பாதிப்பு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு, தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல துயரங்கள். இதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் கடந்த 10 நாட்களாக நான் தென் மாவட்டங்களில், தென்காசி வேட்பாளரான நான் பிரசாரம் செய்யும்போது, எங்கு போனாலும் இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டி மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். ராசாதான் அந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அந்த ஊழல் கட்சிக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. இருவரும் சொந்தக்காரர்கள்.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் இன்று தேர்தலை சந்திக்கிறது திமுக. இது மிகப் பெரிய அவமானம். பக்கத்து வீட்டுக்கு போலீஸ் வந்தாலே அவமானப்படுவோம் நாம். ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை செய்து விட்டு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஊழல் தொடர்பாக முதல்வரின் மனைவியை விசாரிக்கிறார்கள், மகளை விசாரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அதை வழிமொழிகிறார் சோனியா.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக ஒன்று திரண்டு, ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். மக்களை பணத்தைக் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல, ஏமாறும் நிலையில் மக்கள் இன்று இல்லை.

ஏப்ரல் 13ம் தேதி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மலரப் போகிறது. இது நமக்கான தேர்தல் அல்ல, மாறாக வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக வாழ வித்திடும் நாளாகும்.

இளம் தலைமுறையினர் சரியான பாதையில் போக வேண்டும் என்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும், அது புரட்சித் தலைவியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் மட்டும் வரவில்லை

திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்-கோவையில் ஜெயலலிதா பேச்சு.


இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்..

கோவை கூட்டத்தில் ஜெயலலிதா மேலும் பேசியதாவது:

இந்த சட்டசபைத் தேர்தல் திமுக பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். தமிழகத்திற்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தருகிற தேர்தல். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான சாதாரண தேர்தல் அல்ல. தமிழ் மக்களாகிய உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிற தேர்தல்.

நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்தக் கொள்ளைக்காரக் கும்பலுக்கு, குடும்ப ஆட்சிக்கு தமிழக மக்கள் என்ன தண்டனை தரப் போகிறார்கள் என்பதை நாடே உற்றுப் பார்க்கிறது.

சட்டம் ஒழுங்கு, மின்சார உற்பத்தி ஆகியவை தான் ஒரு மாநிலத்திற்கு மிகவும் முக்கியம். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி. தொழில்கள் நலிவுற்று, விவசாயம் சீர்குலைந்து, விலைவாசி விஷம் போல ஏறி விட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தவர்கள் கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், திமுக அமைச்சர்களும்தான்.

மதுரையில் தா.கிருட்டிணன் கொலை, மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு, துணைவேந்தர் மீதான தாக்குதல், அரசு அதிகாரிகளைப் பழிவாங்குதல் எனபல நடவடிக்கைகள்.

நில அபகரிப்பு, ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய என்.கே.கே.பி. ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தார் கருணாநிதி. பனையூர் இரட்டைக் கொலை வழக்கில், முக்கியக் குற்றவாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்.

வீரபாண்டி ஆறுமுகம், கொலைக் குற்றவாளியை சிறையில் சந்தித்து ஆறுதல் கூறினாரே. அப்போது அவர் மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா. ஹார்லிக்ஸ் திருட்டு குறித்து நான் புகார் கூறியது குறித்து நடவடிக்கை எடுத்தாரா.

இப்படி எதற்குமே திராணியற்ற முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்துப் பேசுகிறார். இதற்கு அவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. கருணாநிதி ஆட்சியி்ல எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறிகள் பெருகி விட்டன.

மின்தேவைக்கும், உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மின்பற்றாக்குறை மாநிலமாக தமிழகத்தை ஆக்கியதுதான் கருணாநிதி சாதனை.

விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு அஞ்சும் நிலை. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும், எப்போது நிம்மதி கிடைக்கும் என்று அனைவரும் ஏங்கும் நிலைக்கு தமிழகத்தை சீரழித்து விட்டார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சில் பாதி, அவர் ஊர் ஊராக போய் பிரசாரம் செய்யும்போது எழுதி வைத்து வாசித்ததே என்பது குறிப்பிடத்தகக்து.

Wednesday, April 6, 2011

அ.தி.மு.க.அணி கூட்டம் விஜயகாந்த் புறக்கணிப்பு.


ஜெயலலிதாவின் கோவை பொதுக் கூட்டம்-புறக்கணித்தார் விஜய்காந்த்!

கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் புறக்கணித்துவிட்டார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது தொகுதிப் பங்கீடு, இடங்கள் தேர்வு ஆகியவை தொடர்பாக ஜெயலலிதாவும் விஜய்காந்தும் நேரில் சந்தித்துப் பேசவே இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் தான் பேசி 41 தொகுதிகள் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் வந்து 20 நிமிடங்கள் மட்டுமே சந்தித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு உடனே வெளியேறிவிட்டார் விஜய்காந்த் .

இந் நிலையில் இடையே ஏற்பட்ட கலாட்டாவில் இடதுசாரிகளை சேர்த்துக் கொண்டு மூன்றாவது அணி அமைக்கப் போவதாக ஜெயலலிதாவை விஜய்காந்த் மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் தனது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்துவிட்டு பயணத்தையும் ஆரம்பித்துவிட்டார் ஜெயலலிதா. மேடையில் தனக்கு சமமாக விஜய்காந்துக்கு இடம் தர ஜெயலலிதா விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

அதே போல மரியாதை தரத் தெரியாத ஜெயலலிதாவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜய்காந்தும் விரும்பவில்லை.இந் நிலையில் பிரச்சாரத்தின்போது அதிமுக கொடிகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிமுக தொண்டர்களை திட்டி, அந்தக் கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானார் விஜய்காந்த்.

இதேபோல திருச்சி பகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் பெயரைச் சொல்லியோ அவரது கட்சி பெயரைச் சொல்லியோ வாக்கு கேட்கவில்லை.

மேலும் ஜெயா டிவியில் விஜய்காந்தின் பிரச்சாரத்தையோ கேப்டன் டிவியில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தையோ காட்டுவதும் இல்லை.

இதற்கிடையே ஜெயலலிதாவும், விஜய்காந்தும், இடதுசாரித் தலைவர்களும் ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்ய முடியுமா என திமுக கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பி வருவதோடு, ஜெயலலிதாவுக்கும் விஜய்காந்துக்கும் பிரச்சனைகள் நிலவுவதை 'ஹை-லைட்' செய்து வருகிறது.

இந் நிலையில் ஜெயலலிதாவை சமீபத்தில் ஓடிப் போய் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், விஜய்காந்தும் நீங்களும் நாங்களும் சேர்ந்த ஒரு கூட்டம் நடத்துவதே மக்களிடம் நல்ல பெயர் வாங்க உதவும் என்று கூற, எனக்கு டூர் இருக்கே, நேரம் இல்லையே என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார் என்கிறார்கள்.

ஒற்றுமையில்லாத இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மக்களிடத்திலும் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்ற அச்சம், 'ஆர்எஸ்எஸ் சார்பு அதிபுத்திசாலி' பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்டது. அவரது கடுமையான முயற்சியாலும் இடதுசாரி தேசியத் தலைவர்கள் சிலரது தலையீட்டினாலும், வற்புறுத்தலாலும் விஜய்காந்துடன் ஜெயலலிதா ஒரே மேடையில் தோன்ற ஒப்புக் கொண்டார்.

இதன்படி கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில்யில் இன்று மாலை நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஜய்காந்த் வரவில்லை. தேமுதிக சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே பங்கேற்றார்.

மாலை 6 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கிய நிலையில் ஊட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவும் வர தாமதமாகிவிட்டது. இதனால் அவர் வரும் முன்பே கூட்டம் தொடங்கிவிட்டது. கூட்டம் தொடங்கிய பின்னரே ஜெயலலிதா வந்து சேர்ந்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தேசிய செயலாளர் ராஜா எம்.பி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் ஜெயலலிதா ஒரே மேடை ஏறி, அதில் வைகோ பெயரை ஜெயலலிதா கூறியதும் மக்கள் கூட்டம் ஆராவாரம் செய்ய, ஜெயலலிதாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது. கூட்டத்தில் அதிகமான மதிமுக கொடிகள் இருந்ததற்காக அதிமுக நி்ர்வாகிகளைக் கூப்பிட்டு ஜெயலலிதா கடிந்து கொண்டதாக செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்றைய கூட்டத்தில் அதிமுக கொடிகளை விட குறைவான அளவிலேயே மற்ற கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் இருக்குமாறு அதிமுக நிர்வாகிகள் பார்த்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கும் தேமுதிகவுக்கும் உரிய மரியாதையை ஜெயலலிதா தர மாட்டார் என்பதாலேயே விஜய்காந்த் இதில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அன்று சோனியாவுக்கு ஜெ 'நோஸ்-கட் - இன்று விஜய்காந்த்.

2001ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது காங்கிரஸ். அப்போது விழுப்புரத்தில் ஜெயலலிதாவும் சோனியாவும் கூட்டாக பேச பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சோனியா விழுப்புரம் வந்து இரண்டு மணி நேரம் காத்திருக்க, ஜெயலலிதா வரவேயில்லை. சோனியாவை கேவலப்படுத்தினார். இந் நிலையில் இன்று நீண்ட கோரிக்கைகளுக்குப் பின் விஜய்காந்துடன் கூட்டத்தில் பேச ஜெயலலிதா ஒப்புக் கொண்ட நிலையில், விஜய்காந்த் திடீரென வராமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்தை புறக்கணித்த அதிமுக.

திருத்துரைப்பூண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டபோது அதில் அதிமுகவினர் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், விஜயகாந்த் இன்று கோவையில் அதிமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும்
கூட்டத்தில் பங்கேற்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அவர் அங்கு பங்கேற்காமல், திருத்துரைப்பூண்டியில் பிரச்சாரம் செய்துள்ளார்.

அவர் திருத்துரைப்பூண்டிக்கு வருவது எங்களுக்குத் தெரியாது. எங்களை கலந்து ஆலோசிக்காமல் அவர் பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் தான் அவரது கூட்டத்தை புறக்கணித்தோம் என்றன

நடிகை சுஜாதா காலமானார்.


பிரபல நடிகை சுஜாதா சென்னையில் காலமானார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த நடிகை சுஜாதா, ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். அன்னக்கிளி, அவர்கள், அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் சுஜாதா நடித்த பிரபலமான படங்கள். 1952ல் இலங்கையில் பிறந்த சுஜாதாவின் தாய் மொழி மலையாளம்.

கடந்த சில தினங்களாக உடல் நலம் குன்றி இருந்த அவர் சென்னையில் இன்று காலமானார்.

ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்த சுஜாதா மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு : வைகோ பங்கேற்றார்.


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், இன்றும், (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நீரி நிறுவனத்தின் ஆய்வில் வைகோ பங்கேற்றுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அந்த ஆலையை மூடுமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திரன், மாத்தூர் ஆகியோர் முன்னிலையில் 25.2.2011 அன்று விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார்.

வைகோ, தன்னுடைய வாதத்தில், ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாகவும், விதிமுறைக்கு மாறாக நிறுவப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற சூழ்நிலையை மாசுபடுத்துகின்ற கழிவுகள் குறித்து "நீரி'' நிறுவனம் ஆய்வு நடத்தி முழுமையான அறிக்கையை 8 வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் அடிப்படையில், 6 மற்றும் 7ந் தேதிகளில் நீரி' நிறுவன அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, நீரி நிறுவனத்தின் ஆய்வு வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு முன்தகவல் தந்து நடத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வைகோ, 6ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்கு வரும்படி நீரி நிறுவனத்தின் சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.


வைகோ, நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையை இன்று ஆய்வு செய்கின்றனர். வைகோ வந்துள்ளார்.