Tuesday, March 29, 2011

வாக்காளர்களைக் கட்டிப்போடும் வடிவேலுவின் பிரச்சாரம்...

இதுவரை எத்தனையோ நடிகர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்குப் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத உச்ச அந்தஸ்து, ஒருவருக்கு கிடைத்திருக்கிறது. அவர்தான் வடிவேலு!

திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, 'இதென்ன ஏகத்துக்கும் தனிப்பட்ட தாக்குதல் நடத்துகிறாரே' என சற்று முகம் சுளிக்கத்தான் செய்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. வடிவேலு அடுத்துப் பேசும் இடம் எங்கே என விசாரிக்கும் அளவுக்கு ஆர்வமாகிவிட்டனர் மக்கள்.

சினிமாவில் ஹீரோவாக 'லெக்' பைட் போட்டுக் கொண்டிருந்த விஜயகாந்தை, அரசியலில் 'காமெடியன்' எனும் அளவுக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் வடிவேலு.

துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில், வடிவேலு பேச்சுக்கு ஏக வரவேற்பு. மருதமலை, கிரி போன்ற படங்களில் அவர் பேசிய சில நகைச்சுவை பஞ்ச்களை விஜயகாந்தைக் குறிவைத்து டைமிங்காக அவர் அடிக்க, மக்கள் சிரித்தனர்.

"எதையாவது திங்கணும்னு ஆசையாயிருந்தா கடைக்கு போய் ஒரு வடைய வாங்கித் திண்ணு, பன்னை வாங்கித் திண்ணு.." என்று மருதமலை படத்தில் அவர் பேசும் காட்சி ரொம்பப் பிரபலம். இன்றைய பிரச்சாரத்தில், ஒரு இடத்தில் விஜயகாந்தின் முதல்வர் பதவி கனவை விமர்சித்த வடிவேலு, "விஜயகாந்துக்கு முதல்வராகனும்னு ஆசை இருந்தா எங்கிட்டாவது ஒரு அஞ்சு கோடி பத்து கோடி கொடுத்து சினிமா எடுக்கச் சொல்லி அந்த வேசத்தை போட்டுக்கலாம்... அதை விட்டுப்புட்டு முதல்வராகராம்... இது நல்லாவா இருக்கு!" என்ற மருதமலை பாணியிலேயே பேச, கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் கைதட்டிச் சிரித்தனர் மக்கள்.

திமுக, அதிமுக என்ற பேதமில்லாமல், அனைவருமே வடிவேலுவைப் பார்க்க வருகிறார்கள். அவர் பேச்சை ரசித்துக் கேட்கிறார்கள். 'யத்தா... நம்ம ஸ்டாலின் அய்யா மேல ஒரு மாசு மருவு சொல்ல முடியுமா... எவ்வளவு தங்கமான மனுசன். நீங்க போனாலும் வாசலுக்கு வந்து வரவேற்பாரு... அப்படி ஒரு மனுசன் ஜெயிச்சி ஆட்சிக்கு வந்தா நாடும் நல்லாருக்கும், உங்க தொகுதியும் நல்லாருக்கும். குடிகாரங்ககிட்ட நாட்ட கொடுத்துடாதீங்க, சொல்லிட்டேன்", என பெண்களிடம் அவர் பேசும் விதம் நன்றாகவே ஒர்க் அவுட்டாகிறது.

நடிகர்களின் பிரச்சாரத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போதும், வடிவேலுவுக்குதான் முதலிடம் தருகிறது கலைஞர் தொலைக்காட்சி. வடிவேலு பேச்சை முழுவதுமாக காட்டிவிட்டுத்தான், மற்றவர்களின் பேச்சைக் காட்டுகிறார்கள்.

சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன்... அரசியலில் நம்பர் ஒன் பிரச்சாரகர் என்ற பெயரை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் வடிவேலு!

திமுகவுக்கே ஓட்டுப் போடுங்கள்-அதிமுக, காங் வேண்டாம்: மதிமுகவினருக்கு ரகசிய உத்தரவு!

உங்களது ஓட்டுக்களை வீணடிக்க வேண்டாம். திமுகவுக்கு மட்டும் வாக்களியுங்கள். அதிமுக, காங்கிரஸுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மதிமுகவினருக்கு உயர்மட்டத்திலிருந்து ரகசிய வாய்மொழி உத்தரவு பறந்துள்ளதாம்.

சட்டசபைத் தேர்தலை மதிமுக புறக்கணிக்கிறது என்று வைகோ அறிவித்ததும் மதிமுகவினர் நிலை குலைந்து போனார்கள். வைகோ இப்படி சொல்லி விட்டாரே என்பதனால் அல்ல- அதிமுக நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதே என்ற வேதனையில்தான்.

இதுவே வேறு ஒரு இயக்கமாக இருந்திருந்தால் இன்னேரம் கட்சி கண்ணாபின்னாவென காணாமல் போயிருக்கும். ஆனால் வைகோவின் இயக்கம் என்பதால் மதிமுக இன்னும் சீர்குலையாமல், அப்படியே இருக்கிறது -ஆங்காங்கு ஒரு சில, செல்வாக்கில்லாதவர்கள் விலகியதைத் தவிர.

இந்த நிலையி்ல் மதிமுகவினருக்கு ரகசிய வாய்மொழி உத்தரவு ஒன்று சென்னையிலிருந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள மூலமாக பாஸ் ஆகியுள்ளதாம்.

அது - வருகிற தேர்தலில் உங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம். அனைவரும் திமுகவுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள். மறந்தும் கூட அதிமுகவுக்கு வாக்களித்து விடக் கூடாது. அதில் மிகவும் கவனமாக இருங்கள். அதேபோல காங்கிரஸுக்கும் நமது ஒரு வாக்கு கூட போகக் கூடாது. நமது வாக்குகளை தேடித் தேடி போய் வீணடிக்க வேண்டாம் என்று கூறி, திமுகவுக்கு அதை செலுத்துவதை உறுதி செய்யுங்கள் என்று அந்த உத்தரவு கூறுகிறதாம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள மதிமுகவினர், தங்களது தாய்க் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க ஆயத்தமாகி வருவதாக தெரிகிறது. சில இடங்களில் மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது மறைமுகமாக திமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கின்றனராம்.

தேர்தல் முடிந்த பின்னர் வைகோ மீண்டும் திமுக அணிக்குத் திரும்பக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பைத் தோல்வி எதிரொலி-கேப்டன் பதவியிலிருந்து விலகினார் பான்டிங்.

Getty Images


பான்டிங்கின் விலகல் மூலம் ஒரு அருமையான, அபாரமான, திறமையான கேப்டனின் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த மிகச் சிறப்பான கேப்டன்களில் பான்டிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியை தொடர்ந்து வலிமையான ஒன்றாக திகழச் செய்த பெருமை இவருக்கு உண்டு. ஆனால் நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் காலிறுதியோடு ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவடைந்து போனது, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலிய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

இந்த நிலையில் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக பான்டிங் அறிவித்துள்ளார்.

மேலும் தனக்குப் பின்னர் கேப்டன் பொறுப்பை வகிக்கக் கூடிய தகுதியும், திறமையும் மைக்கேல் கிளார்க்குக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிட்னியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான்கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது எனதுதனிப்பட்ட முடிவு, எந்த நிர்ப்பந்தமும் இதன் பின்னணியல் இல்லை. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினாலும், எனது சேவை தேவைப்படும் வரை தொடர்ந்து இரு போட்டிகளிலும் ஆடுவேன் என்றார் பான்டிங்.

38 வயதாகும் பான்டிங், ஸ்டீவ் வாகிடமிருந்து கேப்டன் பொறுப்பைப் பெற்று செயல்பட்டு வந்தார்.கேப்டன் பொறுப்பில் 77 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் 48 போட்டிகளை வென்றுள்ளார். அதேபோல228 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு அதில் 164 போட்டிகளை வென்றவர். எந்த ஒரு ஆஸ்திரேலிய கேப்டனும் செய்யாத சாதனை இது.

மேலும் 2003, 2007 உலகக் கோப்பைகளை பான்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. தற்போதும் வென்றிருந்தால் அது பான்டிங்குக்கு ஹாட்ரிக் சாதனையாக இருந்திருக்கும்.

அதிமுகவை ஆதரிக்க விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு

நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தை கலைத்து உறுப்பினர் கார்டுகளை தீவைத்து எரித்தனர்.

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பான விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இதனை திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தப் பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் இந்த முடிவுக்கு, சேலத்தில் அவருடைய ரசிகர்கள் இடையே எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் காளியம்மன் கோவில் தெருவில் இளைய தளபதி விஜய் போக்கிரி மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர் மன்றம் ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த மன்றத்தினர் விஜய்யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கலைக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் மன்ற தலைவர் ஆசைதம்பி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சசி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 25 பேர் 28.03.2011 அன்று மன்றம் முன்பு கூடினார்கள். அவர்கள் மன்றத்தின் பிளக்ஸ் பெயர் பலகையையும் கிழித்து எறிந்தனர். எதிர்ப்பு கோஷமிட்டபடி தங்கள் உறுப்பினர் கார்டையும் தீவைத்து எரித்தனர். அதனால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மன்ற ரசிகர்கள் கூறும்போது, விஜய் ரசிகர்மன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் விஜய் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடை எடுத்து உள்ளார். ரசிகர்களை கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்தது வருத்தம் அளிக்கிறது. எங்களை பொருத்தவரை நாங்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்கள். ஆனால் விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் நாங்கள் மன்றத்தை கலைத்துவிட்டோம் என்று கூறினார்.

செல்போன் வியாபாரிகள் ரூ.230 கோடி வரி ஏய்ப்பு.

செல்போன் இறக்குமதி செய்ததில் ரூ.230 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த சில மாதங்களாக சுங்கத் துறையினர் உதவியுடன் கரோல்பாக், காஃபர் மார்க்கெட் பகுதிகளில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.

செல்போன்கள் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் தில்லியில் உள்ள 59 வியாபாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் மதிப்புக்கூட்டு வரி செலுத்தாததால், ரூ.230 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்து ஒரு அதிகாரி கூறும்போது, "ஒவ்வொரு செல்போன் கருவியிலும் சர்வதேச மொபைல் அடையாள எண் இருந்தாக வேண்டும். ஆனால், 59 வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ள கருவிகளில் இந்த அடையாள எண்கள் இல்லை. இது தேசப் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாகும். இந்த வகை செல்போன்களை இறக்குமதி செய்தவர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.' என்றார்.

சர்வதேச அடையாள எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துபவர் பற்றி விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் கூட இவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும், இது போன்ற அடையாளம் காண முடியாத கருவிகளைக் கொண்டு பயங்கரவாதிகள் தொலைவிலிருந்தே குண்டுகளை வெடிக்கச் செய்ய இயலும். எனவே இவ்வகை போன்கள் இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானதாகும். இவற்றை இறக்குமதி செய்த வியாபாரிகளின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது' என அந்த அதிகாரி தெரிவித்தார்.

தில்லியில் உள்ள செல்போன்களில் 30 சதவீதம் சட்ட விரோதமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என இந்திய செல்லுலர் சங்கம் கூறுகிறது.

இது குறித்து சங்கத்தின் தேசிய தலைவர் பங்கஜ் மஹிந்துரு கூறியது:

"சுங்கத் துறை ஆவணங்களின்படி 2009-10ம் ஆண்டில் மட்டும் 72.88 லட்சம் போன்கள் தில்லி விமான நிலையத்தின் வழி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,380.56 கோடியாகும்.

விமானங்கள் மூலம் தருவிக்கப்பட்டு, சுங்க வரி மட்டும் கட்டி இவை இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் கறுப்புச் சந்தையில் விற்பனைக்குச் செல்கின்றன. இது போன்ற விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், சந்தையில் லட்சக்கணக்கில் உள்ள செல்போன் கருவிகள் அனைத்திலும் அடையாள எண் உள்ளதா என சோதனை செய்வது நடக்காத காரியம். சிலர் போலி எண்களும் வைத்துள்ளனர்.

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யும் மொத்த வியாபாரிகள், தாங்கள் இறக்குமதி செய்யும் கருவிகளை சில்லறை வியாபாரிகளிடம் தருகின்றனர். சில்லறை வியாபாரிகள் தாங்கள் விற்கும் எல்லா போன்களுக்கும் பில் தருவதில்லை.

ரூ.10,000க்கு மேல் விலையுள்ள போன்களில் நான்கில் ஒன்று மட்டும் தில்லியில் விற்பனையாவதாக பில் செய்யப்படும். மற்றவை தில்லிக்கு வெளியே விற்பனை செய்வதாக காட்டப்படும். இவ்வாறு செய்வதால் மதிப்பு கூட்டு வரி கட்டாமல் வரி ஏய்ப்பு நடக்கிறது,' என்று அவர் கூறினார்.

Monday, March 28, 2011

அழகிரி குற்றச் சாட்டு - மதுரை கலெக்டர் சகாயம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்

மதுரை கலெக்டராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள சகாயம், ஆட்சி மாற்றம் தேவை என்று பேசி வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகத்தில் கூட்டணியினருடன் நேற்று அழகிரி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிமுகவுக்கு ஆதரவாகவே இருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் மதுரை கலெக்டராக சகாயம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆட்சி மாற்றம் தேவை என்று பேசி வருகிறார். அதிமுகவுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். 2006 ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

தென்மாவட்டத்தில் 52 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெ.கீதாஜீவன் 30 முதல் 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார் அழகிரி.

சினேகாவை கண்கலங்க வைத்த கல்லூரி மாணவர்கள்!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ளது பனிமலர் பொறியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியின் கலை விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சினேகா பங்கேற்றார். அவரைக் கண்டதும் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். புன்னகை இளவரசி சினேகா என உற்சாகக் குரல் எழுப்பினர்.

அக்கல்லூரி மாணவர்கள் சிலர் சினேகாவுக்காக ஒரு சிறப்பு ட்ரைலர் ஒன்றைத் தயார் செய்திருந்தனர். சினேகாவுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் இந்த ட்ரைலரை விழாவின் போது திரையிட்டுக் காட்டினர் மாணவர்கள். இதைக் கண்டு மிகவும் பரவசமடைந்தார் சினேகா.

எனக்காகவா இதை உருவாக்கினீர்கள் எனக் கேட்டு, மேடையிலேயே கண்கலங்கினார் சினேகா.

"நான் எத்தனையோ கல்லூரிக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு இந்த மாணவர்கள் என்மேல் வைத்திருக்கும் உயர்வான அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. ஒரு நடிகையாக யாருக்கும் கிடைக்காத பெருமையை எனக்குத் தந்த இந்த மாணவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். வாழ்க்கையில் இவர்கள் அனைவரும் உன்னதமான இடத்துக்கு வரவேண்டும். அதுதான் என் பிரார்த்தனை", என்று கூறினார்.