Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
வீணாகும் தாணியங்கள்
1980களில் ஒரிசாவின் காலா ஹந்தி பகுதியைப் பற்றிய சித்திரங்கள் பல இந்தியாவின் மையங்கள் நோக்கி வந்தன. வறுமையின் பல வடிவங்கள் அங்கு எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்பது செய்திகளாக, முகப்பு கட்டுரைகளாக தேசிய நாளிதழ்களில் அச்சேறின. முதன்முதலில் பணிதாவின் கதைதான் பெரும் அதிர்ச்சியை விதைத்தது. அதனை அடுத்து 1984ல் ஒரிசாவின் ஆங்கூல் மாவட்டத்தின் பதிபஹால் கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா பஹேரா (35) தனக்குப் பிறந்த குழந்தையை ரூ.10/-க்கு விற்றார். அப்பொழுது அந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. அவள் அதற்குக் கூறிய விளக்கம்: ‘ஊர்வசி (10), பன்பாசி (2) ஆகிய என் இரு குழந்தைகள் பட்டினியில் வாடி சாகக்கிடக்கின்றன, அவர்களுக்கு உணவளிக்கவே என் ஒரு மாதக் குழந்தையை விற்றேன்.’ இந்த வார்த்தைகள் போதுமானவை ஒரு தேசத்தை உலுக்க. ஆனால் இவ்வாறான எந்தக் குரலுக்கும் கடந்த இருபது ஆண்டுகளில் இந்த தேசம் செவிமடுக்கவில்லை. அதே 1980ல் ஒரு தேசிய நாளிதழ் ஒரிசாவின் நிலையை இந்த உலகுக்கு உணர்த்த ஒரு பெண்ணை ரூ.2000/-க்கு விலைக்கு வாங்கி, இங்குள்ள நிலையை நாட்டிற்குப் பெரும் பரபரப்பாக உணர்த்தியது. இந்த செய்தி பெரும் கவனத்தைப் பெற்றது. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் ஒரு தற்காலிக தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தின.
2001ல் இந்தியாவின் 13 மாநிலங்களில் பசி - வறுமையால் மக்கள் செத்து மடிவது பதிவு செய்யப்பட்டது. அந்த சமயம் பி.யு.சி.எல். அமைப்பு அன்று தேசம் வசம் இருந்த உணவு தானிய இருப்புகளையும், அந்த தானியங்களின் அவல நிலையையும் சுட்டிக்காட்டி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பலரின் கவனத்தைப் பெற்றது. அப்பொழுது அரசு கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் மெல்ல அழுகிக் கிடக்க வைக்கப்பட்டிருந்தது. இப்படி அவைகளை மனிதன் உட்கொள்ள முடியாமல் போகும் நிலையைத் தடுத்து, பசியால் உயிர்பிரியும் நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கலாமே என்றது வழக்கு. நீதிபதிகளும் அன்று இதனை ஒத்த பார்வையுடைய தீர்ப்பைத்தான் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பின் பிரதிகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அவர்களது அலுவலகங்களுக்கு எதிரில் உள்ள தேனீர்க்கடைகளுக்கு வடை சுருட்ட அனுப்பினார்கள்.
வறுமையும் பசியும் இந்திய விளிம்புநிலை மக்களின் தனிச்சொத்தாக நிரந்தரமாக மாற்றப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்நிலை, அவர்களின் வறுமையைக் கணக்கிடும் சுதந்திரங்கள் என பலவற்றை ஆராய பல கமிட்டிகளை இந்திய அரசு நியமித்தவண்ணம் உள்ளது. முதலில் நியமிக்கப்பட்ட சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி இந்திய ஜனத் தொகையில் 37% பேர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்வதாகத் தெரிவித்தது. அடுத்து நியமிக்கப்பட்ட அர்ஜுன் சென்குப்தா குழு இந்திய ஜனங்களில் 77% பேர் ஒரு நாளில் ரூ.20க்கும் குறைவாகவே செலவிடும் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தது. அடுத்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.வார்தா கமிட்டி நூறு ரூபாய்க்குக் குறைவாக நாள் ஒன்றுக்கு சம்பாத்தியம் செய்யும் ஒருவரை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளதாகக் கணக்கிடலாம் என்றது. இவை எல்லாம் வறுமையை அல்லது மக்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ளப் போதுமான குறியீடுகளாக விளங்கும்போதும் இவை எதுவும் ஆட்சியில்-நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளில் விழுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை வறுமை, பஞ்சம்கூட ஒருவிதத்தில் பல ஒப்பந்தங்களைப் பெற்றுத்தரும் அரிய சந்தர்ப்பங்களே. பசியால் வாடுபவனுக்கு உடனடியாக இனி உணவு அளித்தால்தான் அடுத்த அரசு அமைக்கும் கமிட்டிக்கு முன்பாக அவன் ஆஜராகிப் பேச இயலும் என்பது தான் எதார்த்த நிலை.
இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் ஈடுபடுவது 6 லட்சம் கிராமங்களில் வசிக்கும் மக்கள்தான். இந்த இடத்தில் சிலருக்கு 1947, இந்தியா, காந்தி, நாடு, முதுகெலும்பு போன்ற வார்த்தைகள் மனதில் வரக்கூடும். பசுமைப் புரட்சியை இங்கு செயல்படுத்த காரணமானவர்கள் அன்று சொன்ன முதன்மைக் காரணம், ‘இந்தியா உணவு தானிய உற்பத்தியில் பின்தங்கியுள்ளது, சமூகத்தில் மக்கள் பலர் பட்டினியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு உணவளிக்கவே பசுமைப் புரட்சி.’ இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் தில்லி அமைச்சக அலுவலகங்களும், மாநிலங்களில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவருக்கும் இதே உணவு தானியத்தின் உற்பத்தியில் ஈடுபட்டு பட்டினியால் வாடுபவர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை. பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்கள் இன்று விநியோகம்சார் கோளாறுகள் குறித்து திருவாய் மலர்வதில்லை. இந்தியாவின் மக்களை அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப ரகம் பிரித்து, விதவிதமான வண்ணங்களில் அட்டை கொடுத்து உணவு தானியங்களை வழங்க வேண்டிய ஏற்பாடுகள் இருக்கிறது. ஆனால் அதன் பலன் எவ்வாறு உள்ளது.
பொது விநியோக முறை என்று ஒன்று உள்ளது. ஆனால் இந்தியாவில் அது எப்படி செயல்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் மிக முதன் மையானதாக, பலமானதாக, சாமானிய ஜனங்களின் உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டிய துறை அது. நகரத்தில் வசிக்கும் மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினருக்கு வேண்டுமானால் ரேஷன் கார்டு என்பது ஒரு அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது அதில் பொருட்களை வாங்கும் உரிமையை அவர்கள் வீட்டில் வேலைக்காரிகளின் அட்டையாக’ விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் இன்று கோடானுகோடி மக்களின் நிலை அப்படி இல்லை. இன்றும் ரேஷன் கடைகளில் பெரும் வரிசை நின்றபடியே சுட்டெரிக்கும் வெயிலில் காத்துக் கிடக்கிறது. எப்பொழுது அரிசி போடுவார்கள், எப்பொழுது மண்ணெண்ணை ஊற்றுவார்கள், ஜீனியை இந்தமாதம் வாங்கிவிட முடியுமா என்பது எல்லாம் இன்று ஆய்வு செய்ய வேண்டிய தலைப்புகளாகவே உள்ளன. ஒரு ரேஷன் கடையின் இந்த விபரங்களை நீங்கள் துல்லியமாக அறிந்தவர் என்றால், அரசு அலுவலகங்களில் அரசாணைகளைப் பற்றி முழு தகவல்கள் வைத்திருப்பவர் போல் உங்களின் செல்வாக்கும் மக்கள் மத்தியில் ஏறக்கூடும்.
இந்தியா முழுமையிலும் ரேஷன் கடைகளில் மக்கள் ஒன்றுபோலத்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் அங்கு பொருட்களை சிட்டை போட்டு வழங்குபவரின் கருணைக்காக காத்திருக்க வேண்டும். எல்லா கடைகளிலும் ஒருவர் இருப்பார். அவர் அந்தப் பகுதியின் அரசியல் செல்வாக்கு படைத்த ஒரு புள்ளியின் நேசத்திற்குரியவராக இருப்பார். எப்பொழுது சரக்கு வரும், எப்பொழுது அதனைக் கடத்துவது, கள்ளச்சந்தையில் விற்பது, வரும் மக்களுக்குப் பெயரளவில் சில பொருட்களைப் போட்டுவிட்டு மிச்சத்தைப் பதுக்குவது என இது தேசம் முழுமைக்கும் இபிகோ போல ஒன்றாகவே உள்ளது, சமமாகவே உள்ளது. பொருட்கள் வாங்காதவர்களின் அட்டைகளில் அதை வாங்கியது போல் நொடிகளில் இவர்கள் குறிக்கும் பாங்கைப் பார்க்கும்போது சி.ஐ. படித்தவர்களை இவர்களிடம் பயிற்சிக்கு அனுப்பலாம் என்றே தோன்றுகிறது. நம் வீட்டுப் பெண்கள் இரண்டு கிலோ ஜீனியைக் கூட நகரங்களில் பெற்றுவிட முடியும், ஆனால் தொலை தூரங்களில் வசிக்கும் இந்த நாட்டின் முதுகெலும்புகளுக்கு எல்லாம் இன்று இது ஒரு கனவே. மீண்டும் நினைத்துப் பார்க்க விரும்பாத கனவு, அவமானங்கள் நிறைந்த - வலி நிறைந்த, தழும்பேறிய கனவு. அது கிடக்கட்டும், யாருக்கு இப்பொழுது அது பற்றி எல்லாம் கவலை? இந்த முது கெலும்புகளின் நிலை எவ்வாறு உள்ளது என்று சுருக்கமாகப் பார்க்கலாம்.
இந்திய மக்களில் தினமும் மூன்று வேளை உணவு கிடைக்காதவர்கள் 32 கோடிப் பேர். உலகில் தினசரி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 14,900 குழந்தைகள் சாகின்றன. அதில் இந்தியாவில் மட்டும் தினசரி 5000 குழந்தைகள் செத்து மடிகின்றன. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளன.
உலகின் மிகப் பின்தங்கிய 26 ஆப்ரிக்க நாடுகளில் பட்டினியில் உழல்பவர்களை விட அதிகமானவர்கள் இந்தியாவில் வறுமையில், பட்டினியில் உதடுகள் காய்ந்து, உதவிக்கரம் வேண்டிக் காத்திருக்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் ஏறக்குறைய 30 கோடிப் பேரின் நிலை பரிதாபமாக உள்ளது. இந்த 30 கோடிப் பேரைப் பொறுத்தவரை ஜனநாயகம் என்பது வெற்றுச் சொல். அந்த வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வெள்ளையனின் பிடியில் இருந்த அடிமை இந்தியாவிலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி அனுபவித்ததே இல்லை. ஜார்க்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியை அளிக்கிறது. அந்த மாநிலத்தின் ஜனத்தொகைக்கு ஏற்ப அங்கு 800 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டும், ஆனால் அங்கு இப்பொழுது 300 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட்ட 2468 பேரில், ஏறக்குறைய 2000 பேர் அரசு வேலையை உதறிவிட்டு, பெருநகரங்கள் நோக்கிப் பயணப்பட்டனர். ரயில்வேயின் மிகவும் அடிமட்ட, கூலி குறைவான 38000 வேலை இடங்களுக்கு சமீபத்தில் 75 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஒரு நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் மத்திய இந்திய நிலப்பரப்பை பற்றிய சித்திரம். .
இந்தியாவின் மிக பணக்காரர்கள் 100 பேர் வசம், நம் நாட்டின் மொத்த GDPயின் 25% சொத்துகள் உள்ளது. உலகின் மிகவும் Vulnerable நாடுகளின் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பின்புலத்தில் 2009 குடியரசு தினத்தில் பிரதிபாபாட்டில் தேசிய உணவு உத்தரவாதச் சட்டம் பற்றிப் பேசியதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நபர் ஒன்றுக்கு கிலோ ரூ.3க்கு 25ளீரீ உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்பதுதான் அவரது பேச்சின் சாரம். பிரதிபாவின் பேச்சு இந்தியாவின் 47% பேருக்கு வாக்குறுதியை வழங்கியது. ஆனால் விடிவை வழங்கவில்லை. இது போன்ற வாக்குறுதியைக் கேட்டுக் கேட்டு மக்கள் அலுத்துவிட்டனர். விதர்பா பகுதிக்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் அங்கு பல வாக்குறுதிகளை வழங்கி வந்தார். அதனை நம்பி வங்கிகளுக்குச் சென்ற விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
அமெரிக்கா கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் இந்த குமாஸ்தாவுக்கு, இந்திய நீதிமன்றம் எப்பொழுதாவது தப்பிக்கூறும் இந்த வார்த்தைகளைச் சகிக்க முடியவில்லை. அரசு மக்களைப் பட்டினியால் கொல்ல முடிவு செய்தால் பின் யார்தான் அதில் தலையிட முடியும்? பெருநகரங்களில் மால்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏர்போர்ட்கள், மென்பொருள் பூங்காக்கள் கட்டப் போதுமான மானியங்களை வழங்க மத்திய அரசால் முடியும். ஆனால் உணவு தானியங்களைச் சேமிக்க தக்க ஏற்பாடுகளை செய்ய இயலாது. அரசு இனி உணவு தானிய கிட்டங்கிகளைத் தன் செலவில் கட்டக் கூடாது என ஆலோசனை வழங்கிய பன்னாட்டு நிறுவனம்தான் இங்கு பல களங்களை, பெரும் குளிரூட்டிகளை நிறுவி வருகிறது.
அவர்களின் இடத்தில்தான் மைய அரசு பெரும் வாடகை கொடுத்து தன் சேமிப்பை வைத்துள்ளது. 5 வருடமாக இருந்த அந்தக் குத்தகையை 10 வருடமாக கடந்த பட்ஜட்டில்தான் பிரணாப் முகர்ஜி மாற்றினார். உணவு உத்தரவாத சட்டம் தொடர்புடைய வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் வார்த்தைகள் இவை: சமூகத்தின் பின்தங்கியவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏழைகள் என இவர்கள் பசியால், பட்டினியால் வாடாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசாங்கத்தின் பிரதான கடமை. அது மாநில அரசோ - மத்திய அரசோ, இதனை எந்தக் கொள்கை துணையுடனும் நீங்கள் நிறைவேற்றலாம். அது உங்களின் முடிவே. தானியங்கள் வீணாகக்கூடாது, எலிகளை விட அதனைப் பட்டினியால் சாகக்கிடப்பவர்களுக்கு வழங்குங்கள். இது ஒன்றே இந்த நீதிமன்றத்தின் பேராவல். இந்தக் கணக்கிடப்பட்ட ஏழைகளுக்கு உணவு தானியங்களை வழங்க அரசிற்குத் தேவையான மானியம் ஆண்டிற்கு வெறும் ரு.56,000 கோடி மட்டுமே. ஆனால் 2010-11இல் ஒதுக்கப்பட்ட தொகை ரு.28,000 கோடி மட்டுமே. இந்தத் தொகையைக்கூட பல மாநிலங்கள் இலவச திட்டங்களுக்கு செலவிட்டது தனிக்கதை. தேவையான நிதியை ஒதுக்காமல் புலம்பும் மத்திய அரசு இந்த ஆண்டு பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய சலுகைகள் சுமார் 5 லட்சம் கோடி ருபாய் .
இந்த சலுகைகளில் ஒரு பாதியை அளித்தால் ஒரு பெரும் மனித சமூகத்தின் முகத்தில் சிரிப்பைக் காணலாம். அவர்களின் முகம் மலர்ந்தால் மீண்டும் பொருளாதார உற்பத்தியின் காத்திரமான மனிதவளமாக அவர்கள் திகழ்வார்கள். மீண்டும் மீண்டும் வயிறு பசித்துக் கிடக்கும் இந்த மக்களை அரசு ஒரு சுமையாகவே கருதுகிறது. கிரிக்கெட் பேரங்களில் அலையும் நம் உணவு மற்றும் வேளாண் அமைச்சருக்கு இதை எல்லாம் யாராவது புரிய வைத்தால் உசிதம். அவர் கிரிக்கெட் வீரர்களின் வீட்டு நாய்களுக்கான உணவுக்கு இறக்குமதிவரியை ரத்து செய்வதில் பிசியாக அலைகிறார்.
மத்திய அரசு வறுமை மற்றும் பசி, பட்டினியைப் போக்க 22 திட்டங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் வாயிலாக நடை முறைப்படுத்தி வருகிறது. இதைவிட பசி- பட்டினியைப் போக்க ஒரு அமைச்சகம் தொடங்குவதுதான் தீர்வாக இருக்கும், மத்திய பிரதேசத்தில் போபால் விஷவாயு தொடர்பாக ஒரு அமைச்சகம் செயல்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. வட்டார அளவில் உணவு தானிய கிட்டங்கிகள் நிறுவப்பட வேண்டும். உள்நாட்டு மக்கள் பசியால் வாடும் போது அவர்களுக்குத் தேவைப்படும் அன்றாட தானியத்தை ஏற்றுமதி செய்யும் அரசை எப்படி வகைப்படுத்துவது. இதைப் போலவே நம் அரசிற்கு சற்றும் குறைவில்லாதவர்களாக, நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கம் முதல் பணக்காரர்கள் வரை உணவுப் பொருட்களை வீணடிப்பதில் ஒரு போட்டியே நிலவுகிறது. ஆடம்பர கல்யாணங்கள் முதல் இலையில் 25-35 வகை பலகாரங்கள் அடுக்கும் சாதாரன கல்யாணங்கள் வரை உணவைச் சற்றும் மதிக்காத ஒரு தலைமுறை நகரங்களில் வசித்து வளர்ந்து வருகிறது. இவர்களுக்கும் கூட உணவை வீணடிப்பது என்பது தங்களின் பகட்டின் அடையாளமாகத் திகழ்கிறது.
கொலின் கொன்சால்வேஸ் அந்த வழக்கில் 67,000 டன் தானியங்கள் அழுகி வருவதைச் சுட்டிக்காட்டியிருந்தார். அது 2 லட்சம் பேருக்கு ஆறு மாதத்திற்கு உணவளிக்கப் போதுமானது. இதுவரை இந்திய அரசால் இப்படி வீணடிக்கப்பட்ட தானியங்களின் மூடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் மனிதன் நிலாவுக்கு நடந்தே போய் வரலாம். அப்படிச் செய்தால் ஆயிரம் ஆயிரம் கோடிகள் நிலாவுக்குச் செல்ல ராக்கெட் ஆராய்ச்சியின் செலவு மிச்சம்தானே. தானியங்களை வழங்காவிட்டால் பரவாயில்லை. மன்மோகன் அவர்களே, நிலாவுக்காவது போய்வர ஏற்பாடு செய்யுங்கள்.
Wednesday, March 9, 2011
பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-3.
எனக்கு ராஜீவ் உத்திரவு கொடுத்திருக்கிறார், என்றார் தீக்ஷித்.
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
இங்கே விரோதம் வலுக்கிறது.
இந்த சம்பவத்தை நினைவுகூறும்போது கூறுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் -
விரோதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.
விரோதம் தொடர்கிறது.
(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)
வளரும்.
Tuesday, March 8, 2011
பத்ம வியூகம்.
தி.மு.க. என்ற இயக்கம் அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் தமிழக அரசியலிலும் சில சமயம் இந்திய அரசியலிலும் ஒரு பேரரசைப்போல கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு கணக்கு இருக்கிறது. எந்தப் பேரரசும் ஒரு அரை நூற்றாண்டுக் காலத்தில் அதன் உச்சத்திற்குச் சென்று பிறகு சிதையத் தொடங்கும் என்பதுதான் அது. தமிழக அரசியலின் பேரரசர் தனது வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கிவிட்டாரா? ஒரு முகாலாயப் பேரரசைப்போல அவர் சொந்த நிழலாலேயே சூழப்பட்டிருக்கிறாரா?
சோனியாகாந்தி நேற்று எப்படி பிரபாகரனை அழிப்பதற்காக ஒரு ரகசிய வளையத்தை உருவாக்கினாரோ, அதேபோல்தான் இன்று தி.மு.க.வை அழிப்பதற்கும் உருவாக்கியிருக்கிறார். மத்தியில் தி.மு.க.வோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்லது தமிழகத்தில் தி.மு.க. அரசு காங்கிரஸ் தயவை நம்பியிருந்த சந்தர்ப்பத்திலோகூட ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காத காங்கிரஸ், இன்று கூட்டாட்சி கேட்டு தி.மு.க. தலைவரின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்குகிறது. தமிழக அரசியலில் எவ்வளவோ காலமாக எந்தப் பிரசன்னமும் இல்லாமல் இருந்த காங்கிரஸ் இன்று தன்னை ஒரு தீர்மானிக்கும் சக்தியாகக் காட்டிக்கொள்கிறது. காற்றுகூட உள்ளே புக முடியாமல் இரண்டு திராவிடக் கட்சிகளால் ஆளப்பட்டு வந்த தமிழகத்தின் ஆட்சி பீடத்தை நோக்கி காங்கிரஸ் பின் வாசல் வழியாக முன்னேறுகிறது. கருணாநிதி மிரட்டலுக்கும் அவமதிப்புகளுக்கும் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகிறார். இது அவருக்குப் பழக்கமில்லாதது. ஆனால் இப்போது வழியேதும் இருக்கிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸை எந்த தயக்கமும் இன்றி ‘கெட்அவுட்’ சொன்ன அவர், இன்று அவரை வலிய அழைத்து அவர் எதிர்பார்த்ததற்கும் மேலாக முப்பத்தோரு இடங்களைக் கொடுக்க வைப்பது பயத்தைத் தவிர வேறென்ன?
காங்கிரஸ் இந்திய ஜனநாயகத்தின் ஒரு புரையோடிப்போன புண்.
ராமதாசும் திருமாவளவனும் குறிப்பிட்ட சாதிகளின் பிரதிநிதிகளாகவே என்றென்றும் பார்க்கப்படுவார்கள். பிற தலைவர்கள் இவர்களைவிட அதிக சாதிய சாய்மானம் கொண்டவர்களாக இருந்த போதிலும்கூட. இனி நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம் நடிகர் விஜய் அல்லது கார்த்திக் மட்டுமே. இவர்களுக்கு இடையே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் வேறு வழியில்லாத ஒரு தெளிந்த வாக்காளன் பார்வையில் இப்போதும் தி.மு.கவே முன்னிலை பெறும்.
Saturday, March 5, 2011
விடிவதற்கு(ள்) எதுவும் நடக்கலாம்.
திமு.க .கூட்டணியில், பா.ம.க.வுக்கு - 31, விடுதலை சிறுத்தைக்கு - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு - 7 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு - 3 , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு - 1 ஆக 52 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 182 தொகுதிகள் தி.மு.க. கைவசம் உள்ளது.
அ.இ.அ.திமு.க .கூட்டணியில், தே.மு.தி.க. - 41 , புதியதமிழகம் - 2 , மனிதநேய மக்கள் கட்சி - 3 , இந்திய குடியரசு கட்சி - 1 , பார்வேர்டு பிளாக் - 1, அணைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1 ஆக 49 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 185 தொகுதிகள் அ. தி.மு.க. கைவசம் உள்ளது. இன்னும் இரண்டு கம்யூனிஸ்டுகள் , ம.தி.மு.க. பாக்கியுள்ளது தோராயமாக - 45 தொகுதிகள் ஒதுக்குவதாக் கணக்கிட்டால் மீதம் 140 தொகுதிகள் அ.இ.அ.திமு.க கைவசம் உள்ளது
இந்நிலையில் இன்று 05-03-2011 நடைபெற்ற தி.மு.க உயர்மட்ட குழு கூட்டத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகப் போவதாக முடிவாகியுள்ளது. ஆக தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையை எட்டியுள்ளது.
மத்திய அரசில் இருந்து விலக தி.மு.க. முடிவு செய்தது பற்றி, ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என்றாராம்.
மத்திய நிதியமைச்சர், பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.குலாம் நபி ஆசாத் கூறுகையில், திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்கிறார்.
தனது முடிவை தி.மு.க. அறிவித்த பின்னர், கூட்டணியை தொடருவதற்காக பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தன்னிடம் சொன்னதாக சி.என்.என்.ஐ.பி.என். சேனல்ல ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார்.
அ.தி.மு.க. பக்கம் போகமுடியாத சூழலில் துரைமுருகன் சொன்னது மாதிரி 234 தொகுதிகளிளும் காங்கிரஸ் போட்டியிடுமா?
மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ்க்கு தரமுடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அங்கே காங்கிரஸ் என்ன செய்யும்?
ஆக ராகுல் ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. பார்ப்போம் விடிவதற்குள் எதுவும் நடக்கலாம். ராகுல் ராசிதான் தெரியுமே!
வை.அருள்மொழி.
Friday, March 4, 2011
பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-2.
எனவே நான் அந்த விவரங்களுக்குள் போகவில்லை. சுருக்கமாக -
என்றாவது ஒரு நாள், தான்அரசியலுக்கு வரக்கூடும் என்று அவர் கனவிலும் கூட நினைத்திராததால், நம்மைச் சூழ்ந்துள்ள அரசியலையோ, கடந்த கால வரலாறுகளையோ அவர் அறிந்திருக்கவில்லை.
அதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஒத்து வரவில்லை. இலங்கை அரசுக்கு பெருத்த தலைவலியாக இருந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தி இலங்கையில் உள்நாட்டு அமைதி ஏற்ப தான் உதவி செய்தால், ஜனாதிபதி ஜெயவர்த்தனே தனக்கு கட்டுப்படுவார், இலங்கை தனக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று ராஜீவ் நினைத்தார்.
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும். அனைத்துபோராளிக்குழுக்களும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் (IPKF) வசம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து போராளிக் குழுக்களையும் இந்தியா திம்புவில் அழைத்து வைத்துப் பேசியது.
ராஜீவுக்கு இது தன்மானப் பிரச்சினை ஆயிற்று.
ஆத்திரமும், கோபமும் இங்கே தலையெடுக்கின்றன.
என்ன பணி என்று கூறப்படாமலே, 6 விமானங்கள் அடங்கிய இந்திய விமானப்படைப்பிரிவு ஒன்று தில்லியிலிருந்து முதலில் பெங்களூருக்கும் பின்னர் அங்கிருந்து சூலூருக்கும் விரைந்து அனுப்பப்பட்டது. பின்னர் குரூப் கேப்டன் அஹுலுவாலியா தலைமையில் இரண்டு MI-17 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலிருந்து இலங்கையிலுள்ள பலாலி விமான தளத்தை சென்றடைந்தன. இந்திய விமானப்படை விமானம் ஒன்று இலங்கை பலாலி விமான தளத்தில் இறங்கியது இதுவே முதல் தடவை.
இங்கு தான் விரோதம் ஆரம்பிக்கிறது.
எனவே தனித் தமிழ் ஈழத்திற்கு குறைவாக எதற்கும் விடுதலைப்புலிகள் தயாரில்லை என்பது பிரபாகரனால் எடுத்துக்கூறப்பட்டது.
இங்கு விரோதம் மேற்கொண்டு வளர்கிறது !
இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.
இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத்தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.
ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படை களுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.
நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.
எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப் படைகள் ஏற்கின்றன.
எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப்பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)
வளரும்.
Thursday, March 3, 2011
காற்றில் பரவும் நீரிழிவு நோய்
காற்று மாசுபடுதலால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தானே பரவும் என்று நினைத்தால் அது தவறு. காற்றில் உள்ள மாசு நீரிழிவு நோயினையும் உண்டு பண்ணுகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் வகை 2 நீரிழிவு நோய்க்கும், இரத்த நாடி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு எனக் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாசுப்பட்ட காற்றினை சுவாசித்து வருவதால் நமக்கும் இத்தகைய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மருத்துவர் மோகன் தெரிவிக்கையில், ” நமது வாழ்க்கை மாற்றமும், உணவுப் பழக்க வழக்கமுமே நீரிழிவு நோயினை கொண்டுவந்ததாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் அது முற்றிலும் தவறு. நீரிழிவு நோய் வருவதற்கு அது மட்டுமே காரணம் இல்லை, நல்ல வாழ்க்கை நலத்தைப் பேணுபவர்களுக்குக் கூட நீரிழிவு வருகிறது ” என்றார். காற்றில் உள்ள கடுமையான மாசுத்துகள்கள் நமது உடலில் உள்ள இன்சுலினைத் தாக்குகின்றது, அது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடுகின்றன என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் நீரிழிவு நோய் அபாயகரமாக பரவி வருகின்றன். இதற்கு முக்கிய காரணமே மாசுப் பட்ட காற்று தான். சென்னைப் போன்ற இந்திய மாநகரங்களில் காற்றில் கலந்துள்ள PM2.5 அமெரிக்க நகரங்களை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்க நகரங்களிலேயே இதன் மாசு அதிகம் எனக் கணித்துள்ள ஆய்வாளர்கள். சென்னையின் இந்த மாசு பன்மடங்கு அதிகம் இருப்பதால், சென்னையில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டிப்பாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்பாக அரசும், மக்களும் போதிய விழிப்புணர் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும். அதே போல காற்றின் மாசைக் கட்டுப்படுத்தவோ, ஆய்வறியவோ போதிய நடவடிக்கைகளும், வசதிகளும் இல்லாமல் இருப்பது இன்னொரு வகையில் பின்னடைவே !
இக்பால் செல்வன்.
