Saturday, March 5, 2011

விடிவதற்கு(ள்) எதுவும் நடக்கலாம்.


திமு.க .கூட்டணியில், பா.ம.க.வுக்கு - 31, விடுதலை சிறுத்தைக்கு - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு - 7 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு - 3 , மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு - 1 ஆக 52 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 182 தொகுதிகள் தி.மு.க. கைவசம் உள்ளது.

அ.இ.அ.திமு.க .கூட்டணியில், தே.மு.தி.க. - 41 , புதியதமிழகம் - 2 , மனிதநேய மக்கள் கட்சி - 3 , இந்திய குடியரசு கட்சி - 1 , பார்வேர்டு பிளாக் - 1, அணைத்திந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம் -1 ஆக 49 தொகுதிகள் ஒதுக்கியது போக மீதம் 185 தொகுதிகள் அ. தி.மு.க. கைவசம் உள்ளது. இன்னும் இரண்டு கம்யூனிஸ்டுகள் , ம.தி.மு.க. பாக்கியுள்ளது தோராயமாக - 45 தொகுதிகள் ஒதுக்குவதாக் கணக்கிட்டால் மீதம் 140 தொகுதிகள் அ.இ.அ.திமு.க கைவசம் உள்ளது

இந்நிலையில் இன்று 05-03-2011 நடைபெற்ற தி.மு.க உயர்மட்ட குழு கூட்டத்தில் மத்திய மந்திரி சபையில் இருந்து விலகப் போவதாக முடிவாகியுள்ளது. ஆக தி.மு.க காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையை எட்டியுள்ளது.

மத்திய அரசில் இருந்து விலக தி.மு.க. முடிவு செய்தது பற்றி, ஜி.கே.வாசனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என்றாராம்.

மத்திய நிதியமைச்சர், பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களிடம் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என தெரிவித்திருப்பதாக அறிய வருகிறது.

குலாம் நபி ஆசாத் கூறுகையில், திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்கிறார்.

தனது முடிவை தி.மு.க. அறிவித்த பின்னர், கூட்டணியை தொடருவதற்காக பிரணாப் முகர்ஜி மற்றும் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே நேரத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தன்னிடம் சொன்னதாக சி.என்.என்.ஐ.பி.என். சேனல்ல ராஜ்தீப் சர்தேசாய் கூறுகிறார்.

அ.தி.மு.க. பக்கம் போகமுடியாத சூழலில் துரைமுருகன் சொன்னது மாதிரி 234 தொகுதிகளிளும் காங்கிரஸ் போட்டியிடுமா?

மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி 40 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ்க்கு தரமுடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அங்கே காங்கிரஸ் என்ன செய்யும்?

ஆக ராகுல் ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. பார்ப்போம் விடிவதற்குள் எதுவும் நடக்கலாம். ராகுல் ராசிதான் தெரியுமே!

வை.அருள்மொழி.

Friday, March 4, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-2.


கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைத்தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதிகள் இழைத்த கொடுமைகளை விவரமாகக் கூறும் வலைத் தளங்கள் நிறைய இருக்கின்றன.

எனவே நான் அந்த விவரங்களுக்குள் போகவில்லை. சுருக்கமாக -

அன்று முதல் – இன்று வரை இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் அனைத்துமே ஈழத்தமிழர்களுக்கு எதாவது ஒரு வகையில் துரோகம் செய்து கொண்டு தான் இருக்கின்றன.

அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாக – எப்போதாவது இந்தியா எதாவது செய்ய முயற்சித்தால், அந்த தமிழர்களுக்குப் பரிந்து பேச வந்தால் நேரடியாக இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தைரியம் இல்லாததால், சுற்றி வளைத்து எந்த விதத்திலாவது இந்திய அரசுக்கு சிக்கலை உருவாக்குவதிலேயே இலங்கைஅரசு முனைப்புடன் இருந்துள்ளன.

எழுபதுகளில் - எண்பதுகளில் - பனிப்போர் தொடர்ந்து இருந்து வந்த காலங் களில், இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்த நேரம். அமெரிக்கா பாகிஸ்தானைக் கையில் போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு தன்னால் இயன்ற வகையில் எல்லாம் தொந்திரவுகள் கொடுத்து வந்த காலம்.

அந்த சமயத்தில் - இலங்கை அரசும் திரிகோணமலையில் இந்தியாவுக்கு விரோதமாக அமெரிக்காவுக்கு ராணுவ தளம் அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டியது.

தமிழ்ப்போராளிகள் சிறு சிறு குழுக்களாக சிங்கள அரசை எதிர்த்து வந்த நேரம். இலங்கை அரசுக்கு எதிராக இந்த போராளிக்குழுக்களை வளர்த்து விட்டால், இலங்கை அரசை ஒரு கட்டுக்குள் வைக்கலாம் என்று நினைத்த இந்திரா அம்மையார் தமிழ்ப் போராளிக்குழுக்கள் அனைத்துக்கும் தமிழ் நாட்டில் ஆயுதப் போராட்டத்திற்கான பயிற்சியைக் கொடுத்து ஆயுதங்களுடன் அவர்களை இலங்கை செல்ல ஊக்குவித்தார். இலங்கை அரசுக்கு எதிரான அவர்களது போராட்டங்களுக்கு மறைமுகமான ஆதரவைக் கொடுத்தார்.

இந்திரா தமிழ்ப் போராளிகளை வளர்த்து விட்டது இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனேவுக்கு தொல்லை கொடுக்கத்தானே தவிர தனி ஈழம் அமைத்துக் கொடுக்க அல்ல.

தனித் தமிழ் ஈழம் அமைவதில் இந்திராவுக்கு விருப்பமில்லை. அது தமிழ் நாட்டில் பிரிவினை வாதத்துக்கு வழி கோலும் என்றே அவர் நினைத்திருந்தார். இந்தியா தன் சுயநலத்திற்காகவே தங்களை வளர்க்கிறது என்பதை பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் உணர்ந்தே இருந்தனர்

1984-ல் இந்திரா மறைந்தார். ராஜீவ் பிரதமர் பொறுப்புக்கு வந்தார். இந்தியா -இலங்கை உறவில் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்பட்டன.

இந்திராவுக்கு இருந்த அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் ராஜீவுக்கு இல்லை. இலங்கைத தமிழர்களின் பிரச்சினைகளோ, அங்கு போராடும் தமிழ் மக்கள் படும வேதனைகளோ அவருக்குப் புரியவே இல்லை.

லண்டனில் படித்து, விமானியாகத் தொழில் ஏற்று, காதல் மணம் புரிந்து, மனதுக்குப் பிடித்த வகையில் சந்தோஷமாக வாழ்ந்த பணக்கார இளைஞர் அவர்.

என்றாவது ஒரு நாள், தான்அரசியலுக்கு வரக்கூடும் என்று அவர் கனவிலும் கூட நினைத்திராததால், நம்மைச் சூழ்ந்துள்ள அரசியலையோ, கடந்த கால வரலாறுகளையோ அவர் அறிந்திருக்கவில்லை.

இந்திரா எந்த காரணங்களுக்காக ஈழப்போராளிகளை ஊக்குவித்து வந்தார் என்பதை அவர் உணரவில்லை.

அனுபவமும், திறமையும் வாய்ந்த பார்த்தசாரதி, வெங்கடேஸ்வரன் போன்ற வயதான தமிழ் அதிகாரிகளை அவருக்குப் பிடிக்கவில்லை. அவர்களை எல்லாம் வெளியேற்றினார்.

தனக்குப் பிடித்த அதிகாரிகளை, அந்த இடத்திற்கு கொண்டு வந்தார். துரதிருஷ்டவசமாக அவர்கள் அத்தனை பேரும் மலையாளிகளாகவும்,
தமிழர் விரோதிகளாகவுமே அமைந்தார்கள்.

இலங்கை அரசு தனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ராஜீவ் காந்தி எதிர்பார்த்தார். பிராந்திய வல்லரசான இந்தியா விரும்புகிற வழியில்இலங்கை நடக்க வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார்.

அதற்கு ஜனாதிபதி ஜெயவர்த்தனே ஒத்து வரவில்லை. இலங்கை அரசுக்கு பெருத்த தலைவலியாக இருந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தி இலங்கையில் உள்நாட்டு அமைதி ஏற்ப தான் உதவி செய்தால், ஜனாதிபதி ஜெயவர்த்தனே தனக்கு கட்டுப்படுவார், இலங்கை தனக்கு கட்டுப்பட்டு நடக்கும் என்று ராஜீவ் நினைத்தார்.

எனவே ஈழப்போராளிகளை, போர் நிறுத்தம் செய்ய வைத்து, ஆயுதங்களையும் ஒப்படைக்கச் செய்வதாக ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனேவுக்கு உறுதிஅளித்தார். இதற்கு அடிப்படையாக இந்தியா -இலங்கை நாடுகளிடையே ஒரு ஒப்பந்தம் போடுவது என்றும் இந்த ஒப்பந்தம் நிறைவேறும் விதத்தில், இந்தியா ஒரு அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி உதவுவது என்றும் இருவருமாகப் பேசி முடிவெடுத்தனர்.

தமிழர் பிரச்சினையைப் பற்றி ராஜீவ் காந்திக்கு தெளிவான பார்வை கிடையாது என்கிற நிலையில், இலங்கையின் முக்கிய போராளிக் குழுவான விடுதலைப் புலிகளை – பிரபாகரனை கலந்து ஆலோசியாமலே ராஜீவும் ஜெயவர்த்தனே யும் மட்டுமே கலந்து பேசி, இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன.

விடுதலைப்புலிகள் எப்படியும் இதற்கு ஒப்பமாட்டார்கள் என்று ஜெயவர்த்தனேவிற்கு நன்கு தெரியும். எனவே இந்தியாவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே பிளவை உண்டு பண்ணி அவர்களிடையே விரோதத்தை வளர்க்கும் விதமாகவே ஜெயவர்த்தனே இந்த ஒப்பந்தத்தை உருவாக்க தீவிரமாக முயற்சித்தார். இந்த பின்னணியை அறியாத ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே விரித்த வலையில் வலியப் போய் விழுந்தார்.

வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்றும், தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் வடகிழக்கு மாகாணத்திற்கு அதிகாரங்கள் பரவலாக அளிக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடனான போரை நிறுத்திக்கொண்டு, தெற்கே உள்ள படை முகாமுக்குத் திரும்பும். அனைத்துபோராளிக்குழுக்களும் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயுதங்களை அமைதி காக்கும் இந்தியப்படையின் (IPKF) வசம் ஒப்படைக்க வேண்டும்.

இத்தனை செயல்களும் நடைபெறுவதை உறுதிப் படுத்தும் பொறுப்பினை இந்திய அமைதி காக்கும் படை மேற்கொள்ள வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக, அனைத்து போராளிக் குழுக்களையும் இந்தியா திம்புவில் அழைத்து வைத்துப் பேசியது.

தமிழர்களுக்குத் தேவையான சுயாட்சியைத் தான் பெற்றுத் தருவதாகவும், அனைத்துப் போராளிக்குழுக்களும், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதானத்திற்கு உடன்பட வேண்டும் என்று ராஜீவ் வற்புறுத்தினார். மற்ற சில குழுக்கள் உடன்பட்டாலும், பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கு உடன்படவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்தன.

ராஜீவுக்கு இது தன்மானப் பிரச்சினை ஆயிற்று.

ஆத்திரமும், கோபமும் இங்கே தலையெடுக்கின்றன.

இந்தியா-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி, பிரபாகரனுடன் பேசவிரும்புவதாக புலிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

என்ன பணி என்று கூறப்படாமலே, 6 விமானங்கள் அடங்கிய இந்திய விமானப்படைப்பிரிவு ஒன்று தில்லியிலிருந்து முதலில் பெங்களூருக்கும் பின்னர் அங்கிருந்து சூலூருக்கும் விரைந்து அனுப்பப்பட்டது. பின்னர் குரூப் கேப்டன் அஹுலுவாலியா தலைமையில் இரண்டு MI-17 ஹெலிகாப்டர்கள் சூலூர் விமான தளத்திலிருந்து இலங்கையிலுள்ள பலாலி விமான தளத்தை சென்றடைந்தன. இந்திய விமானப்படை விமானம் ஒன்று இலங்கை பலாலி விமான தளத்தில் இறங்கியது இதுவே முதல் தடவை.

விருப்பம் இல்லாமலே பிரபாகரன் வற்புறுத்தப்பட்டு அந்த விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். அங்கிருந்து அந்த ஹெலிகாப்டர் திருச்சியை அடைந்தது. திருச்சியிலிருந்து ஒரு விசேஷ ராணுவ விமானத்தில் பிரபாகரன் தில்லி அழைத்துச் செல்லப்பட்டார்.

தில்லியில், அசோகா ஓட்டலின் மேல்தளத்தில் பிரபாகரன் கிட்டத்தட்ட சிறையில் வைக்கப்பட்டது போல் தங்க வைக்கப்பட்டார். ஒப்பந்த நகல் அவரிடம் அளிக்கப்பட்டது. அவர் அதில் கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். பிரபாகரன் மறுத்தபோது – ஒப்பந்த நகலில் கையெழுத்திடாமல் அவர் அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்று அவருக்கு உணர்த்தப்பட்டது.

பிரபாகரன் முற்றிலும் எதிர்பாராத ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தத்தை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது, தற்கொலைக்கு ஒப்பாகும் என்பது அவரது உறுதியாக எண்ணம். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொள்ளாத ராஜீவ் காந்தியின் போக்கு அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

இங்கு தான் விரோதம் ஆரம்பிக்கிறது.

தன் அன்னை வளர்த்து விட்ட”பசங்க” தானே இவர்கள். தன் சொல்லுக்கு கட்டுப்படாமல் போவதா என்று ராஜீவிற்கு கோபம்.

இந்திரா சொல்லி ஆரம்பிக்கக்ப்பட்டதல்ல ஈழ விடுதலைப் போராட்டம். தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மையாளர்களால் துன்புறுத்தப்பட்டு வந்த தமிழர்கள் விடுதலை பெற்று சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், வாழ்வதற்காக துவக்கப்பட்ட இயக்கம்,

இந்திரா பயிற்சி கொடுத்து ஊக்குவித்தார் என்கிற காரணத்தால், இயக்கத்தின் அடிப்படையான தனிஈழ லட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியுமா என்பது புலிகளின் – பிரபாகரனின் வினா.

இது வரை இலங்கை அரசு போட்ட எவ்வளவோ ஒப்பந்தங்களை தமிழர்கள் பார்த்தாயிற்று. இலங்கை அரசு எதையும் நடைமுறையில் நிறைவேற்றாது என்பது தமிழர்களின் அனுபவம்.

எனவே தனித் தமிழ் ஈழத்திற்கு குறைவாக எதற்கும் விடுதலைப்புலிகள் தயாரில்லை என்பது பிரபாகரனால் எடுத்துக்கூறப்பட்டது.

ராஜீவ் காந்தி தன் பிடிவாதத்தை விடுவதாக இல்லை. விடுதலைப் புலிகளின் லட்சிய வேட்கையையும், தாகத்தையும் புரிந்து கொள்ள அவர் அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொல்வதை நீங்கள் கேட்டே ஆக வேண்டும். இல்லையேல் பலப்பிரயோகத்திற்கு உட்படுவீர்கள் என்பது அவர் பயமுறுத்தல்.

இறுதியில், அந்த இடத்தை விட்டு வெளியேற வேறு வழி இல்லாததால், பிரபாகரன் ஒப்புக்கொள்வதாகக் கையெழுத்திட்டார்.

இங்கு விரோதம் மேற்கொண்டு வளர்கிறது !

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிரபாகரன் ஒப்பந்தம் ராஜீவ் காந்தியால் தம் மீது எப்படி திணிக்கப்பட்டது என்பதையும் தான் எந்த சூழ்நிலையில் இருக்கிறார் என்பதையும் ஈழத் தமிழ் மக்களுக்குத் தெரிவித்து, சுதுமலையில், அம்மன் கோயில் திடலில் 04/08/1987 அன்று நிகழ்த்திய உரையின் சாரம் -

“நமது அரசியல் தலைவிதியை இந்தியா என்கின்ற எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவுசெய்திருக்கும் நிலையில் எம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தியப்பிரதமர் எனக்கு சில உறுதிப்பாடுகளை வழங்கினார். எமது மக்களின் பாதுகாப்பிற்குரிய உறுதியினையும் அவர் வழங்கினார்.

இந்தியப் பிரதமரின் ஒளிவுமறைவற்ற நேர்மையில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரளித்த உறுதியிலும் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. பேரினவாத சிங்கள அரசாங்கம் மீண்டும் தமிழின ஒழிப்பைத்தொடங்குவதற்கு இந்தியா அனுமதியமளிக்க மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்திய அமைதிப்படையிடம் எமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஆயுதங்களை நாங்கள் ஒப்படைக்கவில்லையானால் நாம் இந்தியப் படை களுடன் மோதுகின்ற சூழ்நிலை உருவாகும். இது எமக்குத் தேவையில்லை.

நாம் இந்தியாவை நேசிக்கின்றோம். இந்திய மக்களை நேசிக்கின்றோம். இந்தியப் படைகளுக்கு எதிராக நாம் எமது ஆயுதங்களைப் பயன்படுத்தும் கேள்விக்கே இடமில்லை.

எமது எதிரிகளிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பினை இந்தியப் படைகள் ஏற்கின்றன.

எமது ஆயுதங்களை நாம் இந்தியப்படையினரிடம் ஒப்படைப்பதன் மூலம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரது உயிருக்கும் முழுப்பாதுகாப்பை வழங்கும் பொறுப்பினை இந்திய அரசாங்கம் ஏற்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

Thursday, March 3, 2011

காற்றில் பரவும் நீரிழிவு நோய்


காற்று மாசுபடுதலால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் தானே பரவும் என்று நினைத்தால் அது தவறு. காற்றில் உள்ள மாசு நீரிழிவு நோயினையும் உண்டு பண்ணுகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் வகை 2 நீரிழிவு நோய்க்கும், இரத்த நாடி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு எனக் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மாசுப்பட்ட காற்றினை சுவாசித்து வருவதால் நமக்கும் இத்தகைய நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு.

மருத்துவர் மோகன் தெரிவிக்கையில், ” நமது வாழ்க்கை மாற்றமும், உணவுப் பழக்க வழக்கமுமே நீரிழிவு நோயினை கொண்டுவந்ததாக நம்பப்பட்டு வந்தன, ஆனால் அது முற்றிலும் தவறு. நீரிழிவு நோய் வருவதற்கு அது மட்டுமே காரணம் இல்லை, நல்ல வாழ்க்கை நலத்தைப் பேணுபவர்களுக்குக் கூட நீரிழிவு வருகிறது ” என்றார். காற்றில் உள்ள கடுமையான மாசுத்துகள்கள் நமது உடலில் உள்ள இன்சுலினைத் தாக்குகின்றது, அது நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடுகின்றன என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.

இந்தியாவில் குறிப்பாக நகரங்களில் நீரிழிவு நோய் அபாயகரமாக பரவி வருகின்றன். இதற்கு முக்கிய காரணமே மாசுப் பட்ட காற்று தான். சென்னைப் போன்ற இந்திய மாநகரங்களில் காற்றில் கலந்துள்ள PM2.5 அமெரிக்க நகரங்களை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்க நகரங்களிலேயே இதன் மாசு அதிகம் எனக் கணித்துள்ள ஆய்வாளர்கள். சென்னையின் இந்த மாசு பன்மடங்கு அதிகம் இருப்பதால், சென்னையில் வசிப்போரில் பெரும்பான்மையானவர்களுக்கு நீரிழிவு நோய் கண்டிப்பாக ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன் தொடர்பாக அரசும், மக்களும் போதிய விழிப்புணர் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கும் செயலாகும். அதே போல காற்றின் மாசைக் கட்டுப்படுத்தவோ, ஆய்வறியவோ போதிய நடவடிக்கைகளும், வசதிகளும் இல்லாமல் இருப்பது இன்னொரு வகையில் பின்னடைவே !


இக்பால் செல்வன்.

Wednesday, March 2, 2011

தங்கபாலுவும் பிரபாகரனும்....






பெரியதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

Tuesday, March 1, 2011

பிரபாகரனும் ராஜீவ் காந்தியும் - பகுதி-1.

ராஜீவ் காந்தி மறைந்து 19 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.

பிரபாகரன் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசால் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய அரசே சொல்லுகிறது. (எவ்வளவு பேர் இதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது வேறு செய்தி) இரண்டு பேரும் மறைந்து விட்டதாகக் கருதப்படும் இன்றைய நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் அவர்கள் இருவரையும் சார்ந்து நிகழ்ந்த பல சம்பவங்கள் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சிகள் ஆகின்றன.

ராஜீவ் காந்தி மரணத்தைப் பொறுத்த வரையில், மக்களுக்கு, அது ராஜீவ் குடும்பத்திற்கு விடுதலைப்புலிகளால் இழைக்கப்பட்ட கொடிய அநீதி என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுக் காலங்களில் இந்த சம்பவத்தின் ஒரு கோணம் மட்டுமே மக்களின் மனதில் பதிந்து இருக்கிறது. பதியப்பட்டு இருக்கிறது.

சரித்திர நிகழ்வுகளுக்கு எப்போதுமே பல கோணங்கள் உண்டு.ஒவ்வொரு கோணத்திலும் வித்தியாசமான பார்வைகளும் காட்சிகளும் கிடைக்கும். இது வரை இந்த சம்பவத்தைப் பற்றி ஒரே கோணத்தில் அனைவரும் பேசி வந்ததால், இது விஷயத்தில் மாறுபட்ட கோணங்களும் இருக்கக்கூடும் என்பதே பலருக்கு தோன்றவில்லை. சிலருக்கு அப்படித் தோன்றினாலும், அதைப்பற்றி பேசவோ, எழுதவோ தயங்குகிறார்கள்.

எல்லாரும் பேசத் தயங்கும் இந்த விஷயத்தைப் பற்றி விவரமாகப் பேச வேண்டும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். எனவே தான் இந்த தலைப்பு. எப்போது ஒரு சம்பவம் சரித்திரம் ஆகி விட்டதோ அதன் பின்னர் அதை பல்வேறு கோணங்களிலும் அலசிப் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஏன் இது நடந்தது ? இது எப்படி நடந்திருக்கக்கூடும் ? இதன் பின்னணி என்ன என்பது இன்றைய தமிழ் இளைஞர்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராஜீவ் காந்தி – இந்திராவின் புதல்வர், ஜவஹர்லால் நேருவின் பேரன் – தாயும் பிரதம மந்திரியாக இருந்தவர். தாத்தாவும் பிரதம மந்திரியாக இருந்தவர். பரம்பரை பணக்காரர். born with silver spoon என்று கூறுவார்களே அது போல் சகல வசதிகளுடன் பிறந்தவர் - வாழ்ந்தவர். டேராடூன் பப்ளிக் ஸ்கூலில் படிப்பு. லண்டனில் மேற்படிப்பு. தனக்குப் பிடித்த தொழில் – விமானியாகப் பணி. படிக்கும்போதே இத்தாலி நாட்டுப்பெண்ணுடன் காதல். பின்னர் காதலித்த பெண்ணுடனே திருமணம். பெண்ணும், ஆணுமாக இரண்டு அழகான குழந்தைகள். வாழ்க்கையில் துன்பத்தையே அறியாதவர்.

பிற்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனவே சமகால அரசியலைப் பற்றியோ, இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றியோ தற்செயலாக அரசியலுக்கு வரும் வரை ஏதும் அறியாதவர். நல்ல புத்திசாலி. ஆனால் பிடிவாதக்காரர். தான் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என்று விரும்புபவர்.

அன்னை இந்திராவின் திடீர் மரணத்தால், மக்களிடையே பெருத்த அனுதாபத்தையும், அதன் காரணமாக தேர்தலில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பெரும் அளவிற்கு மக்களின் ஆதரவையும் பெற்றவர். மிக இளைய வயதிலேயே 110 கோடி மக்களின் முழு ஆதரவைப்பெற்ற தலைவனாக உருவாகி 5 வருடங்கள் இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்தவர். இந்தியாவில் தகவல் தொழில் நுட்ப புரட்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்.

பிரபாகரன் – திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வர். தந்தை யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு உத்தியோகத்தில் இருந்த, மிக மிக எளிமை யான நேர்மையான மனிதர். பிரபாகரன் -சிறு வயதிலிருந்தே சிங்களஇனவெறி யர்களின் அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டே வளர்ந்தவர்.துன்பப்படும் மக்களிடையே வாழ்ந்தவர்.அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டவர். தமிழர்கள் இந்தக் காடையர்களின் கொடுமையிலிருந்து விடுபடும் நாள் எப்போது வருமோ என்று துடித்தவர் - தவித்தவர்.

தன் முன்னோடிகளாக, நேதாஜி சுபாஷ் சந்திர போஸையும், பகத் சிங்கையும் ஏற்றுக்கொண்டவர். இனவெறி சிங்கள அரசாங்கத்திடமிருந்து விலகி தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ ஒரே வழி - தனித் தமிழ் ஈழம் அமைவது தான் என்று உறுதியாக நம்பியவர். தன்னை நம்பி வந்த இளைஞர்களுடன் சேர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தைத் தொடங்கியவர். சிங்கள அரசை எதிர்த்து, பல போர்முனைகளில் வென்று, கணிசமான அளவிற்கு ஈழ மண்ணை மீட்டு, சுதந்திர தமிழ் ஈழம் கனவல்ல – நனவு தான் என்று கண்ணில் காட்டியவர். ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் கால சரித்திரத்தில் மட்டுமே நாம் பார்த்த தமிழனின் வீரத்துக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர். எதற்கும், யாரைக்கண்டும் அஞ்சாதவர்.

மிகச்சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு இயக்கத்தை உருவாக்கியவர். எந்தவித தீய பழக்கங்களும் இல்லாத ஒரு கட்டுக்கோப்பான இளைஞர் சமுதாயத்தை தன் வழி காட்டுதலில் உருவாக்கியவர். வன்முறைத் தாக்குதல் அவரது வழி முறைகளில் ஒன்றாக இருந்தபோதும், அவர் மேற்கொண்டசெய்கைகளில் எதுவுமே சுயநலத்திற்காக இருந்ததில்லை. தமிழீழத்தை தன் உயிருக்கும் மேலாக நேசித்தவர். தன் தாய் மண்ணிற்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் சகலவித தியாகங்களையும் செய்தவர்.

இவர்களில் யார் ஹீரோ ? யார் வில்லன் ? இவர் தான் ஹீரோ என்று சிலரும் அவர் தான் ஹீரோ என்று வேறு சிலரும் கூறுவார்கள்.

இந்த இரண்டு பேரும் மட்டும் இணைந்து செயல் பட்டிருந்தால் - தமிழர்களின் கனவு என்றோ நனவாகி இருக்கும் ! ஐக்கிய நாடுகள் சபையில் தனித் தமிழீழத்தின் கொடி பட்டொளி வீசிப்பறந்து கொண்டிருக்கும் !

இவர்கள் இரண்டு பேரையும் மோதவிட்டு தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொண்ட வில்லன் வேறு ஒரு ஆள். கிழட்டு சிங்கள நரி ஜனாதிபதி ஜெயவர்த்தனே !

அனுபவம் இல்லாத , அரசியலில் முதிர்ச்சி பெற்றிராத, இளைஞரான ராஜீவ் காந்தியின் ஈகோவைப் பயன்படுத்திக்கொண்டு, ராஜீவ் காந்தியைத் தன் சதியில் சிக்கவைத்து - பிரபாகரனுக்கும், தமிழீழ மக்களுக்கும் விரோதியாக்கிய நயவஞ்சகன் ஜெயவர்த்தனே !

இந்த விரோதம் உருவானது எப்படி ?

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்திரவு இட்டார் – இப்படி ஒரு செய்தியை கேள்விப்பட்டால் விசித்திரமாக இல்லை ?

ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு பிரபாகரன் தான் முக்கிய காரணமாக இருந்தார் என்கிற செய்தி இருக்கும்போது, மேற்கண்ட தலைப்பு மிகவும் விசித்திரமாகத் தானே இருக்கும் ?

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்திரவு போடும் அளவிற்கு அவர் களிடையே எத்தகைய விரோதம் இருந்தது என்பது ராஜீவ் காந்தி மறைந்து பல வருடங்களுக்குப் பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது. ஒரு வேளை இந்த விவரங்கள் முதலிலேயே வெளியாகி இருந்தால் – ராஜீவ் கொலையின் பரிணாமமே மாறி இருக்கலாம் – பின்னால் நிகழ்ந்த பல அவலங்கள் கூட நிகழாமல் இருந்திருக்கலாம்.

IPKF - சமாதானத்தை நிலை நிறுத்த இலங்கைக்கு இந்தியா அனுப்பியிருந்த படைக்கு முதல் கமாண்டராக பொறுப்பேற்று இலங்கைக்கு சென்றிருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் என்கிற நேர்மையான, வெளிப்படையான இந்திய ராணுவ தளபதி – அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கொடுத்துள்ள பேட்டியைப் படிக்கும்போது இது வரை நமக்குத் தெரியாத பல செய்திகள், புதிய கோணங்களில் கிடைக்கின்றன !

அவர் கூறியுள்ள செய்தி தான் இது. பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ்காந்தி உத்திரவு இட்டார்.

இந்தத் தலைப்பில் தொடர்ந்து எழுதும் முன்னர் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

ராஜீவிகாந்தியின் இறப்பிற்கு பின் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலங்களும் சொல்லொண்ணாத் துன்பங்கள் எப்பேற்பட்டவை ? இதற்கான காரணங்கள் என்ன ?

எண்பதுகளில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்து மக்களிடையே பெருத்த ஆதரவும், உணர்வுபூர்வமான கொந்தளிப்பும் இருந்தது. தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தில் செயல்பட வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.

ஆனால் ராஜீவின் மரணத்திற்கு பிறகு சூழ்நிலை முற்றிலுமாக மாறி விட்டது.

ஈழத்தமிழர்களைப் பற்றி பேசவே தமிழக மக்கள் அஞ்ச ஆரம்பித்து விட்டார்கள் ஏன் இந்த அவல நிலை ?

இந்தியாவிற்கு என்று எழுதப்பட்ட சட்டங்கள் (Indian penal code, Crimininal Procedure code etc.) இருக்கின்றன. நீதிமன்றங்கள் இருக்கின்றன. குற்றம் ஏதேனும் நிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வாங்கித் தருவது அரசாங்கத்தின் பொறுப்பு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நேரடியாக சம்பந்தப்பட்டிருந்த பெண் அந்த விபத்திலேயே மாண்டு போனார். அதற்கு துணையாக இருந்தவர்கள் என்று கருதப்பட்ட பலர், போலீஸாரின் கைகளில் சிக்க விரும்பாமல், தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். மிச்சம் மீதி இருந்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டு, கடந்த 19 வருடங்களாக தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மேலும் இதில் யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று அரசாங்கம் நினைத்தால், சம்பந்தப்பட்ட வர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தட்டும். யார் இதைத் தடுக்கிறார்கள் ?

அதை விட்டு விட்டு, ராஜீவ் காந்தி கொலைக்கு பழி வாங்கும் விதத்தில், ஒரு இனத்தையே, ஒட்டு மொத்த தமிழினத்தையே அழிக்க முற்படுவது எந்த விதத்தில் நியாயம் ?

காந்திஜியைக் கொன்றவர் ஒரு மராத்தியர் என்பதற்காக அத்தனை மராத்தியர் களையும் யாரும் கொடுமைப் படுத்தவில்லையே.

பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலராக இருந்த சீக்கியரே சுட்டுக் கொன்றபோது, உடனடியாக தில்லியில் காங்கிரஸ்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு கண்ணில்பட்ட சீக்கியர்களை எல்லாம் கொன்று குவித்தனர். .உண்மையே. ஆனாலும், வேகம் தணிந்த பிறகு அதே சீக்கிய இனத்தைச் சேர்ந்த ஒருவரையே பிரதமராக இந்த நாடு ஏற்றுக்கொள்ளவில்லையா ?

மகாத்மா காந்தியின் கொலைக்கு காரணம் அவர் முஸ்லிம் இனத்தவர்க்கு ஆதரவாகவும், இந்துக்களுக்கு பெருத்த இழப்புகள் ஏற்படக் காரணமாகவும் இருந்தார். என்று இந்துக்களில் ஒரு பிரிவினர் கருதியது தான்.


இதேபோல் இந்திரா அம்மையாரின் கொலைக்கு காரணம் பொற்கோயிலுக்குள் அவர் ராணுவத்தை அனுப்பி களங்கப்படுத்தினார் என்று சீக்கியர்களில் ஒரு பிரிவினர் கோபப்பட்டது தான்.

இதே போல் ராஜீவ் காந்தியின் இறப்பிற்கான காரணம் என்ன என்பதையும் நாம் வெளிப்படையாக விவாதித்து ஒரு தெளிவுக்கு வந்திருக்க வேண்டாமா ?

அதை விட்டு விட்டு, ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு தண்டனை வழங்குவதாக நினைத்துக் கொண்டு – பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை, இன்னமும் தொடர்ந்து ஈடுபடுவதை – எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்

இவர்களது பழிவாங்கும் போக்கால் - லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் எப்பேற்பட்ட அவலத்தை அனுபவித்துக்கொண்டு வருகிறார்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியது, இயன்ற விதங்களில் எல்லாம் அவர்களுக்கு ஆன உதவிகளைச் செய்வது மனசாட்சி உள்ளவர்களின் கடமை.

89,000 விதவைகள், ஒன்றரை லட்சம் உடல் ஊனமுற்றவர்கள், சொந்த நாட்டிலேயே அநாதைகளாக அலையும் மூன்று லட்சம் - பெண்கள், முதியவர்கள் – குழந்தைகள் !

ஈழத்தமிழர்களின இத்தனைத் துன்பங்களுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமாக இருந்தவர்களை, சட்டம் தண்டிக்காவிடினும், சமுதாயம் தண்டிக்காவிடினும், என்றேனும் ஒரு நாள் அவர்களின் சொந்த மனசாட்சியே தண்டிக்கும் என்பது நிச்சயம். இந்த மாபெரும் அவலத்தை மாற்ற வேண்டும் – இந்த பாவப்பட்ட மக்களின் துயரைப் போக்க அனைத்து விதங்களிலும் செயல்படவேண்டும் என்று சொல்வது முழுக்க முழுக்க மனிதாபிமானம் சம்பந்தப்பட்டது.

ராஜீவ் காந்தியின் இறப்பிற்கு காரணமாக இருந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.

ஆனால் மேற்கண்ட செய்தி தலைகீழாக இருக்கிறதே - ஜெனரல் ஹர்கிரத் சிங் சொல்வது போல் பிரபாகரனை சுட்டுக் கொல்ல ராஜீவ் உத்திரவு போட்டாரா ? ஏன் அப்படி ? எத்தகைய சூழ்நிலையில்,ஏன் இது நடந்தது. ஈழப்போராளி களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே அப்படி என்ன விரோதம் ?

தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு, முக்கியமாக 30 -35 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினருக்கு இந்த விரோதத்தின் பின்னணி தெரியாது.அரசியலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உன்னிப்பாக கவனித்து வருகிற எனக்கு கூட இந்த இடுகைக்காக தகவல்களைத் தேடும் போதுதான் சில செய்திகள் புதிதாகத் தெரிய வந்தன.

இந்த பின்னணிக்குப் போகும் முன் - ஒரு பழைய தமிழ்ப்படம் பற்றி ஒரு சுருக்கம்.

1954ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த, பாடல்களே இல்லாத, ஒரு சீரியஸான தமிழ்த் திரைப்படம் “அந்த நாள். இன்றைய தலைமுறையினர் அதைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஜாவர் சீதாராமன் எழுதி எஸ்.பாலசந்தர் இயக்கிய படம்.

மிகவும் புரட்சிகரமான கதையம்சம் உள்ள அந்த படத்தின் துவக்கத்தில்முதல் சீனிலேயே பிரபல விஞ்ஞானியாக நடிக்கும் சிவாஜி சுட்டுக கொல்லப்படுவார். படம் பார்ப்பவர் நெஞ்சம் பதை பதக்கும். அய்யோ – இவ்வளவு பெரிய விஞ்ஞானியை சுட்டுக் கொன்று விட்டார்களே என்று. சுடுவது யார் - சிவாஜி எதற்காகச் சுடப்பட்டார் என்பதைக் காட்ட மாட்டார்கள். அது தான் கதையே !

இவராக இருக்குமா – இல்லை இவராக இருக்குமோ என்று சிவாஜி கதாபாத்தி ரத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் கொலை செய்திருக்கக்கூடிய வாய்ப்புகளை யூகித்து, சித்தரித்து படம் நகரும். அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் சிவாஜியைக் கொலை செய்வதற்கு தேவையான அளவிற்கு தகுந்த காரணங்கள் இருக்கும்.

கிட்டத்தட்ட படம் முடியும் தருவாயில், சுடுவது அவரது மனைவியே தான் என்று காட்டுவார்கள். படம் பார்ப்பவர்கள் அத்தனை பேரும் – அடிப்பாவி ! சண்டாளி -கணவனையே கொன்று விட்டாளே என்று திட்டுவார்கள்.

ஆனால் – அதற்கும் உச்ச கட்ட க்ளைமாக்ஸாக அந்த மனைவி ஏன் கட்டிய புருஷனைக் கொன்றாள் என்பதையும் காட்டுவார்கள். கணவனை விட, தன் தாய் நாட்டை அதிகமாக நேசிக்கும் பெண் அவள். கணவனால் தாய் நாட்டுக்கு ஆபத்து வரும்போது, நாட்டைக் காக்க வேறு வழி இல்லாத நிலையில் கணவனையே சுட்டுக்கொன்று விடுகிறாள். படம் இங்கு முடிவடைந்து விடுகிறது.


(Reference : Intervention in Sri Lanka : the IPKF Experience Retold by Major General Harkirat Singh (Retd)


வளரும்.

நன்றி. விமரிசனம் – காவிரிமைந்தன்

Saturday, February 26, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -4)




46.உங்கள் ரோல்மாடல் யார்?
ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் :
என்னுடைய ரோல் மாடல் பேராசிரியர் சதீஷ் தவான். அவரது தலைமைப்பண்புகள் என்னைக் கவர்ந்தது. முக்கியமான பணிகளை மேற்கொண்டிருக்கும் போது, பிரச்னைகள் வரும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து நாம் வெற்றி பெற வேண்டும் என்று என்னிடம் அவர் கூறினார்.

47.நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய முடியுமா?

கணேஷ்ராம், பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : ராணுவ படைகள் மற்றும் இடர்பாடு மேலாண்மைத் துறையினர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, உதவி வருகிறார்கள்.நாம் நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியுமானால், சேதத்தை குறைக்கலாம். இதற்கான ஆராய்ச்சி துவங்கிவிட்டது. இடர்பாடு நிர்வாகத்துறையினர் சேத அளவை குறைக்கவும், நிவாரணப் பணியில் ஈடுபடவும் செய்கின்றனர். விஞ்ஞானிகளும் முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றனர். இது பேரிழப்புகளை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

48.ஹீலியம் - 3 எந்த அளவுக்கு நமக்குப் பயன்படும்?
அன்புச்செல்வன், டால்பின் மெட்ரிக் பள்ளி, பொன்மேனி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சந்திரனில் ஹீலியம் -3 பெருமளவில் உள்ளது. எரிபொருளுக்கான மிக நேர்த்தியான மூலப்பொருள் இது. நல்ல ஆற்றல் அதே சமயம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. கதிர்வீச்சு இருக்காது. 21ம் நூற்றாண்டுக்கான எரிபொருள் இது என்று எல்லோரும் வரவேற்கிறார்கள்.

49.எதை வெற்றிகரமான சாதனையாக கருதமுடியும்?
எஸ்.சிவா, தங்கவேலு தொழில்நுட்ப கல்லூரி, சென்னை

டாகடர் அப்துல்கலாம் : இது மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. பிறரால் சாதிக்க முடியாத ஏதேனும் ஒன்றை, சாதித்துக்காட்டி ஜெயித்தால், நீங்களும் சாதனையாளரே.

50.உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உள்ளதா?
எஸ்.மகாலட்சுமி, ஸ்ரீ ஆண்டாள் அழகர் இன்ஜினியரிங் கல்லூரி, மாமண்டூர்

டாகடர் அப்துல்கலாம் : விடாமுயற்சியுடனான, கடின உழைப்பும், வியர்வையுமே வெற்றியை பெற்றுத்தரும்.

51.இளைய தலைமுறைக்கு உங்களது அறிவுரை? அவர்களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
ஆர்.ஜெயந்தி, ஸ்ரீராமசாமி நாயுடு நினைவு கல்லூரி, சாத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : படிப்பில் சாதியுங்கள். அறிவையும் அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் இலக்கை தீர்மானியுங்கள். அந்த இலக்கை நீங்கள் அடைய முயற்சிக்கும் போது, கண்டிப்பாக சில பிரச்னைகளை சந்திப்பீர்கள். பிரச்னைகள் உங்களை வீழ்த்திவிடக்கூடாது. நீங்கள் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு வீழ்த்துங்கள். நாட்டின் முன்னேற்றத்துக்கு பங்காற்றக் கூடிய அறிவான குடிமக்களாக நீங்கள் உருவாக வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

52.இந்த வயதில் எனக்கு ஏற்படும் மனச்சிதறல்களிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
சிவா, டி.ஐ., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, காரப்பாக்கம், சென்னை

டாகடர் அப்துல்கலாம் : மனச்சிதறல்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமே. மாணவப் பருவம் பொறுப்புள்ளது என்பதால் நம் பலம் மற்றும் ஆர்வத்தை அறிந்து கொள்ள வேண்டும். உங்களது லட்சியத்தை நீங்கள் வகுத்துக் கொள்ளுங்கள். அதை அடைவதற்காக நீங்கள் தொடர்ந்து போராடுங்கள். இந்த லட்சியத்தை அடையும் போது நீங்கள் கண்டிப்பாக சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்னைகளை தோற்கடித்து உங்கள் லட்சியத்தில் நீங்கள் வெற்றி பெறுங்கள்.

53.நர்சிங் துறை பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மூகாம்பிகை, மங்களசுந்தரி, மதர்தெரசா போஸ்ட் கிராஜுவேட் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ், புதுச்சேரி

டாகடர் அப்துல்கலாம் : நர்சிங் மிகச்சிறந்த உன்னதமான பணி. இரவிலும் பகலிலும் வேதனையுறுவோருக்கு தேவையானதை செய்யும் பணி என்பதால் ஆஸ்பத்திரி வார்டுகளில் அவர்கள் தேவதை போல் காட்சியளிப்பார்கள். இந்த பணியில் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உலகம் முழுவதும் இப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். இந்திய நர்ஸ்கள் எங்கு போய் பணியாற்றினாலும் அவர்களுக்கு நல்ல மரியாதை உண்டு.

54.இந்தியாவில் ஏராளமான தோரியம் தாது உள்ளது.ஆனால் அணு உலைகளுக்கு எரிபொருளுக்கு அடுத்த நாடுகளை நம்பியிருக்கிறோமே?
பிரதீப் குமார், 12ம் வகுப்பு, பி.வி.எம்., பள்ளி, பொள்ளாச்சி

டாகடர் அப்துல்கலாம் : இன்னும் சில ஆண்டுகளில் நமது விஞ்ஞானிகள் இதில் வெற்றி கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.00ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில்

55.இந்தியா எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?
தரண்குமார், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தற்போது இதற்கான வசதி பெருகி வருகிறது. ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு போதுமான சுதந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து கூட இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் திட்டங்கள் மேற்கொள்ள மாணவர்கள் வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலை மற்ற இன்ஜினியரிங் பிரிவுகளிலும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

56.ஒரு மதத்துக்குள்ளேயே பல பிரிவுகள் உள்ளபோது, நீங்கள் எப்படி பல்வேறு மதங்களை மதிக்கிறீர்கள்?
கமலாதரன், மருதுபாண்டியன் நகர், சிவகங்கை

டாகடர் அப்துல்கலாம் :
நமது மதங்கள் மிக அழகான தீவுகளைப் போன்றவை. மதம் என்பது ஆன்மிகமாக மறுமலர்ச்சி அடைய வேண்டும். எல்லோரிடமும் ஒருமைப்பாட்டை பார்க்க வேண்டும். மதம், ஜாதி மற்றும் மொழி வேறுபாட்டுக்கு ஆதரவாக செயல்படமாட்டேன் என்று எல்லா மாணவர்களும் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

57.சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் சூரியன் என்னவாகும்?
கிரிதர்ராஜ், இ.பி.ஜி., மெட்ரிக். பள்ளி, மூன்றுமாவடி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : சூரியன் இதற்கு முன்பு 460 கோடி ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இயங்கி வந்திருக்கிறது. இன்னும் 50 லட்சம் ஆண்டுகளுக்கு அதிலுள்ள எரிபொருட்கள் தீராது. சூரியனின் கடைசி காலத்தில் அதிலுள்ள ஹீலியம் குறைந்து பிற தனிமங்களால் அது பெரிதாகத் துவங்கும், அவ்வாறு விரிவடையும் போது, அது பூமியையே விழுங்கிவிடும்.

58.உங்களைப் போன்று உயர்ந்த பணிகளை மேற்கொள்ள நானும் விரும்புகிறேன். வழி சொல்லுங்களேன்.
உமர் பரூக், யாதவா கல்லூரி, மதுரை. சத்யா, பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரி, வத்தலக்குண்டு

டாகடர் அப்துல்கலாம் : இளைஞர்களாகிய உங்களுக்கு வாழ்வில் லட்சியம் வேண்டும். இலக்கை தீர்மானித்த உடன் அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. சலிக்காத மனம், இடைவிடாத கடின உழைப்பு இருந்தால் தடைகளை தாண்டி இறுதியில் வெற்றி பெறலாம்.

59.கடவுள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டா?
ஹேமா, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை.

டாகடர் அப்துல்கலாம் : நோபல் பரிசு பெற்ற ஐன்ஸ்டீன் மற்றும் சர் சி.வி.ராமன் போன்றோர் கூட இந்த அண்ட சராசரத்தை படைத்த கடவுளின் விந்தையை கண்டு பிரமித்தனர். ராமன் கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். என்னைப் பொறுத்தவரை நமக்கு இறைவன் மீது நம்பிக்கை இருந்தால், நமது முயற்சியின் முடிவு பல மடங்காகப் பெருகும்.

60.நேனோ டெக்னாலஜியின் எதிர்காலம் என்ன?
ஜெகநாதன், அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர். கவிதா, கலைமகள் கல்லூரி, கோவை. ஷியாம் சுந்தர், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, திருப்புவனம். முருகேசன், காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்

டாகடர் அப்துல்கலாம் : மிக நேர்த்தியான தொழில்நுட்பத்தைக் கொண்டது நேனோ டெக்னாலஜி. மருத்துவத்துறையில் இந்த தொழில்நுட்பம் சாமான்யர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது. பயோ இன்பர்மாடிக்ஸ் துறையுடன் இந்த துறை எதிர்காலத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது. அது மருத்துவத் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.

61.வளர்ந்த நாடாக இந்தியா உருவாகும் போது விவசாயத்தின் நிலை என்ன?
ராஜபிரபு, பி.எஸ்.என்.ஏ., கல்லூரி, திண்டுக்கல். சதீஷ்ராஜா, குமாரசாமி இன்ஜினியரிங் கல்லூரி, கரூர்

டாகடர் அப்துல்கலாம் : நம் நாட்டில் 70 கோடி மக்கள் இன்னும் கிராமத்தில் வாழ்கிறார்கள். இதற்காக குறைந்தபட்சம் 7 ஆயிரம் கிராமங்களை நகர்ப்புறங்களுக்கு இணையான வசதி கொண்ட தொகுப்புகளாக மாற்ற வேண்டும். இதனால் அக்குறிப்பிட்ட கிராமங்களுடன் அதை சுற்றியுள்ள கிராமங்கள் சாலை வசதிகள், மின்னணு வசதி, தொலைதொடர்பு வசதி கிடைக்கும். அக்கிராமங்களும் முன்னேற்றம் அடையும். தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள வல்லம் கிராமம் 65 கிராமங்களை தன்னுடன் இணைத்து நகர்ப்புறத்துக்கு இணையாக திகழ்கிறது. வளர்ந்த நாடாக மாறும்போது கிராமங்கள் வளர்ந்தால்தான் விவசாயமும் விளைபொருட்களும் உயரும்.

62.இன்றைய வாழ்க்கையில் அறிவியல் இரண்டற கலந்துவிட்டது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தீபக் ராஜ், குலப்பட்டி பாலகிருஷ்ணா ஜோஷி குருகுலம் பள்ளி, கொளத்தூர்

டாகடர் அப்துல்கலாம் : ‘டிவி, ரேடியோ, தொலைதொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் அறிவியலின் விளைவுகளே. எதிர்காலத்திலும் இவற்றில் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தும். பண்ணைகளில் உற்பத்தியை பெருக்குவது, கடலில் குறிப்பிட்ட இடங்களில் மீன்களை அறிவது, வானிலை அறிக்கை ஆகிய அனைத்துமே அறிவியல் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்.

63.இந்தியா முழுவதும் ஆறுகளை எப்போது இணைப்பார்கள்?
ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : ஆறுகளை இணைப்பது மிகுந்த பலன் தரக்கூடியது. மத்திய பிரதேசத்தில் சிறு ஆறுகளை இணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் தலைமுறைக்கு இது முக்கியமான பணி.

64.ஏழ்மையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
தினேஷ், சி.ஐ.டி., பாலிடெக்னிக், கோவை

டாகடர் அப்துல்கலாம் : கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களுக்கு இணையான வசதிகளை உருவாக்கித் தரும் புறா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம்தான் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் ஏழ்மையை ஒழிக்க முடியும். இது கிராமப்புற மக்களின் தொழில் வாய்ப்பையும் தொழில்முனையும் திறனையும் அதிகரித்து அவர்களது வாழ்க்கையை வளம் பெற செய்யும்.

65.இந்திய மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன?
கார்த்திக், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி, கோவை

டாகடர் அப்துல்கலாம் : எதிர்வரும் 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும். அந்த வல்லரசான நாட்டில் மாணவர்கள் வாழ வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. இந்த சூழலில் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வளர்ச்சியும் ஏற்படும்.

66.எதிர்கால சந்ததியினரிடம் எதிர்பார்ப்பது என்ன?

மதுமிதா, ஸ்ரீசாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி, மதுரை

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை கனவாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட வேண்டும். நீங்கள் ஒரு லட்சியத்தை கொண்டு, எதிர்வரும் தடைகளை தகர்த்து, சிறப்படைய வேண்டும். விடுமுறை காலங்களில் மாணவர்கள் தங்கள் லட்சியங்களை தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பாக கொள்ள வேண்டும். இயலாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்

நன்றி : கல்வி மலர்

Monday, February 21, 2011

மாணவர்களின் கேள்விகளுக்கு டாக்டர்.அப்துல்கலாமின் பதில்கள். (பகுதி -3)





31.இந்தியாவில் மூளைவறட்சி ஏன்?
ஆகாஷ் சந்திரன், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, அண்ணாநகர், சென்னை.
முஸ்தபா,ஸ்ரீ ஐயப்பா பாலிடெக்னிக் கல்லூரி, வேப்பூர், கடலூர்


டாகடர் அப்துல்கலாம் :
இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் பிற துறைகளில் ஏராளமான துறை நிபுணர்களை இந்தியா உருவாக்கி வருகிறது. இவர்களில் சிலர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதைப் பற்றி நாம் கவலை அடைய வேண்டாம். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் கல்வி நிறுவனங்களுடனும் தொடர்பு வைத்துள்ளனர். சொந்த நாட்டில் பணிபுரிவதா அல்லது வெளிநாட்டுக்கு செல்வதா என்பது தனிநபர் விருப்பத்தைப் பொறுத்ததுதான். தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை உள் உணர்வில்தான் ஏற்படுவது.

32.நிலவுக்கு மனிதனை எப்போது இந்தியா அனுப்பும்?
பிரபு, ரயில்வே காலனி மேல்நிலை பள்ளி, ஈரோடு

டாகடர் அப்துல்கலாம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் இதுதொடர்பாக முயற்சி செய்து வருகிறார்கள். சந்திரனில் தற்போது பூமியில் காணப்படும் எரிபொருளை விட 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளான ஹீலியம்-3 சந்திரனில் காணப்படுகிறது. ஏழ்மையை ஒழிக்க அவற்றை இங்கு கொண்டு வருவது அவசியம். நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம்தான் இஸ்ரோவின் அடுத்த முக்கிய திட்டம்.

33.கல்லாமையை ஒழிக்க மாணவர்களாகிய எங்கள் கடமை என்ன?
தண்டபாணி, தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், கோவை

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களாகிய நீங்கள் கல்லாமையை ஒழிப்பதில் பங்கேற்க முடியும். உங்கள் விடுமுறை காலங்களில் நீங்கள் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று அங்கு 10 பேருக்கு எழுத படிக்க சொல்லிக் கொடுங்கள். இதுபோன்ற முயற்சியை மாணவர்கள் தொடங்கினால் இந்தியாவில் கல்லாமை என்பது இல்லாமல் போய்விடும்.

34.நல்ல அறிவாளிகள் வெளிநாட்டில் வேலை செய்வதையே விரும்புகிறார்களே ஏன்?
ஸ்ரீமணிகண்டன், சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, மதுரை. சண்முகபிரியா, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சென்னை. அசாருதீன், எஸ்.ஐ.வி., மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்தியாவில் மிகச்சிறந்த நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றன. சிலர் வெளிநாட்டுக்கு செல்வதை விரும்புகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்கட்டமைப்புகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ஆண்டுக்கு மூன்று கோடி பட்டதாரிகளை நாம் உருவாக்குகிறோம். இவர்களில் சிலர் வெளிநாட்டுக்கு செல்வதைக் கண்டு நம் நாட்டில் அறிவு வளம் குறைந்துவிட்டது என்று கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் நம் இந்தியாவின் அறிவு வளமும் பெருகுகிறது என்றுதான் நினைக்க வேண்டும்.

35.மேற்கத்திய கலாசாரத்தால் நம் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை மாணவர்கள் மாற்றுவது எப்படி?
சந்தீப், சிந்தி மாடல் ஸ்கூல், சென்னை. பிரீத்தி கோமதி, சிவகாசி நாடார் மெட்ரிக் பள்ளி, மதுரை. ராமதாஸ், விப்ரோ டெக்னாலஜிஸ், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : குடும்பம் மற்றும் சமூகத்தால் கலாசாரம் மாற்றம் ஏற்படுகிறது. பாடத்திட்டத்திலும், கூடுதல் பாடத்திட்டத்திலும் நம் கலாசார நெறிகளை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். மதிப்பீடு அடிப்படையிலான கல்வி திட்டம் அவசியம்.

36.ஜீரோ கிராவிட்டி பற்றி கூறுங்களேன்
குமார், எச்.சி.எல்.லிட் ., புதுச்சேரி. ரமேஷ் ராஜா, சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் மையம், சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : விண்வெளி பயணத்தில் ஈடுபடுவோர் ஜீரோ கிராவிட்டி அதாவது புவியீர்ப்பு விசையை உணராத நிலையை அடைவார்கள். விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் போதும் இந்நிலையை அவர்கள் உணர்வார்கள்

.37.இந்திய பொருளாதாரத்தை சர்வதேச நாடுகளைவிட உயர்த்துவதற்கான வழிகள் என்ன?
அருள் முருகன், ஸ்வாதி, ஐ.எப்.இ.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங், விழுப்புரம். துர்கா, பிரின்ஸ் மெட்ரிக். பள்ளி, சென்னை. பிரியதர்ஷினி, தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை. செழியன், டி.பி.ஜெயின் கல்லூரி, சென்னை. சுகன்யா, எஸ்.எஸ்.வி.சாலா மேனிலைப் பள்ளி ஆத்திகுளம்.

டாகடர் அப்துல்கலாம் : இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நகர்ப்புற பொருளாதாரம் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் பொருளாதார வலிமையை மேம்படுத்த தகவல்தொடர்பு மற்றும் பயோடெக்னாலஜி துறையில் நாம் சிறந்து விளங்க வேண்டும். மக்களை மையமாகக் கொண்ட தொழில் கொள்கைகள், புதிய இளம் தலைவர்களை உருவாக்குதல், பயன்பாட்டு அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

38.இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளனர். இதற்கு தீர்வு என்ன?
தீபா, அருணை இன்ஜினியரிங் கல்லூரி, திருவண்ணாமலை. கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, நாகமலை.

டாகடர் அப்துல்கலாம் : மாணவர்களுக்கு தொழில் முனையும் திறன் வழங்காததுதான் அவர்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான தொழில்களை அமைக்க அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களை மையமாக கொண்டு, நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளிக்க வேண்டும்.

39.நமது பாடத்திட்டத்தில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர வேண்டுமா?
கார்த்திக், சாஸ்திரா பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

டாகடர் அப்துல்கலாம் : நமது பாடத்திட்டத்தில் அறிவியல் கருத்து அளவிலேயே உள்ளது. இது நடைமுறைக்கான செயல்முறை கற்றலிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நம்முடைய சிந்தனைகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இருக்கின்றன. நம்முடைய கல்வித் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். 5 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

40.நான் ஜனாதிபதி ஆக வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
சல்மான், ஹோலிகிராஸ் பள்ளி, சென்னை. ராமகிருஷ்ணன், இன்ஸ்டிடியூட் ஆப் ரோட் டிரான்ஸ்போர்ட் டெக்னாலஜி, ஈரோடு.

டாகடர் அப்துல்கலாம் : இது நல்ல கனவு. உங்களுடைய செயல்களில் 100 சதவீத முயற்சி செய்யுங்கள். ஏதாவது ஒரு துறையில் சிறந்தவராக வாருங்கள். இடையில் சில தோல்விகள் வந்த போதிலும் அது பற்றி வருத்தப்படாதீர்கள். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.

41.ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் விஞ்ஞானி அப்துல்கலாமுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
விஷ்ணு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர். பவித்ரா, கபாலீஸ்வரர் நகர், நீலாங்கரை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : இரு பணிகளிலுமே நான் கடின உழைப்பையே அளிக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இரண்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

42.ஏன் செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கிறது?
ஜேம்ஸ் மார்ட்டின், பெடிட் செமினேர் மேனிலைப்பள்ளி, புதுவை.

டாகடர் அப்துல்கலாம் : பெர்ரிக் ஆக்சைடு எனும் இரும்பின் துரு செவ்வாய் கிரகத்துக்கு சிவப்பு நிறம் அளிக்கிறது. செவ்வாயின் மேற்புறத்தில் உள்ள இரும்பும் மற்ற தனிமங்களும் ஆக்சைடுகளாக மாறியுள்ளன. செவ்வாய் துரு நிறைந்த ஒரு கோளாக உள்ளது. சிவப்பு நிறத்தால் போருக்கான ரோமக்கடவுளான மார்ஸ் பெயரே இக்கோளுக்கு இடப்பட்டது.

43.ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அவசியமா? 2020ம் ஆண்டுக்குப் பின்னரும் இது தொடருமா?
பிரபு, பி.எஸ்.ஆர். இன்ஜினியரிங் கல்லூரி, சிவகாசி. பத்மபிரியா, வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை. சிவக்குமார், சண்முகநாதன் இன்ஜினியரிங் கல்லூரி, திருமயம்.

டாகடர் அப்துல்கலாம் : குறிப்பிட்ட சமுதாய மக்கள் வழிவழியாக வாய்ப்பு இழந்துள்ளனர். அவர்களுக்காக அரசியல் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை நிறைவேற்றுவது நமது சமுதாய கடமை. 2020ம் ஆண்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் பெருகிவிடும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் படிக்க விரும்பும் எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அத்துடன் திறமைக்கும் மதிப்பு இருக்கும்.

44.சமுதாய ஒழுக்கம், லஞ்ச ஊழல் ஒழிப்பு, தனிநபர் சுகாதாரம் இவற்றைப் பேண மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அவசியமா?
ஜேசுதாஸ், தேனாம்பேட்டை, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் : ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்றுத் தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.

45.சூரிய ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்கிறோமா?
ஆனந்தவேலு, அரசு இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை.

டாகடர் அப்துல்கலாம் :
சூரிய சக்தி மிகுதியாக இருக்கிறது. கூடுதல் சக்தியை சேமிக்கும் சூரிய கலன்களை நாம் தயாரித்தால் அது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். நேனோ டெக்னாலஜி இதற்கு பெரும்பங்கு வகிக்கும். கார்பன் நேனோ டியூப் சூரிய கலன்களின் சக்தியை அதிகரித்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வளரும்.

நன்றி : கல்வி மலர்