Sunday, January 15, 2012

ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.

ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்.
ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்

செய்முறை:

வலது காலை மேலே தூக்கி முகத்தோடு ஒட்டியவாறு நேராக காலை தூக்கி கையால் பிடிக்கவும். இடதுகாலை இடுப்புக்கு பக்கவாட்டில் சரியாக 90 டிகிரி நீட்டவேண்டும். இதுபோல இடதுகாலை பக்கம் மாற்றி செய்து, ஆசனத்தை கலைக்கவும்.

பயன்கள்:

நரம்பு தளர்ச்சி, தசைப்படிப்பு, மூட்டுவலி நீங்கும்.


பார்சுவ உத்தித பாதாசனம்.
பார்சுவ உத்தித பாதாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு உள்ளங்கை தரையில் படுமாறு வைக்கவும். அதற்குபிறகு இயல்பான சுவாசத்தில், வலதுகாலை இடுப்பிலிருந்து செங்குத்தாக மேலே தூக்குங்கள். இரு கைகளால் மேலிருக்கும் வலது கால் கட்டைவிரலை பிடித்து உடலை நிமிர்த்தவும். இத்துடன் முகத்தால் வலது முழங்காலை தொடவும் முயற்சியுங்கள். அதே சமயத்தில் இடதுகால் மடங்காமல் தரையில் பதிந்திருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, இதேபோல இடதுகாலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

வயிற்று கோளாறுகள் வராது. முதுகுவலி நீங்கும். வாயு கோளாறு அகலும். ஹிரண்யா, மூலநோய், மலச்சிக்கல் நீங்கும். தொடை, முழங்கால், பாதப்பகதிகள் நன்கு வலுப்படும். தொடையில் உள்ள கொழுப்பை குறைக்கும். இருசக்கர வாகனம், காரில் பயணிப் போர், அலுவலகத்தில் உட்கார்ந்து பணியாற்றுவோருக்கு உகந்த ஆசனமிது!


ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.
ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்

செய்முறை:

விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் இரு கைகளையும் தரையோடு ஒட்டிவைக்கவும். இருகால்களையும், 90 டிகிரியில் இரு கைகளையும் கொண்டு மெதுவாக, அந்தந்த பக்கத்து முழங்காலை பிடியுங்கள். இடுப்புக்கு மேல் உள்ள வயிறு, மார்பு, தோள், தலைப்பகுதியை மேல்நோக்கி தூக்கவும்.

நெற்றியால் முழங்காலை தொட்டு, பிறகு இரு கைகளையும் மேலே கொண்டு போய் கணுக்காலை பிடித்து உடலை செங்குத்தாக நிறுத்தவும். இரண்டு பிருஷ்டபாகம் மற்றும் முதுகுதண்டின் கடைசி எலும்பு ஆகியவை தரையில் படிந்து ஒரு ஃ வடிவில், உடலின் எடையை சமநிலையில் நிறுத்தவேண்டும். ஆசனம் போடும்போது, சுவாசம் இயல்பாக இருக்கட்டும்.

பயன்கள்:

இளமை நீடிக்கும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். மலச்சிக்கல், வாயுத்தொல்லை, தொந்தி நீங்கும். பாதவலி, முழங்கால் வீக்கம், தொடைப் பெருக்கம் வராது. மலச்சிக்கலை நீக்க சிறந்த ஆசனமிது!

Friday, January 13, 2012

தமிழர்களின் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை.. மறைக்கப்பட்ட வரலாறு !



தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். இதற்காக போராட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

சரி, தேவிகுளம், பீர்மேடு குறித்து வரலாறு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்...

தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் அனைத்தும் பாண்டிய மன்னனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது. எனவே, இந்த பகுதிகள் அனைத்தும் 1889 க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை.

வரலாற்று ரீதியாக பார்க்கும் போது சேர அரசர்கள் ஆண்ட பகுதிதான் இன்றைய கேரளா.சேரர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் சிறு, குறு சமஸ்தானங்களாக அது சிதருண்டு போயுள்ளது. கி.பி 12ம் நூற்றாண்டில் இறுதியில் தற்போதைய பீர்மேடு தாலுகாவையும், கூடலூரையும் உள்ளடக்கி பூஞ்சாறு அரச வம்சம் ஆளத்தொடங்கியுள்ளது.

பூனையார் தம்பிரான் அரசு என்று தமிழில் அழைக்கப்பட்ட அந்த அரசு பாண்டிய மன்னன் குலசேகரன் என்பவரால் நிறுவப்பட்டுள்ளதாக வரலாற்று உண்மைகள் தெரிவிக்கின்றன. பூஞ்சாறு மன்னர் ஆண்ட பகுதிகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் பீர்மேடு, தேவிகுளம் மற்றும் உடும்பன்சோழா போன்ற பகுதிகள் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. கம்பம், உத்தம பாளையம், போடி தாலுகா தமிழகத்துடனும் இணைக்கப்பட்டன.

1886ம் ஆண்டு தமிழர்களின் ஆளுமையில் இருந்த பீர்மேடு தாலுகாவில் முல்லைப் பெரியாறு அணைக் கட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த வரலாற்று உண்மையை மறைத்து கேரள அரசின் இணையதளத்தில் 16 ம் நூற்றாண்டிலேயே கேரளாவுடன் பூஞ்சாறு அரசு கேரளாவுடன் இணைந்து விட்டது போல குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்குட்பட்ட பத்மநாபபுரத்தை தலைமையாக கொண்டு ஆண்ட திருவிதாங்கூர் சமஸ்தானம் தனது தலைமை இடத்தை 1756ல் திருவனந்த புரத்திற்கு மாற்றியுள்ளது. இதன் பின்பு 1866க்கு மேல்தான் பூஞ்சாறு அரசர்களின் நிலத்தை கையகப்படுத்த தொடங்கியுள்ளது.

சேரநாட்டின் ஒரு பகுதியே திருவிதாங்கூர், திருவிதாங்கூரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்ட காரணத்தால் மார்ஷல் நேசமணி, திருவிதாங்கூர் தமிழ்ப் பகுதிகளை மீட்க "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை" உருவாக்கி, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, பீருமேடு, தேவிகுளம், சித்தூர் ஆகிய 9 பகுதிகளையும் தாய்த் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்று போராடினார்.

5.11.1949 ல் ம.பொ.சி. தலைமையில் நடைபெற்ற வடஎல்லை மாநாட்டில் நேசமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் வடவேங்கடம் அதாவது திருப்பதி முதல் குமரி வரை உள்ள பகுதிகளை இணைத்து "தமிழ் மாகாணம்" அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழர்களால் உயர்ந்த பீர்மேடு

இதே காலக் கட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு தமிழர்களை மலையாள அரசு அடக்கி ஒடுக்கியது. 434 தமிழர்களையும் 20 தமிழ் பெண்களையும், இளைஞர்களையும் ஒரே சிறையில் அடைத்து துன்புறுத்தியது.

இந்த மக்களின் துன்பங்களைப்பற்றி மார்ஷல் நேசமணி குறிப்பிடுகையில் தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்கள் இன்று கண்ணுக்கினிய தோட்டங்களாக மிளிருவதற்கு தமிழன் உழைப்பும், அந்த உழைப்பின் கடுமையால் கொட்டப்பட்ட வியர்வை முத்துக்களுமே காரணமாகும். மனிதன் செல்ல முடியாத இந்த மலைமுகடுகளில் ஏல விவசாயத்தை வளர்த்த பெருமை முழுதும் தமிழனுக்கே உரியதாகும் என்று பேசினார். நேசமணி குறிப்பிட்ட தாலுகாக்களில் தமிழர்களே அதிக அளவில், அதாவது பெரும்பான்மைக்கும் அதிகமான அளவில் வாழ்ந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை

நேசமணியின் நாடாளுமன்ற பேச்சில், பூஞ்சாறு மன்னர் பாண்டிய மரபினர். அன்னார் ஒப்பமிடுகின்ற போது மீனாட்சி சுந்தரம் என்றே கையொப்பமிடுவர். மன்னாடியார் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுப் பிரதானிகளைக் கொண்டு நாட்டு வரி தண்டினான் என்றும் அத்தகைய வரி வசூலிக்கும் பற்றுச்சீட்டில் மதுரை மீனாட்சி துணை என்ற முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாகக் காணப்படுகிறது. ஆகையால், இந்த, தேவிகுளம், பீருமேடு பகுதிகள் அனைத்தும் பாண்டியனின் இறையாண்மைக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் அதிகார வரம்புக்குள் 1889 வரையிலும் இருந்தது.

எனவே, மேற்படி பகுதிகள் அனைத்தும் 1889 க்கு முந்தைய காலம் வரையிலும் திருவிதாங்கூருக்குச் சொந்தமானதாக இருந்ததில்லை என்பதே வரலாறுகள் கூறுகின்ற உண்மை, மாடோன் கே.டி.கெச் பி. தேவன் கம்பெனியாரின் முன்னோர்கள் 1879 ல் பூஞ்சாற்று மன்னருடன் செய்து கொண்ட முதல் உடன் படிக்கையின் அடிப்படையில் இப்பகுதிகள் அவர்களது அனுபவத்திற்கு வந்துள்ளது என்று சுட்டிக்காட்யுள்ளார் மார்ஷல் நேசமணி.

மேலும் அவர் கூறுகையில்,பெரியார் நீர்த்தேக்கத் திட்டத்திற்காக பிரிட்டிஷ் – இந்திய நடுவண் அரசு செயலாளர் திருவிதாங்கூர் மன்னருக்காக ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார். 1889-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, குத்தகை உரிமையின் கெடுவை நீட்டித்த வேளையில் அது திருவிதாங்கூர் மன்னருக்கு சாசனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கு முன்னால் இப்பகுதி தமிழகத்துடன் இருந்தது என்பது தெரிகிறது.

திருவிதாங்கூர் மன்னர் இப்பிரதேசங்களை பூஞ்சாறு மன்னரிடமிருந்து நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் பெற்றிருக்கிறார். இப்பிரதேசங்களுக்கு வந்துபோக மதுரை, மதுரை மாவட்டத்திலுள்ள தேவாரம், கூடலூர், போடிநாயக்கனூர், கம்பம், சிவகிரி போன்ற கணவாய்கள் வழியாக மட்டுமே வந்தடைய முடியும் என்று கூறியுள்ளார்.

பெரியார் அணைபற்றி அவர் கூறும்போது, பெரியாறு நீர்த்தேக்கத்திற்கு 13 சதுர மைல்கள் தண்ணீர் கொள்ளளவும் 305 சதுர மைல்கள் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் உண்டு. இப்பகுதிகள் சென்னை மாநிலத்திற்கு மிகவும் தேவையாகிறது. ஏனெனில் பெரியாறு நீர்த்தேக்கத்தினால் மதுரை மாவட்டத்திலுள்ள 1,90,000 ஏக்கர் நஞ்சை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கிறது. பெரியாற்றுத் தண்ணீரைப் பயன்படுத்தி பெரியகுளம் அருகில் ஒரு நீர்மின் நிலையமும் நிறுவுவதற்கான திட்டத்தை சென்னை மாகான அரசு அறிவித்தது. இத்திட்டத்திற்காக பெரியகுளத்தில் ஒரு கால்கோள் விழா ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டது என்று 1955 டிசம்பர் 15ஆம் நாள் நேசமணி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

திருவிதாங்கூர்(கேரளம்) தமிழர் போராட்டம் நடைபெற்ற போது, கேரள அரசியல்வாதிகள் ஒன்றாக இணைந்து நின்றனர். ஆனால் தமிழக மக்களிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நேசமணி 9 தாலுகாக்களுக்காகவும் பெரியாறு அணைக்காகவும் வாதாடியபோது எல்லா கேரள எம்.பி.க்களும் எதிர்த்தனர். ஆனால் தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி.கூட ஆதரவு காட்டவில்லை.

தமிழனின் கைவிட்டுப்போன பகுதிகள்

எல்லைக் கமிஷன் மூவரில் ஒருவராக சர்தார் கே.எம். பணிக்கரை இந்திய அரசு நியமித்தது. இவர் ஒரு மலையாளி, மலையாளிகளுக்கு சாதகமாகவே நடந்தார். மேற்கூறிய காரணங்களினால் தமிழகத்தோடு 5 தமிழ்ப் பகுதிகளே இணைந்தன (தோவாளை, அகஸ்தீஸ் வரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை), முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கமும் நம்மை விட்டு கேரளாவுக்குச் சென்றது.

முல்லைப் பெரியாறு தண்ணீர் பிரச்சினை, நெய்யாறு தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமானால் தென் எல்லைக் காவலன் நேசமணி கேட்ட ஒன்பது தாலுகாக்களுக்கு உட்பட்ட தேவிகுளம், பீருமேடு, நெய்யாற்றின் கரை, சித்தூர், செங்கோட்டையில் பாதி ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க கட்சி சார்பு நிலையின்றி எல்லா தமிழர்களும் ஒன்றிணைந்து போராடி மேலே கூறிய நான்கரை தாலுகாக்களையும் தமிழகத் தோடு இணைத்தால் மட்டுமே தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையாகிய தண்ணீர் பிரச்சினை நீங்கும்.

Thursday, January 12, 2012

டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், நடிக்க நடிகை அஞ்சலி மறுப்பு .



முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படத்தில் நடித்த வினய்யுடன், தமிழில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை அஞ்சலி.

'உன்னாலே உன்னாலே' படம் மூலம் தமிழில்அறிமுகமான வினய், சமீபத்தில் நடித்த படம் கேரள இயக்குனரால் எடுக்கப்பட்ட 'டேம் 999'. அணையை உடைக்காவிட்டால் 35 லட்சம் பேர் இறந்துவிடுவார்கள் என்ற பொய்யான பிரச்சாரத்தை கேரள அரசின் உதவியுடன் செய்தது இந்த படம். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்தப் படம் இரண்டு வாரங்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

'டேம் 999' படத்துக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் நடித்த வினய், விமலா ராமன் மீதும் ரசிகர்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் வினய்யை வைத்து தயாராகும் புதுப்படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் கேட்டுள்ளனர். ஆனால் வினய்யுடன் நடிப்பதால் தமிழ் ரசிகர்கள் என் மீது ஆத்திரப்பட வாய்ப்புள்ளது. எனவே எனக்கு இந்த வாய்ப்பே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஞ்சலி!

அஞ்சலிக்கு தெரிந்தது கூட, வினய்யை வைத்து படமெடுக்க முயலும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் தெரியவில்லையே!

தேவிகுளம், பீர்மேட்டை கேரளாவிலிருந்து மீட்க வேண்டும் - கருணாநிதி அதிரடி.



தமிழர்களுக்குச் சொந்தமான தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை மீட்டு தமிழகத்துடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதிகளை முறைகேடாக கேரளத்துடன் இணைத்தது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள தேவிகுளம் மற்றும் பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதை வரலாற்று சான்றுகளுடன் விவரித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகள் தமிழர்களுக்குச் சொந்தமான இடமாகும். தமிழர்களின் இடம் இவை. 1886ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமே பிழையானது.

தமிழர்களுக்குச் சொந்தமான இடத்தை கேரளாவுடன் இணைத்தது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இப்போதாவது வரலாற்றை முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீர்மேடு, தேவிகுளத்தை தமிழகத்துடன் இணைக்க தமிழக அரசும் மத்திய அரசை வலியுறுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Wednesday, January 11, 2012

"நானோ' தொழில்நுட்பம் மூலம் சூரிய ஒளி மின் உற்பத்தி : அப்துல் கலாம் யோசனை.



"நானோ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விண்வெளியிலிருந்து பூமிக்கு சூரிய ஒளிசக்தியைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளிடம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.

சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் லேசர் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கருத்தரங்கை திங்கள்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:

மனிதர்கள் பயன்படுத்துவதைவிட ஒரு லட்சம் கோடி அதிகமான சக்தியை சூரியன் வெளியேற்றுகிறது. அதில் ஒரு சிறு பகுதியையாவது சேமிக்க முடிந்தால், எதிர்காலத்தில் நமது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.

விண்வெளியில் சூரிய ஒளி சக்தியைச் சேமிப்பது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பூமியில் சூரிய ஒளி சக்தியைச் சேமிப்பதற்கும், விண்வெளியில் சேமிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய ஒளி சக்தியைச் சேகரிக்கலாம். பூமியில் அதிகபட்சம் 8 மணி நேரம் வரை மட்டுமே சேகரிக்க முடியும். அதேபோன்று, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் விண்வெளி சூரிய ஒளி சக்தி நிலையங்கள் பாதிக்கப்படாது.

விண்வெளியில் சூரிய ஒளி சக்தியைச் சேகரிக்க மூன்று அமைப்புகள் மிக முக்கியமானவை. சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், பூமியில் அந்த சக்தியைப் பெறுவதற்கான நிலையம், விண்வெளியிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி சக்தியைக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பம் ஆகிய மூன்றும் முக்கியம்.

விஞ்ஞானிகளுக்கு சவால்கள்: விண்வெளியிலிருந்து சூரிய ஒளி சக்தியைப் பெறுவது தொடர்பான சில சவாலான யோசனைகளை உங்கள் முன்வைக்கிறேன். விண்வெளியிலிருந்து மரபுசாரா எரிசக்தியைப் பெறுவது சாத்தியமே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், விண்வெளியில் சேகரிக்கப்படும் எரிசக்தியை எவ்வாறு பூமிக்குக் கொண்டுவருவது என்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.

நுண் அலைகள் மூலமாகவோ, லேசர் அலைக்கற்றை மூலமாகவோ சூரிய சக்தியை பூமிக்கு அனுப்ப முடியுமா என்று ஆராயலாம். "நானோ' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேட்டரிகளைக் கொண்டு விண்வெளியிலிருந்து எரிசக்தியை பூமிக்குக் கொண்டுவரலாம்.

இந்த "நானோ' பேட்டரிகளில் ரசாயான அல்லது எலெக்ட்ரிக் எதிர்வினைகளின் மூலம் சக்தியைப் பூமிக்குக் கொண்டுவர முடியுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம். "நானோ' தொழில்நுட்பத்தின் மூலமாகவோ, லேசர் தொழில்நுட்பத்தின் மூலமாகவோ சூரிய சக்தியை பூமிக்குக் கொண்டுவருவது குறித்து இங்குள்ள விஞ்ஞானிகள் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

லேசர் தொழில்நுட்பம்: லேசர் ஒளிக்கற்றையைக் கண்டுபிடித்தபோது, உற்பத்தித் துறையிலிருந்து மருத்துவத் துறை வரை அனைத்துத் துறைகளிலும் இந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என யாரும் நினைக்கவில்லை. வரும் 2020-க்குள் சிறிய மூலக்கூறுகளைக் கண்டறியும் வகையில் மிக நுண்ணிய லேசர் ஒளிக்கற்றைகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவை கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் வடிவமைப்பிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளரான மணிலால் பூமிக், கார்பன் மோனாக்சைடு லேசரைக் கண்டுபிடித்தார். அதன்பிறகு, லேசர் தொழில்நுட்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை என்று விஞ்ஞானிகள் கூறும் அளவுக்கு அவரது கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருந்தது.

அவரைப் போன்று ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்களையும், விஞ்ஞான மேதைகளையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தவும், கொண்டாடவும் தருணம் வந்துள்ளது என்றார் அவர்.


Saturday, January 7, 2012

சிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டலில் கருணா கும்மாளம் ( படங்கள் )



இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.

ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார்.

உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார். பின்னர் ராஜபக்சே அரசிடம் விலை போனார்.

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். பின்னர் 2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.

சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா, அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை. அவரை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி. இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளார் கருணா.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு இருக்கும் கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளன.

கருணாவின் சுயரூபத்தை பாருங்கள் என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழினத்தை காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.







Thursday, January 5, 2012

நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு.

தூத்துக்குடியில் நடுரோட்டில் பெண்களுக்கு முத்தம் கொடுத்த வெளிநாட்டுக்காரர்கள் ஜெயிலில் அடைப்பு

தூத்துக்குடியில் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் குரூஸ்பர்னாந்து சிலைக்கு கிழக்கே மெயின் ரோட்டில் வெளிநாட்டை சேர்ந்த 3 பேர் மது அருந்தி விட்டு, ரோட்டில் நடனம் ஆடினர். போதை தலைக்கு ஏறியதும் அவர் 3 பேரும் அந்த வழியே நடந்து சென்ற பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கை கொடுத்தும், அவர்களுக்கு முத்தம் கொடுத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.

இது குறித்து கேட்டால் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறினர். அவர்களின் இந்த முறையற்ற செயலினால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள், அந்த 3 பேரையும் தாக்கினர். தர்ம அடிவிழ தொடங்கியதும், 3 வெளிநாட்டினரில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தனிஸ்லாஷ் பாண்டி, வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்கள் பிடியில் இருந்த வெளிநாட்டினர் 2 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த ஞான் டக்ளஸ் மகன்கள் ரோஸ் பிராஞ்சிஸ் (வயது 48), ஜான் பிராஞ்சிஸ் (47) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பொது இடத்தில் அசிங்கமாக பேசி அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக அவர்கள் இருவர் மீதும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ராணி முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தினர். வெளிநாட்டினர் 2 பேருக்கும் தலா ரூ.1500 அபராதம், கட்ட தவறினால் ஒரு வாரம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆனால் அவர்கள் இருவரும் அபராதத்தை முழுமையாக செலுத்தாததால் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.