Tuesday, December 27, 2011

நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்- அன்னா கடும் சாடல்.



எனது உண்ணாவிரதத்தை நான் வாபஸ் பெற மாட்டேன். இறுதி வரை போராடுவேன். நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை பேருமே குற்றவாளிகள். எங்களை அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. உ.பி. உள்பட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் நான் பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

மும்பையில் இன்று காலை தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஹசாரே. அவர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார்.

இன்று பிற்பகல் அன்னா பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாகவே நான் உணவு எதையும் உட்கொள்ளவில்லை. எனக்கு காய்ச்சல் இருப்பதாக இன்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் எனது நாட்டுக்காக எனது உயிரைக் கூட தியாகம் செய்ய நான் முடிவு செய்து விட்டேன். கடந்த 25 வருடமாக ஊழலுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். நான் மரணத்திற்குப் பயப்படவில்லை.

தேர்தல்கள் வருகின்றன. அந்த ஐந்து மாநிலங்களிலும் அரசுக்கு எதிராக நாம் பிரசாரம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க அரசுக்கு உரிமை இல்லை. கிராம சபையின் அனுமதியை அவர்கள் முதலில் பெற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில்லை. நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேருமே குற்றவாளிகள். குண்டர்கள், ரவுடிகள்தான் இன்று அரசியலுக்கு வருகிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுதான் நாடாளுமன்றம். மக்கள்தான் உயர்ந்தவர்கள். நாம்தான் இந்த நாட்டின் உரிமையாளர்கள். நாம்தான் இந்த நாட்டுக்காக எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வு செய்கிறோம். அப்படி இருக்கும்போது அவர்களை வேண்டாம் என்று சொல்லவும் நமக்கு உரிமை தரப்பட வேண்டும்.

பண போதை, அதிகார போதையால் மத்திய அரசு பலமுறை நமக்குத் துரோகம் இழைத்துள்ளது. இதை பாபா ராம்தேவுக்கும் முன்பு அவர்கள் செய்தார்கள். எனது போராட்டத்தில் வந்து இணையுமாறு நான் ராம்தேவை அழைத்துள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். நாளை அல்லது நாளை மறு நாள் அவர் நம்முடன் இணைய வருவார் என்றார் அன்னா.

கிரண் பேடி, கேஜ்ரிவால் கவலை

முன்னதாக தனது காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரதம் தொடங்கியுள்ள அன்னா ஹசாரேவின் உடல் நலம் மோசமடைந்து வருவதால் அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.

இதுகுறித்து கிரண் பேடிகூறுகையில், அன்னாவின் உடல் நிலை சரியில்லை. அவருக்கு காய்ச்சல் அடிக்கிறது. அவர்தனது உண்ணாவிரதத்தை மட்டும் நிறுத்திக் கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

இன்னொரு உறுப்பினரான மனீஷ் சிசோடியா கூறுகையில், அன்னாவின் மோசமடைந்து வரும் உடல் நிலை எங்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்றார்.

அதேபோல அரவிந்த் கேஜ்ரிவாலும், அன்னா தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அன்னா தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளோம். தற்போது அன்னாவுடன் நாங்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் என்றார்.

முல்லை பெரியாறு அணை : தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு.

முல்லை பெரியாறு அணை: தேசிய பேரிடர் ஆணையம் நியமித்த குழு நிறுத்திவைப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கங் களால் முல்லை பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என கேரளா வற்புறுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய ஐந்து பேர் கொண்ட ஒரு அவசர கால குழுவை கடந்த 12-ம் தேதி அமைத்தது. இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21-ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்கு தமிழக எதிர் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகம் வந்த பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா பேரிடர் மேலாண்மை ஆணையம் நியமித்த குழுவை நிறுத்தி வைக்க கோரியிருந்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு, தமது ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்திடம் வழங்கும் வரை, இக்குழுவை நிறுத்திவைப்பதாக தமிழக பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

கொலை வெறிப் பாடலால் பிரபலம் : பிரதமர் விருந்தில் தனுஷ்.

கொலை வெறிப் பாடலால் பிரபலம்: பிரதமர் விருந்தில் தனுஷ்

நடிகர் தனுஷ் “கொலை வெறி” பாடலால் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன.

கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இதையடுத்து பிரதமர் விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.

பாடல் பிரபலமானது குறித்து தனுஷ் கூறும்போது, கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் வெற்றி பெறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளவை, நகைச் சுவை மற்றும் பாடலில் உள்ள கருத்துக்களும் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது.

Monday, December 26, 2011

முதல் முறையாக கைதான தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பொதுவாக பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துபவரில்லை. நடத்த விரும்பியதும் இல்லை. இதுகுறித்து அவரே கூறுகையில், மக்களைப் பாதிக்கும் வகையில் எந்தவிதமான போராட்டத்தையும் நடத்த மாட்டேன் என்று கூறுவார். இதனால் அவர் இதுவரை ஒருமுறை கூட போராட்டம் நடத்திக் கைதானதில்லை.

விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்து முறைப்படி அரசியலுக்கு வந்த பின்னர் பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் நடத்தியதில்லை. அதிகபட்சமாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் அவர் ஈடுபட்டுள்ளார். மற்றபடி சாலை மறியல் உள்ளிட்ட எந்தவகையான போராட்டத்திலும் அவர் ஈடுபட்டதில்லை. அதுவும் சமீபத்தில்தான் அவர் பிரமாண்டமான வகையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதான் அவரது கட்சி சார்பில் நடந்த பிரமாண்டமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தையும் கூட தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்திலேயே வைத்துக் கொண்டார் விஜயகாந்த்.

இந்த நிலையில் முதல் முறையாக அவர் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தபோது கட்சியினர் உண்மையிலேயே குஷியடைந்தனர். காரணம், இப்போதுதான் முதல் முறையாக ஒரு வலுவான போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்துள்ளார் என்பதால். இதனால் இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த அவர்கள் ஆயத்தமாக இருந்தனர்.

ஆனால் இன்று காலை தனது வீட்டை விட்டு கிளம்பியுடனேயே விஜயகாந்த்தைப் போலீஸார் கைது செய்து பஸ்சில் ஏற்றிக் கொண்டு போய் விட்டனர்.

இதனால் விஜயகாந்த், நேரில் போய் பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்ட முடியாமல் போய் விட்டது. இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட கைதாகாத அரசியல்வாதி என்ற பெயருடன் வலம் வந்த விஜயகாந்த் அதை முறியடித்து முதல் முறையாக கைதாகியுள்ளார் என்பது தேமுதிகவினருக்கு ஆறுதலான விஷயம்தான்!

வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு.



சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக இந்த பொதுக்கூட்டம் நடந்தது.



இந்தநிலையில் வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட 10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மெளன ஊர்வலம் என அனுமதி வாங்கி விட்டு பொதுக் கூட்டம் நடத்தியதாக கூறி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தங்கர்பச்சான், கேரளாவில அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை, தனித் தனியாக இருக்கிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார்.



அதேபோல வைகோ பேசுகையில் தமிழகத்தின் உதவி இல்லாவிட்டால் கேரள மக்களால் வாழவே முடியாது என்று ஆவேசமாக கூறியிருந்தார். பாரதிராஜா பேசுகையில் தமிழ் சினிமாத்துறையினரை குறிப்பாக நடிகர்களை கடுமையாக சாடியிருந்தார். நடிகர் சங்கத் தலைவராக தற்போது இருப்பவர் சரத்குமார் என்பது நினைவிருக்கலாம்.



தமிழக அரசின் இந்த திடீர் வழக்கு நடவடிக்கையால் தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக முல்லைப் பெரியாறுக்காக போராடி வரும் மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

Sunday, December 25, 2011

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன ? : சோ பரபரப்பு பேட்டி.

சசிகலா நீக்கத்துக்கு காரணம் என்ன?: சோ பரபரப்பு பேட்டி

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 14 பேர் நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி கேள்விகளுக்கு எழுத்தாளர் “சோ” பதில் அளித்துள்ளார்.

கேள்வி: அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?.

பதில்:- சசிகலாவை நீக்கியதற்கான காரணத்தை அனுமானத்தின் அடிப்படையில் தான் கூறமுடியுமே தவிர முழு விஷயமும் எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவும், அவரது உறவினர்களும் நீக்கப்பட்டது நல்ல நிர்வாகத்தை அளிக்க ஜெயலலிதா மேற்கொண்ட தீர்க்கமான உறுதியான நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன்.

தமிழகத்துக்கு நல்ல ஆட்சியையும், நேர்மையான நிர்வாகத்தையும் கொடுக்க ஜெயலலிதா விரும்புகிறார். ஆட்சியும், நிர்வாகமும் வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தடை ஏற்படுத்தும் விதமாக மாநிலத்தில் மற்றொரு அதிகார மையம் செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது.

எனவே அந்த வகையில், இந்த நடவடிக்கை சரியானது, தீர்க்கமானது என்று கூறுகிறேன். இந்த நடவடிக்கை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்க வாய்ப்பில்லை. சிலரின் நடவடிக்கைகள், அரசின் செயல்பாட்டுக்கு இடையூறாக இருப்பதாக அவர் உணர்ந்து இருக்கிறார். அதனால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதுதான் என்னுடைய அனுமானம்

கே:- சசிகலா கட்சியில் இருந்து விலக்கினாலும் மீண்டும் சிறிது நாளில் கட்சியில் சேர்ந்து விடுவார் என்றும் இதற்கு முன்பு இதேபோல் ஒதுக்கி வைக்கப்பட்டு பிறகு மீண்டும் சேர்ந்திருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்களே?

ப:- அந்த கட்சியினர் அப்படி நினைக்கவில்லை. அதற்கு மேல் சொல்ல எனக்கு ஒன்றுமில்லை.

கே:- முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீங்கள் அவ்வப்போது ஆலோசனை வழங்குவதாக பேசுகிறார்களே?

ப:- நாட்டு நடப்பையும் அரசு நிர்வாகத்தையும் மிக நன்றாக அறிந்த முதல்- அமைச்சருக்கு நிர்வாக அனுபவமே சற்றும் இல்லாத நான் ஆலோசனை வழங்குவதாக சொல்வது மிகப்பெரிய தமாஷ். ஏற்கனவே 10 வருடம் முதல்-அமைச்சராக பதவி வகித்து வந்தவருக்கு ஒரு வினாடிகூட எந்த பதவியும் வகிக்காத என்னைப்போன்றவர்கள் ஆலோசனை வழங்குவதாக கூறுவது சரியல்ல.

கே:- சசிகலா நீக்கப்பட்ட பிறகு அந்த இடத்துக்கு இன்னொரு அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு உள்ளதா?

ப:- இன்னொரு அதிகாரமையம் என்ன என்பதை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் தான் அது தெரியவரும். யார் அது? எந்த வகையில் அதிகாரம் செய்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்லமுடியும்.

கே:- இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீரென சசிகலா நீக்கத்துக்கு உங்கள் ஆலோசனைதான் காரணம் என்று கூறப்படுகிறதே?

ப:- இவ்வளவு நாள் இல்லாத பேச்சாக உள்ளது. சசிகலா நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏதோ இப்போதுதான் எனக்கும் முதல்-அமைச்சருக்கும் திடீரென நட்பு ஏற்பட்டதுபோல் பேசுகிறார்கள். எங்கள் நட்பு 50 வருடத்துக்கு மேலானது. அப்படி இருக்கும் போது இப்போது நான் திடீரென ஏதோ ஆலோசனை சொல்லிவிட்டதாக கூறுவதில் துளிகூட அர்த்தம் இல்லை.

கே:- அ.தி.மு.க.வில் பெரிய அளவில் நடவடிக்கை எடுத்துள்ள ஜெயலலிதாவுக்கு தேசிய அளவில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு ஏற்படும் என நினைக்கிறீர்களா?

ப:- தேசிய அளவில் அவர் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாக எனக்கு தெரியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் எந்த பதவியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் தேசிய அளவில் அவர் செயல்பட விருப்பம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். எனவே தற்போதைய அதிரடி நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்க முடியாது.

இவ்வாறு மாலை மலர் நிருபர் கேட்டதற்கு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வை புறக்கணித்தது கேரளா.



முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அணையின் உறுதித்தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முல்லைப்பெரியாறு அணையில் 2 கட்டங்களாக ஆய்வு செய்தனர். அப்போது அணையில் அதிர்வலை சோதனை மற்றும் தேக்கடி ஏரியின் மண் படிவத்தை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில் தொழில் நுட்ப குழுவில் இடம் பெற்று உள்ள வல்லுநர்கள் சி.டி.தத்தா, டி.கே.மேத்தா ஆகியோர் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்வதற்காக இடுக்கி மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதலில் இடுக்கி அணை மற்றும் அதன் அருகில் உள்ள கொளமாவு, செருதோணி ஆகிய அணைக்கட்டுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப குழுவினர் நேற்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய காலை 9.30 மணியளவில் தேக்கடி படகு துறைக்கு வந்தனர். பின்னர் தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்றனர்.

அவர்களுடன் தமிழக பொதுப்பணித்துறை மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எம்.சம்பத்குமார், உதவி பொறியாளர் பழனிச்சாமி, கேரள மாநில முல்லைப் பெரியாறு செல் தலைவர் பொறியாளர் எம்.கே.பரமேஸ்வரன் நாயர், கேரள அணை பாதுகாப்பு துணை பொறியாளர் லத்திகா, டோமி ஜார்ஜ் ஆகியோர் உடன் சென்றனர்.

நிபுணர் குழுவினர் மற்றும் தமிழக, கேரளப் பொறியாளர்கள் குழு அணையின் பின்பகுதியில் உள்ள கேலரிக்கு சென்று அடிப்பகுதியை பார்வையிட்டனர். அடிக்கடி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையில் 7 துளைகள் போட்டு ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட பகுதிகளையும் அப்போது பார்வையிட்டனர்.

அணையில் துளைகள் இடும் பகுதிகளை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து கொண்டு இருந்த போது, கேரள பொறியாளர் லத்திகா அணையில் வேறு சில இடங்களையும் மற்றும், தாங்கள் குறிப்பிடும் பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அதை தொழில்நுட்பக் குழுவினர் ஏற்கவில்லை.

இதையடுத்து பொறியாளர் லத்திகா நிருபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தொழில் நுட்ப குழுவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நாங்கள் என்ன சொன்னாலும் அவற்றை கேட்க மறுக்கின்றனர். அணைப்பகுதிகளில் நாங்கள் பார்வையிட சொல்லும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மறுக்கின்றனர். அதனால் நாங்கள் இந்த ஆய்வை புறக்கணிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்ட தொழில் நுட்ப குழுவினர் அதிருப்தி அடைந்தனர். கேரள அதிகாரிகளை அழைத்து நீங்கள் இதுபோல் செயல்படக்கூடாது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுங்கள் என்று கண்டனம் தெரிவித்தனர். அதற்கு கேரள அதிகாரிகள், இந்த ஆய்வில் எங்களுக்கு திருப்தி இல்லை. அதனால் ஆய்வை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறினார்கள். இதனால் லேசாக வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மத்திய குழுவினர் ஒரு சார்பாக செயல்படுவதாகவும் கேரள அதிகாரிகள் குற்றம் சாட்டியதால் ஆய்வு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கேரளத்தினரின் இந்த செயலைப் பொருட்படுத்தாமல் தொழில்நுட்பக் குழுவினர் அணையை முழுமையாக ஆய்வு செய்தனர். பின்னர் மாலையில், தமிழக மதகு பகுதிக்கு வந்து பார்வையிட்டனர். மாலை ஆறரை மணியளவில் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடி திரும்பினர். அதன்பிறகு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் கேரள - தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தொழில் நுட்ப குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இன்று முல்லைப் பெரியாறு அணையில் மீண்டும் ஆய்வு செய்யும் தொழில்நுட்பக் குழுவினர் தேனி மாவட்டத்திற்கு வருகை தந்து வைகை அணையைப் பார்வையிடுகின்றனர். பின்னர் அவர்கள் மதுரை செல்கிறார்கள்.