Tuesday, December 13, 2011

நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை தண்ணீரை திறந்து விடாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் கேரளஅரசை நம்பமுடியாது. : காங். எம்.எல்.ஏ. விஜயதரணி.



குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக கேரள எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கேரளாவின் இன்னொரு எல்லையான குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் இப்பிரச்சினைக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக பாறசாலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது பற்றி குமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மாறாக முல்லை பெரியாறு அணையை உடைக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

உள்ளபடியே அணையில் நீரை தேக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அதை செய்யாமல் மாற்று கருத்தை தெரிவிக்கும் கேரள அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது.

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்று உம்மன்சாண்டி அரசு கூறுகிறது. ஆனால் குமரி மாவட்டத்தின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து 40 சதவீதம் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளும் கேரளாவில் உள்ள நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான தண்ணீரை நெய்யாறு இடதுகரை சானலில் இன்று வரை திறந்து விடவில்லை.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அணையில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க தண்ணீரை திறந்து விடுங்கள் என்று பல முறை போராட்டங்கள் நடத்தியும் அதற்கு நடவடிக்கை எடுக்காத கேரள அரசு இப்போது முல்லை பெரியாறில் புதிய அணை கட்டிய பின்பு தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை துளியளவும் நம்ப முடியாது.

முதலில் அவர்கள் நெய்யாறு இடதுகரை சானல் பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதற்கு பிறகு முல்லை பெரியாறு பிரச்சினைக்கு போராடட்டும். முல்லை பெரியாறில் பாதுகாப்புத்தான் பிரச்சினை என்றால் அணையை வலுப்படுத்தும் ஏற்பாடுகளை செய்யட்டும். அதை விடுத்து புதிய அணை கட்டுவோம் என்பதை ஒரு போதும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளாது.

இது தொடர்பாக நான் டெல்லியில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்து உள்ளேன். அதற்கான நகலை தமிழக முதல் அமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தமிழக சட்ட சபையின் சிறப்பு கூட்டம் வருகிற 15 ந்தேதி கூட்டப்படுகிறது. அக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கருத்தாக முல்லை பெரியாறில் புதிய அணை கட்டக்கூடாது என்பதை பதிவு செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

முல்லைப் பெரியாறு ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் : பிரதமருக்கு அப்துல்கலாம் யோசனை.



முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் யோசனை தெரிவித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் குடியரசுத் தலைவரும், மூத்த அறிவியல் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கடிதம் எழுதியுள்ளார்.

இரு மாநில மக்களும் பலனடையும் வகையில், முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு கலாம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலாம் எழுதிய கடிதத்தில், கேரள மாநிலத்துக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப் பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின்போது, எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்னையால் இரு மாநில உறவும் பதிக்கப்பட்டுவிடக்கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கலாம் கூறியுள்ளார்.

அர்த்த புஜங்காசனம், அர்த்த சலபாசனம், பூர்ண சலபாசனம்.

அர்த்த புஜங்காசனம்.
அர்த்த புஜங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி அமர்ந்து கால்களை பின்னே நீட்டி, குப்புறபடுங்கள். உள்ளங்கை முதல் முழங்கை வரை தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டத்தில் இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் இருப்பது அவசியம். நெற்றி, மூக்கு, கீழ்மோவாய் வரை தரையில் கிடத்தி, பிறகு மேலிருந்து கீழாக நெற்றி, மூக்கு, கீழ் மோவாய் வரை கழுத்தை உபயோகித்து தலையை தூக்கவும். முழங்கைகளை சற்று அழுத்தி தோள் பட்டை-இடுப்பு வரை, உடலை மெல்ல மெல்ல மேலே தூக்குங்கள். இதே நிலையில் 15 விநாடிகள் இருந்து ஆசனத்தை கலைக்கலாம்.

பயன்கள்:

சளி, டி.பி, ஆஸ்துமா, ஈஸ்னோபீலியா வராது. இடை மெலியும். மார்பு பெருகும். போலீஸ், ராணுவத்தில் சேர விரும்புவோர் அர்த்த புஜங்காசனம் செய்துவந்தால், கூடுதல் பலன்கள் கிடைப்பது உறுதி. மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஆசனமிது!


அர்த்த சலபாசனம்.
அர்த்த சலபாசனம்

செய்முறை:

விரிப்பில் கிழக்கு நோக்கி குப்புறப்படுங்கள். இரு கைகளையும் உடலோடு ஒட்டி தரையையும் தொடுமாறு செய்யவும். கைகளை சற்று அழுத்தி, வலதுகாலை மட்டும் மேலே தூக்குங்கள். இடதுகாலை மடக்கி, வலதுகால் அல்லது தொடையில் வைத்து இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருங்கள். இதே ஆசனத்தை, காலை மாற்றி மறுபக்கம் செய்ய வேண்டும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பி பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மூலநோய் குறையும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். விரைவீக்கம் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.


பூர்ண சலபாசனம்.
பூர்ண சலபாசனம்

செய்முறை:

விரிப்பில் குப்புறப்படுத்த நிலையில் இருகைகளையும் உடலோடு ஒட்டிவையுங்கள். இல்லையெனில் - இரு கைகளையும் அந்தந்த பக்கத்து தொடைக்கு அடியில் தரையோடு ஒட்டிவைக்கலாம். முகத்தை நிமிர்த்தி மோவாய்-இரு கைகளையும் அழுத்தி, இடுப்பின் கீழ்ப் பகுதியை மேலே தூக்கவேண்டும். இது குறைந்தபட்சம் அரையடி உயரமாவது இருக்கட்டும். அவரவர்க்கு முடிந்தஅளவு, உடம்பை மேலே கொண்டு வரலாம்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். இடுப்பு பிடிப்பு, நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் வராது. மலச்சிக்கல் போகும். பெருந்தொந்தி குறையும். சிறுநீரக கோளாறு வராது. செரிமான பிரச்சினையும் இராது. மூலநோய் மறைந்து போகும்.

Monday, December 12, 2011

மலையாளி ஏடிஜிபி ஜார்ஜ், தமிழ் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்.



முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, கூடுதல் டி.ஜி.பி. மலையாளி ஜார்ஜ் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் மலையாளி ஜார்ஜ் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேனி மாவட்ட மக்கள் வரலாறு காணாத வகையிலான மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர் ஊராக தாங்களாகவே கிளம்பி குமுளியை நோக்கி பேரணி நடத்தி கேரள அரசின் விஷமத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் தாங்களாகவே திரள்வதாலும், பெரும் கொந்தளிப்புடன் இருப்பதாலும் போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென கூடுதல் டிஜிபி மலையாளி ஜார்ஜ் கம்பம் வந்துள்ளார். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பது குறித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டங்களுக்கு சென்று மக்களை சமாதானப்படுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி மலையாளி ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.

மலையாளி ஏடிஜிபி ஜார்ஜுக்கு எதிர்ப்பு.


இந்நிலையில் தற்போது கூடுதல் டிஜிபி மலையாளி ஜார்ஜுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழகத்தின் உரிமைக்காக மக்கள் போராடி வரும் இடத்திற்கு அவர் வந்துள்ளதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

அவரது தலைமையிலான போலீஸார் தமிழ்மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்துகின்றனர். இதனால்தான் இன்று கம்பம் மெட்டில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அமைதியான முறையில் பேரணி சென்றவர்களைத் தடுத்து தடியடி நடத்தியுள்ளது ஏன்.?

கேரளாவில் அரசியல்வாதிகள், வக்கீல்கள், காவல்துறையினர் அந்த மாநில மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன்தான் தமிழர்களை அங்கு தாக்குகிறார்கள். இங்கு மட்டும் எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்று கேட்டனர்.

கேரள எல்லையை நோக்கி சாரை சாரையாக தமிழர்கள்.. மக்கள் எழுச்சி !!



இது ஒரு தனிப்பட்ட கட்சியின் பேரணியல்ல, தனிப்பட்ட அரசியல்வாதியின் அறைகூவலில் திரண்ட கூட்டமும் அல்ல. மக்கள் தன்னிச்சையாகவே வந்து குவிந்த காட்சி! குமுளியில் உள்ள கேரள எல்லையை நோக்கி, நேற்று ஞாயிற்றுக்கிழமை திரண்ட மக்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவில் இருந்தது. முக்கால் லட்சத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை நேற்று கேரள எல்லையில் திரண்டனர்!

நேற்று காலையில் இருந்தே கேரள எல்லையை நோக்கி மக்கள் உத்தமபாளையம், கூடலூர்,

ஞாயிற்றுக்கிழமை, கேரள எல்லையை நோக்கி.. வீதி தெரியாத அளவில் மக்கள் அலை!

சின்னமனூர், கம்பம், ஆகிய பகுதிகளில் இருந்துசாரை சாரையாக வந்து சேரத் தொடங்கினர். இந்த எல்லைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகவே பதட்டம் நிலவி வருகின்றது. பதட்டம் அதிகமானதில், குமுளி, கம்பம்-மெட்டு, போடி-மெட்டு ஆகிய சாலைகள் வழியாக கேரளத்துக்குச் செல்லும் சகல போக்குவரத்தும் 5-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தேனியில் இருந்து இந்த மூன்று பாதைகள் வழியாகத்தான் கேரளா செல்லும் போக்குவரத்துகள் நடைபெற்று வந்தன.

அதன் பின்னரும் பதட்டம் குறையாமல் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றதில், பதட்டம் அதிகமுள்ள பகுதியாகக் கருதப்பட்டு உத்தமபாளையம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 7-ம் தேதி முதல் இப்பகுதியில் 144 அமலில் உள்ளது. அப்படியிருந்தும் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்துவதை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியாத அளவில், மொத்த ஜனத்தொகையுமே கிளர்ச்சிகளில் குதித்துள்ளனர்.

நேற்று பெருமளவில் மக்கள் திரண்டு கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நேற்று முன்தினமும் சனிக்கிழமை கிட்டத்தட்ட இதுபோன்ற பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது. ஆனால், அதில் சுமார் 15,000 மக்களே கலந்து கொண்டிருந்தனர். கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த மக்களே அவர்கள். அவர்கள் காவல் துறையின் தடையை மீறி கேரள எல்லையை நோக்கி பேரணி நடத்தினர். குமுளி அருகே தமிழக எல்லையில் நின்று, கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சனிக்கிழமை கூட்டம் குறைவாக இருந்ததை உணர்ந்த மக்கள், நேற்று ஞாயிற்றுக் கிழமை தன்னிச்சையாகவே பெருமளவில் வந்து குவியத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலானோர், கிராம மக்கள். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் உத்தமபாளையம், கூடலூர், சின்னமனூர், கம்பம் ஆகிய இடங்களை நோக்கி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தனர். நேரம் அதிகமாக அதிகமாக மக்கள் கூட்டம் அதிகமாகத் தொடங்கியது. காலை 10.30-க்கு கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் திரண்டுவிட்டது.

அதையடுத்து இந்த இடங்களில் இருந்து லோயர்-கேம்பை அடுத்துள்ள கேரள எல்லையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும் செல்லத் தொடங்கினர். 10.30-ல் இருந்து 11 மணிவரை பாதைகள் அனைத்திலும் மக்கள் வெள்ளமாக அசைவதைக் காணக்கூடியதாக இருந்தது.

கூடலூருக்கும், லோயர்-கேம்ப்புக்கும் இடையே ஆற்றுப் பாலம் ஒன்று உள்ளது. குருவனூர் பாலம் என்று இதை அழைப்பார்கள். இந்த இடத்தில் பொதுமக்களுக்காக காத்திருந்தனர் காவல்துறையினர். பாலத்தைக் கடந்து செல்ல வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினர்.

இந்த ஒரு பாதையைத் தடுத்தால், அப்பகுதியிலேயே தலைமுறைகளாக வாழ்ந்துவரும் அப்பகுதி மக்களுக்கு வேறு பாதை தெரியாதா? காவல்துறை குருவனூர் பாலத்தை மறித்தபடி நின்றிருக்க, மக்கள் திசைமாறி, அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்த பழைய பாலம் ஒன்றின் வழியாக லோயர்-கேம்ப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

லோயர்-கேம்ப் பகுதியை அடைந்தபோது, மக்களின் ஒரு பகுதியினரிடம் வன்முறை லேசாக தலைகாட்டத் தொடங்கியது.

இப்பகுதியில் கேரளா அரசின் சுற்றுலாத் துறை அலுவலகம் ஒன்று உள்ளது. உல்லாசப் பயணிகள் வந்தால், அவர்களை வனப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல கேரள அரசு இந்த அலுவலகத்தை நடாத்துகின்றது. கூட்டம் அதிகளவில் திரண்டு வருவதைக் கண்டவுடன், அலுவலகத்தில் பணிபுரிந்த ஓரிருவரும் அஙகிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த அலுவலகத்துக்கு சொந்தமான இரு மாட்டுவண்டிகளை மக்கள் அடித்து நொருக்கினர். உல்லாசப் பயணிகளை காட்டுக்குள் அழைத்துச் செல்ல உபயோகிக்கப்படும் மாட்டு வண்டிகள் அவை.

லோயர்-கேம்ப்பில் மீண்டும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தடையை ஏற்படுத்தினர். மேலே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் ஆயிரக் கணக்கில் நகர்ந்து வந்துகொண்டிருந்த மக்களை காவல்துறையால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மக்கள் வெள்ளம் காவல்துறையின் தடையை மீறி குமுழி சாலையில் நகரத் தொடங்கியது. சாலையில் நெரிசல் அதிகமாக இருக்கவே, பலர் காட்டுப் பகுதி ஊடாகவும் கேரள எல்லையை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

பிற்பகல் 1 மணியளவில் கேரள எல்லையில், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை ஒன்று உள்ளது. அதற்கருகே வைத்து பொதுமக்களை சந்தித்தனர், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியும் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாசும், இதற்குமேல் 100 மீட்டர் சென்றாலே தமிழக எல்லையை கடந்து விடுவீர்கள் என்று மக்களை எச்சரித்தனர். எல்லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்ட அவர்கள், அந்த இடத்தில் நின்றே கோஷம் போட விரும்பினால் போடுங்கள் என்றனர்.

பிற்பகல் 4.30-க்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இப்பகுதிக்கு காரில் வந்து இறங்கினார். அதுவரை எந்த அரசியல்வாதியோ அரசியல் கட்சியோ இல்லாமல் எல்லாமே மக்கள் எழுச்சி என்ற வகையில் நடந்திருந்தது.

அமைச்சர் காரில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கியதுமே ஓரிரு கற்கள் வந்து விழத் தொடங்கின. உடனே உஷாரான போலீஸ் அந்த இடத்தில் தடியடி நடாத்த தொடங்கினர். சும்மா நின்றிருந்தவர்களுக்கும் அடி விழுந்தது. அமைச்சரைக் சூழ்ந்து கொண்ட போலீஸார், அவரை கார் வரை அழைத்துச் சென்று, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தேவையற்ற இந்தத் தடியடிப் பிரயோகம், அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினரை எதிர்த்து மக்கள் கோஷம் எழுப்பப் தொடங்கினர். காவல்துறை மீதான மக்களின் கோபம் வெளிப்படத் தொடங்கியது. ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் நின்றிருந்த இடத்துக்கு அருகே காவல்துறைக்கு சொந்தமான பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மக்கள் அவற்றைத் தாக்கத் தொடங்கினர். சுமார் 15 காவல்துறை வாகனங்கள் சேதமாக்கப்பட்டன.

மாலை 5 மணிவரை அங்கேயே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பின்னர் கலைந்து சென்றனர். அப்போதும், கேரளாவுக்குச் செல்லும் வீதியில் மரக் கிளைகளையும் கற்களையும் போட்டு, அந்தப் பாதை வழியாக யாரும் கேரளா செல்ல முடியாதவாறு செய்துவிட்டே அங்கிருந்து அகன்றனர்.

எந்தவொரு கட்சியாலும் தூண்டப்படாத மக்கள் எழுச்சி இது. நிலைமையை இப்படியே நீடிக்க விடுவது, இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவை மிக மோசமாகப் பாதிக்கும்.

Sunday, December 11, 2011

2வது நாளாக இன்றும் கேரளாவை நோக்கி 15,000 தமிழர்கள் படையெடுப்பு - போலீஸ் குவிப்பு. - வீடியோ இணைப்பு.



வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு காணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது. முல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.

இதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பியுள்ளனர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பியுள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது.

இதனால் எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் கடும் ஆவேசமாக கிளம்பி வருவதால் போலீஸாரும் டென்ஷனாகவே உள்ளனர்.

மக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.


தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடா... கேரள எல்லையில் சேட்டன்களின் கேவல சேட்டைகள் !



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.


''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்!

- சண்.சரவணக்குமார்

கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது 'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.

கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!

- சமஸ்

-நன்றி விகடன்.