Sunday, December 11, 2011

2வது நாளாக இன்றும் கேரளாவை நோக்கி 15,000 தமிழர்கள் படையெடுப்பு - போலீஸ் குவிப்பு. - வீடியோ இணைப்பு.



வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு காணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது. முல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.

இதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.

இந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பியுள்ளனர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பியுள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது.

இதனால் எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் கடும் ஆவேசமாக கிளம்பி வருவதால் போலீஸாரும் டென்ஷனாகவே உள்ளனர்.

மக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.


தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடா... கேரள எல்லையில் சேட்டன்களின் கேவல சேட்டைகள் !



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண்டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.


''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்!

- சண்.சரவணக்குமார்

கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது 'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள். கொள்கைகள், சித்தாந்தம் என்றெல்லாம் பேசும் கம்யூனிஸ்டுகளும் காந்தியம் பேசும் காங்கிரஸ்காரர்களுமே இவ்வளவு அக்கிரமங்களையும் செய்திருக்கிறார்கள்.

கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!

- சமஸ்

-நன்றி விகடன்.

Saturday, December 10, 2011

முல்லைப் பெரியாறு அணை - மளையாளிகளின் அயோக்கியத்தனம்.



பேஸ்புக் வழியாக Dharviga Cool எழுதியிருந்த முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்தியினை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நன்றியுடன் வெளியிடுகிறேன்.

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் - பலமாகக் கேட்கிறார்கள்

116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் ?

தங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு ஏன் மறுக்கிறது ? இது என்ன வீண் பிடிவாதம் ? இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாயங்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள்.

தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும், தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்சொல்ல வேண்டும்.

இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது)எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு - 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியைதான் பயன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ? மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே ! அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.

அணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது. தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம். வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக - பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத்தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் ! எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம்கோர்ட் சென்றபிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

மேலே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.

இதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ? மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து - புதிய அணைகட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

நன்றி ; Dharviga Cool

கழுத்தில் அணிந்திருந்த மாலைகளை கழற்றி தூக்கி எறிந்த ஐயப்ப பக்தர்கள்.



பக்தர் உலகத்திலும் நாட்டுணர்ச்சி - இன வுணர்ச்சி வெடித்துக் கிளம்பியிருப்பது வரவேற்கத் தக்கதே!

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசு அத்துமீறி முரண்டு பிடிக்கிறது. சட்டம், நியாயம், உண்மைக்கு மாறாக நடந்து கொண்டு வருகிறது.

999 ஆண்டு ஒப்பந்தம் 1945ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டதாகவெல்லாம் உளற ஆரம்பித்து விட்டது.

அடுத்த கட்டமாக கேரள எல்லைகளில் தமிழ் நாட்டுப் பேருந்துகள் செல்வதற்குத் தடை விதிப்பது உள்பட வன்முறையிலும் கேரள மக்கள் - மலையாளிகள் துள்ளித் திரிகின்றனர். தமிழர்களும் எல்லைப் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக முதல் அமைச்சரும், கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து இருமுடி தூக்கிச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யப்பப் பக்தர்களிடம்கூட இனவுணர்ச்சி ஏற்படும் வகையில் உணர்வு பீறிட்டு இருப்பது வரவேற்கத்தக்கதே! தமிழ் எழுச்சி இயக்கம் என்னும் அமைப்பின் தலைவர் வேலுமணி தலைமையில் கடந்த இரண்டாம் தேதி சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் எதிரில் இருந்து அய்யப்பப் பக்தர்கள் ஊர்வலம் சென் றுள்ளனர். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கருகே சென்றவுடன் அந்த அய்யப்பப் பக்தர்கள் கழுத்தில் அணிந்திருந்த அய்யப்பப் பக்தர்களுக்குரிய மாலைகளைக் கழற்றி எறிந்துள்ளனர். சட்டையையும், மேல் துண்டையும்கூட வீசி எறிந்துள்ளனர். மீட்டெடுப்போம், மீட்டெடுப்போம்! - முல்லைப் பெரியாறு அணையை மீட்டெடுப்போம்! காப்பாற் றுவோம், காப்பாற்றுவோம்! முல்லைப் பெரியாறு அணையைக் காப்பாற்றுவோம். போக மாட்டோம், போக மாட்டோம், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குப் போக மாட்டோம்! என்கிற முழக்கங்களையும் ஒலித்துள்ளனர்.

இது ஒரு நல்ல திருப்பம்தான் - பக்தியினால் புத்தி மயங்கி, நாட்டு நடப்பைப்பற்றிக் கவலைப்படாமல் இருப்பதைவிட பக்திக்கும் மேலானது நம் உரிமை என்ற புத்தி வந்தது வரவேற்கத்தக்கதாகும். இன்னொரு வகையிலும் அய்யப்பப் பக்தர்கள் சிந்திக்கலாம். கடவுள் என்றால் உண்மை, நேர்மை, நியாயத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்று தானே பக்தர்கள்கூட விரும்ப வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த அய்யப்பன், கேரள அமைச்சர்களுக்கும், அரசி யல்வாதிகளுக்கும், மலையாளிகளுக்கும் நல்ல புத் தியைக் கொடுக்கவில்லையே! நம்பிக்கையுள்ள தமிழக பக்தர்கள் இப்படி சிந்திக்க வேண்டும் அல்லவா!

கேரளாவில் கட்சிகளை, மதங்களை, ஜாதிகளைக் கடந்து ஒன்றுபட்டு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தங்கள் பக்கம் நியாயம் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அவற்றையெல்லாம் குப்புறத் தள்ளி, ஒன்றிணைந்து குரல் கொடுக் கிறார்களே - அந்த உணர்வு நமக்கு இருக்க வேண்டாமா?

அதுவும் அனைத்து நியாயங்களும் நம் பக்கம் நன்கு இருக்கும்போது பக்தியையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஒற்றைக் குரலில் முழங்குவது தானே சரியானது? அந்த வகையில் தமிழக அய்யப்பப் பக்தர்கள் நடந்து கொண்டு இருப்பது வரவேற்கத் தக்கதேயாகும்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் இவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பது அறிவின் உச்ச கட்டமாகும். அந்த அளவுக்குச் செல்ல முடியாவிட்டாலும் வேறொரு வகையில் அவர்களின் சிந்தனையைத் திருப்பலாமே! தமிழ்நாட்டில் கோவில்களுக்கா பஞ்சம்? தடுக்கி விழுந்தால் கோவில்களில்தானே விழ வேண்டும். நடைபாதைகள் வரையிலும் கோவில்கள் யாருடைய அனுமதியும் இன்றி தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ளதே! இவையன்றி விளம்பரப்படுத்தப்பட்ட கோவில்கள் எத்தனை எத்தனையோ! பழனி முருகன் கோவிலிலிருந்து ஆரம்பத்தால் சிறீரங்கம் ரெங்கநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணியன், நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்கிறார்களே - அந்த திருவண்ணாமலை அண்ணாமலையார், சிதம்பரம் நடராசன் என்று எத்தனை எத்தனையோ கோவில்கள் உள்ளனவே! இந்தக் கடவுள்களுக்கெல்லாம் சக்தியில்லையா? சக்தியில்லை என்று நினைத்துக் கொண்டு தானே இன்னொரு மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குச் செல்லுகிறார்கள்! இந்த நேரத்திலாவது தமிழ்நாட்டுப் பக்தர்கள் இந்தக் கோணத்தில் சிந்திப்பது கொஞ்சம் நல்லது.

குறைந்தபட்சம் நம் நாட்டுப் பணமும், பொருளும் இன்னொரு மாநிலத்திற்குப் போகாமலாவது இருக் கிறது அல்லவா! இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சிந்தித்தால், கறுப்புச் சட்டைக்காரர்கள் கூறும் கருத்துகள் பக்கமும் கவனம் திரும்பும் வாய்ப்புகள் உண்டு அல்லவா!

நன்றி ; Dharviga Cool

Friday, December 9, 2011

பரஞ்சோதி நீக்கம் : தமிழக அமைச்சரவை மாற்றியமைப்பு.



இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து பரஞ்சோதி நீக்கபட்டார்.

அத்துடன், முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

அமைச்சர் பொறுப்பில் இருந்து பரஞ்சோதி நீக்கப்பட்ட நிலையில், சமூக நலத்துறை பொறுப்பில் இருந்து செல்வி ராமஜெயம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் எம்.எஸ்.எம். ஆனந்தன், பா.வளர்மதி ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு இந்து சமய அறநிலையத்துறை அளிக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை பொறுப்பு, பா.வளர்மதிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சட்டம், நீதித்துறை மற்றும் சிறைத்துறை கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்சோதிக்கு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சட்டத்துறை வழங்கப்பட்டது.

பரஞ்சோதி மீது, 'சட்டப்படி திருமணம் செய்து வாழ மறுத்தல், கொலை மிரட்டல்’ உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவத்தின் எதிரொலியால், அவர் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

மத்திய அரசு கேரளாக்காரர்களின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது . - பெ.மணியரசன்.



எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளாவை கட்டுப்படுத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவி போல் நயவஞ்சகமாக நாடகமாடுகிறது. மத்திய அரசு கேரளாக்காரர்களின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்று தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்து தரைமட்டமாக்க மூர்க்கமாக முயல்கிறார்கள் கேரளாக்காரர்கள். இந்திய தேசியம் பேசும் காங்கிரசும், சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாக்காரர்களிடம் இனவெறியைத் தூண்டி அணையை உடைப்பதற்கான ஆயத்த பணிகள் செய்து வருகின்றன.

எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளாவை கட்டுப்படுத்தி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவி போல் நயவஞ்சகமாக நாடகமாடுகிறது. மத்திய அரசு கேரளாக்காரர்களின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

உச்ச நீதிமன்றம் 27-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்த பிறகு முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் கேரள அரசும், மற்ற அரசியல் கட்சிகளும் கழிவறைத் தாளுக்குத் தரும் மதிப்பைக்கூட உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு அளிக்கவில்லை. 142 அடி வரை தண்ணீர் தேக்க விடாமல் தமிழகத்தைத் தடுத்துவிட்டார்கள். சிற்றணையை செப்பனிடவும் விடவில்லை. மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றை கள ஆய்வு செய்ய வைத்து, அந்த குழு அளித்த பரிந்துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதி திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப் போவதாக கேரள அரசு ஆசை வார்த்தை காட்டியுள்ளது. இப்போது அந்த மூடு திரையை நீக்கிவிட்டு அணையை உடைப்போம் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இதற்கு சமீபத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட 2.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைக் காரணம் காட்டுகிறார்கள். இதற்கு முன் 2001ல் இடுக்கியில் 4.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை அவர்கள் மறைக்கின்றனர். 2011 ஜனவரி 20ம் தேதி அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழு அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது.

கேரள காங்கிரஸ் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் பொய் உரைக்க கூச்சப்படாதவர்கள். புரளியை கிளப்ப அச்சப்படாதவர்கள். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போல் மோசடியாக பரப்புரைக் குறுந்தகடு தயாரித்து கேரளத்தில் ஊர் ஊராக போடச் செய்தார், முன்னாள் மார்க்சிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்.

இப்போது கேரளாக்காரர்கள் அந்த புரளியை ஒரு திரைப்படமாகத் தயாரித்து ”டேம் 999” என்ற பெயரில் பல மொழிகளில் வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு இந்திய அரசின் தணிக்கைத்துறையும் அனுமதி வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறி வரும் பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. (1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குக் கூட அதற்கு நீர்வரத்து இல்லை. இந்த அணையை முழுக் கொள்ளளவும் நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே கேரளாக்காரர்களின் திட்டம்.

இத்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சி திட்டமே முல்லைப் பெரியாறு அணை வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்துவிடும் எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

தமிழகத்தில் தினமும் 700 டன் அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி, காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் உள்ளிட்டவை கேரளாவுக்கு போகின்றன. இவற்றை நிறுத்தினால் கேரளம் மூச்சுத் திணறி உயிருக்குப் போராட வேண்டிய நிலை ஏற்படும். தமிழக மணலை அன்றாடம் கொள்ளையடித்துக் கடத்திச் செல்லாவிட்டல் கேரளாவில் புதிய கட்டடங்கள் கட்ட வாய்ப்பு இல்லை.

சுமார் 30 லட்சம் கேரளாக்காரர்கள் தமிழகத்தில் தான் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

ஒருவர் ஓராண்டில் பயன்படுத்தும் தண்ணீரின் சராசரி அளவு 1700 கனமீட்டர். 30 லட்சம் கேரளாக்காரர்கள் ஓர் ஆண்டில் பயன்படுத்தும் தமிழகத் தண்ணீரின் அளவு 510 கோடி கனமீட்டர். முல்லைப் பெரியாறு அணை மூலம் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் வெறும் 12.6 கோடி கனமீட்டர் மட்டுமே. (பழ.நெடுமாறன், தினமணி 30-11-2011).

தமிழக நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் மின்சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட். இத்தனை வழிகளில் கேரளம் தமிழகத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான நன்றி உணர்ச்சி எதுவும் கேரளாக்காரர்களிடம் இல்லை.

தமிழர்களே, 1947 ஆகஸ்டு 15க்குப் பிறகு நாம் இழந்துள்ள உரிமைகளை எண்ணிப் பாருங்கள். வெள்ளைக்காரன் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலை நாட்டி 1924ல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்து வைத்தான். டெல்லி ஆட்சியில் அது செல்லாது என்று சொல்லிவிட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 லட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

கடந்த 1895ல் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி 999 ஆண்டுகளுக்கு அது தமிழகத்திற்கு உரியது என்று ஒப்பந்தம் செய்து வைத்தான் வெள்ளைக்காரன். இன்று அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள். அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணையால் பாசனம் பெற்ற 2 லட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

1950க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்துவிட்டது ஆந்திரா அரசு. இப்போது கடைசி எல்லையான கணேசபுரத்திலும் அணை கட்டுகிறது ஆந்திரா. இனி பாலாற்றில் இருந்து கசிவு நீர் கூட தமிழகத்துக்கு வராது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு என்று மூன்றையும் இழந்துவிட்டால் பாசனத்திகு மட்டும்மல்ல குடிநீருக்கு கூட தமிழகத்தில் தண்ணீர் கிடையாது.

1950களில் மொழிவாரி மாநிலம் அமைத்த பொழுது பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஊர்களையும், நகரங்களையும், இயற்கை வளங்களையும், ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம் பறிகொடுத்தோம். 1974ல் நமது கச்சத்தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்தது இந்தியா.

சிங்களப் படையாட்கள் சற்றொப்ப 550 தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல இந்தியா துணை நின்றது. இனியும் தமிழக மீனவர்களை கொல்லவும், தமிழகக் கடற்பரப்பில் தமிழர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்கவும் இலங்கைக்கு இந்தியா துணை நிற்கப் போகிறது. 2008-2009 ஆண்டுகளில் நம் உறவுகளான ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கும் ஈழ விடுதலைப் போரை வீழ்த்துவதற்கும் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்றது இந்தியா. இனியும் பொறுப்பது கூடாது தமிழர்களே, எரிதழல் நெஞ்சில் ஏந்துங்கள்!

உலகின் மூத்த இனமான தமிழினம் நம் தலைமுறைக் காலத்தில் அழிந்து விட நமது செயலின்மை காரணமாக அமைந்து விடக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பதற்குரிய எல்லா வழிகளும் மூடப்பட்டுவிட்டன. இந்திய அரசு, நீதித்துறை, இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்தும் நம்மைக் கைவிட்டுவிட்டன. பகைவனைப் பணிய வைத்து உரிமைகளைக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

கேரளாவுக்கு செல்லும் எல்லா பாதைகளையும் மூடி, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதார முற்றுகையை உருவாக்குவோம். இதற்கான பரப்புரை இயக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 07.12.2011 (இன்று) தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடங்குகிறது. இதில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள வாழ் தமிழர்களின் சொத்துகள் குறித்த விவரம் சேர்க்கும் மலையாள அமைப்புகள்.



முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் கேரளாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்களைக் கணக்கெடுக்கும் விஷமனத்தனமான வேலையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளனவாம்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக கேரள எல்லை பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இரு மாநிலங்களில் வர்த்தக உறவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கம்பம், குமுளி பகுதியில் தொடர்ந்து நிலவும் பதற்றத்தால் கேரள செல்லும் பல வாகனங்கள் செங்கோட்டை வழியாக செல்கின்றன.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் வாழும் தமிழர்களின் சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அங்கு வசிக்கும் தமிழர்கள் கடை வைத்துள்ளனரா, அல்லது வீடு உள்ளதா, ஒவ்வொருவருக்கும் கேரள மாநிலத்தில் எவ்வளவு சொத்துகள் உள்ளன, என்பதை அங்குள்ள அமைப்புகள் திரட்டி வருகின்றன.

குமுளி, வண்டிபெரியார், பீர்மேடு ஏலப்பாறை, பகுதியில் வசிக்கும் தமிழர்களின் சொத்துப்பட்டியல் அங்குள்ள சில மலையாளிகள் அமைபபுகளால் சேகரிக்கப்பட்டு வருகிறது. கடை நடத்தினால் அதற்கான உரிமம், மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா போன்ற விபரங்கள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் கேராளவில் வசிக்கும் தமிழர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு எதற்கு என்று தெரியவில்லை. இப்படி தமிழகத்தில் கணக்கெடுக்க ஆரம்பித்தால் தமிழர்களை விட மலையாளிகளுக்கே அதிக அளவில் சொத்துக்ககள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.