Thursday, December 8, 2011

எங்களைப் பற்றிக் கவலைப்படாத கேரள அரசு - மலையாள வியாபாரிகள் குற்றச்சாட்டு.



முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கேரள வியாபாரிகள் தங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்பில் குதித்துள்ளனர். மேலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தமிழர்களையும், தமிழர் வாகனங்களையும், ஐயப்ப பக்தர்களையும் சமூக விரோத கும்பல் கடுமையாக தாக்கியது. பணம் பறிப்பு, பொருட்களை நஷ்டப்படுத்துவது, பெண்களை மானபங்கப்படுத்துவது என்று அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். ஆனால் இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.

இதனால் கொதித்தெழுந்த தமிழகத்தில் சிலர் நேற்று மாநிலத்தின் பல பகுதிகளிலும் கேரளாக்காரர்களின் கடைகள், வர்த்தக நிறுவனங்களைத் தாக்கினர். இதையடுத்து போலீஸார் அதிரடியாக நடவடிக்கையில் இறங்கி தமிழ் தேச பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த பலரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த கடைக்காரர்கள், தங்களது நிறுவனங்கள் மீதான தாக்குதலைத் தவிர்க்கும்வகையில் தமிழக அரசுக்கு ஆதரவு என்ற பெயரில் இன்று கடைகளை மூடியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ஈரோட்டில் கேரளத்தவர் நடத்தும் டீக் கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டம் குறித்து ஈரோடு மலையாளிகள் அமைப்பைச் சேர்ந்த சைகோல் என்பவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு இரு மாநில அரசுகளும் நடப்பதே சரியானது. அதை விட்டு விட்டு வன்முறையில் கேரள மக்கள் இறங்கியது தவறானது, கண்டனத்துக்குரியது.

அங்குள்ள தமிழர்களைத் தாக்கியதால்தான் தமிழகத்தில் மலையாளிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. எங்களைப் பற்றி கேரள அரசும் சரி, அங்குள்ள கட்சிகளும் சரி சற்றும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது வருத்தம் தருகிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை பொருத்தமட்டில் நாங்கள் தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்கிறோம். தொடர்ந்து தமிழக அரசுக்கு ஆதரவாக இருப்போம். கேரளாவில் நிலைமை மோசமானால் எங்களது ஆதரவும் தமிழக அரசுக்கு அதிகரிக்கும் என்றார் அவர்.

மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை - ரமேஷ் சென்னிதலா.



தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். ஆனால் முதல் முறையாக கேரளத்தவர்கள் மீது தமிழகத்தின் பல பகுதிகளில் எழுந்துள்ள கொந்தளிப்பு கேரள மக்கள் எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது. கேரள அரசும், கேரளாவில் வசிப்போரும் தமிழகத்திற்கு எதிராக எத்தனையோ செயல்பாடுகளில் ஈடுபட்டபோதிலும் தமிழக மக்கள் அதை பெரிய அளவில் எடுத்துக் கொண்டதில்லை. மேலும் மலையாள மக்களுக்கு எதிராக எந்தவகையான போராட்டத்திலும் ஈடுபட்டதில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிரான கொந்தளிப்பையும், தாக்குதலையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

நாம் என்ன செய்தாலும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வார்கள், பொங்கி எழ மாட்டார்கள் என்ற கேரளத்தின் எண்ணம் முதல் முறையாக தவறாகிப் போயுள்ளது. இதை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புது அணை கட்டக் கோரி திருவனந்தபுரத்தில் சென்னிதலா உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் பழமையானது. இதனால் கேரள மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

இதனால்தான் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இந்த அணை கட்டப்பட்டாலும் கூட தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைக்கப்பட மாட்டாது. உரிய நீரை முறையாக கொடுப்போம். இதில் எந்தவிதமான சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.

எனவே தமிழக அரசும், தமிழக மக்களும் கேரளாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு புதிய அணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

நாங்கள் தமிழகத்திற்கு எதிராகவோ, அல்லது தமிழக மக்களுக்கு எதிராகவோ நடக்கவில்லை. அந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நாங்கள் எதிர்பாராத ஒன்று. இது துரதிர்ஷ்டவசமானது. இதைத் தவிர்த்திருக்க வேண்டும்.

அதேசமயம், கேரளாவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சென்னிதலா.

Tuesday, December 6, 2011

கனிமொழிக்கு, இயக்குனர் பார்த்திபன் எழுதிய கவிதை.



மாநிலங்களவை உறுப்பினர்
கனிமொழி அவர்களுக்கு எழுதியது...

இனி மொழி எதற்கு?
இரு விழி உடைந்து ஒழுகிய போது!

ஆதித்யா வெளிவந்த போது
சூல் கொண்ட ஆனந்தத்தின்
அடர்த்தியை விட,

தாய் வெளிவந்த போது
அவரடைந்த ஆனந்தத்தின் பேரே
பேரானந்தம்!

பொன்னாடையாய்,பூங்கொத்தாய்,
poster-ராய், இன்னும்
சக்கரம் கட்டிக்கொண்டு வந்த
அத்துணை வாழ்த்துகளுக்கும். - ---பின்பொரு
அரசியல் இருக்கலாம்.
ஆனால்,

அந்த சின்னஞ்சிறு மனிதனின்
அன்பு, தாய்ப்பாலுக்கு ஈடு!

நீங்கள் நாளை
தி மு கவின் கவின்மிகு
புரட்சி தலைவியாகலாம்,
ஆதித்யா என்றுமே
அ தி மு க அமைச்சர்தான்;
எல்லாமே அவருக்கு அம்மா'தான்!

ஆரத்தழுவி அருவியாய்
அன்பை பொழிய,
ஈரக் குருவியாய்
இமைகள் சிறகடிக்க-உங்கள்
ஈரிதயம் இணைந்து
எடை கூடிய தருணத்தை
வாழ்த்தவே என்னிதயம்
இக்கடிதம் எழுதியது...

ப்ரியமுடன்,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

.

Monday, December 5, 2011

மார்ஜரி ஆசனம், புஜங்காசனம், பூர்ண புஜங்காசனம்.

மார்ஜரி ஆசனம்.
மார்ஜரி ஆசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி, வஜ்ராசனத்தில் அமரவும். இரு கைகளையும் தேவையான தூரத்தில் முழங்காலுக்கு இணையாக நிலைநிறுத்துங்கள். விரல்கள் மட்டும் தரையில் உள்ளங்கைகள் பதிய மேல்நோக்கி இருக்க வேண்டும். இடுப்பிலிருந்து தோள் பட்டைவரை உள்ள முதுகு எலும்பை மேல்நோக்கி உடம்பை உயர்த்தவேண்டும்.

ஒவ்வொரு முதுகுதண்டு - எலும்பையும் மனக்கண்ணால் நினைத்து பார்த்து , அத்தனையை யும் கீழே இறக்கும் வகையில், தலையை மேல்நோக்கி தூக்கவேண்டும். இவைகளை மேலும் - கீழுமாக மாற்றி மாற்றி, இயல்பான சுவாசத்தில் 20 முறை செய்யவேண்டும். அதற்குப் பிறகு, பழைய நிலைக்கு திரும்பிவிடலாம்.

குறிப்பு:

மார்ஜரி ஆசனத்தை பரபரப்போடு செய்யக்கூடாது. அப்படி செய்தால் முதுகுவலி, பிடரி வலி ஆகிய அவதிகள் வந்துசேரும்.

பயன்கள்:

பெருந்தொந்தி, வாயுக்கோளாறு நீங்கும். நரம்பு நோய்கள் அணுகாது. முதுகு வலி, பிடரி வலி, இடுப்பு பிடிப்பு நீங்க மிகச்சிறந்த ஆசனம்!



புஜங்காசனம்.
புஜங்காசனம்

செய்முறை:

விரிபில் குப்புறப்படுத்த நிலையில் இரு கைகளையும் தோள்பட்டைக்கு அடியில் வையுங்கள். இயல்பான சுவாசத்தில் முகத்தை நிமிர்த்தி, கைகளை சற்று அழுத்தவும். தோள் பகுதியை மேலே தூக்குங்கள். இரு கால் பாதங்களும் இணைந்தே இருக்கட்டும். உள்ளங்கை-தோள்பட்டைவரை சமப்பகுதி நேர்க்கோட்டுக்கு வருமாறு, அவரவர்களுக்கு எந்த அளவு செய்யமுடியுமோ, அந்தளவுக்கு செய்வது நல்லது.

பயன்கள்:

மார்பெலும்பு விரியும். பிராணசக்தி உடம்பில் அதிகம் சேரும். இடுப்பு பகுதி சுருங்கும். செரிமான கோளாறு வராது. பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். அடிவயிற்று பிரச்சினைகள் தீரும்.


பூர்ண புஜங்காசனம்.
பூர்ண புஜங்காசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி குப்புறபடுத்து, இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கட்டிப்பிடியுங்கள். மூச்சை இயல்பாக உள்ளே நிறுத்தி, கால் - அடித்தொடையில் அழுத்தவும். உடம்பின் முன்பகுதியை தூக்க கைகளை ஊன்றாமல், `படம் எடுத்த நாகம் போல' நன்கு மேலே எழும்பவேண்டும். அதே சமயத்தில் இரு கால்களும் தரையோடு அழுந்தி இருக்கட்டும். அதற்கு பிறகு அந்தந்த பக்க கையால், முழங்கால் பகுதியை பிடிக்கவேண்டும்.

பயன்கள்:

அடிவயிற்று தசைகள் பலம் பெறும். சிறுநீரக பிரச்சினை வராது. நுரையீரல் நன்கு இயங்கும.

Saturday, December 3, 2011

கடல் எல்லையை சுட்டி காட்டும் கருவியை கண்டுபிடித்த சென்னை மாணவர்களின் வேதனை.

சென்னை மாணவர்களின் கண்டுபிடிப்பு : தேசிய அளவில் அங்கீகாரம்

கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.

கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இந்திய மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதும், மீன் வலைகள் அறுத்தெறியப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுவதும், தொடர்கதையாகி வருகிறது.

இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி, மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகத்தில் எல்.சி.டி., திரையும், இரண்டாம் பாகத்தில் ஜி.பி.எஸ்., ஆன்டனா மற்றும் ஜி.பி.எஸ்., கருவியும், மூன்றாம் பாகத்தில் எரிபொருள் தடுப்பு கருவியும் உள்ளது. ஜி.பி.எஸ்., ஆன்டனா, செயற்கைக்கோளில் இருந்து தகவல் பெற்று, ஜி.பி.எஸ்., டிவைசிற்கு அனுப்பும். அதிலுள்ள திரையின் மூலம், கடல் எல்லையில் பயணிக்கும் இடத்தை தெரிந்து கொள்ள முடியும். எல்.சி.டி., திரையில் மூன்று நிறங்கள் உள்ளன. இதில், மஞ்சள் நிறம் வந்தால் பாதுகாப்பான பகுதி. பச்சை நிறம் மீன்பிடிக்க தகுந்த பகுதி. சிவப்பு நிறம் வந்தால் ஆபத்தான பகுதி என்று அர்த்தம்.

சிவப்பு நிறம் வந்தால், அபாய ஒலி எழும். அபாய ஒலியை கேட்டதும், படகை மீன்பிடி பகுதி அல்லது பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால், கடல் எல்லையை நெருங்குவதற்குள், இன்ஜினுக்கு செல்லக் கூடிய எரிபொருளை, கருவியின் மூன்றாம் பாகம் நிறுத்திவிடும். இதனால், குறிப்பிட்ட கடல் எல்லையை தாண்டவே முடியாது.

இக்கண்டுபிடிப்பு, "இண்டியன் நேஷனல் அகடமி ஆப் இன்ஜினியரிங்' என்ற அமைப்பின் சார்பில் நடந்த, அகில இந்திய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில்,"சிறந்த கண்டுபிடிப்பு' விருது பெற்றுள்ளது.

வரும் அக்டோபரில், ஐதராபாத்தில் இப்பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து, விருது பெறும் மாணவர்கள், "பத்திரிகைகளில் வந்த எங்கள் கண்டுபிடிப்பை பார்த்து, ஆந்திர மாநில மீன்வளத்துறை எங்களை அழைத்துப் பேசியது. ஆனால், தமிழர் நலனுக்காக நாங்கள் கண்டுபிடித்ததை யாருமே கண்டுகொள்ளாமல் இருப்பது, மிகுந்த வேதனை அளிக்கிறது,' என்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாகும் !



நாளந்தா பதிப்பகத்தின் 'தந்தையும், தம்பியும்' புத்தக வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் மத்திய அரசு சரியாக நடந்து கொள்ள வேண்டும். உறுதியாக உள்ள முல்லை பெரியாறு அணையை உடைக்க சதி நடக்கிறது.

ஆனால் மத்திய அரசோ மெத்தனம் காட்டுகிறது. கேரளாவுக்கு சாதகமாக நடக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் இந்தியாவே துண்டு துண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. இதை மத்திய அரசும், கேரளாவும் புரிந்து கொள்ள வேண்டும், என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Friday, December 2, 2011

சோனியா காந்தியின் அவசர முடிவு ஏன் ? ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போவார்களா ?



இந்தியாவில் வெளிநாட்டு மூலதனத்தை கொண்டு வரவும், ரூபாய்க்கு எதிரான டாலரின் விலைமதிப்பைக் குறைக்கவும், ரிடெயில் (சிறு வணிகம்) துறையில் - 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று திருமதி சோனியா காந்தி அவர்களின் ஆலோசனைப்படி மத்திய அரசு அவசர அவசரமாக ஒரு முடிவை எடுத்துள்ளது.

ஏன் இந்த அவசர முடிவு ?

இது குறித்து 2005-06ல் தொகுக்கப்பட்ட சில புள்ளி விவரங்கள் இவை -

இந்தியாவில் -
விவசாயத்துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் - 60.5 %
உற்பத்தித் துறையில் – 16.8%
சர்வீசஸ்(வர்த்தகம் போன்ற இதர பணிகளில்) -22.7%

சராசரி வளர்ச்சி விகிதம் -
விவசாயம் -2.7%
உற்பத்தி – 6.53%
இதர துறைகள் -7.9 %

இந்தியாவில் உழைக்கும் மக்களில்
வர்த்தகத் துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் -7 %.
அதாவது சுமார் 4 கோடி பேர்.
நாட்டின் மொத்த உற்பத்தித்திற்னில்
அவர்கள் பங்கு -14%

சென்ற வாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள 100% அந்நிய முதலீட்டை சில்லரை வணிகத்தில் அனுமதிப்பது என்கிற முடிவால் 1 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாகும் என்கிறது மத்திய அரசு. அதாவது 4 கோடி பேர் வேலை இழப்பார்கள். அதற்கு பதிலாக 1 கோடி பேருக்கு வேலை கிடைக்கும்.

பெட்டிக்கடை, மளிகைக்கடை, அண்ணாச்சி கடை, வாரச் சந்தைகள், காய்கறிக்கடை, தெருவண்டி வியாபாரி, வீட்டு வாசலில் கூடைகளில் காய்கறி -கோயம்பேடு மார்க்கெட், காந்தி மார்க்கெட், எல்லாமே அப்படியே தான் இருக்கும் - இப்போதைக்கு.

ஸ்லோ பாய்சன் கொடுத்தால் -கொஞ்சம் கொஞ்சமாக தானே செத்துப் போவார்கள். எனவே அடுத்த 10 ஆண்டுகளில் விஷம் வேலை செய்யும் !

கொஞ்சம் கொஞ்சமாக இவை எல்லாம் மறையும். அமெரிக்க “வால் மார்க்கெட்டின்” வால்கள் நம் நாடு எங்கும் முளைக்கும்.

தினக்கூலி வாங்குபவர்கள் - குப்பனும், சுப்பனும், சூப்பர் மார்க்கெட்டில் போய் மளிகை வாங்க முடியுமா ? இப்போதே பிக் பஜாரும், ரிலயன்ஸும் வந்தவுடனேயே பாதி மளிகைக் கடைகள் காணாமல் போய் விட்டன.

(இப்போதைக்கு 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள 53 நகரங்களில் மட்டும் தான் என்று மத்திய அரசு சொன்னாலும், கொஞ்ச நாட்கள் கழித்து அந்த 10 ஐ 5 ஆகவோ, 2 ஆகவோ மாற்றுவதை யார் தடுக்க முடியும் ?)

வால் மார்க்கெட் கடைகளில் என்ன கிடைக்கும் ? அமெரிக்க அழகு சாதனங்கள், சோப்புகள், ஜெர்மனியில் தயாராகும் எலெக்ட்ரானிக் சாதனங்கள், சீனாவில் தயாரிக்கப்படும் அனைத்து வித சாதனங்களும், அன்றாட சமையலறை உபகரணங்களும்,

ஆஸ்திரெலியாவிலிருந்தும் டென்மார்க்கிலிருந்தும் பால் பொருட்கள், (கடைசியாக இந்திய கிராமங்களிலிருந்து அரிசி, கோதுமை, காய்கறிகளும் )

நம் நாட்டு பிஸ்கட், டூத்பேஸ்ட், ஹார்லிக்ஸ், போர்ன்விடா ஆகியவற்றுடன் அமெரிக்க, சீன தயாரிப்புகளும் வந்து குவியும். கோகா கோலாவும், பெப்சியும் வந்ததும் நம் உள்ளூர் குளிர்பானங்களுக்கு ஏற்பட்ட கதி இந்த பொருட்களுக்கும் ஏற்படும்.

நேரடி வெளிநாட்டு மூலதனம் என்றால் அமெரிக்கர்கள் டாலர்களாக இங்கே கொண்டு வந்து கொட்டுவார்கள் எனவே ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு குறையும் என்று மத்திய அரசு சொல்கிறது.

கொக்கு தலையில் வெண்ணையை வைத்து, அது உருகி வழிந்து கண்ணை மறைக்கும்போது அந்த கொக்கைப் பிடித்து விடலாம் என்று நமது மத்திய அரசு சொல்கிறது. அமெரிக்கர்கள் என்ன பைத்தியக்காரர்களா ? சும்மா இங்கே பணத்தை கொண்டு வந்து கொட்டுவதற்கு ?

தற்போது “வால் மார்ட்”நிறுவனம் அமெரிக்காவில் பங்குதாரர்களுக்கு மூலதனத்தில் (equity) 21% லாபம் கொடுத்து வருகிறது. இதற்கு குறையாத அளவில் இந்தியாவிலும் லாபம் சம்பாதிக்கத் தானே இங்கு வருகிறார்கள். இந்தியர்களைச் சுரண்ட வரும் அமெரிக்க முதலாளிகளுக்கு கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்கிறது மத்திய அரசு.

அங்கு போணியாகாத பொருட்களை எல்லாம் இங்கு நம் தலையில் கட்டி, கொள்ளை லாபம் அடித்துக் கொண்டு போகப்போகிறார்கள்.

5 வருடங்களுக்கு முன் நிதி அமைச்சராக ப.சிதம்பரம் அவர்கள் சொன்ன வார்த்தை இது -

“உற்பத்தியாளர்களுக்கும் (விவசாயிகளுக்கும்) இறுதி உபயோகிப்பாளர்களுக்கும் இடையில் உள்ள செயல்பாடுகள் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. எனவே இங்கு அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் முன் நாம் நிறைய யோசிக்க வேண்டும் “

5 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் 35 நகரங்களில் வால்மார்ட் நிறுவனம் அனுமதிக்கப்பட்டால், அது சுமார் 10,195 பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும்.அதே சமயம் அதனால் ஏற்கெனவே இந்த துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 43,254 பேர் வேலை இழக்க நேரிடும்.

அதாவது சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு வருவதால் புதிதாக வேலை வாய்ப்புகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. மாறாக ஏற்கெனவே இந்த துறையில் ஈடுபட்டிருப்பவர்கள் பலர் வேலையை இழப்பர்.

இத்தகைய கொடுமைகளுடனாவது இது தேவையா ?

மத்திய அரசு ஏன் பிடிவாதமாக, அவசர அவசரமாக இதைச் செய்கிறது ?

இந்த மூன்றில் எதாவது ஒன்று தான் (அல்லது மூன்றுமே கூட ) காரணமாக இருக்க முடியும் என்கிறார்கள் இது பற்றி விவரம் தெரிந்தவர்கள் -

1) விலைவாசி உயர்வு, கருப்பு பணம் பற்றி பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் விவாதங்களை திசை திருப்ப -

2) வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை, வெள்ளையாக்கி அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் கொண்டு வர -

3) அண்மையில் காங்கிரஸ் தலைமையை சந்தித்த சில வெளிநாட்டு விசேஷ விருந்தினர்களின் அழுத்தமான ஆலோசனையாக – (இதை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மட்டுமே உறுதி செய்ய முடியும்!)

இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும் சரி - எதிர்ப்பை மீறி பிடிவாதமாகக் திணிக்க முயன்றால் இது காங்கிரஸ் கட்சியின் ஒரு தற்கொலை முயற்சியாகவே முடியப் போகிறது.