Wednesday, November 9, 2011

எம்.பி.பி.எஸ். புதிய மதிப்பெண் முறை இரத்தாகிறது. - இன்று வரை நடந்தது என்ன?



14-01-2011 அன்று எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. இம்முடிவால் புதிய மதிப்பெண் விதி காரணமாக தேர்வில் தோல்விக்குள்ளான நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்அடைவர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனாடமி, ஃபிஸியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி என்ற மூன்று பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடமும் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முன்பிருந்த தேர்வு மதிப்பெண் விதிமுறையின்படி, ஒரு பாடத்தின் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் பெற்றாலே, அந்தப் பாடத்தில் தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்தது. இது நீண்டகால நடைமுறை ஆகும்.

ஆனால்,எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற சர்ச்சைக்குரிய புதிய விதிமுறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் 14-01-2011 அன்று அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய 3,184 மாணவர்களில், 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்; 1,217 மாணவர்கள், 40 சதவீதம்பேர் தோல்விக்கு உள்ளாக்கப்பட்டனர்.

புதிய மதிப்பெண் விதிமுறை காரணமாக சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

தோல்விக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் விவரம்;

சென்னை மருத்துவக் கல்லூரி - 40/165
ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி - 48/150
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி - 47/100
மதுரை மருத்துவக் கல்லூரி - 46/155
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி - 11/58
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி - 59/153
கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி - 21/150
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி - 58/153
சேலம் மருத்துவக் கல்லூரி - 44/77
திருச்சி மருத்துவக் கல்லூரி - 35/100
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி- 48/101
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி- 45 /100
வேலூர் மருத்துவக் கல்லூரி - 21/99
தேனி மருத்துவக் கல்லூரி - 43/100
தர்ம்புரி மருத்துவக் கல்லூரி - 57/100
விழுப்புரம் மருத்துவக் கல்லூரி - 42/100
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி - 54/100
பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி, கோவை - 68 /150
மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி - 48 /100
ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி - 62 /150
கற்பகவிநாயகர் மருத்துவக் கல்லூரி - 54/100
முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி - 63 /150
தாகூர் மருத்துவக் கல்லூரி - 105/150
சென்னை மருத்துவக் கல்லூரி, திருச்சி - 79/150

இப்படி அதிர்ச்சி தோல்விப் பட்டியல் தொடர்கிறது. இவர்களெல்லாம் +2வில் 200% முதல் 190% வரை பெற்றவர்கள். 6லட்சம்பேர் தேர்வெழுதிய +2விலிருந்து 3000 பேரை தகுதி அடிப்படையில் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அரசு கல்லூரிகள் 17லிலும், தனியார் கல்லூரிகள் 7லிலும் இவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சேர்க்கை அளிக்கப்பட்டது.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி இரண்டாம் ஆண்டு படிப்புக்குச் செல்ல முடியாத வகையில் "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது.

இதனால் தேர்வில் தோல்வி அடைந்த 40 சதவீத மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு ஃபிஸியாலஜி பாட முதல் பிரிவில் 100-க்கு 59 மதிப்பெண்ணும், இரண்டாம் பிரிவில் 100-க்கு 42 மதிப்பெண்ணும் பெற்று, மொத்தம் 101 மதிப்பெண் பெற்றும்கூட தேர்ச்சி அடையாத மாணவி பூர்ணசௌந்தரி உள்பட 23 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அக்டோபர் 10ந்தேதி மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மாணவர்களை இரண்டாமாண்டு வகுப்பில் அனுமதிக்க உத்தரவிட்டார். பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, மருத்துவக் கல்வி இயக்குநர், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

இருந்தபோதும் இந்த உத்தரவை, மதுரை மருத்துவக் கல்லூரியைத் தவிர மற்ற கல்லூரிகள் இன்றுவரை மதித்தாகத் தெரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இணையானதுதானா? மதுரை உயர்நீதிமன்றம்! எனும் வினா தோன்றாமல் இருக்க வாய்ப்பில்லை.

இருந்தபோதும் மதுரை உயர்நீதிமன்ற நீதியரசர் டி.ராஜா அவர்களின் தீர்ப்பு அதிரடியானதுதான். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளியாய் திகழ்ந்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

4-10-2011 அன்று சென்னை உயர்நீதிமன்ற கோர்ட் -2ல் இவ்வழக்கு, நீதிபதி ஹரிபரந்தாமனிடம் விசாரணைக்கு வந்தது. அவரால் வழக்கு 14-10-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

14-10-2011 அன்று நீதிபதி பால்வசந்தகுமாரிடம் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கினை ஏற்க மறுத்ததால், 19-10-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

19-10-2011 அன்று நீதிபதி சித்ராவெங்கட்ராமனிடம் விசாரணைக்கு வந்தது. அவரால் வழக்கு , 1-11-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது.

1-11-2011 அன்று நீதிபதி சித்ராவெங்கட்ராமன், டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றிவிட்டார்.

2-11-2011 அன்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு வந்த வழக்கு, 9-11-2011க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்படியாக மாணவர்களின் வாழ்க்கை பந்தாடப்பட்டது.

ஒவ்வொறு முறையும் நீதிமன்றத்தில் குவியும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,பெற்றோர்கள், 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் என இவர்கள் யாவரும் நீதியரசர்களின் கண்களில் படவில்லை போலும்..

மாணவர்களின் போராட்டம் தமிழகமெங்கும் வெடித்தது. இது சுகாதாரத்துறை அமைச்சர் வழியாக முதல்வரின் கவனத்திற்கு சென்றது.

இறுதியாக சென்னை-மதுரை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை நவம்பர். 9. இன்று நடைபெற உள்ளது; அப்போது புதிய மதிப்பெண் விதிமுறை ரத்து செய்த தகவலைத் தெரிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய்யை அண்மையில் சந்தித்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் விதிமுறையை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையைப் பெற்று, அவரது உத்தரவின்படி புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்யும் முடிவை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.

Friday, November 4, 2011

அர்த்த மச்சேந்திராசனம், அர்த்த மாலாசனம், அர்த்த தனுராசனம்.

அர்த்த மச்சேந்திராசனம்.
அர்த்த மச்சேந்திராசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது முழங்காலை மெதுவாக தூக்கி, இடதுதொடைக்கு பக்கத்தில் நிலைநிறுத்துங்கள். அப்போது உங்களின் வலதுகை, முதுகை சுற்றிக்கொண்டுபோய், வலது கணுக்காலை தொடட்டும். இடது கை விரகள், மடிந்திருக்கும் இடதுகால் மூட்டில் இருக்கவேண்டும். இந்த நிலையில் முகம் வலப்பக்கமாக திரும்பியிருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடி இருந்தபின் இதேபோல் பக்கம் மாற்றிசெய்யுங்கள்.

பயன்கள்:

இடுப்பு- தோள்பட்டை வரையிலான நாளமில்லா சுரப்பிகள் மற்றும் கல்லீரல், மண்ணீரல், கணையம் ஆகியவை நன்கு இயங்கும். நீரிழிவு குணமாகும். மூட்டுப்பிடிப்பு, செரிமான கோளாறு ஏற்படாது. உடல்எடை குறைந்து அழகிய தோற்றம் கிட்டும். இளமையும் சுறுசுறுப்பும் நீடிக்கும்.


அர்த்த மாலாசனம்.
அர்த்த மாலாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது பாதத்தை மட்டும் செங்குத்தாக தூக்கி, தரையில் ஊன்றுங்கள். அப்போது உங்களின் வலதுகை, இடதுகை மணிக்கட்டையை பிடித்தநிலையில் இருக்கட்டும். இடுப்புக்கு மேல் உறுப்புகளை திருப்பி பின்புறமாக பார்க்கவும். இது மாதிரி இடப் பக்கமாக மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

வயிற்று கோளாறு, மலச்சிக்கல், மூலநோய், சளி சம்பந்தமான நோய்கள் நீங்கும். அடிவயிற்று தசைகள் வலுப்பெறும். முதுகு தண்டுக்கு நல்ல பயிற்சி. சளி, இதய கோளாறு உள்ளளோருக்கு ஏற்றது. மார்பு விரியவும், இடுப்பு குறையவும் வழிவகுக்கும், மிகச்சிறந்த ஆசனமிது!


அர்த்த தனுராசனம்.
அர்த்த தனுராசனம்

செய்முறை:

விரிப்பில் வடக்கு நோக்கி தலை வைத்து குப்புறப்படுங்கள். வலது காலை முழங்கால் அளவு பின்னால் மடக்கவும். வலதுகையை பின்னால் கொண்டு சென்று, வலது கணுக்காலை பிடித்து சற்று உள்நோக்கி இழுக்கவும். தலை-வலது முழங்காலை சற்று மேல் நோக்கி தூக்குங்கள். இயல்பான சுவாசத்தில் செய்யவும்.

அதற்கு பிறகு கால்களை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து, சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம். வலது காலை தரையில் வைத்து, இடது காலை முழங்கால்வரை மடக்குங்கள். இடதுகையால் இடது கணுக்காலை பிடித்து, முன்புபோல மேலே தூக்க முயற்சிக்கவும்.

பயன்கள்:

முதுகு தண்டு இளக்கம் பெறும். வயிற்றுப்பகுதி களர்ச்சி அடையும். மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள், வாயு கோளாறுகள், முதுகு தண்டுவலி ஆகிய நோய்கள் நீங்கும்.

600 அறைகள், நவீன வசதிகளுடன் கிண்டியில் உருவாகும் பிரமாண்ட ஓட்டல்.



சென்னை கிண்டியில் ஸ்பிக் பில்டிங் அருகே ஐ.டி.சி. நிறுவனம் பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டலை கட்டி வருகிறது. 8 ஏக்கர் பரபரப்பளவில் தரை தளம் மற்றும் 10 மாடி கொண்டதாக கட்டப்பட்டு வரும் இந்த ஓட்டலில் 600 அறைகள் நவீன வசதிகளுடன் உள்ளன.

இந்த ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் வகையில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., விமான நிலைய அதிகாரிகள், தீயணைப்பு துறை ஆகியோரிடம் ஓட்டல் நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது.

ஆனால் சென்னை மாநகராட்சியும், சி.எம்.டி. ஏ.வும் தீயணைப்பு துறையும் ஹெலிகாப்டர் தளத்துக்கு அனுமதி தரமுடியாது என்று கூறி தடையில்லா சான்று (என்.ஓ.சி.) கொடுக்க மறுத்து விட்டது.

ஓட்டலின் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும்போது பக்கத்து கட்டிடங்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படும் என்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைய வாய்ப்பு ஏற்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் ஐ.டி.சி. அதிகாரிகள் கூறுகையில் நாங்கள் கட்டி வரும் கிராண்ட் சோழா ஓட்டலில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரில் உள்ள ஐ.டி.சி. குரூப் ஓட்டலான கார்டினியாவில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி இருப்பதால் அதேபோல் இங்கும் ஹெலிகாப்டர் இறங்க வசதி ஏற்படுத்துகிறோம். ஆரம்பத்தில் ஹெலிபேட் இல்லாத வகையில் பிளான் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் பிறகுதான் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.

இதனால் திருத்திய பிளான் வடிவமைப்பை சி.எம்.டி.ஏ.வில் வழங்கினோம். ஆனால் அவர்கள் அனுமதி தரவில்லை. இந்த ஓட்டலை மார்ச் மாதத்திற்குள் திறக்க முடிவு செய்திருப்பதால் ஹெலிபேட் வசதி இன்றி திறக்க முடிவு செய்துள்ளோம்.

ஆனால் விரைவில் ஓட்டல் மாடியில் ஹெலிகாப்டர் வந்திறங்க அனுமதி வாங்கி விடுவோம் என்றனர். சென்னையில் உள்ள ஓட்டல்களில் இதுவரை ஹெலிகாப்டர் வந்திறங்கும் வசதி எந்த ஓட்டலிலும் கிடையாது.

கிண்டியில் கட்டப்பட்டு வரும் கிராண்ட் சோழா ஓட்டலில்தான் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அரண்மனை போல் காட்சியளிக்கும் இந்த ஓட்டலை அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

Thursday, November 3, 2011

அழியப் போகிறது இலட்ச்சக்கணக்கான புத்தகங்கள்.



கோட்டூர்புரத்தில் 200 கோடி செலவில், கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

5 லட்சம் புத்தகங்கள்

இந் நூலகத்திற்காக 24075 தலைப்புகளில் 92440 தமிழ் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அச்சிட்ட நூல்கள் தவிர 50000 மின் நூல்கள், 11000 மின் இதழ்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந் நூலகத்தில் ஒரே நேரத்தில் 1250 பேர் அமர்ந்து படிக்க முடியும். இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் தினமும் 2000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். வார நாட்களில் 3ஆயிரம் பேர் வரை இங்கு வந்து இங்குள்ள நூல்களை வாசித்து இங்கு வீசும் அறிவுக்காற்றினை சுவாசித்து செல்கின்றனர்.



அதிநவீன வசதி கொண்ட நூலகம்

தரமிக்க நூலகங்களில் காணப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் இணைந்த மின் நூலகம்,இதனுடன் யுனெஸ்கோவும் இணைந்துள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டது.

இந்த நூலகத்தில் திரையரங்கு, கூட்ட அரங்கு, கண்காட்சி அரங்குகள் உள்ளன. மிகப்பெரிய முகப்பு கூடம், வரவேற்பு அறை, இண்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது.

பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு, புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பிரிவு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கானப் புத்தகங்கள் தரைத்தளத்தில் உள்ளன. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.



டிஜிட்டல் நூலகம்

5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் நூலகமும், புகைப்பட தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கிறது.

இங்கு 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு ஊடக சி.டி.க்கள் உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அரிய நூல்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட நூல்கள் உலக முன்னணி பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஆங்கில மற்றும் பிறமொழி நூல்கள் அனைத்தும் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இந்த டிஜிட்டல் நூலகம் மூலம் உலகின் புகழ்பெற்ற எந்த நூலகத்தில் இருந்தும் தகவல்களை பெற முடியும். இங்கு 500-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.



நூலகத்திற்கான தர நிர்ணயம்

நூலகத்துக்கு என்று இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவரின் அகலம், கட்டட உயரம், ஸ்திரத்தன்மை என்று அனைத்தும் அதைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அனைத்து அறைகளுக்கும் வந்து செல்லும் வகையில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பசுமைக் கட்டடமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் உருவான ஒரே காரணத்திற்காக இந் நூலகம் மூடப்பெற்று..அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நூல்களை இடம் மாற்றித்தானே வைக்கிறோம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால்..நூல் நிலையத்திற்காகவே உருவாக்கப் பட்ட இடத்திலிருந்து ஏன் மாற்ற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான நூல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.

Monday, October 31, 2011

மழையால் வீடு இடிவதற்கு முன்பு குரைத்து நான்கு பேரை காப்பாற்றிய நாய்.

கோத்தகிரியில் நாய் ஒன்று 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் சங்கர். நேற்று முன்தினம் தாயும், மகனும் மண் சுவர் கொண்ட குடிசை வீட்டுக்குள் படுத்து தூங்கினர். கடந்த ஒரு வாரமாக கோத்தகரியில் கனமழை பெய்து வருவதால் அந்த குடிசை மழையில் நனைந்து வலுவிழந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 2 மணியளவில் கன மழை கொட்டித் தீர்த்தது.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த சரஸ்வதி வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து குரைத்தது. நாய் ஏன் இப்படி குரைக்கிறது என்று பார்க்க சரஸ்வதியும், அவரது மகனும் வீட்டுக்கு வெளியே வந்தனர். அப்போது வீ்ட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. தக்க நேரத்தில் வெளியே வந்ததால் தாயும், மகனும் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.

நாய் குரைத்திருக்காவிட்டால் 2 பேரும் வீட்டின் உள்ளே இருந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும். சரஸ்வதி வீட்டு நாய் குரைத்ததால் தூக்கம் கலைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன் மற்றும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது.

நாய் நன்றியுள்ள ஜீவன் என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

உலகின் 700வது கோடி குழந்தைகள் பிலிப்பைன்ஸிலும், இந்தியாவிலும் பிறந்தது.



உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது.

முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.

2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி.

உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது!

இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை   திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்: வாழப்பாடியில் பரபரப்பு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களும் கூட ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் 500 வரை வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியையொட்டி, கல்ராயன்மலை கருமந்துறை சாலையில் துக்கியாம்பாளையம் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. மாரியம் மன்புதூர், மேலூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமத்தை உள்ளடக்கிய எஸ்.சி., இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கலைச் செல்வி, ராஜாமணி, ராமாயி, கலைமணி, பழனியம்மாள் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

அதில் மக்கள் நலப்பணியாளர் தனபால் மனைவி கலைச்செல்வி 1089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.100 வீதம் பணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அந்த வேட்பாளரின் கணவர், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று, எனக்கு யாரும் ஓட்டுபோட வில்லை அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் எனக்கூறி, வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை தோல்வியடைந்த வேட்பாளர் வீடு வீடாக சென்று வசூலித்து வருவதால், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் பீதியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இனி வரும் தேர்தல்களில் எந்த வேட்பாளரிடமும் பணம் வாங்கக்கூடாது எனவும் புலம்பி வருகின்றனர். அச்சம்பவம் துக்கியாம்பாளையம் மட்டுமின்றி வாழப்பாடி வட்டாரம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.