Thursday, November 3, 2011

அழியப் போகிறது இலட்ச்சக்கணக்கான புத்தகங்கள்.



கோட்டூர்புரத்தில் 200 கோடி செலவில், கட்டப்பட்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக தரைத் தளம் உள்பட 9 தளங்களில் கட்டப்பட்டது. இதில் 8 தளங்களில் புத்தகப் பிரிவும், ஒரு தளத்தில் நிர்வாகப் பிரிவும் இயங்கி வருகின்றன. இந்த நூலகத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

ரூ.40 முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள புத்தகங்கள் இங்குள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயார் செய்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், நல்ல சூழலில் படிப்பதற்காக புத்தகங்களுடன் வருபவர்கள், பார்வையற்றவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் இருப்பதால் இந்த நூலகத்துக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.

5 லட்சம் புத்தகங்கள்

இந் நூலகத்திற்காக 24075 தலைப்புகளில் 92440 தமிழ் நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. அச்சிட்ட நூல்கள் தவிர 50000 மின் நூல்கள், 11000 மின் இதழ்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ள இந் நூலகத்தில் ஒரே நேரத்தில் 1250 பேர் அமர்ந்து படிக்க முடியும். இந்த நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் தினமும் 2000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். வார நாட்களில் 3ஆயிரம் பேர் வரை இங்கு வந்து இங்குள்ள நூல்களை வாசித்து இங்கு வீசும் அறிவுக்காற்றினை சுவாசித்து செல்கின்றனர்.



அதிநவீன வசதி கொண்ட நூலகம்

தரமிக்க நூலகங்களில் காணப்படும் அனைத்து தொழில் நுட்பங்களும் இணைந்த மின் நூலகம்,இதனுடன் யுனெஸ்கோவும் இணைந்துள்ளது. முழுவதும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம் பல்வேறு நவீன வசதிகளைக் கொண்டது.

இந்த நூலகத்தில் திரையரங்கு, கூட்ட அரங்கு, கண்காட்சி அரங்குகள் உள்ளன. மிகப்பெரிய முகப்பு கூடம், வரவேற்பு அறை, இண்டர்நெட் மையம் ஆகியவை உள்ளன. பார்வை இல்லாதவர்கள் பிரெய்லி முறையில் படிக்கும் நூலக அரங்கும் இருக்கிறது.

பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு, புத்தகம் கொண்டு வந்து படிக்கும் பிரிவு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்கானப் புத்தகங்கள் தரைத்தளத்தில் உள்ளன. முதல் தளத்தில் சிறுவர்-சிறுமிகளுக்கான புத்தகங்கள், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறை உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.



டிஜிட்டல் நூலகம்

5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-வது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ-வீடியோ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் நூலகமும், புகைப்பட தொகுப்புகளும் 8-வது மாடியில் இருக்கிறது.

இங்கு 70 ஆயிரம் ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நூல்கள் குழந்தைகளுக்காக வைக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்துக்கும் அதிகமான பல்வேறு ஊடக சி.டி.க்கள் உள்ளன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அரிய நூல்கள் மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட நூல்கள் உலக முன்னணி பதிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஆங்கில மற்றும் பிறமொழி நூல்கள் அனைத்தும் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் கார்டு மூலம் இந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.

இந்த டிஜிட்டல் நூலகம் மூலம் உலகின் புகழ்பெற்ற எந்த நூலகத்தில் இருந்தும் தகவல்களை பெற முடியும். இங்கு 500-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உள்ளன. இந்த நூலகத்துக்கு உலக டிஜிட்டல் நூலகத்தின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.



நூலகத்திற்கான தர நிர்ணயம்

நூலகத்துக்கு என்று இந்தியத் தர நிர்ணய அமைப்பின் வழிகாட்டுதல்கள் உள்ளன. சுவரின் அகலம், கட்டட உயரம், ஸ்திரத்தன்மை என்று அனைத்தும் அதைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளன. சூரியனின் ஒளிக்கதிர்கள் அனைத்து அறைகளுக்கும் வந்து செல்லும் வகையில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. முற்றிலும் பசுமைக் கட்டடமாக இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது. கருணாநிதி ஆட்சியில் உருவான ஒரே காரணத்திற்காக இந் நூலகம் மூடப்பெற்று..அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை இயங்கும் என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நூல்களை இடம் மாற்றித்தானே வைக்கிறோம் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால்..நூல் நிலையத்திற்காகவே உருவாக்கப் பட்ட இடத்திலிருந்து ஏன் மாற்ற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான நூல் ஆர்வலர்களின் கேள்வியாகும்.

Monday, October 31, 2011

மழையால் வீடு இடிவதற்கு முன்பு குரைத்து நான்கு பேரை காப்பாற்றிய நாய்.

கோத்தகிரியில் நாய் ஒன்று 4 பேரின் உயிரைக் காப்பாற்றிய அதிசயம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த தவிட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் சங்கர். நேற்று முன்தினம் தாயும், மகனும் மண் சுவர் கொண்ட குடிசை வீட்டுக்குள் படுத்து தூங்கினர். கடந்த ஒரு வாரமாக கோத்தகரியில் கனமழை பெய்து வருவதால் அந்த குடிசை மழையில் நனைந்து வலுவிழந்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 2 மணியளவில் கன மழை கொட்டித் தீர்த்தது.

அப்போது வெளியே நின்று கொண்டிருந்த சரஸ்வதி வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து குரைத்தது. நாய் ஏன் இப்படி குரைக்கிறது என்று பார்க்க சரஸ்வதியும், அவரது மகனும் வீட்டுக்கு வெளியே வந்தனர். அப்போது வீ்ட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. தக்க நேரத்தில் வெளியே வந்ததால் தாயும், மகனும் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.

நாய் குரைத்திருக்காவிட்டால் 2 பேரும் வீட்டின் உள்ளே இருந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும். சரஸ்வதி வீட்டு நாய் குரைத்ததால் தூக்கம் கலைந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெகந்நாதன் மற்றும் அவரது மனைவியும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்கள் வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது.

நாய் நன்றியுள்ள ஜீவன் என்பது இந்த சம்பவம் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.

உலகின் 700வது கோடி குழந்தைகள் பிலிப்பைன்ஸிலும், இந்தியாவிலும் பிறந்தது.



உலகின் 700வது கோடி குழந்தை இன்று உ.பி. தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது.

முன்னதாக உலகின் 700வது கோடி குழந்தை லக்னோ அருகே மால் என்ற கிராமத்தில் பிறக்கும், அது பெண் குழந்தை என்று பிளான் இன்டர்நேஷனல் என்ற சர்வதேச தொண்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்தப் பெண் குழந்தை, பெண் சிசுக் கொலைக்கு எதிரான அடையாளமாக விளங்கும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பைன்ஸில் பிறந்துள்ளது.

மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் அவரது பெற்றோர். இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பெருமளவில் பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் திரண்டிருந்தனர். நள்ளிரவைத் தாண்டிய நிலையில் குழந்தை டேனிகா பிறந்தாள்.

குழந்தையின் தாயாரான கேமிலி டலுரா, டேனிகாவை அணைத்தபடி கூறுகையில், இக்குழந்தை மிகவும் அழகாக உள்ளது. எனது மகள்தான் உலகின் 700வது கோடி குழந்தை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார் பூரிப்புடன்.

2.5 கிலோ எடையுடன் உள்ள டேனிகா, டலுரா மற்றும் அவரது கணவர் பிளாரன்ட் கமாச்சோவுக்கு பிறந்த 2வது குழந்தையாகும்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினராம்.

மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பலரும் கூட குழந்தைக்கு ஏராளமான பரிசுகளை அறிவித்துள்ளனர். குழந்தையின் எதிர்கால கல்விச் செலவு உள்ளிட்டவற்றை ஏற்பதாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு நிறுவனம் டேனிகாவின் பெற்றோருக்காக கடை ஒன்றை வைத்துத் தருவதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின்போது இன்னொரு விசேஷமும் நடந்தது. உலகின் 600வது கோடி குழந்தையான போஸ்னியாவைச் சேர்ந்த லோரிஸ் மா குவரா என்ற 12 வயது சிறுவன் டேனிகா பிறப்பின்போது அந்த மருத்துவமனையில் இருந்தான். இவன் 1999ம் ஆண்டு போஸ்னியாவைச் சேர்ந்த அகதித் தம்பதியருக்குப் பிறந்தவன் ஆவான்.

இதுகுறித்து குவரா கூறுகையில், இந்த அழகான குழந்தையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போலவே ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இவளும் வளர்வாள், எல்லோராலும் நேசிக்கப்படுவாள் என்று நம்புகிறேன் என்றான் சிரித்தபடி.

உ.பியிலும் 700வது கோடி குழந்தை பிறந்தது!

இதற்கிடையே, உ.பி. மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் பெறுகின்றன.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்.

ஓட்டுக்குகொடுத்த பணத்தை   திருப்பி கேட்ட வேட்பாளரின் கணவர்: வாழப்பாடியில் பரபரப்பு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 20 கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமின்றி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர்களும் கூட ஒரு ஓட்டுக்கு ரூ.100 முதல் 500 வரை வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

வாழப்பாடி பேரூராட்சி பகுதியையொட்டி, கல்ராயன்மலை கருமந்துறை சாலையில் துக்கியாம்பாளையம் கிராம ஊராட்சி அமைந்துள்ளது. மாரியம் மன்புதூர், மேலூர், துக்கியாம்பாளையம் உள்ளிட்ட மூன்று கிராமத்தை உள்ளடக்கிய எஸ்.சி., இன பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு கலைச் செல்வி, ராஜாமணி, ராமாயி, கலைமணி, பழனியம்மாள் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

அதில் மக்கள் நலப்பணியாளர் தனபால் மனைவி கலைச்செல்வி 1089 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியை தழுவிய வேட்பாளர்களில் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ.100 வீதம் பணம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பணம் கொடுத்தும் இரண்டாவது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அந்த வேட்பாளரின் கணவர், ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று, எனக்கு யாரும் ஓட்டுபோட வில்லை அதனால் கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் எனக்கூறி, வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தை அதிரடியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓட்டுக்கு கொடுத்த பணத்தை தோல்வியடைந்த வேட்பாளர் வீடு வீடாக சென்று வசூலித்து வருவதால், ஓட்டுக்கு பணம் வாங்கிய வாக்காளர்கள் பீதியடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி இனி வரும் தேர்தல்களில் எந்த வேட்பாளரிடமும் பணம் வாங்கக்கூடாது எனவும் புலம்பி வருகின்றனர். அச்சம்பவம் துக்கியாம்பாளையம் மட்டுமின்றி வாழப்பாடி வட்டாரம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, October 29, 2011

மண்டூகாசனம், யோக தண்டாசனம், ஏகபாத ராஜ கபோட்டாசனம்.

மண்டூகாசனம்.
மண்டூகாசனம்

செய்முறை:

தொழுகை செய்வது மாதிரி, முழங்கால்களை மடக்கி உட்காரவும். அப்படியே முன்புறமாக குனிந்து படுங்கள். அப்போது உங்களின் அடிவயிறு, மேல் வயிறு, மார்பு, மோவாய் ஆகியவை தரையில் படிந்திருக்கட்டும். இரண்டு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு, முழங்கையை மடக்கி வையுங்கள். அவ்வளவுதான்!

பயன்கள்:Justify Full
சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல், ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். கார்ப்பப்பை கோளாறுகள் அகலும். வயிற்று கோளாறு, பிருஷ்ட தொடைப்பகுதியின் அதிக சதை குறையும்.


யோக தண்டாசனம்.
யோக தண்டாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலதுகாலை மட்டும் மெதுவாக முன்னோக்கி வளைத்து, வலதுகை அக்குளில் நிலைநிறுத்தவும். அப்போது உங்களின் கைவிரல்களில் சின் முத்திரை இருப்பது அவசியம். இடதுகால் மூட்டில், இடதுகையை வைத்துக்கொள்ளவும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடிகள் இருந்து, ஆசனத்தை இடப்பக்கம் மாற்றி, இதேபோல செய்து முடிக்கவும்.

பயன்கள்:

கால் தசை பிடிப்பு, மூட்டுவலி, கை, கால், தோள்பட்டை, புஜங்களில் வலி நீங்கும். இடுப்பு பிடிப்பு சரியாகும். ஊளை சதை குறையும்.


ஏகபாத ராஜ கபோட்டாசனம்.
ஏகபாத ராஜ கபோட்டாசனம்

செய்முறை:

முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். வலது முழங்காலை பின்னால் கொண்டுபோய், செங்குத்தாக நிறுத்துங்கள். முதுகை சற்று பின்னால் வளைக்கவும். உங்களின் இடது கை விரல்கள், வலதுகால் கட்டைவிரலை பிடித்தபடி இருக்கட்டும். இயல்பான சுவாசத்தில் 15 விநாடி இருந்து ஆசனத்தை கலைத்து பழைய நிலைக்கு வரவும். உடனே இடதுகாலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

ஜனன உறுப்புகள் நன்கு இயங்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் இயக்கம் சீராகும். மலச்சிக்கல் வராது. தொடையில் அதிக சதை போடாது. தோள்பட்டை எலும்புகள் நன்கு இயங்குவதோடு, மார்பும் விரிவடையும்.

Tuesday, October 25, 2011

சத்தமில்லாமல் விருதுகள் வாங்கிக் குவிக்கும் இசைப்புயல். ஏ. ஆர். ரகுமான்.



பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு 127 அவர்ஸ் படத்திற்காக ப்பளிக் சாய்ஸ் விருது கிடைத்துள்ளது

127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரகுமானின் பெயர் மறுபடியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் அவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரகுமானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது வழங்கப்பட்டது.

127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரகுமான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு.,

2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன.

2009 ஆம் ஆண்டு ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் இசைப்புயல் ரகுமான்.

பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் தமது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று உச்சரித்து, தமிழருக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்தார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகளும் பெற்றுள்ளார்.

2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

2011-ஆம் ஆண்டு உலக சவுண்டு டிராக் அகாடமி விருதினையும் தனதாக்கினார் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்

மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது,

தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ,

ஆறு முறை தமிழக திரைப்பட விருது,

13 முறை பிலிம்பேர் விருது,

12 முறை பிலிம்பேர் சவுத் விருது, 9 முறை தொடர்ந்து பெற்றார்.

ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருதுகளையும் பெற்ற ஏ. ஆர். ரகுமான் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்.

வாழ்க ரகுமான் என்று வாழ்த்துவோம்.

Monday, October 24, 2011

வாய் கிழியப் பேசும் காங்கிரஸின், பலம் - வாயைப் பிளந்தது. - தட்ஸ் தமிழ்.



நாங்கள் இல்லாவிட்டால் ஒருவரும் ஆட்சியமைக்க முடியாது, எதையும் செய்ய முடியாது என்று வாய் கிழியப் பேசி வந்த காங்கிரஸாருக்கு இப்போது உள்ளாட்சித் தேர்தலில் சம்மட்டி அடி கிடைத்துள்ளது. இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம். காமராஜரோடு காங்கிரஸ் கரையறி விட்டது என்பதை மக்கள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளனர் தேர்தல் முடிவு மூலம்.

தமிழகத்தில் ஓசியிலேயே உடம்பேற்றி வந்த ஒரே கட்சி எது என்றால் அது காங்கிரஸ்தான் என்பதை கருவில் இருக்கும் சிசு கூட கரெக்டாக சொல்லி விடும். ஆனால் இதை காங்கிரஸார் மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். மாறாக, நாங்கள் யாருடன் இருக்கிறோமோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். நாங்கள் ஆதரவு தரும் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கோஷ்டி கோஷ்டியாக கானம் பாடி வருவார்கள்.

ஆனால் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாகி விட்டது தமிழக காங்கிரஸின் நிலை. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்கத் திராணியில்லாத கட்சியாக கிழிந்த வேட்டி போல காட்சி தருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்பது இதுவரை நடந்திராத ஒன்று என்றே கூறலாம். காரணம், திமுக அல்லது அதிமுக என யாருடைய முதுகிலாவது ஏறி, ஓசி சவாரி செய்வதுதான் அந்தக் கட்சிக்கு வசதியானதாக இருந்தது. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு கதர்ச் சட்டை கசங்காமல் பாலிட்டிக்ஸ் செய்து பழக்கப்பட்டவர்கள் காங்கிரஸார் (காங்கிரஸார் என்று இங்கு நாம் கூறுவது தலைவர்களை -தொண்டர்களை அல்ல).

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி, கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்று கூறிக் கூறியே வேண்டிய சீட்களைப் பெற்று ஓசி பலத்தில் ஊறுகாய் போட்டு வந்தவர்கள் இவர்கள். கடந்த சட்டசபைத் தேர்தலில், திமுகவிடம், 2ஜி விவகாரத்தைக் காட்டிக் காட்டியே சீட் கறந்த காங்கிரஸின் பிடிவாதப் பேரத்தைப் பார்த்து மாற்றுக் கட்சியினரும் கூட கொந்தளித்துப் போனார்கள். இப்படி நீ சோறு கொடு, நீ குழம்பு கொடு, நான் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் கதையாக படு சோம்பேறித்தனமாக அரசியல் செய்துவந்த காங்கிரஸ் இன்று உள்ளாட்சித் தேர்தலில் தலை முதல் பாதம் வரை படு அடியை வாங்கி பம்மிப் போய்க் கிடக்கிறது.

இதுதான் காங்கிரஸின் நிஜமான பலம் என்பதைமக்கள் காட்டி விட்டார்கள். பத்து மாநகராட்சிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட 2வது இடத்தைப் பிடிக்கவில்லை. பல இடங்களில் 3வது இடத்தைக் கூடப் பி்டிக்கவில்லை. மொத்தமே 17 கவுன்சிலர்கள்தான் இக்கட்சிக்குக் கிடைத்துள்ளனர்.

அதை விடக் கேவலமாக கொடிகாத்த குமரனைத் தந்த திருப்பூரில் ஒரு கவுன்சிலர் கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. இது நிஜமான காங்கிரஸாருக்கு பெரும் வேதனை தரும் செய்தியாகும். காங்கிரஸுக்கென்று ஒரு தொண்டர் வட்டம் உள்ள மதுரையிலும் முட்டைதான். சேலத்திலும் ஒன்றும் இல்லை.

அதே போல 125 நகராட்சிகளில் தேர்தல் நடந்த 124 நகராட்சிகளில் ஒரு இடத்தில் கூட தலைவர் பதவியைப் பிடிக்கவில்லை காங்கிரஸ். காங்கிரஸின் பாரம்பரியப் பகுதிகளான ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் கூட அந்தக் கட்சியால் தனித்து வெல்ல முடியாமல் போனது கேவலத்திலும் படு கேவலமாகும்.

சரி பேரூராட்சியிலாவது ஏதாவது பெயருமா என்று பார்த்தால் மொத்தமே 24 இடங்களில்தான் வெற்றி கிடைத்துள்ளது.

இப்படி எங்குமே காங்கிரஸுக்கு சிறப்பு கிடைக்கவில்லை. மாறாக போன இடங்களில் எல்லாம் மக்களிடமிருந்து பட்டை நாமம்தான் கிடைத்துள்ளது.

வாழ்ந்தால் வாழை மரம் போல வாழ வேண்டும் என்பார்கள். வாழை மரத்தில்தான் அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன்படும். ஆனால் காங்கிரஸோ, பார்த்தீனியம் செடி போலத்தான் இத்தனை நாளாக இருந்துள்ளது. அதாவது மற்ற கட்சிகளின் பலத்தைப் பெற்று இது வாழ்ந்து வந்துள்ளது. இந்த கட்சியால் எந்தக் கட்சிக்கும் உண்மையில் லாபம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கட்சிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கூட காங்கிரஸார் உண்மையில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்பதை காங்கிரஸாரே ஒத்துக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலின் மூ்லம் திராவிடக் கட்சிகளான திமுகவுக்கும் சரி, அதிமுகவுக்கும் சரி கிடைத்துள்ள முக்கியப் பாடம் என்னவென்றால் -இத்தனை காலமாக, அடிப்படையே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான இடம் கொடுத்து வி்ட்டோம் என்பதுதான்.

தமிழர்கள் பாடுபட்டபோதெல்லாம், பரிதவித்த போதெல்லாம், துடித்து துவண்டபோதெல்லாம், உயிரை இழந்து உருக்குலைந்து போனபோதெல்லாம் உதவாமல் போனதுதான் காங்கிரஸின் கை. தமிழகத்திலும் கூட தமிழகத்தின் எந்தப் பிரச்சினைக்கும் காங்கிரஸ் உதவிக்கு வந்ததில்லை. மாறாக தமிழகத்தின் பிரச்சினைகளிலெல்லாம் நழுவிப் போனது அல்லது இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது.

தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினையாகட்டும், வேறு எந்தப் பிரச்சினையாகட்டும் காங்கிரஸ் உதவியது என்பது வரலாற்றிலேயே கிடையாது. கூட்டணி சேர வேண்டும், கூட்டாஞ்சோறு ஆக்கி நாம் மட்டும் நாம் மட்டும் நன்றாக சாப்பிட வேண்டும். இதுதான் காங்கிரஸின் ஒரே குறிக்கோளாக இருந்தது.

இந்தப் படு தோல்வி இப்படியே நின்று விடக் கூடாது. பொறுப்பான, தமிழகத்திற்கு உதவக் கூடிய தமிழர்களுக்கு உறுதுணையான உண்மையான அரசியல் கட்சியாக காங்கிரஸ் மீண்டும் மாறும் வரை மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்.

இதுதாம்ப்பா காங்கிரஸ் என்பதை மக்கள் காட்டி விட்டார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் விழிப்புடன் இருந்து, காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.