Friday, October 7, 2011

எம்.பி.பி.எஸ். மாணவர்கள் வழக்கு : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திர்க்கு நோட்டீஸ்.



சென்னை : எம்.பி.பி.எஸ். தேர்வில் புது விதிமுறையை புகுத்தப்பட்டதை எதிர்த்து, 150 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், எம்ஜிஆர் பல்கலைக்கழகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நாமக்கல்லை சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவி சுருதி உள்பட 150க்கும் அதிகமானவர்கள், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

நாங்கள் அனைவரும் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். முடித்துள்ளோம். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்டு இறுதி தேர்வு எழுதினோம். தேர்வு முடிவுகள் இன்டர்நெட் வாயிலாக கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. ஒரு பாடத்தின் முதல் தாளில் நாங்கள் தோல்வி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறையின்படி ஒவ்வொரு பேப்பரிலும் 50 சதவீத மதிப்பெண் எடுத்தால்தான் வெற்றி அறிவிக்கப்படும். பழைய விதிமுறையின்படி, ஒரு பாடத்துக்கான இரண்டு பேப்பரிலும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் எடுத்திருந்தால் போதும். ஒவ்வொரு பேப்பரிலும் குறைந்தது 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள விதிமுறை இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைக்கு எதிரானது. வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற விதிமுறை இல்லை. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள புதிய விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும். இரண்டாம் ஆண்டு வகுப்புக்கு செல்ல எங்களை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பாக வக்கீல் ஜி.டி.சுப்பிரமணியன் ஆஜராகி, வரும் 10ம் தேதி முதல் 2ம் ஆண்டு வகுப்புகள் தொடங்கவிருக்கின்றன. எனவே மாணவர்கள் 2ம் ஆண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இந்த வழக்கில் எம்ஜிஆர் பல்கலைக்கழக பதிவாளர் உள்பட 3 பேர் வரும் 14ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி
தினகரன், 7-10-2011

எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவை எதிர்த்து முதலாம் ஆண்டு மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு .



சென்னை,அக்.6: புதியமுறையில் மதிப்பெண் நிர்ணயக்கப்பட்டதால் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுத் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களில் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், பல மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் தமிழக அரசு விளக்கம்கேட்டுள்ளது.

புதிய முறையில் மதிப்பெண் நிர்ணயம்: எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டுப் படிப்பில் உள்ள பாடங்களான அனாடமி (இரண்டு பிரிவுகள்), "ஃபிஸியாலஜி' (இரண்டு பிரிவுகள்), "பயோகெமிஸ்ட்ரி' (இரண்டு பிரிவுகள்) ஆகியவற்றில் எழுத்துத் தேர்வு-செய்முறைத் தேர்வு-வாய்மொழித் தேர்வு ஆகியவை தலா 100 மதிப்பெண்களுக்கு உண்டு. இதில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் தேர்ச்சி பெற ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

உதாரணமாக "அனாடமி பாடப்பிரிவு 1-ல்' ஒரு மாணவர் 100-க்கு 60 மதிப்பெண்ணும், "அனாடமி பாடப்பிரிவு 2-ல்' ஒரு மாணவர் 100-க்கு 40 மதிப்பெண்ணும் எடுத்தால்கூட தேர்ச்சி பெறும் நிலை இருந்து வந்தது.

ஆனால், கடந்த கல்வியாண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மதிப்பெண் முறையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதாவது, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ஒரு மாணவர் தேர்ச்சி பெற முடியும் என பல்கலைக்கழகம் மாற்றம் செய்தது.

இதனால் இந்த ஆண்டு ஆகஸ்டில் தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். மாணவர்களில் 900 பேர் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபல கல்லூரிகளில்கூட...: படிப்பில் சிறந்து விளங்குவோர் படிக்கக்கூடிய சென்னை மருத்துவக் கல்லூரியில் அனாடமி பாடப் பிரிவு 1 மற்றும் பிரிவு 2-ல் தேர்வு எழுதிய 163 மாணவர்களில், 136 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்; சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இதே பாடப் பிரிவில் தேர்வு எழுதிய 151 மாணவர்களில் 118 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

"பிரேக் சிஸ்டம்': மற்ற படிப்புகளைப் போல் இல்லாமல், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும்கூட, 2-ம் ஆண்டு படிப்பைத் தொடர முடியாத அளவுக்கு "பிரேக் சிஸ்டம்' நடைமுறை உள்ளது. தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் படித்து தேர்ச்சி பெற்ற பிறகே, அடுத்த ஆண்டு படிப்பைத் தொடரும் நிலை எம்.பி.பி.எஸ். படிப்பில் உள்ளது. இதனால்தான் எம்.பி.பி.எஸ். படிப்பை 7 அல்லது 8 ஆண்டுகள் கழித்து முடிப்போரும் உண்டு.

துணைவேந்தர் விளக்கம்: ""தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் கழித்தும்கூட, எம்.பி.பி.எஸ். பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவே இத்தகைய குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

"பிரேக் சிஸ்டம்' என்பது இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிமுறையாகும். "பிரேக் சிஸ்டம்' நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்' என்றார் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன்.

நன்றி
தினமணி, 7-10-2011

Wednesday, October 5, 2011

வாழ்வு முத்திரை, ஜீரண முத்திரை, இதய முத்திரை, லிங்க சக்தி முத்திரை .

வாழ்வு முத்திரை.
வாழ்வு முத்திரை

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.


ஜீரண முத்திரை.
ஜீரண முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும்.

சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.


இதய முத்திரை.
இதய முத்திரை

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டை விரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது.

இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.


லிங்க சக்தி முத்திரை.
லிங்க சக்தி முத்திரை

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும்.

எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

தொகுத்தவர்: முனைவர் ஆர்.ராஜன், சென்னை.

Saturday, October 1, 2011

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு - நிலைமை இன்னும் மோசமாகும் !



தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.

இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம் காட்டப்பட்டது. ஆனால், நிலைமை முன்பை விட மோசமாகியுள்ளது.

காற்று வீசாததால் காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு குறைந்து விட்டதாகவும், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை பல நூறு மெகாவாட் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் தான் மின் தட்டுப்பாடு நிலவுவதுமாக மின்வாரியம் கூறுகிறது.

தமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11,000 மெகா வாட். ஆனால், உற்பத்தி ஆவதோ 9,500 மெகா வாட் தான்.

மேலும் தினந்தோறும் மின்சாரத் தேவையின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் தடுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதனால் தமிழகம் முழுவதுமே பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் செய்யப்படும் இந்த மின்வெட்டால், தொழில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல தொழி்ற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு பணி இல்லாத சூழலும் நிலவுகிறது.

இந் நிலையில் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அளிக்கும் முக்கிய சுரங்கமான ஆந்திர மாநிலம் சிங்க்ரனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழகத்துக்கு நிலக்கரி சப்ளையும் பாதிக்கப்படலாம். இதனால் தமிழகத்தில் மின் நிலைமை மேலும் மோசமாகும்.

Thursday, September 29, 2011

வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் இதுவரை 210 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு.



வாச்சாத்தி மலை கிராமத்தில் போலீசார், வருவாய்த்துறையினர், வனத்துறை யினரால் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 19 ஆண்டுகளுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நான்கு இந்திய வனப்பணி அதிகாரிகள் உள்பட 210 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்படாமல், பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் 54 பேர் விசாரணையின்போதே இறந்து விட்டனர்.

யார் யார் குற்றவாளி?

ஐஎப்எஸ் எனப்படும் இந்திய வனப் பணி அதிகாரிகள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், முத்தையன், நாதன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இன்னொரு ஐஎப்எஸ் அதிகாரியான சிங்காரவேலு ஏற்கனவே இறந்து விட்டார்.

என்னென்ன பிரிவுகளில் குற்றச்சாட்டு ?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஐபிசி 147, 149, 323, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் அத்தனை பேர் மீ்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதேபோல பலர் மீது பாலியல் பலாத்காரத்திற்காக 376வது பிரிவின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதேபோல ஆதாரங்களை மறைத்தது தொடர்பாக ஐஎப்எஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், தாக்கிக் காயப்படுத்தியது, சட்டவிரோதமாக அடைத்து வைத்தது ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .

இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.

வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.

ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.

விசாரிக்க மறுத்த போலீஸ்

இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.

இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு

இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிபிஐக்கு மாறிய வழக்கு

ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேரில் 29 வனத்துறையினர், 24 போலீசார், ஒரு வருவாய்த்துறை ஊழியர் உள்பட மொத்தம் 54 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அவசரம்.



நாட்டில் முன்கூட்டியே தேர்தலைக் கொண்டு வரச் செய்ய எதிர்க்கட்சிகள் மிகுந்த அவசரப்படுவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் யாருக்கும் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

5 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு மக்கள் அனுமதி வழங்கியுள்ளனர். எனவே இன்னும் 2 ஆண்டுகள் காத்திருங்கள் என்று, எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் அரசு பற்றிய சில பலவீனமான அம்சங்களை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தலை திணித்து விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்த அரசைக் கவிழ்க்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால், மக்கள் அனுமதி அளித்து உள்ளபடி, 5 ஆண்டுகளுக்கு இந்த அரசு நிச்சயம் நீடிக்கும்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஊடகங்கள்தான் அவ்வாறு நினைக்கிறது. அமைச்சரவையில் எப்போதும் திறந்த மனதுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அமைச்சர்களுக்குள் பல்வேறு எண்ணங்கள், கருத்துகள் இருக்கலாம். இதனால், எங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று அர்த்தமல்ல. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியாகி வருவது போல் (பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு) எதுவும் நடக்கவில்லை. ப.சிதம்பரம் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாடாளுமன்றத்தில் பல முக்கியமான மசோதாக்கள் விவாதிக்கப்படக் காத்திருக்கின்றன. ஆனால், தேவையற்ற பிரச்சனைகளை எழுப்பிக் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றம் செயல்படாமல் தடுக்கப்படுவதால் அந்த மசோதாக்கள் நிறைவேறாமல் முடக்கப்பட்டுள்ளன.

காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது, பென்சன் சீர்திருத்தம், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பொது கொள்முதல் கொள்கை மற்றும் லோக்பால் போன்ற முக்கிய பொருளாதார சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

ராணுவத் தலையீடு மூலம் இன்னொரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்னையைத் தீர்க்க முயல்வது ஆபத்தில் முடியும். லிபியாவில் ஆட்சி மாற்றத்தால் அங்கே அமைதி நிலவிவிடும் என்று நம்ப முடியவில்லை. உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடந்தால் அதன் விளைவுகள் லிபியாவை ஒரு சோமாலியா போல மாற்றிவிடக் கூடும் என்றார் மன்மோகன் சிங்.

ராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் காங்கிரஸ் தவிர்த்து இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை எழுப்பி வருவது குறித்துக் கேட்டதற்கு, அது குறித்து நான் கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் சட்டத்தின் மேலாண்மை நிலைநிறுத்தப்படும் என்பதை மட்டும் தான் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கேட்டதற்கு, இது தொடர்பாக தமிழகத்தில் எழுப்பப்படும் எதிர்ப்புகள் விரும்பத்தக்கதல்ல. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துகள் பற்றித் தெரிந்த பின்னும் அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கூடங்குளம் போன்ற அணு மின் நிலையங்களை அமைக்க முன் வருமா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டாமா?.

இந்தியாவிலேயே தமிழகம்தான் தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது. இந் நிலையில் தமிழகத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால் அணு மின் நிலையம் அமைப்பதைத் தவிர வேறு உடனடி மாற்று வழியேதும் இல்லை. சுற்றுச்சூழலை பாதிக்காமல், குறைந்த செலவிலும் எரிசக்தி வேண்டுமானால், நாம் அணு மின் சக்தியை பயன்படுத்தியே தீர வேண்டும் என்றார்.

இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம் : மன்மோகன்சிங்.



அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பியக் கூட்டமைப்பு போன்ற வல்லரசுகளின் பொருளாதாரப் பிரச்னைகளால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதற்கு உலக மயமாக்கல் தான் காரணம். உலகமயத்தால் பல நன்மைகள் ஏற்பட்டிருந்தாலும், ஆரம்ப கால நன்மைகளை அதன் பின் விளைவுகள் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

நான் சோஷலிஸ்டாக இருந்து, உலக மயமாக்கலின் ஆதரவாளனாக மாறி இருப்பவன் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறேன். அந்தந்த சூழ்நிலையில் நாட்டுக்கு எது நன்மை பயக்குமோ, அதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். உலக மயமாக்குதல் மூலமும், பொருளாதார சீர்திருத்தம் மூலமும் பல நன்மைகளை இந்தியா அடைந்திருக்கிறது. இதன் பயன் எல்லா தரப்பினரையும் போய்ச் சேர்ந்தாக வேண்டுமென்றால், சில மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.

விலைவாசி உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. சீனாவில் விலைவாசியால் மக்கள் நம்மைவிட மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உணவு தானியங்களின் விலைவாசி ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், காய்கறிகள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றின் விலை தான் மிக அதிகமாக உள்ளது. மக்களின் வருமானம் உயர்ந்திருப்பதும், அவர்கள் இதுபோன்ற ஆரோக்கியமான சத்துணவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் இதற்குக் காரணம்

நமது தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால்தான் இந்த விலைவாசி உயர்வே தவிர பணவீக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வாக இதைக் கருத முடியாது என்றார்.