Friday, September 16, 2011

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது - கர்நாடகா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கூடாது- கர்நாடகா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து, தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கு மீது கர்நாடக ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவது என்பது வழக்கை தாமதப்படுத்தும் செயல். மீண்டும் விசாரிக்க கோருவது என்பது நீதிக்கு எதிரானது. வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.‌ தமிழக அரசு வேறு எந்த உத்தரவையும் பிறப்பித்து வழக்கை தாமதப்படுத்தக்கூடாது என்று கூறினார்.

நரகத்திலும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள் : நாஞ்சில் சம்பத்.



மதிமுகவின் திறந்தவெளி மாநாடு இன்று 15.9.2011 நடந்தது. 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டிற்கு திரண்டிருந்தனர். இம்மாநாட்டில் கொள்கை பரப்புசெயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

அவர், ’’அச்சம் தீர்க்கிற ஆணிவேர். மிச்சம் இருக்கிற தமிழர்களின் கடைசி நம்பிக்கை. என் உடல் இயக்கும் நல்லுயிர் வைகோ நடத்துகின்ற மகாநாட்டில் புலி இல்லாமல் இருப்பதா? என்று நினைத்து இங்கே நிஜ புலியே வந்ததுமாதிரி சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள். பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

இதுதான் சுத்தமான மகாநாடு. சுயமான மகாநாடு. இது வரை நடந்த மகாநாட்டில் எல்லாம் ஏதோ ஒரு தோட்டத்திலிருந்து ஒருவரை அழைத்து வருவீர்கள். அங்கே அடிமை போல் இருப்போம்.

உங்கள் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் ( வைகோ) அம்மாவுடன் கூட்டணி வைத்தீர்கள். என் தகுதிக்கு சம்பந்தம் இல்லாமல் நான் அம்மா என்று சொன்னேன். என்னைப்பெற்ற அம்மா கூட நான் இப்படி பேசி வந்ததற்கு மனம் வருந்தினார்.

அந்த கட்சிக்கு நாங்கள் எப்படியெல்லாம் உழைத்தோம். சட்டமன்றத்திலே அந்த கட்சி எப்போது வெளிநடப்பு செய்தாலும் அவர்களின் கருத்துக்கு ஒத்துப்போய் வெளிநடப்பு செய்தோம். சட்டமன்ற அவை நேரத்திலே ஓ.பி.எஸ். ஒண்ணுக்குப் போவதற்காக எழுந்து சென்றால் கூட, வெளிநடப்பு செய்கிறார் என்று எழுந்து சென்றோம். அப்படியெல்லாம் உழைத்த எங்களுக்கு மதிப்பு இல்லை.

நரகத்திற்கு போனால் கூட வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவனையெல்லாம் காட்டி, அந்த ஆணழகனைக்காட்டி எங்களை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்தார்கள். அதனால் ஒதுங்கிக்கொண்டோம்.

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்; துளை செல்லும் காற்று இசையாதல் அதிசயம் என்று அண்ணன் வைரமுத்து எழுதினார். எங்கள் கட்சியும் அதிசயம்தான். சட்டமன்ற தேர்தலிலே போட்டியிடாமல் ஒரு கட்சி நடைபோடுகிறது. அந்த அதிசயக்கட்சி எங்கள் கட்சி.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றார்கள். எங்கள் பிள்ளைகளை இரண்டு மாதங்களாக படிக்கவிடவில்லையே. சமச்சீர் கல்வியில் அப்படி என்ன கோபம்? சரி, திருவள்ளுவர் மீது அப்படி என்ன கோபம். அதை மறைக்கிறீர்கள். அதுவும் பச்சை ஸ்டிக்கரை வைத்து.

முக்கிய தலைவர்களின் படங்களையெல்லாம் கிழித்து எறிந்தீர்கள். இதுதான் படிச்சிக்கிழிப்பதா? கலைஞர் கொண்டுவந்ததையெல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்றால் கலைஞர் நடத்தி வைத்தை கல்யாணங்களையெல்லாம் ரத்து செய்துவிடச்சொல்லுவீர்களா?

திமுகவில் இப்போது யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் கட்சி மகிழ்ச்சி திமுக.

2016 எங்களது இலக்கு ; அப்போது முடிப்போம் பலரது கணக்கு’’ என்று பேசினார்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை செயல்படுத்தக்கோரிய அனைவரும் கைது...



சேலத்தின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்படாடமல் இருப்பதை கண்டித்தும், உடனடியாக மருத்துவர்களை நியமித்தும் செயல்படுத்தக்கோரியும், சேலம் கந்தம்பட்டி பைபாஸில் இருந்து ஊர்வலமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் முத்துக்கண்ணன் தலைமையில் 30 பேர் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்களை பள்ளப்பட்டி போலீசார் ஊர்வலமாக செல்ல விடாமல் தடுத்ததை தொடர்ந்து சாலை மறியலில் இறங்கினார்கள். அவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு பகுதியான பள்ளப்பட்டி 3 சாலை பகுதியில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இன்னொரு பிரிவினர் சாலை மறியலில் இறங்கி போக்குவரத்தை தடை செய்தனர்.

அந்த இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சந்தோஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.



சேலத்தில் 6 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டனர்.

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த திமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் மக்களின் முழுபயன்பாட்டிற்கு அந்த மருத்துவமனை வரவில்லை. அந்த மருத்துவமனையை முழு பயன்பட்டிற்கு கொண்டு வரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு அளித்தனர்.

ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காலையில் சேலம் ஜங்ஷன், கந்தம்பட்டி பைபாஸ், மூன்று ரோடு, சன்னியாசி குண்டு உட்பட 6 இடங்களில் நடைபயணம் நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனால் மூன்று ரோடு பகுதியில் நடைபயணத்திற்கு பதிலாக திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வெளியூரில் இருந்து சேலம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் வர முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை மறியலைக் கைவிடக் கோரியும் யாரும் கலைந்து போகவில்லை. இதைத் தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் கைது செய்யப் போவதாக பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் கூறியும் யாரும் கலையாமல் நின்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

10 பேரை பிடித்து வேனில் ஏற்றினர். தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. கைது செய்யும் போது தொண்டர்கள் கடித்ததில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கோபி மற்றும் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் நடந்த நடைபயணத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜங்ஷன் அருகே 38 பேர் உட்பட 6 இடங்களில் நடந்த ஆர்ப்பட்டத்தில் மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேயர் பதவி - ஜெயலலிதா அதிரடி : விஜய்காந்த் கடும் அதிர்ச்சி !



தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

அதே போல அதிமுகவுக்கே குளிர் ஜுரம் வரும் அளவுக்கு ஆட்சியைப் பாராட்டி குவித்து வரும் இடதுசாரிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.

தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக.

ஆனால், எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல் அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில் ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக.

அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

அதே போல மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒரு மேயர் பதவி கூட கிடையாது என்றும் சொல்லப்பட்டுவிட்டது.

இதனால் இந்தக் கட்சிகளும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

குழந்தைகளை பாதிக்கும் மூளை செயல்திறன் குறைபாடு...



மனிதர்களின் தலைமைச்செயலகம் என்று அழைக்கப்படும் மூளையானது சரியான வளர்ச்சியுடன் இல்லை என்றால் பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கால்கள் விரைப்பாக, ஒன்றுக்கொன்று பிணைந்து இருக்கும். தலை சாய்ந்து, வாயிலிருந்து உமிழ்நீர் வழிந்தபடி இருக்கும். கால் தசை பலவீனமாகி, சரியாக நடக்க முடியாமல், செயல் ஒருங்கிணைப்பு இல்லாமல், பேச்சு, விழுங்குவது, மூச்சு விடுவது ஆகியவற்றில் குறைபாட்டுடன் இருப்பர். இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர்.

தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மூளை வளர்ச்சி குறைவதற்கு, முன்பெல்லாம் மகப்பேறு மருத்துவர்கள் மீது பழி போடப்பட்டது. இப்போது மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆயிரத்தில் இருவர்

பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தில் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும். தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தைக்கு மஞ்சள் காமாலை உருவாகும் போது அதை கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும்.

ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும். பார்வைக் குறைபாடு, காதுகேளா நிலையும் இவர்களிடையே காணப்படும்.

அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம்.

மத்திய நரம்பு மண்டல பாதிப்பு

மூளை செயல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மூளை நரம்பியல் நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

இக் குறைபாட்டினால் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல. குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம்.

மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம்; கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம். குழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம்.

விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும்.

இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். நாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்காது; சொல்லின் வடிவம் மாறும்.

மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். பார்வைத் திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும். மயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்து பார்க்க வேண்டும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்கின்றனர் மூளை நரம்பியல் வல்லுநர்கள்

அறிவில் சிறந்தவர்கள்

மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை என்கின்றனர் மருத்துவர்கள்

உடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றை பராமரிக்கவும், மூச்சு திணறல், நுரையீரல் பிரச்னை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.

மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பும்தான் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

Monday, September 12, 2011

யோகமுத்ரா, பார்சுவ பத்மாசனம், மச்சாசனம்.

யோகமுத்ரா.
யோகமுத்ரா
செய்முறை:

முதலில் பத்மாசனநிலையில் அமரவும். இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு போங்கள். உங்களின் வலது கை, இடது மணிக்கட்டை பிடித்திருக்கட்டும். தலையை முன்னோக்கி குனிந்து, நெற்றியால் தரையை தொடுங்கள். அப்போது இயல்பான சுவாசம், உடம்பில் இருக்கட்டும்.

பயன்கள்:

மலச்சிக்கல், பெருந்தொந்தி, சிறுநீரக கோளாறு, கர்ப்பப்பை கோளாறு, ஹிரண்யா, விரை வீக்கம், மாதவிடாய் பிரச்சினை ஏற்படாது.


பார்சுவ பத்மாசனம்.
பார்சுவ பத்மாசனம்

செய்முறை:

முதலாவதாக பத்மாசனநிலையில் அமரவும். இடுப்பை பக்கவாட்டில் திருப்பி, வலப்பக்கத்தில் குனிந்து, முகத்தால், தரையை தொடுங்கள். இதுபோல் இடப்பக்கமும் பக்கம் மாற்றி செய்யுங்கள். இடுப்புக்கு மேல் உடலை சரியாக பக்கவாட்டில் திருப்பி நெஞ்சால் தரையை தொடுவது, பார்சுவ யோகமுத்ரா. இதேபோல காலை மாற்றி இடப்பக்கமும் செய்யலாம்.

பயன்கள்:

உடம்பில் பக்கவாட்டு சதைகள் குறையும். வாயு தொல்லை இராது. தொப்பையும் குறைந்துவிடும். குண்டாக இருக்கும் மாணவ- மாணவியர்களையும், அழகாக மெலியவைக்கும் ஆசனமிது!


மச்சாசனம்.
மச்சாசனம்

செய்முறை:

முதலாவதாக, படத்தில் உள்ளபடி பத்மாசனநிலையில் அமரவும். இரு கைகளையும் பின்னால் ஊன்றி இயல்பான சுவாசத்தில், மெதுவாக அப்படியே படுங்கள். உங்களின் உச்சந்தலை, தரையில் இருக்கட்டும். முதுகுண்டு வில் போல, மேல்நோக்கி வளைந்திருக்க வேண்டும்.

முழங்கால்கள் தரையில் படிந்திருப்பதை உறுதிசெய்யவும். இரண்டு கைகளாலும் அந்தந்த பக்கத்து கால் பெருவிரலை பிடித்து இழுங்கள். இந்த நிலையில் இயல்பான சுவாசத்தில், 15 விநாடிகள் இருக்கவும். அடுத்தபடியாக, இது போல் பக்கம் மாற்றி செய்யுங்கள்.

பயன்கள்:

உடலில் ஞான இந்திரியங்களான கண், காது, மூக்கு, செவி, நாக்கு ஆகிய உறுப்புகளின் இயக்கம் சீராகும். தலை நோய்கள் வராது. கண்பார்வை ஒளிபெறும். தைராய்டு பிரச்சினை நீங்கும். ஆஸ்துமா, ஈஸ்னோ-பீலியா, மூச்சு சம்பந்தமான நோய்கள் தீரும். காது அடைப்பு சீராகும்.

விண்வெளியில் அதிகரிக்கும் செயற்கை கோள்களின் கழிவுகள் .



பூமியில் இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன.

இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண் வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன.

மேலும் அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன.

இதனால் பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது.

இது பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் டொனால்டு கெஸ்லர் என்பவர் கூறும் போது, கடந்த 2007ல் சீனா அனுப்பிய ராக்கெட் ஒன்று வானிலை செயற்கைக்கோள் ஒன்றை மோதி அழித்தது. இதனால் 1 செ.மீ. அளவுக்கு அதிகமான சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் துண்டுகள் உருவாகின.

அதே போல் 2009ல் இரு செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சுழலும் போது ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இந்த இரு நிகழ்வுகளாலும் பூமியை சுற்றி கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு விண்வெளி கழிவுகள் அதிகமாக தேங்கியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.