Friday, August 19, 2011

புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் : ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு.


புதிய தலைமை செயலக கட்டிடம் அரசு மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஜெயலலைதா அறிவித்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக இந்த மருத்துவமனை அமையும் என்றும் அவர் அறிவித்தார்.

’A’பிளாக்கில் பல்வேறு உயர்சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்படும் என்றும்,

‘B’பிளாகில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் அறிவித்தார்.

இது குறித்து சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் அவர் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்; உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்; உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு சிகிச்சை மையம், மக்கள் வீட்டிற்கே சென்று சுகாதார வசதிகள் அளிக்கக் கூடிய நடமாடும் மருத்துவமனை என்னும் புதிய திட்டம் உட்பட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் எனது தலைமையிலான அரசின், 2011-2012 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதை இந்த உறுப்பினர்கள் அறிவீர்கள்.

இவை மட்டும் அல்லாமல், அனைவருக்கும் மருத்துவ சேவையை நல்கும் வகையில், முதல்வரின் விரிவான பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ வசதிகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இவற்றுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவமனை, சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும். இந்தக் கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தற்போது உள்ள 36 துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதல்ல என்பதாலும்; பயன்படுத்தக் கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும்; இரு வேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும்; சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருவதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையை அமைக்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டடத்தில் பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டு, உயர் தர மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கப்பட்டு, இந்த மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மருத்துவமனை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் வீணடிக்கப்படக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரி வந்த நிலையில் அந்த கட்டடத்தை பிரமாண்ட மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப்படு்ம் என்று முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் 4வது அரசு மருத்துவக் கல்லூரி

இங்கு அமையும் அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை நகரில் அமையும் 4வது அரசு மருத்துவக் கல்லூரியாக இருக்கும். ஏற்கனவே சென்னை மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பல் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ஒரு மருத்துவக் கல்லூரியை சென்னை பெறவுள்ளது.

ராஜபக்சே நீண்ட நாள் வாழ, ஈழப்பெண்களின் மார்புகளை அறுத்து யாக குண்டலத்தில் வீசும் கொடூரம்.



இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ’’இலங்கையின் கிழக்கு மாவட்டங்களில் சிறிலங்க இராணுவத்தினரும், காவல் துறையினரும் தமிழ்ப் பெண்களை முகாம்களுக்குக் கடத்திச் சென்று அவர்களின் மார்பகங்களை அறுத்துவிட்டு, பிறகு கொன்றுவிடுவதாக அங்குள்ள தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு அச்சத்துடன் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் உள்ள கல்லடி, காந்திபுரம், ஊரணி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இப்படி பெண்கள் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்படுகின்றனர் என்றும், இரவு நேரங்களில் வீட்டிற்குள் புகுந்து இவ்வாறு பிடித்துச் செல்வது கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது என்றும் கூறும் தமிழர்கள், அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் ஒருவரும் வீடு திரும்பவில்லையென்றும் கூறுகின்றனர்.

பிடித்துச் செல்லப்படும் பெண்களின் மார்பகங்கள் அறுக்கப்பட்டு, அவைகள் ஒரு யாகசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கு யாக குண்டத்தில் வீசப்படுகிறது என்றும், இந்த யாகம் இலங்கை அதிபர் ராஜபக்சே நீண்ட காலம் வாழ மேற்கொள்ளப்படுவதாகவும் தங்களுக்கு தெரியவந்துள்ளதென அம்மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் கூறினால் அதனை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றில், பல இடங்களில் கிரீஸ் தடவிய மனிதர்களை ஏவிவிட்டு பெண்களை மீது பாலியல் வன்முறை தொடுக்கப்பட்ட சம்பவங்களினால் அங்கு காவல் துறையினருக்கு எதிராக தமிழர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திறகு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. கிரீஸ் மனிதன் அச்சுறுத்தலினால், இரவில் பெண்கள் எவரும் தங்கள் இல்லங்களில் தூங்காமல், ஒரு இடத்தில் எல்லோரும் கூடி ஒன்றாகவே துயில் கொண்டு வருகின்றனர். இச்செய்தியை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே என்னிடம் பேசி உறுதி செய்துள்ளார்.

தமிழர்கள் மீது நேரடியாக போர் தொடுத்து பல இலட்சக்கணக்கானவர்களை அழித்தொழித்த சிறிலங்க அரசு, இப்போது தமிழினத்தை அழிக்க இப்படிப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்று ஈழத் தமிழர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறும் நிகழ்வுகளை கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. தமிழர்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டு, வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இது பாரிய மனித உரிமைப் பிரச்சனையாகும். இலங்கையில் அரச படைகளே இப்படிப்பட்ட வன்முறையின் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன. எவ்வித பாதுகாப்பும் இன்று தமிழர்கள் வாழ்வு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலிற்குள்ளாகியுள்ளது.

“இலங்கையிலுள்ள தமிழர்கள் எங்கள் நாட்டு மக்கள், அவர்கள் பற்றி தமிழ்நாட்டின் முதல்வர் பேசத் தேவையில்லை” என்று கூறும் கோத்தபய ராஜபக்சே கும்பல் நடத்தும் ஆட்சியின் யோக்கியதைக்கு இது ஒரு அத்தாட்சியாகும். கோத்தபய ராஜபக்சதான் சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம்தான் தமிழர்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மறைமுக வன்முறைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஈழத் தமிழர்கள் மீது ஈடிணையற்ற அன்பும், அக்கறையும் காட்டிவரும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், இப்பிரச்சனையிலும் கவனம் செலுத்தி, ஐ.நா.விற்கும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கூறி தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சனையை மனித உரிமை அமைப்புக்களிடம் தமிழக முதல்வர் நேரிடையாகவே கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Thursday, August 18, 2011

விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா..



விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம்.

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும்.

இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.

பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது.

இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில்,

விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.

26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தம்... விலைவாசி உயரும் அபாயம் !



தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்றுமுதல் 26 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் தாறுமாறாக உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதைத் தொடர்ந்து லாரி அதிபர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் இன்சூரன்ஸ் கட்டணம், உதிரிபாகங்கள் மீதான விலை உயர்வினை குறைக்க வேண்டும், தனியார் மூலம் சுங்கவரி வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும், சரக்கு இல்லாமல் காலியாக செல்லும் வாகனங்களுக்கு 25 சதவீத சுங்கவரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தென் இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்தது.

இது தொடர்பாக டெல்லியில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. ஆகவே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தென் இந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.

இதையொட்டி தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தாழ 26 லட்சம் லாரிகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு லாரி தொழிலை சார்ந்த பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சங்கம் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த 14-ந் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு சரக்கு பதிவு செய்வதை நிறுத்தி கொண்டன.

எனவே வெளிமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் ஜவுளி, தீப்பெட்டி, தேங்காய், பட்டாசு உள்ளிட்ட கோடிக்கணக்கான மதிப்புள்ள சரக்குகள் தேங்கி உள்ளன.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலங்களில் 26 லட்சம் லாரிகள் ஓடாது. இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாயும், 6 மாநில அரசுகளுக்கும் சேர்த்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.

டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கமும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முதல் நாமக்கல் தாலுகா அளவில் 8 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், தமிழக அளவில் 30 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும், 6 மாநிலங்களிலும் சேர்த்து 70 ஆயிரம் டிரெய்லர் லாரிகளும் ஓடாது என நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கீழ் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் 4100 கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் நிறுவனங்களுக்கு சமையல் எரிவாயுவை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி இன்று நள்ளிரவு முதல் பாதுகாப்பு கருதி கேஸ் டேங்கர் லாரிகளையும் நிறுத்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

எனவே இன்று தொடங்கும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸில் ஐடி ரெய்டு : 50 அதிகாரிகள் சோதனை.



சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தி. நகர் மற்றும் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான 6 கடைகளில் இன்று காலை 8 மணி முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 50 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இந்த திடீர் சோதனையால் கடைகள் மூடப்பட்டு, விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான் ஊழல் செய்யவில்லை என நீதிபதி செளமித்ரா சென் ராஜ்யசபாவில் வாதம்..



ராஜ்யசபா இன்று புதிய வரலாறு படைத்தது. முதல் முறையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் ராஜ்யசபாவில் தொடங்கின. விசாரணைக்குட்படுத்தப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் நேரில் ஆஜராகி அவர் சார்பி்ல் அவரே தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

நான் ஊழல் செய்யவில்லை. இதுதொடர்பாக ராஜ்யசபாவுக்கு அளிக்கப்பட்ட தகவல்கள் தவறானவை என்று அவர் வாதிட்டார்.

தவறான நடத்தை காரணமாக ஒரு நீதிபதி மீது பதவி நீக்க தீர்மானம் ராஜ்யசபாவில் வாதத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். இன்று பிற்பகலுக்கு மேல் செளமித்ரா சென்னை பதவி நீக்கும் தீர்மானம் மீதான வாதம் தொடங்கியது. இதற்காக ராஜ்யசபா அரங்கம் கோர்ட் போல மாறியது.

முன்னதாக செளமித்ரா சென்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரி ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரிக்குக் கோரிக்கை வந்தது. இதையடுத்து அவர் ஒரு சிறப்பு விசாரணைக் கமிட்டியை அமைத்தார். அந்தக் கமிட்டி, நீதிபதி சென் மீதான நிதி முறைகேடு புகார் உண்மையானது என்று கண்டுபிடித்தது. 90களில் வக்கீலாக இருந்தபோது அவர் கிட்டத்தட்ட ரூ. 24 லட்சம் அளவுக்கு முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க ராஜ்யசபா உத்தரவிட்டது. அதன்படி இன்று ராஜ்யசபாவில் ஆஜரானார் சென். ராஜ்யசபாவில் அமைக்கப்பட்டிருந்த கூண்டில் ஏறி அமர்ந்தபடி விசாரணையில் பங்கேற்றார் சென். அவருக்குப் பின்னால் அவரது வக்கீல்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து பதவி நீக்க தீர்மானத்தை சிபிஎம் உறுப்பினர் சீதாராம் எச்சூரி அவையில் கொண்டு வந்தார். இதையடுத்து தனது தரப்பு வாதத்தை 90 நிமிடங்களுக்குள் தரலாம் என சென்னுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது வக்கீல்களுக்குப் பதில் தானே வாதாடினார் சென்.

அவர் கூறுகையில், என் மீதான ஊழல் புகார்கள் தவறானவை, உண்மைக்குப் புறம்பானவை. நான் எந்த ஊழலையும் செய்யவில்லை. சட்டப்படியும் சரி, மனசாட்சிப்படியும் சரி நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

எனக்கும், ராஜ்யசபாவுக்கும் இந்த புகார்கள் தொடர்பாக தரப்பட்டுள்ளவை தவறான தகவல்களாகும் என்று வாதிட்டார்.

வாதத்திற்குப் பின்னர் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்படும். அதில் தீர்மானம் நிறைவேறினால் ஒரு வாரத்திற்குள் லோக்சபாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கும் அது நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் நீதிபதி செளமித்ரா சென்னை பதவியிலிருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிடுவார்.

இந்திய அரசியல் சாசன சட்டப்படி,ஒரு உயர்நீமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி மீது ஊழல் புகார் வந்தால், அவரை உடனடியாக பதவி நீக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றி அதன் பின்னர்தான் குடியரசுத் தலைவர் டிஸ்மிஸ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, உச்சநீதின்ற நீதிபதி வி.ராமசாமி மீது லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1993ம் ஆண்டு இது நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சி ஓட்டெடுப்பிலில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இதனால் தீர்மானம் தோற்று, ராமசாமி தப்பினார். ராமசாமி சார்பில் அவரது வக்கீலாக கபில் சிபல் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது..

எனவே தற்போது நீதிபதி சென்னின் பதவி தப்புவதும், தப்பாமல் போவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இருஅவைகளிலும் தீர்மானம் வெற்றி பெற்றால், இந்தியாவிலேயே நாடாளுமன்றத்தின் மூலம் பதவி நீக்கப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயர் செளமித்ரா சென்னுக்குக் கிடைக்கும்.

Wednesday, August 17, 2011

ஏக அர்த்த ஹலாசனம், பத்ம சுப்த வச்சிராசனம், உத்தித பாதாங்குஸ்த ஆசனம்.

ஏக அர்த்த ஹலாசனம்.
ஏக அர்த்த ஹலாசனம்

செய்முறை:

ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் ஏக அர்த்த ஹலாசனமே செய்ய இயலாது. அவர்கள் காலை கையால் பிடித்தபடி செய்யலாம். நன்கு பழகிய பிறகு கை பிடிக்காமம் செய்யலாம். முதலில் இடது காலை மூச்சை இழுத்துக் கொண்டே தூங்கவும்.

காலை நேரே நிமிர்த்தவும். பின் மூச்சை வெளியே விட்டு 10 விநாடிகள் இருந்து மூச்சை இழுத்துக் கொண்டே கீழே காலை போடவும். பின் வலது பக்கம் செய்யவும். இது போல் மாற்றி மாற்றி 4 முறைகள் செய்யவும்.

பலன்கள்:

வயிறு, மார்பு, கழுத்து, தொண்டைகள் பலம் பெறும். தொடையில் உள்ள வீண் சதைகள் அகலும். வயிறு சம்பந்தமான நோய்கள் வராது. இதயப் பலவீனம் அகலும்.


பத்ம சுப்த வச்சிராசனம்.
பத்ம சுப்த வச்சிராசனம்

செய்முறை:

மெல்ல வலதுகையை ஊன்றி பின்னர் இடது கையை ஊன்றவும். அப்படியே மல்லாந்து சமமாக முதுகை தரையில் படுமாறு படுத்த பின்னர் இருக்கைகளையும் காது பின்னால் கொண்டு வந்து தலையினை மெல்ல தூக்கி பின்னால் வளைத்தபின் இரு கைகளையும் கீழே கொண்டு போய் கால்களை பிடிக்கவும். மூச்சை நிறுத்தாமல் சாதாரணமாய் சுவாசிக்கவும்.

பலன்கள்:

தொடைகள், கணுக்கால், இடுப்பு நோய்கள் அகலும். ஹெர்னியா, வாயு அண்டம், நீர் அண்டம் முதலிய நோய்கள் அகலும். இதயம் பலப்படும்.


உத்தித பாதாங்குஸ்த ஆசனம்.
உத்தித பாதாங்குஸ்த ஆசனம்

செய்முறை:

நேராக நின்ற நிலையில் வலதுகாலை மட்டும் இடுப்பு மட்டத்துக்கு தூக்கி, வலது பெருவிரலை, வலதுகையால் பிடியுங்கள். குனிய கூடாது. அடுத்த படியாக வலதுகாலை முன்னோக்கி நீட்டி , வலது கையால் கட்டைவிரலைப் பிடிக்கவும். சுவாசத்தை இயல்பாக்கிக் கொண்டு, அதே நிலையில் 10 விநாடிகள் இருங்கள். ஆசனத்தை கலைத்த் பிறகு, இடது காலை மாற்றி செய்யவும்.

பயன்கள்:

குழந்தைகளுக்கான ஆசனமிது. குறிப்பிட்ட நோய் என்றில்லாமல் பொதுவான ஆரோக்கியத்துக்கு செய்து பழகலாம்.