Saturday, August 13, 2011

நிலம் அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 சிறப்பு கோர்ட்டுகள் ; தமிழக அரசு ஏற்பாடு.

நிலம் அபகரிப்பு வழக்குகளை  விசாரிக்க    தமிழ்நாடு முழுவதும்   25 சிறப்பு கோர்ட்டுகள்;    தமிழக அரசு ஏற்பாடு

தமிழ்நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்கள் நிலத்தை அரசியல் வாதிகள் அபகரித்துக் கொண்டதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்போம் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து நிலத்தை பறி கொடுத்தவர்கள் போலீஸ் நிலையங்களுக்கு துணிச்சலாக வந்து புகார் கொடுத்தனர்.

இந்த புகார்களை பெறுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 36 இடங்களில் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த பிரிவுகளில் இதுவரை 2400-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் மனுக்களின் மீது தனிப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுவரை பெறப்பட்டுள்ள 2400-க்கும் மேற்பட்ட நில அபகரிப்பு புகார்களில் உரிய ஆவணங்களுடன் தரப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதோடு வழக்குகளும் பதிவு செய்யப்படுகிறது. குற்றச்சாட்டு பதிவாகும் பகுதியில் உள்ள கோர்ட்டுகளில் இந்த வழக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் வழக்கமான கோர்ட்டுகளில் நில அபகரிப்பு வழக்கு விசாரணையையும் நடத்தினால் மிகவும் கால தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நில அபகரிப்பு வழக்கு விசாரணைகள் நடத்த சிறப்பு கோர்ட்டுக்கள் ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, நில அபகரிப்பு வழக்குகளை மட்டும் விசாரிக்க பிரத்யேகமாக 25 சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படும் என்று ஐகோர்ட்டு ஒப்புதலுடன் அறிவித்தது.

சிறப்பு கோர்ட்டுகள் உருவாக்க தமிழக அரசு ரூ.5.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2 சிறப்பு கோர்ட்டுக்கள் செயல்படும். மற்ற 23 கோர்ட்டுக்கள் மற்ற மாவட்ட தலைநகரங்களில் இயங்கும். வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் சிறப்பு கோர்ட்டுக்கள் அமைக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களில் பதிவாகும் நிலஅபகரிப்பு புகார் விசாரணை பக்கத்து மாவட்ட சிறப்பு நீதிமன்றங்களில் சேர்த்து நடத்தப்படும். இந்த சிறப்பு கோர்ட்டுகள் ஒவ்வொன்றும் ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு தலைமையில் செயல்படும். 7 அதிகாரிகள் ஒவ்வொரு கோர்ட்டு பணியையும் மேற்கொள்வார்கள்.

ஓராண்டுக்கு இவர்களை தமிழக அரசு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளது. சிறப்பு கோர்ட்டுகளுக்கு எதிர்கால தேவைக்கு ஏற்ப ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த கோர்ட்டுக்களை விரைவாக அமைத்து பணிகளை தொடங்க ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பு கோர்ட்டுகளுக்கு தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகி யோரும் கலெக்டர்களிடம் பேசி சிறப்பு கோர்ட்டுக்களை உருவாக்க ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே நிலத்தை பறி கொடுத்தவர்களுக்கு கோர்ட்டு நடவடிக்கை மூலம் அவர்களது நிலம் விரைவில் திரும்ப கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மம்மூட்டி, மோகன்லால் ரூ.30கோடிக்கு வரி ஏய்ப்பு !



நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30கோடி கணக்கில் காட்டப்படாத சொத்துகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு சொந்தமாக சென்னை, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 2 வாரத்துக்கு முன் ஓரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இருவரின் தொழில் பங்குதாரர்கள் சிலரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. 4 நாட்கள் நடந்த இந்த சோதனையில் மம்மூட்டியும், மோகன்லாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்து இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. ஆனால் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தனர்.

வழக்கமாக வருமான வரித்துறை சோதனை நடந்தால் ஒரு சில நாட்களில் சோதனை குறித்த விபரங்கள் வெளியிடப்படும். ஆனால் மம்மூட்டி, மோகன்லால் வீடுகள், அலுவலகங்களில் நடந்த சோதனையின் விபரங்கள் 3 வாரங்களாக வெளியிடப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கொச்சி வருமான வரித்துறை இயக்குனர் லூக்கோஸ் நேற்று வேளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இதுவரை நடந்த சோதனையில் மம்மூட்டி, மோகன்லால் அதிகமாக வைத்திருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவருக்கும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல வங்கிகளில் கணக்குகள் உள்ளன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மோகன்லாலின் வீட்டில் கண்டிபிடிக்கப்பட்ட ஓவியங்கள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றின் மதிப்பு கண்டறிய தனிகுழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பழங்கால பொருட்களின் மதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, August 12, 2011

போலீசார் கைது செய்தால் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்..



‘உண்ணாவிரதத்தின் போதோ அல்லது அதற்கு முன்போ என்னை கைது செய்தால், அதன் பிறகு தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்’ என்று அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், நீதிபதிகளை கொண்டு வர வலியுறுத்தி, டெல்லியில் வரும் 16ம் தேதி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்க உள்ளார்.

இதற்கு முதலில் அனுமதி மறுத்த டெல்லி போலீசார், பெரோஸ்ஷா கோட்லாவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளது. இதற்கு ஹசாரே திருப்தி தெரிவித்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி, டெல்லியில் சிவில் சொசைட்டி நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். பின்னர், இதன் நிர்வாகிகளில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதா பலமாக இல்லை. இதை திரும்பப் பெற்று, வலிமையான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டப்படி 16ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் துவங்கும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை, எந்த சமாதானத்தையும் ஏற்க மாட்டோம்.

உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்போ அல்லது உண்ணாவிரதத்தின் போதோ போலீசார் கைது செய்தாலோ, கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க முயன்றாலோ, அதன் பிறகு தண்ணீரை கூட குடிக்க மாட்டேன் என்று ஹசாரே எச்சரித்துள்ளார். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

‘இரவு 8 முதல் 9 வரை விளக்கை அணையுங்கள்’

கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், ‘ஊழலுக்கு எதிராக 16ம் தேதி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்கும்படி சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஹசாரே அழைப்பு விடுப்பார். மேலும், ஊழலை ஒழிக்க வலியுறுத்தும் விதமாக வரும் 15ம் தேதி இரவு 8 மணி முதல் 9 மணி வரை மக்கள் விளக்கை அணைக்க வேண்டும். ஊழல், வறுமை, கல்வியறிவு இல்லாமை போன்ற விஷயங்களில் நமது சுதந்திரம் இன்னும் முழுமை பெறவில்லை. எனவே, ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகவே, விளக்கை அணைக்கும்படி வேண்டுகோள் விடுக்கிறோம்’ என்றார்.

தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது - ஜெ. ஆவேசம்.



தமிழகத்தை வாழ விடுவதில்லை, அதை அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை தகர்த்து தமிழக மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில்,

வால்பாறையில் இரவில் யானைகள் பயம் உள்ளது. தீப்பந்தங்களை காட்டினால் யானைகள் ஓடிவிடும். இதற்காக அங்குள்ள மக்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு என்ன காரணத்தினாலோ கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ நமக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்றார்.

பின்னர் தொடர்ந்து பேசிய ஆறுமுகம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதன் மூலம் மத்திய அரசு தடையாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வருகிறோம். மக்கள் தான் வருவதில்லை என்றார். மக்கள் வருவதில்லை என்று அவர் கூறியதைக் கேட்டு உறுப்பினர்கள் வாய் விட்டுச் சிரித்தனர்.

பின்னர் பேசிய சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி, உறுப்பினர் ஆறுமுகம் சொல்வது தவறு. இடதுசாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை திரட்டி போராடி வந்ததால்தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. எனவே மக்கள் வரவில்லை என்று கூற வேண்டாம் என்றார்.

மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த ஆறுமுகம், நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வரவில்லை என்று தான் கூறினேன். ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணம் உச்சபட்ச இமாலய ஊழலும், முறைகேடுகளும்தான் என்றார்.

இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மக்களின் உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து நாங்களும் போராடுகிறோம். நீங்களும் வாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிவித்தார்.

இதைடுத்துப் பேசிய ஆறுமுகம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இடதுசாரிகளுடன் முதல்வர் சேர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

பின்னர் பேசிய சிபிஎம் தலைவர் செளந்தரராஜன், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாரபட்சத்துடன் நடத்துகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வருவது மட்டுமல்ல, நமது தேவைக்கு வெளியில் வாங்க விரும்பினாலும் அதற்கு அனுமதி வழங்குவதில்லை.

மண்ணெண்ணெய் மட்டுமல்ல தமிழகத்துக்கு தேவையான டி.ஏ.பி. உரத்தையும் போதுமான அளவுக்கு வழங்க வில்லை. பிரதமரிடம் வலியுறுத்தியும் கூட மத்திய அரசு இந்த வகை உரத்தை குறைத்துதான் வழங்குகிறது.

நான் பலமுறை தெரிவித்து விட்டேன். மாநில அரசின் நிதி ஆதாரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதை வைத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். மத்திய அரசும் போதிய நிதி வழங்கவில்லை. நிதி பிரச்சனை மட்டுமல்ல மாநில அரசின் பல்வேறு அதிகாரங்களை வருவாய்களை அத்தனைஇனங்களிலும் மத்திய அரசு பறித்துவிட்டது. தற்போது மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய ஒரே இனம் வாட் வரி விதிப்பு தான்.

இதை வைத்துக்கொண்டு இத்தனை திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதை விட கூடுதலாக செய்ய வேண்டும் என்ற மனமும் ஆசையும் எங்களுக்கு உண்டு. நீங்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உண்டு. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக எங்கள் கைகள் கட்டுப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டை தகர்த்து பகீரத முயற்சி செய்து தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்வோம்.

மத்திய அரசு எத்தனை தடைகளை விதித்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்து தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம்.

தமிழ்நாட்டை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை சொல்வதற்கு நான் வேதனைப்படுகிறேன். ஆனால் அதுதான் உண்மை. தமிழகம் வாழக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. அப்படித்தான் அது செயல்படுகிறது.

எனவே ஜனநாயகத்துக்குட்பட்டு தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்தே தீருவோம் என்றார். இதைக் கேட்டதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின்

உறுப்பினர்கள் மேசைகளைப் பலமாக தட்டி முதல்வரின் பேச்சை வரவேற்றனர்.

அடுத்தடுத்து மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

நேற்றுதான் சட்டசபையில் கோத்தபயாவின் பேச்சைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக பேசினார். அப்போது மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதால்தான் கோத்தபயா போன்றவர்கள் தமிழகத்தை இழித்துப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வாழ விடக் கூடாது என்று செயல்பட்டு வருவதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செப்.11 தாக்குதலுக்கு 8 மாதங்களுக்கு முன், வெளியான ரகசியம் !



அமெரிக்காவைக் கதிகலங்க வைத்த செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடைபெறுவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே, அதுபற்றிய உளவுத் தகவல் கிடைத்த விஷயம் வெளியாகி, மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்த உளவுத் தகவல் பிரென்ச் உளவுத்துறை DGSEயிடமிருந்து கிடைத்திருந்தது.

இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பு ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றது, பிரான்சில் இருந்து வெளியாகும் Le Monde பத்திரிகை.

பிரான்சின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த ரகசியத்தைத் தமக்குத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது அப் பத்திரிகை. அந்த அதிகாரி மூலம் பிரென்ச் உளவுத் துறையின் அதி ரகசிய பைல் ஒன்றையும் பெற்றிருக்கிறது Le Monde.

பிரென்ச் உளவுத்துறையில் அதி ரகசிய பைலில் 328 பக்கங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பைலில் உள்ள குறிப்புகள்தான், பத்திரிகை வெளியிட்டுள்ள தகவல்களின் ஆதாரம்.

இதில் ஒரு குறிப்பு, ஜனவரி 5ம் தேதி 2001ம் ஆண்டு தேதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அதன் தலைப்பு – “அல்-கய்தா இயக்கம், அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தல் ஒன்றைத் திட்டமிடுகிறது”

குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள சில விபரங்கள் துல்லியமானவை.

உதாரணமாக, அமெரிக்காவுக்கு எதிரான விமானக் கடத்தலுக்கு, அமெரிக்க விமான நிறுவனங்களில் விமானங்களை கடத்துவதே அல்-கய்தாவின் திட்டம் என்ற குறிப்பு, பிரென்ச் உளவுத்துறையால் எழுதப்பட்டிருக்கின்றது. குறிப்பு எமுதப்பட்டு 8 மாதங்களின்பின் நடைபெற்றதும், அதுதான்.

அத்துடன், எந்தெந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் கடத்தப்படலாம் என்பதும் பிரென்ச் உளவுக் குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இருக்கின்றன.

இவ்வளவு துல்லியமான சில குறிப்புக்கள் இருந்தும், வேறு சில குறிப்புக்களில் கோட்டை விட்டிருக்கிறது பிரென்ச் உளவுத்துறை DGSE.

அமெரிக்காவின் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களைக் கடத்தப் போகின்றார்கள் என்ற குறிப்பு அதில் இல்லை. மாறாக, அதற்குத் தலைகீழான குறிப்பு ஒன்று உள்ளது.

அதன்படி, ஐரோப்பிய விமான நிலையங்களில் இருந்து, முக்கியமாக ஜேர்மன் விமான நிலையங்களில் இருந்து, அமெரிக்கா நோக்கிப் புறப்படும் விமானங்களைத்தான் கடத்தல்காரர்கள் குறிவைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள், ஒரே நேரத்தில் கடத்தப்படுவதுதான் திட்டம் என்ற தகவலும் இந்தக் குறிப்புகளில் இல்லை.

Le Monde பத்திரிகை, பிரென்ச் உளவுத்துறையின் ரகசிய பைலிலுள்ள குறிப்பு ஒன்றை முழுமையாகப் பிரசுரித்துள்ளது. அதிலுள்ள விபரங்களைப் பாருங்கள்-

செப். 11 தாக்குதல் நடைபெற்று சில நிமிடங்களில்...

2000ம் ஆண்டின் ஆரம்பத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள காபுல் நகரில் பின்லேடன், ரகசியக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார். கூட்டத்தில், தலிபான் தலைவர்கள் சிலரும், செஸ்னியா நாட்டு தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அமெரிக்க இலக்குகள்மீது மோதுவது பற்றி அந்தக் கூட்டத்தில்தான் முதன் முதலில், பிரஸ்தாபித்திருக்கிறார் பின்லேடன்.

“ஜேர்மனியிலுள்ள பிராங்பேர்ட் விமானநிலையத்திலிருந்து புறப்படும் அமெரிக்க விமானம் ஒன்றை அல் – கய்தா கடத்த எற்பாடுகள் முடிந்துவிட்டன” என்று பின்லேடன் கூறியதாகத் தெரிவிக்கிறது அந்தக் குறிப்பு.

இந்தத் தகவல்கள் பிரென்ச் உளவுத்துறைக்கு எப்படிக் கிடைத்தன?

உஸ்பெக்கிஸ்தான் உளவுத்துறையிடம் இருந்து தங்களுக்கு இத்தகவல்கள் கிடைத்ததாக பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்கள் சொல்கின்றன.

பிரென்ச் உளவுத்துறையின் குறிப்புக்களில், 5 விமான நிறுவனங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், கன்டினென்டல், யுனைட்டட் ஏயார்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன், ஐந்தாவதாக யு.எஸ். ஏரோ என்ற நிறுவனத்தின் பெயரும் குறிக்கப்பட்டிருக்கிறது.

இது எதைக் குறிக்கின்றது என்பது சரியாகத் தெரியவில்லை. காரணம் யு.எஸ். ஏரோ என்ற பெயரில் அமெரிக்காவில் சர்வதேச விமான நிறுவனம் எதுவும் கிடையாது.

இப்படியொரு தகவல் பிரென்ச் உளவுத் துறையிடம் இருந்து கிடைத்ததை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறதா?

ஆம். ஆச்சரியகரமாக அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. சி.ஐ.ஏ.யின் பேச்சாளர்களில் ஒருவரான ஜோர்ஜ் லிட்டெல், பிரென்ச் உளவுத்துறை இந்தக் குறிப்புக்களை செப்.11ம் தேதி தாக்குதலுக்கு சில மாதங்களுக்கு முன்பே சி.ஐ.ஏ.யிடம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

ஜோர்ஜ் லிட்டெல், “அவர்களுக்குக் கிடைத்தது போன்ற சில உளவுத்தகவல்கள் எங்களுக்கும் கிடைத்திருந்தன. ஆனால், தாக்குதல் நடைபெறப்போகும் தேதி அல்லது இடம் பற்றி அவர்களிடமும் தகவல் இல்லை. எங்களிடமும் தகவல் இருக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

பிரென்ச் உளவுத்துறை DGSEயின் முன்னாள் பாதுகாப்புத்துறைத் தலைவர் அலைன் சொவுட், “உளவுத்துறைகளைச் சேர்ந்த அனைவருக்குமே இப்படி ஒரு விவகாரம் திட்டமிடப்படுகின்றது என்பது தெரியும். அது ஒரு விமானக் கடத்தல் என்பதும் தெரியும். அல் – கய்தாவால் நடாத்தப்படவுள்ளது என்பதும் தெரியும்” என்று கூறியுள்ளார்.

“எமது அமெரிக்க உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும், ஐரோப்பிய உளவுத்துறை நண்பர்களுக்கும் தெரியும். எந்த நிமிடத்திலும் விமானக் கடத்தல் நடைபெறலாம் என்று, டைம் பாம் ஒன்றின் மேல் உட்கார்ந்திருப்பது போல இருந்தோம். ஆனால் கடத்தப்படப்போவது அமெரிக்காவில் இருந்து புறப்படப் போகும விமானங்கள் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியதாக எழுதியுள்ளது Le Monde பத்திரிகை.

சரி. இந்தத் தகவல்கள் உளவுத்துறைக்கு எப்படித் தெரியவந்தன? அதைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன.

அப்துல் ரஷீட் என்பவர் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த, ஆப்கான் ஆயுத வியாபாரி. தலிபான்களுக்கு ஆயுத சப்ளை செய்தவரும் அவர்தான். அதேநேரத்தில் உஸ்பெக் உளவுத்துறையுடனும் தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார்.

தலிபான்களின் தொடர்பு மூலமாக தனது ஆட்களை அல்-காய்தாவின் முகாம்களுக்குள் ஊடுருவ விட்டிருந்த அப்துல் ரஷீட், அல் – கய்தா முகாம்களில் இருந்துதான் விமானக்கடத்தல் பற்றிய தகவலைப் பெற்றிருக்கிறார்.

அதை அவர் உஸ்பெக் உளவுத்துறைக்குத் தெரிவிக்க, அவர்கள் பிரென்ச் உளவுத்துறைக்குத் தெரிவித்திருக்கிறார்கள். (தகவல் கொடுத்த அப்துல் ரஷீட் இப்போது ஆப்கான் ராணுவத்தின் தளபதிகளில் ஒருவர்!)

இப்படியொரு தகவல் கிடைத்தும், அமெரிக்க உளவுத்துறை அதில் முழுமையாகக் கவனம் செலுத்தாமல் விட்டதற்கும் ஒரு காரணம் உண்டு. அது என்னவென்றால் அந்தக் காலகட்டத்தில் அல்-காய்தா அமைப்பு சில தந்திரங்களைச் செய்துகொண்டிருந்தது. மேலை நாட்டு உளவுத்துறைகளை திசை திருப்ப, அல்-காய்தாவே வேண்டுமென்று சில தகவல்களை லீக் செய்துகொண்டிருந்தது.

அப்படி லீக் செய்யப்பட்ட எந்தத் தகவலும், நிஜமான தகவல்கள் கிடையாது.

செப். 11 தாக்குதலுக்குமுன் கடைசியாக அல்-காய்தாவால் லீக் செய்யப்பட்ட ‘போலி’ உளவுத் தகவல், பிரான்ஸை மையப்படுத்தியே அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இதோ, இந்தத் திட்டத்தையும் பாருங்கள்:

பின்லேடனின் நெருங்கிய சகாவான ஜமால் பெகால் என்பவர் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்தபோது, அவரிடம் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல் திட்டம் ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்தத் திட்டம், பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு தற்கொலைப் போராளிகளை அனுப்பி, அந்த கட்டடத்தையே தகர்க்கும் திட்டம்.

அவரிடம் இருந்த திட்டம் மிகத் துல்லியமாக இருந்தது. அமெரிக்க தூதரகம் பற்றி அவர் வைத்திருந்த விபரங்கள்கூட நிஜமானவையாகவே இருந்தன. இதுதான் அல்-காய்தாவின் நிஜமான தாக்குதலாக இருக்கப் போகின்றது என சி.ஐ.ஏ. நம்பும் அளவுக்கு, திட்டம் முழுவதும் பக்காவாக இருந்தது.

இந்த விபரங்கள் சி.ஐ.ஏ.க்கு தெரியவந்தது எப்போது தெரியுமா? செப். 11 ம் திகதிய தாக்குதலுக்கு, சில தினங்களுக்கு முன்பு!

அமெரிக்க மற்றும் பிரென்ச் உளவுத்துறைகள் பாரிஸிலுள்ள அமெரிக்கத் தூதரக தற்கொலைத் தாக்குதல் பற்றிக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க -

செப்டம்பர் 11ல், அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்றது.

-Le Monde பத்திரிகையின் குறிப்புகளுடன், ரிஷி.

“விறுவிறுப்பு.காம்”

விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு.

விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு “ட்ரெஸ்-2 பி” என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்னர்.

இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. அதன் மீது சூரியனின் 1 சதவீத வெளிச்சம் மட்டுமே விழுகிறது. இதனால் இந்த கிரகம் கரியைவிட மிகவும் கறுப்பு நிறத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பில் பல “கியாஸ்” பிரதிபலிக்கின்றன.

வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது.

ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை. என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 டிகிரி பாரன்கீட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ் - 2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்து குவிப்பு வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் ; பெங்களூர் கோர்ட்டு உத்தரவு.

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும்; பெங்களூர் கோர்ட்டு உத்தரவு

ஜெயலலிதா 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை முதலில் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. 2001-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுவை விசாரித்து, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2003-ம் ஆண்டு உத்தரவிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை பெங்களூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது. அடுத்த குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 313-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வாக்குமூலம் அளிக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு பெங்களூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து சிறப்பு கோர்ட்டில் ஜெயலலிதா இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தார். அதில் ஒரு மனுவில் அவர், நான் தமிழ்நாட்டு முதல்-அமைச்சராக இருப்பதாலும், தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதாலும், மேலும் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் உள்ளதாலும் கோர்ட்டில் நேரில் ஆஜராக இயலாது எனவே வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மற்றொரு மனுவில், எனது வாக்குமூலத்தை எழுத்துப்பூர்வமாக ஏற்கப்பட முடியாத பட்சத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஜெயலலிதாவின் மனுக்கள் மீது பெங்களூர் கோர்ட்டில் 3 நாட்கள் விவாதங்கள் நடந்தன. ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் பி.குமார் வாதாடுகையில், வாக்குமூலம் கொடுப்பது என்பது குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைதான் தவிர கோர்ட்டின் அதிகாரம் அல்ல என்றார்.

இதற்கு அரசு தரப்பு வக்கீல் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில் சுப்ரீம் கோர்ட்டு 2003-ல் அளித்த உத்தரவின்படி குற்றம் சாட்டப்பட்டவர், கோர்ட்டில் நேரில் ஆஜராகி, நேரில் வாக்குமூலம் அளிக்க வேண்டியது கட்டாயம் என்றார். இருதரப்பு வாதங்கள் முடிந்ததும் 12-ந்தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பகல் 12 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி மல்லிகா ஜூனையா தீர்ப்பை வாசித்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் ஜெயலலிதா எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்ற விவரத்தை நீதிபதி வெளியிடவில்லை. முன்னதாக அவர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது:-

என் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நல்லம்மா நாயுடு என்பவர் விசாரணை அதிகாரியாக இருந்தார். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளை அவர் மறுபடியும் விசாரித்தார். மறுவிசாரணையில் பல சாட்சிகள் பல்டி அடித்தனர். பலர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டனர். சாட்சிகள் திடீரென அப்படி மாறியதற்கு என்ன காரணம்? இது தொடர்பாக பழைய விசாரணை அதிகாரி நல்லம்மாநாயுடுவை கோர்ட்டுக்கு நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சசிகலா தன் மனுவில் கூறி உள்ளார்.

சசிகலா மனுவை பெங்களூர் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. இந்த மனு மீது வரும் செவ்வாய்க்கிழமை (16-ந்தேதி) விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடிந்த பிறகே ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் எப்போது நேரில் ஆஜராக வேண்டும் என்பது தெரியவரும்.