Thursday, August 4, 2011

சிவகங்கை தேர்தல் வழக்கு : ராஜகண்ணப்பனுக்கு எதிரான ப.சிதம்பரம் மனு தள்ளுபடி .

சிவகங்கை தேர்தல் வழக்கு: ப.சிதம்பரம் மனு தள்ளுபடி

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், ப.சிதம்பரத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை நீதிபதி கே. வெங்கட்ராஜன் விசாரித்தார். ராஜகண்ணப்பன் மனு வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அவர் கூறும் போது, ராஜ கண்ணப்பன் தாக்கல் செய்த தேர்தல் மனுவில் குறைபாடு இருப்பதால் அது தொடர்பான ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்டன. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டு சரி செய்யப்பட்ட காரணத்திற்காக ராஜ கண்ணப்பன்- தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது மேலும் 3 வாரத்திற்குள் சிவகங்கை தேர்தல் வழக்கு விசாரணை நடைபெறும் என்றார்.

ஓரங்கட்டப்பட்ட அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி : மூடுவிழாவுக்கு முயற்சிக்கிறதா சுகாதாரத் துறை?

தமிழகத்தில் தற்போது செயல்பட்டுவரும் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறது. இதை மீட்டெடுக்க வேண்டிய சுகாதாரத் துறையின் நடவடிக்கைகளைப் பார்த்தால், அதன் மூடுவிழாவுக்கே தேதி குறித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. தமிழகத்தில் பத்து தனியார் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆனால், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தான் ஒரே ஒரு அரசு கல்லூரி இருக்கிறது.

1975ல் தமிழகத்தில் துவக்கப்பட்ட முதல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியும் இதுவே. இன்று, மாற்று மருத்துவத்தை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மூடுவிழாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கல்லூரி.

இது குறித்து, இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் கூறியதாவது: ஐந்து ஆண்டுகள் மருத்துவப் படிப்பு அளிக்கும் இந்தக் கல்லூரியில், 300 பேர் படிக்கிறோம். இதன் தரம் இருக்கும் நிலையைக் கண்டு அதிர்ந்து நிற்கிறோம்.

இக் கல்லூரியில், 13 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதைத் தவிர, 12 ரீடர்கள், 14 விரிவுரையாளர்கள், மூன்று டியூட்டர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. மொத்தமுள்ள, 54 பணியிடங்களில், 36 இடங்கள் காலியாக இருக்கின்றன. அவ்வளவு ஏன்... முதல்வர் பணியிடமே காலியாகத் தான் இருக்கிறது.

இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதி கிடையாது. இருக்கும் மாணவியர் விடுதியிலும், அடிப்படை வசதிகள் கூட இல்லாததால், அவர்கள் தனியே வீடெடுத்து தங்கிப் பயிலும் நிலை உள்ளது. இதோடு முடியவில்லை; இன்னும் ஏராளமான காமெடிகள் இருக்கின்றன.

கல்லூரிக்கு பஸ் கிடையாது; ஆனால், டிரைவர் இருக்கிறார். அல்ட்ரா சோனோகிராம், இ.சி.ஜி., போன்ற அடிப்படை கருவிகள் கூட கிடையாது. கல்லூரியில் கழிவறைகள் போதுமானதாக இல்லை; இருப்பவையும் சுகாதாரமாக இல்லை. தாழ்வான பகுதியில் கல்லூரி இருக்கிறது. மழை வந்தால், கட்டடமே மிதக்கும்; கல்லூரியைச் சுற்றி புதர்கள் மண்டிக் கிடக்கின்றன; அவற்றை அப்புறப்படுத்தவும் முயற்சி இல்லை.

முதல் முறை பார்ப்பவர்கள், ஏதோ மர்ம மாளிகை என்று தான் நினைப்பர். இந்நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை வரும் மத்திய ஓமியோபதி மருத்துவக் கவுன்சில், எங்கள் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. தகவலறிந்த தமிழக அரசின் சுகாதாரத் துறை, சுறுசுறுப்பானது. பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களை தற்காலிகமாக இங்கு கொண்டு வந்து, அவர்கள் இங்கு பணியாற்றுவது போல் நாடகமாடப்பட்டது. ஆனால், அவர்கள் நடிப்பில் முதிர்ச்சி இல்லை போலும்; முதுநிலை பட்டப்படிப்புக்கு அனுமதி வழங்க, கவுன்சில் மறுத்துவிட்டது.

பட்ட மேற்படிப்புக்கு மத்திய அரசு ஆப்பு வைத்ததென்றால், மாநில அரசு, ஒரு படி மேலே சென்றுவிட்டது. கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் காரணம் காட்டி, இங்கு செயல்பட்டுவந்த தேர்வு மையத்தையே, 30 கி.மீ., தொலைவில் உள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றிவிட்டது. அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டியது அரசின் கடமை.

தன் கடமையில் அரசு தவறிவிட்டு, எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்ன நியாயம்? ஏற்கனவே எந்த வசதியும் இல்லாமல் பஸ்சுக்காகவும், தண்ணீருக்காகவும் அகதிகள் போல அலையும் நாங்கள், இனி தேர்வெழுதவும் அலைய வேண்டுமா? எங்களின் பல்வேறு கோரிக்கைகளை, சுகாதாரத் துறை அமைச்சரிடமும், இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி மருத்துவத் துறை இயக்குனரிடமும் பல முறை முறையிட்டுவிட்டோம்; இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை. இவ்வாறு மாணவ, மாணவியர் குமுறினர்.

நிலைமையைப் பார்த்தால், உயிர் காக்கும் உயர் சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுவது இந்த மருத்துவக் கல்லூரிக்குத் தான் எனத் தோன்றுகிறது.

சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி சாதனை.



இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராக மாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10). பிறந்த போது வாய்பேச முடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.

அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படிசோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ.,எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது.வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி., தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.

தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.

ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்விஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திதரவேண்டும் என்பதே அவரதுபெற்றோரின் விருப்பமாகும்.

Wednesday, August 3, 2011

2ஜி ஊழல் : ராசாவுக்கு ஒரு பைசாகூட கொடுத்ததில்லை - ரத்தன் டாடா மறுப்பு.



ராசாவின் தொகுதியான பெரம்பலூரில் மருத்துவமனை அமைக்க டாடா குழுமத்தில் இருந்து ரூ.20 கோடி பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பால்வா, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ரூ.20கோடி டாடா கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா எழுதிய கடிதம் குறித்து பதிலளிக்கையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தான் ஒரு பைசாகூட ராசாவுக்கு கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதிமன்றத்தில் ஒருவர் என்னவேண்டுமானாலும் கூறிவிட்டுச் சென்றுவிடலாம்; அதற்காக அவமதிப்பு வழக்கெல்லாம் போட முடியாது.

ராசாவுக்காக ஒரு பைசாகூடக் கொடுத்ததில்லை. மருத்துவமனைக்காகவே அந்தப் பணம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவமனை கட்டப்படவில்லை; உபகரணங்கள் எதுவும் வாங்கப்படவில்லை... எனவே பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.

நீதிமன்றத்தில் பிரச்னையை திசை திருப்புவதற்காக இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என்றார் டாடா.

இங்கிலாந்தில் வாலிபருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி டாக்டர்கள் சாதனை.

இங்கிலாந்தில் வாலிபருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி டாக்டர்கள் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூ கிரீன் வயது 40. இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது தெரிய வந்தது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு உடனடியாக மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையை உணர்ந்தனர். உடனடியாக அவருக்கு பொருத்தமான மாற்று இருதயம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தினர். அதற்கான ஆபரேசன் சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆபரேசன் வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் டாக்டர் ஸ்டீவன் சூய் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு : ஜெயலலிதா குற்றச்சாட்டு.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையை திறந்து வைத்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்று வரும நிலையில், அவரது இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும் - நடிகை அஞ்சலி.



தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.

ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்," என்றார்.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இப்படிக் கூற தைரியம் இல்லை. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அஞ்சலி ராஜபக்சேவை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.