Wednesday, August 3, 2011

2ஜி ஊழல் : ராசாவுக்கு ஒரு பைசாகூட கொடுத்ததில்லை - ரத்தன் டாடா மறுப்பு.



ராசாவின் தொகுதியான பெரம்பலூரில் மருத்துவமனை அமைக்க டாடா குழுமத்தில் இருந்து ரூ.20 கோடி பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அன்று சிறையில் உள்ள ஸ்வான் டெலிகாமின் ஷாகித் பால்வா, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைக்கு ரூ.20கோடி டாடா கொடுத்ததாகக் கூறியிருந்தார்.

2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராசா எழுதிய கடிதம் குறித்து பதிலளிக்கையில் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தான் ஒரு பைசாகூட ராசாவுக்கு கொடுத்ததில்லை என்று கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். நீதிமன்றத்தில் ஒருவர் என்னவேண்டுமானாலும் கூறிவிட்டுச் சென்றுவிடலாம்; அதற்காக அவமதிப்பு வழக்கெல்லாம் போட முடியாது.

ராசாவுக்காக ஒரு பைசாகூடக் கொடுத்ததில்லை. மருத்துவமனைக்காகவே அந்தப் பணம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவமனை கட்டப்படவில்லை; உபகரணங்கள் எதுவும் வாங்கப்படவில்லை... எனவே பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.

நீதிமன்றத்தில் பிரச்னையை திசை திருப்புவதற்காக இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என்றார் டாடா.

இங்கிலாந்தில் வாலிபருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி டாக்டர்கள் சாதனை.

இங்கிலாந்தில் வாலிபருக்கு பிளாஸ்டிக் இருதயம் பொருத்தி டாக்டர்கள் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்தவர் மாத்யூ கிரீன் வயது 40. இவர் இருதய நோயினால் மிகவும் அவதிப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லண்டனில் உள்ள பாப்ஓர்த் என்ற ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை டாக்டர் ஸ்டீவன் சூய் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அவரது இருதயம் முழுவதும் பாதிப்பு அடைந்து இருந்தது தெரிய வந்தது.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு உடனடியாக மாற்று இருதயம் பொருத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையை உணர்ந்தனர். உடனடியாக அவருக்கு பொருத்தமான மாற்று இருதயம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்டிக் மாற்று இருதயம் பொருத்தினர். அதற்கான ஆபரேசன் சுமார் 6 மணி நேரம் நடந்தது. ஆபரேசன் வெற்றிகரமாக நடந்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் எனவும் டாக்டர் ஸ்டீவன் சூய் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு : ஜெயலலிதா குற்றச்சாட்டு.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசே பொறுப்பு: ஜெயலலிதா குற்றச்சாட்டு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உள்ளது என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் புதுப்பிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அறையை திறந்து வைத்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசிடமே உள்ளதாக தெரிவித்தார்.

மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்று வரும நிலையில், அவரது இந்தக் குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராஜபக்சேவை கடுமையாக தண்டிக்க வேண்டும் - நடிகை அஞ்சலி.



தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொடூரமாகக் கொன்ற கொடியவன் ராஜபக்சேவுக்கு தண்டனை தரவேண்டும். அதற்கான இயக்கத்துக்கு என் ஆதரவு உண்டு. நானும் இதற்காக கையெழுத்திட்டுள்ளேன், என்று இளம் நடிகை அஞ்சலி கூறினார்.

ஈழத்தமிழர்களை படுகொலை செய்தமைக்காக ராஜபக்சேவுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக நடிகர்-நடிகைகளிடமும் கையெழுத்து வாங்கி வருகின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள். நடிகர்கள் சத்யராஜ், பரத், பார்த்திபன், மணிவண்ணன், சீனு, நடிகை ரோஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், வேலு பிரபாகரன், ஆர்.கே.செல்வமணி என ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

தற்போது நடிகை அஞ்சலியும் கையெழுத்திட்டார். விடுதலை சிறுத்தைகள் இயக்க செய்தி தொடர்பாளர் வன்னி அரசு தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சென்று கையெழுத்து வாங்கினர். இயக்குனர் மு.களஞ்சியத்திடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.

இதுகுறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், "இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை நடந்த போது இந்த செய்திகளை படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் சமீபத்தில் டி.வி.யில் நேரடியாகவே அந்த படுகொலைகளை பார்த்து அதிர்ச்சியானேன். பெண்கள், சிறுவர்கள், வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை.

ஈழத் தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித்த கொடியவன் ராஜபக்சேவுக்கு கடும் தண்டனை வழங்க விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கையெழுத்து இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்," என்றார்.

தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இப்படிக் கூற தைரியம் இல்லை. ஆனால் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அஞ்சலி ராஜபக்சேவை கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.2500க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் : மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் 03-08-2011 முதல் தொடக்கம்.

குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சேவை: மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் நாளை முதல் தொடக்கம்

குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் பி.சரவணன் கூறியதாவது:-

மதுரை சரவணா ஆஸ்பத்திரி பலதரப்பட்ட நோயாளிகளுக்கு சேவை நோக்கத்துடன் மருத்துவம் செய்து வருகிறது. இதன் மூலம் ஏழை- எளிய மக்கள் பலன் அடைந்து வருகிறார்கள். தென்தமிழகத்தில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி குறைவாகவே உள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதத்தில் மதுரை சரவணா ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உலகில் தசைப் பகுதிகள், தலை, தண்டுவடம் மற்றும் முக்கிய பகுதிகளில் உள்ள நோய்களை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அவசியமானதாகும். அதற்காக நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து ஸ்கேன் சென்டருக்கு அழைத்து செல்வதில் காலவிரையம் மற்றும் பணச்செலவுகளும் அதிகரிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஸ்கேன் சென்டர் திறக்கப்படுகிறது.

இங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க நோயாளிகளிடம் ரூ.2500 மட்டுமே வசூலிக்கப்படும். இது மிக மிக குறைந்த கட்டணம் ஆகும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்கள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளும் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்து கொள்ளலாம். டெலிமெடிசன் மூலம் உடனுக்குடன் ஸ்கேன் ரிப்போர்ட் வழங்கப்படும்.

நோயாளிகள் வெகுநேரம் காத்திருக்க தேவையில்லை. இவ்வாறு டாக்டர் பி.சரவணன் கூறினார்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர் திறப்பு விழா சரவணா ஆஸ்பத்திரியில் புதன்கிழமை 03-08-2100 காலை 9.30 மணிக்கு நடக்கிறது.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம் : கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்.

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அவலம்: கழிவறையில் வசிக்கும் நோயாளிகள்

நாட்டிலேயே மிகப்பெரிய ஆஸ்பத்திரியான எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இடவசதி இல்லாததால் நோயாளிகளும், நோயாளிகளின் உதவியாளர்களும் கழிப்பறையில் தங்கும் அவலநிலை உள்ளது.

இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆஸ்பத்திரி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எய்ம்ஸ்) ஆகும். இங்கு தினமும் சிகிச்சைக்காக சராசரியாக 10 ஆயிரம் பேர் வருகின்றனர். தினமும் 323 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நோயாளிகளுடன் சேர்ந்து உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களையும் சேர்த்து தினமும் 50 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.

டெல்லியில் இருந்து மட்டுமல்லாமல், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வருகின்றனர். ஆஸ்பத்திரியில் தங்களது பெயரை பதிவு செய்து விட்டு அழைப்புக்காக பலமணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

அதேபோல் சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், தங்களது நோயை குணப்படுத்திக் கொள்ள இரண்டு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சாதாரண அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதில்லை. இவர்களில் பெரும் பாலானோர் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் என்பதால் இங்கே எங்கேயாவது தங்க வேண்டிய நிலை உள்ளது.

வசதி உள்ளவர்கள் தங்கும் விடுதிகளில் பணம் கொடுத்து தங்கிக் கொள்கிறார்கள். வசதி இல்லாத ஏழை நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் மரத்தடியிலும், சுரங்க பாதைகளிலும், நடைபாதைகளிலும் வசிக்கின்றனர். இன்னும் சிலர் கழிவறைகளையும் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் வசதிகள் இல்லாததால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம்ரதி (வயது 45) என்ற பெண் இதய வாழ்வு மாற்று ஆபரேசனுக்காக காத்திருக்கிறார். இவரும், குடும்பத்தினரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அருகே உள்ள ஆண்களுக்கான கழிவறையில் வசிக்கின்றனர்.

அதேபோல ரத்த புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள உத்தரபிரதேசத்தில் இருந்து வந்துள்ள ஹெம் குமாரி (25) மற்றும் அவரது குடும்பத்தினரும் கழிவறையில்தான் வசித்து வருகின்றனர்.

இதுபற்றி குமாரி கூறுகையில், மரத்துக்கு அடியில் வசிப்பதை விட இங்கு இருப்பது வசதியாக உள்ளது. எங்களை சுற்றி நான்கு சுவர்களாவது மறைத்து இருக்கிறது அல்லவா? என்று ஆதங்கப்பட்டார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு: தயாநிதி மாறனிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு

மத்திய மந்திரி சபையில் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்புத் துறை மந்திரிகளாக பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதிமாறன் ஆகியோர் இருந்தனர்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து இவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

பிரமோத்மகாஜன் இறந்து விட்ட நிலையில் அருண் ஷோரியிடம் கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும், காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி விளக்கம் அளித்தார். இதன்மூலம் அருண்ஷோரி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரிய வந்தது. அவர் தொடர்பாக சி.பி.ஐ. இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தனது ஏர்செல் நிறுவனத்தை தயாநிதி மாறன் அச்சுறுத்தி மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்தார் என்று அவர் கூறினார்.

இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்துக்கு தயாநிதிமாறன் அழைக்கப்படுவார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மேக்சிஸ் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகு, மேக்சிஸ் நிறுவனம் சன் டி.வி. குழுமத்தில் முதலீடு செய்தது தொடர்பாக தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதுதவிர தயாநிதிமாறன் பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறையில் ஏதேனும் மாற்றங்கள் நடந்ததா? என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஆய்வு செய்ய உள்ளனர். இந்த விசாரணை தகவல்கள் சி.பி.ஐ. விரைவில் தாக்கல் செய்ய உள்ள குற்றப்பத்திரிகையில் இடம் பெறும் என்று தெரிகிறது.