Tuesday, August 2, 2011

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும் : அரசு அறிவிப்பு.

இலவச கறவை மாடு, ஆடுகள் யார், யாருக்கு கிடைக்கும்: அரசு அறிவிப்பு

தமிழக அரசின் இலவச ஆடுகள் திட்டத்துக்கு ரூ. 925 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கு ஆடுகள் தரப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 7 லட்சம் பேருக்கு தலா நான்கு ஆடுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஏழை விவசாயிகளுக்கு ஆடுகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் தேதி இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. ஏழு லட்சம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.

நடப்பாண்டில் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தலா 1.5 லட்சம் பேருக்கும் இலவசமாக ஆடுகள் வழங்கப்படும்.

நடப்பாண்டில் ரூ. 135 கோடி

நான்கு ஆடுகள் ரூ.10 ஆயிரம் விலையில் வழங்கப்படும். அதாவது ஒரு ஆடு ரூ.2,500 விலை; தீவனச் செலவு ரூ.500 சேர்த்து ஒரு ஆட்டுக்கு ரூ.3 ஆயிரம் செலவிடப்படும். அதன்படி நான்கு ஆடுகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவிடப்படும். ஆடுகள் காப்பீடு செய்யப்படும். காப்பீடு, ஆடுகளை வாங்கி வருவதற்கான போக்குவரத்துச் செலவு என தனியாக ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.500 ஒதுக்கப்படும். நடப்பாண்டில் இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகளைக் கிராம அளவிலான குழு மேற்கொள்ளும். இந்தக் குழு பரிந்துரைக்கும் பயனாளிகளின் பெயர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வேலையை, கிராமங்களில் உள்ள கிராம சபைகள் செய்யும். ஏழை விவசாயக் குடும்பங்களில் உள்ள பெண்களே பயனாளிகளே இருப்பார்கள்.

விவசாயக் கூலிகளுக்கு மட்டுமே

இலவச ஆடுகளைப்பெற விவசாயிகள், நிலங்கள் இல்லாத ஏழை விவசாயக் கூலிகளாக இருக்க வேண்டும். கிராமங்களில் நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவராவது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். பசு, ஆடுகளைச் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது. அரசுப் பணியில் இருக்கக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் கூட அரசுப் பணியில் இருந்திடக் கூடாது.

மாடு வாங்கினால் ஆடு கிடையாது

இலவச மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இருப்பவர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட மாட்டாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட (29 சதவீதம் பேர்) மற்றும் பழங்குடியின (1 சதவீதம்) சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர்.

இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகளாக, மாவட்ட ஆட்சியர்கள் இருப்பர். மாவட்ட அளவிலான குழுவில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்), உதவி இயக்குநர் (பஞ்சாயத்துகள்) இருப்பர். பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கிராம அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் அமைப்பார். இந்த கிராம அளவிலான குழுவில் பஞ்சாயத்துத் தலைவர், துணைத் தலைவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஒரு வார்டின் மூத்த தலைவர் உள்ளிட்டோர் இருப்பர்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் விவரங்களைக் கால்நடை உதவி மருத்துவர், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரும் சரிபார்ப்பர். பயனாளிகள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகளா என்கிற விவரம் கிராம நிர்வாக அலுவலரின் துணையுடன் உறுதி செய்யப்படும். இறுதி செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் கிராம சபைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

ஒரு ஆண் ஆடு, 3 பெண் ஆடு

செம்மறி அல்லது வெள்ளாடாக வழங்கப்படும். ஒரு ஆண் ஆடும், மூன்று பெண் ஆடுகளும் அளிக்கப்படும். ஆடுகளை வாங்கும்போது, பயனாளிகள் ஐந்து அல்லது ஏழு பேர் கொண்ட குழுக்களாக அழைத்துச் செல்லப்படுவர். அரசுப் பண்ணைகளில் ஆடுகள் விற்பனைக்கு இருந்தால் அவை விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுக்கப்படும். பக்கத்து மாநிலங்களில் விற்பனைக்கு இருந்தாலும் அவை கொள்முதல் செய்யப்படும்.

ஆடுகளின் காதில் ஐடி கார்டு

இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடு என்பதைக் குறிக்கும் வகையில், கொள்முதல் செய்யப்படும் ஆடுகளின் இடது காதில் ஓட்டை போடப்படும் அல்லது கயிறு தொங்கவிடப்படும். ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு எண் கொடுக்கப்படும். இந்த எண் பெரிதாக தெரியும் வகையில் புகைப்படம் எடுக்கப்படும்.

பயனாளிகள் இலவச திட்டத்தின் கீழ் வாங்கிய ஆடுகளை குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசு மாடு வாங்க ரூ. 232 கோடி

இதேபோல அரசின் இலவச பசுக்கள் திட்டத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 60,000 பசு மாடுகள் கொள் முதல் செய்யப்படும். அதில் நடப்பாண்டில் மட்டும் ரூ. 56 கோடியில் 12,000 பசுக்கள் வாங்கப்பட்டு பயனாளிகளுக்கு தரப்படும்.

கலப்பின ஜெர்சி பசுக்கள் இத்திட்டத்திற்காக வாங்கப்படும். இந்த மாடுகள், 5 வயதுக்கு உட்பட்டவையாக இருக்கும்.

இலவச திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெறும் விவசாயிகள் அதை நான்கு ஆண்டுகளுக்கு விற்கக் கூடாது என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது.

இலவச ஆடுகள் திட்டத்துக்கு என்னென்ன விதிமுறைகள் உள்ளனவோ அதுவே இந்தத் திட்டத்திற்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் : இலங்கை அரசு ஒப்புதல்.

இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்: இலங்கை அரசு ஒப்புதல்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது. அந்த நாட்டின் ராணுவ அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான். விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, August 1, 2011

மம்முட்டி - மோகன்லாலின் நிழல் உலகத் தொடர்புகள்... அதிர்ச்சிப் பின்னணி !



பிரபல மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வரித்துறையினர் நடத்திய தொடர் சோதனைகளின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் சில சந்தேகத்துக்கிடமான நபர்களுடன் இருவரும் தொடர்பு வைத்திருந்ததே இந்த சோதனைக்கு பிரதான காரணம் என்கிறார்கள்.

இந்த நபர்கள்தான் இப்போது இந்திப் பட உலகையே ஆட்டுவிக்கிறார்களாம். நிழல் உலக தாதாக்களுடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ள இந்த நபர்கள், மம்முட்டி மற்றும் மோகன்லாலுடன் தொடர்பிலிருப்பது துபாயில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் மூலம் இந்தியாவுக்கு தெரிய வர, உடனடியாக இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

மேலும் இந்த நிழலுலக நபர்களுக்கு தங்களின் படங்களின் செயற்கைக்கோள் உரிமையை வழங்கவும் மம்முட்டியும் மோகன்லாலும் ஒப்பந்தம் போட்டிருந்தார்களாம். இதற்காக பெரும் பணம் கைமாறியுள்ளதாக தெரிகிறது. இந்தப் பணம் மும்பையில் ஏற்கெனவே ஐடி துறையின் சந்தேகப் பார்வையில் உள்ள சிலர் மூலமே மம்முட்டி- மோகன்லாலுக்கு வந்துள்ளது.

இன்னொரு பக்கம், மம்முட்டியும் மோகன்லாலும் இப்போது கோடிகளில் சம்பளம் வாங்கினாலும், கணக்கில் காட்டுவது அதிகபட்சம் ரூ 80 லட்சம்தானாம். இதனை ஆதாரங்களுடன் கண்டுபிடித்த பிறகே இவர்களின் வீடுகளில் சோதனையை நடத்தியதாம் வருமான வரித்துறை.

இந்த சோதனை, அதன் காரணங்கள், பிடிபட்ட பொருள்கள் குறித்து விரைவிலேயே முழு அறிக்கை வெளியிடவிருக்கிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பது, மம்முட்டிக்கும் மோகனலாலுக்கும் மேலும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு - படத்துடன்.

திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு.





























இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திமுகவினர் நடத்திய போராட்டத்தில் நடிகை குஷ்பூ கலந்துகொண்டார். அவர் போராட்டத்திற்கு ஊன்றுகோலுடன் வந்தார்.

நடிகை குஷ்புவுக்கு திமுகவில் பதவி எதுவும் கொடுக்காவிட்டாலும், அவர் கட்சிப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். ஆளும் அதிமுக அரசு திமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகள் போடுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபதற்காக குஷ்பூ ஊன்றுகோலுடன் வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மலையாளப் படபிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கையில், படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார்.

இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தார். அவர் கையில் ஊன்றுகோலுடன் வந்தார். அவரை பார்த்ததும் மகளிர் அணி நிர்வாகிகளும் தி.மு.க. தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவருடன் கை குலுக்கினர்.

பின்னர் அவரை தி.மு.க. நிர்வாகிகள் ஒரு ஓரமாக அழைத்து சென்று நிற்க வைத்தனர். இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்ட போது, 10 நாட்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, இந்த ஆர்ப்பாட்டம்

எதற்காக என்றால் திமுகவினர் மீது தேவையில்லாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு என்ன மாற்றம் வருகிறது என்று பார்ப்போம் என்றார்.

லாரியே மேடையானது

போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இடத்தில் மேடை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. ஆனால் ஒரு லாரியை மேடையாக்கி தி.மு.க. நிர்வாகிகள் அங்கு நிறுத்தி இருந்தனர்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் முன்னணி தலைவர்கள் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, தாமோ. அன்பரசன், நடிகை குஷ்பு உள்பட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரையும் போலீஸார் விடுவித்தனர்.

அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு : புதிய மாணவ - மாணவிகளை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்- ராக்கிங் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி .

அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு: புதிய மாணவ- மாணவிகளை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்-  ராக்கிங் செய்யமாட்டோம் என்று உறுதிமொழி

தமிழ்நாட்டில் 17 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள 1653 எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. மருத்துவ கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்தனர். சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.

சென்னையில் உள்ள மெட்ராஸ் மருத்துவ கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான திறப்பு விழா வித்தியாசமாக நடத்தப்பட்டது.

புதிய மாணவ - மாணவிகளை சீனியர் மாணவர்கள் வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

சென்னை மருத்துவ கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சீனியர் மாணவர்கள் “நாங்க ராக்கிங் செய்யமாட்டோம்” நண்பர்களாக இருப்போம்” என்று கூறி புதிய மாணவர்களை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கனகசபை தலைமையில் “ராக்கிங்” செய்யமாட்டோம் என மூத்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தமாட்டோம் என முதல்வர் உறுதிமொழியை படிக்க மூத்த மாணவர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி செய்தனர்.

பின்னர் முதல்வர் கனகசபை மாணவர்கள் இடையே பேசியதாவது:-

ராக்கிங்கை தடுக்க துறை வாரியாக கண்காணிக்கப்படுகிறது. போராசிரியர், வார்டன், தலைமை வார்டன் மாணவர்களை தினமும் கண்காணிப்பார்கள். விடுதியில் திடீர் சோதனை நடத்துவார்கள். மேலும் மாணவ- மாணவிகள் விடுதியில் பேராசிரியர் ஒருவர் தங்கி இருப்பார்.

சுழற்சி முறையில் மாறிமாறி ஆண் - பெண் பேராசிரியர்கள் தங்கி ராக்கிங் நடைபெறுகிறதா? என்பதை ரகசியமாக கண்காணிப்பார்கள். இதுதவிர என்னுடைய ஆபீஸ் முன்பு புகார் பெட்டி ஒன்றும் வைக்கப்படும். அதில் ராக்கிங் பற்றி புகார் தெரிவிக்கலாம்.

ஒருவேளை ராக்கிங் செய்வது தெரியவந்தால் அந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்கான அவசியம் இருக்காது என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாணவ- மாணவிகளை பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றாக வந்து வகுப்பில் விட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் சுந்தரம் கலந்து கொண்டார்.

உலகை மிரட்டிய அமெரிக்காவின் கடன் பிரச்சனை...!



உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து கடைசி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி, இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.

இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

இதனால், இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால், பிரதிநிதிகள் சபை (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால், செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க, அதை ஏற்றால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், ஒபாமா அதை ஏற்க மறுக்க, அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

கடன் அளவை உயர்த்தாவிட்டால், எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது, ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது, ராணுவ காண்ட்ராக்டர்களுக்கு பணம் தர முடியாது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க, முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால், அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

அமெரிக்கா இப்படி சந்தி சிரிக்கும் நிலைக்கு வந்தால், அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி, முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால், உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சி, தனது கட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் இரவு, பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா.

இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால், ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

ஆமாம், அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்கிறீர்களா.. அதற்கு முக்கிய காரணங்கள், அந்த நாடு நடத்தி வரும் போர்கள் தான். ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர். பராக் ஒபாமா இதுவரை போர் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!

இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டாலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

2013-க்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும் ஹெச்.எஸ்.பி.சி.



லாபம் பார்க்க போராடும் நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க சர்வதேச வங்கியான ஹெச்எஸ்பிசி முடிவு செய்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வங்கி ஹெச்எஸ்பிசி. வங்கியின் புதிய தலைவராக ஸ்டூவர்ட் கலிவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த வங்கியில் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். அதிலும் ஆசியாவில் தான் அதிகமானோர் பணி புரிகின்றனர்.

ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் அரையாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 11.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த வங்கிப் பங்குகளின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வரிக்கு முந்தைய லாபம் 11.1 பில்லியனாக இருந்தது.

லத்தீன் அமெரிக்கா, அமெரி்க்கா, இஙகிலாந்து, பிரான்ஸ் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வங்கியை மறுசீரமைக்கவுள்ளதால் 5 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்கியதாக வங்கி அறிவித்துள்ளது. வரும் 2013-ம் ஆண்டிற்குள் மேலும் 25, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைவர் ஸ்டூவர்ட் கூறியதாவது,

ஹெச்.எஸ்.பி.சி. வரும் 2013-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை அந்த வங்கியின் தலைவர் மறுத்துள்ளார்.

நாங்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்பப் போவதில்லை. ஏற்கனவே காலியாக இருக்கும் இடங்களுக்கே ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. பொருளாதாரம் மேலும் வளர்ந்தால் நாங்கள் இன்னும் அதிகமானோரை பணியமர்த்துவோம். மொத்த உற்பத்தி 7.5 சதவீதமாக இருந்தால் நல்லது. இந்தியாவின் மொத்த உற்பத்தி அதே அளவில் தான் உள்ளது. அதனால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தியா முழுவதும் அதிக ஆட்களை எடுப்போம் என்று உறுதியளிக்க முடியாது. வங்கி சீரமைப்பின் ஒரு பகுதியாக கடன் மீட்புப் பிரிவில் உள்ள ஒரு சிலரை மட்டும் வங்கியின் பிற பிரிவில் சேருமாறு கூறினோம் என்றார்