Monday, August 1, 2011

காந்திய வழியில் செல்லும் நாம் ஆயுதம் தயாரிப்பது ஏன்? மாணவியின் கேள்விக்கு அப்துல்கலாம் பதில்.

காந்திய வழியில் செல்லும் நாம் ஆயுதம் தயாரிப்பது ஏன்? மாணவி கேள்விக்கு அப்துல்கலாம் பதில்

கோவை பாலக்காடு மெயின் ரோடு நவக்கரையில் ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் யூத் மீட் - 2011 நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஏ.ஜே.கே. கல்லூரி தலைவர் லால்மோகன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் அஜ¤த்குமார் லால் மோகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது. :-

நான் கடந்த 10 ஆண்டுகளில் 11 மில்லியன் இளைஞர்களை சந்தித்து உள்ளேன். அதில் அதிகமான இளைஞர்கள் தனித் தன்மையுடன் விளங்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அவ்வாறு விளங்க வேண்டுமானால் உடனடியாக தனித் தன்மை கிடைத்து விடாது. அதற்கு கடுமையாக போராட வேண்டும். மாணவர்கள் 4 திட்டங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

பெரிய அளவிலான குறிக்கோள், தொடர்ச்சியான அறிவு தேடல், கடின உழைப்பு, பொறுமை. இந்த 4 குறிக்கோளோடு செயல்பட்டால் தனித் தன்மையோடு செயல் பட முடியும். செல்போன் கண்டுபிடித்த கிரகம்பெல், மின்சார பல்பு கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், டெல்லி மெட்ரோ ரெயில் திட்டத்தை கண்டு பிடித்த ஸ்ரீதரன் போல் ஒவ்வொரு மாணவரிடமும் கண்டு பிடிப்பு எண்ணங்கள் வளர வேண்டும்.

2020 - ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக வேண்டும் என ஒவ்வொரு மாணவரும் ஆசைப்படுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் முன்னேற ஒவ்வொரு மாணவரும் தனித்திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

பின்னர் அப்துல் கலாமிடம் 3 மாணவிகள் கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி:-நாம் காந்திய வழியில் செல்கிறோம். ஏன் ஆயுதம் தயாரிக்க வேண்டும்.

அப்துல்கலாம் பதில்:- அண்டை நாடுகள் ஆயுதங்களை பெரிய அளவில் தயாரித்து வைத்துள்ளது. நாம் சும்மா இருக்க முடியாது. நாமும் தயாரித்து வைத்து கொள்வோம். நாம் அதை முதலில் பயன்படுத்த மாட்டோம். பிற நாடுகள் தாக்குதல் நடத்தும் போது பயன்படுத்தவே இந்த ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளோம்.

கேள்வி:- வெளி நாடுகளில் இருந்து யூரேனியம் கிடைப்பதில்லையே?

அப்துல் கலாம்:- இந்தியாவில் தற்போது தேவையான அளவு யூரேனியம் உள்ளது. தட்டுப்பாடு இல்லை.

கேள்வி :- இந்தியாவில் பெண்களுக்கு செக்ஸ் கொடுமை கூடுதலாக உள்ளதே?

அப்துல் கலாம் :- பெண்கள் தான் அதிக அளவில் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னேறி வருகிறார்கள். செக்ஸ் கொடுமையை தடுக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு நாளும் சுமார் 1 மணி நேரம் நல்லொழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டும். இது வருங்காலத்தில் செக்ஸ் கொடுமையை தடுக்க வழி வகுக்கும்.

என்று கூறினார்.

டீசல், கியாஸ் விலை உயர்வை எண்ணை நிறுவனங்களே முடிவு செய்யும் : பிரணாப்முகர்ஜி தகவல்.



பெட்ரோல்- டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. உற்பத்தி செலவை விட இவற்றின் விலை குறைவாக இருந்ததால் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

இதனால் எரிபொருள் விலை நிர்ணய உரிமையை தங்களுக்கு தரவேண்டும் என்று கோரின. இதையடுத்து பெட்ரோல் நிர்ணய உரிமை எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

உடனடியாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டது. எனினும் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டம் குறையவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு அரசு மானியம் அளிக்க வேண்டியுள்ளது.

எனவே டீசல், சமையல் கியாஸ் விலை நிர்ணய உரிமையையும் எண்ணை நிறுவனங்களுக்கே கொடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதுபற்றி மத்திய நிதி மந்திரி பிரணாப்முகர்ஜி கூறியதாவது:-

பெட்ரோலுக்கான விலைக் கட்டுப்பாடு ஏற்கனவே விலக்கி கொள்ளப்பட்டது. அதேபோல டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றுக்கான விலைக் கட்டுப்பாட்டையும் விலக்கி கொள்ள முடிவு செய்துள்ளோம். இவற்றின் விலைகளை எண்ணை நிறுவனங்களே நிர்ணயிக்கும்.

அதேநேரத்தில் ஏழைகளுக்கும், மின்சார வசதி இல்லாமல் மண்எண்ணை விளக்கை பயன்படுத்துவோருக்கும் மானிய விலையில் தொடர்ந்து மண்எண்ணை அளிக்கப்படும்.

பணவீக்க விகிதம் தற்போது மிகவும் அதிகமாக (9.44 சதவீதம்) உள்ளது. இது ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு அல்ல. பணவீக்கத்தை 5 முதல் 5.5 சதவீதம் அளவுக்கு குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நடப்பு நிதியாண்டின் முடிவில் பணவீக்க விகிதம் 6 முதல் 7 சதவீதம் அளவுக்குள் கட்டுப்படுத்தப்படும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

பெட்ரோலை போல இனி டீசல், கியாஸ் விலையை எண்ணை நிறுவனங்களே உயர்த்தும். இதனால் அவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மண்எண்ணை, சமையல், கியாஸ், உரம் ஆகியவற்றிற்கான மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக பணமாக அளிப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு, அசாம், மராட்டியம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான், ஒரிசா ஆகிய மாநிலங்களில் அக்டோபர் மாதம் முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2013-ல் பொது நுழைவுத் தேர்வு : மத்திய மந்திரி கபில்சிபல் தகவல்.

மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகளுக்கு 2013-ல் பொது நுழைவு தேர்வு: மத்திய மந்திரி கபில்சிபல் தகவல்

என்ஜினீயரிங் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை திட்டம் வகுத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த மாநில அரசுகளை சமாதானப்படுத்தி, எப்படியாவது பொது நுழைவுத் தேர்வு முறையை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மந்திரி கபில்சிபல் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது எனது கனவாகும்.

எனது இந்த கனவு 2013-ம் ஆண்டு நனவாகி விடும். அகில இந்திய பொது நுழைவுத் தேர்வை நடத்திய பெருமை எனக்கு கிடைக்கும். பொது நுழைவுத் தேர்வு முறையை இந்தியர்களில் 80 சதவிகிதம் பேர் வரவேற்றுள்ளனர் என்றார்.

12 மணி நேரம் “வீடியோ கேம்” விளையாடிய வாலிபர் ரத்தம் உறைந்து சாவு .

12 மணி நேரம் “வீடியோ கேம்” விளையாடிய வாலிபர் ரத்தம் உறைந்து சாவு

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கிறிஷ் ஸ்டேனிபோர்த் (20). வீடியோகேம் விளையாடுவதில் இவருக்கு அலாதி பிரியம். அதில் ஈடுபட்டால் தன்னையே மறந்து விடுவார். நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் விளையாடுவார்.

அது போன்று சமீபத்தில் வெளியான மராத்தான் விளையாட்டு சம்பந்தப்பட்ட “வீடியோகேம்” விளையாடினார். அதை தொடர்ந்து விளையாடினார். பரபரப்பும், “திரில்”லும் தொற்றிக் கொள்ளவே 12 மணி நேரம் இடைவிடாமல் விளையாடினார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலனின்றி இறந்தார். தொடர்ந்து விளையாடியதால் மூளையின் செயல்பாடு அதில் தீவிரமாக இருந்ததால் நரம்புகளில் ரத்தம் உறைவு ஏற்பட்டது. அதனால் அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அந்த வீடியோ கேம் தயாரித்த தனியார் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதை இறந்த கிறிஷின் தந்தை டேவிட் மறுத்துள்ளார். வீடியோ கேம் நிறுவனத்தை நான் குற்றம் சுமத்த மாட்டேன். விளையாட்டை ரசிக்காமல் தீவிரமாக அதில் தொடர்ந்து ஈடுபடுவது விளையாடுபவர்கள் செய்யும் தவறாகும். எனது மகன் போன்று இதை தொடர்ந்து விளையாடினால் அது ஆபத்தில் தான் முடியும் என்றார்.

வீடியோகேம் தயாரிப்பு நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற விளையாட்டின் மூலம் கல்வி அறிவை பரப்பி வருகிறோம். ஆனால் விளையாடுபவர்கள் இதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். தொடர்ந்து அதில் மூழ்கி விடக்கூடாது என விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் ; 20 பேர் பலி.

சீனாவில் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள்    தாக்குதல்;  20 பேர் பலி

சீனாவின் ஷின்ஜியாங் மாகாணம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் உள்ளது. பாகிஸ்தானின் கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் என்ற தீவிரவாத அமைப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயிற்சிமுகாம்கள் அமைத்துள்ளது. அங்கு பயிற்சி பெறும் தீவிரவாதிகள் ஷின்ஜியாங் மாகாணத்தில் உள்ள காஷ்கார் என்ற இடத்தில் புகுந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் 2 நாட்கள் நடந்தது. அதில் 20 பேர் பலியாகினர்.

இதுகுறித்து சீன அரசு விசாரணை நடத்தியது. அதில் சீனாவுக்குள் தீவிரவாதிகள் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்தது தெரிய வந்தது. இச்சம் பவத்துக்கு சீனா, கண்டனம் தெரிவித்துள்ளது.

யோக்கியர்கள் போல எதிர்க்கட்சிகள் பேசுவது சரியல்லை - பிரதமர்.



நாடாளுமன்றத்தில் எந்தப் பிரச்சினை குறித்தும், எந்தவிதமான விவாதத்தையும் சந்திக்க நாங்கள் தயார். எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை எழுப்பினால் அவர்களது ஊழல்களை நாங்கள் எழுப்புவோம் அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்று அதிரடியாகப் பேசியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்

வழக்கமாக மென்மையாக பட்டும் படாமல், புரியாதது போல பேசுவார் ம்ன்மோகன் சிங். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் அதிரடி வியூகத்திற்கு பதிலடியாக பேசியுள்ளார் பிரதமர்.

எதிர்க்கட்சிகள் வகுத்து வரும் வியூகத்தை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்று செய்தியாளர்கள் மன்மோகன் சிங்கிடம் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,

ஊழலைப் பற்றி அவர்கள் பேசட்டும். பதிலுக்கு அவர்களுடைய ஊழல்களைப் பற்றி நாங்களும் பதிலுக்குப் பேசிவிட்டுப் போகிறோம். எங்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களை விட எதிர்க்கட்சிகள் மீதுதான் நிறைய ஊழல் மண்டிக் கிடக்கிறது. அவர்கள் மட்டும் என்ன ரொம்ப யோக்கியமா?.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நாடாளுமன்றத்தில் அதுகுறித்துப் பேசக்கூடாது. இது குறித்து நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கட்டும், நாடாளுமன்றம் தீர்ப்பளிக்கக் கூடாது என்றார் பிரதமர்.

இதற்கிடையே, பிரதமர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றம்தான் எல்லா அமைப்புகளையும்விட உயர்வானது. மக்களை பாதிக்கும் பிரச்னைகளை அங்கே பேசாமல் இருக்க முடியாது. அரசின் ஊழல்களைப் பற்றிப் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சிகளுக்கு யாரும் வாய்பூட்டு போட முடியாது.

அரசின் எல்லா ஊழல்கள் குறித்தும் கட்டாயம் பேசுவோம், ஏன் என்றால் இந்த ஊழல்கள் மீது அரசு தானாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பத்திரிகைகள், எதிர்க்கட்சிகள், பொதுநல வழக்கு தொடுத்த மனுதாரர்கள் ஆகியோரின் மனம் தளராத முயற்சிகளுக்குப் பிறகே ஊழல்களை விசாரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது என்றார்.

கடந்த தொடர் போல ஸ்தம்பிக்குமா?

கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட அலுவல் நடக்கவில்லை. காரணம், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா பதவி விலகக் கோரி அந்தத் தொடரையை முடக்கிப் போட்டன எதிர்க்கட்சிகள். இந்த நிலையில் இந்தக் கூட்டத் தொடராவது முழுமையாக நடக்குமா என்ற கவலையில் அரசுத் தரப்பு உள்ளது.

நோய்களை தீர்க்கும் யோகா, தாளாசனம், கோணாசனம்.

நோய்களை தீர்க்கும் யோகா.
நோய்களை தீர்க்கும் யோகா

யோகா என்றால் ஏதோ நமக்கெல்லாம் வராது. அதற்கெல்லாம் நேரம் ஏது என்று நினைப்பவர்களும், சொல்பவர்களும்தான் அதிகம். ஆனால் யோகா என்பது நம்மை விட்டு தனியாக இருக்கும் செயல் அல்ல. நமக்காக, நமது ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.

எல்லா யோகாக்களையும் செய்யாவிட்டாலும், சூர்ய நமஸ்காரம் போன்ற முக்கியமான யோகாக்களையாவது தினமும் ஒரு சில நிமிடங்கள் செலவழித்து செய்வதால் நமது ஆரோக்கியத்திற்கு உத்திரவாதத்தை அளிக்க முடியும். நாம் உடலை கெடுத்துக் கொள்வதற்காக எத்தனையோ விஷயங்களைச் செய்கிறோம்.

காசு கொடுத்து சிகரெட் வாங்கி புகைப்பது, மது அருந்துவது, கண்ணைக் கெடுக்கும் அளவிற்கு தொலைக்காட்சி பார்ப்பது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்படி உடலைக் கெடுத்துக் கொள்ள எத்தனையோ விஷயங்களைச் செய்யும் நாம், ஆரோக்கியமாக இருக்க ஏன் இந்த யோகாவைப் பின்பற்றக் கூடாது.

வினை விதைத்தவன் தானே வினையை அறுக்க வேண்டும். ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய செயல்களை செய்த நாம்தானே ஆரோக்கியத்திற்கு தேவையான யோகாவையும் செய்தாக வேண்டும். நாம் ஆரோக்கியமாக வாழவும், வந்த நோயை விரட்டவும் கூட யோகா பயன்படுகிறது.

ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, கருப்பை பிரச்சினை, மூட்டு வலி, கழுத்து வலி என பல நோய்களுக்கும் யோகாவின் மூலமாக தீர்வு காணலாம். யோகாவைச் செய்ய வயது வித்தியாசமோ, உடல் எடையோ, பாலினமோ எந்த தடையும் இல்லை. எந்த வயதினரும், எவ்வளவு எடை கொண்டவர்களும் இதனை செய்து பயன்பெறலாம்.


தாளாசனம்.
தாளாசனம்

செய்முறை:

நேராக நிமிர்ந்து நில்லுங்கள். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கவும். உள்ளங்கைகள் ஒன்றுக்கொன்று பார்த்திருக்கட்டும். இரண்டு குதிகால்களும் சற்று உயரும் வகையில், எக்கிப்பாருங்கள். இப்பொழுது உங்கள் கால் விரல் அடிச்சதையில், ஒட்டுமொத்த உடம்பும் இருந்கும். இயல்பான சுவாசத்தில் 15 வினாடி நின்று, பின் பழைய நிலைக்கு வரவும்.

பயன்கள்:

பாதத்தில் உள்ள குதிகாலில் இருந்து தலையிலிருக்கும் பிட்யூட்டரி சுரப்பி வரை, எல்லா நரம்புகளும் ஒரு முறை இழுத்து விடப்படுவதால், ஒட்டுமொத்த உடம்புக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பாதம், கால், தொடை, தசைகள் வலுப்பெறுவதால், உடம்பு, ' சும்மா ' பனை மரம் போல் உறுதியாக இருக்கும்.


கோணாசனம்.
கோணாசனம்

செய்முறை:

முதலில் நேராக நின்று கொண்டு கால்களை 2 அடிக்கு அகற்றி வைக்கவும். பின்னர் கைகளைப் தலைக்கு மேலே தூக்கிக் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடலை வளைக்காமல் சாய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். இவ்வாறு 3 முறை செய்யலாம். பின் படிப்படியாக எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம்.
Justify Full
பலன்கள்:

விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பில் சதை போடாமல் தடுக்கலாம்