Wednesday, July 20, 2011

கார்பரேட் கம்பெனிகள் கைகளில் இருந்து நிலங்களைக் காப்பற்ற..



தரிசு நில மேம்பாட்டிக்காண மற்றும் ஒரு நல்ல லாபாகரமான விவசாய பயிராக கருதபடுவது காட்டாமணக்கு ( கொட்டை முத்து), இனி வரும் காலங்களில் மாற்று எரிபொருளுக்கான முக்கிய மூல பொருளாக கருதபடுவதும் இதுவே ஆகும். சில வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விவசாயிகள் இதை பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டு, தங்கள் தரிசு நிலங்களில் விவசாய துறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் பயிரிட துவங்கினர்,

தமிழ்நாடு விவசாய துறை கணக்கெடுப்பில் சுமார் 41 ஆயிரம் ஏக்கர் அளவில் பயிரிடபட்டது. அத்திட்டத்தை செயல்படுத்த, ஜெய்ப்பூரில் இருந்து காட்டாமணக்கு விதைகள் டன் கணக்கில் வரவழைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. விவசாயத்துறை அதிகாரிகள், "வானம் பார்த்த பூமியாக கிடக்கும் தரிசு நிலங்களில், காட்டாமணக்கு செடியை நடவு செய்தால், ஒரு ஏக்கருக்கு 3 டன் காட்டாமணக்கு கொட்டைகளை மகசூலாக பெறலாம்.

ஆண்டுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும், பயோ டீசல் தயாரிக்கலாம்,காட்டாமணக்கு செடியை ஆடு, மாடுகள் மேயாது,அதிக ஆண்டு காலம் மகசூல் பெறலாம்' என்ற வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் போல் அள்ளித் தெளித்தனர். தரிசு நிலம் அதிகமாக காணப்படும் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், இந்த அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு காட்டாமணக்கு பயிரிடப்பட்டது.

ஆனால் நடப்பட்ட செடிகளுக்கு நீர் தேவை என்பது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது, வாரம் ஒருமுறையாவது சிறிதளவு தண்ணிர் பாய்ச்ச வேண்டியதாக இருந்தது, வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை இதற்கு காரணம் விதைகளை ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏனோ தானோ என்று இருந்த விவசாய அதிகாரிகள்தான். விளைச்சல் இல்லாத நிலத்தை விளை நிலமாக மாற்றும் அருமையான திட்டம். செடிகளை மாவட்ட அளவில் சில ஏக்கர் அளவில், சோதனை முயற்சியாக பயிரிட்டு, மகசூல் எப்படி கிடைக்கிறது என்பதை, கள ஆய்வின் மூலம் கண்டிருக்க வேண்டும்.

மத்திய அரசு திட்டம் என்பதாலும், நிதியுதவி அளிக்கப்படுகிறது என்பதாலும், ஏனோ தானோ என திட்டத்தை அவசர கதியில் மேல் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் நிறைவேற்றினர். மேலும், தரமான விதைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தரமான செடிகளை உருவாக்காமல் தவறு நடந்திருக்கிறது. அதனால், அருமையான திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவை வேளாண்மை பல்கலையில் நல்ல தரமான காட்டாமணக்கு செடிகள் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் அப்போது பயோ டீசல் ஒரு லிட்டர் தயாரிக்க ஆகும் செலவு, டீசல் விலையை விட சற்று அதிகமாக இருந்தது, ஆனால் இப்போது நிலைமை தலை கிழாக மாறிவிட்டது, டீசல் விலை 100 -ஐ தாண்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதால், பயோ டீசல் என்பது விரைவில், தரிசு நிலங்களை தங்க நிலமாக மாற்றும் என்பதில் மாற்றம் இல்லை. ஏற்கனவே கார்பரேட் கம்பெனிகள் தரிசு நிலங்களை 1000 ஏக்கர், 2000 ஏக்கர் என வளைக்கத் தொடங்கிவிட்டனர்.

தங்கள் பணத்தை முதலீடு செய்யும் நண்பர்கள், வீடு, சைட் போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக, ஒரு ஏக்கர் ரூ 2 அலல்து 3 லட்சங்களுக்கு கிடைக்கும் நிலங்களில் முதலீடு செய்தால், நல்ல லாபம் பெறலாம். நமது பாரம்பரிய நிலங்களையும் கார்பரேட் கம்பெனிகள் கைகளில் இருந்து காப்பற்றலாம்..

வீரபாண்டியார், சட்டவிரோத கும்பலின் தலைவரா?


தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம், 23 கோடி ரூபாய் ஏப்பம் விட்டுவிட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சருடன் சேர்த்து 11 பேர்மீது 8 குற்றப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. அந்தப் பிரிவுகளில் ஒன்று, ‘சட்டவிரோதமான கும்பல்!’

சேலம் ஐந்து ரோடுக்கு அருகே பிரிமியர் ரோலர் ப்ளவர் மில் இயங்கிவந்தது. இதில்தான் கைவைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர்.

குறிப்பிட்ட மில்லின் உரிமையாளர் வெங்கடாசலம், ஆடிட்டர் ஒருவரிடம் 3 கோடி ரூபாய் கடன் வாங்க நேர்ந்தது. அதைத் திருப்பிக் கொடுக்க தயாரானபோது, அமைச்சர் காட்சிக்குள் வந்திருக்கிறார்.

“வாங்கிய கடனைத் திருப்பியெல்லாம் கொடுக்க முடியாது. அதற்காக மில்லை கொடுத்துவிட வேண்டும்” என்று அமைச்சர் மிரட்டவே, மில் அமைச்சருக்கு கைமாறியது. அதன்பின், அந்த மில்லை, பிரபல ஜவுளிக்கடை அதிபர் சீனிவாசனிடம், 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார் வீரபாண்டி ஆறுமுகம்.

அந்தத் தொகையிலிருந்து மில்லின் உரிமையாளர் வெங்கடாசலத்து 7 கோடி ரூபாய் கொடுத்த முன்னாள் அமைச்சர், மீதமுள்ள தொகையில், தனக்கு 15 கோடி ரூபாய், மிரட்டலுக்கு உதவி வழங்கிய இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு 4 கோடி ரூபாய், ஆடிட்டர் துரைசாமிக்கு, 4 கோடி ரூபாய் என்று பங்கீடு செய்து கொண்டார்.

மில்லை பறிகொடுத்த வேதனையில், வெங்கடாசலம் உயிரிழந்து விட்டார்.

தி.மு.க. ஆட்சியின் தூண்களில் ஒருவராக வீரபாண்டியார் விளங்கிய காரணத்தால், இதுபற்றி அப்போது யாரும் புகார் கொடுக்க முடியவில்லை. தற்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருக்கு அடுத்தபடியாக ஆடிட்டர் துரைசாமி, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், மாநகர தி.மு.க., துணைச் செயலர் அழகாபுரம் முரளி என்று தொடங்கி, மொத்தம் 11 பேர்மீது வழக்கு பதிவாகியுள்ளது.

சேலம் போலீஸார் இதுபற்றித் தெரிவிக்கையில், வீரபாண்டியார் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ள சட்டப் பிரிவுகளைப் பட்டியலிட்டுள்ளனர். சட்டவிரோதமான கும்பல், ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல், அத்துமீறி நுழைதல், மிரட்டுதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தல்… என்று நீள்கிறது அந்தப் பட்டியல்.

மதுரையில் பிரபல சினிமா பைனான்ஷியர் அன்பு கைது.


பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்.

பல படங்களுக்கு பைனான்ஸ் கொடுத்ததன் மூலம் இவர் திரைத்துறையில் மிக பிரபலமாக இருந்து வந்தார்.

திரைப்படத் தயாரிப்பில், தயாரிப்பாளர்களின் நெருக்கடியான சூழ்நிலைக்கு எந்த நேரத்தில் எவ்வளவு பணம் கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் ஆற்றலுடன் கொடிகட்டிப் பறந்தவர்.

திரைப்படத் தயாரிப்பிற்கான நிதிஉதவி என்றாலே வட்டி அதிகம். ஆனால் இவரிடம் வட்டி இன்னும் அதிகம். அதேபோல் வசூலில் இவரது கெடுபிடிகள் கொடூரமானது.
.
பிரபல இயக்குநர் மணிரத்னம் அண்ணன் ஜி.வி. தற்கொலைக்கு இவரே மூலகாரணம். இவரிடம் பெற்ற கடனுக்காக அதைவிட பன்மடங்கு வட்டி செலுத்தியபோதும் அசல் அடைபடாமல் இருந்தது ஒருபுறமும், இன்னொருபுறம் இவரது கொடூரமான கெடுபிடிகள் தந்த மன உளைச்சலின் விளைவே மேற்கண்ட தற்கொலை முடிவிற்கான காரணமாக அமைந்தது.

25இலட்சரூபாயே ஜி.வி.யை தற்கொலையின் விளிம்பிற்குத் தள்ளியது.

நான் கடவுள் படத்தில் இருந்து நடிகர் அஜீத் விலகியபோது, அவரை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துவந்து, இவரால் கொடூரமாக மிரட்டப்பட்டிருக்கிறார். மரணபயம் அவருக்குக் காட்டப்பட, கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதிருக்கிறார் 'தல' அஜீத். இறுதியாக 3கோடிரூபாய் ஈடாக தருவதாக ஒப்புக்கொண்டபின் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சொன்னமாதிரியே பயத்துடன் 3கோடிரூபாய் கொடுத்தும் இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் மிரட்டியதாக அவ்வப்போது இவர் மீது சர்ச்சைகள் எழுந்தவண்ணம் இருந்தது.

காலப்போக்கில் அவரே தயாரிப்பாளர் ஆனார். பின்னர் விநியோகஸ்தருமானார். ரியல்-எஸ்டேட் துறையிலும் கால்பதித்தார்.

இந்நிலையில் நில அபரிப்பு வழக்கில் இவர், 19-07-2011 இரவு மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் நான்கு புகார்கள் உள்ளன என்று போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

நில அபகரிப்பு வழக்கு : வீரபாண்டி ஆறுமுகம் மீது சேலம் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு.



திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

கட்டப்பஞ்சாயத்துகளின் மூலம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்போர் மற்றும் அபகரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்ததன் பேரில் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி தவறு செய்த தி.மு.க.வினர் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வேளாண்துணை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் மீது நில அபகரிப்பு வழக்கில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அங்கம்மாள் காலணியில் இருந்து மக்களை விரட்டி விட்டு அவர்கள நிலத்தை அபகரித்தது சம்பந்தமாக ஒரு வழக்கும்,

சேலம் பிரிமியர் மில் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இருந்து அபகரித்தது சம்பந்தமாக ஒரு வழக்கும்,

இன்று சேலம் மாநகர காவல்துறை குற்றப்பிரிவு அலுவலகத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, July 19, 2011

டீசல் சேமிப்பு : 108 ஆம்புலன்ஸ்களுக்கு வேகத்தடை- புலம்பும் டிரைவர்கள்



உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களில் டீசலை சேமிக்க 50கிமீ வேகத்திற்கு மேல் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக டிரைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள். அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

8 மணி வேலை நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரத்திற்கும் மேலாக பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பெற்று வருகிறோம். கூடுதல் வேலை நேரத்திற்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படுவதில்லை. இதனால் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.

வேலைக்கு சேரும்போது சொந்த ஊரிலோ, அல்லது சொந்த ஊருக்கு அருகிலோ தான் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு ஊரில் பணிபுரிய வேண்டியுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகன டயர்களின் ஆயுட்காலம் 40 ஆயிரம் கிமீ வரைதான் என சம்பந்தப்பட்ட கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன. ஆனால் அதிகாரிகள் 80 ஆயிரம் கிமீ ஓட்ட நிர்ப்பந்திக்கின்றனர். இதனால் உயிருக்கு போராடும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது டயர்கள் பழுதாகி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறோம். தொடர்ந்து எரிபொருள் சிக்கனம் என்று கூறி 50 கிமீ வேகத்திற்கு அதிகமாக ஆம்புலன்ஸை ஓட்ட அனுமதிப்பதில்லை.

இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். எனவே ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.

சமச்சீர் கல்வித் திட்டத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது தமிழக அரசு.



சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது தமிழக அரசு.

சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், நடப்பாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் 22ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு வசதியாக, சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அந்தக் கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும் படி பெஞ்ச் உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று மாலை நீதிபதிகள் முன்பு அட்வகேட் ஜெனரல் மீண்டும் ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய வேண்டியதிருப்பதால், உத்தரவின் நகலை உடனடியாக தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

உத்தரவின் நகலை உடனடியாக தரமுடியாது என்றாலும், இன்றைக்குள் (18.07.2011) கொடுக்கப்படும் என்று தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவரிடம் தெரிவித்தார். மேலும் உத்தரவின் நகலை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலமாகவும் அப்பீல் செய்யலாமே என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பீல் செய்வது தொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலாளர் சபீதா, அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் நேற்றுஇரவே டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் அமைச்சர் குழு தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் பின்னர் இன்று மேல் முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.

அதில், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது. பாடப் புத்தகங்கள் தரமற்ற பாடத்துடன் உள்ளன. எனவே நடப்பாண்டில் பழைய பாடத் திட்டத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு புதன் அல்லது வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வருகிறது.

5 பேர் கேவியட் மனு

இதற்கிடையே, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு மீது தங்களையும் விசாரிக்காமல் தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று கோரி 5 பேர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

என் முதலாளி கலாநிதி மாறன், அவர் சொன்னதைச் செய்தேன் - சக்சேனா பரபரப்பு வாக்குமூலம்.



நான் ஒரு சாதாரண தொழிலாளிதான். எனது முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன் என்று சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மாப்பிள்ளை என்ற படத்தை ஹிதேஸ் ஜபக் தயாரித்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்டது. பெரிய அளவில் விளம்பரமும் செய்தார்கள். ஆனால் படம் ஓடவில்லை.

இந்த நிலையில் ஹிதேஸ் ஜபக் போலீஸில் புகார் கொடுத்தார். அதில் சக்சேனா தன்னை மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக்சேனாவை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகையில்,

பல சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் குறித்து சக்சேனா வாக்குமூலம் அளித்துள்ளார். தான் ஒரு சாதாரண தொழிலாளி என்றும், முதலாளியான கலாநிதி மாறன் என்ன செய்யச் சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாகவும் சக்சேனா கூறியுள்ளார்.

எந்த ஒரு விஷயத்திலும் தன்னிச்சையாக தான் எதையும் செய்யவில்லை. தன்னுடைய மேல் அதிகாரிகள் சொன்னதை தான் தான் செய்ததாகவும் அவர் கூறியுள்ளாராம்.

இதையடுத்து சக்சேனா சொன்ன தகவல்கள் உண்மைதானா என்பதை அறிய கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்தி ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே அவரை விசாரணைக்கு வருமாறு கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதற்கு அவர் காலஅவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து ஜூலை 29ம் தேதி வரை டைம் கொடுக்கப்பட்டிருப்பது நினைவு கூறத்தக்கது.