Sunday, July 17, 2011

16 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் வசூல் ; கந்துவட்டி வசூலித்த தொழில் அதிபர் கைது.

16 லட்சம் கடனுக்கு ரூ.50 லட்சம் வசூல்; கந்துவட்டி வசூலித்த தொழில் அதிபர் கைது

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் விஜய் . இவர் வியாபாரத்துக்காக அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவரிடம் ரூ.16 லட்சம் கடன் வாங்கினார். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வீதம் கடந்த 18 மாதங்களாக வட்டி கட்டி வந்தார்.

வியாபாரம் சரியாக நடக்காததால் தொடர்ந்து வட்டி கொடுக்க முடியாமல் திணறினார். இதில் கோபம் அடைந்த ரமேஷ்பாபு அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதனால் விஜய் தனது வீட்டை விற்று வட்டி தொகையை கொடுத்து வந்தார்.

மொத்தம் ரூ.50 லட்சம் வரை வட்டி கொடுத்து விட்டார். ஆனாலும் ரமேஷ் பாபு கடந்த ஒரு வாரமாக மிரட்டி இன்னும் ரூ.10 லட்சம் வேண்டும் என்றார். இதுபற்றி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தொழில் அதிபர் ரமேஷ்பாபுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

தோல்வியில் முடிந்த நித்யானந்தாவின் நிகழ்ச்சி !



ஆபாச வீடியோ குற்றச்சாட்டால் சரிந்துபோன தனது செல்வாக்கை சரிசெய்ய, தியானத்தில் இருப்பவர்களை 'குண்டலினி சக்தி'யின் மூலம் அந்தரத்தில் மிதக்க வைப்பதாக சவால் விட்ட நித்யானந்தாவின் ஆன்மீக நிகழ்ச்சி தோல்வியில் முடிந்தது.

பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, 15.07.2011 அன்று காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

ஆசிரமத்திலுள்ள ஆனந்தேஸ்வரா சன்னிதியின் முன், பஞ்சதபா ஆசனம் போடப்பட்டிருந்தது. அதில், நித்யானந்தா அமர்ந்திருந்தார்.

இந்த குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது நித்யானந்தா ரஞ்சிதாவின் தலையை தொட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும், ஆசிரம பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து நித்யானந்தாவுக்கு பாதபூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.

சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார்.

குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய எம்பி யெம்பி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார்.

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சிரித்த நித்யானந்தாவிடம் ஒருவர் சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி



2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், தேர்தல் தோல்விகள் என அடுத்தடுத்து அடி வாங்கும் திமுகவில் தற்போது வாரிசு சண்டை உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக திமுகவில் சர்வ சக்தியோடு விளங்கும் மாவட்ட செயலாளர்கள் விஷயமாகவும், திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மகள் கனிமொழி மற்றும் தன் கோட்டையான மதுரையிலேயே கோட்டை விட்ட அழகிரி தொடர்பாகவும் திமுக தலைவர் கருணாநிதியும் அவரது இளைய மகனும் அவரின் அடுத்த அரசியல் வாரிசாகவும் கருதப்படும் ஸ்டாலினும் மோதிக் கொண்டது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தோல்விக்கு காரணமாக வாரிசு அரசியல் பிரதானமாக கூறப்படும் சூழலில் இப்போதாவது தன் இருப்பை தக்க வைத்து கொள்ளும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரமாக இரு வித முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். முதலாவதாக கோவையில் வரும் 23ம் தேதி நடக்க உள்ள திமுகவின் பொதுக்குழுவில் வாரிசு அரசியல் பிரச்னையை கிளப்பி அழகிரி மற்றும் கனிமொழியை ஓரங்கட்டுவதோடு தன்னை முறைப்படி வாரிசாக அறிவிக்க கருணாநிதியை நிர்ப்பந்தப்படுத்துவதாக தெரிகிறது.

இதற்கு அணை போடும் விதமாக திருமண விழா ஒன்றில் பேசிய அழகிரி கட்சி விழாக்களில் கருணாநிதி, அண்ணா படங்களை பயன்படுத்துமாறும் தன் குடும்ப உறுப்பினர்கள் யாரின் பெயரையும் பயன்படுத்த வேண்டாம் என்று மறைமுகமாக ஸ்டாலினுக்கு செக் வைத்தார். அடுத்த படியாக திமுகவில் சர்வ அதிகாரத்துடன் வலம் வரும் மாவட்ட செயலாளர்களை ஓரங்கட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் நினைத்தார். ஏனென்றால் நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி என தங்கள் மாவட்டங்களில் குறுநில மன்னர்களாக விளங்கும் இவர்களை ஓரங்கட்டாமல் தன்னால் முன்னேற முடியாது என்பது ஸ்டாலினுக்கு தெரியும்.

அதனால் மாவட்ட செயலாளர்களை அகற்றி விட்டு ஒவ்வோர் சட்டமன்ற தொகுதிக்கு ஓர் பிரதிநிதியை நியமிக்கும் வகையில் கட்சியில் மாற்றங்களை கொண்டு வர கருணாநிதியை ஸ்டாலின் நிர்ப்பந்தித்தார். ஆனால் மாவட்ட செயலாளர்கள் இம்முடிவை கடுமையாக எதிர்க்கிறார்கள். இச்சூழலில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே ஸ்டாலின், கருணாநிதியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகத் தெரியவருகின்றது. அப்போதே இருவருக்குமிடையே ஒருவித பிணக்கு இருந்திருக்கின்றது. இந்த நிலையில் ஸ்டாலின்மீது திட்டமிட்டபடி அடுத்தடுத்து புகார்கள் செல்லும் வகையில் சிலர் ஏற்பாடு செய்ததாக ஸ்டாலினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

கட்சிக்காரர்கள் தன்னை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக, கடந்த சில நாட்களாக தினமும் அறிவாலயம் சென்று கொண்டிருந்த கலைஞரிடம், இந்தப் புகார்கள் போய்ச் சேரும்படியாகப் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், கலைஞரைச் சந்திக்க அவரது அறைக்குள் அனுப்பப்பட்ட ஒவ்வொருவரும், ஸ்டாலினைப் பற்றிய புகார் சொல்லிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

வரிசையாக ஸ்டாலின்மீது புகார்கள் மாத்திரம் வருவதால், கலைஞர் கோபமுற்றதாகச் சொல்கிறார்கள். உடனடியாக ஸ்டாலினை அறிவாலயத்துக்கு அழைக்குமாறு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

தகவல் கிடைத்து ஸ்டாலினும் அறிவாலயம் சென்று கலைஞரைச் சந்தித்திருக்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி தனிமையில் பேசாமல், தனது அறைக்குள் மற்றையவர்கள் இருந்த நிலையில் கலைஞர், கேள்விக் கணைகளைத் தொடுத்தது, ஸ்டாலினை நிலைகுலைய வைத்துவிட்டது என்கிறார் அங்கிருந்த ஒருவர்.

இதையடுத்து ஸ்டாலினும் தன்பங்குக்கு கோப வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினாராம். கனிமொழியின் ஏற்பாடுதான், வரிசையாகக் கலைஞரை வந்தடைந்த குற்றச்சாட்டு என்று வெடித்தாராம் ஸ்டாலின். இதற்கு அழகிரியின் ஆசீர்வாதம் இல்லாமல் குற்றச்சாட்டுகள் அறிவாலயம்வரை வந்திருக்க முடியாது என்றும் குறிப்பிட்டாராம்.

“அறிவாலயத்தில் உங்களைப் பார்க்க வெவ்வேறு விவகாரங்களுடன் எத்தனை பேர் வருவார்கள்? ஒவ்வொன்றும் வேறுபட்ட விஷயமாக இருக்கும். ஆனால், இங்கு நடந்தது என்ன? உங்களைச் சந்தித்த ஒவ்வொருவரும், ஒரு ஆள் பாக்கியில்லாமல், என்மீது புகார் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். யோசிக்க வேண்டாமா?” என்று குரலை உயர்த்தினாராம் ஸ்டாலின்.

அறிவாலயத்துக்குள்ளேயே எனக்கு எதிராக சதி நடக்கின்றது என்றும் கூறிய அவர், “உங்களைச் சந்திக்க வந்தவர்களை வரிசையாக உள்ளே அனுப்பி வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியும்” என்று உறுமினாராம்.

“இவ்வளவும் நடக்கையில், அந்த அறைக்குள் இருந்த மற்றவர்கள் திக்பிரமை பிடித்ததுபோல இருந்திருக்கிறார்கள். வழக்கமாக தந்தைக்கு முன் குரலை உயர்த்திப் பேசாத ஸ்டாலின் அன்று ருத்ரம் கொண்டது, அவர்களைத் திகைக்க வைத்தது”

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த மோதலையடுத்து, கோபத்துடன் ஸ்டாலின் அறிவாலயத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில், கோபமான முகத்துடன் கலைஞரும் புறப்பட்டு கோபாலபுரம் சென்றிருக்கிறார்.

செல்வி அங்கே இருந்திருக்கிறார். அவர் கனிமொழிக்கும் அழகிரிக்கும் எதிராக புகார் சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஸ்டாலினுக்கு ஆதரவாகப் பேசிய செல்வி, குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சியில் கனிமொழிதான் இப்படியெல்லாம் செய்வதாகக் கூறியிருக்கின்றார்.

இந்தக் கட்டத்தில் கலைஞர், “நான் இந்த வீட்டிலிருந்தும் போய் விடுகிறேன். கட்சியிலிருந்தும் போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, தனது உதவியாளர் சண்முகநாதனை மாத்திரம் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றுவிட்டார். அன்று மாலைவரை போனில் அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை

இலங்கையின் போர்க்குற்றம் : முதல்முறையாக 'வாயைத் திறந்தது ' இந்தியா !



இலங்கை மீதான போர்க்குற்ற விவகாரத்தில், இந்தியா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. இறுதிப் போரின்போது அங்கு நடந்த மனித உரிமை மீறல் புகார்களை விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில், ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட போரில் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக ஐ.நா. சபை நியமித்த நிபுணர் குழு குற்றம் சாட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

அவர் மீது உலகம் முழுக்க போர்க்குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பிடிபட்ட பெண் போராளிகளை ராணுவத்தினர் கொடூரமாக சிதைக்கும் காட்சிகள், இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான 50 நிமிட வீடியோவை சேனல் 4-ம், இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடேவும் வெளியிட்டன. ஆனால் இந்த பிரச்சினையில், இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்த இந்தியா, நேற்று தனது மவுனத்தை கலைத்தது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ் கூறுகையில், "இலங்கையில் பல்வேறு வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 20 சதவீதம் பேர் தமிழ் பேசுபவர்கள். அவர்களுக்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவின் இதர பகுதிகளிலும் நண்பர்களும், உறவினர்களும் உள்ளனர்.

எனவே, அவர்களின் நலனில் இந்தியாவுக்கு அக்கறை உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சட்டரீதியான மனக்குறைகள் உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அந்த அடிப்படையில், தாம் இலங்கையின் சம அந்தஸ்து பெற்ற குடிமக்கள்தான் என்றும், தாம் கவுரவமாகவும், சுயமரியாதையுடனும் வாழ முடியும் என்றும் இலங்கை தமிழர்கள் எண்ணும் அளவுக்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுதான், இப்பிரச்சினையில் இந்தியாவின் பார்வை.

மனித உரிமை மீறல்கள்

இலங்கை போரின் இறுதி நாட்களில் நடந்தவை பற்றி தெளிவாக தெரியவில்லை. அப்போது நடந்தவை பற்றி தனக்கு விளக்குவதற்காக, ஐ.நா. பொதுச்செயலாளர் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்தவரை, பல்வேறு கேள்விகள் உலவுகின்றன. இப்பிரச்சினையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சில நாடுகள் எழுப்பின.

போர்க்குற்றம் குறித்து விசாரணை...

இந்தியாவை பொறுத்தவரை, போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசின் கருத்துகளை பல்வேறு தருணங்களில் கேட்டுள்ளது. கடந்த மே மாதம், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி டெல்லிக்கு வந்தபோதும், கடந்த மாதம் கொழும்பு நகரில் நடைபெற்ற சந்திப்பின்போதும் கேட்டுள்ளோம்.

இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை அரசு விரிவான முறையில் ஆய்வு செய்வது அவசியம். மனித உரிமை மீறல் தொடர்பாக எழுப்பப்படும் கவலைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.

இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும். போர் முடிந்ததால் கிடைத்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழர்களை மறுகுடியேற்றம் செய்யும் பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம்," என்றார்.

மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதால் ஈரோடு மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டாரா ?

ஈரோடு மாவட்ட   கலெக்டர் மாற்றத்துக்கு மாணவர்கள்-    விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப் பட்டவர் ஆர். ஆனந்தகுமார். இவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றார். மேலும் சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் கலெக்டர் ஆர். ஆனந்தகுமாரை நேற்று முன்தினம் தமிழக அரசு திடீரென்று மாற்றி உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக இதற்கு முன்பு இங்கு கலெக்டராக இருந்த சி.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் மாற்றப்பட்டதற்கு விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் குக்கூ என்ற மாலை நேர படிப்பகத்தில் படித்து வரும் அரசு பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த ஏழை மாணவ - மாணவிகள் கலெக்டர் ஆனந்தகுமாரை மாற்றக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினர். அதில் அவர்கள், மண்ணையும், மக்களையும் காக்கும் கலெக்டர் ஆனந்த குமாரை மாற்றக்கூடாது என்று கூறியுள்ளனர்.

இதேபோன்று காளிங்கராயன் பாசன சபை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலாயுதம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், ஈரோடு மாவட் டத்தில் தோல், சாய, சலவை ஆலை கழிவுகளால், காவிரி, பவானி, காலிங்கராயன் ஆகிய நீர் ஆதாரங்கள் மாசுபட்டுள்ளன. பொது மக்கள் கேன்சர், மலட்டு தன்மை போன்ற பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கலெக்டராக வந்த ஆனந்தகுமார் முறையாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் கலெக்டர் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது மீண்டும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே கலெக்டர் ஆனந்தகுமார் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் பாரதி வாசகர் வட்டம் விடுத்துள்ள ஒரு செய்தி குறிப்பில் தமிழக முதல்-அமைச்சர் கலெக்டரை மாற்றியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கலெக்டர் அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதால்தான் மாற்றப்பட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Saturday, July 16, 2011

சக்சேனா கேஸில், கத்தி செருகிய தி.மு.க. அமைச்சர் !



டப்பா காலியானாலும், உள்ளே பெருங்காய வாசனை பலமாகத்தான் இருக்கும். கட்சிக்கு அப்படியொரு பெருங்காய வாசனையை காட்டியிருக்கிறார் தி.மு.க. அமைச்சர் பழனி மாணிக்கம் என்று டில்லி வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தி.மு.க.வுக்கு எதிராகப் பாயும் சட்ட நடவடிக்கைகளின்போது பெரிதாக எந்த உதவியும் செய்ய முடியாது என்ற நிலையில், ஏதோ தனது சக்திக்கு முடிந்தவரை, சிறியதாக ஒரு மின்னல் கீற்று காட்டியிருக்கிறார் அவர் என்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சக்சேனா தொடக்கத்தில் கைதாகக் காரணமாக இருந்தது, சேலம் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகார்தான். அதைத் தொடர்ந்துதான் மற்றைய சினிமாப் புள்ளிகள் வெளியே தைரியமாக வந்து புகார் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதையெல்லாம் ஆரம்பித்து வைத்த சேலம் செல்வராஜை சும்மா விடலாமா? கட்சியின் கியாதி என்னாவது? நாளைக்கு கட்சியை யார் மதிப்பார்கள்?

இப்படியான பிரஸ்டீஜ் மேட்டரில், அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கு சென்னை யிலிருந்து உத்தரவு வந்தது என்கிறார்கள் டில்லியில். இந்த மாணிக்கம்தான், மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர்!

சக்சேனாவில் அடிதடி-மிரட்டல் வழக்குகளில் இருந்து அவரைக் காப்பாற்ற மத்திய நிதியமைச்சால் முடியாது. கிரிமினல் வழக்குக்கும் நிதி அமைச்சுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், நிதி அமைச்சுடன் சம்மந்தமுடைய வேறு ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு, இன்டைரக்டாக இதற்குள் வருவதற்கு, நம்மாட்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

சாமர்த்தியமாக, அந்த ரூட்டில் வந்து சேர்ந்தார் பழனி மாணிக்கம் என்பதே பேச்சாக இருக்கின்றது!

இவரது துறையின்கீழ்தான் வருமான வரி இலாகா வருகின்றது. பொதுவாக சினிமாக்காரர்களை எடுத்துக் கொண்டால், வருமானவரி இலாகாவின் ‘கோ-பை-த-புக்’ நடைமுறைகளை 100% பின்பற்றும் ஆட்களை விரல்விட்டு எண்ணலாம். (ஒரு கை போதும்)

இந்த வசதியை வைத்துக்கொண்டுதான், செல்வராஜ்மீது வருமானவரித் துறையின் ரெய்டுக்கு உத்தரவு கொடுக்க வைத்தார் அமைச்சர்.

செல்வராஜின் வீடு பிருந்தாவனம் ரோட்டில் உள்ளது. அலுவலகம், சினிமா நகரில் உள்ளது. இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துப் போயிருக்கிறார்கள். இனி, அந்த ஆவணங்களில் உள்ள கணக்கு வழக்குகளை வைத்துக் குடைச்சல் கொடுக்க முடியும்.

செல்வராஜின் வீட்டில் ரெயிட் ஒருபக்கமாக நடந்து கொண்டிருந்தபோது, வந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகளில் ஒருவர், “நீங்களே வருமானவரி சம்மந்தமான சிக்கல்களை வைத்துக்கொண்டு, எதற்காக சக்சேனாமீது புகார் கொடுக்கப் போனீர்கள்? பேசாமல் உங்க பிசினெஸைப் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே வரப்போகிறோம்?” என்று அட்வைஸ் கொடுத்ததாகத் தகவல்.

சரி. சக்சேனாமீது புகார் கொடுத்தவர் காரணத்தால், தனது துறையைப் பயன்படுத்தி செல்வராஜ் வீட்டில் ரெயிட் நடாத்திய அமைச்சருக்கு, டில்லியில் சிக்கல் வராதா? நாளைக்கே இந்த விஷயம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டால், நிதியமைச்சு நடவடிக்கை எடுக்காதா?

‘ஜெயிலில் 50வது நாள்’ கேடயமும் வழங்குவார்களா?

இந்தக் கேள்விகளுடன், நிதியமைச்சில் எமக்குத் தெரிந்த உயரதிகாரி ஒருவரை அணுகியபோது, அவர் கடகடவென்று சிரித்தார்.

“வருமானவரித்துறையில் இதெல்லாம் கோலிகுண்டு விவகாரம். ரெயிட் என்பது, கோர்ட்டில் பதிவாகும் வழக்கு அல்ல. வருமானவரித்துறைக்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை அது. அதற்கான புரொஸீச்சர்களை சரியாகப் பின்பற்றினால், அதில் அமைச்சிலுள்ள யாரையும் மாட்டிவிட முடியாது.

புரொஸீச்சர் என்ன? சம்மந்தப்பட்ட நபரின்மீது வருமானவரித்துறை டைரக்டரின் முகவரியிட்ட ஒரு புகார் கடிதம் வேண்டும். ரெயிடு செய்யப்பட வேண்டிய நபரின் 2009ம் ஆண்டு வருமானவரிக் கணக்கில் காட்டப்பட்ட சோர்ஸ் ஆஃப் இன்கம்முக்கும், 2010ம் ஆண்டுக் கணக்கில் காட்டப்பட்டதற்கும் இடையே, ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத ஓரிரு பதிவுகள் இருக்க வேண்டும். அவ்வளவுதான் தேவை.

அமைச்சர் நினைத்தால், மிகச் சுலபமாக சென்னையிலிருந்து யாரோ ஒருவரின் பெயரில் புகார் கடிதம் அனுப்புமாறு செய்திருக்க முடியும். சினிமாக்காரர்களில் சோர்ஸ் ஆஃப் இன்கமில், வருடத்துக்கு வருடம் நிச்சயம் சம்மந்தமில்லாத பதிவுகள் இருக்கும். செட்டப் புகார் லெட்டரின் பிரதியையும், இரண்டு வருட டாக்ஸ் ரிடர்ன் பிரின்ட்-அவுட்டையும் ஒரு பைலில் போட்டுக்கொண்டு, ரெயிட் உத்தரவில் கையெழுத்து போட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி விடலாம்.

ரெயிடில் சில ஆவணங்களை எடுத்துவந்து, ஆராயலாம். தேவைப்பட்டால், நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். கணக்குகளில் சிக்கல் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ஒரு லெட்டர் அனுப்பி விடலாம் – “இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருமானவரித்துறை மனம் வருந்துகிறது”

இதில் அமைச்சரையும் சிக்கவைக்க முடியாது. கையெழுத்திட்ட டைரக்டரையும் சிக்கவைக்க முடியாது” என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயரதிகாரி.

இந்த ரெயிட் பெரிய விஷயமில்லைத்தான். ஆனால், சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க நினைக்கும் மற்றைய சினிமாப் புள்ளிகளை, ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும். இன்கம்டாக்ஸ் அலுவலக பைலில் தமது பெயர் இடம்பெற்றாலும் பரவாயில்லை என்று, சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க, எத்தனை சினிமாக்காரர்கள் முன்வருவார்கள்?

இந்த விஷயத்தில் தி.மு.க. தலைமையைப் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், தமது கட்சியின் சார்பில் ஒரு முட்டாளை அமைச்சராக டில்லிக்கு அனுப்பவில்லை அவர்கள்!

ஒரே நாளில் சாய்பாபா சமாதியில் 1 லட்சம் பேர் தரிசனம் : புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது.

ஒரே நாளில் சாய்பாபா சமாதியில்  1 லட்சம் பேர் தரிசனம்: புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியது

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்தவர் சத்ய சாய்பாபா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார்.

இதையடுத்து ஆசிரமத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி கட்டப்பட்டது. சாய்பாபா மரணத்திற்கு பிறகு கடந்த 3 மாதங்களாக புட்டபர்த்தி நகரம் வெறிச் சோடி காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று குரு பூர்ணிமா விழாவையொட்டி சாய்பாபா சமாதி திறக்கப்பட்டது. சமாதியை தரிசிக்க அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்.அங்குள்ள லாட்ஜூக்கள், ஓட்டல்கள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.அங்குள்ள கடைகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடந்தது.

சமாதி திறந்த பிறகு புட்டபர்த்தி மீண்டும் களை கட்டியுள்ளது. இதனால் அங்குள்ள வியாபாரிகள், ஓட்டல் - லாட்ஜ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.