Friday, July 8, 2011

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை : மத்திய மந்திரி கபில்சிபல் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு.



2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விஷயத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதாக மத்திய மந்திரி கபில்சிபல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் பூதாகரமாக கிளம்பக் காரணமாக இருந்தது பொது நல வழக்கு மையமாகும். இந்த மையம்தான், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதை கண்டுபிடித்து ஆதாரங்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

ஆ.ராசாவை சிக்க வைத்த இந்த மையம் தற்போதைய தொலைத் தொடர்பு துறை மந்திரி கபில்சிபலுக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.

பொது நல வழக்கு மையம் சார்பில், மூத்த வக்கீல் காம்னி ஜெய்வாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது :-

13 வட்டாரங்களுக்கான 2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை அனில் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம் பெற்றது. இந்த உரிமங்கள் பெற்றதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதைக் கண்டுபிடித்த தொலைத் தொடர்புதுறை அதிகாரிகள், ஒவ்வொரு உரிமத்தின் மீறலுக்கு ரூ.50 கோடி அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

மொத்தம் 13 வட்டங்களுக்கும் சேர்த்து ரூ.650 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து, மத்திய மந்திரி கபில்சிபலுக்கு தொலைத் தொடர்பு துறை அதிகாரிகள், கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி கடிதம் எழுதினர்.

இது தொடர்பாக ஆவணங்களையும் கபில்சிபலுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தொலைத் தொடர்பு துறை அதிகாரிகளின் பரிந்துரையை கபில்சிபல் நிராகரித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை வெறும் ரூ.5 கோடியாக குறைத்துவிட்டார்.

இதன் மூலம், கபில்சிபல் தனது அலுவலகத்தையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே, கபில்சிபலுக்கு எதிராக விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன் வதி, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையை புறக்கணித்து விட்டு, அப்போதைய மந்திரி ஆ,.ராசாவுக்கு ஆலோசனை வழங்கினார். இதன் மூலம், அவர் விதிமுறைகளை மீறியுள்ளார். எனவே இவர் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 11-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

பாஜக ஆட்சியில் ரூ. 43,000 கோடி இழப்பு - தொலைத் தொடர்புத்துறை.



பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொலைத் தொடர்பு இடமாற்றக் கொள்கை காரணமாக ரூ. 43,000 கோடி அளவுக்கு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டது என்று தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத்துறை கடைப்பிடித்த 'மைக்ரேஷன்' கொள்கை குறித்தும், அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் விளக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழு உத்தரவிட்டிருந்தது. அதன்படி குழு முன்பு தொலைத் தொடர்புத்துறை தனது விளக்கத்தை அளித்தது.

அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது கடைப்பிடிக்கப்பட்ட மைக்ரேஷன் கொள்கையால் நாட்டுக்கு ரூ. 43,000 கோடி இழப்பு ஏற்பட்டது. அதன் சரியான தொகை ரூ. 43,523.92 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கூட்டு நாடாளு்மன்றக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் நேற்று தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர்கள் பலரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பாஜக கூட்டணி ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது நினைவிருக்கலாம். அந்த விசாரணையின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிஆட்சியின்போது எந்தத் தவறும் நடக்கவில்லை என்று தெரிய வந்ததாக சிபிஐ கூறியிருந்தது. ஆனால் மைக்ரேஷன் கொள்கை காரணமாக நாட்டுக்கு ரூ. 43,000 கோடி இழப்பை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏற்படுத்தியதாக நேற்று தொலைத் தொடர்புத்துறை கூறியுள்ளது திருப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

திருவள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா நாஞ்சில் சம்பத்.



சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கை கண்டித்து போராட்டம் நடத்திய திராவிடர் கழக மாணவரணியினர், சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையை எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கினைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் மாணவரணி சார்பில், அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலையருகே, திராவிடர் கழக மாநில மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்விக்கு எதிராக கல்வி வியாபாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

தமிழர் வரலாற்றையும், திருவள்ளுவர், பெரியார், அண்ணா, டி.எம். நாயர், தியாகராயர் போன்ற தலைவர்களின் பற்றிய பாடங்களை மறைத்தும், கிழித்தும் பாடத் திட்டத்தை சீரழித்துள்ள மனுதர்ம போக்கினைக் கண்டித்து சென்னை மாவட்டத்திலுள்ள திராவிடர் கழக மாணவரணியினர் திரளாகக் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளுவர் மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்?-நாஞ்சில் சம்பத்

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்ய முயற்சித்து வருவதாக மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

அவர் கூறுகையில், பாடப்புத்தகத்தின் பின்னால் வள்ளுவர் படம் இருக்கிறது. வள்ளுவர் படத்தை பச்சை அட்டை வைத்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். வள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா?. வள்ளுவர் மீது உங்களுக்கு (ஜெயலலிதா) என்ன கோபம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது தப்பா?. ஏன் வள்ளுவர் மீது ஆத்திரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல், உயர்நீதிமன்றத்தையே நீங்கள் அவமதிக்கின்றீர்களா?.

நீங்கள் செய்தது இமாலய மடத்தனம். நீங்கள் சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டி விடுவோம் என்று கருதாதீர்கள். சமூக நீதிக்கு சமாதி கட்டுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றார்.

இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது.



“தயாநிதி மாறன் பதவியிலிருந்து இறங்குவது குறித்து, டில்லியிலிருந்து யாரும் என்னைத் தொடர்பு கொண்டு கேட்கவில்லை” இவ்வாறு கூறியுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி, பிரதமர் தன்னுடன் பேசவில்லை என்று கூறுவதை சாமர்த்தியமாகத் தவிர்த்துக் கொண்டார்!

பிரதமரும் சோனியாவும் இதுபற்றி உங்களிடம் நேற்றிரவே பேசியதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளதே என்று அவைரிடம் கேட்கப்பட்ட போது, ”சோனியா நேற்றிரவு என்னுடன் பேசவில்லை” என்று கூறியதுடன் நிறுத்திக் கொண்டார். பிரதமர் பற்றி வாயே திறக்கவில்லை.

“தயாநிதியின் பதவி விலகலுக்கக் காரணம், மீடியாக்கள் அவரை இழிவு படுத்தியதுதான்” என்றும் கூறியுள்ளார் அவர்.

“இன்று உலகில், குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்; அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல. மீடியாக்கள் அவரைக் குற்றவாளிபோல சித்தரித்துக் காட்டியதால் அவர் பதவி விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

தயாநிதி ராஜினாமாவை பிரதமர் உறுதிப்படுத்தும் முன்னரே, ஊடகங்களே உறுதிப்படுத்தி விட்டது.


“இருந்து பாருங்கள், இன்று மாலைக்குள் உங்களுக்கு ராஜினாமா செய்தி வந்துவிடும்” என்று எம்முடன் தொடர்பில் இருக்கும் ஹிந்தி மாலைப்பத்திரிகை ஒன்றின் நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கிசுகிசுத்திருந்தார்.

7 - 7 - 2011. மாலைதான் தயாநிதி தனது ராஜினாமாவைக் கொடுத்திருந்தாலும், ராஜினாமா எபிசோட்காலையிலேயே தொடங்கிவிட்டது. காங்கிரஸ் வட்டாரங் களுடன் நெருங்கிய தொடர்புடைய பத்திரிகையாளர்கள் சிலர் இன்று காலை முதலே ராஜினாமா செய்திக்காகக் காத்திருந்தனர்.

பிரதமரின் அலுவலகத்தில் ஆட்களை வைத்திருக்கும் சில பத்திரிகையாளர்கள், காலையிலிருந்தே உள்ளங்கையில் செல்போனை வைத்துப் பார்த்தபடி இருந்தனர்.

இன்று காலை 7 மணியிலிருந்து, ராஜினாமா செய்யப்போகும் செய்தி கிட்டத்தட்ட கன்பர்ம்ட் ஆன நிலையிலேயே, குறிப்பிட்ட சில பத்திரிகையாளரிடையே இருந்தது.

ஆனால், எல்லோரையும் தலைகீழாகக் குழப்பத்தில் தள்ளிவிட்ட சம்பவம் ஒன்று, காலையிலேயே நடந்தது!

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஜாம்ஜாம் என்று வந்திறங்கியவர், சாட்சாத் தயாநிதி மாறனேதான்!

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளரிடையே குழப்பம். இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக கிசுகிசுக்கப்படும் ஒருவரை, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடத்தில் யாரும் எதிர்பார்க்காததால் ஏற்பட்ட மகா குழப்பமான நிமிடங்கள் அவை.

தயாநிதியின் ராஜினாமா பற்றிக் கொடுத்த தகவல்கள் பொய் என்று சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கிடையே திட்டிக் கொண்ட சம்பவங்களும் நடந்தன.

“இருங்கள்.. இருங்கள்.. பொறுமையாக இருங்கள்.. நடப்பதைப் பாருங்கள்” என்றார் நமது தொடர்பாளர்.

திடீரென மீண்டும் பரபரப்பு. அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தயாநிதி மாறன், பாதியிலேயே அவசர அவசரமாக வெளியேறினார் என்ற செய்தி வந்தபோது ஏற்பட்ட பரபரப்பு அது.

அந்த நிமிடத்தில், மீண்டும் உயிர்பெற்றது ராஜினாமா செய்தி.

அமைச்சராக உள்ளே சென்றவர், வெளியே வரும்போது...

மதியம், பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்தது அடுத்த தகவல். தயாநிதி மாறன் வந்திறங்கி உள்ளே சென்றிருக்கிறார் என்றது அந்தச் செய்தி. இன்று தயாநிதி பிரதமரைச் சந்திக்கும் அப்பாயின்ட்மென்ட் ஏதும் இருக்கவில்லை. ஆனாலும், வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே பிரதமரின் அறைக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பிரதமரின் அறைக்குள் தயாநிதி 5 நிமிடங்கள்கூடத் தாமதிக்கவில்லை. போன வேகத்திலேயே வெளியே வந்தார்.

காலையிலிருந்து இந்த விஷயங்களையெல்லாம் ஃபாலோ பண்ணிக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் சிலர், தயாநிதி மாறன் பிரதமரின் அலுவலகக் கட்டடத்துக்கு வெளியே ஆஜர்!

வெளியே வந்த தயாநிதி, தலைகுனிந்த நிலையில் இறுகிய முகத்துடன் காணப்பட்டார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. வேகமாக அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

அவரைப் பின்தொடர்ந்து வந்த அதிகாரி ஒருவர் , பத்திரிகையாளர்களுக்கு கண்களால் ஜாடை காட்டிவிட்டுச் சென்றார்.

அடுத்த நிமிடமே, ஒற்றை வார்த்தையாக, “தயாநிதி ராஜினாமா” என்ற செய்தி, பத்திரிகை, டீ.வி. அலுவலகங்களுக்குப் பறந்தது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், பிரதமரின் அலுவலகத்தில் செய்தி உறுதிப் படுத்தப்படும் முன்னரே, “தயாநிதி ராஜினாமா” என்று ஹெட்லைன் நியூஸ்கள் அலறத் தொடங்கிவிட்டன. அந்தளவுக்கு எல்லோரும் தெளிவாக இருந்தார்கள்!

டில்லியிலிருந்து சம்பத் குமாரின் குறிப்புகளுடன், ரிஷி.

நன்றி - விறுவிறுப்பு.காம்.

சொத்துக்காக தாய், தந்தையைக் கொன்று செப்டிக் டேங்கில் போட்ட எஸ்.ஐ. கைது.

சொத்து உடனே வேண்டும் என்பதற்காக தாய்-தந்தையை தலையணையால் அமுக்கி கொன்று நாடகமாடினேன்;  சப்-இன்ஸ்பெக்டர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை கௌத்தூர் காந்திநகர் புத்தகரத்தை சேர்ந்தவர் ஜார்ஜ்வில்லியம், சென்னை கொரட்டூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை லோகநாதன், சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தாயர் சிந்தாமணி 2 பேரும் ஆம்பூர் பெத்தலகேம் 7-வது தெருவில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் ஆம்பூர் வந்த ஜார்ஜ், அங்குள்ள காவல் நிலையத்தை அணுகி, தனது வீட்டு செப்டிக் டேங்க்கில் ஒரு ஆண், பெண் மண்டை ஓடுகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து ஓடி வந்த போலீஸார் பார்த்தபோது, டேங்க்கில் இரண்டு எலும்புக் கூடுகள் கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். அதை மீட்டு விசாரணை நடத்தியபோது அது ஜார்ஜின் தந்தை, தாய் என்பது தெரிய வந்தது.

இவர்களை கடந்த ஆண்டு ஜூன்12-ந்தேதி முதல் காணவில்லை. என்று ஜார்ஜ் வில்லியம் கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களது வீட்டு செப்டிக் டேங்கில் இருந்து லோகநாதன், சிந்தாமணி எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டது. அவர்கள் கொலை செய்து வீசப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது . இதில் லோகநாதன், சிந்தாமணியை அவரது மகன் ஜார்ஜ்வில்லியம் கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக அவரது உறவினர் ஜான்விக்டர் இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் வில்லியம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :-

எனது தந்தைக்கு சரியாக கண் தெரியாது. எங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் வங்கியில் பணம் உள்ளது. இந்த சொத்துக்களை எனது தாயார் சிந்தாமணி பெயருக்கு தந்தை எழுதி வைத்தார். அவருக்கு பிறகே சொத்துக்களை நான் பெற முடியும். உடனே பணம், சொத்துக்களை கேட்ட போது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் ஆம்பூரில் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு ஆம்பூர் வந்தேன். எனது தந்தையிடம் சொத்துக்களை கேட்டு தகராறு செய்தேன். அவர் மறுத்ததால் அவரை அடித்து உதைத்தேன். பீரோவில் மோதிய அவர் தரையில் சாய்ந்தார். இதனை எனது தாய் சிந்தாமணி பார்த்து சத்தம் போட்டார். அவரை மடக்கி பிடித்து கீழே தள்ளினேன்.

ஆத்திரத்தில் தாய்-தந்தை என்று கூட பார்க்காமல் தலையணையால் அமுக்கி துடிக்க துடிக்க கொலை செய்தேன். பின்னர் எனது உறவினர் ஜான்விக்டர் உதவியுடன் இருவரின் பிணங்களையும் செப்டிக் டேங்கில் தூக்கி போட்டோம். அவர்கள் திடீரென மாயமாகி விட்டதாக வதந்தியை பரப்பி விட்டேன். இதுபற்றி போலீசில் புகார் செய்து 2 ஆண்டுகள் நாடகமாடினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.