Wednesday, July 6, 2011

'தமிழே தெரியாத, ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்ட ஜெயதேவ், எப்படி சமச்சீர் கல்வி நூல்களைப் படித்தார்?'



டிஏவி பள்ளிகளின் தலைவரான ஜெயதேவ் தமிழே படிக்கத் தெரியாதவர். 82 வயதான இவர் 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். இப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்விகளைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான ஆய்வுக் குழுவின் முடிவுகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதிடப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு தனது முடிவை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில் சமச்சீர் கல்வி நூல்கள் தரமற்றவையாக உள்ளன, மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாக அவை இல்லை, இவற்றைப் பயன்படுத்த முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் நாளை முதல் தினசரி விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று சமச்சீர் கல்வி திட்டத்தைக் கோரி மனு தாக்கல் செய்துள்ள மனோன்மணி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10,000 பக்கங்களைக் கொண்டதாக சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்கள் உள்ளன. இதை 4 முறை மட்டுமே கூடிய ஆய்வுக் குழுவினர் படித்து முடித்தது எப்படி?

இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள திருமதி ஒய்ஜிபி, ஜெயதேவ் ஆகியோர் கல்வியாளர்களே அல்ல.

அதிலும் 82 வயதான ஜெயதேவ், 78 வயது வரை ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டிருந்தவர். அவருக்குத் தமிழே படிக்கத் தெரியாது. அப்படிப்பட்டவர் எப்படி சமச்சீர் கல்வித் திட்ட பாட நூல்களைப் படித்தார் என்பது பெரும் வியப்பாக உள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து கருத்துக் கூற மட்டுமே இந்தக் குழுவுக்கு அதிகாரம் தரப்பட்டிருந்தது. மாறாக தீர்ப்பு கூற இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இந்தக் குழு தெரிவித்துள்ள கருத்துக்களை அப்படியே நிராகரிக்க வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மனோன்மணி தெரிவித்துள்ளார்.

திருவட்டாறு அருகே ஒரு மாணவர் கூட வராத அரசு தொடக்க பள்ளி : 2 ஆசிரியர்கள் இருந்தும் பணியாற்ற முடியாத அவலம் .

திருவட்டாறு அருகே ஒரு மாணவர் கூட வராத அரசு தொடக்க பள்ளி: 2 ஆசிரியர்கள் இருந்தும் பணியாற்ற முடியாத அவலம்

குமரி மாவட்டத்தில் ஏராளமான தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் பெருகிய பின்பு அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் இந்த நிலைதான் காணப்படுகிறது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் செயல்படும் பல அரசு தொடக்க பள்ளிகளில் மிகக்குறைந்த அளவே மாணவ- மாணவிகள் உள்ளனர். திருவட்டாறு கொல்வேல் பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்க பள்ளியில் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளில் கடந்த கல்வி ஆண்டில் 10 மாணவ- மாணவிகள் படித்தனர்.

இப்பள்ளியில் இங்கு ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு வகுப்பாசிரியரும் என 2 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த கல்வி ஆண்டு தொடங்கிய பின்பு ஒன்று முதல் 5-ம் வகுப்புக்கு இன்று வரை ஒரு மாணவர் கூட வரவில்லை. ஆசிரியர்கள் இருவர் மட்டும் தினமும் பள்ளிக்கு வந்து மாலை வரை சும்மாவே இருந்துவிட்டு செல்கிறார்கள்.

இதுபற்றி ஊர்மக்களும், பிரமுகர்களும் கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறாததற்கான காரணம் குறித்து விசாரித்தனர். இதுபற்றி திருவட்டாறு பகுதி தொடக்க கல்வி அதிகாரி ஜெயராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொல்வேல் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை பட்டியலில் 12 மாணவர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யாருமே இப்போது பள்ளிக்கு வருவதில்லை. இங்கிருந்து “மாற்று சான்றிதழும்” பெறவில்லை. இவர்கள் வேறு பள்ளியில் சேர்ந்து படித்து வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் அரசு கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் தொடக்க நிலையில் வேறு பள்ளிகளில் சேருவதற்கு மாற்று சான்றிதழ் தேவை இல்லை. எனவேதான் இங்கு படித்து வந்த மாணவர்கள் மாற்று சான்றிதழ் வாங்காமலேயே வேறு பள்ளிகளில் சேர்ந்துவிட்டனர்.

கொல்வேல் பள்ளியை போல் புலிப்பனம், ஏற்றக்கோடு, முகிலன்விளை ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. எனவே இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யலாமா? பள்ளிகளை மூடிவிடலாமா? என்பது பற்றி மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுபற்றி தகவல்களை நாங்கள் அவர்களுக்கு தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்.

கீழே விழுந்த பையை எடுத்தபோது தவறி விழுந்தார்: தண்டவாளத்தின் நடுவில் படுத்து உயிர் தப்பிய பெண் என்ஜினீயர்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மனிஷா பாண்டே செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தினமும் மின்சார ரெயிலில் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று மதியம் 12.30 மணி அளவில் ரெயில் ஏறுவதற்காக சைதாப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தார். ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது அவரது கைப்பை தரையில் விழுந்துவிட்டது. அதை எடுப்பதற்காக குனிந்தார். ஒரு கையில் செல்போனை வைத்து பேசியபடி, மறு கையால் கைப்பையை எடுக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். அந்த நேரத்தில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் வந்தது. உடனே மனிஷா புத்திசாலித்தனமாக தண்டவாளத்தின் நடுவில் படுத்துக் கொண்டார்.

இதைப் பார்த்த டிரைவர் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் மனிஷா படுத்திருந்த இடத்தை 6 பெட்டிகள் கடந்து விட்டன. ரெயில் நின்றதும், டிரைவரும், பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த மனிஷாவை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர்.

இதில் அதிசயம் என்னவென்றால், ஆறு பெட்டிகள் கடந்தும் அவரது உடலில் சிறு காயங்கள்கூட ஏற்படவில்லை. அங்கிருந்தவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்து ஆண்டவன்தான் காப்பாற்றி இருக்கிறான் என்று ஆறுதல் கூறினர்.

இதுபற்றி மனிஷாவிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்து விட்டார்.

என்ஜினீயரிங் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் : தமிழக அரசு அறிவிப்பு.

என்ஜினீயரிங் பட்டதாரிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்: தமிழக அரசு அறிவிப்பு


தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பி.இ., பி.டெக். மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 61,200 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் அவர்களது பதிவுகளை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்யலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு செய்யச் செல்லும்போது, பொறியியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் கல்லூரி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். உள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள், குடும்ப அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை மேற்கொள்ளலாம்.

பதிவு செய்த மாவட்டத்திலேயே பொறியியல் மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டை உடனே வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள கறுப்பு பண முதலைகளின் பெயர்களை வெளியிட வேண்டும் ; லாலுபிரசாத் கோரிக்கை.

வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள கறுப்பு பண முதலைகளின் பெயர்களை வெளியிட வேண்டும்;லாலுபிரசாத் கோரிக்கை


ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் 14-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப் பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித்தலைவர் லாலுபிரசாத் யாதவ், கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அனைத்து இந்தியர்களின் பெயர்களையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அந்த பணம், ஏழைகளின் பணம். எனவே, அந்த பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்து, ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். முதலில் பணம் வரட்டும். அதன்பிறகு, அதை எப்படி பிரித்து அளிப்பது என்று கொள்கை வகுக்கலாம்.

மெட்ரிக் வகுப்புகள்வரை, குழந்தைகளுக்கு தேர்வுகள் நடத்தக்கூடாது. ஏனென்றால், உயர் கல்வியில் சேருவதற்கான தகுதி மதிப்பெண் அதிகமாக இருப்பதால், ஏழை மாணவர்களும், பின்தங்கிய மாணவர்களும் உயர் கல்வியில் சேர முடியாமல் போய்விடும். டெல்லியில் சில கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் 100 ஆக உள்ளது. ஏழை குழந்தைகள் எப்படி மற்றவர்களுடன் போட்டியிட்டு, அந்த கல்லூரிகளில் சேர முடியும்? பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கே இல்லை.

மின்சாரம் வாங்குவது என்ற பெயரில், முதல்-மந்திரி நிதிஷ்குமார், வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மத்திய மின்தொகுப்புக்கு பணம் செலுத்தினால், எவ்வளவு மின்சாரம் வேண்டுமானாலும் கிடைக்கும். எனவே, மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம்.

இவ்வாறு லாலு கூறினார்.