Saturday, June 11, 2011

எலி “ஸ்டெம் செல்” மூலம் மாரடைப்புக்கு சிகிச்சை.

எலி “ஸ்டெம் செல்” மூலம் மாரடைப்புக்கு சிகிச்சை: இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை

சமீப காலமாக மாரடைப்பு நோய்க்கு பலர் பலியாகி வருகின்றனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு இருதய செல்கள் அழிவதால் ரத்த ஓட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததுதான் காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே இருதய செல்கள் அழிவதை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க அவர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது எந்திர தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் மாரடைப்பு ஏற்பட காரணமான அழிந்து வரும் செல்களை மீண்டும் வளர செய்ய பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த பால் ரிலே குழுவினர் எலியின் இருதயத்தில் உள்ள ஸ்டெம் செல்கள் மூலம் மனிதர்களின் மாரடைப்பை தடுக்க முடியும் என கண்டு பிடித்துள்ளனர்.

எலியின் இருதயத்தில் உள்ள தைமோசின் பேடா 4 என்ற மூலக்கூறுடன் கூடிய ஸ்டெம் செல் இதற்கு பயன்படும் என தெரிய வந்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்ட எலிக்கு உடல் நலத்துடன் கூடிய எலியின் ஸ்டெம் செல்லை செலுத்தி இந்த சிகிச்சை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

அதே முறையில் மனிதர்களுக்கும் சிகிச்சை அளித்து மாரடைப்பு நோயை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கலைஞர் டி.வி.'க்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சமா - கடனா?

கலைஞர் டி.வி.'க்கு வழங்கப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சமா - கடனா? உரிய ஆவணங்களை வழங்கும்படி சி.பி.ஐ. கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் நேரடி மேற்பார்வையில் சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் மத்திய தொலைத் தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, அந்த துறையின் உயர் அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், கலைஞர் டி.வி.யின் பங்குதாரரும் தி.மு.க. எம்.பி.யுமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கனிமொழி எம்.பி. மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டிலும் பின்னர் டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலருடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடாக பயன் அடைந்த டி.பி. குரூப் நிறுவனத்தின் உரிமையாளரான சாஹித் பல்வா, அவருடைய துணை நிறுவனங்களான குசேகான் புரூட்ஸ் மற்றும் சினியுக் பிலிம்ஸ் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சமாக வழங்கியதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. ஆனால், அது லஞ்சம் அல்ல, கடன் பணம் என்று எதிர் தரப்பில் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், குசேகான் புரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான ராஜீவ் அகர்வால், ஆசிப் பல்வா ஆகியோருக்கு ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் வாதாடிய வக்கீல், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட அந்தப் பணம் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலமாக கடனாக வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பாரிகோக், கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பான அசல் ஆவணங்களை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.

பிரதான வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. தனி கோர்ட்டு, தொடர்புடைய அந்த ஆவணங்களை விசாரணை அதிகாரி மூலம் டெல்லி ஐகோர்ட்டுக்கு கொடுத்து அனுப்பும்படி அந்த உத்தரவில் நீதிபதி பாரிகோக் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற இரு முக்கிய பிரமுகர்களான சாஹித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகிய இருவரும், சி.பி.ஐ. தனி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர்.

அதில், டி.பி. ரியாலிட்டி குழும கூட்டு நிறுவனமான எடிசலாட் டி.பி. மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எடிசலாட் நிறுவனங்களின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை செல்ல அனுமதிக்கும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தனர். தங்கள் நிறுவன வர்த்தகம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

மனுவை விசாரித்த சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி, "இருவரும் மிகவும் அற்பமான கோரிக்கைகளை தாக்கல் செய்து இருப்பதாக'' கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் தங்கள் பணபலத்தால், அரசு நிர்வாகத்தை தங்கள் இஷ்டம்போல் வளைக்க முடியாது என்று கூறிய அவர், அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் இருவருக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.

சமச்சீர் கல்வி வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு "அப்பீல்”


தமிழகத்தில் பள்ளிக் கூடங்களில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இதற்காக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. இந்த பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்த போதே சட்டசபையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு எதிர்க்கவில்லை. பாடத் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் நீக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்தும் ஐகோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த மனுக்களை விசாரித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். நீதிபதி தனது தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார்.

2011-12-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும், அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். ஐகோர்ட்டு உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஐகோர்ட்டின் இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா ஆகியோர் நேற்று இரவு 3 மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது கோர்ட்டு தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வக்கீல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக அரசு வக்கீல்கள் டெல்லி விரைந்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று காலை டெல்லி சென்றார்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்து 15-ந்தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.கோர்ட்டு நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் 15-ந்தேதி திட்டமிட்டப்படி பள்ளிக் கூடங்கள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று கல்வி துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்னா ஹசாரே மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டவர் - திக்விஜய்சிங்.


காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தாக்குதல் தொடுத்துள்ளார் சமூக ஆர்வலரும் ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா குழுவின் முக்கிய உறுப்பினருமான அன்னா ஹசாரே.

இதையடுத்து அன்னா ஹசாரே தான் மனநலம் பாதிக்கப்பட்ட அனுபவமும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அனுபவமும் உள்ளவர் என்று திக்விஜய் சிங்கும் பதிலடி தந்துள்ளார்.

முன்னதாக அன்னா ஹசாரேவின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருப்பதாக திக்விஜய் சி்ங் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஹசாரேவின் உண்ணாவிரதப் பந்தலில் இடம் பெற்றிருந்த பாரத மாதாவின் படம் ஆர்எஸ்எஸ் வழக்கமாக பயன்படுத்தும் படம் தான் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஹசாரே, புனேவில் யெரவாடா பகுதியில் ஒரு மன நல மருத்துவமனை உள்ளது. அதில் திக்விஜய் சிங்கை சேர்க்கலாம் என்றார்.

இதற்கு பதில் தந்துள்ள திக்விஜய் சிங், ஹசாரே மீது நான் மதிப்பு கொண்டவன். இப்போதும் எனக்கு அவர் மீது மரியாதை உண்டு. எனக்கு மென்டல் ட்ரீட்மென்ட் தேவைப்பட்டால் எந்த மருத்துவமனைக்குப் போவது என்பது குறித்து நான் முடிவு செய்து கொள்வேன். ஏற்கனவே இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட ஒருவரிடம் (ஹசாரே) எனக்கு அறிவுரை தேவையில்லை என்றார்.

நன்கொடை அளித்தோர் விவரம்-ராம்தேவ் வெளியிட வேண்டும்:

முன்னதாக திக்விஜய் சிங் நிருபர்களிடம் பேசுகையில், பாபா ராம்தேவ் சிங்கின் அறக்கட்டளைக்கு உள்நாடு, மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பேர் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த பணம், இந்திய அரசுக்கு அறிவிக்கப்படாமல், மறைமுகமான ஹவாலா வழியில் அறக்கட்டளைக்கு வந்திருக்கிறது. இதனால் இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ராம்தேவின் அறக்கட்டளை பற்றி மத்திய அரசின் நிதி, அமலாக்கப் பிரிவினர் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். எனவே ராம்தேவ் தனது அறக்கட்டளைக்கு பணம் கொடுத்தவர்களின் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.

பாபா ராம்தேவ் தனது போராட்டத்தை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடத்தலாம். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட்டு விட்டால் நல்லது.

காந்தி சமாதியில் பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் நடனமாடியது, அவரது தகுதிக்கு ஏற்புடையது அல்ல என்றார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ராம்தேவ்:

இந் நிலையில் 7 நாள் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் நேற்று வலுக்கட்டாயமாக டெஹ்ராடூனில் உள்ள ஹிமாலயன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கும் உண்ணாவிரதத்தைத் தொடரும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் உணவு உட்கொள்ள மருத்து வருகிறார். இதையடுத்து அவரது உண்ணாவிரதத்தை கைவிடச் செய்ய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உதவியை மத்திய அரசு நாடியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ரவிசங்கருடன் பேசினார். ஆனால், இனிமேல் ராம்தேவுடன் மத்திய அரசு நேரடியாக பேச்சு நடத்தாது என்று தெரிகிறது.

இலங்கைத் தமிழினத்தை காட்டிக்கொடுத்த ஜெயலலிதாவின் செயலை நாட்டிற்குக் காட்டுவோம் : திமுக.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.06.2011 அன்று திமுக தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,

8.6.2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பி, சிங்களவர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ்ந்திட அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் அனைவரும் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டு முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட அரசினரின் தனித் தீர்மானத்தை திராவிட முன்னேற்ற கழகம் முழு மனதோடு ஆதரிப்பதோடு, அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நேரத்தில் தேவையில்லாமல் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக அரசையும், கழகத் தலைவர் கலைஞர் அவர்களையும் ஜனநாயக மரபுகளுக்கு மாறாகவும், கருத்துக்குக் கருத்து என்ற முறையில் எதிர்க் கருத்தை எடுத்து வைத்திட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் - ஒன்றுபட்ட உணர்வோடு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் கடுமையாகத் தாக்கி விரோத உணர்வை வெளிக்காட்டிப் பேசியதற்கு இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறத அதே நேரத்தில்,

தமிழகச் சட்டப்பேரவையில் 16.04.2002 அன்று இதே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்போது, கொண்டு வந்த தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்றும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றம் கூறியதையும், 17.1.2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டதையும் எடுத்துக்காட்டி இலங்கை தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த இழிசெயல், பழிச்செயல் புரிந்தவர்கள் தற்போது தமிழ் இனத்தை எதையும் சொல்லி எல்லாக் காலத்திலும் ஏமாற்றலாம் என்ற மனப்பான்மையோடு இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்பதை இந்த உயர்நிலைச் செயல் திட்டக் குழு தமிழ் உலகத்திற்குச் சுட்டிக்காட்டி நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்-கருணாநிதி.


திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்துக்குப் பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.

கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போல குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைய உங்கள் தீர்மானத்தில் அது குறித்து ஏதும் குறிப்பிட வில்லையே?.

பதில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.

கேள்வி: 'கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைக் குறிக்கிறது?.

பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?

கேள்வி: காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.

பதில்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி- அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது.

கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் பிரச்சனை இல்லை என்று கூறுவீர்களா?

பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?

கேள்வி: டெல்லியில் குலாம்நபிஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர் களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.

கேள்வி: ஜுலை மாதத்தில் நீங்கள் கூட்டும் பொதுக்குழுவில் திமுக, காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?

பதில்: நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.

கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

கேள்வி: பாஜகவுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?

பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.

கேள்வி: அடுத்து சிபிஐ தாக்கல் செய்ய உள்ள 3வது குற்றப் பத்திரிகையிலே தயாநிதி மாறனின் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். சிபிஐ இதை 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.

கேள்வி: எதிர்க்கட்சிகள் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே, ஒரு கட்சித் தலைவராக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: ராஜினாமா செய்ய வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதி மாறனை ஆதரித்து கருத்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.

பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப் போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.

கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?

பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.

கேள்வி: இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?

பதில்: எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.

கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?

பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.

கேள்வி: ராசாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். அவர்கள் தான் இந்த விஷயத்தை வெளியிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உங்கள் கட்சித் தொண்டர்களே வெளியே பேசுகிறார்களே?

பதில்: எந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்?.

கேள்வி: டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?

பதில்: போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.

கேள்வி: போபர்ஸ் வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும், இப்போது 2ஜி வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

பதில்: ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.

கேள்வி: உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?

பதில்: உயர் நீதிமன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா?. அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?.

கேள்வி: உங்கள் தீர்மானத்தில் சிபிஐயை கண்டித்திருக்கிறீர்கள். சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.

பதில்: நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.

கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?

பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.

கேள்வி: நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நிறுத்தி வைத்ததைக் கண்டித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்துவதாக இருக்கிறீர்களா?

பதில்: நாங்கள் தற்போது கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு பொதுக் குழுவைக் கூட்டுவோம். அந்தப் பொதுக்குழுவில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.

கேள்வி: நிருபமாராவ், சிவசங்கர்மேனன் ஆகியோர் இலங்கை சென்று இருக்கிறார்கள். பல முறை அங்கே போய் விட்டு வந்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லையே?

பதில்: இது செய்தி

இவ்வாறு கருணாநிதி பேட்டியளித்தார்.

தயாநிதி - 2ஜி - தோண்டத் தோண்ட பூதம் !


ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார்.

தினகரன் நாளிதழில், "வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின.

அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பத்தில், "தயாநிதியைக் கட்சியை விட்டே தூக்க வேண்டும்" என்றுகூட திமுகவின் உயர்மட்டத்தில் பேசப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டு, தயாநிதி மத்திய அமைச்சரைவியில் இருந்து விலக, அவரின் இடத்துக்கு ஆ.ராசா வந்தார்.

தாமிருந்த இடத்தில் மற்றொருவரா; எப்படிச் சகிப்பார் தயாநிதி? தயாநிதிக்குத் தான் இத்துறையில் எப்படியெல்லாம் முறைகேடு செய்ய முடியும் என்று தெரியும்.

பதவியேற்ற சூட்டோடு, திமுக தலைமையைக் குஷிப்படுத்த, "தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ரூ. 10,000 கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது" எனக் குற்றம் சுமத்தினார் ஆ.ராசா.

திமுகவுக்கு எதிராக, "ரூ. 60,000 கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்" எனத் தமிழக மக்களின் வரவேற்பறைக்கு தொலைக்காட்சி மூலம் கொண்டு சென்று அறிமுகப்படுத்தி - திணித்தது கலாநிதி-தயாநிதி கூட்டணி. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும் ராசாவின் முறைகேடான செயல்கள் குறித்தும் சன் டி.வி.யிலும் தினகரன் நாளிதழிலும் விலாவாரியாகச் செய்தி வெளியிட்டு நாறடித்தது.

இந்நிகழ்விற்கு பின்பே அதுவரை எதுவும் தெரியாதிருந்த வடநாட்டு அரசியல்வாதிகள், பத்திரிகைகள் தங்களது கவனத்தை ஸ்பெக்ட்ரம் பக்கம் திருப்பினார்கள்.

ராசாவின் பதவிக் காலத்தில் ஓருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் அளவிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு, உச்சநீதிமன்ற உத்தரவால் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவின் கடைக்கோடி மக்கள்வரை அதைக் கொண்டு சேர்த்த பெருமை, சன் குழுமம் போன்ற காட்சி ஊடகங்களைச் சாரும்.

குடும்பக் கலகத்தால் சன் டிவிக்குப் போட்டியாகப் போர்க்கால அடிப்படையில் அதிரடியாகக் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. அதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற வினாவுக்கு விடையாகத்தான் இப்போது கனிமொழி திகார் சிறையில் இருக்கிறார்.

திமுகவுக்கு எதிராகத் தாம் பறித்த குழியில் தாமே விழ நேரிடும் என தயாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார். tragedy of tragedy ஆக, "ஸ்பெக்ட்ரம் ஊழல்" என முழக்கிய தயாநிதி மீதே ஸ்பெக்ட்ரம் தொடர்பான அறுநூறுகோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு பூமராங்காகத் திரும்பி வந்து இப்போது தாக்குகின்றது. ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கத் தாமதப்படுத்திய தயாநிதி, அந்நிறுவனம் மலேஷியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்குக் கைமாறியவுடன் ஸ்பெக்ட்ரம் உரிமம் விரைந்து வழங்கப்பட்டதாகவும் அதற்கு விலையாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களால் சன் குழுமத்தின் 'சன்டைரக்ட்' நிறுவனத்தில் அறுநூறு கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஸிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ப்ரஸாந் பூஷன், தயாநிதி மீதுள்ள குற்றசாட்டுகளுக்கு ஆதாரங்கள் உள்ளதாகக் கூறி வழக்கொன்றும் தொடுத்துள்ளார்.

"அம்பட்டன் குப்பையைக் கிளறினால் அத்தனையும் மயிர்" என்று கிராமப் பெருசுகள் சொல்வதுபோலவும் "தோண்டத் தோண்ட பூதம்" என்பது போலவும் மேலும் பல புகார்கள் தயாநிதி மீது எழுகின்றன. தயாநிதி தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது சன் டிவி தலைமை அலுவலகத்துக்கு அதாவது அறிவாலயத்துக்கு 323 பிஎஸ்என்எல் இணைப்புகள் ரகசியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சுமார் 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது எனவும் புகார் எழுந்துள்ளது.

ஈழத்தில் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டபோது கூட டெல்லிக்குச் செல்ல மனமில்லாத கருணாநிதி, ஆ.ராசாவுக்குத் தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதில் குறியாக இருந்து, டெல்லி சென்று, அனைத்து வகை மிரட்டல்களையும் ஆயுதங்களாக்கிப் போராடினார். ஆ.ராசாவின் திறமையால் ஸ்பெக்ட்ரம் வெடித்தது. இப்போதும் ஸ்பெக்ட்ரம் தொடர்புக்காகச் சிறையிருக்கும் கனிமொழியைப் பார்ப்பதற்காகவே டெல்லி சென்று வந்தார். கருணாநிதியின் டெல்லிப் பயணங்கள் எல்லாம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாகவே அமைந்து விட்டன. மொத்தத்தில் கருணாநிதியின் டெல்லிப் படையெடுப்பு, "மலையும் மலை சார்ந்ததும் வயலும் வயல் சார்ந்ததும்" என்பது போல "ஸ்பெக்ட்ரமும் ஸ்பெக்ட்ரம் சார்ந்ததும்" என்றாகிப் போனது, இது அவரது அரசியல் வாழ்வில் கறுப்பு அத்தியாயமே!

ஆ.ராசா மீது ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டு எழுந்த போது, "ராசா குற்றமற்றவர்" என நற்சான்று வழங்கிய கருணாநிதி, ஆபத்துக்குக் கை கொடுக்கும் 'தலித்' ஆயுதத்தைக் கையில் எடுத்தபோது அதன் முனை முறிக்கப்பட்டது. கனிமொழி மீது வழக்கு வந்தபோது, பெண் என்றும் தம் குடும்பத்தின் மீதான பழிவாங்கல் என்றும் கருணாநிதி புலம்பினார். கொஞ்ச காலம் ஊடலாக இருந்து, சன் டிவி இலாபத் தொகையில் தம் பங்காகக் கிடைத்த 100 கோடியைக் கையில் வாங்கிக் கொண்டு, கண்கள் பனிக்க இதயம் இனிக்க மீண்டும் சேர்த்துக் கொண்டதோடு, ஜவுளித் துறை அமைச்சராக்கிய பேரன் தயாநிதியையும் அதே ஸ்பெக்ட்ரம் சுற்றி வளைத்துள்ளது. இப்போது என்ன சொல்லப் போகிறாரோ கருணாநிதி.

வளம் கொழிக்கும் துறைகளுள் ஒன்றான தொலைத் தொடர்புத் துறையில் வெளியே தெரியாமல் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கலாம்; அது காமதேனு, கற்பக விருட்சம்; விரும்பிய அளவு கறக்கலாம் என்பதை அறிந்து கொண்டதால்தானோ என்னவோ, அத்துறையைப் பெற அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. காங்கிரஸ் அமைச்சரான சுக்ராம் காலம் முதல் பா ஜ கட்சியைச் சேர்ந்த ஜக்மோகன், பாஜக கூட்டணியில் இருந்த ராம்விலாஸ் பாஸ்வான், பாஜகவைச் சேர்ந்த ப்ரமோத் மஹாஜன், அடுத்து வந்த அருண்ஷோரி என, அத்துறைக்கு அமைச்சராக வந்த யாரும் குற்றச்சாட்டிலிருந்து தப்பவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2010, டிசம்பர் 8ஆம் தேதி இப்படிச் சொன்னது:

"இந்தப் பிரச்சனையில் இழப்பு 1 இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமன்று. இதைவிட அதிகமாகவும் இருக்கக் கூடும். விசாரணையின் தொடக்கத்திலேயே நாங்கள் தீர்ப்பளிக்க விரும்பவில்லை. ஆனால் 2001ஆம் ஆண்டு நடைபெற்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். சிபிஐதான் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டும்."

ஆ. ராசாவுக்கு முன்னர் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த தயாநிதி, அதற்கு முன் பாஜக அரசில் இத்துறை அமைச்சர்களாக இருந்த ஜக்மோகன், ராம் விலாஸ் பஸ்வான், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி மற்றும் சில காலம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தை தன் பொறுப்பில் வைத்திருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இவர்களில் அருண்ஷோரியின் பதவிக்காலத்தில்தான், "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளுக்கு வழிவகுத்ததே இந்தக் கொள்கைதான் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நடைமுறையைக் கொண்டு வர என்ன காரணம்?

ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மட்டுமின்றி அத்துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரையும் கட்சி வேறுபாடு பாராமல் நீதிமன்றத்தில் நிறுத்திச் சட்டப்படி உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதில்தான் இந்திய ஜனநாயக மாண்பின் மேன்மையும் உயிர்ப்பும் இருக்கின்றன என்பதை அரசு மறக்க வேண்டாம்.

inneram.com - ரஸ்ஸல்.