Thursday, June 9, 2011

முதல்வரையும் விசாரிக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் 1973ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி...


முதல்வரையும் விசாரிக்கும் ஊழல் தடுப்பு சட்டம் 1973 ஆம் ஆண்டிலேயே திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

"அண்ணா ஹஸரே, குரு பாபா ராம்தேவ் போன்றவர்கள் இப்போது கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராகப் போராடி வருகின்ற இந்த நேரத்தில் என் நினைவு 1970-க்குச் செல்கிறது. அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன், "பொதுவாழ்வில் இருப்போர் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குரல் கொடுத்தார்.

அந்தச் சமயம் தமிழக முதல்வராக இருந்த நான் அதை வரவேற்று அறிக்கை கொடுத்தேன்.

1973-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் "பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா’ திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்பட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.

அவருக்கு உதவியாக தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுக்காலம் வரை சிறை தண்டனையும், பொய்யான குற்றம் சுமத்தப்பட்டால் சுமத்தியவர் மீது மூன்றாண்டு காலம்வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் என்றது அந்த மசோதா.

இந்த மசோதாவை எம்ஜிஆர் "கறுப்பு மசோதா’ என்று வர்ணித்தார்.

அப்போது ஜனசங்கத் தலைவராக இருந்த எல்.கே.அத்வானி தமிழகம் வந்தபோது, "மசோதாவை வரவேற்கிறேன். விசாரணை வரம்பிற்குள் முதல்வரையும் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதியன்று இந்த மசோதா தமிழகத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவை முழுமையாகப் படித்துப் பார்த்த ஜெயப்பிரகாஷ் நாராயண் திமுக அரசைப் பாராட்டியதோடு, தனது "முழுப் புரட்சி’ இயக்கமான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்தச் சட்டம் உதவி புரியும் என்றும் கூறினார்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்பதற்காக திமுக ஆட்சியில் நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்து அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்றுவிட்டார்கள்.

லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பேசுப்படுகின்ற இந்த நேரத்தில் திமுக அரசு 1973-ஆம் ஆண்டே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்ட விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சமச்சீர் கல்வி பற்றி என் கருத்துக்கள். ஜெயமோகன்.

என்னை ஒரு வார இதழில் இருந்து அழைத்துச் சமச்சீர் கல்வி பற்றி என் கருத்தைக் கேட்டார்கள். நான் சொன்ன கருத்துக்கள் நிபுணரின் பார்வையில் அல்ல. நேரடியாக யதார்த்தங்களைப் பார்ப்பவன் என்ற முறையில்..

அவை சுருக்கமாகக் கீழே.

1. நமது இன்றைய கல்வி என்பது,பண்பாட்டுக்கல்வி அல்ல. சான்றோர்களை உருவாக்கும் கல்வி அல்ல. அதை வேறெங்கோதான் பெறவேண்டியிருக்கிறது. நமது இன்றைய கல்வியின் நோக்கம் இரண்டு. சராசரியான குடிமகன்களை உருவாக்குவது. அவர்களுக்கு நவீன வணிக உலகில் வேலைவாய்ப்புகளைப் பெறும் தகுதியை அளிப்பது. சான்றாண்மைக்கல்வி தேவையா என்றால் தேவை. ஆனால் நடைமுறையில் நம் முன்னால் உள்ள தேவை இவ்விரண்டும் மட்டுமே. பிள்ளைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவது இதற்காகத்தான்

2. இந்நிலையில் நம்முடைய கல்வியின் முக்கியமான இலக்கு, வேலை வாய்ப்புக் கான சர்வதேசப்போட்டியில் பங்குபெற்று வெல்லும் திறனை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதாகவே இருக்க முடியும். இதில் நம்முடைய போட்டியாளர்கள் முதல் உலக நாடுகள் அல்ல. அவர்கள் நிபுணர்களை உருவாக்கும் கல்வியை அளிக்கிறார்கள். நாம் இன்றைய நிலையில் அந்தக் கல்வியை அளிக்க முடியாது. அதற்கான பணமும் வசதியும் இன்று நம் கல்விச்சூழலுக்கு இல்லை. நாம் போட்டியிடுவது முதல் உலகுக்கு சேவைகளை அளித்து வேலைவாய்ப்புப் பெறும் நாடுகளுடன். அந்தப் போட்டியில் நாம் ஓடுவதற்கான கல்வியே நமக்கு உடனடியான தேவை.

3. அந்த நோக்குடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் மத்தியப் பாடத்திட்டமுறை, மெட்ரிக் பாடத்திட்டமுறை ஆகியவற்றையே நாடுகிறார்கள். காரணம் அவற்றுக்கு அந்தத் தகுதி இருப்பதாக நினைக்கிறார்கள். அது நடைமுறை உண்மை என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாநிலப்பாடத்திட்டத்தில் பயில்பவர்களை விட இந்தப் பாடத்திட்டமுறைகளில் பயில்பவர்களே இன்று உருவாகிவரும் வேலைவாய்ப்புகளை அதிகம் பெறமுடிகிறது. உண்மையில் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசமுடிந்தாலேகூட வேலை கிடைக்குமென்ற சூழல் இருக்கும் இன்று,மாநிலக்கல்வித்திட்டத்தில் பயில்பவர்கள் மிகமிகப் பின்தங்கித்தான் இருக்கவேண்டியிருக்கிறது. நட்சத்திர ஓட்டல்களில் சர்வர் வேலைக்கே கூட மெட்ரிக் பள்ளியில் படித்திருக்கவேண்டும் என்ற விதி இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

4. இன்றையநிலையில் சர்வதேசப்போட்டிக்கு ஏற்ப நம்முடைய பாடத்திட்டங் களை நவீனப்படுத்திக்கொண்டே இருந்தாகவேண்டும். ஆகவே அவை மேலும் மேலும் கடினமானவையாக ஆகியபடியேதான் சென்றாகவேண்டும். ஆகவே மத்தியப்பாடத்திட்டத்தையேகூட இன்னமும் நவீனப்படுத்தி இன்னும் கடினமாக்கவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

5. மாணவர்களும் அதற்குத் தகுதியாகவே இருக்கிறார்கள் என்பது தேர்வுமுடிவு களில் இருந்து தெரிகிறது. கடுமையான போட்டியில் இருக்கும் மாணவர்கள் இன்றைய மாநிலப் பாடத்திட்டத்தில் எழுத்து எழுத்தாகவே மனப்பாடம்செய்து 90 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்களை வாங்கிக்குவிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு இன்னும் அதிக சவால்களை அளிப்பதே முறையாகும்.

6 . இந்நிலையில் மாநிலக்கல்வித்திட்டத்தை உடனடியாக மெட்ரிக் பாடத்திட்டம் அளவுக்கே மேம்படுத்துவதும் அல்லது எல்லாவற்றையும் மத்திய பாடத்திட்டம் அளவுக்கு மேம்படுத்துவதும்தான் அவசியம். சொல்லப்போனால் மத்தியப்பாடத் திட்டத்தை இன்னும் மேம்படுத்தி எல்லாப் பள்ளிகளிலும் அதைக் கற்பிக்க வேண்டும் என்பதே சரியான இலக்காக இருக்கும். அதுவே உண்மையான சமச்சீர் கல்வி.

7. ஆனால் அதை இங்கே செய்ய முடியாது. மாநிலக்கல்வித்திட்டத்தை உருப்படியாக முன்னெடுக்கக்கூடிய கல்விக்கூட வசதிகள் இங்கே இல்லை. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் 40 சதவீதம் பேர் ஏதேனும் விடுப்பில் இருக்கிறார்கள். தொகுப்பூதிய, மறைமுக ஊதிய ஊழியர்களே பாதி வகுப்புகளை எடுக்கிறார்கள். கல்வித்தரத்துக்கும் வெற்றிக்கும் ஆசிரியர்களோ, பள்ளிகளோ, கல்வித்துறையோ பொறுப்பேற்கும் நிலை இல்லை. இன்று மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் சொந்த உழைப்பிலேயே அதை எடுக்கிறார்கள்.

8. அரசுப்பள்ளிகளுக்கு இன்று வரும் மாணவர்கள்,செல்வமோ கல்வித்திறனோ இல்லாத எளிய மாணவர்கள். அவர்களுக்கும் தரமான கல்வி கொடுக்கவேண்டுமென்றால் அதற்கு மேலும் அதிக தகுதி கொண்ட ஆசிரியர்கள் தேவை. இன்னமும் தீவிரமான பயிற்றுமுறையும் கண்காணிப்பும் தேவை. ஆனால் எந்த அரசுத்துறையும்போல ஊழலும் பொறுப்பின்மையும் மலிந்த ஒன்றாகவே கல்வித்துறை உள்ளது. அரசு,கல்வித்துறைக்கு எந்த விதமான கவனமும் அளிப்பதில்லை. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. ஆசிரியர் பணியிட நியமனத்தில் தகுதியை மட்டுமே அளவுகோலாகக் கொள்வதில்லை. ஆசிரியர்களை முற்றிலும் கண்காணிப்பதில்லை. பாடத்திட்டத்தை நடத்தி முடிக்கும் அரசுப்பள்ளிகளே மிகக்குறைவு.

என் மகன் அரசுப்பள்ளியில் பயிலும்போது மிகுந்த மனக்கொந்தளிப்புடன் இதைச் சொல்வதுண்டு. ’பாதிப்பிள்ளைகள் டியூஷன் வைக்கமுடியாதவர்கள் அப்பா. கணக்கு சயன்ஸ் எல்லாத்திலும் வாத்தியாரே இல்லை. வருகிறவர்கள் அரைமணி நேரம்கூடப் பாடம் நடத்துவதில்லை. பையன்கள் அழுகிறார்கள். எவ்வளவு பெரிய துரோகம் இது’ என்பான். அவன் கற்றது நாகர்கோயிலிலேயே பெரிய அரசுப்பள்ளியில். இதுவே உண்மைநிலை.

9 .இந்த அவலநிலையை மறைக்க அரசு போடும் வேடமே சமச்சீர் கல்வி. கல்வி சமமில்லாமல் இருப்பதற்கு அரசும் கல்வித்துறையும் கொண்ட அக்கறையின்மையே காரணம். அதனால்தான் நல்ல கல்வி கொடுக்கும் நிறுவனங்களை நோக்கி மக்கள் கடன்பட்டாவது பிள்ளைகளை அனுப்புகிறார்கள். அங்கே கல்விநிறுவனங்கள் நடுவே போட்டி உள்ளது. ஏனென்றால் அது வணிகம். வெற்றியைக் காட்டவில்லை என்றால் அடுத்த வருடமே அது லாபத்தை பாதிக்கும். ஆகவே பொறுப்பேற்க நிர்வாகம் தயாராக உள்ளது. அந்த நிலை இருப்பதனால்தான் அங்கே மக்கள் முண்டியடிக்கிறார்கள். ஆகவேதான் கட்டணம் அதிகமாக இருக்கிறது

10 .அந்தக் கல்விக்கட்டணத்தைக் குறைக்கச் சிறந்த வழி அதே அளவுக்குத் தரமான கல்வியை அரசுப்பள்ளிகள் அளிப்பதுதான். அதை அளிக்கத் திராணியில்லாத அரசு,அக்கல்விக்கூடங்களைக் கட்டுப்படுத்த முயல்வது என்பது,தானும் கல்வியளிக்கமுடியாது, அளிப்பவர்களை அனுமதிக்கவும் மாட்டோம் என்ற நிலைப்பாடாகவே நடைமுறையில் உள்ளது

11. அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி சமச்சீர்நிலையை கொண்டுவருவதற்குப் பதில் மெட்ரிக் பள்ளிகளின் தரத்தைக் குறைத்து சமச்சீர்த்தன்மையை கொண்டுவரவே இந்தப் புதிய பாடத்திட்டம் முயல்கிறது. சமச்சீர் கல்வியில் பத்தாம் வகுப்புக்கான பாடத்திட்டத்தைப் பார்த்துவிட்டே இதைச்சொல்கிறேன் -என் மகள் இவ்வருடம் பத்தாம்வகுப்புக்குச் செல்கிறாள். பாடங்கள் எந்தவிதமான சமகாலப்பிரக்ஞையும் பொறுப்பும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சமச்சீர் கல்விப்பாடங்கள்,மாணவர்களின் கோணத்தில் அல்ல ஆசிரியர்களின் கோணத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய சர்வதேசப்போட்டிச்சூழலை ஒட்டி அவை அமைக்கப்படவில்லை. இன்றுள்ள ஆசிரியர்களுக்கு என்ன தெரியுமோ அதைக் கற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது மேலதிகப் பயிற்சி இல்லாமல் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தவேண்டும் என்பதே இலக்காக இருந்துள்ளது. அந்த ஆசிரியர்கள் பெருபாலும் பத்துப்பதினைந்து வருடம் முன்பு பட்டம்பெற்றவர்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும்.

முழுக்கமுழுக்கத் தகுதியற்ற ஆசிரியர்கள் தகுதியற்ற ஆசிரியர்களுக்காக அமைத்துக்கொண்ட பாடத்திட்டம் இது. கருணாநிதி அரசை எப்போதுமே ஆசிரியர்கள் தங்கள் சொந்த அரசாக நினைப்பவர்கள். அவருக்குத் தேவை அவரது பெயர் ஆங்காங்கே வருவது. அந்த சலுகையை அவருக்கு வீசித் தங்களுக்கு வேண்டியதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். மெட்ரிக் மாணவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய தர வீழ்ச்சி. இன்றைய போட்டியுகத்தில் பெற்றோர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள்.

12 நடைமுறையில், இந்த சமச்சீர் பாடத்திட்டம் ஏற்கப்பட்டால் அடுத்தவருடம் முதல் எல்லா மெட்ரிக் பள்ளிகளும் மத்தியபாடத்திட்டத்துக்கு மாறிவிடும். அதை அவர்கள் முறையாகப் பெற்றோருக்குத் தெரிவித்தும்விட்டார்கள்.ஆகவே சமச்சீர் தன்மை ஒருபோதும் ஏற்கப்படப்போவதில்லை. மூன்று வகைப்பாடுகள் இருப்பதற்குப்பதிலாக இரண்டு வகைப்பாடுகள் இருக்கும் அவ்வளவுதான்.

13. சமச்சீர் கல்வி என்பது ஒருபோதும் சாத்தியமாகாது. சர்வதேசப்போட்டிக்குத் தங்கள் பிள்ளைகளைத் தயாரிக்கும் முனைப்புள்ள பெற்றோர்கள், அதற்காகப் பணம் செலவிட முனையும் நிலையில் அதற்கான கல்விமுறை இருந்துகொண்டுதான் இருக்கும். அரசுக்கல்வியை அந்தத் தரத்துக்குக் கொண்டுசெல்லத் தொடர்ந்து முயல்வதே ஒரே வழியாகும்.

உதாரணமாக நாகர்கோயில்- சென்னை செல்ல அரசுப்பேருந்தில் 240 ரூ. தனியார் பேருந்தில் 900 ரூ. ஆனால் தனியார் பேருந்துகள்தான் அதிகமாக ஓடுகின்றன. காரணம் அரசுப்பேருந்து, 14 மணிநேரம் எடுக்கும். ஓட்டைக் கூரை, ஆடும் இருக்கை. தனியார் பேருந்து ஒன்பது மணிநேரத்தில் சொகுசாகக் கொண்டு சேர்க்கும். மக்களுக்குக் கொடுக்க மனமிருக்கிறது, தேவை இருக்கிறது. ஆகவே அந்தப் பேருந்து இருந்தே தீரும். அவற்றின் கட்டணத்தை அரசு தீர்மானிப்பதோ அந்தப் பேருந்துகளின் இருக்கைகளைக் கிழித்து அரசுப் பேருந்துகளைப்போல ஆக்க முனைவதோ சாத்தியமா என்ன?

14. அரசுக்குப் பல்லிளிக்கும் அதன் நடைமுறைத் தோல்விகளை மறைப்பதற்காகப் போலிநாடகம் ஆடும் நோக்கம் இல்லை என்றால் மெட்ரிக் பள்ளிகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு அரசுப்பள்ளிகளை மெட்ரிக் பள்ளிகளைப்போல, அல்லது அவற்றை விட மேலாக நடத்திக்காட்டும் சவாலை ஏற்றுக்கொள்ளட்டும். அதுவே நேர்மை.

15 கடைசியாக, பள்ளிப்பாடத்திட்டங்களில் நாலாந்தர அரசியல்வாதிகள் தங்களைப் பற்றி எழுதிச்சேர்ப்பதென்பது அயோக்கியத்தனம்.

ஆகவே ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்விப் பாடநூல்களைத் தூக்கி வீசியது நியாயமானதே. பழைய மெட்ரிக் பாடத்திட்டம் நீடிப்பதே சரி. ஒருமாதம் பாடம் நடத்திவிட்டோமே என்ற பேச்சு அபத்தம். அப்படி நடத்தக்கூடாது என்பதுதான் அரசு ஆணை. சொல்லப்போனால் அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்து பள்ளிகள் கோடைகால விடுமுறையில் சீருடையில்லாமல் பிள்ளைகளை வரச்சொல்லிச் சட்டவிரோதமாகவே பாடங்களை நடத்தின. தரமில்லாத பாடங்களைப் படித்து அடுத்தவருடம் பிளஸ் டூவை சந்திப்பதை விட ஒருமாதகால இழப்பு பெரியவிஷயமல்ல

அடுத்தவருடம் சமச்சீர் கல்வி கொண்டுவரக்கூடும் என்றால் அது மெட்ரிக் பள்ளிகளைக் கீழிறக்குவதாக அல்லாமல் மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளை அதைவிட மேலே கொண்டுசெல்வதாக இருக்கவேண்டும்

இதுவே உண்மையான யதார்த்தம். இதை மழுப்ப சும்மா பண்பாடு, சமத்துவம் என்றெல்லாம் பெரிய வெற்றுவார்த்தைகளைச் சொல்வதில் பொருளே இல்லை.

1967 தேர்தலில் காங்கிரசை வீழ்த்த அண்ணா அமைத்த கூட்டணி .


1967 பொதுத்தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியுடன், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, கூட்டணியை தி.மு.கழகத் தலைவர் அண்ணா அமைத்தார். கூட்டணி அமைப்பதற்காக, தி.மு.கழகத்தின் மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் 1966 டிசம்பர் 29_ந்தேதி முதல் 4 நாட்கள் நடைபெற்றது.

மாநாட்டின் தொடக்க நாளில், பிரமாண்டமான ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம், ஐலண்டு மைதானத்தில் இருந்து புறப்பட்டது. அலங்காரத்தேரில் அண்ணா அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஊர்வலத்தில் 10 ஆயிரம் தி.மு.க. தொண்டர்கள் சைக்கிளில் சென்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தி.மு.க. தொண்டர்கள் 400 பஸ்களில் வந்திருந்தனர்.

அந்த பஸ்களில் அவர்கள் ஊர்வலத்தில் சென்றனர். சென்னை மாநகராட்சி தி.மு.க. மேயர் சம்பந்தம், துணைமேயர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடந்து சென்றனர். ஊர்வலம் 5 மைல் நீளம் இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க 1 மணி நேரம் பிடித்தது. மறுநாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. அண்ணா தலைமை தாங்கினார்.

காங்கிரசுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, காங்கிரசுக்கு எதிராக அகில இந்தியரீதியில் "சுதந்திரா கட்சி"யைத் தொடங்கிய ராஜாஜி, இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். மற்றும் "காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிப் (முஸ்லிம் லீக்), சி.பா.ஆதித்தனார் (நாம் _ தமிழர்), ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), மூக்கையா தேவர் (பார்வர்டு பிளாக்) ஆகியோரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.

மாநாட்டில் ராஜாஜி பேசியதாவது:

"மாநாட்டு அமைப்பு இவ்வளவு பிரமாதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏதோ மாயத்தால் செய்தது போல் இருக்கிறது. தேர்தலிலும் மாயம் செய்து வெற்றி பெறவேண்டும். நான் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து இருக்கிறேன்.

முன் சரித்திரங்களைப் பார்த்தால் இது ஆச்சரியமாக இருக்கும். இந்த கூட்டு சரித்திரத்தில் பதிவாகும். தேர்தலில் வெற்றியும் கிடைத்தால் நன்றாக பதிவாகும். "காங்கிரஸ் கட்சி படுத்துக்கொண்டே வெற்றி பெறும்" என்று காமராஜர் கூறுகிறார். படுப்பது நிச்சயம்.

ஆனால் வெற்றி பெறுவது காங்கிரஸ்காரர்களுக்கே காங்கிரஸ் வெற்றி பெறுவதில் சந்தேகம். சந்தேகம் இருக்கும்போது வெளியில் தைரியமாக பேசுவார்கள். அதுபோல் காமராஜரும் தைரியமாக பேசுகிறார். காங்கிரஸ் ஒரு பழம். அது அழுகி விட்டது. துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

இனி அதை குப்பை தொட்டியிலே போடவேண்டும். அண்ணாதுரையுடன் நான் கூட்டு சேருகிறேன் என்றதும் காங்கிரசார் "வேடிக்கை" என்று நினைத்தார்கள். இப்போது எதிர்ப்பு அணியின் பலத்தை தெரிந்து கொண்டார்கள். முயற்சி செய்து கூட்டை உடைக்கப் பார்த்தார்கள். நடக்கவில்லை.

காங்கிரஸ் ஏணியில் ஏறி உச்சத்திற்கு சென்று விட்டது. இனி கீழே விழவேண்டியதுதான். இறங்கும்போது நிதானமாக இறங்க வேண்டும். அகம்பாவத்தில் இறங்கினால் தலைகீழாக விழவேண்டியதுதான். ஆட்சியை ஜனநாயக முறையில் இறக்காமல் பலாத்கார முறையில் இறக்க வழி இல்லை. ஓட்டு மூலம்தான் இறக்கவேண்டும்.

படுத்துக்கொண்டே வெற்றி பெறுவேன் என்று கூறியதன் முடிவை, 1967_ல் ஓட்டு எண்ணும்போது காங்கிரசார் பார்க்கப்போகிறார்கள். தேர்தலில் காங்கிரசை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றுவோம். அதற்கு நீங்கள் எல்லோரும் பாடுபடவேண்டும்.

மேற்கண்டவாறு ராஜாஜி கூறினார்.

முஸ்லிம் லீக் தலைவர் இஸ்மாயில் சாகிப் கூறியதாவது:

இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராது. காங்கிரஸ் ஆட்சியை இனியும் சகித்துக்கொள்ளும் பொறுமை மக்களுக்கு இல்லை. காங்கிரஸ் ஒரு யானையாக இருந்தது. அது நன்றாக இருந்த காலத்தில் அதை அலங்கரித்து ஊர்வலம் விட்டு கண்டுகளித்தார்கள். இப்போது புண் ஏற்பட்டு நோய் கண்டுவிட்டது. அதனால் அந்த யானையை வங்கக் கடலில் தள்ளி அழித்து விடப்போகிறார்கள்.

இவ்வாறு இஸ்மாயில் சாகிப் கூறினார்.

மூக்கையா தேவர் பேசுகையில், "காங்கிரஸ் என்ற விஷப்பாம்பின் தோலை உரிக்க வேண்டும். காங்கிரஸ் பாம்பின் தோலை, பக்குவமாக அண்ணா உரித்து எடுத்து விடுவார்" என்று கூறினார்.

சி.பா.ஆதித்தனார், ம.பொ.சிவஞானம் மற்றும் பல தலைவர்கள் பேசினார்கள்.

மாநாட்டுக்குத் தலைமை தாங்கி அண்ணா பேசியதாவது:

எப்படியாவது ஆட்சியில் போய் உட்கார்ந்து விடுவது அல்ல நம் நோக்கம். தரணியிலே தமிழகம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். அந்த வாய்ப்பு, காலத்தால் என் கையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. "ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்" என்று மக்கள் கூறினால், "ஆகட்டும்" என்று ஏற்றுக்கொள்வோம்.

இதற்குக் காரணம் பதவியில் லாபம் - சுவை இருக்கிறது என்பதல்ல. நாம் ஆட்சியில் அமர்ந்தால் தமிழ் மரபு காப்பாற்றப்படும் என்ற எண்ணம் தான். இனத்தையும், மொழியையும் காப்பாற்றத்தான் அரசியலில் ஈடுபட்டு இருக்கிறேன்.

மற்றபடி மந்திரிசபை அமைத்து, கருணாநிதிக்கு ஒரு மந்திரி பதவியும், நெடுஞ்செழியனுக்கு ஒரு மந்திரி பதவியும் கொடுப்பதற்கு அல்ல. அரசியலில் நான் ராஜாஜியை கண்டித்தது போல் வேறு யாரையும் கண்டித்தது இல்லை.

அவர் இன்று நம்மை வாழ்த்துகிறார். நினைத்தால் வேடிக்கையாக - விசித்திரமாக இருக்கிறது. "விதி வகுத்தது" என்று சொல்வார்களே - அதுபோல் இருக்கிறது. ராஜாஜி வாழ்த்துவது என்றால் சம்பிரதாயத்துக்காக அவர் வாழ்த்தவில்லை. உள்ளத்தில் இருந்து வாழ்த்துகிறார்.

இது ஒரு அரசியல் திருப்பம். நம்முடன் உடன்பாட்டுக்கு வராமல் இருக்கும் கட்சிகளுக்கு சொல்கிறேன்:

"காங்கிரசை வீழ்த்தும் பொது நோக்குடன் எங்களுடன் வாருங்கள். இடம் ஒதுக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் சொல்கிற இடத்தில் 6 பேர் நின்றால் 4 பேர் வெற்றி பெறுவீர்கள். 10 பேர் நின்றால் 8 பேர் வெற்றி பெறுவீர்கள்."

மேற்கண்டவாறு அண்ணா கூறினார்.

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி அடைந்தது, ஆட்சியை தி.மு.க. கைப்பற்றியது. தமிழக முதல் - அமைச்சராக அண்ணா பதவி ஏற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் 20 ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் தோல்வி அடைந்தது. ஆட்சியை தி.மு.கழகம் கைப்பற்றியது. புதிய முதல்_அமைச்சராக தி.மு.கழக தலைவர் அண்ணா பதவி ஏற்றார்.

பதவி ஏற்பு விழா 1967 மார்ச் 6_ந்தேதி, சென்னை ராஜாஜி மண்ட பத்தில் நடந்தது. கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில்தான் பதவி ஏற்பு விழா நடைபெறுவது வழக்கம். முதல் முறையாக, ராஜாஜி மண்டபத்தில் நடைபெற்றது. பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு, ராஜாஜி மண்டபத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டு இருந்தது.

குதிரைப் படையினரும், ஆயுதப் படையினரும் சுற்றிலும் நின்று காவல் புரிந்தார்கள். முன் அனுமதி பெற்றவர்களைத்தவிர வேறு யாரும் மண்டபத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், மண்டபத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான தி.மு.கழக தொண்டர்கள் கொடிகளுடன் நின்று கொண்டு இருந்தார்கள்.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், சத்தியவாணிமுத்து, கோவிந்தசாமி, சாதிக்பாட்சா, மாதவன், முத்துசாமி ஆகியோர் 9.50 மணிக்கு மண்டபத்தின் உள்ளே வந்தார்கள். அவர்களை தமிழ்நாடு அரசாங்க தலைமை செயலாளர் சி.ஏ.ராமகிருஷ்ணன் வரவேற்றார். அமைச்சர்கள் அனைவரும் அவர்களுக்காக மேடையில் அமைக்கப்பட்டு இருந்த இடங்களில் உட்கார்ந்தார்கள்.

சரியாக 9.56 மணிக்கு அண்ணா வந்தார். அவரை தலைமைச் செயலாளர் வரவேற்றார். பிறகு தமிழ்நாடு கவர்னர் உஜ்ஜல்சிங், அவர் மனைவியுடன் வந்தார். கவர்னருக்கு அண்ணா வணக்கம் தெரிவித்தார். மற்ற அமைச்சர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு மேடையின் மத்தியில் கவர்னர் உட்கார்ந்தார். அவருக்கு வலது புறத்தில் அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன் ஆகியோரும், இடது புறத்தில் கோவிந்தசாமி, சத்தியவாணி முத்து, மாதவன், சாதிக்பாட்சா, முத்துசாமி ஆகியோரும் அமர்ந்தனர். பதவி ஏற்பு விழா 10 மணிக்கு தொடங்கியது.

தலைமை செயலாளர் ராமகிருஷ்ணன் முதலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி அழைத்தார். உடனே அண்ணா பதவி ஏற்புக்காக இருந்த மேஜைக்கு வந்தார். பதவி ஏற்பு உறுதிமொழியை, கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அதன்பின் அண்ணா அந்த உறுதிமொழியை தமிழில் வாசித்தார்.

பின் "ரகசியகாப்பு" பிரமாணத்தை கவர்னர் ஆங்கிலத்தில் படிக்க அதன்பின் அண்ணா தமிழில் அதையும் படித்து கையெழுத்து போட்டார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி, மதியழகன், கோவிந்தசாமி, சத்தியவாணிமுத்து, மாதவன், சாதிக்பாட்சா, முத்துசாமி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வந்து, உறுதி மொழியை படித்து பதவி ஏற்றார்கள்.

பதவி ஏற்பு முடிந்ததும் அவர்கள் அனைவரும் கவர்னருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு பத்திரிகை நிருபர்களும், புகைப்படக்காரர்களும் வந்திருந்தார்கள்.

பதவி ஏற்பு நிகழ்ச்சியைக்காண சுதந்திரா கட்சித்தலைவர் ராஜாஜி, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம், பழைய மந்திரி வெங்கடராமன், பழைய சபாநாயகர் செல்லபாண்டியன், மாணிக்கவேலர் ஆகியோர் வந்திருந்தனர். அண்ணாவின் மனைவி ராணி அம்மாள், மகன்கள், மருமகள்கள் ஆகியோரும் நெடுஞ்செழியன், கருணாநிதி குடும்பத்தினரும் வந்திருந்தனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும், அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜியிடம் சென்றார்கள். அவர்களை ராஜாஜி வாழ்த்தினார். பழைய மந்திரி வெங்கடராமன் கை குலுக்கினார். 10.35 மணிக்கு மண்டபத்தை விட்டு அண்ணா வெளியே வந்தார். வெளியே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செயதார்கள்.

அமைச்சர்களை நோக்கி மாலைகளையும், பூக்களையும் வீசினார்கள். கூடி இருந்தவர்களை நோக்கி அண்ணா கைகளை அசைத்தார். பிறகு அண்ணாவும், மற்ற அமைச்சர்களும் கார்களில் கோட்டைக்கு (தலைமைச் செயலகம்) சென்றார்கள். அண்ணாவின் "அம்பாசிடர்" கார் கோட்டைக்குள் நுழைந்தது.

அதைத்தொடர்ந்து மற்ற மந்திரிகள் அவரவர் கார்களில் வந்தனர். வாசலில் அண்ணாவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சொக்கலிங்கமும், மற்ற அதிகாரிகளும் அவரை வரவேற்றார்கள். மாடியில் உள்ள முதல்_அமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். சரியாக 10.43 மணிக்கு, முதல்_அமைச்சரின் அறைக்குள் அண்ணா நுழைந்து, நாற்காலியில் அமர்ந்தார்.

அமைச்சர்கள் நெடுஞ்செழியன், கருணாநிதி மற்ற அமைச்சர்கள் அந்த அறைக்கு வந்து உட்கார்ந்தார்கள். சுதந்திரா கட்சியைச் சேர்ந்த தலைவர் சா.கணேசன், அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் ரோஜாப்பூ மாலை போட்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு அண்ணா ஒவ்வொரு அமைச்சரையும் அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று, விட்டு வந்தார். அண்ணாவின் மேஜையில் வைப்பதற்காக, திருவள்ளுவர் படம் ஒன்றை அன்பில் தர்மலிங்கம் வழங்கினார். மற்ற அமைச்சர்களுக்கு அண்ணாவின் படத்தை கொடுத்தார்.

அண்ணாவுக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், மாலைகள் போடுவதற்காகவும் ஏராளமானபேர் கூடி இருந்தனர். அவர்கள் சாரிசாரியாக வந்து மாலை அணிவித்தனர். பழைய மேயர்கள் முனுசாமி, மோசஸ், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் நடந்த அதே நேரத்தில், இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தலும் நடந்தது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றபோதிலும், குறைந்த மெஜாரிட்டியுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

அண்ணா பதவி ஏற்றபின், அவருடன் டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி டெலிபோனில் பேசினார். "தமிழ்நாட்டில் புதிதாகப் பதவி ஏற்றுள்ள தி.மு.க. அமைச்சரவைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "தி.மு.க. அரசுக்கு, மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும்" என்று தெரிவித்தார். இந்திரா காந்தியின் வாழ்த்துக்கு அண்ணா நன்றி கூறினார்.

அண்ணா அமைச்சரவையில், மொத்தம் 9 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் இலாகா விவரம் வருமாறு:_

1. அண்ணா: முதல் - அமைச்சர் பொறுப்புடன் நிதி, உள்துறை இலாகாக்கள்.
2. இரா.நெடுஞ்செழியன்: கல்வி.
3. கருணாநிதி: பொதுப்பணி.
4. மதியழகன்: உணவு.
5. கோவிந்தசாமி: விவசாயம்.
6. சத்தியவாணிமுத்து: ஆதிதிராவிடர் நலம்.
7. மாதவன்: சட்டம்.
8. சாதிக்பாட்சா: மக்கள் நல்வாழ்வுத்துறை.
9. முத்துசாமி: உள்ளாட்சி.

Wednesday, June 8, 2011

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது..


திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 6- திங்கட்கிழமையன்று நடைபெற்றது. தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சிபுரியும் அறுபடை வீடுகளில் முதல் படை என்ற பெருமையும், எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக அமர்ந்த நிலையில் தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தரும் சிறப்பும், கொண்டதாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் திங்கட்கிழமை - 6ந்தேதி பூசம் நட்சத்திரத்தில் காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனையொட்டி கடந்த சில மாதங்களாக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தின் முதற் கட்டமாக கடந்த 2-ந்தேதி முதல்கால யாகசாலை பூஜையும், 3-ந்தேதி காலையில் 2-ம் காலமும், மாலையில் 3-ம் காலமும், மறுநாள் 4-ந்தேதி காலையில் 4-ம் காலமும், மாலையில் 5-ம் காலமும்யாக பூஜைகள் நடைபெற்றது. 5ந்தேதி மாலையில் 7-ம் கால பூஜையும், 6-ந்தேதி காலை 4.30 மணி அளவில் 8-ம் கால பூஜையும் நடைபெற்றது.

இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள வள்ளி- தேவசேனா திருமண மண்டபம் முன்பாக பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. முருகப்பெருமானுக்கு ஒரு பிரிவாகவும், சத்தியகிரீஸ் வரர்-துர்க்கை அம்மனுக்கு ஒரு பிரிவாகவும், கற்பக விநாயகருக்கு மற்றொரு பிரிவாகவும் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது.

மேலும் சஷ்டி மண்டபத்தில் பவளக்கனிவாய் பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்குமாக 80 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்குள் செல்ல கருணை இல்லம் (ஆஸ்தான மண்டபம்), லட்சுமி தீர்த்தம் (கம்பத்தடி மண்டபம்), கல்யாண மண்டபம் (திருவாச்சி மண்டபம்), லட்சுமி தீர்த்தம் (மடப்பள்ளி மண்டபம்) என்று 4 வழிகள் அமைக்கப்பட்டிருந்தது.

சுமார் 500 சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினார்கள். தொடர்ந்து 2-வது, 3-வது, 5-வது யாக சாலை பூஜைகள் நடந்தன, 6-வது கால யாகசாலை பூஜைகளும் மாலையில் 7-வது கால யாகசாலை பூஜைகளும் நடந்தன.

ஜூன் 6- திங்கட்கிழமையன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் குடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் 6.45 மணிக்கு ராஜகோபுரத்தில் உள்ள கோபுர கலசங்கள் மீது சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட தங்கம், வெள்ளிக் குடங்கள் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சமகாலத்தில் 7 கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் கோவிலுக்குள் உள்ள கருவறையில் உள்ள முருகப்பெருமானின் தங்க வேலுக்கு புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகமும், மற்ற விக்கிரகங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகமும் நடைபெற்றது.

அப்போது கும்பாபிஷேகத்தை காண கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி பரவசத்துடன் பக்தி கோஷம் எழுப்பினர்.

கும்பாபிஷேகத்தை காண தென்மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்திருந்தனர். கும்பாபிஷேகத்தை காண பக்தர்களுக்கு வசதியாக கோவிலின் மேல்தளத்தில் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம் 260 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது - நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம்  260 மெகாவாட் மின் உற்பத்தி  தொடங்கியது

காவிரி டெல்டா பாசனத்துக்காக நேற்று காலை மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் அணையை திறந்து வைத்தார்.

சுதந்திரம் பெற்ற பிறகு ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு முன்பாக 6-ந்தேதி அணை திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.அணை திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போதைய நிலவரப்படி செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை விவசாயிகளுக்கு பாசனத்திற்காக தடையின்றி தண்ணீரை வழங்க முடியும்.

நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து முதலில் 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 2 ஆயிரம் கனஅடி வீதம் அதிகரிக்கப்பட்டது. மாலையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணை திறக்கப்பட்டதால் மின் உற்பத்தியும் தொடங்கி உள்ளது.

இனறு காலை நிலவரப்படி 260 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 110 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, குதிரைக்கல் மேடு, பவானி கட்டளை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கீழ் கதவணை மின் திட்டங்கள் மூலம் 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியும் தொடங்கி உள்ளது. மொத்தம் 260 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இதன் மூலம் மின்தட்டுப்பாட்டை ஓரளுவு போக்க காவிரி ஆற்றில் தயாரிக்கப்படும் மின்சாரம் கை கொடுக்கிறது. செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை தொடர்ந்து மின்சாரம் தயாரிக்கப்படும். பருவமழை கை கொடுத்து செப்டம்பருக்கு பின்னரும் தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் தொடர்ந்து மின்சாரம் தயாரிக்கப்படும்.

ஜூன்.7 - காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் 115.38 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3923 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

ஜூன்.8 - காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.75 அடியாக இருந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. அணைக்கு வினாடிக்கு 1263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும் - “சி.பி.ஐ. விசாரணையை தயாநிதி மாறனே சந்திப்பார்”.


தி.மு.க.விற்கு தோல்வி என்பது தடை கல் அல்ல. ராஜீவ்காந்தி மறைந்த போது தி.மு.க. மீது பொய் பிரசாரம் கூறப்பட்டதால் அந்த காலக் கட்டத்தில் தி.மு.க. பெருவாரியான இடங்களில் தோல்வியுற்றது. இருந்தபோதிலும் துறைமுகம் தொகுதியில் நான் மட்டும் வெற்றி பெற்றேன்.

அதன் பிறகு படிப்படியாக தி.மு.க. பல இடங்களில் போட்டியிட்டு 185 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது தி.மு.க.தான். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்காது என்று சொல்கிறார்கள். சூரியன் மறைந்தால் மீண்டும் உதிக்கும். வெற்றி தோல்வி இயக்கத்திற்கு மாறி மாறி வருவது இயல்பு.

நீதிக்கட்சி தொடங்கி தி.மு.க. என்ற பெயர் பெற்ற பிறகு முதலில் 15 இடங்களிலும் பின்னர் 50 இடங்களிலும் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து தமிழகத்தில் ஆட்சி பிடித்தது. அப்படி வளர்ச்சி பெற்ற தி.மு.க.வை அவ்வளவு எளிதில் யாரும் புறம் தள்ளி விட முடியாது. தி.மு.க. இயக்கம் அல்ல. கட்சி அல்ல. அது இன உணர்வின் அடையாளம்.

பின்னர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டால் அதை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்?

பதில்:- அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி:- தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் என்று கூறியுள்ளதே?

பதில்:- தயாநிதி மாறனே அந்த வழக்கை சந்திப்பதாக சொல்லி இருக்கிறார். அதில் நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.பி.என். பேருந்தின் கோரவிபத்தில் சிலதுளிகள்.


கே.பி.என். பேருந்து எங்கு விபத்துக்குட்பட்டாலும் உடனடியாக அதன் தடயத்தை அழித்துவிடும் ஆற்றல் பெற்ற நிறுவனம். அதனால் கே.பி.என். பேருந்தின் விபத்துகளின் வரலாறு யாருக்கும் தெரியாது.

இதனாலேயே கே.பி.என். பேருந்து பயணம் என்றால் விபத்தில்லா பயணம் என்னும் ஒரு மாய சூழ்நிலையை உருவாக்கி ஒர் நம்பகத் தன்மையை தக்கவைத்துக் கொண்டது.

முதன்முதலாக அதன் கோரமுகம் வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.



விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பஸ் டிரைவர் பேட்டி
விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பிய பஸ் டிரைவர் பேட்டி

சென்னையில் இருந்து பொள்ளாச்சி சென்ற தனியார் ஆம்னி பஸ் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அவலூர் என்ற இடத்தில் பள்ளத்தில் திடீரென்று கவிழ்ந்து தீப்பிடித்தது. இதில் 22 பேர் பலியானார்கள். இந்த பஸ்சை சேலம் தாசநாய்க்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் நாகராஜன் (வயது51) ஓட்டி வந்தார்.

விபத்து குறித்து வேலூரில் போலீசாரிடம் சரணடைந்த டிரைவர் நாகராஜன் கூறியதாவது:-

பஸ் சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று இரவு 9.15 மணிக்கு புறப்பட்டது. இரவு சுமார் 11 மணிக்கு வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே வந்தது. அப்போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றேன். அப்போது அந்த லாரி இடது பக்கத்தில் இருந்தது வலது பக்கம் திரும்பியது.

இதனால் பஸ் முன்னால் சென்ற லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் எனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பாலத்தில் மோதியது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியதால் பஸ் திடீரென்று பாலத்தை உடைத்து கொண்டு பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் டீசல் டேங்கரில் கசிவு ஏற்பட்டது. பஸ் கவிழ்ந்த வேகத்தில் பஸ்சின் கதவு அடிப்பாகத்தில் சிக்கி கொண்டது. நான் கண்ணாடியை உடைத்து கொண்டு தப்பினேன். மற்ற பயணிகள் மேலே வர கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தேன். அதற்குள் டீசல் முழுவதும் கசிந்து திடீரென்று தீப்பிடித்தது.

தீப்பிடித்த வேகத்தில் பஸ் முழுவதும் தீ மளமளவென்று எரிய தொடங்கியது. நான் அந்த வழியாக வந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் பஸ்சில் பயணம் செய்த 22 பேரும் தீயில் கருகி இறந்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் என்னை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைய கூறினார்கள். பின்னர் நான் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தேன., இவ்வாறு அவர் கூறினார்.


விபத்து துளிகள்
விபத்து துளிகள்

மின்னல் வேகத்தில் வந்து பாலத்தில் மோதிய பஸ் தீப்பிடித்தபடியே தலைக்குப்புற 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. வாசல் இருந்த பக்கம் தரையில் சிக்கிக் கொண்டதால் பயணிகளால் வெளியே வரமுடியவில்லை. டீசல் டேங்க் வெடித்ததால் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. விபத்து நடைபெற்றது நள்ளிரவு நேரம் என்பதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களால் உடனடியாக சென்று தீயை அணைக்க முடியவில்லை.

காஞ்சீபுரம், வாலாஜா, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைபபு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயில் சிக்கிய பயணிகளின் உடல்கள் எரிந்து சிறு சிறு துகள்களாக மாறியது. ஒருசிலரின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. பலரது கை, கால்களும் கரிக்கட்டைகளாக கிடந்தன.

பஸ்சில் பிடித்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதும் எலும்புக்கூடு போல பஸ் காட்சி அளித்தது. இதனை ராட்சத கிரேன் கொண்டு மேலே தூக்கினர். அப்போது பஸ்சில் கருகி கிடந்த உடல்களின் பாகங்கள் பொலபொலவென்று கீழே விழுந்தது. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் பொறுக்கி எடுத்தனர். ஒரு சிலரின் உடல் பாகங்கள் கையில் எடுக்க முடியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டன. அவைகளை மணல் அள்ளுவது போல அள்ளி பாலித்தீன் கவர்களில் போட்டனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் பஸ்சின் என்ஜின், டயர் உள்ளிட்டவை ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. பாலத்தில் மோதிய வேகத்தில் பஸ்சின் பாகங்கள் நொறுங்கி தூக்கி வீசப்பட்டுள்ளது. டீசல் டேங்க் அருகில் உள்ள சைலன்சர்களும் மோதிய வேகத்தில் உடைந்துள்ளது.

இதனால் அதில் டீசல் கொட்டி தீப்பிடித்துள்ளது.விபத்தில் சிக்கிய கே.பி.என். சொகுசு பஸ் படுக்கை வசதி கொண்டது. அதில் உள்ள இருக்கைகளில் சொகுசான பயணத்துக்காக ஏராளமான பஞ்சுகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் எளிதில் அதில் தீப்பற்றிக் கொண்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பஸ் என்பதால் திறக்க முடியாத நிலையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இதுவும் பயணிகள் தப்பிப்பதற்கு முடியாமல் போய்விட்டது. விபத்தில் கருகிய 22 பேரின் உடல்களும் வாலாஜா அரச ஆஸ்பத்திரி வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த உடல்களில் தலைப்பகுதி எது? கால் பகுதி எது? என்று தெரியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. அந்த பகுதியை சுற்றி வெள்ளை துணியால் போலீசார் கட்டி இருந்தனர்.

12 பயணிகள் அடையாளம் தெரிந்தது : 10 பேர் உடல் கரி கட்டையாகி விட்டது
12 பயணிகள் அடையாளம் தெரிந்தது: 10 பேர் உடல் கரி கட்டையாகி விட்டது

பலியான 22 பயணிகளில் 12 பயணிகள் உடல் அடையாளம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் விவரம் வருமாறு:-

1. வெங்கடேசன்- பொள்ளாச்சி. 2. சுதா-பொள்ளாச்சி 3. டாக்டர் சுப்பிரமணியம் - பொள்ளாச்சி 4. விஜயகுமார்- பொள்ளாச்சி 5. திவ்யா- பொள்ளாச்சி அருகே உள்ள நல்லாம் பள்ளி. 6. சுமிதா-முகப்பேர், சென்னை 7. பரத்- ஒரிசா 8. மாசானகார்த்திக்- மதுரை. 9. செல்வராஜ்- கோடம்பாக்கம், சென்னை. 10. விஜயலட்சுமி- உடுமலைப்பேட்டை 11. பிரணவராஜ்- உடுமலைப்பேட்டை 12. விமலா- உடுமலைப்பேட்டை

மற்ற 10 பயணிகள் உடல் முழுமையாக கருகி கரிக்கட்டை ஆகிவிட்டது.

அவர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்க முடியாதபடி சிதைந்து விட்டது. என்றாலும் உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.

உடல்களை உறவினர்கள் வந்து பார்த்து அடையாளம் காணுவதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு இருந்த வாலாஜா அரசு ஆஸ்பத்திரி சோகத்தில் மூழ்கியது. விபத்தில் பலியானவர்கள் உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. பெண்கள் பலர் தரையில் புரண்டு அழுதனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய வாலாஜா அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் டாக்டர் அல்லிகிருபாகரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த குழுவினர் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை எழுதுவதற்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் உடனுக்குடன் அறிக்கை தயாரித்து உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி உடல்களை ஒப்படைத்தனர்.

இந்த கோர விபத்தில் 5 பெண்கள் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. 22 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் 5 பேர் பெண்கள் ஆவர். விபத்தில் 5 பேரும் பலியாகி விட்டனர். திவ்யா, சுதா, விஜயலட்சுமி, விஜயலட்சுமியின் உறவுப்பெண் ஜெயராணி ஆகியோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சில் 29 பயணிகள் பயணம் செய்ய முடியும். அதற்கான படுக்கை வசதி மட்டுமே உள்ளது. 27 இடங்கள் மட்டுமே நிரம்பியது. இரண்டு இடங்கள் காலியாக கிடந்தன. இதில் 4 பேர் வேலூரில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணம் செய்ய காத்திருந்தனர்.

வேலூரை சேர்ந்த தாமரை என்ற பெண் குடும்பத்தோடு பொள்ளாச்சி செல்ல முன்பதிவு செய்திருந்தார். இரவு 10.15 மணிக்கு வேலூருக்கு அந்த பஸ் செல்ல வேண்டும். பஸ்சில் பயணம் செய்ய தாமரை மற்றும் அவரது குழந்தைகள் தயாராக காத்து நின்றனர். நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை. அதன்பிறகுதான் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்த விவரம் அவர்களுக்கு தெரிந்தது. அவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு அதிர்ச்சியுடன் வீடு திரும்பினர்.


தீயில் கருகி வெடித்து துகள்களான உடல்கள்
தீயில் கருகி வெடித்து துகள்களான  உடல்கள்

தீயில் சிக்கிய பயணிகளின் உடல்கள் எரிந்து சிறுசிறு துகள்களாக மாறியது. ஒருசிலரின் மண்டை ஓடுகள் கிடைத்துள்ளன. பலரது கை, கால்களும் கரிக்கட்டைகளாக கிடந்தன.

6 மூட்டைகளில் கட்டப்பட்ட உடல்கள்

பஸ்சில் பிடித்த தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதும் எலும்புக்கூடு போல பஸ் காட்சி அளித்தது. இதனை ராட்சத கிரேன் கொண்டு மேலே தூக்கினர். அப்போது பஸ்சில் கருகி கிடந்த உடல்களின் பாகங்கள் பொலபொலவென்று கீழே விழுந்தது. இதனை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் பொறுக்கி எடுத்தனர். ஒரு சிலரின் உடல் பாகங்கள் கையில் எடுக்க முடியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டன.

அவைகளை மணல் அள்ளுவது போல அள்ளி பாலித்தீன் கவர்களில் போட்டனர். இறந்தவர்களின் உடல்கள் 6 மூட்டைகளில் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வெளிச்சம் இல்லாததால் தாமதமான மீட்பு பணி

காஞ்சீபுரத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் உள்ள அவலூர் என்ற இடத்தில்தான் இந்த விபத்து நடைபெற்றது. இந்த இடம் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

6 எமர்ஜென்சி விளக்குகள் உடனடியாக வரவழைக்கப்பட்டது. இந்த விளக்கு வெளிச்சத்தில்தான் மீட்பு பணிகள் நடைபெற்றன.

பஸ்சில் தனியாக கிடந்த கால்

தீயில் எரிந்து உருக்குலைந்த பஸ் ராட்சத கிரேன் மூலம் தூக்கப்பட்டு அருகில் இருந்த வயல்வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பஸ்சுக்குள் வாலிபரின் கால் ஒன்று தனியாக கருகிய நிலையில் கிடந்தது. அவர் அணிந்திருந்த ஷு சாக்சும் காலில் ஒட்டியபடியே காணப்பட்டது.

படுக்கை வசதி கொண்ட பஸ்

விபத்தில் சிக்கிய கே.பி.என். சொகுசு பஸ் படுக்கை வசதி கொண்டது. அதில் உள்ள இருக்கைகளில் சொகுசான பயணத்துக்காக ஏராளமான பஞ்சுகள் திணிக்கப்பட்டுள்ளன. இதனால் எளிதில் அதில் தீப்பற்றிக் கொண்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பஸ் என்பதால் திறக்க முடியாத நிலையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. இதுவும் பயணிகள் தப்பிப்பதற்கு முடியாமல் போய்விட்டது.

தலை-கால் தெரியாத உடல்கள்

விபத்தில் கருகிய 22 பேரின் உடல்களும் வாலாஜா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த உடல்களில் தலைப்பகுதி எது? கால் பகுதி எது? என்று தெரியாத அளவுக்கு சிதைந்து காணப்பட்டது. அந்த பகுதியை சுற்றி வெள்ளை துணியால் போலீசார் கட்டி இருந்தனர். உடல்களை உறவினர்கள் வந்து பார்த்து அடையாளம் காணுவதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நவரத்தின மாலையால் அடையாளம் தெரிந்தது

விபத்தில் பலியான 22 பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 70) என்பவரின் உடல்தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. தொழில் அதிபரான இவர் பொள்ளாச்சி பஜார் ரோட்டில் சியாமளா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்தார்.

முகப்பேரில் உள்ள தனது மகளின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போதுதான் விபத்தில் சிக்கி உயிர் இழந்துள்ளார். இவர் பயணம் செய்வதற்காக அவரது மகன் செந்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அதில் தனது போன் நம்பரை கொடுத்துள்ளார்.

விபத்து நடைபெற்றவுடன் கே.பி.என். டிராவல்சில் பயணம் செய்தவர்களின் பட்டியலை சேகரித்த போலீசார் செந்திலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தனர். அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனது மைத்துனர் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தார்.

வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை வந்த செல்வராஜ் 22 உடல்களையும் ஒவ்வொன்றாக பார்த்து பின்னர் அடையாளம் காட்டினார். வெங்கடேசன் அணிந்திருந்த நவரத்தின மாலையை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் செல்வராஜிடம் வெங்கடேசன் உடல் ஒப்படைக்கப்பட்டது.